Thursday, September 30, 2010

இது ஆவுறதில்லே....!


நெல்லை இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நடந்து கொண்டிருந்த கடுமையான சோதனைகளைப் பார்த்து என்னுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த களக்காடு கருமுத்து வியப்பில் ஆழ்ந்தான்.

"சேட்டை! வர வர திருநேலி போலீஸ்கூட அமெரிக்கா போலீஸ் மாதிரி ஆயிடுச்சு!"

"ஓ! நீ அமெரிக்கா கூட போயிருக்கியா?"

"நான் அம்பாசமுத்திரமே போனதில்லை இன்னும்," என்று ஒப்புக்கொண்ட கருமுத்து," அதாவது சேட்டை, சமீபத்துலே சிகாகோ விமானநிலையத்துலே நம்ம இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் பட்டேலையே குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டாங்களாமே!. அதே மாதிரி நம்மூரு ஆளுங்களும் ரொம்ப கண்டிப்பா மாறிட்டு வர்றாங்கன்னு சொல்ல வந்தேன்."

"ஹிஹி! நம்ம கதையே வேறேண்ணே! ஒரு போலீஸ்காரர் கிட்டே ஐ.டி.கார்டைக் கேட்டதுக்காக, பஸ் கண்டக்டரையே செருப்பாலே அடிச்சிட்டாராம். தெரியுமா?"

"ஐயையோ, என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?"

"சும்மாவா நம்ம வடிவேலு மருதமலை படத்துலே போலீஸை இந்தக் கலாய்ப்புக் கலாய்ச்சாரு?"

"பார்த்தேன் சேட்டை, ஆனாலும், போலீஸ்காரங்க ஜிப்புப் போடவும், ஜட்டி போடவும் மறக்கிறவங்கன்னு காட்டுனது எனக்குப் பிடிக்கலே!"

"சரிதான், உனக்கு விஷயமே தெரியாது போலிருக்கு! நம்மூருலே ஜெயில் கைதிங்களோட ஜட்டியைக் கூட விட்டு வைக்காம போலீஸ் அதிகாரிங்க திருடறாங்கன்னு செய்தி வந்ததே படிக்கலியா?"

"என்னது? ஜட்டியைத் திருடிட்டாங்களா? கருமம்! அது சரி, சைஸ்லே பிரச்சினை வராது?"

"நம்மூரு போலீஸ்காரங்களுக்கு எந்த சைஸ் போட்டாலும் டைட்டாத் தானிருக்கும்! அதுனாலே பிரச்சினையில்லை!"

"ஹும், இப்படியே போச்சுதுன்னா வடிவேலு காமெடி மாதிரியே யாராவது கிணத்தைக் காணோமுன்னு கம்ப்ளெயின்ட் பண்ணினாலும் பண்ணுவாங்க போலிருக்குது!"

"அட, கிணத்தை விடு கருமுத்தண்ணே! ஒரு ஊருலே ரோட்டையே காணோம், கண்டிபுடிச்சுக் கொடுத்தா பரிசு தர்றோமுன்னு பஞ்சாயத்துத் தலைவரு அறிவுச்சிருக்காரு தெரியுமா?

"ஐயோ சாமீ! போகட்டும், இப்போ நம்மளை சீக்கிரமா செக் பண்ணி அனுப்பணுமேன்னு கவலையா இருக்கு! இன்னிக்குன்னு பார்த்து கூட்டம் வேறே அதிகமாயிருக்கு! ஒரு வேளை சென்னையிலே ஏதாவது கூட்டம், மாநாடு நடக்குதோ?"

"இப்பல்லாம் எதுக்குத்தான் கூட்டம் போடுறதுன்னு வெவஸ்தையில்லாமப் போயிடுச்சில்லே? பாரேன், அக்டோபர் மூணாம் தேதியன்னிக்கு நம்ம விஜய டி.ராஜேந்தருக்குப் பிறந்தநாளாம். அன்னிக்கு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்னு அவரே அறிவிச்சிருக்காரு!"

"சேச்சே! அவரு பிறந்ததுக்கெல்லாம் மத்தவங்க கண்டனம் தெரிவிக்க முடியுமா? ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை மனுசனுக்கு?"

ஒரு வழியாக எங்களது பயணப்பைகளை போலீசார் சோதனை செய்யத் தொடங்கினர்.

"இந்தப் பிளாஸ்டிக் பையிலே என்ன இருக்கு?"

"சாம்பார் சாதம், தயிர் சாதம், மெதுவடை!"

"டிரெயின்லே என்னதான் கொண்டுபோறதுன்னு விவஸ்தையில்லியா சார்? மறக்காம கோவில்பட்டி வர்றதுக்குள்ளே சாப்பிட்டு முடிச்சிருங்க! இல்லாட்டி விருதுநகர்லே பிரச்சினையாயிடப்போகுது."

"ஏன் சேட்டை, நாம சாம்பார்சாதம் சாப்பிடாட்டா விருதுநகர்லே ஏன் பிரச்சினை வரப்போகுது? சம்பந்தமேயில்லாம என்னென்னமோ சொல்லுறாரு?"

"விடு கருமுத்து! சம்பந்தமேயில்லாம பேசறதை விடுங்க, இப்பல்லாம் சம்பந்தமேயில்லாம விருதுங்களே கொடுக்கிறாங்க!"

"தெரியுமே! பிரபுதேவா-நயன்தாராவுக்கு சிறந்த ஜோடி விருது கொடுத்தாங்களே, அதைத் தானே சொல்றே சேட்டை?"

"அது கூட பரவாயில்லை. நம்ம பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறந்த நிர்வாகின்னு விருது கொடுத்திருக்காங்களாம். எப்படியெல்லாம் அல்வாய் கொடுக்கிறாங்க பாரு!"

"சே! இப்போ ஞாபகப்படுத்தறியே சேட்டை! ஒரு கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கிட்டு வந்திருக்கலாம் அடுத்த வாட்டியாவது மறக்காம வாங்கிட்டு வர்றேன்."

"இதுக்கு ஏன் அடுத்த வாட்டி வர்ற வரைக்கும் காத்திருக்கணும்? ஊருக்குத் திரும்புனதும் தபால்லே அனுப்பிடேன்!"

"சேட்டை, வடிவேலு படத்துலே வத்தக்குழம்பை கொரியர்லே அனுப்புற காமெடி ஞாபகம் வந்திருச்சா? அல்வாயை எப்படித் தபால்லே அனுப்புறதாம்..?"

"நீ பேப்பர் படிக்கிறதே இல்லை போலிருக்குது! இனிமேலு அல்வாய், வத்தக்கொழம்பு, ஊறுகாய் எல்லாத்தையும் ஸ்பீட்-போஸ்டுலே அனுப்பலாமுன்னு தபால் துறை அறிவிச்சிருக்காங்களே, படிக்கலியா நீ?"

பேசிக்கொண்டே எங்கள் இருக்கையிருந்த பெட்டியை அடைந்தோம். வாசலிலேயே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.

"பையிலே என்ன?"

"துணிமணி, ஷேவிங் செட்டு, சோப்பு,சீப்பு, கண்ணாடி, பிரஷ், பேஸ்ட்டு...!"

"அந்தப் பிளாஸ்டிக் பையிலே என்ன?"

"சாம்பார் சாதம், தயிர்சாதம், மெதுவடை!"

"கோவில்பட்டி வர்றதுக்கு முன்னாலே சாப்பி..."

"தெரியும், இல்லாட்டி விருதுநகருலே பிரச்சினையாகும்...!"

"போங்க சார், ஜாக்கிரதை..!" என்று எச்சரித்துவிட்டுப்போனார் அந்தப் போலீஸ்காரர்.

"ஏன் சேட்டை, நாம என்னவோ ஆர்.டி.எக்ஸ் கொண்டு போற மாதிரியில்லே துளைச்சுத் துளைச்சுக் கேள்வி கேட்குறாங்க! இந்த அயோத்தித் தீர்ப்புக்கும் சாம்பார் சாதத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?"

எங்கள் இருக்கையை அடைந்தபோது, அங்கே ஒரு வயதான தம்பதியினர் புளியோதரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"எக்ஸ்கியூஸ் மீ! இந்தப் போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியலே! நானும் இத்தனை வருசமா புளியோதரை எடுத்துக்கிட்டு பயணம் பண்ணிட்டிருக்கேன். ஆனா, இன்னிக்கு மாதிரி இது புளியோதரை இது புளியோதரைன்னு வைகுண்ட ஏகாதசியன்னிக்கு அகண்டநாமஜெபம் மாதிரி ஒவ்வொரு போலீஸ்காரர் கிட்டேயும் நான் சொன்னதேயில்லை. அதான், கையோட சாப்பிட்டாத் தொல்லை விட்டது பாருங்க!"

"கருமுத்தண்ணே! எதுக்கு இப்படி சாப்பாடு விசயத்தைப் பத்தித் துருவித் துருவிக் கேட்கறாங்க?"

"தெரியலே சேட்டை! ஆனா, இன்னிக்கு யாரோ ஒரு வி.ஐ.பி. இந்த ட்ரெயினிலே வர்றாருன்னு மட்டும் நல்லாத் தெரியுது. அதுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"

"ஏதாவது மிரட்டல் வந்திருக்குமண்ணே! சமீபத்துலே கூட ஜெயலலிதா மேடத்துக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் -னுற பேருலே மிரட்டல் வந்திருக்காம்."

"நல்ல வேளை, ’எந்திரன்’ பேருலே வரலே! இல்லாட்டா இதை வச்சே பதிவர்கள் ஒரு பெரிய ரவுண்டு கட்டியிருப்பாங்க!"

பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு போலீஸ்காரர் வரவும், அவரிடம் பல்லைக்காட்டி நைசாக விசாரித்தோம்.

"என்ன சார், இன்னிக்கு கெடுபிடி ரொம்ப அதிகமாயிருக்கே? சாப்பாட்டு பார்சலைப் பத்திக் கூட துருவித் துருவி விசாரிக்கிறாங்களே? என்ன விசயம்?"

"அது வேறே ஒண்ணுமில்லே தம்பி! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தரு மப்புலே வண்டியிலே ஏறி பயணம் பண்ணியிருக்காரு. திடீர்னு பார்த்தா அவரு கொண்டுவந்த பையைக் காணோம். உடனே அந்தாளு சட்டுன்னு சங்கிலியைப் பிடிச்சு நிறுத்திட்டாரு! இன்னிக்கு ஒரு வி.ஐ.பி. வர்றாரு! அதுனாலே தான் யாராவது அதைக் காணோம், இதைக் காணோமுன்னு வழியிலே சங்கிலியைப் பிடிச்சு நிறுத்தக் கூடாதேன்னு தீவிரமா விசாரிச்சு அனுப்புறோம்." என்றார் போலீஸ்காரர்.

"அதெல்லாம் சரி! ஆனா, எதுக்காக சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பத்தி ஸ்பெஷலா விசாரிக்கிறீங்க?"

"அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கறீங்க தம்பி? அன்னிக்கு பையைக் காணோமுன்னு சங்கிலியைப் பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தினாரில்லே, அவரு பையிலே என்ன இருந்தது தெரியுமா? அல்வாயும் கருவாடும்! அதைக் காணோமுன்னு வண்டியை நிறுத்தி எல்லா பாசஞ்சருக்கும் அல்வா கொடுத்திட்டாரு! அதுனாலே தான் இன்னிக்கு சாப்பாட்டுப் பொட்டலத்தை ஸ்பெஷலா விசாரிக்கச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு!"

"என்ன மனுசன்யா? அப்புறம் என்னாச்சு?"

