Monday, August 30, 2010

நதியைப்போல......!

தரம்பிரித்துப் பாராமல்
தாகத்தைத் தணிக்கும்

கழிவுகள் வருகின்றபோதிலும்
கரிசனத்துடன் ஏற்றுக்கொள்ளும்

பாறைகளில் மோதியும்
பதறாமல் நடக்கும்

எடுப்பார்கைப்பிள்ளையாய்
எங்கு செலுத்தினாலும் பாயும்!

சிறைப்படுத்தினாலும்
சிரித்தபடி காத்திருக்கும்

உலகத்தின் பாவத்தையெல்லாம்
உள்வாங்கிச் செரிக்கும்

நடுங்கிநிற்கும் நாணல்தனை
நட்போடு உரசும்

பாதையில் கரைகளுக்கு
பாதபூசை செய்யும்

கூழாங்கற்களோடு
குலாவிக் குதூகலிக்கும்

களைப்பாற நேரமின்றி
கடமையை நிறைவேற்றும்

இறந்த மரங்களுக்கும்
இறுதிச்சடங்கு நடத்தும்

ஆகாயநிழலெடுத்து
ஆடையாய்ப் புனையும்

கரையோரக் கவிஞருக்குக்
கற்பனையைத் தெளிக்கும்

இறைவனுக்கு அடுத்தபடி
நிறைவுதரும் நதியே!

இறுதியிலே ஆழ்கடலுள்
இறப்பதென்ன விதியே!

10 comments:

அகல்விளக்கு said...

ஆகா...
ஆகா...
ஆகா...

கவிஞர் சேட்டைக்காரன்....

சூப்பர் தல.......

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!! "நதியைப்போல"வே கவிதை ஓட்டமும் அழகு.

Rekha raghavan said...

//இறைவனுக்கு அடுத்தபடி
நிறைவுதரும் நதியே!
இறுதியிலே ஆழ்கடலுள்
இறப்பதென்ன விதியே!//

அருமை சேட்டை. பின்னிட்டீங்க.

ரேகா ராகவன்.

Chitra said...

கரையோரக் கவிஞருக்குக்
கற்பனையைத் தெளிக்கும்

...very nice.... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை , என்ன அழகு .
ஆற்றின் அழகு போலவே அதன்
குணங்களை வரிசைப்படுத்தியிருப்பதும்
அழகு..

க ரா said...

அருமை :)

Jey said...

kavithaiyum kalakkal...

கோமதி அரசு said...

நதிகள் என்ற குழந்தைகள் தன் தாய் ஆகிய கடலை சென்று சேருவதாய் நினைக்கலாம்.ஆழ்கடலில் சென்று கலந்து மீண்டும் மழையாகி ,மீண்டும் ஆறாகும் , தண்ணீருக்கு என்றும் அழிவு இல்லை.


கவிதை அழகு.

ADHI VENKAT said...

அருமையான கவிதை சேட்டை.

சமுத்ரா said...

wow what a poem!
great! expect more