Tuesday, November 8, 2011

ஆஸ்பத்திரியில் சேட்டை!


ஞாயிறுதோறும் ஓசியில் வருகிற ஆங்கிலப்பேப்பரை, அலட்சியமாக உதறியபோது, வழுவழுப்பான வண்ணக்காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டீஸ் கண்ணைக் கவர்ந்தது.

இந்த நோட்டீசைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.950/- பெறுமான முழு உடல் பரிசோதனை ரூ.350/-க்கு செய்து தரப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.

நியாயமாகப் பார்த்தால், என் உடம்பை முழுசாகப் பரிசோதிக்க வெறும் ரூ.175/- போதுமென்றாலும்,  ஒரு தபா உடம்பில் எலும்பு நரம்பெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் தவறில்லை என்று தோன்றவே, தொலைபேசியில் முன்பதிவு செய்ய முடிவு செய்து போனில் தொடர்புகொள்ளவும், எதிர்முனையில் சாதனா சர்கம் போலக் குரல் பதிலளித்தது.

“காலையிலே ஏழுமணிக்கெல்லாம் வெறும் வயித்தோட வாங்க சார்.

“வெறும் வயித்தோடவா? அப்போ சட்டை பனியன் போடாமலா வரணும்?

“எண்டே பகவானே! டீ, காப்பி, டிபன் எதுவும் சாப்பிடாம வாங்கன்னு சொன்னேன்.

“ஆல்ரைட்!

அடுத்த நாள், நோட்டீசைத் தூக்கிக் கொண்டு அந்த ஆஸ்பத்திரியை அடைந்தபோது, ரிசப்ஷனில் தூக்கக்கலக்கத்தோடு ஒரு பெண் வரவேற்று, சொளையாக ரூ.350/- வாங்கிக்கொண்டு, ஏறக்குறைய ஐ.ஏ.எஸ் வினாத்தாள் போலிருந்த ஒரு படிவத்தில், எனது பெயர், வயது இன்னபிற விபரங்களைக் குறித்துக் கொள்ளத்தொடங்கினாள்.

“நீங்க எந்த குரூப் சார்?

“ஸாரி, எல்லா குரூப்புலேருந்தும் தொரத்திட்டாங்க! வெறும் பிளாக்-லே மட்டும் தான் எழுதிட்டிருக்கேன்!

“ஐயோ, அதை யாரு சார் கேட்டாங்க, உங்க இரத்தம் என்ன குரூப்?

“ஓ பாசிடிவ்!என்று சொன்னதும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த அந்தப் பெண், ‘எடீ சுமா, இவிடே ஒரு செக்-அப் வன்னுட்டுண்டு; விளிச்சோண்டு போ!என்று சொல்லவும் சுமா என்ற பெயரில் ஒரு சுமோ என்னை நோக்கி ஏறக்குறைய உருண்டு வந்தார்.

வாங்க சார்,என்று அழைத்துப்போய் ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கையைப் பிடித்து நாடி பார்த்தார். பிறகு, இரத்த அழுத்தம் பார்த்தார்.

“எனக்கு பிளட் பிரஷர் கிடையாது!

உங்களுக்கு பிளட் இருக்குதான்னே சந்தேகமாயிருக்கு! சரி, எழுந்திரிச்சு இந்த மெஷின் மேலே நில்லுங்க! வெயிட் பார்க்கலாம்!

நான் ஏறி நின்றதும், என்னை நிமிர்ந்து நிற்கச் சொல்லியவர், குனிந்து பார்த்தார்.

“ஐயையோ, என்னது முள்ளு நகரவேயில்லை?

“ஏன், இல்லாட்டா நகர்ந்து நாயர் கடைக்குப் போயி சாயா குடிக்குமா?

அந்தப் பெண் என்னை முறைத்து விட்டு, செயற்கையாகச் சிரித்தார்.

“அடுத்தது பிளட் செக்-அப் பண்ணுவாங்க; அப்புறம் எக்ஸ்-ரே; அப்புறம் ஈ.சி.ஜி; அப்புறம் டாக்டர் செக்-அப்; அப்புறம் ஸ்கேன்; அப்புறம் சர்ஜன் பார்ப்பாரு! அப்புறம் டயட்டீசியன் பார்ப்பாரு! சரீங்களா?

ஆஹா, வெறும் ரூ.350/-க்கு இத்தனை பரிசோதனைகளா? என்று நான் வாயைப் பிளந்தபடியே சுமோவின் பின்னாலேயே சென்று, இரத்தப் பரிசோதனை செய்யும் அறைக்குள் நுழைந்தேன். அங்கே ‘கலாகௌமுதிவாசித்துக் கொண்டிருந்த பெண் என்னைப் பார்த்ததும் சலிப்புடன் எழுந்தாள்.

“மிஸ்டர் சுமா! பதற்றத்தோடு அழைத்தேன்

“என்னது?

“சாரி, உங்களை மேடம்னு அழைக்கிறதா சிஸ்டர்னு அழைக்கிறதான்னு குழம்பி, மிஸ்டர்னுட்டேன். அதாவது சிஸ்டர் சுமா, என் உடம்புலேருந்து ரொம்ப இரத்தம் எடுத்திராதீங்க! வெயிட் குறைஞ்சிரும்! தப்பிப் போய் அதிகம் எடுத்தா, மிச்சமிருக்கிறதை ஊசிபோட்டாவது திருப்பிக் கொடுத்திரணும்.

அதெல்லாம் எடுக்க மாட்டாங்க! ஜென்சி, சாம்பிள் எடு, நான் போய் சாருக்குத் தண்ணி பாட்டில் கொண்டு வர்றேன்.

“ஊசி போட்டா அழுவீங்களா சார்?அந்த ஜென்சி அக்கறையோடு கேட்டாள்.
“சேச்சே! ஊசியைப் பார்த்தாலே அழுதுருவேன். வலிக்காமப் போடுங்க சிஸ்டர்!

எனது உடம்பில் நரம்பைக் கண்டுபிடிப்பது, ஆற்காட்டு ரோட்டில் பள்ளத்தைக் கண்டு பிடிப்பது போல சுலபமானது என்பதால், அநியாயத்துக்கு  ஒரு அவுன்ஸ் டீ அளவுக்கு இரத்தத்தை ஊசியால் உறிந்து எடுத்தார் ஜென்சி. குத்திய இடத்தில் பஞ்சை வைத்து விட்டு, அப்படியே உட்கார வைத்து விட்டு மீண்டும் கலாகௌமுதியில் மூழ்கினார்.