"என்னாகும்? புடிச்சு உள்ளே போட்டோம்! அல்வாய் பிடிக்கப் போயி களியிலே முடிஞ்சுது அவர் கதை!"

யெப்பா சாமீ! இது ஆவுறதில்லே!

Tuesday, September 28, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.12



மீனராசிப் பதிவர்களே!

கடைசி ராசியாக இருந்தாலும் கடாசி விட முடியாத ராசி மீனராசி. இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை மிகவும் அதிகம். இது சரக்கேயில்லாமல் அவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தபோதே அனைவருக்கும் புரிந்திருக்கும். வெறும் தன்னம்பிக்கை மட்டுமின்றி, மீனராசிக்காரர்களுக்கு தன்னடக்கமும் மிகவும் அதிகம் என்பதால், யாராவது மிக அதிகமாகப் புகழ்ந்து பின்னூட்டமிட்டால்,’ஐயையோ, அது நான் எழுதினதில்லீங்க, சுட்டது!’ என்று உண்மையை ஒப்புக்கொண்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இந்த மீனராசிக்காரர்களுக்கு, அவரவர் சொந்த இடுகைகளைப் புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்; ஆனால், பிற ராசிக்கார பதிவர்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள். எனவே, யாருக்கு தமிழ்மணம் பிடிக்கும், யாருக்கு இண்டெலி ஓட்டுப் பிடிக்கும், யாருக்கு இரண்டுமே வேண்டும் என்று சரியாகக் கணித்து, இடுகையைப் படிப்பதற்கு முன்னரே போய் ஓட்டளித்துவிட்டு, பின்னங்கால் பிடறியில் பட ஓடுவதில் வல்லவர்களாயிருப்பார்கள்.

மீனராசிக்காரர்களுக்கு இயல்பாகவே மிகுந்த நகைச்சுவை உணர்வு இருக்கும் என்பதால், எல்லாரும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பெல்லாம் ரணகளமாக்கி விடுவார்கள் என்பது வெளிப்படை. இவர்கள் பெரும்பாலும் நவரச நாயக/ நவரச நாயகிகளாக இருப்பார்கள். அனேகமாக இவர்களுக்குப் பிடிக்காதது விரசம் மற்றும் வேப்பம்பூ ரசம் இரண்டாகத் தானிருக்கும். இவர்களது நகைச்சுவை உணர்வு காரணமாகவே, எவரேனும் இடுகைகளுக்கு மைனஸ் ஓட்டுப் போட்டாலும் ’ஆத்தா, நான் பாஸாயிட்டேன்!" என்று உற்சாகமாகக் கூவி தங்களது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார்கள்.

மீனராசிக்காரர்கள் பேசும்போதே அவர்கள் முகத்தில் பல்வேறு முகபாவனைகளும் அபிநயங்களும் தோன்றுவதும் இயல்பே. சிலர் பேசாமல் இருக்கும்போதும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுவதுண்டு என்றாலும் அவை முகச்சுருக்கங்கள் காரணமாக ஏற்படுவது என்று அறிக!

இவர்கள் பெரும்பாலும் கடைக்குட்டியாக இருப்பார்கள். அப்படியில்லாவிட்டால், இட்டிலிக்கடையிலிருந்து டாஸ்மாக் கடை வரையிலான ஏதாவது ஒரு கடையோடு இவர்களுக்கு இணைபிரியாத தொடர்பு இருந்தே தீரும்.


நீங்கள் பிறந்த இடம், வளர்ந்த இடம், படித்த இடம் இவையெல்லாம் வேறு வேறாக இருக்கும். (இல்லையென்று எப்படிக் கூற முடியும்? ஆஸ்பத்திரி, வீடு, பள்ளி இவையெல்லாம் வேறு வேறு இடம் தானே? ஹிஹி!). உங்களுக்குக் கலை, விஞ்ஞானம் ஆகியவற்றின் மீது அளப்பரிய ஈடுபாடு இருக்கும் என்பதால் அவற்றைத் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். அறிவை விருத்தி செய்வதற்காக பல புத்தகங்களை வாங்குவீர்கள்; வாங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வீர்கள் என்றும் உங்களது தசாபலன்கள் தெரிவிக்கின்றன.

உங்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்களைக் காட்டிலும், ஆப்பு வைத்த சகபதிவர்களால் விரைவில் பிரபலமாகி விடுவீர்கள். சக்திக்கு மீறி பிராட்பேண்டைச் செலவழித்து விட்டு பில் வந்ததும் பேந்தப் பேந்த முழிப்பது உங்களது ராசியின் குணாதிசயங்களில் ஒன்று. உங்களது ராசிக்கு நிறைய தொடர்பதிவு எழுதுகிற வாய்ப்பு வரும் என்றாலும், உங்களைத் தொடர யாரும் பெரும்பாலும் வர மாட்டார்கள் என்பது பெரிய சோகம்.

நீங்கள் வெளுத்ததெல்லாம் பாலிடால் என்று நம்புவீர்கள் என்பதால், யாராவது தொடர்ந்து ஓட்டும் பின்னூட்டமும் போட்டால் அவர்களை ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் என்று நம்பி, அவர்களால் மீன்பாடி வண்டியில் எடுத்துக்கொண்டு போகப்பட்டு செமத்தியாக உதைபடுவீர்கள்.

உங்களுக்கு மிகவும் கூர்மையான அறிவு என்பதால், தொப்பிக்குப் பதிலாக ஹெல்மெட்டை அணிந்திருப்பீர்கள். இருந்தாலும் உங்களுக்குக் கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகமாயிருக்கும். யாராவது புகழ்ந்து பின்னூட்டம் போட்டால் கணினியை ஷட்-டவுண் பண்ணி விடுவீர்கள். ஆனாலும், மொக்கை போடுவதில் உங்களுக்கு இருக்கிற அபார திறமை காரணமாக, வலைப்பதிவு ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளேயே நிறைய ஹிட்ஸ் மற்றும் ஏராளமான ஃபாலோயர்ஸ் ஆகிய சம்பத்திகளைப் பெற்று வளமோடு வாழ்வீர்கள்.

இதுவரையிலும் சனி பகவான் ஆறாவது இடத்தில் இருந்ததால், நீங்கள் சளைக்காமல் மொக்கை போட்டாலும் தமிழ்மணத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுக்களும், இண்டெலியில் தொடர்ந்து பாப்புலராகவும் இருந்து வந்தீர்கள். ஆனால், இனிமேல் சனிபகவான் உங்களது ராசியின் களஸ்திர ஸ்தானமான ஏழாவது இடத்தில் கண்டச்சனியாக புது கெட்-அப்பில் வருவதால் சில சோதனைகள் காத்திருக்கின்றன.

இதனால், கொஞ்ச நாட்களுக்கு கூகிள் சாட்-டைத் தவிர்க்கவும். ரொம்பவும் போரடித்தால் உங்களோடு நீங்களே பேசிக்கொள்ளலாமே தவிர வேறு யாரோடும் சாட் செய்யாதிருத்தல் நல்லது. மேலும் தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்சினை குறித்து தனிமடல், மின்னரட்டைகளில் பேசினால் கியாரண்டியாக ஆட்டோ வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முன்னைப்போல எட்டுமணி நேரத்திலேயே பாப்புலராவது சற்றுக் கடினமாக இருக்கும் என்பதால், அடிக்கடி F5 உபயோகித்து நொந்து போகவேண்டி வரலாம்.

இந்தச் சிக்கலான காலகட்டத்தில் அனாவசியமாகக் கவிதைகள் எழுதி சகபதிவர்களை பயமுறுத்தாமல் இருப்பது சாலச்சிறந்தது. இத்தனை நாள் மொக்கை போட்டதால் ஏற்பட்ட புண்ணியத்தின் பலன் காரணமாக, உங்களுக்கு வேண்டிய சகபதிவர்கள் எந்த சூழலிலும் உங்களைப் பற்றித் தவறாக எண்ணாமல் தொடர்ந்து பின்னூட்டம் போட்டு உங்களை உற்சாகப்படுத்துவார்கள்.

கணினியைக் கவனமாகப் பராமரிக்கவும். உங்களது பாஸ்-வர்டை டாஸ்மாக்கில் கூட உளறி விடாதீர்கள். அடிக்கடி மறக்கிறவர்கள் அடிக்கடி பாஸ்-வர்டை மாற்றாமல் இருப்பது நலம். இன்னும் முப்பத்தி மூன்று நாட்களுக்கு எந்தத் தொடர்பதிவுக்கும் சம்மதம் தெரிவிக்காதீர்கள்.

எந்த இடுகை எழுத ஆரம்பித்தாலும் அதை முடிக்கத் திணறுவீர்கள்; மற்றவர்கள் படிப்பதற்குத் திணறுவார்கள். இது போன்ற சில சில்லறைக் குறைபாடுகள் இருந்தாலும், சனிபகவான் ஏழாம் பார்வையாக ஜென்மராசியைப் பார்ப்பதால், மெட்ராஸ் ஐ, மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்றவைகள் உங்களை அண்டாது. போகப்போக முன்னை விட தன்னம்பிக்கை அதிகமாகி, சாரு, ஜெயமோகன் பற்றியெல்லாம் இடுகை போடுவீர்கள்.

பதிவருக்குப் பார்க்குமிடமெல்லாம் சிரிப்பு என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்களை நம்பி பல புதிய பொறுப்புக்களை பலர் கொடுத்து கௌரவப்படுத்துவார்கள். (எனக்கே அக்டோபர் மாதம் ஒரு புதிய பொறுப்பு கிடைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்! ஹிஹி!)

அப்பாடா, இத்தோடு ஒருவழியாக பன்னிரெண்டு ராசிகளுக்கான பலன்களையும் சொல்லி முடித்து விட்டேன். இத்தோடு விடுவேன் என்று மட்டும் எண்ண வேண்டாம்.

விரைவில், வலைப்பதிவர்களுக்கான வாஸ்து வரவிருக்கிறது.


நீங்கள் மேஷ ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் தனுசு ராசிக்காரரா?இங்கே சொடுக்கவும்!

நீங்கள் மகர ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

நீங்கள் கும்ப ராசிக்காரரா? இங்கே சொடுக்கவும்!

Thursday, September 23, 2010

லாலக்கு டோல்டப்பி மா

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மூவரும் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கின்றனர்.

"சே! என்ன வாழ்க்கை இது?" என்று சலித்துக்கொண்டார் ஷீலா தீட்சித். "ஒரு வருசத்துக்கு முன்னாடி நான் தான் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்னு எல்லாரும் சொன்னாங்க! இப்போ என்னடான்னா உலகமே நக்கல் பண்ணிட்டிருக்குது!"

"எல்லாம் இந்த காமன்வெல்த் கேம்ஸாலே வந்த வினை," என்று அலுப்புடன் கூறினார் ஜெய்பால் ரெட்டி. "தினம் புதுசு புதுசா அடிவயித்துலே புளியைக் கரைக்கிற நியூஸா வந்திட்டிருக்கு! இப்பல்லாம் நான் என்ன பண்ணறேன்னு எனக்கே புரிய மாட்டேங்குது! இன்னிக்குப் பாருங்க, காலையிலே படுக்கையிலே உட்கார்ந்திருந்தேன். தூங்கி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கேனா இல்லே இனிமேத்தான் தூங்கப்போறேனான்னு ஒரு நிமிஷம் குழம்பிப்போயிட்டேன்."

