Saturday, June 25, 2016

சுவாதி! நான்தான் சாமானியன் பேசுகிறேன்!

photo: indianexpress.com 

ஒரு துர்மரணம்; அதுவும் ஒரு இளம்பெண்ணின் கோரமான படுகொலை என்றால், அதனால் விளையும் பின்விளைவு என்பது இயல்பானது. ஆகையினால், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உனக்கு நிகழ்ந்த பயங்கரம், குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனின் இதயத்திலும் இடியைவிடக் கொடிதாக இறங்குவது. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கொடூர நிகழ்வு நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகாமையில் வசிக்கிறவன் என்பதனால், இந்த நிகழ்வு முகம்தெரியாத ஒரு உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத இழப்பு என்பதையும், இது சராசரி மனிதனின் இயலாமைக்கு இன்னோர் உதாரணம் என்பதனையும், எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டு, ஒரு தனிமனிதனாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பழியையும் ஏற்று, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோரசம்பவத்தால் உயிரிழந்த உனது ஆத்மா அமைதியுற வேண்டுகிறேன். துடைக்கவியலாத உனது குடும்பத்தாரின் துயரத்தில் ஒரு சாமானியனாய் பங்கும் கொள்கிறேன். உனக்கு ஏற்பட்ட இந்த நிலை, பிறிதொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்றும் உளமார வேண்டுகிறேன்.
      ஆனால், ஒவ்வொரு அசாதாரணமான நிகழ்வுக்குப் பிறகும், கையில் சாட்டையுடன் வீறுகொண்டு எழுகிற சில அறிவுஜீவிகள், தாம் சார்ந்திருக்கும் சமூகத்தை வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டு, தத்தம் தலைகளில் ’போலி சமூகப்பொறுப்புடைமை’ என்ற அட்டைக்கிரீடத்தைப் பொருத்திக்கொண்டு அழகுபார்க்கின்றனர். இத்தகைய எரிச்சலூட்டுகிற போலித்தனம் உனது படுகொலைக்குப் பிறகும், தலைதூக்கியிருப்பது சற்றே வேதனையாய் இருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய ஒரு தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தெய்வமாகிவிட்ட நீ இதையும் பொறுப்பாயாக!
      உனது படுகொலை நிகழ்ந்த தினத்தன்று, சென்னையில் மேலும் நான்கு பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினசரிகளை வாசித்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காகப் படுகொலைகள் நிகழ்ந்து வந்திருப்பதும் தெரிந்தே இருக்கும். அவற்றிலும் பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். வீடுபுகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தி மூதாட்டிகளை ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு, பணம், நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து சிலபல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. வேதனை என்னெவென்றால், உனது படுகொலையைத் தொடர்ந்து ‘நான்தான் ஸ்வாதி பேசுகிறேன்’ என்று கட்டுரை எழுதி, சமூகத்துக்குச் சாட்டையடி கொடுக்கிறவர்கள், பிற கொலைகள் நிகழ்ந்தபோது, திரைப்பட விமர்சனங்களை எழுதி, தேசத்தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். 
இறந்தது இளம்பெண்ணோ, மூதாட்டியோ – இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் பிடி தளர்ந்து வருவதன் அறிகுறி என்பதையோ, குற்றவாளிகளின் துணிச்சல் அதிகரித்து வருகிறது என்பதன் அளபீடு என்பதையோ, ஒவ்வொரு சட்டவிரோதமான செயலும் ஏதோ ஒரு குடும்பத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிறது என்பதையோ, ஏதோ ஒரு விதத்தில் பெருகிவருகிற அலட்சியத்தின் பின்விளைவு என்பதனையோ, சில அறிவுஜீவிகளின் ஞானக்கண்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் உறுமீன் வருமளவும் காத்துக்குக் கொண்டிருந்தார்கள் போலும், வாடி நின்று சமூகத்தை வசைபாடுவதற்கு!
      உனக்கு நினைவிருக்கிறதா ஸ்வாதி? புது தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, உலகமே ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்தது. அதே தினத்தன்று தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி கிட்டத்தட்ட அதே மிருகத்தனத்துக்கு ஆளானபோது, அதை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து நாமெல்லாம் ஆதங்கப்பட்டோம். “தில்லி மட்டும்தான் இந்தியாவா? தமிழகத்தில் ஒரு நிர்பயா பலியானால் கேட்க நாதியில்லையா?
