Sunday, December 2, 2012

நளபாகம்-வெந்நீர் போடுவது எப்படி?


தமிழில் வெந்நீர்எனப்படுவது ஆங்கிலத்தில் ஹாட் வாட்டர்,’ என்றும், ஹிந்தியில் கரம் பானி,என்றும் ஜப்பானிய மொழியில் ஹை-யை-யோ என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். ஆண்களாகிய நமக்கும் அவ்வப்போது சவரம் மற்றும் குளியல் வரைக்கும் தேவைப்படுகிற இந்த வெந்நீரானது நமது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாகி விட்டது என்றால் மிகையாகாது. வெந்நீர் போடுவது எப்படியென்பதை அறிந்து கொள்வதற்குள்ளாக, வெந்நீர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அவசர அவசரமாக அடுக்களை சென்ற ஆண்கள், திரும்பி வந்து, ஆற அமர இந்தப் பதிவைப் படிப்பது வெந்நீர்குறித்த அவர்களது பொது அறிவை வளர்க்கும்.

     வெந்நீர் மனிதனின் கண்டுபிடிப்பில் மிக அரியது.என்று கி.பி.1567-ம் ஆண்டு வாழ்ந்த ஹாட்லாண்டைச் சேர்ந்த டாக்டர்.பாயில்மேன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

     இதே போல பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுக்குநீரகர் என்னும் சித்தர் இது வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத தனது சுவடியில் வெந்நீரின் சிறப்பு குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதைப் படித்தறிக:

     "ஈரமுடன் இருப்பதற்கே எருதுகளுங் குளித்திடவே
     ஊரதனில் உள்ளதன்றோ ஓர்குளமே-சாரமுறு
     சொதிக்குண்டு சுடுதோசை சோறுண்ணப்போவதன்முன்
     கொதிக்கின்ற நீரில் குளி"

(நன்றி: புரூடா பதிப்பகம்)

     தோசையோ,சொதியோ,சோறோ உண்ணுகிற பொருள் எது சூடாயிருந்தாலும் அதை உண்பதற்கு முன்னர், சுடுதண்ணியில் குளித்திட வேண்டுமென்று வலியிறுத்தியிருப்பதைக் காண முடிகிறதல்லவா? எனவே, ஆணாகப் பிறந்த நாமெல்லாம் வீணாகக் காலத்தைக் கடத்திடாமல் வெந்நீர் போடுவதைப் பற்றி அறிந்து கொள்வது நமது தன்னம்பிக்கையை வளர்த்திடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

     வெந்நீர் போடுவதற்கு முன்னர், நாம் ஏன் வெந்நீர் போடுகிறோம் என்ற குறிக்கோள் நமக்குப் புரிந்திருத்தல் மிக அவசியம். குடிப்பதற்கா குளிப்பதற்கா என்று புரியாமல் வெந்நீர் போடுவது போன்ற விரயமான செயல்களை ஆண்கள் செய்யாதிருத்தல் நலம். குடிப்பதென்றால் குண்டா; குளிப்பதற்கு அண்டா,என்ற குளித்தலை குளியாமொழியின் கூற்றை இவ்வமயத்தில் நினைவில் நிறுத்துவது நன்று.

     வெந்நீரைப் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொண்டு விட்டபடியால், அடுத்து வெந்நீர் போடுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு காகிதத்தில் பின்வருகிற பொருட்களின் பட்டியலைக் குறித்து வைத்தல் சாலச் சிறந்தது.



வெந்நீர் போடத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள்:-

1. பர்னால் அல்லது ஏதாவது ஒரு ஆயின்மென்ட் (எசகுபிசகாக காலில் வெந்நீரைக்     கொட்டிக் கொண்டு விட்டால் போட்டுக்கொள்ள)

2.டெலிபோன்டைரக்டரி-அருகிலிருக்கிற மருத்துவமனைகள் / டாக்டர்கள் / ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றின் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொண்டாலும் போதும்) தீயணைப்புத் துறை /காவல்துறை தொலைபேசி எண்களையும் வைத்திருந்தால் பாதகமில்லை.

3. பாதுகாப்பு அங்கி(கோணிப்பையையும் உபயோகிக்கலாம்)

4. ரப்பர் காலணிகள்

5.கையுறைகள் மற்றும் கால்மறைப்புகள். (மகனின் கிரிக்கெட் சமாச்சாரங்களையும் பயன்படுத்தலாம்)

6.ஹெல்மெட்(துணிச்சலானவர்கள் இதைத் தவிர்க்க விரும்பினால் அது அவர்கள் தலைவிதி!)