"இங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்று குறைப்பட்டுக்கொண்டார் ஷீலா தீட்சித். "இன்னிக்கு மாடிப்படியிலே நின்னுக்கிட்டிருந்தேன். மேலே ஏறிப்போயிட்டிருக்கேனா இல்லே கீழே இறங்கி வந்திட்டிருக்கேனான்னு ஒரு நிமிஷம் புரியாம அப்படியே நின்னுட்டேன்."

"பிரச்சினை அதிகமாக ஆக, மனிசனுக்கு மறதியும் அதிகமாயிடும்," என்று பெருமூச்சுடன் சொன்னார் எம்.எஸ்.கில். "பாருங்களேன், நான் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி உலக மல்யுத்தப் போட்டியிலே ஜெயிச்ச சுஷில்குமாரோட பயிற்சியாளரைப் பார்த்து ’யோவ், தள்ளி நில்லுய்யா,’ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்."

"அவரை மட்டுமா? சாயினா நெஹ்வாலோட பயிற்சியாளர் கோபிசந்தைப் பார்த்தே ’யார் நீ?’ன்னு கேட்டீங்களே? அதை மறந்திட்டீங்களா?" என்று வேதனையிலும் எம்.எஸ்.கில்லை கலாய்த்தார் ஜெய்பால் ரெட்டி.

"நல்ல வேளை! சாயினா நெஹ்வாலை யாருன்னு கேட்காம விட்டாரே!" என்று ஷீலா தீட்சித்தும், ஒரு கணம் கவலைகளை மறந்து சிரித்தார்.

"அதுல பாருங்க ஷீலாஜீ, நம்ம கில் இருக்காரே, சாயினா, சானியா, சோனியா மாதிரி பேருங்களை மட்டும் மறக்காம ஞாபகம் வச்சிருப்பாரு!" என்று கிண்டலடித்தார் ஜெய்பால் ரெட்டி.

"என் ஞாபகமறதி இருக்கட்டும்! என் வீட்டுக்குள்ளேயே வந்து என்னையே நக்கல் பண்ணுறீங்களே, நீங்க ரெண்டு பேரும் யாரு? யாரைக் கேட்டு என் வீட்டுலே டீ சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க?" என்று கில் எரிச்சலுடன் வினவினார்.

"ஐயையோ, நான் ஜெய்பால் ரெட்டி; இவங்க ஷீலா தீட்சித்! ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு மறதி ஆகாது," என்று எம்.எஸ்.கில்லுக்கு ரெட்டிகாரு நினைவூட்டியதும், எம்.எஸ்.கில் சுயநினைவுக்கு மீண்டார்.

"கில் சாப்! மேரி கோம்கிற பொண்ணு உலகக் குத்துச்சண்டை போட்டியிலே ஜெயிச்சிட்டு வந்திருக்காங்க! அவங்க கோச் பேரு இபோம்சா சிங்! மறந்திடாதீங்க!" என்று நினைவூட்டினார் ஷீலா தீட்சித்.

"இபோம்சாவா? வாயிலேயே நுழைய மாட்டேங்குதே?" என்று சலித்துக்கொண்டார் எம்.எஸ்.கில்.

"வாயிலே நுழையணுமுன்னா இம்போம்சா சிங் பெயரை சமோசா சிங்குன்னு மாத்திக்குங்களேன்," என்று ரெட்டிகாரு யோசனை தெரிவித்தார்.

"சே! இந்த மணிப்பூர் ஆளுங்க எங்க பஞ்சாபிங்களை மாதிரி காலரா, பேதின்னு பேரு வச்சுக்க மாட்டேங்குறாங்களே? ஞாபகம் வச்சிக்கிறது எவ்வளவு ஈஸியா இருக்கும்!" என்று அங்கலாய்த்தார் எம்.எஸ்.கில்.

"பேதின்னதும் ஞாபகத்துக்கு வருது," என்று ரெட்டிகாரு ஏதோ பேச முயன்றார்.

"பாத்ரூம் அந்தப் பக்கமிருக்கு!" என்று கைகாட்டினார் எம்.எஸ்.கில்.

"அதில்லீங்க கில் சாப்! சோதின்னு ஒருத்தர் உலகத் துப்பாக்கி சுடும் போட்டியிலே ஜெயிச்சிட்டு வந்திருக்காரு! ரஞ்சன் சோதி! மறந்திராதீங்க!" என்று முன்னெச்செரிக்கையாகச் சொல்லி வைத்தார் ரெட்டிகாரு.

"என்னவோ போங்கய்யா! இந்த காமன்வெல்த் கேம்ஸ் முடியுறதுக்குள்ளே ஏதாவது common well-க்குள்ளே விழுந்து தொலைக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு!" என்று விரக்தியுடன் கூறினார் எம்.எஸ்.கில். அந்த நேரம் பார்த்துக் கதவு தட்டப்படவே...

"உஸ்! யாரோ வர மாதிரி இருக்கு! முகத்தைக் கொஞ்சம் சிரிக்கிறா மாதிரி வச்சுக்கோங்க!" என்று உஷார்ப்படுத்தினார் ரெட்டிகாரு.

"அந்தர் ஆவோ!" என்று கூவினார் எம்.எஸ்.கில். அதைத் தொடர்ந்து உள்ளே வந்துவிட்டானா இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒல்லிக்குச்சியாக இருந்த அந்த ஆசாமியைப் பார்த்து, "நீங்க யாரு?" என்று கேட்டார்.

"என் பேரு சேட்டைக்காரன்! சென்னையிலே இருந்து வர்றேன்!"

"அப்பாடா, காமன்வெல்த் கேம்ஸை சென்னைக்கு மாத்தலாமுன்னு சொல்லிட்டாங்களா? ரொம்ப சந்தோஷம்!" என்று உற்சாகமிகுதியில் துள்ளினார் ஷீலா தீட்சித்.

"அட அதில்லீங்க! உங்க மூணு பேருக்கும் அழைப்பு கொடுக்க வந்திருக்கேன்!" என்று பவ்யமாக சேட்டைக்காரன் சொல்லவும், எம்.எஸ்.கில்லுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"மிஸ்டர், இங்கே அவனவன் தினம்தினம் செத்துப்பிழைச்சிட்டிருக்கான். இந்த லட்சணத்துலே இன்விடேஷன் கொடுக்க வந்திட்டியா? எனக்கு வர்ற கோபத்துலே உன்னை குதுப்மினார்லேருந்து கீழே தள்ளி விட்டிருவேன்." என்று உறுமினார் எம்.எஸ்.கில்.

"சார் சார்! கோவிச்சுக்காதீங்க சார்! எங்க தஞ்சாவூர்லே சோழச்சக்கரவர்த்தி ராஜராஜசோழன் கட்டின பிரகதீசுவரர் கோவிலிலே ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடப்போறோம். அதுக்கு உங்களை அழைக்கத் தான் வந்திருக்கேன் சார்!" என்று சேட்டைக்காரன். விளக்கமாகக் கூறவும், மூவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தார்கள்.

"என்னது? அந்தக் கோவிலைக்கட்டி ஆயிரம் வருசம் ஆகப்போவுதா?" என்று வாய்பிளந்தார் ஷீலா தீட்சித்.

"ஆமாங்க!"

"ஆயிரமுன்னா...ஒண்ணுக்கு அப்புறமா மூணு சைபர் வருமே...அந்த ஆயிரமா?" இது ரெட்டிகாரு.

"எங்க ஊருலே அதைத்தான் ஆயிரமுன்னு சொல்லுவோம். தில்லியைப் பத்தி எனக்குத் தெரியாது!" என்று சேட்டைக்காரன் பணிவோடு சொல்லவும்....

"ரெட்டிகாரு! இந்தாளு என்னமோ தில்லின்னு சொல்லுறாரே, அது எங்கே இருக்கு?" என்று எம்.எஸ்.கில் கேட்கவும், ஷீலா தீட்சித் தலையில் அடித்துக்கொண்டார்.

"கில் சாப், நீங்க வேறே இம்சை பண்ணாதீங்க! ஏம்பா சேட்டைக்காரா! உண்மையிலேயே ஆயிரம் வருசமா அந்தக் கோவில் இருக்கா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டார் ரெட்டிகாரு.

"என்ன எல்லாரும் இதையே கேட்கறீங்க? உங்க தில்லியிலேயே ஷாஜஹான் கட்டின செங்கோட்டை இருக்குது. குதுப்மினார் இருக்குது. ஜும்மா மஸ்ஜித் இருக்குது. பார்லிமெண்ட் ஹவுஸ் இருக்குது. ராஸ்டிரபதி பவன் இருக்குது. இதெல்லாம் பல நூற்றாண்டுகளா இருக்குதே!" - என்று சேட்டைக்காரன் விளக்கியும் மூவருக்கும் ஆர்வம் குறைந்த மாதிரித் தெரியவில்லை.

"இருந்தாலும்...ஆ...யிரம் வருசமுன்னா..எவ்ளோ பெரிய விசயம்! அந்தக் கோவில் இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டார் ஷீலா தீட்சித்.

"இன்னும் ஆயிரம் வருசம் தாக்குப்பிடிக்கிறா மாதிரித் தான் இருக்கு. எங்காளுங்க யாருக்காச்சுமாவது உடைச்சு வழி பண்ணுவாங்க. மத்தபடி அது மலைமாதிரி கம்பீரமாத் தான் நின்னிட்டிருக்கு!"

"பார்த்தீங்களா ரெட்டிகாரு? ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி கட்டின கோவிலெல்லாம் அப்படியே இருக்குது. இங்கே ஆறு வாரத்துக்கு முன்னாடி கட்டினதெல்லாம் புட்டுக்கிட்டு விழுது!" என்று வெறுப்போடு சொன்னார் ஷீலா தீட்சித்.

இப்போது எம்.எஸ்.கில் பேசினார்:

"மிஸ்டர் ராஜராஜசோழன்!"

"சார், என் பேர் சேட்டைக்காரன்!"

"அப்போ அந்தக் கோவிலை நீங்க கட்டலியா?"

"இதுக்கு நீங்க பேசாம சும்மாவே இருந்திருக்கலாம்," என்று இடைமறித்த ரெட்டிகாரு," சேட்டைக்காரன், அது எப்படி அந்தக் கோவில் ஆயிரம் வருசமா அப்படியே இருக்கு. அந்தக் காலத்துலே இப்படியொரு தொழில்நுட்பம் எப்படி இருந்தது? உனக்கு ஏதாவது தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. ஆனா, நான் வேண்ணா ராஜராஜசோழன் கிட்டே கேட்டுச் சொல்றேன்!"

"எப்படி?"

"எனக்கு ஆவிங்களோட பேசத் தெரியும்! இதே இடத்துலே ராஜராஜசோழனோட ஆவியோட பேசி உங்க சந்தேகத்தையெல்லாம் க்ளியர் பண்ணுறேன். ஆனா, அதுக்கு என் கூட சேர்ந்து நீங்களும் ஒரு மந்திரம் மூணு வாட்டி சொல்லணும்!!"

"எங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. ஒருத்தரு சொன்னதையே திரும்பிச் சொல்லுறதுக்கு எங்களை விட்டா ஆள் கிடையாது. என்ன மந்திரம்...?" என்று பெருமையாகக் கூறினார் ரெட்டிகாரு.

"லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா! எங்கே, இந்த மந்திரத்தை மூணுவாட்டி சொல்லுங்க!"

லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா! - என்று ஜெய்பால் ரெட்டியும், ஷீலா தீட்சித்தும் சொல்ல எம்.எஸ்.கில் மட்டும் திரும்பத் திரும்ப தனது இரண்டு கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னாச்சு கில் சார்? நீங்க ஏன் மந்திரம் சொல்லலே?"

