Saturday, January 30, 2016

பேய்மையே வெல்லும்




பேய்மையே வெல்லும்
       அப்பளம் பொரிகிற வாசனை ஆலந்தூரிலிருந்து புறப்பட்ட மெட்ரொ ரயில்போல சமையலறையிலிருந்து கிளம்பி, கிட்டாமணியின் மூக்கை வந்து அடைந்தது. மனைவி பாலாமணியின் ஆணைக்கிணங்க, அதாவது ஆசைக்கிணங்க அவளது சொந்த ஊருக்கு வந்ததிலிருந்து கிட்டாமணி காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு, மச்சான் குப்பண்ணாவின் மரணக்கடிகளிலிருந்து தப்பித்து வந்து கொண்டிருந்தார். ஆனால், எண்ணைச்சட்டி கொதிக்கிற வாசனைவந்தாலே நாக்கு நாகப்பட்டினமாகி வெள்ளத்தில் மூழ்குவது, வாடிக்கையாகி விட்டிருந்தது. ’உளுந்து அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல், வெங்காய சாம்பார், பூண்டு ரசம், வெள்ளரிக்காய்ப்பச்சடி…’ என்று கிட்டாமணி யோசித்துக் கொண்டிருந்தபோதே, குப்பண்ணா உலுக்கி எழுப்பினார். 
       மாப்பிள்ளே! என்ன பகல்கனவு காணுறீங்களா?”
       உங்கக்காவைக் கட்டிக்கிட்டதுலேருந்து ராத்திரியிலேயே கனவு வர்றதில்லை; இதுலே பகல்கனவு வேறேயா?’ என்று எரிச்சலுடன் கண்ணைத் திறந்த கிட்டாமணி, கார்பன் மொபைல்போனில் காண்டாமிருகம் எடுத்த செல்ஃபிபோல எதிரே தெரிந்த குப்பண்ணாவின் முகத்தைப் பார்த்து ஒரு வினாடி பயந்துவிட்டார்.
       சேச்சே!” இயர்போனைக் கழற்றினார் கிட்டாமணி. ”பாட்டுக் கேட்டிட்டிருந்தேன்.”
       எனக்குக்கூட நிறைய பாட்டு டவுண்லோட் பண்ணிக் கேட்கணும்னு ஆசைதான். அதுக்கு ஏதோ மெமரி கார்டு வேணும்னு கடைக்காரன் சொல்றான்.” பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் குப்பண்ணா. “அடுத்தவாட்டி போனா கேட்கணும். ஆதார்கார்டு இருந்தா டவுண்லோட் பண்ண முடியுமான்னு.”
       குப்பண்ணாவுக்கும் பொது அறிவுக்கும் இருக்கிற தொடர்பு, புகாரி ஓட்டலுக்கும் புளிசாதத்துக்கும் உள்ள தொடர்பு என்பதை கிட்டாமணி அறிந்திருந்ததால், அவருக்குச் சிரிப்பு வரவில்லை.
       உங்களுக்கும் செல்போனுக்கும்தான் ராசியே இல்லையே!” கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கிட்டாமணி மச்சானை துச்சானாக்கினார்.
       கரெக்டுதான்!” சைலன்ஸர் இல்லாத ஷேர்-ஆட்டோபோலச் சத்தமிட்டுச் சிரித்தார் குப்பண்ணா. “போனமாசம் ஒரு மடையன் என்னோட புதுபோனைத் திருட்டிட்டான் தெரியுமா?”
       என்ன மச்சான்? திருடனைப் போயி மடையன்னு சொல்றீங்க?”
       பின்னே என்ன? போனை மட்டும் திருடிட்டுப் போயி என்ன பண்ணுவான்? சார்ஜர் என்கிட்டே தானே இருக்கு?”
       குப்பண்ணாவின் அறிவுத்திறனைப் பார்த்து, கிட்டாமணியின் உடம்பெல்லாம் புல்லரித்து, எறும்பு கடித்ததுபோல ஏகத்துக்கும் தடிப்புகளே ஏற்பட்டுவிட்டன.        
ஆனாலும் உங்களுக்கு இத்தனை அஜாக்கிரதை ஆகாது மச்சான்,” குப்பண்ணாவின் வாயைக் கிண்டினால், மேலும் சில உப்புமாக்கதைகள் கிடைக்குமென்று சீண்டினார் கிட்டாமணி.
