Thursday, August 31, 2017

த்ரீ-இன்-ஒன் பதிவு

ஒன்று: கிரிக்கெட்


என்னுடைய மிகச்சிறிய வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகள் ’பசக்’கென்று ஞாபகம் இருக்கின்றன. அதில் ஸ்ரீரங்கம்-தஞ்சாவூர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி, விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்து ஒரு அனாயசாமான கட்டுரை எழுதியிருந்தார். 

அனேகமாக அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்த ரங்கு கடை போல ஒரு தூங்குமூஞ்சி கடையில் நாமும் நம் ஊர்களில் எப்போதாவது கடனுக்கு கத்திரி சிகரெட் வாங்கிப் புகைத்திருக்கலாம். அந்த மேலவீதி அம்பிபோல உருப்படியாக ஒரு பேட், பால் கூட இல்லாமல் வெளியூர் டீமையெல்லாம் மாட்ச் ஆடக் கூப்புடுகிற சவடால் சினேகிதர்களும் நமக்கு அவசியம் இருந்திருக்கிறார்கள். சுஜாதா பாணியிலேயே ‘கச்சலாக’ இருந்து, ஆட்டம் பார்க்க அழகாய் இல்லாதபோதும் பந்தைத் ’தேக்கி அடிக்கிற’ சாமர்த்தியமுள்ள நோஞ்சானை நாமும் பார்த்திருப்போம். ’த்ரோ’ மாதிரி பந்து போட்டு ’சாலக்காக’ விக்கெட் எடுப்பவர்களையும் நாம் அறிவோம். 

இவ்வாறாக, ‘தோற்பது நிஜம்’ என்று நெற்றியில் ரெட்-ஆக்ஸைடால் எழுதப்பட்ட அணிகள் சில சமயங்களில் ராட்சச டீம்களை மண்ணைக் கவிழ வைக்கிற மகோன்னதங்களும் நம் அனுபவத்தில் இருக்கத்தான் செய்யும். (அடியேனின் அணி செயிண்ட் ஜோசப் அணியை பாளையங்கோட்டையில் தோற்கடித்துவிட்டு நான்குநேரி வரை பாடிக்கொண்டு வந்து, வள்ளியூர் தாண்டுமுன் தொண்டை வற்றியதும் ஞாபகத்துக்கு வருகிறது. வழக்கம்போல நான் அதிலும் ஒன்றும் கிழிக்கவில்லை.)

இதைப்போலத்தான்! தென் ஆப்பிரிக்காவுக்குத் தண்ணி காட்டிய (வாடிக்கையான) மதர்ப்பில் சற்றே ஓவராக காலரை உயர்த்திய இங்கிலாந்து அணியை, பார்த்தாலேயே பரிதாபம் வரவழைக்கிற ஒரு மேற்கு இந்திய அணி, லீட்ஸ் மைதானத்தில் பதம் பார்த்திருப்பது, சுஜாதாவின் கட்டுரை உட்பட பல சங்கதிகளை ஞாபகப்படுத்தியது. கிரிக்கெட் திமிர் பிடித்தவர்களின் மண்டை வீங்கக் குட்டும் என்பதற்கான சமீபத்திய உதாரணம். இங்கிலாந்து அணி ஒரு தொடர் ஜெயித்தால் பதினோரு பேர்களும் இருபத்தி இரண்டு பேர்களுக்கான வீறாப்பு பேசுவது வழக்கம். பின்னால், சொப்பை அணியிடம் அடிவாங்கி, கேப்டன் பதவி விலகி, போன மாதம் லங்காஷேர் கவுன்டியில் முன்னூறு ரன்கள், முப்பது விக்கெடுகள் ( 45 மாட்சுகளில்) எடுத்தவரை கேப்டனாக்குவதும் பாரம்பரியம் என அறிக.


அப்புறம், நம்ம இந்தியா இலங்கையை அடித்து நொறுக்கியது பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.  பதினோரு பல்குத்தும் குச்சிகளை ஈவு இரக்கமில்லாமல் நொறுக்கியது குறித்துப் பெருமைப்பட்டால், கோலிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என்று பயில்வான் பக்கிரிகள் காத்திருக்கிறார்கள். அம்புட்டுத்தேன்.