"மூணு தடவைன்னா எண்ணணுமே, அதான் மூணாவது விரல் வலதுகையிலே இருக்கா, இடது கையிலே இருக்கான்னு பார்க்கிறேன்!" என்று விரல்களைப் பார்த்தவாறே பதிலளித்தார் எம்.எஸ்.கில்.

"இவரு வேறே உசிரை வாங்கிட்டு! நீங்க எண்ணவே வேண்டாம். இதோ ராஜராஜசோழனே வந்திட்டாரு!"

"எங்கே? எங்கே??"

"அவரு தமிழனுக்கு மட்டும் தான் தெரிவாரு! அவரு பேசுறது தமிழன் காதுலே மட்டும் தான் விழும்! அதுனாலென்ன, அவர் சொல்லுறதை நான் அப்படியே திருப்பிச் சொல்லுறேன். சரியா?"

"சரி! அவர் கட்டின கோவில் ஆயிரம் வருசம் எப்படித் தாக்குப் பிடிச்சதுன்னு கேளு சேட்டை!"

"இதோ!"

ரெட்டிகாரு, ஷீலா தீட்சித், எம்.எஸ்.கில் மூவரும் சேட்டைக்காரனையே கவனித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு...

"ராஜராஜ சோழன் என்ன சொல்லுறாருன்னா, அவரு கோவில் கட்டும்போது அது பின்னாடி வர்ற பல தலைமுறைகள் பார்த்துப்பெருமைப் படுற சொத்தா இருக்கணுமுன்னு நினைச்சு கட்டினாராம். ஆனா, தில்லியிலே அப்படியா நடந்திருக்கு? அவனவன் அகப்பட்டதைச் சுருட்டி, அவன் தலைமுறைக்கு மட்டும் சொத்துச் சேர்த்துக்கிட்டான். அடுத்த தலைமுறையை விடுங்க, உள்ளூர்க்காரனுக்கே இதைப் பார்த்தா ஊழலின் நினைவுச்சின்னமாத்தானே தெரியுதாம்?"

"கரெக்ட் சேட்டை, மேலே என்ன சொல்லுறாரு ராஜராஜ சோழன்ன்னு கேளுங்க?" என்று ஷீலா தீட்சித் கூறினார்.

"கேளுங்க! அதாவது அவர் பெரிய சக்ரவர்த்தியா இருந்தாலும், பெருவுடையார் கோவிலைக் கட்டினதிலே யாருக்காவது ஒரு சின்ன பங்கு இருந்தாலும், அவங்க பெயரைக் கல்வெட்டுலே எழுதி வச்சாராம். அது மட்டுமா, அந்தக் கோவிலுக்காக ஒரு செப்புக்காசு கொடுத்தவங்க பெயரையும், கணக்கையும் கல்வெட்டா கோவில் சுவத்திலேயே வெட்டி வச்சிருக்காராம். ஆனா, இங்கே இப்போ நடக்குறதோ குடியாட்சியா இருந்தாலும் என்ன நடக்குது? எதிர்க்கட்சி பாராளுமன்றத்திலே கேட்டா நம்ம கில் சாப் கோர்ட்டுக்குப் போன்னு எதிர்கட்சிங்க கிட்டே சொல்லுறாரு!"

"கில் சாபா? அது யாரு?"

"நீங்க தான் கில் சாப்! கொஞ்சம் பேசாம இருங்க, சேட்டை சொல்லட்டும்!"

"ராஜராஜசோழன் விழாவுக்குக் கிளம்பிட்டிருக்காராம். அதுனாலே அவரு கடைசியா சொல்லச் சொன்னது, எந்த ஒரு பொதுக்காரியமா இருந்தாலும் ஒரு அர்ப்பணிப்பு, ஒரு கண்காணிப்பு, ஒரு பொறுப்புணர்ச்சி, ஒரு தெளிவு வேணுமாம். அதெல்லாம் இல்லாததுனாலே தான் இந்த காமன்வெல்த் கேம்ஸுங்கிற பேருலே ஊழல்பெருச்சாளிங்களுக்கும், பணமுதலைங்களுக்கும் இடம்கொடுத்து, மக்களோட வரிப்பணத்தை வெட்கமில்லாம சூறையாடித் தின்னு அவனவன் செனைப்பண்ணி மாதிரி கொழுத்துக் கிடக்கானாம். இந்த மாதிரி கேப்மாறிங்க இருக்கிறவரைக்கும் நீங்க கட்டுறது எதுவும் காத்துக்கே நிக்காம இடிஞ்சு விழுந்திடுமாம்."

"அப்படியேவா சொன்னாரு?" என்று சந்தேகத்துடன் கேட்டார் ரெட்டிகாரு.

"ஏறக்குறைய அப்படித்தான் சொன்னாரு!" என்று கூறியபடி சேட்டைக்காரன் மூவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து விட்டு நகர்ந்தபோது....

"சேட்டை! இன்னும் கொஞ்ச நேரம் ராஜராஜசோழன் கிட்டே பேசணும்போலிருக்கு. நாங்க வேண்ணா மந்திரம் சொல்லிப் பார்க்கவா...?" என்று கேட்டார் ஷீலா தீட்சித்.

"ஓ! தாராளமா! நீங்க ட்ரை பண்ணுங்க! நான் கிளம்பறேன்," என்று கூறியபடி வெளியேறவும், வாசலில் காத்திருந்த களக்காடு கருமுத்து கேட்டான்.

"ஏன் சேட்டை? நீ ஆவியோடவெல்லாம் பேசுவியா? சொல்லவே இல்லை...?"

"நீ வேறே, நான் உன்னை மாதிரி பாவியோடதான் பேசுவேன். சும்மானாச்சும் ராஜராஜசோழன் பெயரைச் சொல்லி இவங்க நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கேன். வா போகலாம்!"

உள்ளேயிருந்து இப்போது ரெட்டிகாரு, ஷீலா தீட்சித், எம்.எஸ்.கில் மூவரும் மந்திரம் சொல்கிற சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது.

"லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!
லாலக்கு லாலக்கு டோல்டப்பி மா!"

Sunday, September 19, 2010

சட்னிப்பிரவேசம்

Justify Full
"என்னங்க, ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என்ன?"

"இன்னிக்கு டிபன் இட்லி பண்ணியிருக்கேனுங்க!"

"இதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்குவேனா? நியாயமாப் பார்த்தா இட்லி தான் கோவிச்சுக்கணும்!"

"அதில்லீங்க! தொட்டுக்க தக்காளிச்சட்டினி தானிருக்கு! பரவாயில்லையா?"

"நல்லதாப் போச்சு! ஒரு தட்டுலே நாலு இட்டிலியைப் போட்டு, அது மேலே தக்காளிச்சட்டினியை ஊத்தி வையி! இன்னிக்குப் புரட்டாசி சனிக்கிழமை, எண்ணை தேய்ச்சுக் குளிச்சிட்டு அரை மணியிலே வந்திடறேன். அதுக்குள்ளே இட்லியும் ஊறிப்போய் சுமாரா கடிச்சாவது சாப்பிடுறா மாதிரியிருக்கும். சரியா?"

கோலம்மாளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதால், கோவிந்தசாமி சொன்னதுபோலவே இட்டிலியை தக்காளிச்சட்டினியில் ஊறவைத்து விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று இன்னும் உடையாமலிருந்த ஒரே ஒரு சுத்தியலையும் டைனிங் டேபிளின் மீது வைத்தாள். ஆத்திர அவசரத்துக்கு ஓடவா முடியும்?

கோவிந்தசாமி குளித்து விட்டு, பக்திசிரத்தையாக சுவற்றில் மாட்டியிருந்த நான்குநேரி வானமாமலைப் பெருமாளை வேண்டிக்கொண்டு, சற்றே ஆன்மபலம் அதிகரித்தவராக இட்லியைச் சாப்பிட்டு முடித்தார். அப்பாடா! சென்ற வாரம் ஆந்திரா ஸ்டைலில் தேங்காய்ச்சட்டினி அரைக்கிறேன் என்று மிக்ஸியில் புளிய மரத்தின் ஒரு பாதிமரத்தையே போட்டு அரைத்திருந்தாள் கோலம்மாள். அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு அவரது வயிற்றுக்குள்ளே காக்காய், குருவியெல்லாம் கூடுகட்டிக் குஞ்சு பொரித்தது போலவும், இரவு நேரத்தில் அவரது குடலுக்குள்ளே வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பது போலவும் பயங்கரமான கனவுகள் வரத் தொடங்கியிருந்தன. ஆகையினால், அனாவசியமான விஷப்பரீட்சை எதுவும் செய்யாமல், எந்த வில்லங்கமும் இல்லாத தக்காளிச்சட்டினியை அரைத்த மனைவி மீது அவருக்கு அளவற்ற பரிவே ஏற்பட்டு விட்டது. காலை எட்டுமணிக்குச் சாப்பிட்ட இட்லி மதிய உணவு இடைவேளை வரையிலும் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போலக் கரையாமலிருந்தபோதும், தேங்காய் சட்னி குறித்து அவர் மறந்தே போயிருந்தார். ஆனால், மதிய உணவின் போது, சக ஊழியர் மதுசூதனன் வெங்காய தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றைக் கவனித்தார்.

"என்ன மதுசூதனா, வழக்கமா கான்க்ரீட் மாதிரி கெட்டியா தேங்காய்ச் சட்னி தானே கொண்டுவருவே? இதென்ன, மறந்து போய் மருதாணியை வைச்சு அனுப்பிட்டாங்களா?"

"யோவ் கோவிந்தசாமி! உன் கண்ணுலே இந்தப் புதீனா சட்னியைத் தான் வைக்கணும். இதப் பார்த்தா மருதாணி மாதிரியா இருக்கு?"

"ஓ புதீனா சட்னியா?"

"அவரு புதீனா சட்னி! நான் பொட்டுக்கடலைச்சட்னி!," என்று சொல்லியபடி பி.ஆர்.ஓ. கிருஷ்ணவேணி வந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு? தேங்காய் விலை அவ்வளவு ஏறிடுச்சா?" கோவிந்தசாமி குழம்பியபடி கேட்டார். "எல்லாரும் அவங்கவங்க டிரெஸுக்கு மேட்சிங்கா கலர் கலரா சட்னி கொண்டுவந்திருக்கீங்க?"

"ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை மேட்டர் முத்திப்போயி கேரளாவிலேருந்து தேங்காய் வரதே நின்னிருக்குமோ?" என்று மதுசூதனன் புதிராகக் கேட்டார்.

"சாப்பிடுற நேரத்துலே ஏன் சார் தேங்காய்ச்சட்னின்னு அபசகுனமாப் பேசறீங்க?" என்று எரிந்து விழுந்த கிருஷ்ணவேணி தனது மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். "வீட்டுக்குப்போனதும் மாவிளக்கு ஏத்தணும்! நாளையிலேருந்து வெவஸ்தை கெட்டவங்களோட சாப்பிடக்கூடாது!" என்று கூறியபடி எழுந்து போனாள்.

"யோவ் மதுசூதனன், தேங்காய்ச்சட்னின்னு சொன்னதுக்குப் போயி ஏன் இவ்வளவு கோவிச்சுக்கிறாங்க?"

"ஒருவேளை இப்போ ஆம்பிளைங்களுக்கெல்லாம் நேரம் சரியில்லே, பொம்பிளைங்க தேங்காய்ச் சட்னி பண்ணக் கூடாதுன்னு புதுசா ஏதாவது ஐதீகத்தைக் கிளப்பி விட்டுட்டாங்களோ?"