       ஆமாம்! போனவாட்டி நீங்க வந்திட்டுப் போன அன்னிக்கு என்னோட பர்ஸ் காணாமப் போயிடுச்சு. அதுலே ரெண்டாயிரம் ரூபாய் இருந்திச்சு.”
       இல்லையே! வெறும் ஆயிரத்தி எண்ணூறுதானே இருந்திச்சு?” என்று அவசரப்பட்டுச் சொன்ன கிட்டாமணி சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
       அப்ப இருநூறு ரூபாய் லாபமா? சபாஷ்!” சிரித்தார் குப்பண்ணா. “என் வருத்தமெல்லாம், அந்தத் திருடனை இன்னும் கண்டுபிடிக்கவே முடியலை மாப்பிள்ளை.”
       கண்டிப்பா கண்டுபிடிச்சிருவீங்க,” நக்கலாய்ச் சிரித்தார் கிட்டாமணி. “பாலாமணி தம்பியா கொக்கா?”
       இன்னும் எங்க அக்காவுக்கு பயப்படறீங்களா மாப்பிள்ளை?” குப்பண்ணா சிரித்தார்.
       யாரு சொன்னா? நான் சொன்னதுதான் வீட்டுலே நடக்கும் தெரியுமா? தேங்காய் நார் வேணும்னா தேங்காய் நாரை உடனே கொண்டாந்து கொடுப்பா உங்கக்கா.”
       எதுக்குத் தேங்காய் நார்?”
       அதாலே பாத்திரம் தேய்ச்சாத்தான் நல்லாப் பளிச்சுன்னு இருக்கும். பிளாஸ்டிக் பிரஷ் நான் யூஸ் பண்ண மாட்டேன்.”
       எங்கக்கா ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கா!” என்று சொன்ன குப்பண்ணாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு ஆனந்தக்கண்ணீர் இறங்கி, கன்னத்தைத் தாண்டுமுன்பே இடைவேளைக்கு முன்பே காணாமல்போகும் தமிழ்ப்படக் கதைபோல மாயமானது.
       மாப்பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம்.”
       என்னது, நீங்களும் தேங்காய் நார் தானா?”
       இல்லை மாப்பிள்ளை!” குப்பண்ணா குரலைத் தாழ்த்திக் கொண்டார். “கொஞ்ச நாளா ஊருலே புதுசா ஒரு பேய் நடமாடிட்டிருக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க.”
       என்னை சந்தேகப்படறீங்களா? சத்தியமா நான் அந்தப் பேய் இல்லை.”
       ஜோக் அடிக்காதீங்க மாப்பிள்ளை. உங்களைப் பேய்ன்னு சொன்னா பேயே தூக்குப்போட்டு செத்துப்போயிரும். நான் சொல்ல வந்தது என்னான்னா, ராத்திரி திருவிழா பார்க்கப்போனா, தனியாத் திரும்பி வராதீங்க. வழியிலே முத்தம்மாவோட பேய் வழிமறிக்குதாம்.”
       பொம்பளைப் பேயா?” கிட்டாமணி உற்சாகமானார். “பார்க்க ஹன்ஸிகா, த்ரிஷா மாதிரி இருக்குமா?”
       முத்தம்மா சாகும்போது அவளுக்குத் தொண்ணூறு வயசு.
       வயசான காலத்துலே செத்தப்புறம்கூட ரெஸ்ட் எடுக்காம எதுக்குப் பேயா அலையுது இந்தப் பாட்டி?” கிட்டாமணிக்கு எரிச்சல் மிகுந்தது. “எதுக்கு வம்பு? நான் பாட்டுக்கு இன்னிக்கு ராத்திரி படுத்து நிம்மதியாத் தூங்கிடறேன்.”
       மாப்பிள்ளை! இன்னிக்கு ராத்திரி கண்ணழகி காந்தாவோட கரகாட்டம் நடக்கப்போகுது. நீங்க திருவிழாவுக்கு வர்றீங்களோ, கோவிலுக்குப் போறீங்களோ இல்லையோ, ஆனா, காந்தாவோட ஆட்டத்தைப் பார்க்காம இருந்திடாதீங்க. அப்புறம் நீங்களும் பேயா அலைவீங்க.”
