Monday, October 31, 2011

ஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்!

சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் என்னை விட விற்பன்னர்கள் இருப்பதால், பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். ஓவராகக் காத்திருந்தால் ‘எங்கேயும் எப்போதும்,போல விமர்சனம் டூ லேட் ஆகி முடியாமலே போய் விடுமோ என்ற பயத்தில், என் மனதுக்குப் பட்டதை எழுதப்போகிறேன். எவ்வளவோ வாசிச்சிட்டிங்க, இதை வாசிக்க மாட்டீங்களா?

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, பல்லவ இளவரசனாக இருந்த போதிதர்மரை(சூர்யா), ராஜாமாதா ஒரு காரணமும் சொல்லாமல் சீனாவுக்குப் போகச்சொல்கிறார். (யாராவது அந்த ராஜமாதாவின் டி.என்.ஏவை மையமாக வைத்து இன்னொரு படம் எடுக்காம இருக்கணும்). தற்காப்புக்கலை, வைத்தியம், அஷ்டமாசித்தியின் ஒரு பகுதி ஆகிய ஆயகலைகளை அறிந்த போதிதர்மன், காஞ்சீபுரத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு, பாலைவனமெல்லாம் கடந்து (போதிதர்மனுக்கு ஜியாகிரபி தெரியாதுபோலும்) காஸ்ட்யூமெல்லாம் மாற்றிக்கொண்டு, சீனாவுக்குப் போகிறார். சில பல உயிர்களைக் காப்பாற்றி, கைம்மாறாக விஷம் கலந்த உணவை வாங்கிச் சாப்பிட்டு பொசுக்குன்னு போயிடறாரு! அவரை ஒரு அரிசிச்சாக்குலே போர்த்தி புதைச்சிடறாங்க! (சீனாவுக்கெல்லாம் உதவி பண்ணினா இதுதான் கதி-ன்னு சொல்றாங்களோ?)

இப்போ, கதை சமகாலத்துக்கு வருது. தமிழிலே சப்-டைட்டில் வந்தாலும், நம்மூரு மாதிரியே இலக்கணசுத்தமாக இங்கிலிபீசு பேசுற சீனாக்காரங்க, டோங்க் லீ-ன்னு ஒரு வில்லனைக் கூப்பிட்டு, ஆபரேஷன் ரெட்-னு ஒரு திட்டம் சொல்றாங்க. அதன்படி டோங்க்லீ இந்தியாவுக்குப் போயி, மரபணு ஆராய்ச்சி பண்ணுற சுபா(ஷ்ருதி ஹாசன்)வைத் தீர்த்துக்கட்டணும்! ஏன்னா, சுபா போதிதர்மனோட வம்சாவளியிலே  அவரோட டி.என்.ஏ எண்பது சொச்சம் சதவிகிதம் பொருந்துற அர்விந்த் (இன்னொரு சூர்யா) எனப்படுகிற சர்க்கஸ் தொழிலாளியோட டி.என்.ஏவை ஆராய்ச்சி பண்ணப்போறாராம். இந்த டோங்க்லீ இந்தியாவுக்கு வந்து, சென்னைப் போலீசையெல்லாம் நோக்குவர்மம் என்ற கலையாலே (ஹிஹிஹிஹி!) போட்டுத்தள்ளி, நாய்பிடிச்சு ஊசிபோட்டு வைரசைப் பரப்புறாரு! (பயோ வார்னு சொல்லுதாக; பயமாத்தான் இருக்கு.) இதுக்கு நடுவுலே ரொமான்ஸா உடான்ஸான்னு புரியாம ஒரு டூயட், ஒரு சோகப்பாட்டு, கொஞ்சமா சுவாரசியம்னு எதையெதையோ கலந்துகொட்டி ஒப்பேத்துறாங்க! கடைசியிலே ஹீரா உடம்பெல்லாம் கேபிளைச் சகட்டுமேனிக்கு சொருகி, அவரைத் தண்ணியிலே ஊறப்போட்டு (இட்லிக்கா அரைக்கப்போறாய்ங்க?) வில்லனோட சண்டைபோட்டு, தமிழர்களுக்குத் தர்ப்பணம்னு, அதாவது அர்ப்பணமுன்னு முடிக்கிறாய்ங்க!

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, போதிதர்மனின் வரலாற்றில் (கொஞ்சம் நியூஸ் ரீல் போலிருந்தாலும்), நல்ல படப்பிடிப்பு காரணமாகவும், சூர்யாவினாலும் ஒன்ற முடிகிறது. அதே போல சாலையில் சூர்யா, ஷ்ருதியை யானையில் ஏற்றிச் செல்கிற காட்சி, சூர்யா ஷ்ருதியிடம் கோபப்படுகிற காட்சி என்று பலரகமாய் ஞாபகம் வைக்கத்தக்க காட்சிகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

மொத்தத்துலே சரியான காரம், மணம், குணம் நிறைந்த மசாலாப்படம் என்று டோங்க்லீ மீது சத்தியமாகச் சொல்லலாம். பிரச்சினை என்னான்னா, பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல், இடைச்செருகல்களாய் வரும் சில வசனங்கள், பாடல்கள், காட்சிகள்! குறிப்பாக, சாவி கொடுத்துத் தமிழுணர்வை உசுப்பேத்த கொஞ்சம் மெனக்கிட்டிருக்காங்க! சுத்தமா ஒட்டலீங்கண்ணா!

சூர்யா ஒருத்தரை நம்பியே படம் எடுத்திருக்காங்கன்னு சொல்லுற அளவுக்கு பெரும்பாலும் அடக்கி ஆனா அழுத்தமா வாசிச்சிருக்காரு! ஷ்ருதிஹாசன் நல்ல அறிமுகம்; கொடுத்த வாய்ப்பை முயன்று பயன்படுத்தியிருக்கிறாரு! தமிழ் பேசறதுலே கவனம் செலுத்தினாப் போதும்! அந்த வில்லன் ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு; ஃபினிஷிங் சரியில்லையே! ஆ..வூன்னா நோக்குவர்மம்னு பார்த்தே சாவடிக்கிறது ஒரு கட்டத்துலே படத்துலே காமெடியில்லாத குறையைத் தீர்த்திருது.

ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப வித்தியாசமா, அவரது முந்தைய படங்களின் டியூன் சிலவற்றோடு இசைப்புயலின் டாக்ஸி டாக்ஸி மெட்டையும் வெட்டியொட்டியிருக்கிறாரு! அதுவும் அவ்வப்போது யாரோ தேள்கொட்டினது போல கூவுகிற சத்தம் பின்னணியில் வரும்போது, காதுக்குள்ளே கொசு நுழைந்தது போலிருக்கிறது. ரவி கே சந்திரன் பாடல்காட்சிகளிலும், போதிதர்மன் காட்சிகளிலும் முத்திரையைப் பதிச்சிருக்கிறாரு! ஸ்டண்டு மாஸ்டர் பீட்டர் ஹெயின் பெரிய ஏமாற்றம்! குறிப்பாக, சூர்யா வில்லனுடன் போடுகிற இறுதிச்சண்டை கொட்டாவி ரகம்! காவல் நிலையத்தில் போலீசைப் பந்தாடுகிறவனோடு, ஆராய்ச்சிக்கூடத்தில் சாதனமாயிருந்த கதாநாயகன் ஆக்கிரோஷமாகச் சண்டைபோடுவதெல்லாம் காதில் பூ! அதே போல சாலையில் கார்களும், ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் பறந்து பறந்து வருகிற காட்சியில் காட்சியமைப்பு, படு அமெச்சூரான கிராபிக்ஸ் காரணமாக சொதப்பலாய் இருக்கிறது. எடிட்டிங், அப்படியொண்ணு இருக்கா? நோ ஐடியா!

சராசரி தமிழ்ப்படமான இதை, எதிர்பார்ப்புகளின்றிப் பார்த்தால், மோசமென்று சொல்லிவிட முடியாது. ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.

திடுதிப்பென்று சர்க்கஸில் வேலைபார்க்கிற சூர்யா, ‘குழந்தை இறந்து பிறந்தாலும் மார்பில் வாளால் கீறுவார்களாம்,என்று புறநானூற்றுப் பாடலின் பொழிப்புரை சொல்வதெல்லாம் பொருத்தமாயில்லை. விட்டால் ‘குழவி இறப்பினும் ஊன்தடிபிறப்பினும் ஆளன்று என்றுவாளின் தப்பார்,என்று செய்யுளையே சொல்ல வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

போதிதர்மனைப் பற்றி தமிழனுக்குத் தெரியவில்லை என்றால், அதைக்  கூகிளில் தேடிக் கண்டுபிடித்த முருகதாசும் ஏளனம் செய்ய என்ன இருக்கிறது? சத்தியமாக கல்வியறிவு குறைந்திருக்கிற ஒரு தேசத்தில் பலருக்கு வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு குற்றமல்லவே? எதற்காக இந்த ‘யுரேகா?

அதே போல மஞ்சள் சாகுபடி செய்யாதவன், மஞ்சளுக்குப் பேட்டன்ட் கேட்கிறான் என்று ஒரு ஆதங்கம்! கூடத்தில் துளசிமாடம் கூட சயன்ஸ் என்று குமுறுகிறார்கள். இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் நடத்தி, அதை அவுட்-ஆஃப்-ஃபேஷன் ஆக்கிய தமிழர்களும் இருக்கிறார்களே? ஈழப்பிரச்சினையையும் விடவில்லை. ‘வீரத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள வித்தியாசம்,என்று சொல்கிறார் ஹீரோ! ( நான் ஈழம் குறித்து எழுதுவதேயில்லை; அதை எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவும் செய்ய இருக்கிற ஆளுக்குப் பஞ்சமில்லை)

தமிழ், தமிழ் என்று கூச்சலிடுகிற இயக்குனர், கதாநாயகனையும் கதாநாயகியையும் ஏற்காட்டிலோ, மாமல்லபுரத்திலோ, குற்றாலத்திலோ டூயட் பாட விடுவதற்குப் பதிலாக எதற்கு வெளிநாடு போனாரோ தெரியவில்லை. இவ்வளவு டமில் பற்று உள்ள கதாநாயகன் கதாநாயகியை அம்பா ஸ்கைவாக் மாலுக்குத் தான் வரச்சொல்கிறார். நம்ம வீட்டு வசந்தபவனுக்கு வரச்சொன்னால் என்னவாம்?  இவ்வளவு ஏன், போதிதர்மர் சீனாவுக்குப் போகுமுன்னர், அதே குங்க்ஃபூவையும், அதே வைத்தியத்தையும் ஏன் இன்னொரு தமிழனுக்குக் கற்றுத்தராமல் போய்விட்டார் தெரியவில்லை. ஆக, எதையோ பிடிக்க நினைத்து எதுவாகவோ முடிந்து விட்டது “ஏழாம் அறிவு”.

அப்புறம், இந்த டி.என்.ஏ.குறித்த பூச்சூடல்கள்! ஒரு வாதத்துக்கு போதிதர்மருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவரது வழிவழிவந்தவர்களும் குரங்குப்பெடல் போடாமல் நேரடியாக சைக்கிள் ஓட்டி விடுவார்களா என்ன? ஏதோ ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் படுக்கப்போட்டு, வயர்களைச் சொருகினால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்து குங்க்ஃபூ சண்டைபோடத்தான் முடியுமா? (முடியலே....!) சித்தர்கள் பற்றியெல்லாம் சொல்கிறார்கள். சித்தர்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே அபூர்வமான சக்திகளைப் பெற்றார்கள். அவர்களது வாரிசுகள் என்று சொல்லி எழும்பூர் கென்னத் சந்தில் லாட்ஜில் தங்கி கைரேகை ஜோசியம் பார்ப்பவர்களெல்லாம் சித்தராகி விட முடியுமா?

ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு நாட்டுவைத்தியன் ஒரு குறிப்பிட்ட மருந்தைப்பற்றி தன் சுவடியில் “இருகுரங்கின் கையெடுத்துப் புடம்போடு,என்று எழுதிவைத்து விட்டுச் செத்துப்போனானாம். கொஞ்ச நாள் கழித்து, சொர்க்கத்தில் அவனை சந்தித்த நண்பர், “நீ எழுதிய சுவடியின்படி உன் மகன் கொடுத்த மருந்தால்தான் நான் செத்துப்போய் சொர்க்கத்துக்கு வந்தேன்,என்று சொன்னானாம். நடந்தது என்னவென்றால், இறந்துபோன வைத்தியனின் மகன் ஒரு குரங்கின் இரண்டு கைகளை வெட்டி அதைப் புடம்போட்டு மருந்தாய்க் கொடுத்திருக்கிறான். ஆனால், தமிழில் குரங்குக்கு ‘முசுஎன்று ஒரு பெயருண்டு. வைத்தியன் சொல்ல நினைத்த இருகுரங்கு முசு-முசு-கை அதாவது முசுமுசுகை என்ற மூலிகை! இதைத் தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்கள்.

ஏழாம் அறிவு படமும் ஏறக்குறைய அப்படியே!

படம்: தட்ஸ்டமில் (அ) தட்ஸ்தமிழ்

செந்தூர்முருகன் சேவடி போற்றி!