2.அரசியல்

கமல்ஹாசன் மீது எனக்கிருக்கிற அபிமானம், ஓ.பி.எஸ் மீது டிடிவி.தினகரனுக்கு இருக்கும் அபிமானத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல என்று இங்கு தொடர்ந்து வருகிறவர்களுக்குத் தெரியும். இருந்தும், தற்போது அவர் ‘ட்விட்டர்’ல் விடுகிற கீச்சுகளுக்கு நான் ரசிகனாகிக் கொண்டிருக்கிறேன். கமல் - ரஜினி இருவரில் அரசியலுக்கு வருகிற தகுதி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று கேட்பதைவிட, அந்தத் தகுதி முதலில் யாருக்கு இருக்கிறது என்று கேட்டால், நிச்சயம் கமல்ஹாசனுக்கே இருக்கிறது. போதாக்குறைக்கு ‘சுயமரியாதை’ வீரர் வேறு! இந்து மதத்தை எள்ளி நகையாடுவதில் சமர்த்தர் என்பது கூடுதல் தகுதியாகும்.  நிச்சயம் மக்கள் கமலுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்றே நம்புகிறேன். அட, ஓவியாவுக்குப் போட்டவர்கள், கமலுக்குப் போடாமலா இருப்பார்கள்?

சீரியஸாகவே, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிக்கலாம். சீரியஸாகவே, அவரது கருத்துக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. சீரியஸாகவே, அவர் எடுத்திருக்கிற நிலைப்பாடு சரியானது; பொருத்தமானதும் கூட! 

இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாராம்? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாய்பொத்திக்கொண்டு இருந்தாரே?’


இது சொத்தை வாதம்!

ஜெ. உயிரோடு இருந்தபோது, நம் வலையுலகிலேயே கூட எத்தனைபேர் துணிச்சலாக எழுதினார்கள்? உண்மைத்தமிழன், ஜாக்கி சேகர், புதுகை அப்துல்லா..... அட, இன்னும் ஐந்து விரல் கூட தேறவில்லையே!

ஜெ..உயிரோடு இருந்திருந்தால், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியிருப்பார்களா? சந்தேகம்தான்! ஓ.பி.எஸ்-ஸை ‘மிக்சர்’ என்று நக்கலடித்ததுபோல, ஜெவை யாராவது நக்கலடித்திருப்பார்களா? ஊஹும்!

இதில் கமல் மட்டும் என்ன பாவம் செய்தார்? அவரும் உறுமீன் வருமளவு வாடியிருந்து ட்வீட்டுகிறார். 

தனது படங்களின் படப்பிடிப்புக்களைக் கூட தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் வைத்துக்கொள்கிற ரஜினியை விட, கமல் தைரியமானவர் என்றுதான் தோன்றுகிறது. மேலும், தமிழகத்தைப் பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? கல்யாண மண்டபத்தில் கூடுகிற விசிலடிச்சான் குஞ்சுகளை தமிழக மக்கள் என்று நினைத்தால் அப்புறம் கதை கந்தலாகி விடும். அம்புட்டுத்தேன்.


3. ஆன்மீகம்


ஹர்யானாவில் குர்மீத் சிங் ராம் ரஹீம் இன்சான் என்ற மதகுரு பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதை வைத்துக் கொண்டு, சில அரைவேக்காடுகள் இந்துமதத்தை மட்டம் தட்டி எழுதிக் கொண்டு வருகின்றன. அவர் பிறப்பால் ஒரு சீக்கியர் என்பது ஞாபகம் இருக்கட்டும். பா.ஜ.க மட்டுமல்ல, காங்கிரஸ் மட்டுமல்ல, முலாயம் சிங் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருடன் அனுசரித்துப் போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

”சரி, கேரளாவில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கிறித்துவப் பாதிரியார்கள் குறித்து நமது செக்யூலர் பதிவர்கள் ஏன் இன்னும் கொதிக்கவில்லை?

ஜாகீர் நாயிக் என்னும் இஸ்லாமிய மதகுரு, மதமாற்றம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததைப் பற்றி ஏன் எழுதவில்லை?”


..................ன்று கேள்விகள் எழலாம். கேட்க வேண்டாம்.


பி.கு:

எழுதாமல் இருந்தால் ‘ஏன் எழுதுவதில்லை?’ என்று கேட்க வேண்டியது. எழுதினால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியது. ஆனால், பெண் பதிவர்கள் பதிவுகளுக்கு மட்டும் தவறாமல் போய் கருத்தும் எழுதி, த.ம.ஓ.ந-வையும் குறிப்பிட வேண்டியது.