       குப்பண்ணா சொன்னதைக் கேட்டதும், கிட்டாமணியின் காதில் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்கேட்டமாங்குயிலே பூங்குயிலே சேதியொண்ணு கேளுபாடல் எதிரொலிக்க, கண்ணழகி காந்தாவின் ஆட்டத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தபடி, முஷ்டியை இறுக்கியவாறு, தீர்மானமாக ஓங்கித் தொடையில் குத்தினார்.
       ஐயோ!” குப்பண்ணா அலறினார். “எதுக்கு மாப்பிள்ளை என் தொடையிலே குத்துறீங்க?”
       ஸாரி, உங்க தொடையா? குறி தவறிடுச்சு,” என்று சமாளித்த கிட்டாமணி, “நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாமா?”
       அது சரிப்பட்டு வராது,” குப்பண்ணா வலிதாளாமல் தொடையை வருடியவாறு கூறினார்.
       அதுக்கு ஏன் என் தொடையைத் தடவறீங்க?”
       ! உங்க தொடையா? வலியிலே குழம்பிட்டேன்.” என்று அரற்றிய குப்பண்ணா, “நமக்கு நிறைய கன்ஃப்யூஷன் இருக்கு. அதுனால, நாம ரெண்டு பேரும் வேறே வேறே நேரத்துல, வேற வேற வழியிலே போய் வேறே வேறே இடத்துல இருந்து ஆட்டத்தைப் பார்ப்போம்.”
       வேறே வேறே ஆட்டத்தைப் பார்த்து ஏமாந்திடாம இருக்கணுமே?” காந்தாவின் ஆட்டத்தைப் பார்க்கிற ஆவலால் கிட்டாமணி கண்கொட்டா மணியாகியிருந்தார்.
       இன்னிக்கு ஒரே புரோகிராம் காந்தா கரகாட்டம்தான்,” என்று காய்ந்துகிடந்த கிட்டாமணியின் வயிற்றில் கப்புச்சீனோ காப்பி வார்த்தார் குப்பண்ணா. “அப்போ, நீங்க பயப்படாம தனியாப் போயிட்டுத் தனியா வந்திடுவீங்கதானே?”
       என் துணிச்சலைப் பத்தி உங்கக்காகிட்டே கேளுங்க,” மார்தட்டினார் கிட்டாமணி, “ஒருவாட்டி எங்க ஏரியாவுலே ஒரு வீட்டுலே தீப்புடிச்சிருச்சு. நான் துணிச்சலா உள்ளேபோயி அங்கேயிருந்த நாலஞ்சு பேரை வெளியே தூக்கிட்டே வந்திட்டேன். தெரியுமா?”
       அப்படியா? எந்திரன் ரஜினி மாதிரியில்லே பண்ணியிருக்கீங்க?”
       ஹும்! எந்திரன் ரஜினி மாதிரி ஜோடி அமையாட்டாலும் இதையாவது பண்ணுவோமென்னுதான்...
       சூப்பர் மாப்பிள்ளை! அப்ப நாம ரெண்டு பேரும் தனித்தனியாப் போகலாம்.”
எப்படியும் மாப்பிள்ளை பேய்ப்பீதியிலே ராத்திரி வெளியே போகமாட்டார்.’ குப்பண்ணா மனதுக்குள் வில்லன்சிரிப்புச் சிரித்தபடி கிளம்பினார். ‘இன்னிக்கு திருவிழா பார்க்கப்போறேன்னு கிளம்பி, டாஸ்மாக் மூடுறவரைக்கும் ஒரு கை பார்த்திட வேண்டியதுதான்.’
       குப்பண்ணா கிளம்பியதும், மீண்டும் இயர்போனைக் காதில் மாட்டிய கிட்டாமணியின் காதுகளில், ‘ஆகாயத்தில் தொட்டில்கட்டி மங்கை உன்னைக் கண்டாள்என்ற ஆவிப்பாடல் விழவே, அவருக்குகுப்பென்று வியர்த்தது.
       சேச்சே! தொண்ணூறு வயசுப்பாட்டி பேசவே கஷ்டப்படும்; வாணி ஜெயராம் வாய்ஸிலே பாடவா போகுது? இதுக்குப் பயந்து திருவிழாவுக்குப் போகாம இருந்தா, மச்சான் நம்மளைத் தொடைநடுங்கின்னு நினைச்சிருவாரு. கண்டிப்பா போயே தீரணும்என்று முடிவெடுத்த கிட்டாமணி, மீண்டும் முஷ்டியை இறுக்கி, தீர்மானமாக ஓங்கித் தொடையில் குத்தியதும்தான், குப்பண்ணா அலறியதில் ஆச்சரியமில்லை என்று புரிந்தது.