"அட போய்யா, அவங்க இட்லி தோசையைத் தின்னுட்டே இன்னும் உசிரோட இருக்கோம். சட்னியாலயா பிரச்சினை வரப்போவுது?"

"அப்படி என்னதான் பிரச்சினை இந்தச் சட்டினியிலே? வீட்டுக்குப் போகும்போது ஆளுக்கு ஒரு தேங்காய் மறக்காம வாங்கிட்டுப்போயி, சட்னி அரைச்சே ஆகணுமுன்னு சொல்லிர வேண்டியது தான்!"

"மதுசூதனன், உங்களை மாதிரி ஆணாதிக்கத்திமிரோட என்னாலே பேச முடியாது. வேணுமுன்னா நானே சட்னி அரைக்கிறேன். என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமே?"

அதே போல அன்று அலுவலகம் முடிந்ததும் கோவிந்தசாமியும், மதுசூதனனும் கோவிலருகேயிருந்த தேங்காய்க் கடைக்குப் போனார்கள்.

"தேங்காய் என்ன விலைம்மா?"

"தேங்காய் சாமிக்கா? சட்னி அரைக்கவா?"

"ஏம்மா, எதுக்காயிருந்தா என்னம்மா? காசு கொடுக்கிறோம், தேங்காயைக் கொடு! நாங்க சாமிக்குப் போடுறோம் இல்லாட்டி சட்னி அரைக்கிறோம். உனக்கென்ன?"

"போங்கய்யா..சட்னியரைக்கிறதுக்கெல்லாம் தேங்காய் தர முடியாது."

கோவிந்தசாமியும், மதுசூதனனும் அதிர்ச்சியில் ஃபிரிட்ஜில் வைத்த தேங்காய்ச் சட்னிபோல உறைந்து போனார்கள்.

"யோவ், இந்த சட்னி மேட்டர் ஏதோ சீரியஸ் மேட்டர் போலிருக்குதே! என்னான்னு கண்டுபிடிச்சே ஆகணும்! போற வழியிலே உடுப்பி கிருஷ்ணபவனுக்குப் போயி விசாரிப்போம்," என்று கோவிந்தசாமி சொல்லவும், மதுசூதனனும் ஓசியில் கீரைவடை சாப்பிடுகிற நப்பாசையோடு பின்தொடர்ந்தார்.

ஹோட்டலை அடைந்து, காலியாயிருந்த டேபிளைக் கண்டுபிடித்து இருவரும் அமர்ந்து கொண்டனர். இவர்களை அஞ்சியஞ்சிப் பார்த்தபடியே அங்கிருந்த சர்வர் பம்மியபடி இருவரையும் அணுகினான்.

"சூடா என்ன இருக்கு?"

"இட்லி,வடை,போண்டா,பஜ்ஜி, ரோஸ்ட்..."

"சட்னி இருக்கா?"

"அது சூடா இல்லை சார்!"

"என்ன நக்கலா? சட்னி இருக்கா இல்லியா?"

"இருக்கு சார், கொத்துமல்லிச் சட்னி, புதீனா சட்னி, கொத்துக்கடலைச் சட்னி..."

"தேங்காய்ச் சட்னி இருக்கா?"

"இருங்க சார், ஓனரை அனுப்பறேன்!" என்று கூறியபடி அந்த சர்வர் அங்கிருந்து நகர்ந்தான்.

"என்னய்யா, தேங்காய்ச் சட்னி இருக்கான்னு கேட்டா, ஓனரைக் கூப்பிட்டு வரப் போயிருக்கான்! டிபன் சாப்பிட வந்தவங்களை டின்னு கட்டி அனுப்பிருவாங்க போலிருக்கே!"

"வணக்கம் சார்!" பல்லெல்லாம் வாயாக ஓனர் வந்தார். "உங்களுக்கு என்ன சார் பிரச்சினை?"

"எனக்கொரு பிரச்சினையும் இல்லை, தேங்காய்ச் சட்னி இருக்கா இல்லையா?"

"இருக்கு சார்! அதுக்கு முன்னாலே இந்த பாரத்துலே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க சார்!"

"யோவ், நாங்க பஜ்ஜி சாப்பிட வந்தோமா, பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிக்க வந்தோமா?"

"பார்த்தீங்களா பார்த்தீங்களா, சட்னீன்னு சொன்னதும் கோபப்படுறீங்க பாருங்க! அதனாலே தான் யோசிக்க வேண்டியிருக்கு!" என்று மிகவும் பயந்து நயந்து சொன்னார் ஹோட்டல் ஒனர்.

"எதுக்குய்யா பயம்? இதுக்கு முன்னாடி நீ சட்னி போட்டதில்லையா, நான் சாப்பிட்டதில்லையா?" கோவிந்தராஜின் குரல் திடீரென்று கோபத்தில் உரக்கவே, கூட்டம் கூடியது.

"அதானே?" என்று கோவிந்தராஜுக்கு ஒத்து ஊதினார் மதுசூதனன். "இப்போ மரியாதையா தேங்காய்ச்சட்னி போடுறியா இல்லே மினிஸ்டருக்கு போன் பண்ணட்டுமா? ஐ வில் டேக் திஸ் மேட்டர் வித் தி கம்பீட்டன்ட் அதாரிட்டீஸ்!"

"சார், சத்தம் போடாதீங்க சார்! பப்ளிக் எல்லாரும் பார்க்கிறாங்க சார்! இதோ பாருங்க சார், பச்சைச் சட்னி, சிகப்புச் சட்டினி, மஞ்சள் சட்னி..இன்னிக்குப் புதுசா மிஞ்சிப்போன பீட்ரூட் பொறியலை அரைச்சு மரூன் கலருலே கூட சட்னி வச்சிருக்கோம் சார்!" என்று கையதுகொண்டு மெய்யது பொத்திக் கதறத்தொடங்கினார் ஹோட்டல் ஓனர்.

"கோவிந்தசாமி, இவரு என்ன பிளாட்பாரத்துலே பிளாஸ்டிக் சாமான் விக்குறவரு மாதிரி சொல்லுறாரு?" என்று உசுப்பேத்தினார் மதுசூதனன்.

"என்னய்யா ஆச்சு இன்னிக்கு? வீட்டுலேயும் தேங்காய் சட்னி இல்லை, வெளியிலேயும் தேங்காய் சட்னி இல்லேன்னா எப்புடி? இதுக்காக சபரிமலைக்குப் போறா மாதிரி கேரளாவுக்கா போக முடியும்? என்னய்யா பிரச்சினை? சொல்லித் தொலைங்கய்யா!"

"யோவ்!" சாதுமிரண்டது போல திடீரென்று குரலை உயர்த்தியபடி, இடுப்பிலிருந்து பிச்சுவாக்கத்தியை வெளியே எடுத்தார் ஓனர். "நானும் போனாப் போகுதுன்னு சும்மாயிருந்தா, மேலே மேலே பேசிட்டே போறியா? இப்போ மரியாதையா எந்திரிச்சு வெளியே போறியா இல்லாட்டி ஒரே சொருவா சொருவிடுவேன்!"

"ஐயோ! எனக்கு தேங்காய் சட்னி வேண்டாம்! என்னைக் குத்திடாதீங்க!" என்று அலறினார் கோவிந்தசாமி.

"என்னங்க...என்னாச்சு? ஏன் தூக்கத்துலே கத்தறீங்க?" என்று கோலம்மாள் கணவனை உலுக்கவும், கோவிந்தசாமியின் கனவு கலைந்தது.

"இது...கனவா...?"

"என்னாச்சுங்க? ஏன் இப்படிக் கத்தினீங்க? யாரு குத்த வந்தாங்க?"

"கோலம்மா!" கோவிந்தசாமி கூச்சத்தோடு பேசினார். "இன்னிக்கு நான் ஒரு நியூஸ் படிச்சேன். தாராபுரத்துலே ஒரு கல்யாணத்துலே வேண்டாம் வேண்டாமுன்னு சொல்லியும் கேட்காம இட்லிக்கு தேங்காய் சட்னி போட்டவனோட மண்டையை உடைச்சிட்டாங்களாம். அதைப் பத்தியே யோசிச்சிட்டே தூங்கினேனா, கனவுலேயும் தேங்காய்ச் சட்னி வந்துருச்சு!"

"இவ்வளவு தானா? நான் வேண்ணா உங்க பயம் தெளியுற வரைக்கும் இனிமே சட்னியே அரைக்க மாட்டேன்," என்று ஆறுதலாகக் கூறினாள் கோலம்மாள்.

"நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினார் கோவிந்தசாமி. "நீ அரைக்கிறதெல்லாம் சட்னி கணக்குலே சேராது!"

Saturday, September 18, 2010

எந்திரன் பார்க்கணும்-ஹௌ இஸ் இட்?

"காதல் அணுக்கள்...,’ என்று இயர்போன் வழியாக எனது காதுகளில் தேனெனப் பாய்ந்து கொண்டிருந்த ’எந்திரன்’ பாடலைக் கேட்டபடி கண்களை மூடி ரசித்துக்கொண்டிருக்க, யாரோ தோளைத் தட்டி எழுப்பினார்.

"சார், தப்பா நினைச்சுக்காதீங்க! நானும் குரோம்பேட்டையிலிருந்தே கவனிச்சிட்டு வர்றேன். நீங்க ரசிச்சுத் தலையாட்டுறதைப் பார்த்தா அனேகமா ’செல்லாத்தா...எங்க மாரியாத்தா,’ பாட்டு கேட்டிட்டிருக்கிறா மாதிரி இருக்கே?"

அந்தப் பெரியவரைப் பார்த்தால், பெரிய போஸ்ட் ஆபீசில் பென்சன் வாங்கப் போகிறவர் மாதிரி இருந்தார்.

"சார், எந்திரன் பாட்டுக் கேட்கிறேன் சார்!" என்று பதில் அளித்தேன்.

"ஐயையே! இங்கேயும் எந்திரனா? டி.வியைப் பார்க்க முடியலே! பேப்பரை வாசிக்க முடியலே! எங்கே பார்த்தாலும் எந்திரன் புராணம் தானா?"

"ஏன் சார் கடுப்பாகறீங்க? டிக்கெட் கிடைக்கலியா?"

"நான் பார்க்க மாட்டேன் சார்! என்னவோ உலகத்துலேயே இல்லாத சினிமா மாதிரி என்ன ஆர்ப்பாட்டம்? போற போக்கைப் பார்த்தா இதைப் பார்க்காட்டா ரேஷன் கார்டை ரத்து பண்ணிருவாங்களோன்னு தோணுது."

"கவலைப்படாதீங்க! ரேஷன் கார்டு இல்லாதவனும் இந்தப்படத்தைப் பார்க்க வருவான். பார்க்காட்டியும் உங்களை நாடுகடத்த மாட்டாங்க! சினிமா தானே சாமீ? என்னவோ பாகிஸ்தான் அணுகுண்டு போடப்போறது மாதிரியில்லே கிடந்து துடிக்கறீங்க எல்லாரும்..?"

"என்ன பெரிய சினிமா? கொள்ளை வியாபாரம். பாதி பேரு இதைப்பத்தி எழுதி, பேசியே பொழுதை வீணாக்கிட்டிருக்காங்க! இந்த நேரத்துலே எத்தனை பத்துப் பாத்திரம் தேய்ச்சிருக்கலாம்? எவ்வளவு துணி தோய்ச்சிருக்கலாம்? எத்தனை பேருக்குப் பல்லு விளக்கியிருக்கலாம்? சே!"