தவமுனிவன் காசிபனை மாயையென்றும் பேரரக்கி
      தடமுழலச் செய்தனளே மையலினால்-முன்கிடைத்த
சிவனருளும் சிறுமதியால் சிதைவுறவே ஈன்றனரே
      சிங்கமுக(ன்) ஆனைமுக(ன்) சூரனெனும் மூவரையே
புவனமுதல அமரருறை உலகனைத்தும் சிறையுறவும்
      புலம்பினரே தேவரெலாம் கயிலையுறை ஈசனிடம்
அவனிதனில் அறநெறிகள் நிலைபெறவே முக்கண்ணன்
      அக்கினியாய் அருளினனே ஆறுமுகக் கடவுளையே!
                                                      ( 1 )
மும்மலமாய் மறைகூறும் தீயகுணம் ஒவ்வொன்றும்
      முழுவுருவம் பெற்றனவே மூவரிடம்-சூரனவன்
அம்புவியோர் போல்முகமும் ஆணவமும் கொண்டவனாம்
      அவனிளவல் தாரகனோ மாயையெனும் மருள்கொண்டான்
சிம்மமதை ஒத்தமுகம் கொண்டவனாம் சிங்கமுகன்
      செம்மைதனைச் சேராதே கன்மமெனும் வினைகொண்டான்
செம்மலர்கள் ஆறினிலே செஞ்சுடராய் உதித்தகுகன்
      செருக்குற்ற மூவர்தமை அழித்தற்கே உருக்கொண்டான்

                                                      ( 2 )
பொய்கைதனிற் பூத்தமலர் போன்றதிருக் குழந்தைகளின்
      பொன்னுடல்கள் ஆறினையும் ஆதிசிவன் அணைத்ததுவும்
மெய்யவரைக் காப்பவளாம் மேருவுறை மலைமகளும்
      மேதினியில் அறம்தழைக்க வேலொன்றை அளித்திட்டாள்
உய்யுதற்கே உலகுதொழும் உமையவளின் கழல்மணிகள்
      உதிர்கையிலே இலச்சத்தி ஒன்பதிமர் ஆயினரே!
செய்யரிய செயும்வீர பாகுமுதல் ஆனபிறர்
      செவ்வேளின் போர்ப்படையாய்ச் சேர்ந்தனரே வேலனுடன்!

                                                      ( 3 )
திருமுருகன் பெரும்படையைக் கிரவுஞ்சம் மலைமறிக்க
      திரண்டுவந்த படைமயங்கி அசுரனிடம் வீழ்ந்துவிட
தருணமிது எனவுணர்ந்தே தாய்கொடுத்த வேலெறிந்தே
      தடைவிலக்கித் தாரகனின் உடல்பிளந்தான் வடிவேலன்
தருமநெறி வெல்லுதற்காய் தகப்பனுக்குத் திருக்கோவில்
      தாரணியில் நிறுவியபின் தகைமையுடன் பூசையிட்டான்
கருணையுடன் சிவனீந்த பாசுபதம் தனைவாங்கி
      குருபகவன் ஆசியுடன் குமரன்படை ஏகியதே!

                                                      ( 4 )
மாதுவொரு பாகமுறை ஈசனருள் மைந்தனவன்
      மாயைமகன் சூரனிடம் நேயமொடு சொன்னபல
தூதுமொழி தான்முறிய தூதுவரைத் துன்புறவே
      தீமைபல செய்தனரே சூரபதுமன் படைகள்
தீதுடைய சூரனுறைத் தீவுதனை நோக்கிபெரும்
      தேவர்படை ஏகியதே தெய்வமகன் முருகனுடன்
ஓதுமறை யாவுமே இயற்று(ம்) அயன் மாலுடனே
      ஓருமையுடன் குமரனவன் உறுதுணையாய் வந்தனரே!

                                                      ( 5 )
பதின்வயிற்றுப் பாலகனாய் படையெழுப்பிக் கிளம்பியதோர்
      பரமசிவன் மைந்தனிடம் மாலவனும் நான்முகனும்
மதிமயங்கி மன்னுயிர்க்கே தீங்கிழைத்த சூரனவன்
      மண்மிதித்தால் மாண்பில்லை எனவுரைக்க-தேவதச்சன்
அதிவிரைவாய் எல்லைதனில் அழகுறவே நிறுவியதோர்
      அறுமுகனின் பாசறையில் அமரர்கணம் தொழுதனரே!
கதிர்காமம் எனும்பேரில் கந்தனவன் திருவொளியைக்
      காசினியோர் இன்றளவும் கண்டுதொழும் திருத்தலமே!

                                                      ( 6 )
சேற்றலர்ந்த தாமரைபோல் செறிவுடையோன் பானுகோபன்
      செவ்வேளின் புகழறிந்தே சூரனுக்கு அறிவுரைத்தான்
தேற்றுதற்கோர் வழியுரைத்த மைந்தனிடம் மிகச்சினந்தே
      தெளிவடைதல் விழையாமல் சூரன்மிகச் சீற்றமுற்றான்
மாற்றுதற்கே வழியின்றி மகன்புகுந்தான் வெஞ்சமரில்
      மாயைகளால் தேவர்கணம் மனங்கலங்கப் போரிட்டான்
ஊற்றெடுத்த உம்பர்களின் உதிரமதைக் கண்டகுகன்
      உற்றதொரு தருணமதில் வேல்தொடுத்து மாய்த்தொழித்தான்

                                                      ( 7 )
சிங்கமுகன் சிவனடியைச் சிந்தித்தே இருப்பவனாம்
      சிறுவனல்ல சிவன்மகனே எனவறிந்தே சூரனுக்கு
பங்கமறப் பரிவுடனேப் பலகருத்தை எடுத்துரைத்தும்
      பாராளும் சூரனுக்கோ பகையேதும் குறையவில்லை
இங்கிவர்க்குத் தான்செய்யும் நன்றியெனப் போர்க்களத்தில்
      இன்முகமாய்த் தான்புகுந்தான் தம்பியெனும் சிங்கமுகன்
அங்கமதில் அறுமுகனின் ஆழ்கணைகள் தாங்கியவன்
      அமரநிலை தானெய்தி உடம்பொழிந்தான் போர்க்களத்தில்!

                                                      ( 8 )
அண்டம்பல தாண்டுகிற ஆற்றலுடை சூரனவன்
      அறவழிகள் பேணாத அசுரகுல தீரனவன்
கண்டமதில் பாம்பணியும் காளகற்றும் ஈசனையே
      கருத்தாகத் தொழுதுபல வரம்பெற்ற மாயைமகன்
கொண்டசினம் குறையாமல் குமரனுடன் போர்புரிய
      கொடும்பகையில் அறம்விலகி களமதனில் புகுந்தனனே
வெண்டிரையலைகளென வீறுடன் விடுத்தகணை
      வேலவனின் தோள்வலிமுன் விரயமுறக் கண்டனனே!