வலையுலகம் மாறவேயில்லை. அட போங்கய்யா!Sunday, July 9, 2017

பாலாமணியும் பாகு’பல்லி’யும்

பாலாமணியும் பாகு’பல்லி’யும்


பாலாமணி அடுக்களையிலிருந்து விரைந்து வந்த அதிர்வில், கிட்டாமணியின் மூக்குக்கண்ணாடி நழுவி நாக்குக்கண்ணாடியானது.


”வீட்டைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம, ஆதித்யா டிவியைப் பார்த்து கெக்கெபிக்கேன்னு சிரிச்சிட்டிருக்கீங்களே! இது உங்களுக்கே நல்லாயிருக்கா?”


காஸ்ட்யூம் மாற்றிவந்த காஞ்சனா பேய் போல, மூச்சிரைத்தவாறு முழியை உருட்டி நின்ற மனைவியைப் பார்த்த கிட்டாமணி ஒரு கணம் வெலவெலத்தாலும் சுதாரித்துக் கொண்டான்.


”அபாண்டமாப் பேசாதே!” கிட்டாமணி வெடுக்கென்று பதிலளித்தான். “வாய்விட்டுச் சிரிச்சா ஆதித்யா டிவி பார்க்கறேன்னு அர்த்தமா? நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு!”


”போதும் உங்க தேசவிசாரம்!” பாலாமணி கோபத்துடன் இரைந்தாள். “ஒரு நிமிஷம் அடுக்களைக்கு வந்து பாருங்க அநியாயத்தை!”


”அநியாயமா?” கிட்டாமணி குழம்பினான். “அடுக்களையிலே 25 வருஷமா  நீதானே அநியாயம் பண்ணிட்டிருக்கே?”


”என் சமையலையா கிண்டல் பண்றீங்க?” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க!”


”பார்த்தியா? உன் சமையலைப் பத்திப்பேசினா, நீயே குப்பைத்தொட்டியைப் பத்திப் பேசறே!”


”நீங்களா இப்படி வாயடிக்கிறீங்க?” பாலாமணியின் குரலில் அதிர்ச்சியும் வியப்பும்  சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது.


“சரிசரி, அடுக்களையிலே என்ன அநியாயம் சொல்லித்தொலை! நான் புதுசா டாண்டெக்ஸ் ஜட்டி வாங்கினதை ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடணும்.”


”ஜட்டி வாங்கினதையெல்லாமா ஃபேஸ்புக்குல ஸ்டேடஸாப் போடுவாங்க?”


”நீ வேற, அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”


”எப்படியோ போங்க! இப்ப கிச்சனுக்கு வாங்க! இப்படியே போச்சுன்னா இனிமே நான் அடுக்களைப்பக்கமே போக மாட்டேன்.”

”அட, இன்னிக்கு நல்ல செய்தி வரும்னு ஹரிகேசவ நல்லூர் வெங்கட்ராமன் இதைத்தான் டிவியிலே சொன்னாரா?”


”முதல்லே அடுக்களைக்கு வந்து பாருங்க! உங்க பேச்சு சுத்தமா நின்னுடும்!”


‘வழக்கமா சாப்பிட்டதுக்கப்புறம்தானே பேச்சு நிக்கும்?’ குழம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கிட்டாமணி.


”ஜன்னல் கதவு திறந்திருக்கு பார்த்தீங்களா?”


”இதுவா அநியாயம்? இது திறந்திருக்கப்போய்த்தானே பக்கத்துவீட்டுல விஜிடபிள் பிரியாணியா சிக்கன் பிரியாணியான்னு கண்டுபிடிக்க முடியுது?”


”ஏன்? நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே? மறந்திட்டீங்களா?”


“மறக்க முடியுமா?” கிட்டாமணி பெருமூச்சு விட்டான். ”அதுக்கப்புறம்தானே கோழிக்கறியையும் தடைபண்ணுங்கன்னு மோடிக்கு மகஜர் அனுப்பினேன்.”


“அன்னிக்கு விழுந்து விழுந்து சாப்பிட்டீங்க! இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க!”


“உனக்கு ஐ.பி.ஸி.கோட் தெரியலேன்னா நான் என்ன பண்ணட்டும்?”


”ஜெயலலிதா இல்லேன்னதும் ஆம்பிளைங்க ஓவராப் பேச ஆரம்பிச்சிட்டாங்க!.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க!”


”என்ன அநியாயம்?” எரிச்சலில் கூச்சலிட்டான் கிட்டாமணி.”திரும்பத் திரும்ப அநியாயம் அநியாயம்னு டீஸர் ரிலீஸ் பண்றியே தவிர மெயின் பிக்சரை ரிலீஸ் பண்ணவே மாட்டேங்கிறியே?”