"இப்போ நீங்க என் கூட பேசுற நேரத்துலே எத்தனை கொட்டாவி விட்டிருக்கலாம்? எவ்வளவு கொசு அடிச்சிருக்கலாம்? அவனவனுக்கு எது விருப்பமோ அதைப் பார்க்கிறான், படிக்கிறான், எழுதறான். உங்களுக்கு ஏன் சார் ஜூரம் வருது?"

"இது ஒரு மூளைச்சலவையா உங்களுக்குத் தெரியலியா?"

"மாமனார் மருமகள் பத்திப் படம் வந்தபோது நீங்கல்லாம் என்ன பிள்ளையார் கோவில்லே சிதறு தேங்காய் பொறுக்கிட்டிருந்தீங்களா? ஏன்யா யார் மேலேயோ இருக்கிற கடுப்பைப் போயும் போயும் ஒரு சினிமா கிட்டே காட்டுறீங்க?"

"உங்களைப் பார்த்தா ரொம்பப் படிச்சவங்க மாதிரி இருக்கீங்களே தம்பி?"

"ஐயையோ, அவசரப்படாதீங்க! உங்களைப் பார்த்தாக் கூடத்தான் ரொம்ப புத்திசாலி மாதிரி இருக்கீங்க, அதுக்காக அதுதான் உண்மைன்னு ஆயிடுமா?"

"எவ்வளவு பணம் கொள்ளையடிக்கிறாங்கய்யா ஒரு சினிமாங்கிற பெயரிலே? உங்களையெல்லாம் இப்படியே வச்சு யார் யாரோ கோடீஸ்வரன்களாயிட்டிருக்காங்க!"

"சார், நான் வாங்கப்போறது ஒரு டிக்கெட்! அத வச்சு யாராவது கோடீஸ்வரனானா உங்களுக்கு ஏன் சார் பொறாமை? பாபா படம் ஊத்திக்கிச்சு. உடனே நான் ரஜினிக்குப் பணம் மணியார்டர்லே அனுப்பினேனா? சந்திரமுகி பிச்சுக்கிட்டு ஓடிச்சு! பிரபு என்னைக் கூப்பிட்டு பணத்தைத் திரும்பிக் கொடுத்தாரா?"

"உங்களை ஏமாத்துறது தப்பாத் தெரியலியா? உங்க அறியாமையைப் பயன்படுத்தி யாரோ கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிக்கலாமா?"

"நீங்க போடுற ஒரு ஓட்டு யாரையோ கோடீஸ்வரனாக்குது! நீங்க டிவியிலே மேட்ச் பார்த்தா யாரோ ஒரு கிரிக்கெட் ப்ளேயர் கோடீஸ்வரனாகுறான். நீங்க உண்டியல்லே போடுற காசு, நீங்க போடுற பிச்சை, நீங்க கட்டுற வரி இதெல்லாம் எங்கே போகுது யாருக்குப் போகுதுன்னு கவலைப்பட்டுக்கிட்டா போடறீங்க? திடீர்னு எதுக்குயா எந்திரன் படத்துக்கு மட்டும் சமூகப்பொறுப்புணர்ச்சி பொத்துக்கிட்டு வருது?"

"டிக்கெட் ப்ளீஸ்!"

பரிசோதகரிடம் எனது மாதாந்திரச்சீட்டை எடுத்துக் காட்டினேன். எதிரே உட்கார்ந்திருந்த அந்த பென்சன் பார்ட்டி முகமெல்லாம் வியர்த்துப் போய்....

"ஐயையோ! நான் மாம்பலத்துலே இறங்கியிருக்கணும். எக்மோர் வரைக்கும் வந்திட்டேனே! சாரி சார்!"

"என்ன சார், டிக்கெட் இல்லாம பயணம் பண்ணுறதுக்கு இப்படியொரு சால்ஜாப்பா?" பரிசோதகர் அந்தப் பெரியவரை நக்கலாகக் கேட்டார்.

"டி.டி.சார்! அவரு பாவம், எந்திரன் படத்தைப் பத்தி ரொம்ப சுவாரசியமா பேசிட்டே வந்தாரா, எங்கே இறங்குறதுங்கிறதையே மறந்திட்டார்!" என்று நான் பரிந்து பேசினேன்.

"நல்லாயிருக்கே! யோவ் பெரிசு! ஓடற ரயிலிலே சினிமாவைப் பத்திப் பேசுறது ரொம்ப முக்கியமா? கிருஷ்ணா, ராமான்னு இருக்க வேண்டிய வயசுலே உனக்கு எந்திரன் கேட்குதா? இப்போ ஃபைன் யாரு வந்து கட்டப்போறாங்க, ரஜினிகாந்தா?"

"சார், அவருக்கு ரஜினிகாந்த் பிடிக்காதாம் சார்!" என்று நான் எடுத்துக் கொடுத்தேன்."அவருக்கு ஏன் எந்திரன் பிடிக்கலேன்னு விளக்கமா சொல்லிட்டிருந்தாரு! அந்த நேரம் பார்த்து நீங்க வந்திட்டீங்க!"

"சரி சரி, பெரியவரே, பார்க் ஸ்டேஷனிலே இறங்கி அபராதத்தைக் கட்டிட்டு அப்புறம் சாவகாசமாப் போகலாம் சரியா?"

பார்க் ஸ்டேஷனில் டி.டியோடு பெரியவர் இறங்கும்போது என்னைத் திரும்பி, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார். எனக்குச் சிரிப்பு வந்தாலும் நாகரீகம் கருதி அடக்கிக் கொண்டு, மீண்டும் எந்திரன் பாட்டைக் கேட்கத் தொடங்கினேன்.

"பூம்பூம்...ரோபோடா...ரோபோடா..ரோபோடா..!"


இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த "பாகீரதி" கார்த்திக், எனது நன்றிக்குரியவர். இதைத் தொடர யாரைக் கூப்பிடலாம்? ரைட்டு....!

மோதிரக்கைக்காரர் "வாழ்க்கை வாழ்வதற்கே" பிரபாகர்

நிறைகுடம் என்பதற்குப் பொருத்தமான ..துரை அவர்கள்

எங்க ஊருக்காரப் பொண்ணு-சகோதரி நஜீபா அக்தர்!

Friday, September 17, 2010

பேசுங்க, பேசுங்க, பேசிட்டேயிருங்க!

அரசாங்கம் எந்தவொரு நல்ல திட்டம் கொண்டுவந்தாலும், அதில் ஏதாவது ஒரு நொள்ளை சொல்லி, மட்டம் தட்டுவதே பலருக்கு முழுநேர வேலையாகி விட்டது. டி.வி.கொடுத்தால், கேபிள் இணைப்பு யார் கொடுப்பார்கள் என்று கேட்கிறார்கள். மோட்டார் கொடுத்தால் மின்சாரம் யார் கொடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்! இலவசமாக அடுப்பும், சமையல்வாயுவும் கொடுத்தால் யார் சமைத்துப்போடுவார்கள் என்று கேட்கிறார்கள். நல்ல வேளை, பெண்களுக்கு, திருமண உதவித் திட்டத்தில் பணம் கொடுத்தால் போதுமா, மாப்பிள்ளை யார் கொடுப்பார்கள் என்று கேட்கவில்லை. பாருங்களேன், இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டேயிருக்க இலவசமாக கைபேசி இணைப்புக்கள் தரப்போகிறார்கள் என்றதும், உடனே ஆளாளுக்குக் கிளம்பிட்டாங்க கலாய்க்கிறதுக்கு.....!

கைபேசிகள் காரணமாக, கிராமப்புறத்தில் பெரும் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுவதாக, உலக வங்கியே சொல்லியிருப்பதைப் பாருங்கள் சாமி!

ஆகவே, இந்த இலவச கைபேசி வழங்கும் திட்டத்தை மக்கள் சரிவரப்பயன்படுத்தினால் இது நமது தேசத்தின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை இந்த இடுகையிலுள்ள விபரங்களைப் படித்தாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

வறுமை ஒழிப்பு:

இனிமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கும் அன்றாடம் தனியார் வங்கிகளிலிருந்து தினசரி இடைவிடாத அழைப்புக்கள் வரும். "எக்ஸ்கியூஸ் மீ! உங்களுக்கு உரம் வாங்கக் கடன் வேண்டுமா? விதை வாங்கக் கடன் வேண்டுமா? மாடு வாங்கக் கடன் வேண்டுமா? புண்ணாக்கு, பருத்திக்கொட்டை வாங்கக் கடன் வேண்டுமா?" என்று கேட்டுக்கேட்டு, நச்சரித்துவேண்டாம்,வேண்டாம்என்றாலும், வலுக்கட்டாயமாக எல்லாருக்கும் கடன் அளித்து, கிராம அபிவிருத்திக்கு வழிவகுப்பார்கள்.

(பி.கு: தனியார் வங்கிகள் தேர்தல் நேரத்தில் கடன்களைத் தள்ளுபடி செய்ய மாட்டார்கள். தேவைப்பட்டால் கடன் வாங்கியவர்களையே போட்டுத் தள்ளி விடுவார்கள்!)

ஊழல் ஒழிப்பு:

இனிமேல் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவர்கள் எல்லாரும் அவரவர் கைபேசிகளிலிருந்தே நேரடியாக, அந்தந்தத் தொகுதி சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட அனைத்து மாநில அமைச்சர்கள், பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி தேவைப்பட்டால் குடியரசுத்தலைவருடனும் உடனுக்குடன் உரையாடி தங்களது பிரச்சினைகளை எவ்வித இடைத்தரகர்களுமின்றி முடித்துக் கொள்ளலாம் என்பதால் லஞ்சலாவண்யம் முற்றிலும் ஒழிந்தே போய்விடும்.

(பி.கு: வீட்டுக்கு ஆட்டோ/சுமோ வந்தால் பரவாயில்லை என்பவர்கள் மட்டும் இந்த சலுகையைப் பயன்படுத்திப் பலன்பெறலாம்!)

வரதட்சணை ஒழிப்பு:

கைபேசிகள் வந்தபிறகு காதலிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாயிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால், இனிமேல் இந்தியாவின் பட்டிதொட்டிகளிலும் கூட(காதலிப்பதற்கு ஒரே ஒரு கைபேசி போதுமானது என்பதால்) கஞ்சிக்கில்லாதவனும், காதலிக்கத் தொடங்கிவிடுவான். காதல் திருமணங்கள் பெருமளவு நடைபெறும்போது வரதட்சணை என்பது வழக்கொழிந்து போய் விடும். ஆக, மத்திய அரசின் இத்திட்டத்தால், ஒரு பெரிய சமூக சீர்திருத்தமும் நடைபெற வாய்ப்புள்ளது.

(பி.கு: வக்கீல்கள் காட்டில் மழைதான்! இந்தியாவில் விவாகரத்து செய்து கொள்கிறவர்களில் பெரும்பாலானோர் காதல் திருமணம் செய்து கொள்ளுகிறவர்கள் என்பது நினைவிருக்கட்டும்)

இதெல்லாம் நடக்கிற காரியமா?-என்று அவநம்பிக்கையோடு கேட்கிறவர்களுக்கு ஒரு செய்தி.

பொழுதுவிடிந்து பொழுதுபோனால், ’பணவீக்கம் அதிகமாயிருச்சு, விலைவாசி ஏறிறுச்சு, பற்றாக்குறை அதிகமாயிருச்சு,’ன்னு புலம்பிக்கொண்டிருந்த நம்ம மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ படுற கஷ்டத்தைத் தாங்க முடியாம, அவருடையே கைபேசியிலேயே அழைத்து,சார், ரொம்பக் கஷ்டப்படுறீங்க போலிருக்கே, நாங்க வேண்ணா கைமாத்தா கொஞ்சம் கடன் தரட்டுமா?ன்னு கேட்டிருக்காங்க!