7. தர்மாமீட்டர்
  
* விளக்கப் படத்தைப் பார்க்கவும்

     #இது தவிர பொசுங்கலூர் வெந்தசாமி எழுதிய தீக்காயமா? என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பதும் நன்மை பயக்கும்.

     மேற்கூறிய பொருட்கள் தவிரவும், வெந்நீர் போட மேலும் சில பொருட்களும் தேவைப்படுகின்றன். அவையாவன:



1.         பாத்திரம் (தேவைக்கேற்ப அண்டா அல்லது குண்டா)
2.         தண்ணீர் (அதுவும் தேவைக்கேற்பவே!)
3.         இடுக்கி (இது இல்லாமல் வெந்நீர் போடுவது அபாயகரமானது)
4.         நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி அல்லது நல்ல லைட்டர்.


இடுக்கியொன் றிருப்பின் இன்முகங்கொண்டுதினம்
அடுக்களை போவான் ஆண்  என்ற திரிக்குறளை நினைவில் கொள்ளுக.

     மேற்கூறிய பாதுகாப்பு சங்கதிகளை அணிந்து கொண்டபின், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து விட்டு தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கவும். அல்லது அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மேல் வைத்து அப்புறமாக அதில் தண்ணீரை ஊற்றுவதாலும் பாதகமில்லை. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுக்கும் அடுப்புக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரையடியாவது இடைவெளியிருக்க வேண்டும். முதல் முறையாக வெந்நீர் போடுபவர்கள், தரையில் சரியான தூரத்தை அளந்து, சாக்பீஸால் கோடு போட்டு வைத்துக்கொள்வது நல்லது.

     சிறிது நேரத்திலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிறியதும் பெரியதுமாகக் கொப்பளங்கள் வருவதைக் கண்டு பயந்து விடக்கூடாது. பயந்த சுபாவமுள்ளவர்கள் வெந்நீர் தயாராகும் வரையில் அச்சம் என்பது மடமையடா.என்ற பழைய பாடலையோ, ’அச்சம் தவிர்,’ என்ற புதிய பாடலையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கலாம். நம்பிக்கையுள்ளவர்கள் அவரவர் இஷ்டதெய்வத்தை வணங்கிவிட்டு வெந்நீர் போட ஆரம்பிப்பதிலும் எந்தத் தவறுமில்லை.

     நிமிடத்துக்கொரு முறையாவது கொதிக்கின்ற பாத்திரத்துக்கு நேராக, சுமார் ஒண்ணேகால் அடி தூர உயரத்தில் தர்மாமீட்டரை வைத்து, வெந்நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது என்று பரிசோதித்துக்கொள்வது நலம். உங்களுக்கு எவ்வளவு சூடான வெந்நீர் வேண்டுமென்பது, உங்களுக்கு இருக்கிற தனிப்பட்ட (அ) சூடு, (ஆ) சொரணை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் தேவைக்கேற்பக் கொதிக்க வைக்கவும். ((அ) மற்றும் (ஆ) இவையிரண்டும் இல்லாதவர்கள் கட்டுரையாசிரியரைப் போல வெந்நீர் போட்டு நேரத்தை விரயம் செய்யாமல், குளிர்ந்த நீரில் குளிப்பதே சாலச் சிறந்தது.)

     உங்களுக்குத் தேவையான சூட்டோடு வெந்நீர் தயாரானதும் மறக்காமல் அடுப்பை அணைத்து விட்டு, இடுக்கியால் பாத்திரத்தை இறுக்கமாகப் பிடித்து இறக்கி வைக்கவும்.

     இதோ, சுடச்சுட வெந்நீர் தயார்!

     இம்முறைப்படி வெந்நீரை வெற்றிகரமாகத் தயாரித்தவர்களே, அடுத்து டீபோடுவது எப்படி என்று பார்க்கலாமா? அதுவரை, சூடுபட்ட உங்களது விரல்களுக்கு பர்னால் போட்டுக்கொண்டிருக்கவும்.


பின்குறிப்பு: இது 20.07.2009 அன்று நான் கூகிள் குழுமங்களில் எழுதியது. (அப்போ ஆரம்பிச்சவன் இன்னும் திருந்தலை!)