“வாங்க சார்,என்று ஒரு கையில் தண்ணீர் பாட்டிலும், இன்னொரு கையில் ஒரு அரையடி நீளத் துவாலையுமாகத் திரும்பி வந்தார் சுமா. “எக்ஸ்ரே எடுக்கப்போலாம் வாங்க!

எக்ஸ்ரே அறையிலிருந்தவன் என்னைப் பார்த்ததும் ‘உனக்கெல்லாம் எக்ஸ்ரே எடுப்பது எக்ஸ்ரேவுக்கே அவமானம்,என்பதுபோல கேவலமாகப் பார்த்தார்.

“சட்டை பனியனைக் கழட்டுங்க சார்!

“அண்ணே, லேடீஸ் பக்கத்துலே நிக்குறாங்கண்ணே!நான் கெஞ்சினேன்.

“ஆமா, இவரு பெரிய சல்மான் கான். சிக்ஸ் பேக் வச்சிருக்காரு! நியாயமாப் பார்த்தா உங்க உடம்புக்கு பனியனைக் கழட்டினா, எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. என்ன பண்றது, கழட்டுங்க!

எனது தாவாங்கட்டையை ஒரு தகரச்சட்டத்தின் மீது அழுத்தி வைத்து விட்டு, அவர் கூறினார்.

“மூச்சை இழுத்துப் பிடிங்க! நான் சொல்லுற வரைக்கும் மூச்சு விடக்கூடாது!

“அண்ணே, ஸ்மைல் ப்ளீஸ் சொல்லுவீங்க தானே?

அவர் எரிச்சலோடு பார்க்கவும், வாயைப் பொத்திக்கொண்டு நான் மூச்சைப்பிடித்துக் கொண்டு நிற்கவும், சட்டென்று படம்பிடித்து விட்டு என்னைக் கழுத்தைப்பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்.

“சார், சட்டையைப் போட்டுக்காதீங்க! ஈ.சி.ஜி.எடுக்கணும்!

ஈ.சி.ஜி அறையில் மாறுதலாய் ஒரு பெண் விகடன் வாசித்துக் கொண்டிருக்க, சுமா என்னை அங்கிருந்த உயரமான கட்டிலுக்கருகே அழைத்துச் சென்றார்.

“இதுலே படுத்துக்கோங்க சார்! ஈ.சி.ஜி. எடுத்ததும் இந்த ஒரு பாட்டில் தண்ணியையும் குடிச்சிரணும். அப்பத்தான் ஸ்கேன் பண்ண முடியும்.

“ஒரு பாட்டில் தண்ணியா? மிக்சிங்குக்கு ஏதாவது கிடைக்குமா?

“என்னது?

“சாரி, பழக்கத்தோஷத்துலே கேட்டுட்டேன்.

தண்ணீர் பாட்டிலையும், துண்டையும் வைத்து விட்டு, சுமா வெளியேறியதும், அந்த இன்னொரு பெண், கட்டிலில் படுத்திருந்த என் மீது பற்பசை போன்ற திரவத்தை ஆங்காங்கே ஒட்டி, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேபிளாக ஓட்டத்தொடங்கினார்.

“சிஸ்டர், கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! எதுக்கு என் உடம்புலே இத்தனை கேபிளை சொருகறீங்க? என்னையும் போதிதர்மனாக்கப் போறீங்களா?

“ஷட் அப்!தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் அந்தப் பெண் அதட்டவும், புதிதாய் அமைச்சர் பதவியேற்றது போல, கையது கொண்டு வாயது பொத்தி நான் அமைதியானேன்.

(தொடரும்)

Saturday, November 5, 2011

எல்லோரும் எலுமிச்சை வாங்கிக்கிடணும்!

சமீபத்தில் "Benefits of lemon" என்று ஒரு ஆங்கிலக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ போன்ற ஒரு தேசீய நாளேட்டில், எலுமிச்சையின் பயன்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்ததும், உள்கட்சி ஜனநாயகம் இல்லையென்று உறுப்பினர் பதவியை உதறிய எதிர்க்கட்சிப் பிரமுகரைப் போல எனது உள்ளம் கொதித்தது. உடனே எலுமிச்சம்பழத்தைக் குறித்த ஒரு விழிப்புணர்வுப் பதிவை எழுதியபிறகே ஆபீஸ் வேலையை கவனிப்பது என்று சபதம் மேற்கொண்டு எழுதிய இடுகை இது.

எலுமிச்சையின் பெருமைகளைப் பாரீர்!

முக்கிய பிரமுகர்களைப் பார்க்கப் போகும்போது பலர் கையில் எலுமிச்சம்பழத்துடன் போவதுண்டு. அதற்கு முக்கிய காரணம், எலுமிச்சையில் விட்டமின்-"C" இருக்கிறது. ( C for Cash, C for Corruption, C for Concession வகையறா வகையறா). இந்த எலுமிச்சம்பழம் இந்தியாவில் தான் முதலில் விளைவிக்கப்பட்டது என்பதிலிருந்தே புரிந்திருக்குமே? 

1875-ல் ஃப்ளினின் என்ற மருத்துவர் உடம்பிலிருக்கும் அசுத்தமான ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு போல எதுவுமில்லை என்று கண்டுபிடித்ததை இன்றளவும் டாஸ்மாக் பக்தகோடிகள் அவ்வப்போது பின்பற்றுகிறார்கள் அல்லவா? இதிலிருந்தே எலுமிச்சையின் மப்பு நீக்கும் மருத்துவ குணத்தை அறியலாம். ஆனால், அதே எலுமிச்சைச் சாறை வொயிட் ரம்மிலும், வோட்காவிலும் கலந்து குடிப்பது என்ன கொடுமை! அதனினும் கொடிது, மப்பு குப்பென்று ஏற எலுமிச்சங்காய் ஊறுகாயை சைட்-டிஷாய் உபயோகிப்பது!