”சுவத்துல என்ன இருக்கு பாருங்க!”


”சுவத்துலயா?  ஒட்டடை இருக்கு! வழக்கமா நம்ம வெடிங் ஆனிவர்சரி வரும்போதுதானே ஒட்டடையடிப்பேன்? அப்பப் பார்த்துக்கலாம்.”


”நான் சொல்ல வந்ததே வேறே!” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க?”


”என் ரேஞ்சுக்கு நான் அதைத்தானே அடிக்க முடியும்.”


”சரிசரி, முதல்ல இந்த அநியாயத்தை….”


”கடுப்பேத்தாதே பாலா!” கிட்டாமணி இடைமறித்து எட்டுக்கட்டையில் கூவினான். “மரியாதையா என்ன மேட்டர்னு சொல்றியா இல்லே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்குக் கூட்டிட்டுப் போட்டுமா?”


”சுவத்துல கருகருன்னு ஒரு பல்லி இருக்கு பாருங்க!”


அப்போதுதான் கவனித்தான். சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.


”ஆமாம்; பல்லி!”


”அப்பாடா! இப்பவாச்சும் பார்த்தீங்களே?”


”நேரடியா அடுக்களையிலே ஒரு பல்லியிருக்குன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே?”


”எனக்குப் பல்லின்னாலே ரொம்ப பயம்,” பாலாமணி கிட்டாமணியிடம் ஒண்டிக்கொண்டாள். “அதுலயும் இந்தப் பல்லியைப் பாருங்க, குண்டுகுண்டா, கொழுக்மொழுக்குன்னு பாகுபலி பிரபாஸ் மாதிரியே இருக்கு.”


”அப்ப அனேகமா அனுஷ்கா பல்லியும் இருந்தாகணுமே!”


”ரொம்ப முக்கியம்! முதல்லே அந்தப் பல்லியைத் துரத்துங்க!”


”ஒரு காப்பி போடேன்!”


”பல்லியைத் துரத்தறதுக்குக் காப்பி குடிக்கணுமா?”


”குடிக்க வேண்டாம். நீ காப்பி போட்டா அந்த வாசனைக்கே அது கூவத்தூருக்குக் குடிபோயிடும்.”


”ஒரு பல்லிக்கு முன்னாலே என்னை அவமானப்படுத்தாதீங்க! இந்தப் பல்லி இருக்கிறவரைக்கும் வீட்டுல அடுப்புப் பத்த வைக்க மாட்டேன். அப்புறம் வெளியிலேதான் சாப்பாடு.”


”எனக்கு அரை டஜன் இட்லிபோதும்; உனக்கென்ன வாங்கிட்டு வரட்டும்?”


”ஒண்ணும் வேண்டாம்! பல்லி போறவரைக்கும் நீங்க சமையல் பண்ணுங்க! ஓ.கேயா?”


”அப்ப போனவாட்டி வாங்கின ஜெலூசில் இன்னும் ஸ்டாக் இருக்கா?”


“இப்பத்தான் புரியுது,” அரசியல்வாதி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிபோலச் சிரித்தாள் பாலாமணி. “உங்களுக்குப் பல்லின்னா பயம். அதான் எதெதையோ சொல்லி ஜகா வாங்கறீங்க.”


”நான் பாம்பையே அடிச்சிருக்கேன் தெரியுமா?” இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினான் கிட்டாமணி.


”போதும் போதும்!” அங்கலாய்த்தாள் பாலாமணி. ”சென்னையிலே தண்ணிப்பஞ்சம் வருது. ஒழுங்காப் பம்பு அடிக்கக் கத்துக்குங்க. பாம்பை அடிக்கிறாராம்.”


கிட்டாமணி கிளர்ந்தெழுந்தான்.


”அனாவசியமா என் வீரத்தைக் கிளப்பிவிடாதே! இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு! இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கணும்; இல்லை இந்தப் பல்லி இருக்கணும். இரண்டில ஒண்ணு பார்த்திடறேன்.”


ஐந்து நிமிடத்தில் கிட்டாமணி வீட்டை விட்டுக் கிளம்பினான்.


”என்னங்க, வீட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வெளியே போனா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க!”


”சும்மாயிரு பாலா, இந்தக் கிட்டாமணி முன்வைச்ச காலைப் பின்வைக்க மாட்டான்.”