                                                      ( 9 )
வானவரின் சிறைநீக்கி வாழும்வழி தேடிடுக!
      வஞ்சக மனந்திருத்தி ஈசனருள் நாடிடுக
ஈனமுறப் போர்முனையில் மாய்வதொரு கேடெனவும்
      இன்னல்தரும் ஆணவமே காலனுறை வீடெனவும்
கோனவனாம் சூரனிடம் குருபரன் உரைத்தபின்னும்
      கொடுவுருவன் சூரனவன் கேளாதிருந்திடவே
ஆனவரை அமருலகை ஆள்வதை விரும்பியதால்
      ஆறுமுகன் அருள்மொழியைச் சூரனவன் கேட்கிலனே!

                                                      ( 10 )
ஆறுமுகன் ஈசன்மகன் எனவறிந்தும் அகந்தையினால்
      அமரர்கணம் தொழுதேத்தும் அமலவனை வென்றிடவே
மாறும்பல உருவெடுத்தான் மாயைமகன் முருகனுடன்
      மண்ணிருந்தும் விண்ணிருந்தும் மந்திரக்கணை தொடுத்தான்
வீறுமிகக் கொண்டெழுந்தான் வெற்றிவடிவேலவனும்
      விண்ணளவும் உருக்காட்டி சூரனுக்குச் சுளுரைத்தான்
ஊறுதனை உணர்ந்தவனாய் உறுகடலின் உட்புகுந்தே
      ஒளிந்துகொண்டான் அசுரனவன் மாமரமாய் உருவெடுத்தே
                                                      ( 11 )
அன்னையவள் அருளோடு அளித்திட்ட வேல்பாய்ச்சி
      அசுரனுடல் பிளந்திட்டான் ஆறுமுகனான குகன்
பின்னமுறு மாமரத்தின் ஓர்பாதி மயிலாக
      பிரிதுவரு மறுபாகம் சேவற்கொடி தானாக
மன்னுலகில் நெறிகாக்க மாயையென்றும் இடர்நீக்க
      மாலவனும் நான்முகனும் மலர்மாரி பொழிந்தனரே
இன்னல்தனை போக்கிபெரும் இம்மையுடன் மறுமையெனும்
      முன்வினையும் பின்வினையும் முருகனருள் நீக்கிடுமே!
                                                      ( 12 )

Saturday, October 29, 2011

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
 கந்தனே உனை மறவேன்,

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.

திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

ஒளி விளக்கு,படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
ண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.

மரபு வழியில் ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.

Thursday, October 27, 2011

ரா-ஒன்! வேணாம், வலிக்குது!

மு.கு: அஞ்சலி பக்தர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்!
நிறைய எதிர்பார்ப்புகளுடன் சினிமாவுக்குப் போகிற வழக்கத்தை நிறுத்தி பல ஆண்டுகளாகின்றன. நல்ல வேளை, ஹாலிவுட் படங்களை அதிகம் பார்க்கிற வழக்கமில்லை என்பதால், சில ஈயடிச்சான் காப்பிகளைக்கூட புதிதாய்ப் பார்ப்பதுபோல ரசிக்க முடிகிறது. இருந்தாலும், திகட்டத் திகட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்படுகிற படங்கள் பிரமிப்புக்குப் பதிலாக சலிப்பூட்டுவதுமுண்டு என்பதற்கு ஒரு நல்ல (அ) மோசமான உதாரணம் ரா-ஒன்!

இந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ’ரா-ஒன்’என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மூளையையும் செலவழித்திருக்கலாமோ என்ற கேள்வி இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்து விட்டு வெளியேறுகிறபோது எழுந்தது. ஷாருக் கான் முழுக்க முழுக்க தனது ஸ்டார் வேல்யூவையும், கம்பியூட்டர் கிராஃபிக்ஸையும் மட்டுமே நம்பி ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் போலிருக்கிறது. ’அவதார்’ படத்தைக் காட்டிலும் அதிக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கையாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நான் அவதார் பார்க்காததாலோ என்னமோ, ரா-ஒன் படத்தின் சில காட்சிகளில் திறந்த வாய் மூடாமல் பிரமித்தது உண்மைதான். அப்படியெல்லாம் ரசிகர்களை பிரமிப்பிலேயே உட்கார்த்தி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல திருஷ்டி கழிப்பது போலப் பல விஷயங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

படத்தின் சூப்பர் ஹீரோ ஜி-ஒன் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு வருகிறார். இயக்குனர் அனுபவ் சின்ஹா படம் ஆரம்பித்து இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் கழித்தும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. கதாநாயகன் சேகர் தென்னிந்தியன் என்பதைக் காட்ட, அவனை தயிர்சாதம் சாப்பிட வைத்து, அடிக்கொரு தடவை ’ஐயோ’ என்று சொல்ல வைத்து, தங்களது லாஜிக்-தாகத்தைக் காட்டியிருக்கிறார்கள். வில்லனுக்கு(அர்ஜுன் ராம்பால்) ’ரா-ஒன்’ என்றும் ஹீரோவுக்கு(ஷாருக்கான்) ஜீ-ஒன் என்றும் பெயரிட்டவர்கள் கதாநாயகிக்குக் கூட கே-ஒன் என்று பெயரிட்டிருக்கலாம். (K என்றால் என்னவென்று சொல்லி பென்ஷன் வாங்குகிற பெண்மணிகளின் கோபத்தைக் கிளற நான் தயாராயில்லை.)

கைநிறைய கழுதை விட்டை என்பது போல, சிறப்புத் தோற்றத்தில் சஞ்சய் தத், ப்ரியங்கா சோப்ரா மற்றும் நம்ம சூப்பர் ஸ்டார் வருகிறார்.(ரஜினியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது.) இது தவிர பிரமிப்பூட்டும் இரண்டு சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரு சம்மக் சம்மக் சலோ தவிர படத்தோடு ஒன்றுகிற மாதிரி எதையும் யாரும் முயற்சித்ததாய்த் தெரியவில்லை. முதல்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆபாச வசனம் வேறு!

புரூஸ் லீ, ஜெட் லீ போன்று பெண் கேரக்டர்களுக்கு இஸ்கீ லீ, உஸ்கீ லீ, சப்கீ லீ என்று பெயரிட்டிருப்பதை வட இந்தியாவில் பெண்கள் முகம் சுளிக்காமல் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறி! அதே போல ஒரு கஸ்டம் அதிகாரி ஜீ-ஒன்னை அருவருக்கத்தக்க வகையில் நோட்டமிடுவது போலக் காட்டியிருப்பதெல்லாம் கண்றாவியான கற்பனை! இப்படியொரு விவஸ்தை கெட்ட திரைக்கதையை நான்கு புத்திசாலிகள் எழுதியிருக்கிறார்களாம். Too many cooks spoil the sprout!  