வெளிநாடுகளில் எலுமிச்சம்பழத்தின் சாறு,விதை,தோல் எல்லாவற்றையும் மருந்துகள் மற்றும் வாசனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்களாம். ஆனால், எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனுள்ள நாம் அதை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்று பார்த்தால் புல்லரிக்கும். ( எலுமிச்சைச்சாற்றைத் தடவினால் அரிப்பும் நிற்கும் என அறிக!)

எலுமிச்சம் பழத்தில் ஒரு துளைபோட்டு, ஒரு கறுப்புக்கயிற்றில் கட்டி அதன் முனையில் ஒரு மிளகாயைச் சேர்த்துக்கட்டி உங்கள் வாகனத்தில் தொங்க விட்டால், விபத்து ஏற்பட்டாலும் சேதம் ஏற்படாது. (எலுமிச்சம்பழத்துக்கு).

ஆயுத பூஜையன்று உங்கள் வாகனச்சக்கரங்களில் தலா ஒரு எலுமிச்சம்பழம் வீதம் வைத்து நசுக்கினால், நீங்கள் போகிற வழியில் யாரும் செல்போன் பேசியபடி குறுக்கே வர மாட்டார்கள் என்பதுடன், சுத்துப்பட்ட பதினெட்டுப் பட்டியில் வாகனம் ஓட்டுகிறவர்களும் கவனமாக ஓட்டுவார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

உங்களுக்கு வேண்டாதவர்களைப் பயமுறுத்த, அவர்கள் வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சம்பழமும் கொஞ்சம் குங்குமமும் போட்டு விட்டால் போதும். அவர்கள் ஏதோ பில்லி சூனியம் என்று எண்ணி ஏரியாவை மாற்றிக்கொண்டு போய்விடுவார்கள்.

இது தவிரவும், எலுமிச்சை பல உடல் உபாதைகளுக்கு அருமருந்தாகும். அவையாவன:

வயிற்றுப் பொருமல்

எலுமிச்சையின் சாறு வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு லாரி நிறைய எலுமிச்சம்பழம் வாங்கி, உள்ளாட்சித் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களுக்கு, வெந்நீரில் எலுமிச்சம் சாறு கலந்து வழங்கியதாக, சத்தியமூர்த்தி பவன் வாசலில் குவிந்து கிடக்கும் காயாத தோல்களும் காய்ந்து கிடக்கும் தொண்டர்களும் தெரிவிக்கின்றனர். 

கொசுக்கடி

தமிழகமெங்கும் மழை கொட்டிக்கொண்டிருப்பதால், தமிழகத்தில் மட்டும் கொசுத்தொகை 700 கோடியை எட்டுமென்றும், 700 கோடியாவது கொசு எழும்பூர் ரயில் நிலய வாசலில் பிறக்கும் என்றும் உலக கொசுவளர்ச்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. ஆகவே, கொசு கடித்த இடத்தில் (எழும்பூர் ரயில் நிலையத்தில் அல்ல; உங்கள் உடம்பில்) எலுமிச்சை சாற்றைப் பூசினால் கொசுவின் உற்றார் உறவினர் உங்கள் பக்கத்தில் வராமல் பம்மி விடுவார்கள்.

உறக்கமின்மை

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்கிற விலையைக் கேட்டு, நாளைக்கு சாம்பாரா, ரசமா என்று யோசித்து உறக்கம் வராதவர்கள், எலுமிச்சம்பழரசம் அருந்தினால், பிரணாப் முகர்ஜீ பணவீக்கம் குறித்து மீண்டுமொரு முறை கவலை தெரிவிக்கிற வரைக்கும் சுமாராக உறங்க வாய்ப்புகள் சுமாராக இருக்கின்றன.

விஷக்கடி

எலுமிச்சம்பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றலும் உண்டு என்பதால் வாகனம் வைத்திருப்பவர்கள் கைவசம் எப்போதும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்திருப்பது நன்மை பயக்கும். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறும்போதும், கொஞ்சமாய் சாறு சாப்பிட்டால் கடுப்பு சற்றே குறையும்.

காய்ச்சல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 782  பேர்கள் ஏறத்தாழ 4000 கோடி கறுப்புப்பணத்தைப் பதுக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்தியை வாசித்தால், உடனே எலுமிச்சம்பழச்சாற்றை உண்டால், காய்ச்சல் கிறுகிறுப்பு போன்றவை அறவே ஏற்படாது.

வாந்தி

எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி வராது. ஆகவே, கையில் ஒரு எலுமிச்சம்பழமிருந்தால் துணிந்து மழைக்காலத்திலும் மாம்பலம், அசோக்நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அருவருப்பின்றி நடமாடலாம்.

அஜீரணம்

கொஞ்சம் தேன்கலந்து எலுமிச்சைச் சாறு உண்டால் கல்லீரல் பலப்படும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உத்தரவு போட்டு விட்டு, நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு போட்டதும், இதைச் சாப்பிட்டால் அஜீரணம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தலைவலி

சூடான பானங்களில் அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால் தலைவலி குணமாகும். குறிப்பாக பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு தினமும் மூன்று வேளை இந்தப் பானத்தையே அருந்தினால், அடுத்த தேர்தலில் இலவசமாக திருவோடு கேட்கிற அவசியம் ஏற்படாது.

பித்தம்

இது அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிற கோளாறு. இதனால், இம் என்றால் உண்ணாவிரதம், ஏன் என்றால் மவுன விரதம் இருப்பதோடு, அவை முடிந்ததும் இடைவிடாமல் புலம்பித் தீர்ப்பதைப் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எலுமிச்சைச் சாற்றில் சீரகமும், மிளகும் கலந்து கொடுத்தால் பித்தம் தலைக்கேறாமல் இருக்கும்.

இன்னும் எலுமிச்சம்பழத்தின் பல அற்புத குணங்கள் உள்ளன என்றாலும், நீளம் கருதி இத்தோடு இந்த இடுகை நிறைவு செய்யப்படுகிறது. இத்தனை மருத்துவகுணங்கள் கொண்ட எலுமிச்சம்பழத்தை அனைவரும் எப்போதும் கைவசம் வைத்திருந்தால், பிரதம மந்திரியும், மத்திய நிதியமைச்சரும் விலைவாசியேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்போது, தலையில் அழுந்தத் தேய்த்து (அவர்கள் தலையில் இல்லை; நம் தலையில்) பைத்தியம் பிடித்து துணியைக் கிழித்துக்கொண்டு ரோட்டில் ஓடாமல் இருக்க முடியும்.