ஆனால், இதற்கு பாலாமணி சம்மதிப்பாளா?
       ”என்னது, ராத்திரியிலே தனியா போறீங்களா?” பாலாமணி ஓலமணியாகி அலறினாள். “முத்தம்மாவோட பேய் உலாத்திட்டிருக்குன்னு ஊரே கதிகலங்கிக் கிடக்குது. நீங்க தனியாப் போயி முத்தம்மா கண்ணுலே பட்டா என்னாகும்?”
       ”அது பேய்தானே? அதுக்கு ஒண்ணும் ஆகாது!” என்றார் கிட்டாமணி.
       ”உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா?” தமிழ்சீரியல் அக்காபோல பாலாமணியின் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் பெருகியது. “உங்களை நம்பித்தான், ரேஷன்லே அஞ்சு கிலோ கோதுமை வாங்கி வைச்சிட்டு வந்திருக்கேன். ஊருலே எவ்வளவு வேலையிருக்கு?”
       என் வீரத்தைப் பத்தி சந்தேகப்படறியா பாலாமணி?” கிட்டாமணி இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினார். “உனக்கு ஞாபகமிருக்கா, நம்ம வீட்டுப் பக்கத்துலே தீப்பிடிச்சுதே, அன்னிக்கு நான் ஒருத்தன் உள்ளே போயி நாலைஞ்சு பேரை தூக்கிட்டு வந்து வெளியிலே போட்டேனே? மறந்திட்டியா?”
       எல்லாம் ஞாபகமிருக்கு,” அலுப்புடன் பதிலளித்தாள் பாலாமணி. “அன்னிக்கு எல்லாருமாச் சேர்ந்து உங்களைப் போட்டு அடிச்சுத் துவைச்சாங்களே அதுவும் ஞாபகமிருக்கு.”
       அதுக்கென்ன பண்றது? நான் வெளியே இழுத்துக் கொண்டுவந்து போட்டது ஃபயர் சர்வீஸ் காரங்களைன்னு எனக்கு எப்படித் தெரியும்?”
       ”வரவர பொண்டாட்டியையே எதிர்த்துப் பேச ஆரம்பிச்சீட்டீங்க? எப்பலேருந்து இந்தக் கெட்ட பழக்கம்?”
       ”பாலாமணி! இந்த ஒரே ஒருவாட்டி, என்னை என் இஷ்டப்படி விடேன்,” கிட்டாமணி கெஞ்சினார்.
       பாலாமணி யோசித்தாள்.
”அப்படியா? காதைக்கொடுங்க!”
“ரொம்ப முறுக்கிடாதே பாலாமணி! புதுசா இயர்போன் வாங்கியிருக்கேன்; பாட்டுக் கேட்க முடியாது!”
”ஐயோ! அதுக்கில்லை. தப்பித்தவறி நீங்க பேயைப் பார்த்தா எப்படித் தப்பிக்கணும்னு காதுலே சொல்றேன். கேட்டுக்குங்க!”
கிட்டாமணியின் காதில், பாலாமணி எதையோ சொல்ல, அதைக் கேட்ட கிட்டாமணியின் முகம் கடைவாசலில் தண்ணீர் தெளித்துவைத்த காலிஃப்ளவர்போல மலர்ந்தது.
”புரிஞ்சுதா?” பாலாமணி கேட்டாள். “பேயைப் பார்த்தா இப்படிப் பண்ணுங்க. ஓடியே போயிடும்.”
”அதெப்படி பேயோட சைக்காலஜியை எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றே?” வியந்தார் கிட்டாமணி. “அதுசரி, இதை ஏன் ரகசியமாச் சொன்னே?”
”சத்தம்போட்டுச் சொன்னா பேய் காதுலே விழுந்திராது?”
பாலாமணியின் புத்திகூர்மையை அறிந்து கிட்டாமணியின் இதயம் உடுப்பி ஹோட்டல் பூரிபோல உப்பிப் பூரித்தது.