அர்ஜுன் ராம்பால் (ரா-ஒன்) மற்றும் அர்மான் (ஷாருக்-கரீனா தம்பதியின் மகன்) ஆகிய இருவரும் ஓரளவு படத்தை முழுமையாகத் தொய்ந்து விடாமல் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள் என்றாலும், ஒரு சொதப்பல் படத்தை எவ்வளவுதான் தேற்ற முடியும்?

எந்திரன் படத்தோடு ரா-ஒன் படத்தை ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சிட்டி, பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவதை முதலில் டிவியை உடைப்பது, கொச்சி ஹனீபாவின் கையை வெட்டுவது என்று முதலில் காண்பித்து, பிறகு டாக்டர் வசீகரனையே கத்தியால் குத்த வந்து திகிலூட்டுவது என்று அழகாய் பில்ட்-அப் செய்திருந்தார்கள். ஆனால், இதில் "artificial intelligence' என்று இரண்டொரு முறை சொல்லி பார்வையாளர்களை "பொத்திக்கிட்டு போ’ என்று மறைமுகமாக சொல்லியிருப்பது போலிருக்கிறது. ஒரு சயன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் திரைக்கதைக்கு எந்த அழகில் உழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள்!

கதை என்று பார்த்தால், எனக்கு பாக்யராஜ்-நக்மா நடித்த ஒரு படத்தின் கருவே ஞாபகத்துக்கு வருகிறது. வீடியோ கேம் விற்பன்னரான சேகர் சுப்ரமணியம் (ஷாருக் கான்) மகன் பிரதீக் (அர்மான் வர்மா) ஆசைப்பட்டபடி, ஒரு ரா-ஒன் என்ற சூப்பர்-வில்லனை(அர்ஜுன் ராம்பால்) உருவாக்க, சூப்பர்-வில்லன் அக்கிரமம் செய்யத்தொடங்கியதும், ஜி-ஒன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை! கதாநாயகி சோனியா (கரீனா கபூர்) எல்லாக் கவலைக்கு மத்தியிலும் மிகக் கவர்ச்சியாய் உடையணிந்து வந்து கடுப்பேற்றுகிறார்.

ஷாருக் கானின் "ஓம் சாந்தி ஓம்" படத்தில் இரண்டாவது தீபிகா படுகோனின் அறிமுகக் காட்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அதே போல, பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ஷாருக் நம்பர்.ஒன் சொன்னதும், கிரண் கேர் எழுபதுகளின் மெலோடிராமாக்களை நினைவூட்டும் வகையில் உரத்த குரலில் அழும்போது திரையரங்கத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள். அது போன்ற நகைச்சுவை கூட ரா-ஒன் படத்தில் இல்லை. போதாக்குறைக்கு ஜி.ஒன் ஷாருக்கின் முகபாவம் அவரது படுசீரியஸ் படமான ’மை நேம் இஸ் கான்’ படத்தில் வந்த முகபாவத்தை மிகவும் நினைவூட்டுகிறது.

ஹிருதிக் ரோஷன்-ப்ரியங்கா சோப்ரா நடித்த ’கிருஷ்ஷ்’ படத்தைக் காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ’எந்திரன்’ படத்தோடு ஒப்பிட்டால் ரா-ஒன்னைப் பார்ப்பதற்கு ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.

"ரா-ஒன்" - தண்டச்செலவு

பி.கு: அஞ்சலி பக்தனான என் நண்பர் சந்துரு சொன்னது: எங்கேயும் எப்போதும் இன்னொருவாட்டி பார்க்கலாண்டா!

Monday, October 24, 2011

பேல்பூரி-ஸ்டால் எண்: 231011


குட்டிக்கதை

பேலூர் காளிகோவிலில் நவராத்திரி கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தனவாம். விழாக்குழுவினருக்கு ஒரே ஒரு கவலை; ஒவ்வொரு நாளும் காளிக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட இனிப்புகளை எறும்பு மொய்த்ததால் வீணாகப் போய்க்கொண்டிருந்தனவாம். இதைக் கேள்விப்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் "கோவில் வாசலில் ஒரு பிடி சர்க்கரையைத் தூவுங்கள்,’ என்று அறிவுரை கூறினாராம். அதன்படி செய்ததும், சாரி சாரியாக வந்த எறும்புகள் வாசலில் தூவியிருந்த சர்க்கரையை மொய்த்து விட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றனவாம். அன்றுமுதல் பக்தர்களுக்கு எறும்பு மொய்க்காத இனிப்புகள் கிடைத்தனவாம். பரமஹம்சரின் சமயோஜிதத்தைப் பாராட்டிய விழாக்குழுவினர் ’எப்படி எறும்புகள் வாசலில் இருந்த சர்க்கரையை மட்டும் தின்றுவிட்டுத் திரும்பிச் சென்றன?’ என்று கேட்டார்களாம். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பதில்:

"எறும்புகள் மட்டுமல்ல; மனிதர்களும் அப்படித்தான்! உயர்ந்த லட்சியங்களை நோக்கிப் புறப்படுவார்கள். ஆனால், இடையில் கிடைக்கிற அற்ப சந்தோஷங்களில் மகிழ்ந்து இது தான் லட்சியம் என்று போலியாக மகிழ்வடைந்து வாழ்வின் பொருளை மலிவாக்கிக் கொள்வார்கள்!"

பேரின்பம், சிற்றின்பம் குறித்து இதை விட சிறப்பாகக் கூறிய குட்டிக்கதையை நான் கேள்விப்பட்டதில்லை.

லூஸ் டாக்கிங்

மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் காங்கிரஸில் இப்போது சண்டை-அத்வானி!

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். நம்பர் 2 எப்பவுமே மன்மோகன் சிங்தானாக்கும்!

ராசா, தயாநிதிக்கு பதில் மத்திய அமைச்சரவையில் யாரையும் சேர்க்க திமுக விரும்பவில்லை!


ஆமாம்! ரகசியமா சத்தியமூர்த்தி பவன்-லே விவாதிச்சா அடுத்த நாள் எப்படியும் போட்டோவோட பகீரங்கமாகத் தானே போகுது?

அதிமுக, திமுக கூட்டணி அல்லாத புதிய அணி தமிழகத்தில் உருவாக வேண்டும்: கிருஷ்ணசாமி-

தப்பித்தவறி இதை கேப்டன் காதுலே போடாம இருக்கணும். அவரே பாவம் செம கடுப்புலே இருப்பாரு!

வாக்காளர்களுக்கு கொடுத்த லஞ்சத்தை திருப்பிக் கேட்ட வேட்பாளர்- மக்கள் அதிர்ச்சி-

வாக்காளர்கள் Right to recall சட்டம் கேட்குறா மாதிரி, வேட்பாளர்கள் Right to recover சட்டமும் கேட்பாங்களோ?