Monday, October 31, 2011

ஏழாம் அறிவு– எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்!

சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் என்னை விட விற்பன்னர்கள் இருப்பதால், பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். ஓவராகக் காத்திருந்தால் ‘எங்கேயும் எப்போதும்,போல விமர்சனம் டூ லேட் ஆகி முடியாமலே போய் விடுமோ என்ற பயத்தில், என் மனதுக்குப் பட்டதை எழுதப்போகிறேன். எவ்வளவோ வாசிச்சிட்டிங்க, இதை வாசிக்க மாட்டீங்களா?

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, பல்லவ இளவரசனாக இருந்த போதிதர்மரை(சூர்யா), ராஜாமாதா ஒரு காரணமும் சொல்லாமல் சீனாவுக்குப் போகச்சொல்கிறார். (யாராவது அந்த ராஜமாதாவின் டி.என்.ஏவை மையமாக வைத்து இன்னொரு படம் எடுக்காம இருக்கணும்). தற்காப்புக்கலை, வைத்தியம், அஷ்டமாசித்தியின் ஒரு பகுதி ஆகிய ஆயகலைகளை அறிந்த போதிதர்மன், காஞ்சீபுரத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு, பாலைவனமெல்லாம் கடந்து (போதிதர்மனுக்கு ஜியாகிரபி தெரியாதுபோலும்) காஸ்ட்யூமெல்லாம் மாற்றிக்கொண்டு, சீனாவுக்குப் போகிறார். சில பல உயிர்களைக் காப்பாற்றி, கைம்மாறாக விஷம் கலந்த உணவை வாங்கிச் சாப்பிட்டு பொசுக்குன்னு போயிடறாரு! அவரை ஒரு அரிசிச்சாக்குலே போர்த்தி புதைச்சிடறாங்க! (சீனாவுக்கெல்லாம் உதவி பண்ணினா இதுதான் கதி-ன்னு சொல்றாங்களோ?)

இப்போ, கதை சமகாலத்துக்கு வருது. தமிழிலே சப்-டைட்டில் வந்தாலும், நம்மூரு மாதிரியே இலக்கணசுத்தமாக இங்கிலிபீசு பேசுற சீனாக்காரங்க, டோங்க் லீ-ன்னு ஒரு வில்லனைக் கூப்பிட்டு, ஆபரேஷன் ரெட்-னு ஒரு திட்டம் சொல்றாங்க. அதன்படி டோங்க்லீ இந்தியாவுக்குப் போயி, மரபணு ஆராய்ச்சி பண்ணுற சுபா(ஷ்ருதி ஹாசன்)வைத் தீர்த்துக்கட்டணும்! ஏன்னா, சுபா போதிதர்மனோட வம்சாவளியிலே  அவரோட டி.என்.ஏ எண்பது சொச்சம் சதவிகிதம் பொருந்துற அர்விந்த் (இன்னொரு சூர்யா) எனப்படுகிற சர்க்கஸ் தொழிலாளியோட டி.என்.ஏவை ஆராய்ச்சி பண்ணப்போறாராம். இந்த டோங்க்லீ இந்தியாவுக்கு வந்து, சென்னைப் போலீசையெல்லாம் நோக்குவர்மம் என்ற கலையாலே (ஹிஹிஹிஹி!) போட்டுத்தள்ளி, நாய்பிடிச்சு ஊசிபோட்டு வைரசைப் பரப்புறாரு! (பயோ வார்னு சொல்லுதாக; பயமாத்தான் இருக்கு.) இதுக்கு நடுவுலே ரொமான்ஸா உடான்ஸான்னு புரியாம ஒரு டூயட், ஒரு சோகப்பாட்டு, கொஞ்சமா சுவாரசியம்னு எதையெதையோ கலந்துகொட்டி ஒப்பேத்துறாங்க! கடைசியிலே ஹீரா உடம்பெல்லாம் கேபிளைச் சகட்டுமேனிக்கு சொருகி, அவரைத் தண்ணியிலே ஊறப்போட்டு (இட்லிக்கா அரைக்கப்போறாய்ங்க?) வில்லனோட சண்டைபோட்டு, தமிழர்களுக்குத் தர்ப்பணம்னு, அதாவது அர்ப்பணமுன்னு முடிக்கிறாய்ங்க!

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, போதிதர்மனின் வரலாற்றில் (கொஞ்சம் நியூஸ் ரீல் போலிருந்தாலும்), நல்ல படப்பிடிப்பு காரணமாகவும், சூர்யாவினாலும் ஒன்ற முடிகிறது. அதே போல சாலையில் சூர்யா, ஷ்ருதியை யானையில் ஏற்றிச் செல்கிற காட்சி, சூர்யா ஷ்ருதியிடம் கோபப்படுகிற காட்சி என்று பலரகமாய் ஞாபகம் வைக்கத்தக்க காட்சிகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

மொத்தத்துலே சரியான காரம், மணம், குணம் நிறைந்த மசாலாப்படம் என்று டோங்க்லீ மீது சத்தியமாகச் சொல்லலாம். பிரச்சினை என்னான்னா, பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல், இடைச்செருகல்களாய் வரும் சில வசனங்கள், பாடல்கள், காட்சிகள்! குறிப்பாக, சாவி கொடுத்துத் தமிழுணர்வை உசுப்பேத்த கொஞ்சம் மெனக்கிட்டிருக்காங்க! சுத்தமா ஒட்டலீங்கண்ணா!

சூர்யா ஒருத்தரை நம்பியே படம் எடுத்திருக்காங்கன்னு சொல்லுற அளவுக்கு பெரும்பாலும் அடக்கி ஆனா அழுத்தமா வாசிச்சிருக்காரு! ஷ்ருதிஹாசன் நல்ல அறிமுகம்; கொடுத்த வாய்ப்பை முயன்று பயன்படுத்தியிருக்கிறாரு! தமிழ் பேசறதுலே கவனம் செலுத்தினாப் போதும்! அந்த வில்லன் ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு; ஃபினிஷிங் சரியில்லையே! ஆ..வூன்னா நோக்குவர்மம்னு பார்த்தே சாவடிக்கிறது ஒரு கட்டத்துலே படத்துலே காமெடியில்லாத குறையைத் தீர்த்திருது.

ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப வித்தியாசமா, அவரது முந்தைய படங்களின் டியூன் சிலவற்றோடு இசைப்புயலின் டாக்ஸி டாக்ஸி மெட்டையும் வெட்டியொட்டியிருக்கிறாரு! அதுவும் அவ்வப்போது யாரோ தேள்கொட்டினது போல கூவுகிற சத்தம் பின்னணியில் வரும்போது, காதுக்குள்ளே கொசு நுழைந்தது போலிருக்கிறது. ரவி கே சந்திரன் பாடல்காட்சிகளிலும், போதிதர்மன் காட்சிகளிலும் முத்திரையைப் பதிச்சிருக்கிறாரு! ஸ்டண்டு மாஸ்டர் பீட்டர் ஹெயின் பெரிய ஏமாற்றம்! குறிப்பாக, சூர்யா வில்லனுடன் போடுகிற இறுதிச்சண்டை கொட்டாவி ரகம்! காவல் நிலையத்தில் போலீசைப் பந்தாடுகிறவனோடு, ஆராய்ச்சிக்கூடத்தில் சாதனமாயிருந்த கதாநாயகன் ஆக்கிரோஷமாகச் சண்டைபோடுவதெல்லாம் காதில் பூ! அதே போல சாலையில் கார்களும், ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் பறந்து பறந்து வருகிற காட்சியில் காட்சியமைப்பு, படு அமெச்சூரான கிராபிக்ஸ் காரணமாக சொதப்பலாய் இருக்கிறது. எடிட்டிங், அப்படியொண்ணு இருக்கா? நோ ஐடியா!

சராசரி தமிழ்ப்படமான இதை, எதிர்பார்ப்புகளின்றிப் பார்த்தால், மோசமென்று சொல்லிவிட முடியாது. ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.

திடுதிப்பென்று சர்க்கஸில் வேலைபார்க்கிற சூர்யா, ‘குழந்தை இறந்து பிறந்தாலும் மார்பில் வாளால் கீறுவார்களாம்,என்று புறநானூற்றுப் பாடலின் பொழிப்புரை சொல்வதெல்லாம் பொருத்தமாயில்லை. விட்டால் ‘குழவி இறப்பினும் ஊன்தடிபிறப்பினும் ஆளன்று என்றுவாளின் தப்பார்,என்று செய்யுளையே சொல்ல வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

போதிதர்மனைப் பற்றி தமிழனுக்குத் தெரியவில்லை என்றால், அதைக்  கூகிளில் தேடிக் கண்டுபிடித்த முருகதாசும் ஏளனம் செய்ய என்ன இருக்கிறது? சத்தியமாக கல்வியறிவு குறைந்திருக்கிற ஒரு தேசத்தில் பலருக்கு வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு குற்றமல்லவே? எதற்காக இந்த ‘யுரேகா?

அதே போல மஞ்சள் சாகுபடி செய்யாதவன், மஞ்சளுக்குப் பேட்டன்ட் கேட்கிறான் என்று ஒரு ஆதங்கம்! கூடத்தில் துளசிமாடம் கூட சயன்ஸ் என்று குமுறுகிறார்கள். இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் நடத்தி, அதை அவுட்-ஆஃப்-ஃபேஷன் ஆக்கிய தமிழர்களும் இருக்கிறார்களே? ஈழப்பிரச்சினையையும் விடவில்லை. ‘வீரத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள வித்தியாசம்,என்று சொல்கிறார் ஹீரோ! ( நான் ஈழம் குறித்து எழுதுவதேயில்லை; அதை எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவும் செய்ய இருக்கிற ஆளுக்குப் பஞ்சமில்லை)

தமிழ், தமிழ் என்று கூச்சலிடுகிற இயக்குனர், கதாநாயகனையும் கதாநாயகியையும் ஏற்காட்டிலோ, மாமல்லபுரத்திலோ, குற்றாலத்திலோ டூயட் பாட விடுவதற்குப் பதிலாக எதற்கு வெளிநாடு போனாரோ தெரியவில்லை. இவ்வளவு டமில் பற்று உள்ள கதாநாயகன் கதாநாயகியை அம்பா ஸ்கைவாக் மாலுக்குத் தான் வரச்சொல்கிறார். நம்ம வீட்டு வசந்தபவனுக்கு வரச்சொன்னால் என்னவாம்?  இவ்வளவு ஏன், போதிதர்மர் சீனாவுக்குப் போகுமுன்னர், அதே குங்க்ஃபூவையும், அதே வைத்தியத்தையும் ஏன் இன்னொரு தமிழனுக்குக் கற்றுத்தராமல் போய்விட்டார் தெரியவில்லை. ஆக, எதையோ பிடிக்க நினைத்து எதுவாகவோ முடிந்து விட்டது “ஏழாம் அறிவு”.

அப்புறம், இந்த டி.என்.ஏ.குறித்த பூச்சூடல்கள்! ஒரு வாதத்துக்கு போதிதர்மருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவரது வழிவழிவந்தவர்களும் குரங்குப்பெடல் போடாமல் நேரடியாக சைக்கிள் ஓட்டி விடுவார்களா என்ன? ஏதோ ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் படுக்கப்போட்டு, வயர்களைச் சொருகினால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்து குங்க்ஃபூ சண்டைபோடத்தான் முடியுமா? (முடியலே....!) சித்தர்கள் பற்றியெல்லாம் சொல்கிறார்கள். சித்தர்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே அபூர்வமான சக்திகளைப் பெற்றார்கள். அவர்களது வாரிசுகள் என்று சொல்லி எழும்பூர் கென்னத் சந்தில் லாட்ஜில் தங்கி கைரேகை ஜோசியம் பார்ப்பவர்களெல்லாம் சித்தராகி விட முடியுமா?

ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு நாட்டுவைத்தியன் ஒரு குறிப்பிட்ட மருந்தைப்பற்றி தன் சுவடியில் “இருகுரங்கின் கையெடுத்துப் புடம்போடு,என்று எழுதிவைத்து விட்டுச் செத்துப்போனானாம். கொஞ்ச நாள் கழித்து, சொர்க்கத்தில் அவனை சந்தித்த நண்பர், “நீ எழுதிய சுவடியின்படி உன் மகன் கொடுத்த மருந்தால்தான் நான் செத்துப்போய் சொர்க்கத்துக்கு வந்தேன்,என்று சொன்னானாம். நடந்தது என்னவென்றால், இறந்துபோன வைத்தியனின் மகன் ஒரு குரங்கின் இரண்டு கைகளை வெட்டி அதைப் புடம்போட்டு மருந்தாய்க் கொடுத்திருக்கிறான். ஆனால், தமிழில் குரங்குக்கு ‘முசுஎன்று ஒரு பெயருண்டு. வைத்தியன் சொல்ல நினைத்த இருகுரங்கு முசு-முசு-கை அதாவது முசுமுசுகை என்ற மூலிகை! இதைத் தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்கள்.

ஏழாம் அறிவு படமும் ஏறக்குறைய அப்படியே!

படம்: தட்ஸ்டமில் (அ) தட்ஸ்தமிழ்

செந்தூர்முருகன் சேவடி போற்றி!


தவமுனிவன் காசிபனை மாயையென்றும் பேரரக்கி
      தடமுழலச் செய்தனளே மையலினால்-முன்கிடைத்த
சிவனருளும் சிறுமதியால் சிதைவுறவே ஈன்றனரே
      சிங்கமுக(ன்) ஆனைமுக(ன்) சூரனெனும் மூவரையே
புவனமுதல அமரருறை உலகனைத்தும் சிறையுறவும்
      புலம்பினரே தேவரெலாம் கயிலையுறை ஈசனிடம்
அவனிதனில் அறநெறிகள் நிலைபெறவே முக்கண்ணன்
      அக்கினியாய் அருளினனே ஆறுமுகக் கடவுளையே!
                                                      ( 1 )
மும்மலமாய் மறைகூறும் தீயகுணம் ஒவ்வொன்றும்
      முழுவுருவம் பெற்றனவே மூவரிடம்-சூரனவன்
அம்புவியோர் போல்முகமும் ஆணவமும் கொண்டவனாம்
      அவனிளவல் தாரகனோ மாயையெனும் மருள்கொண்டான்
சிம்மமதை ஒத்தமுகம் கொண்டவனாம் சிங்கமுகன்
      செம்மைதனைச் சேராதே கன்மமெனும் வினைகொண்டான்
செம்மலர்கள் ஆறினிலே செஞ்சுடராய் உதித்தகுகன்
      செருக்குற்ற மூவர்தமை அழித்தற்கே உருக்கொண்டான்

                                                      ( 2 )
பொய்கைதனிற் பூத்தமலர் போன்றதிருக் குழந்தைகளின்
      பொன்னுடல்கள் ஆறினையும் ஆதிசிவன் அணைத்ததுவும்
மெய்யவரைக் காப்பவளாம் மேருவுறை மலைமகளும்
      மேதினியில் அறம்தழைக்க வேலொன்றை அளித்திட்டாள்
உய்யுதற்கே உலகுதொழும் உமையவளின் கழல்மணிகள்
      உதிர்கையிலே இலச்சத்தி ஒன்பதிமர் ஆயினரே!
செய்யரிய செயும்வீர பாகுமுதல் ஆனபிறர்
      செவ்வேளின் போர்ப்படையாய்ச் சேர்ந்தனரே வேலனுடன்!

                                                      ( 3 )
திருமுருகன் பெரும்படையைக் கிரவுஞ்சம் மலைமறிக்க
      திரண்டுவந்த படைமயங்கி அசுரனிடம் வீழ்ந்துவிட
தருணமிது எனவுணர்ந்தே தாய்கொடுத்த வேலெறிந்தே
      தடைவிலக்கித் தாரகனின் உடல்பிளந்தான் வடிவேலன்
தருமநெறி வெல்லுதற்காய் தகப்பனுக்குத் திருக்கோவில்
      தாரணியில் நிறுவியபின் தகைமையுடன் பூசையிட்டான்
கருணையுடன் சிவனீந்த பாசுபதம் தனைவாங்கி
      குருபகவன் ஆசியுடன் குமரன்படை ஏகியதே!

                                                      ( 4 )
மாதுவொரு பாகமுறை ஈசனருள் மைந்தனவன்
      மாயைமகன் சூரனிடம் நேயமொடு சொன்னபல
தூதுமொழி தான்முறிய தூதுவரைத் துன்புறவே
      தீமைபல செய்தனரே சூரபதுமன் படைகள்
தீதுடைய சூரனுறைத் தீவுதனை நோக்கிபெரும்
      தேவர்படை ஏகியதே தெய்வமகன் முருகனுடன்
ஓதுமறை யாவுமே இயற்று(ம்) அயன் மாலுடனே
      ஓருமையுடன் குமரனவன் உறுதுணையாய் வந்தனரே!

                                                      ( 5 )
பதின்வயிற்றுப் பாலகனாய் படையெழுப்பிக் கிளம்பியதோர்
      பரமசிவன் மைந்தனிடம் மாலவனும் நான்முகனும்
மதிமயங்கி மன்னுயிர்க்கே தீங்கிழைத்த சூரனவன்
      மண்மிதித்தால் மாண்பில்லை எனவுரைக்க-தேவதச்சன்
அதிவிரைவாய் எல்லைதனில் அழகுறவே நிறுவியதோர்
      அறுமுகனின் பாசறையில் அமரர்கணம் தொழுதனரே!
கதிர்காமம் எனும்பேரில் கந்தனவன் திருவொளியைக்
      காசினியோர் இன்றளவும் கண்டுதொழும் திருத்தலமே!