”ஐயோ! சொல்றதைக் கேளுங்க,” எரிச்சலுடன் கூறினாள் பாலாமணி. “ நீங்க வேஷ்டின்னு நினைச்சு பெட்ஷீட்டைக் கட்டிக்கிட்டு வெளியே கிளம்பறீங்க!”


கிட்டாமணிக்குத் தனது வரலாற்றுப்பிழை புரிந்தது. மீண்டும் அறைக்குச் சென்று, பெட்ஷீட்டை அவிழ்த்துவிட்டு, வேஷ்டியை எடுத்தவன், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று, பெட்ஷீட் இருந்த இடத்திலிருந்து ஒரு பத்து அடி தள்ளி நின்று கட்டிக்கொண்டு கிளம்பினான்.


”அடுக்களையிலே இருக்கிற பல்லியை விரட்டச்சொன்னா, இவர்பாட்டுக்கு வெளியே கிளம்பிட்டாரே, ஒருவேளை வள்ளூவர்கோட்டம் பக்கத்துல போய் போராட்டம் பண்ணுவாரோ?”


அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி. சில நிமிடங்கள் கழித்து, கிட்டாமணி கையில் சில அட்டை டப்பாக்களுடன் வீடு திரும்பினான்.


”என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?”


”சீக்ரட்!” என்று கம்பீரமாகக் கூறியவாறே அடுக்களைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் கிட்டாமணி. சிறிது நேரத்துக்கு உள்ளேயிருந்து கடமுடா கடமுடாவென்று சத்தம் கேட்டது. பிறகு, வெளியே வந்து கிட்டாமணியைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். அவனது முகத்தில், வாஷர் போன குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல பெருமை ஒழுகியது.


”இனிமேல் பல்லி மட்டுமில்லை; புழுபூச்சி கூட நம்ம வீட்டுக்குள்ளே வராது.”


பாலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சில நிமிடங்கள் கழித்து அடுக்களைக்குள் சென்றபோது, பல்லியைக் காணவில்லை. வழக்கமாக ‘சின்க்’ பக்கம் அணி அணியாய்ப் பிரிந்து ஐ.பி.எல்.விளையாடும் கரப்பான் பூச்சிகள் கூடக் காணாமல் போய்விட்டன.


இரவு வந்தது. பழைய படங்களில் வரும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிபோல, கையில் பால் டம்ளருடன் கணவரை நெருங்கினாள் பாலாமணி.


“ஆனாலும் நீங்க ரொம்ப கெட்டிக்காரர்தான்,” குக்கரில் வேகவைத்த குதிரைவால் அரிசிபோலக் குழைந்தாள் பாலாமணி. “அரை மணி நேரத்துல பல்லி, பாச்சா எல்லாத்தையும் விரட்டி அடுக்களையைச் சுத்தமாக்கிட்டீங்களே!  உங்களுக்கு உடம்பெல்லாம் ஊளைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன்; உடம்பெல்லாம் மூளைன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது.”


கிட்டாமணி ரொமாண்டிக்காக மனைவியைப் பார்க்க, ஒரு கணம் அவளுக்குக் காணாமல்போன பல்லி ஞாபகம் வந்தாலும், சமாளித்தாள்.


“சொல்லுங்க, என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க? ப்ளீஸ், சொல்லுங்க!”


“கொஞ்சம் செலவு பண்ணினேன் பாலா,” சிரித்தான் கிட்டாமணி. ”ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போயி ரெண்டு சி.சி.டிவி கேமராவும், மைக்ரோபோனும் வாங்கிக் கொண்டுவந்து சும்மா அடுக்களையிலே மறைவா வைச்சேன். அதைப் பார்த்திட்டு பல்லி பயந்து ஓடிப்போயிடுச்சு.”


“எனக்குப் புரியலியே!” பாலாமணி மீண்டும் குழம்பினாள். “சிசிடிவியும், மைக்கும் வைச்சா பல்லி ஏன் பயப்படணும்?”


“ஏன்னா, கேமிராவையும் மைக்கையும் பார்த்ததும் பல்லிக்கு, நாம அதை வைச்சு ‘பிக்-பாஸ்’ மாதிரி ரியாலிட்டி ஷோ நடத்தறோமோன்னு சந்தேகம் வந்திருச்சு. ஆயிரம் இருந்தாலும் பிராணிகள் இல்லையா? மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா? இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு!”

பி.கு: பிரபாஸ் பல்லி படம் கிடைக்காததால், தமன்னா பல்லி படம் மேலே தரப்பட்டுள்ளது என அறிக.