ஒரு ஓட்டுக் கூட வாங்க முடியாத வேட்பாளர்!

அடப்பாவமே, அவ்வளவு நல்லவரா?

ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

தூக்குலே போடுறதுக்கு நீங்க என்ன மைசூர் பாகா, தேங்காய் பர்பியா?

மோனிகா லெவின்ஸ்கியை சமாளிப்பது எப்படி?-ஜாப்ஸிடம் அட்வைஸ் கேட்ட கிளிண்டன்! 

அதை விடுங்கண்ணே! ஹிலாரியை கிளிண்டன் சமாளித்தது எப்படி-ன்னு பாகிஸ்தான்லே கேட்குறாங்களாம்!

அசத்தும் பதிவர்கள்:

நண்பர் கணேஷ் அவர்களின் ’மின்னல்வரிகள்’வலைப்பூ படுசுவாரசியம். சினிமா,இலக்கியம், செய்திகள் என்று     கல்யாணச் சாப்பாடு மாதிரி அண்ணாத்தே கலக்கிட்டிருக்காரு! குறுகிய     காலத்திலேயே அவரைப் பல பதிவர்கள் அரவணைத்துக் கொண்டிருப்பது     அவர்போன்ற புதிய பதிவர்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது.     பதிவுக்காக அவர் மேற்கொள்ளுகிற முயற்சிகளை     இடுகைகளை வாசிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.


கு.சீனுவாசன் அவர்களின் "சீனுவாசன் பக்கங்கள்"வலைப்பூவுக்குள்     போனால், அம்பா ஸ்கைவாக் மால் போனமாதிரி ஒரு     பிரமிப்பு     ஏற்படுகிறதுங்கோ! மனிதர் கவிதைகள், குறுஞ்செய்திகள்,     நகைச்சுவை     என்று பொளந்து கட்டுகிறார். இருந்தாலும் என்னுடைய     ஃபேவரிட் அவரது குழந்தைப்பாடல்கள் மற்றும் மெட்டுப்பாடல்கள்.

காணக்கண் கோடி வேண்டும்



தீபிகா பலிக்கல் என்ற இளம் வீராங்கனை ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாவார். விளையாட்டுத்துறையில் உலகளவில் பலரின் உள்ளங்கவர்ந்த சானியா மிர்சா, சாயினா நெஹவால் போலவே மிகவும் அழகான, மன்னிக்கவும், மிகவும் திறமையானவர் என்பதால் அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாயெல்லாம் பல்லாக வாழ்த்துகிறேன்.

இளம் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மேற்படி படம் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுவீர்களாக!

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

சகபதிவர்கள், வாசகர்கள் மற்றும் அவரது உற்றார் உறவினர் அனைவருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

(மறக்காமல் தீபாவளியன்று லேகியம் சாப்பிடவும்; தவறினால் பண்டிகை என்றும் பார்க்காமல் ஒரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்)

Saturday, October 22, 2011

கடுக்கண் வருங்கால் நகுக!

ஹிஹிஹி! மன்னிக்கணும்!

     இந்த இடுகை எனது மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.

     புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்! மீண்டும், மன்னிக்கவும்!

Thursday, October 20, 2011

உயிர்த்தெழும் வினாக்குறிகள்


பஸ் நிறுத்தமாகியிருந்த ஐயனார் கோவில் வாசலில் இறங்கியதும் சோளம் சுடுகிற வாசனை சின்னத்தம்பியை வரவேற்றது. ஆலமரத்தின் பல விழுதுகள் குட்டையாக வெட்டப்பட்டிருக்க, சுற்றியெழுப்பப்பட்டிருந்த கற்சுவற்றில் திருவிழாவுக்கு வந்தவர்களும் திரும்பிப்போகிறவர்களும் அமர்ந்திருந்தனர். கரும்புச்சாறு வண்டிகளும் குச்சி ஐஸ் வியாபாரிகளும் விற்பனையில் மும்முரமாகியிருந்தனர். டீக்கடையில் கிராமத்துக்கு ஒவ்வாத உடையணிந்த வாலிபர்கள் புகையோடு புழங்கிக்கொண்டிருந்தனர். ’சுக்குக்காப்பி ரெடி’ என்று அட்டையில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்த சின்னத்தம்பிக்குப் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. காப்பிக்குச் சொல்லிவிட்டு, கல்லாவில் சட்டைபோடாமல் அமர்ந்திருந்தவரிடம் காசு கொடுத்து விட்டு பேச்சைத் தொடங்கினான்.

"ஊருக்குள்ளே தங்க ஏதாச்சும் வசதியிருக்கா அண்ணே?"

"ஓ! வேலன் விடுதி இருக்கே!" என்று சற்று மிகையாகப் புன்னகைத்தவாறே கூறினார் கல்லாக்காரர். "நட்டத்தெருவிலே இருக்கு!"

’நட்டத்தெருவில் லாட்ஜா?’ ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் சின்னத்தம்பி. சுற்றும் முற்றும் பார்த்த எல்லா முகங்களும் வேற்றுமுகங்களாயிருந்தன. சாயம்போன ரசிகர்மன்றப் பலகைகளும், உளுத்துப்போன கம்பங்களில் நார் நாராய்க்கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த கட்சிக்கொடிகளும் இந்த கிராமம் கடந்த வருடங்களில் கண்டிருந்த மாற்றங்களின் மீதமிருக்கும் சாட்சிகளாய் தென்பட்டன. ’நானும் இந்த ஊர்க்காரன் தான்,’ என்று எவரிடமாவது சொல்லவேண்டும் போலிருந்தது. காப்பி பருகிவிட்டு நட்டத்தெருவை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில், பிறந்து வளர்ந்த தெருவிலேயே காசுகொடுத்துத் தங்கப்போகிறோம் என்ற விசித்திரமான உண்மை உறுத்தியது. ஆனால், தொலைவில் புதிதாய் வண்ணம்பூசி பெருமிதத்தோடு நின்றிருந்த கோவில் கோபுரத்தைப் பார்த்ததும் சற்றே குதூகலம் ஏற்பட்டது.

நட்டத்தெருவுக்குள் நுழைந்ததும் மனதில் ஒரு அலாதியான பரபரப்பு ஆட்கொண்டது போலிருந்தது. டயர் வண்டியோட்டியதும், சைக்கிள் ஓட்டப்பழகியதும், கொடைவிழாவின்போது சிலம்பம் சுத்தியதும், ஐந்து ரூபாய்க்காக உறியடிப்போட்டியில் சொட்டச் சொட்ட நனைந்ததும், பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கையில் நெய்ப்பந்தம் ஏந்தி விசும்பிக்கொண்டே சென்றதும் இதே நட்டத்தெருவில் தான்!