                                                      ( 6 )
சேற்றலர்ந்த தாமரைபோல் செறிவுடையோன் பானுகோபன்
      செவ்வேளின் புகழறிந்தே சூரனுக்கு அறிவுரைத்தான்
தேற்றுதற்கோர் வழியுரைத்த மைந்தனிடம் மிகச்சினந்தே
      தெளிவடைதல் விழையாமல் சூரன்மிகச் சீற்றமுற்றான்
மாற்றுதற்கே வழியின்றி மகன்புகுந்தான் வெஞ்சமரில்
      மாயைகளால் தேவர்கணம் மனங்கலங்கப் போரிட்டான்
ஊற்றெடுத்த உம்பர்களின் உதிரமதைக் கண்டகுகன்
      உற்றதொரு தருணமதில் வேல்தொடுத்து மாய்த்தொழித்தான்

                                                      ( 7 )
சிங்கமுகன் சிவனடியைச் சிந்தித்தே இருப்பவனாம்
      சிறுவனல்ல சிவன்மகனே எனவறிந்தே சூரனுக்கு
பங்கமறப் பரிவுடனேப் பலகருத்தை எடுத்துரைத்தும்
      பாராளும் சூரனுக்கோ பகையேதும் குறையவில்லை
இங்கிவர்க்குத் தான்செய்யும் நன்றியெனப் போர்க்களத்தில்
      இன்முகமாய்த் தான்புகுந்தான் தம்பியெனும் சிங்கமுகன்
அங்கமதில் அறுமுகனின் ஆழ்கணைகள் தாங்கியவன்
      அமரநிலை தானெய்தி உடம்பொழிந்தான் போர்க்களத்தில்!

                                                      ( 8 )
அண்டம்பல தாண்டுகிற ஆற்றலுடை சூரனவன்
      அறவழிகள் பேணாத அசுரகுல தீரனவன்
கண்டமதில் பாம்பணியும் காளகற்றும் ஈசனையே
      கருத்தாகத் தொழுதுபல வரம்பெற்ற மாயைமகன்
கொண்டசினம் குறையாமல் குமரனுடன் போர்புரிய
      கொடும்பகையில் அறம்விலகி களமதனில் புகுந்தனனே
வெண்டிரையலைகளென வீறுடன் விடுத்தகணை
      வேலவனின் தோள்வலிமுன் விரயமுறக் கண்டனனே!

                                                      ( 9 )
வானவரின் சிறைநீக்கி வாழும்வழி தேடிடுக!
      வஞ்சக மனந்திருத்தி ஈசனருள் நாடிடுக
ஈனமுறப் போர்முனையில் மாய்வதொரு கேடெனவும்
      இன்னல்தரும் ஆணவமே காலனுறை வீடெனவும்
கோனவனாம் சூரனிடம் குருபரன் உரைத்தபின்னும்
      கொடுவுருவன் சூரனவன் கேளாதிருந்திடவே
ஆனவரை அமருலகை ஆள்வதை விரும்பியதால்
      ஆறுமுகன் அருள்மொழியைச் சூரனவன் கேட்கிலனே!

                                                      ( 10 )
ஆறுமுகன் ஈசன்மகன் எனவறிந்தும் அகந்தையினால்
      அமரர்கணம் தொழுதேத்தும் அமலவனை வென்றிடவே
மாறும்பல உருவெடுத்தான் மாயைமகன் முருகனுடன்
      மண்ணிருந்தும் விண்ணிருந்தும் மந்திரக்கணை தொடுத்தான்
வீறுமிகக் கொண்டெழுந்தான் வெற்றிவடிவேலவனும்
      விண்ணளவும் உருக்காட்டி சூரனுக்குச் சுளுரைத்தான்
ஊறுதனை உணர்ந்தவனாய் உறுகடலின் உட்புகுந்தே
      ஒளிந்துகொண்டான் அசுரனவன் மாமரமாய் உருவெடுத்தே
                                                      ( 11 )
அன்னையவள் அருளோடு அளித்திட்ட வேல்பாய்ச்சி
      அசுரனுடல் பிளந்திட்டான் ஆறுமுகனான குகன்
பின்னமுறு மாமரத்தின் ஓர்பாதி மயிலாக
      பிரிதுவரு மறுபாகம் சேவற்கொடி தானாக
மன்னுலகில் நெறிகாக்க மாயையென்றும் இடர்நீக்க
      மாலவனும் நான்முகனும் மலர்மாரி பொழிந்தனரே
இன்னல்தனை போக்கிபெரும் இம்மையுடன் மறுமையெனும்
      முன்வினையும் பின்வினையும் முருகனருள் நீக்கிடுமே!
                                                      ( 12 )

Saturday, October 29, 2011

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
 கந்தனே உனை மறவேன்,

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.

திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

ஒளி விளக்கு,படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
ண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.

மரபு வழியில் ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.

Thursday, October 27, 2011

ரா-ஒன்! வேணாம், வலிக்குது!

மு.கு: அஞ்சலி பக்தர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்!
நிறைய எதிர்பார்ப்புகளுடன் சினிமாவுக்குப் போகிற வழக்கத்தை நிறுத்தி பல ஆண்டுகளாகின்றன. நல்ல வேளை, ஹாலிவுட் படங்களை அதிகம் பார்க்கிற வழக்கமில்லை என்பதால், சில ஈயடிச்சான் காப்பிகளைக்கூட புதிதாய்ப் பார்ப்பதுபோல ரசிக்க முடிகிறது. இருந்தாலும், திகட்டத் திகட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்படுகிற படங்கள் பிரமிப்புக்குப் பதிலாக சலிப்பூட்டுவதுமுண்டு என்பதற்கு ஒரு நல்ல (அ) மோசமான உதாரணம் ரா-ஒன்!

இந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ’ரா-ஒன்’என்று சொல்கிறார்கள். கொஞ்சம் மூளையையும் செலவழித்திருக்கலாமோ என்ற கேள்வி இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்து விட்டு வெளியேறுகிறபோது எழுந்தது. ஷாருக் கான் முழுக்க முழுக்க தனது ஸ்டார் வேல்யூவையும், கம்பியூட்டர் கிராஃபிக்ஸையும் மட்டுமே நம்பி ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார் போலிருக்கிறது. ’அவதார்’ படத்தைக் காட்டிலும் அதிக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கையாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நான் அவதார் பார்க்காததாலோ என்னமோ, ரா-ஒன் படத்தின் சில காட்சிகளில் திறந்த வாய் மூடாமல் பிரமித்தது உண்மைதான். அப்படியெல்லாம் ரசிகர்களை பிரமிப்பிலேயே உட்கார்த்தி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல திருஷ்டி கழிப்பது போலப் பல விஷயங்கள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