      இன்று, தமிழகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “சென்னை மட்டும்தான் தமிழகமா? தென்கோடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் அதுகுறித்துக் கொதித்தெழ எவரும் இல்லையா? ஒரு படித்த இளம் பொறியாளரின் உயிருக்கு அளிக்கிற மதிப்பு, எங்கோ ஒரு பொட்டல் காட்டில் கொலைசெய்யப்படுகிற ஒரு பெண்ணின் உயிருக்கு இல்லையா?
      ’நான்தான் ஸ்வாதி பேசுகிறேன் என்று கட்டுரை எழுதியவர், உனது கனவுகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன்.
 கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் கொலை செய்யப்பட்ட பெண்களுக்கும் கனவுகள் இருந்திருக்கும். அது குறித்து அவருக்குப் பெரிய அக்கறையில்லை; உண்மையில் உனது மரணம் குறித்தும் அவருக்குப் பெரிய அக்கறையில்லை என்பதுதான், என்னை எழுதவைக்கிற தூண்டுகோலாக அமைந்தது. அவரது கட்டுரையிலிருந்து சில துளிகள் உன் பார்வைக்காக….!
உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.
கட்டுரையாளரைப் பொறுத்தவரை ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
ஸ்வாதி! நீ ஒரு படித்த பொறியாளர்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகத்திலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாய்; அந்தப் பணிக்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில்தான் ஒரு கொலைகாரனின் மிருகத்தனத்துக்கு இரையானாய். ஒரு வகையில் நீ பெண்கள் முன்னேற்றத்தின் ஒரு குறியீடு. ஆகையால், உனது படுகொலை பெண்கள் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட களங்கம்; அதுவே ஏதோ ஒரு கிராமத்தில், படிப்பறியாத ஒரு பெண் கொலைசெய்யப்பட்டால், அது குறித்து பெண்கள் முன்னேற்ற ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதை நீ ஏற்றுக் கொள்வாயா?
உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்?
சமூகத்தின் மீது போலியாகக் கோபப்படுகிறவர்கள், சந்தடி சாக்கில் மூன்றாம்தரமான விமர்சனங்களை வைத்து, வாசிப்பவர்களை உசுப்பேற்றுவது வாடிக்கையல்லவா? அந்த உத்தியைத்தான் கட்டுரையாளரும் பயன்படுத்தியிருக்கிறார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அப்போது அந்தப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருந்த எந்த ஆண்மகனுக்கும் ஆண்மையில்லை; அதேபோல, எந்தப் பெண்ணுக்கும் பெண்மையுமில்லை என்று எழுதியிருந்தால், மகளிர் சங்கங்கள் கொடிதூக்கிக்கொண்டு அவரது அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்திருக்கும் என்பதனால், சவுகரியமாக அதைச் சொல்லவில்லை. அனேகமாக, அவர் ஆண்மையில்லை என்று தன்னையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டிருப்பார். (கட்டுரையாளர் கவனிக்க: அது வரிஜினிட்டி அல்ல; விரிலிட்டி.)
சென்னை மட்டுமின்றி, தமிழகமே உனது படுகொலை செய்திகேட்டு பதைபதைத்துக் கொண்டிருக்கையில், உனது பிரேதத்தின் தோளில் துப்பாக்கி வைத்து அவர் நடத்தியிருக்கிற தாக்குதல், உனக்குக் கொச்சையாகப் பட்டிருந்தால், அவர் சார்பாக நானே வருத்தம் தெரிவிக்கிறேன். ஆணல்லவா, உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாவம்!
அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?
 நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் அறிவுஜீவி! உண்மையில், நுங்கம்பாக்கம் உட்பட சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லையென்பதோ, பல பறக்கும் ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதோ, பயணிகளின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்பதோ கட்டுரையாளருக்கு நீ கொலைசெய்யப்படும் வரைக்கும் தெரியாது. தொடர்வண்டிகளில் பயணிக்கிறவர்கள் அன்றாடம் படுகிற அல்லல்கள், பெண்களுக்கு நிகழ்கிற அவலங்கள் இவையெல்லாம் கட்டுரையாளரின் மேலான பார்வைக்குக் கொண்டுசெல்லாத இந்த சமூகம் உண்மையிலேயே ஆண்மையற்ற சமூகம்தான். முன்கூட்டியே அறிந்திருந்தால், கட்டுரையாளர் மேற்கூறிய தவறுகளுக்குப் பொறுப்பானவர்களை அறம்பாடியே அழித்திருப்பார். காரணம், அவரது சமூக அக்கறையானது அவ்வளவு உறுதியானது. மேலொரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.
உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
கட்டுரையாளர் அனேகமாகக் கடவுளாக இருந்தாலும் இருக்கலாம். இறந்தபின்னும் உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை மட்டுமல்ல, உன்னைக் கொலை செய்தவனின் மனம் என்ன நினைக்கக்கூடும் என்பதுகுறித்தும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் அவளது ஒழுக்கத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்ற மிக முற்போக்கான சிந்தனையை அவர் கோடிட்டுக் காட்டியிருப்பதை என்னவென்று வியப்பது?
ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.
இல்லை! ஒரு கொலையைத் தடுக்கிற மன உரமும், உடல் வலுவும் பெறுவதற்கு முன்னர், கட்டுரையாளர் உட்பட அனைவரும் செய்யத்தக்கவை நிரம்ப இருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகளை இழைக்கிறவர்களைக் கண்டும் காணாமலும் போகிற மனப்போக்கை விட்டுவிட்டு, உடனுக்குடன் தட்டிக் கேளுங்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் தொடங்கி அன்றாடம் நம் கண்முன்னே சமூக அலட்சியத்துடன் புழங்குபவர்களைக் கண்டிக்கிற துணிச்சலை வரவழைத்துக் கொள்ளுங்கள். கட்டுரைகள் எழுதுவதோடு நிறுத்தாமல், செயலில் இறங்குங்கள். சமூகத்தைத் திட்டுவதோடு பொறுப்பு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், களத்தில் இறங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு தனிமனிதன் செய்கிற ஒரு சிறிய தவறையாவது சுட்டிக்காட்டி, அவனைத் தடுத்து நிறுத்துங்கள். தவறு செய்தால், பார்ப்பவர்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தை சிறுதுளி பெருவெள்ளமாக்க முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் அளவில் ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஈடுபடுத்துங்கள். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும்; காவல்துறை செய்ய வேண்டும்; நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று பழிபோட்டுவிட்டு ‘என்னால் முடிந்தது புலம்புவதும் சாபமிடுவதும் மட்டும்தான்’ என்று உட்காராமல், முடிந்ததைச் செய்யுங்கள். – இது தானே நீ சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஸ்வாதி?  
      கட்டுரையாளர் மட்டுமல்ல. ‘கொலையைக் கண்டும் கொலையாளியைத் தடுக்காதவர்களும் குற்றவாளிகள்தான்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் இன்னொரு முன்னாள் நடிகை; இன்னாள் அரசியல்வாதி. பெண்களைக் கேவலமாக நடத்துகிறார் என்று கட்சியின் எம்.எல்.ஏக்களே புகார் கொடுக்குமளவுக்கு யோக்கியமான தலைவர் உள்ள கட்சியிலிருந்து கொண்டு, இவர்களெல்லாம் இப்படிப் பேசுவது உன் ஆன்மாவைக் காயப்படுத்துவதன்றி வேறேன்ன ஸ்வாதி?
      கட்டுரையாளரின் முடிவுரையையே முத்தாய்ப்பாய் வைக்கிறேன்.
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.
அப்படி வீழ்ந்து கிடக்கிற சமூகத்தில் ஸ்வாதியும், அவளது மரணத்தை வேடிக்கை பார்த்தவர்களும் மட்டுமல்ல; அதை மையப்படுத்தி சமூகத்தை மட்டும் குற்றம்சாட்டி, அவரவர் கடமைகளைத் தட்டிக்கழிக்கிற கட்டுரையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதை மாற்ற ஒரு சிறு அடியை முன்வைத்து, முனைவதே ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, பெண்களுடன் சகோதரனாய் வளர்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண்ணுக்குத் தகப்பனாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு ஆண்மகனின் கண்ணியத்துக்குப் பெருமை சேர்ப்பதாய் இருக்கும்.

ஸ்வாதி! உன் படுகொலை உறங்கிக்கொண்டிருக்கிற மனசாட்சிகளை உலுக்கி எழுப்புகிற அழைப்புமணியாவதாக!