இதே மாதிரி விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலுக்கு போன் பண்ணி,’சார், உங்களுக்கு டூ-வீலர் லோன் வேணுமா?ன்னு கேட்டிருக்காங்களாம்.

.சி.சி.தலைவர் ஷரத் பவார் (அவர் கூட ஏதோ ஒரு துறைக்கு அமைச்சர்னு சொன்னாங்க, சட்டுன்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது!) ஒரு நாளு போனை எடுத்தா, ’சார், ரஞ்சி டிராஃபி மேட்சுக்கு டிக்கெட் வேணுமா?ன்னு கேட்டிருக்காங்க!

இன்னும் நிறைய அரசியல் வி..பிங்களுக்குப் போன் பண்ணி, ’எங்களிடம் சூடு,சொரணை,வெட்கம்,மானம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்,’னு கூட சொல்லியிருப்பாங்க! தன்னடக்கம் காரணமாக சம்பந்தப்பட்டவங்க இந்தத் தகவல்களை வெளியிடாம இருக்காங்க!

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், இனிமேல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் தலைவர், தொண்டர் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் எல்லாரும் பேசலாம், பேசலாம், பேசிக்கிட்டே இருக்கலாம். ஆக, இதன் மூலம் நமது நாட்டில் சமதர்ம சமத்துவ சமுதாயம் நிறுவப்படப்போவதை நம்மால் எப்படி மறுக்க முடியும்?

ஆக, இந்த இலவச கைபேசி திட்டம் மிகவும் அற்புதமான திட்டம்! இதை எல்லாரும் வரவேற்று, இப்படியொரு அற்புதமான திட்டத்தைக் கொண்டுவந்த அரசுக்கு அடுத்த தேர்தலிலே ஒரு கள்ள ஓட்டாவது போட்டு வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதெல்லாம் சரி, மின்சாரமே இல்லையே! கைபேசியை எப்படி சார்ஜ் பண்ணுறதுன்னா கேட்கறீங்க? மின்சாரம் இல்லாம இலவச தொலைக்காட்சி பார்க்கிறவங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி!

என்ஜாய்....!

Wednesday, September 15, 2010

உரத்த வலி!

இங்கு நான் விவரிக்கப்போகிற இடம் எனக்கு மட்டுமே பரிச்சயமானதல்ல. உங்கள் வீட்டருகிலோ அல்லது சற்றுக் காலாற நடக்கையில் வழியிலோ இப்படியொரு இடத்தை நீங்களும் பார்த்த ஞாபகம் நிச்சயமாய் உங்களுக்கு வரும்.

இரண்டுக்கு மேற்பட்ட சாலைகள் கூடுகிற ஏதோ ஒரு சந்திப்பில், பழகிப்போன தலைவர்களின் மார்பளவுச் சிலைகளும் மூலைகளில் குவிந்திருக்கும் குப்பைகளும் அந்த இடத்தின் அடையாளங்கள். அதிகாலையில், நடைபாதைகளில் செய்தித்தாள்களும், காய்கறியும், பால் பாக்கெட்டுகளும் மும்முரமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும். சில நாட்களில் பூக்கட்டிக்கொண்டிருக்கும் பெண்களையும் இங்கு காணலாம். இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையிலோ அல்லது இம்சையின்றி சாகவேண்டும் என்ற நப்பாசையிலோ சில வயோதிகர்கள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதையும் அங்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம். சீருடையணிந்த பள்ளிச்சிறார்கள் வாகனங்களுக்காகக் காத்திருப்பதையும், அவ்வப்போது வரும் வெள்ளை வாகனங்களிலிருந்து களைத்துப்போய் இறங்குகிற கால்சென்டர் ஊழியர்களையும் தவறாமல் கவனித்து வருகிறோம்.

இந்த இடங்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு சம்பவம், அதை நாம் கடக்கிறபோதெல்லாம் நமது நினைவுக்கு வருவதும் வாடிக்கையே. ஏதோ ஞாபகத்தில் அங்கிருந்த டீக்கடையில் காசு கொடுக்காமல் பத்தடி நடந்து போனபிறகு, யாரோ கைதட்டி அழைத்ததும் திரும்பிப் பார்த்து, புரிந்து கொண்டு அசடுவழிந்த நிகழ்வு முன்பெல்லாம் அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும். இந்த உதாரணம் தவிர, சில சம்பவங்கள், சில காட்சிகள் என்று ஒன்றன்பின் ஒன்றாய் நிறைய நினைவுகள் அந்த சந்திப்போடு தொடர்புடைத்தனவாயிருக்கின்றன, அல்லது இருந்தன....?

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில், ஒரு இளநீர்க்கடை இல்லாமலா போய் விடும்?

நான் குறிப்பிடுகிற இந்த இளநீர்க்கடையில் எப்போதும் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பவர் நடுத்தரவயதைத்தாண்டிய ஒரு பெண்மணி. அதே கடையில் அண்மையில் கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ணனின் பொம்மைகளையும், விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார் பொம்மைகளையும் பார்த்திருக்கிறேன். இருப்பினும், அந்தப் பெண்மணியின் முக்கிய வியாபாரம் இளநீர்தான்! அதையடுத்துள்ள கடையில் அதிகாலையில் டீ அருந்தியபிறகுதான் எனது ஒவ்வொருநாளும் துவங்குகிறது. விடுமுறை நாட்களில், ஊர் சுற்றித் திரும்பும்போது நானும் இளநீர் சாப்பிட்டிருக்கிறேன். அந்தப் பெண்மணி உட்பட, அந்த முச்சந்தியில் எனக்குப் பரிச்சயமானவர்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் அதிகரித்தே வந்திருக்கிறது.

அப்படித்தான் ஒரு நாளில், இளநீர் கொடுத்து விட்டு மீதி வாங்கியபோது, அவர் கொடுத்த ஐந்து ரூபாய்த்தாள் மிகவும் கசங்கி, கிழிந்திருக்கவே ’வேறே நோட்டு இருந்தாக் கொடுங்களேன்!’ என்று இயல்பாகத் தான் கேட்டேன்.

"நானா அடிக்கிறேன் நோட்டு?"

ஒரு கணம் அதிர்ந்து போனேன். என்னாயிற்று இந்த அம்மாவுக்கு? ஆனால், சுர்ரென்று கிளம்பிய எரிச்சலை அடக்கியவாறு, எதிர்பேச்சு எதுவும் பேசாமல் அவர் கொடுத்த நோட்டை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டேன்.

அதன்பிறகு, ஒவ்வொரு முறை அந்த இடத்தைக் கடக்கும்போதும், சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அந்த இடத்தை நெருங்கும் முன்னரே, கையில் இளநீர் சீவுகிற கத்தியுடன் அந்தப் பெண்மணி ’நானா அடிக்கிறேன் நோட்டு?" என்று உரக்கக் கேட்பது போலவே மனதுக்குள் ஒரு பிரமை! தன்னிச்சையாக அந்தப் பெண்மணியின் மீது எனக்கு ஒரு கோபம்; அது படிப்படியாக வளர்ந்து எங்கு இளநீர் குடித்தாலும் அந்தப் பெண்மணியைப் பற்றிய ஞாபகம் தந்து எரிச்சலூட்டியது. சற்றே அதீதமாகக் கற்பனை செய்கையில், இது மேலும் வளர்ந்து இளநீரின் மீதே எனக்கு வெறுப்பாகி விடுமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அந்த இடத்தோடு எனக்கிருந்த பழைய பரிச்சயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இளநீர்க்காரப் பெண்மணி மட்டுமே ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வந்தார்! என்ன ஒரு அசட்டுத்தனம்! அந்த சம்பவத்தை ஏன் இன்னும் வலுக்கட்டாயமாகச் சுமந்து திரிகிறேன் என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.

அந்தச் சுமை அண்மையில் இன்னொரு சுமைக்கு இடமளித்துவிட்டு இறங்கிப்போனது.

அதே சந்திப்பு; அதே டீக்கடை! செய்தித்தாளை வாங்குவதா வேண்டாமா என்ற யோசனையில் டீ பருகியபடியே நான் பராக்குப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். தெருவைச் சுத்தம் செய்கிற சீருடையணிந்த பெண்மணிகள் சத்தமாகச் சிரித்துப் பேசியபடி, டீ அருந்தியபடி இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல கடைக்குள்ளே அரசியல் பேசுபவர்களின் கெக்கலிப்புக்களும் கேட்டுக்கொண்டிருந்தன. யார் யார் என்னென்ன செய்து கொண்டிருந்தார்களோ, அதையெல்லாம் சட்டென்று நிறுத்தியபடி சட்டென்று ஒரு சத்தம் கேட்டது!

பளார்!

சத்தம் வந்த திசையை திரும்பி நோக்கியபோது, அடிவாங்கி, கன்னத்தைப் பிடித்தபடி அந்த இளநீர் விற்கும் பெண்மணி. அவளை அடித்துவிட்டும், மேலும் அடிக்கப்போகிறவன் போல அபாயகரமாக கையை உயர்த்தியபடி ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன்!

"காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று சலித்தபடி, தலையைத் தாழ்த்திக்கொண்டு கடமையைச் செய்து கொண்டிருந்த டீக்கடைக்காரர்.

"அதுக்குள்ளே கடை திறந்திட்டாங்களா?" என்று பின்னாலிருந்து ஒரு நக்கலான கேள்வி.

பளார்! அடுத்த அடி அந்தப் பெண்மணியின் முதுகில்!

"பெத்த அம்மாவை அடிக்கிறானே பொறம்போக்கு! இவனையெல்லாம்.....!"

"டேய்.....!" டீ குடித்துக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளிப் பெண்களில் ஒருவர் துள்ளியெழுந்தார். விடுவிடுவென்று சாலையைக் கடந்து போவதற்கு முன், புடவையை வரிந்து கட்டி முடித்திருந்தார். மூன்றாவது அடிக்காக, அந்த இளைஞனின் கையோங்கியிருந்தபோது அவனது தலைமயிற்றை இந்தப் பெண்மணி கொத்தாகப் பிடித்திருந்தார்.

"நடறா டேசனுக்கு...இன்னிக்கு உன்னை சுளுக்கெடுத்தாத் தான் நீ சரிப்படுவே...! நடறா....பெத்த அம்மாவையா அடிக்கிறே நாயே...?"

எனது கண்கள் இயல்பாகவே அந்த இளநீர் விற்கும் பெண்மணியின் மீது விழுந்தது. ’ஐயையோ, என் மகனைப் போலீஸில் பிடிச்சுக்கொடுத்திராதே!’ என்று சினிமாக்கார அம்மாவைப் போல அவர் வசனம் பேசவில்லை; மாறாக, இன்னும் கன்னத்தைப் பிடித்தபடி மகனும் அந்தத் துப்புரவுத் தொழிலாளிப் பெண்மணியும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் கவனித்தபடி, தனது இளநீர்க்கடைக்குச் சென்றார். ஒவ்வொருவராகக் கூட்டம் சேர, அம்மாவை அடித்த மகன் நடுவில் சிக்கித் திணறிக்கொண்டிருக்க, அம்மாவோ கடையில் இளநீரைச் சீவியபடி தனது வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து, கொச்சையான சில கெட்ட வார்த்தைகளையும், சந்தடி சாக்கில் கிடைத்த ஓரிரு மொத்துக்களையும் வாங்கிக்கொண்டு அந்த மகன் அங்கிருந்து நகர்ந்தான். நானும் நகர்ந்தேன்!