பல ஓட்டுவீடுகள் கான்க்ரீட்டுக்கு மாறியிருந்தன. பொதுக்கிணற்றின் மீது வலைபோட்டு மூடியிருந்தார்கள். இறுதியாக, ’வேலன் விடுதி’ என்று பெரிய பலகை வைத்திருந்த வீட்டைப் பார்த்ததும், சின்னத்தம்பிக்கு ஒரு மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு காலத்தில் மீசை மணியின் அரண்மனையாக கிராமத்தாரால் கருதப்பட்ட வீடு இன்று தங்கும் விடுதியாகியிருந்தது.

வெளிச்சமும் இருளும் சரிவிகிதத்தில் கலந்திருந்த முன்னறையில், மரமேஜை போட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். மேனேஜராக இருக்கலாம்.

"வணக்கம் சார்! திருவிழாவுக்கு வந்திருக்கேன், ஒரு ரூம் இருக்குமா?"

"வாங்க தம்பி! உங்களுக்கு இல்லாமலா?" என்று சைகையால் எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்ன அந்த நபர்,"சிங்கிள் ரூம் தானே?" என்று வினவினார்.

"ஆமாம் சார், சாமிக்கு பட்டு சாத்திட்டு சாயங்காலமே கிளம்ப வேண்டியது தான்! குளிச்சுட்டு கிளம்பற வரையிலும் இருக்க ஒரு ரூம் இருந்தாப்போதும்!," என்று கூறிய சின்னத்தம்பி, சற்றே தயக்கத்துடன்," ஃபேன் இருக்குமில்லையா?" என்று வினவினான்.

"என்ன அப்படிக் கேட்டுட்டீங்க தம்பி?" என்று சிரித்தார் அந்த ஆசாமி. "ஏ.சி.ரூமே இருக்கு! ஆனா, இப்போ காலியில்லை! சோப்பாயில் கம்பனிக்காரங்க வந்து தங்கியிருக்காங்க! லேய் வேலு, நாலாம் நம்பர் ரூமை சுத்தம் பண்ணியாச்சான்னு பார்த்துச் சொல்லு!" என்று கண்ணில் படாத வேலுவுக்கு இங்கிருந்தே உரக்க கட்டளையிட்டார்.

"எந்த சோப்பாயில் கம்பனி?"

"தெரியாதா தம்பி? அவங்க தான் கோவிலை புதுப்பிச்சு குடமுழுக்கு பண்ணினாங்க! இந்த தெரு முழுக்க கம்பனி ஆளுங்க தான் வாடகைக்குக் குடியிருக்காங்க! அவங்க ஆளுங்க வந்தா தங்கிப்போகத்தான் லாட்ஜே ஆரம்பிச்சோம்! தம்பி எந்தப் பக்கத்துலேருந்து வர்றீங்க?"

"பொறந்தது இந்த ஊரு தானுங்க," என்று புன்னகைத்தான் சின்னத்தம்பி. "இப்போ இருக்கிறது பெங்களூரு!"

"அட, இந்த ஊருக்காரங்களா?" என்று சிரித்தார் அந்த மேனேஜர். "இந்த ஊருக்காரங்கன்னு சொல்லிட்டு வர்றவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சுதுங்க!"

"பழைய ஆளுங்க ஒருத்தர் கூட இல்லியா?"

"ம், இருப்பாங்க, சுப்புலாபுரம், தெம்மாம்பட்டி பக்கத்துலே இருப்பாங்க! மத்தவங்கெல்லாம் கோவில்பட்டி, திருநேலின்னு போயிட்டாங்க!"

"இந்த வீட்டுலே குடியிருந்தாங்களே மீசை மணி? அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?"

"மீசை மணியா?" சிரித்தார் மேனேஜர். "நம்மளுக்கு யாரையும் தெரியாதுங்க! எனக்குத் தெரிஞ்சு ஃபேக்டரி கொடுத்த காசை வாங்கிட்டு, நீட்டுனே எடத்துலே கையெழுத்துப் போட்டுட்டு பழைய ஆளுங்கெல்லாம் எங்கெங்கேயோ போயிட்டாங்க! பாவம்! அப்புறம்......அட்வான்ஸ் ஒரு இருநூறு ரூபாய் கொடுங்க!"

எளிமையான நோட்டுப்புத்தகத்தில் சின்னத்தம்பியின் விபரங்களை எழுதி கையெழுத்து வாங்கி, விடுதியின் பெயரில்லாத ரசீது கிழித்துக்கொடுத்தார் மேனேஜர். வேலு என்கிற அந்த சிறுவன் வலுக்கட்டாயமாக சின்னத்தம்பியின் ஒரே பையை வாங்கிச் சுமந்து கொண்டு வந்து அறையில் வைத்தான். டவுண் லாட்ஜுக்களைப் போலவே தலைசொரிந்து நின்றான்.

"இந்தாப்பா!" என்று ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தான் சின்னத்தம்பி. "குடிக்கத் தண்ணி வேணும். குழாயிலே தண்ணி வருமில்லே?"

"வருமுங்க, சுடுதண்ணி கொண்டு வரச்சொல்லட்டுமா?" என்று கரிசனத்தோடு கேட்டான் வேலு.

"வேண்டாம்! குடிக்க மட்டும் தண்ணி கொண்டு வா!" என்று சொல்லி அவனை அனுப்பினான்.

சின்னத்தம்பி அறையின் வெளியே இருந்த வராந்தாவிலிருந்து நோட்டமிட்டபோது, அனேகமாக இந்த லாட்ஜுக்காக கிணற்றடி, மாட்டுத்தொழுவம், கொல்லைப்புறம், புளியமரம் என்று ஒரு காலத்தில் மீசை மணி வீட்டின் அம்சங்களாயிருந்த சில அடையாளங்கள் தரைமட்டமாகியிருக்கக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டான். இன்று முற்றிலும் அந்நியமாகத் தெரிகிற இந்த கிராமத்தின் கடந்தகாலத்தை நினைவுகூர, மீசை மணியைப் பற்றி யோசித்தால் போதுமானதாயிருக்கும் என்று பட்டது.