படத்தின் சூப்பர் ஹீரோ ஜி-ஒன் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு வருகிறார். இயக்குனர் அனுபவ் சின்ஹா படம் ஆரம்பித்து இரண்டு மணி நாற்பது நிமிடங்கள் கழித்தும் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. கதாநாயகன் சேகர் தென்னிந்தியன் என்பதைக் காட்ட, அவனை தயிர்சாதம் சாப்பிட வைத்து, அடிக்கொரு தடவை ’ஐயோ’ என்று சொல்ல வைத்து, தங்களது லாஜிக்-தாகத்தைக் காட்டியிருக்கிறார்கள். வில்லனுக்கு(அர்ஜுன் ராம்பால்) ’ரா-ஒன்’ என்றும் ஹீரோவுக்கு(ஷாருக்கான்) ஜீ-ஒன் என்றும் பெயரிட்டவர்கள் கதாநாயகிக்குக் கூட கே-ஒன் என்று பெயரிட்டிருக்கலாம். (K என்றால் என்னவென்று சொல்லி பென்ஷன் வாங்குகிற பெண்மணிகளின் கோபத்தைக் கிளற நான் தயாராயில்லை.)

கைநிறைய கழுதை விட்டை என்பது போல, சிறப்புத் தோற்றத்தில் சஞ்சய் தத், ப்ரியங்கா சோப்ரா மற்றும் நம்ம சூப்பர் ஸ்டார் வருகிறார்.(ரஜினியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது.) இது தவிர பிரமிப்பூட்டும் இரண்டு சண்டைக்காட்சிகள் மற்றும் ஒரு சம்மக் சம்மக் சலோ தவிர படத்தோடு ஒன்றுகிற மாதிரி எதையும் யாரும் முயற்சித்ததாய்த் தெரியவில்லை. முதல்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆபாச வசனம் வேறு!

புரூஸ் லீ, ஜெட் லீ போன்று பெண் கேரக்டர்களுக்கு இஸ்கீ லீ, உஸ்கீ லீ, சப்கீ லீ என்று பெயரிட்டிருப்பதை வட இந்தியாவில் பெண்கள் முகம் சுளிக்காமல் பார்ப்பார்களா என்பது கேள்விக்குறி! அதே போல ஒரு கஸ்டம் அதிகாரி ஜீ-ஒன்னை அருவருக்கத்தக்க வகையில் நோட்டமிடுவது போலக் காட்டியிருப்பதெல்லாம் கண்றாவியான கற்பனை! இப்படியொரு விவஸ்தை கெட்ட திரைக்கதையை நான்கு புத்திசாலிகள் எழுதியிருக்கிறார்களாம். Too many cooks spoil the sprout!  

அர்ஜுன் ராம்பால் (ரா-ஒன்) மற்றும் அர்மான் (ஷாருக்-கரீனா தம்பதியின் மகன்) ஆகிய இருவரும் ஓரளவு படத்தை முழுமையாகத் தொய்ந்து விடாமல் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள் என்றாலும், ஒரு சொதப்பல் படத்தை எவ்வளவுதான் தேற்ற முடியும்?

எந்திரன் படத்தோடு ரா-ஒன் படத்தை ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சிட்டி, பிறர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவதை முதலில் டிவியை உடைப்பது, கொச்சி ஹனீபாவின் கையை வெட்டுவது என்று முதலில் காண்பித்து, பிறகு டாக்டர் வசீகரனையே கத்தியால் குத்த வந்து திகிலூட்டுவது என்று அழகாய் பில்ட்-அப் செய்திருந்தார்கள். ஆனால், இதில் "artificial intelligence' என்று இரண்டொரு முறை சொல்லி பார்வையாளர்களை "பொத்திக்கிட்டு போ’ என்று மறைமுகமாக சொல்லியிருப்பது போலிருக்கிறது. ஒரு சயன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் திரைக்கதைக்கு எந்த அழகில் உழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சாம்பிள்!

கதை என்று பார்த்தால், எனக்கு பாக்யராஜ்-நக்மா நடித்த ஒரு படத்தின் கருவே ஞாபகத்துக்கு வருகிறது. வீடியோ கேம் விற்பன்னரான சேகர் சுப்ரமணியம் (ஷாருக் கான்) மகன் பிரதீக் (அர்மான் வர்மா) ஆசைப்பட்டபடி, ஒரு ரா-ஒன் என்ற சூப்பர்-வில்லனை(அர்ஜுன் ராம்பால்) உருவாக்க, சூப்பர்-வில்லன் அக்கிரமம் செய்யத்தொடங்கியதும், ஜி-ஒன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை! கதாநாயகி சோனியா (கரீனா கபூர்) எல்லாக் கவலைக்கு மத்தியிலும் மிகக் கவர்ச்சியாய் உடையணிந்து வந்து கடுப்பேற்றுகிறார்.

ஷாருக் கானின் "ஓம் சாந்தி ஓம்" படத்தில் இரண்டாவது தீபிகா படுகோனின் அறிமுகக் காட்சி இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அதே போல, பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக ஷாருக் நம்பர்.ஒன் சொன்னதும், கிரண் கேர் எழுபதுகளின் மெலோடிராமாக்களை நினைவூட்டும் வகையில் உரத்த குரலில் அழும்போது திரையரங்கத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள். அது போன்ற நகைச்சுவை கூட ரா-ஒன் படத்தில் இல்லை. போதாக்குறைக்கு ஜி.ஒன் ஷாருக்கின் முகபாவம் அவரது படுசீரியஸ் படமான ’மை நேம் இஸ் கான்’ படத்தில் வந்த முகபாவத்தை மிகவும் நினைவூட்டுகிறது.

ஹிருதிக் ரோஷன்-ப்ரியங்கா சோப்ரா நடித்த ’கிருஷ்ஷ்’ படத்தைக் காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ’எந்திரன்’ படத்தோடு ஒப்பிட்டால் ரா-ஒன்னைப் பார்ப்பதற்கு ராவாக அடித்து விட்டு இரண்டு மணி நாற்பது நிமிடத்தை டாஸ்மாக்கில் கழிப்பது நல்லது என்று தான் சொல்ல வேண்டும்.

"ரா-ஒன்" - தண்டச்செலவு

பி.கு: அஞ்சலி பக்தனான என் நண்பர் சந்துரு சொன்னது: எங்கேயும் எப்போதும் இன்னொருவாட்டி பார்க்கலாண்டா!