இனிமேல் அந்த இடத்தை நெருங்கும்போது எனக்கு ’நானா அடிக்கிறேன் நோட்டு?’ என்ற கேள்வி நினைவுக்கு வராது போலத் தோன்றுகிறது! காரணம், அந்தக் கேள்விக்குள்ளே எங்கோ எப்போதோ யாரிடமோ வாங்கிய அறைகளின் உரத்த ஒலி ஒளிந்து கொண்டிருக்கிறது என்று புரிந்துவிட்டது. இனிமேல், எனக்கு ’பளார்’ என்ற சத்தம் மட்டுமே கேட்கும் - ஒருவேளை, அதைவிடவும் உரத்த , அதைவிடவும் வலிக்கிற தருணங்களுக்கு நான் மீண்டும் சாட்சியாகாத வரையில்!

Tuesday, September 14, 2010

கற்க கசடற

ஒரு பாட்டு கேள்விப் பட்டிருப்போம்.

"ஆவீன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமைசாக
மாவீரம் போகுதென்று விதைகொண்டோட
வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டொருவான் எதிரேபோக
தள்ளவொணா விருந்துவர சர்ப்பம்தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்க
குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"

(விவேக சிந்தாமணி?... மே பீ!)

எதுக்கு இம்புட்டு? பட்ட காலிலே படுமுன்னு சுருக்கமாச் சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே-ன்னு கேட்கறீங்களா? அப்புறம், எனக்கு இதெல்லாம் தெரியுமுன்னு எப்போத்தான் சொல்லிக் காட்டுறதாம்?

நம்ம தில்லிக்கு இப்போ நேரமே சரியில்லீங்க! ’ஏன்யா, காமன்வெல்த் விளையாட்டை நடத்தறதுக்கு முன்னாடி எங்களையெல்லாம் ஒரு வார்த்தை கேட்குறதில்லையா?’ன்னு டாக்டருங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! இப்படியே போனா கடைசியிலே கரும்புஜூஸு, பானிபூரி விக்குறவனெல்லாம் கேள்விகேக்குற அளவுக்கு காமன்வெல்த் விளையாட்டு காமெடியாகிப் போச்சுதண்ணே! சினிமாவுலே இப்பல்லாம் போலீஸ்காரவுங்களை வச்சுத்தானே காமெடி பண்ணுறாங்க! அதே மாதிரி காமன்வெல்த் விளையாட்டுலேயும் போலீஸ்காரங்களை வச்சு ஒரு காமெடி பண்ணியிருக்காங்க! வடிவேலு காதுலே விழுந்தா அடுத்த படத்துலே போட்டு அடி தூள் பண்ணிடுவாரு!

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்; கெளவியைப் புடிச்சு மணையிலே வையி,’ன்னு எங்கூருப்பக்கத்துலே சொல்லுவாங்க! அதே மாதிரி இருக்குற சோலியெல்லாம் விட்டுப்புட்டு தில்லியிலே போலீஸ்காரவுங்களுக்கு இங்கிலீஷ் பேச பயிற்சி கொடுத்திருக்காங்களாம். பெருசா ஒண்ணுமில்லீங்கண்ணா! ’Good Morning’, ’Good Evening’ ’ ’May I help you?’ மாதிரி ரொம்ப சர்வசாதாரணமான இங்கீலீஷ் தான்! இதைச் சொல்லிக்கொடுக்க ரெண்டுவருசம்; முப்பது லட்ச ரூபாய் செலவு! (விலைவாசிக்கு ஏத்தா மாதிரி கமிஷனும் ஏறுமில்லே? )

ஆனா, இந்தப் பயிற்சிக்குப் போன ஒருத்தராலேயும் இன்னும் இங்கிலீஷ் பேச முடியலியாம். ’உங்களுக்காகச் செலவு பண்ணின முப்பது லட்ச ரூபாயையும் சம்பளத்துலே பிடிக்கப்போறோம்,’னு அரசாங்கம் மிரட்ட ஆரம்பிச்சிருச்சாம். அதைப் பத்தியெல்லாம் போலீஸ்காரங்க பெருசா கவலைப்பட மாட்டாங்க, முப்பது லட்சத்தை முப்பது நாளிலே வசூல் பண்ணிர மாட்டாங்களா என்ன? சாதாரணமாவா நினைச்சிட்டீங்க நம்ம ஆளுங்களை?

ஆனா, இப்படி இங்கிலீஷை, திர்லக்கேணி பார்த்தசாரதி கோவில்லே புளியோதரை விநியோகம் பண்ணுறா மாதிரி கொஞ்சூண்டு சொல்லிக் கொடுத்தா பெரிய பிரச்சினையாயிடுமுங்க! இப்படித்தான், நம்ம ஆளு ஒருத்தரு அமெரிக்கா போறயிலே ’யெஸ்,நோ,ஆல்ரைட்,’னு மூணே மூணு வார்த்தை மட்டும் படிச்சிட்டுப் போனாரு. அவரு நியூ யார்க்குலே இறங்கின மூகூர்த்தம், வெளியே ஒரு கொலை நடந்திருச்சி! நம்மூரு ஞாபகத்துலே இந்தாளு அங்கண போயி பப்பரக்கான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தாரா? போலீஸ்காரவுங்க வந்திட்டாங்க?

"Hey Indian, Are you the culprit?"

"YES"

"What? Are you crazy??"

"NO"

"OK.You are under arrest!"

"Alright"

அம்புட்டுத்தேன், நம்மாளைக் கொத்தா அள்ளிட்டுப் போயிட்டாங்க! இதுக்குத் தான் சொல்லுறது, அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு இங்கிலீஷ் பேசப்படாதுன்னு! படிக்கிறவங்களுக்கே இப்படீன்னா, பாடம் சொல்லிக்கொடுக்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்னு யோசியுங்கண்ணே!

நான் படிச்சதெல்லாம் முன்சிபல் பள்ளியோடத்துலே! அங்கே மூணாங்கிளாசிலே தான் இங்கிலீஷே ஆரம்பிச்சாங்க! எங்க வாத்தியாருக்கே இங்கிலீஷ் தெரியாது; இருந்தாலும் கவுரதைக்காக இங்கிலீஸுலே தான் பேசுவாரு! ஒரு நா வகுப்புலே நான் சேட்டை பண்ணினேனா, அவரு என்னை வெளியே போகச் சொல்லிட்டாரு! எப்படீங்கிறீங்களா? அவருக்கு ’கெட் அவுட்’ங்கிற ரெண்டு வார்த்தை மறந்திருச்சு! அதுனாலே அவரு என்னைப் பார்த்து ’Follow me!' ன்னு சொல்லிட்டு வகுப்பை விட்டு வெளியே போனாரு! நானும் அவரு பின்னாலேயே போக, அவரு பள்ளிக்கூடத்துக்கு வெளியே வந்து ரோட்டுலே நின்னாரு! பொறவு என்னைப் பார்த்து ’Dont follow me!' சொல்லிட்டு அவரு மட்டும் உள்ளே போயிட்டாரு! எக்ஸ்ட்ராவா எவ்வளவு விஷயம் பண்ண வேண்டி வந்திருச்சு பார்த்தீங்களா? அதுனாலே தான் வள்ளுவர் சொல்லியிருக்காரு; ’கற்க கசடற!

இதே வாத்தியாரு, ஒரு நா லீவு போட்டுட்டு, அவரோட சம்சாரத்தோட நெல்லை ஸ்ரீரத்னாவுலே படம் பார்க்க வந்திருந்தாரு. நாங்க கட் அடிச்சிட்டு அதே படத்தைப் பார்க்கப போயிருந்தோம். அவரு பார்த்திட்டாரு! எங்களுக்கு பயமாயிடுச்சு! இருக்காதா பின்னே? ஒருவாட்டி வகுப்புலே நாங்க வம்பளந்துக்கிட்டிருந்தோமுன்னு, கோபத்துலே, "Don't shout! If you shout I will dismiss the Headmaster!"ன்னு வார்னிங் பண்ணினவராச்சே!

அடுத்த நாள் வகுப்புக்கு வந்ததும் வராததுமா, எங்களை எழுப்பி நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டாரு! எப்படீங்கிறீங்களா...?

Yesterday I saw you WITH MY WIFE at the Cinema Theatre

அட இவ்வளவு ஏன்? நம்ம ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு அமெரிக்கா போகறதுக்கு விசா கிடைக்காததுக்கு என்ன காரணம் தெரியுமா? தூதரகத்துலே ஐயாக்கண்ணு கிட்டே "நீங்க என்ன தொழில் பண்ணுறீங்க?"ன்னு ஆங்கிலத்துலே கேட்டிருக்காங்க! இவரும் பதிலுக்கு ’பசுவைக் கட்டிப் பால் கறக்கிறேன்,’ன்னு சொல்லியிருக்காரு; ஆங்கிலத்துலே! அதைக் கேட்டதும் இவரோட அப்ளிகேசனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களாம். ஏன்னா, பசுவைக் கட்டிப் பால் கறக்குறேங்குறேன்னு இங்கிலீஷ்லே சொல்லுறதுக்கு அவரு ’I am marrying cows and rotating milk,' ன்னு சொல்லிட்டாராம்.

ஆக, போலீஸ்காரங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறதுலே தப்பில்லே! ஆனா, அவங்களுக்குப் புரியுறா மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கணும். உதாரணமா....

A for Assault
B for Bail
C for Chargesheet
D for Danger
E for Encounter
F for F.I.R

இந்த மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தா, கண்டிப்பா அவங்க நல்லா படிச்சு, தில்லியோட மானத்தைக் காப்பாத்தியிருப்பாங்க! நம்ம என்கவுன்டர் ஏகாம்பரம் கூட தில்லி போலீஸ்லே தான் இருக்காராம். அவரு கிட்டே கேட்டேன்.

"அட என்னாத்தைச் சொல்ல? முத நாளே போற வழியிலே என் வண்டி ஒரு ஆட்டை அடிச்சிருச்சுன்னு லேட்டாப் போனேனா, அதுனாலே என்னை கிளாசுக்கே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க!"

"அதுக்கென்ன அண்ணே, விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே?"

"சொன்னேனே! I am sorry, my bike hitting a mutton-ன்னு சொன்னேன். அதுக்கப்புறமும் என்னை வெளியே போகச் சொல்லிட்டாங்க!"

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, தில்லியிலே எல்லாரும் இங்கிலீஷ் படிச்சா என்னை மாதிரி ஆளுங்களுக்கு சவுகரியமா இருக்கும். போன வருசம் தில்லி போயிருந்தேனா, கரோல்பாக்குலே ஸ்வெட்டர் வாங்கினேன். அவன் என்ன விலை என்ன சொன்னான்னு புரியலே; இருந்தாலும் இருநூறு ரூபாய்க்கு மேலே கொடுக்க விருப்பமில்லே! ஆனா பாருங்க, எனக்கு இந்தி எண்ணிக்கையிலே ’தஸ்’னா பத்துங்கிறது மட்டும்தான் தெரியும். அதை வச்சே அவன் கிட்டே பேரம் பேசினேன். எப்படி...?

தஸ்...ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்.ஊப்பர் தஸ்..ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்....ஊப்பர் தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் .தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...ஊப்பர் தஸ்...

ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க! எனக்கு ’தஸ்’ஸுக்குப் பதிலா ’ஏக்’(ஒன்று) மட்டும் தெரிஞ்சிருந்தா என்னாயிருக்கும்! அனேகமா இப்போ கூட கரோல்பாக்குலேயேதான் இருந்திருப்பேன்.