அந்தக் காலத்தில் அந்த வீட்டின் திண்ணைதான் தெருவிலேயே அகலமானதாகச் சொல்லப்பட்டது. பகல் நேரத்தில் மீசை மணி என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட சுப்பிரமணியும், சினேகிதர்களும் அந்தத் திண்ணையில் தான் அரசியலும் ஊர்வம்பும் பேசுவார்கள். மதிய நேரங்களில் கல்யாண ஜமுக்காளம் விரித்து சீட்டாடுவார்கள். கடந்து போகிற பெண்களை வயது வித்தியாசமின்றி நமுட்டுச்சிரிப்போடு பார்வையால் உரித்துப் பார்ப்பார்கள். தபால் பட்டுவாடா செய்ய வரும் மாரிமுத்துவை உட்காரவைத்து, யார் யாருக்கு எங்கெங்கிருந்து தபால்,மணியார்டர் வந்திருக்கிறது என்று விசாரித்து அனுப்புவார்கள். எல்லாம் வருடத்தில் நான்கு மாதம் விவசாயம் செய்து விட்டு, எட்டு மாதங்கள் வியர்வை சிந்தாமல் உட்கார்ந்து சாப்பிடுகிற மிதப்பு! இரவானால், சீட்டுக்கச்சேரி மாடிக்கு இடம்பெயர்ந்து விடும்; இம்முறை மடிநிறைய பணத்துடனும் குடல்நிறைய மதுவுடனும் ஆட்டம் நடைபெறும். ஓரிரு முறை போலீஸ் வந்து போயிருந்தது என்றாலும், அவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

மீசை மணிக்கு இரண்டு குழந்தைகள்! பெரியவள் கிரிஜா; சின்னவன் சதீஷ்! மனைவி கங்காவை மாலையில் தெருவின் ஏதேனும் ஒரு வீட்டுத்திண்ணையில் பெண்களோடு உட்கார்ந்து உரக்கப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடியும். மீசை மணியின் மனைவி என்பதாலோ, அந்தத் தெருவிலேயே பணக்காரி என்பதாலோ, அவளது நச்சரிப்புக்களையும் தலையீடுகளையும் பெரும்பாலானோர் சகித்துக்கொண்டிருந்தனர். அன்றாடங்காய்ச்சிகளோடு அவள் பேசுவதில்லையென்பதால், பலரின் ஏழ்மை கொச்சைப்படாமல் தப்பித்திருந்தது. அவளிடம் அதிகம் ஒட்டாமல் இருப்பதே நல்லது என்று மானாபிமானம் பார்க்கிற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போதித்து வைத்திருந்தனர்.

"டேய் சின்னா, அந்த கங்கா உன்கிட்டே என்னடா பேசிட்டிருந்தா?" என்று ஒரு முறை அம்மா, தான் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, வாசலிலேயே நிறுத்திக் கேட்டது ஞாபகம் வந்தது.

"ஒண்ணுமில்லேம்மா! நேத்து நம்ம வீட்டுக்கு ஒருத்தரு பூ வாங்கிட்டு வந்தாரே, அவரு யாருன்னு கேட்டாங்க! எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்," என்று கபடமில்லாமல் தான் சொன்னதும் நினைவுக்கு வந்தது. தலையில் பேரிடி இறங்கியது போல நிலைகுலைந்த அம்மா அன்று இரவு முழுவதும் உறங்காமல் அழுது கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. பணம் தருகிற மிதப்பில் பிறரது ஒழுக்கத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதை வாடிக்கையாக்கியிருந்த கங்காவின் குரூரபுத்தியை அறியுமளவு அப்போது அவனுக்கு அறிவு வளர்ச்சி இருந்திருக்கவில்லை.

ஒருபோகமே விளையும் பூமியையும் கடனின் அகோரப்பசிக்கு இரையாக்கிவிட்டு, எதிர்காலக்கவலைகளோடு நகரம்நோக்கிக் குடிபெயர்ந்தவர்களில் சின்னத்தம்பியின் குடும்பமும் ஒன்று. ’ஊரா அது? சவத்துமூதிங்க மொகத்துலே முழிக்காம சாவணும்,’ என்ற வைராக்கியத்தில் மட்டும் ஜெயித்து நோயிடம் தோற்றுப்போனார் அப்பா. அம்மா திடமாயிருந்தாள் என்றாலும் இயற்கை முந்தியது. பல வருடங்கள் கழித்து நள்ளிரவில் அவனை எழுப்பி,"நெஞ்சு வலிக்குதுடா....போன பங்குனி உத்திரத்துக்கே ஊருக்குப் போயிருக்...,’ என்று முடிக்காமல் விழுந்து இறந்தாள் அம்மா. அதன்பிறகு, சின்னத்தம்பியின் வாழ்க்கை வளைகுடாவில் வேலை, காதல், திருமணம் என்று குறிப்பிடும்படியான சோகங்களின்றி சுகமாகவே கழிந்தது. இப்போது ஊருக்கு வந்திருப்பது கூட அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான்!

ஆனால், இந்த கிராமத்தைப் பணத்தால் அடித்துப்போட்டிருக்கிறார்கள். கோவில் ஒன்றைத் தவிர அங்கு அவனுக்குப் பரிச்சயமானது எதுவுமில்லாதது போலிருந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க ஒட்டு வீடுகளே தென்பட்டன. ஒன்றுக்கு இரண்டாய் செல்போன் கோபுரங்கள். தூரத்து வானத்தில் சோப்பாயில் கம்பனியிலிருந்து செங்குத்தாய் எழும்பி வானத்தில் கலக்கும் கரும்புகையைப் பார்த்தபோது அப்பாவின் சாபம் பலித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

"ஐயா!"

நினைவுகளிலிருந்து தலைசிலுப்பித் திரும்பி நோக்கிய சின்னத்தம்பி இடுப்பில் தண்ணீர்ப்பானையில் வாசலருகே நின்றிருந்த அந்த வயதான பெண்மணியைக் கவனித்தான்.

"ஐயா! தண்ணி கொண்டாந்திருக்கேன்!"

சற்றே புருவஞ்சுருக்கி யோசித்தபோது அந்த முகம் பரிச்சயமாகத் தெரிந்து அடிவயிற்றில் ஒரு மெல்லிய வேதனை ஏற்பட்டது. அந்தப் பெண்மணியை உள்ளே அனுமதித்தவன், அவள் அறையின் ஒரு மூலையிலிருந்த ஸ்டூலின் மேல் அந்தப் பானையை வைத்துவிட்டு, செயற்கையாய் புன்னகைத்து விட்டு வெளியேறும் வரையிலும் அவளது கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவளை அடையாளம் கண்டுகொண்டதுமே, பல வருடங்களுக்கு முன்னர் அவள் தன்னிடம் கேட்ட கேள்வியும் ஞாபகத்துக்கு வரவே, பொங்கிவந்த அனுதாபத்தைத் தோற்கடிக்க விரும்பாமல், சின்னத்தம்பி அவள் வெளியேறும்வரை காத்திருந்தான்.

"ஏண்டா சின்னா? நேத்து உங்க வீ.ட்டுக்கு ஒருத்தரு பூ வாங்கிட்டு வந்தாரே, அவரு யாருடா?"

அவள் போய் பல நிமிடங்களாகியும், எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் அவள் அவனிடம் கேட்டிருந்த கேள்வி மீண்டும் முன்வந்து நின்றது.