அன்று இரவு, பாலாமணி சொன்னதுபோல, காந்தாவின் கரகாட்டத்தைக் காணக் கிளம்பினார் கிட்டாமணி. போனபிறகுதான் தெரிந்தது……
”காந்தாவுக்குப் பதிலா யாரோ சாந்தாவைக் கூட்டிட்டு வந்து ஏமாத்திப்புட்டாய்ங்க. கூப்பிடுங்கய்யா விழாக்குழுவை. இன்னிக்கு இங்கே ரெண்டு மூணு தலை உருளப்போவுது.”
ஊர்மக்கள் கூடிக்கூடி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த கிட்டாமணிக்கு, முத்தம்மாவைப் பார்க்காமலேயே, உடம்பு அரசுப்பேருந்தின் கடைசி இருக்கைபோல ஆட்டம் கண்டது.  நிலவரம் கலவரமாவதற்குள் நடையைக் கட்டாவிட்டால், முத்தம்மாவின் சிம்பொனியில் தானும் கம்பனி கொடுக்க நேரிடும் என்று அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்.
கிட்டாமணியின் மனமென்ற குட்டையில், மச்சான் முத்தண்ணா காந்தாவென்ற கல்லையெறிந்ததால், அதிலிருந்த தவக்களைகள் தாவித் தாவித் துரத்த ஆரம்பித்திருந்தன. சாவதற்குள் ஒரு உருப்படியான மூஞ்சியைப் பார்க்க வேண்டுமென்ற தனது ஆசையும் நிறைவேறாமல் போன கவலையில் கிட்டாமணியின் கண்களிலிருந்து, மாநகராட்சி டேங்கர் போல தண்ணீர் மானாவாரியாகக் கொட்ட ஆரம்பித்தது.
அப்போது….!
தூரத்தில், இருட்டில் சிவப்புப்புடவை அணிந்தவாறு ஒரு உருவம் வருவதைப் பார்த்த கிட்டாமணியின் உடம்பு, ஃப்ரீஸரில் வைத்த பால்பாக்கெட்டைப் போல உறைந்தது. அதே சமயம், பாலாமணி அளித்த பேயோபதேசத்தை அவரது மனம் நினைவுகூர்ந்தது. தோளில் தொங்கிய பையில் வைத்திருந்த சிவப்புநிறப் புடவையை எடுத்து உடம்பைச் சுற்றி, தலையில் முக்காடு போட்டுக் கொண்டார்.
பெண் என்றால் பேயும் இரங்கும். நீங்களும் முத்தம்மாவை மாதிரியே சிவப்புப் புடவையைச் சுத்திட்டுப் போனா, பேய் பார்த்ததும் ஏமாந்து திரும்பிப் போயிடும்.”
ஆனால், எதிரே வந்த உருவம் திரும்பிப் போகவில்லை. கிட்டாமணியை நெருங்கியது -சிவப்புநிறப் புடவையில்! இப்போது என்ன செய்வது?
முத்தம்மாவுக்கு மசால்வடை ரொம்பப் பிடிக்கும். மூணுவாட்டி மசால்வடைன்னு சொன்னா அது உங்களை ஒண்ணும் பண்ணாது,” – பாலாமணியின் குரல் அசரீரிபோலக் கேட்டது.
மசால்வடை! மசால்வடை! மசால்வடை!” – கிட்டாமணி உரக்கச் சொன்னார். ஆனால்…
பேய் இன்னும் கிட்டாமணியை நோக்கியே வந்து கொண்டிருந்தது.
“முத்தம்மா மசால்வடை சாப்பிடறதை நிறுத்தியிருக்குமோ? எமலோகத்துல கே.எஃப்.சி பிராஞ்ச் திறந்திருப்பாங்களோ என்னமோ!”
கிட்டாமணி யோசிப்பதற்குள், அந்த உருவம் அவரை மிகவும் நெருங்கி விட்டது. இப்போது என்ன செய்வது?
துணிஞ்சிடுங்க! பையிலிருக்கிற பழஞ்செருப்பை எடுத்துக்குங்க. அப்படியே அடி பின்னிடுங்க.
கிட்டாமணி பழஞ்செருப்போடு அந்த உருவத்தின்மீது பாய்ந்தார். அடுத்த ஒருசில நிமிடங்கள், தெலுங்குப்பட கிளைமாக்ஸ் காட்சிபோல, வெறும் டிஷூம் டிஷூம் என்ற சத்தங்களுடன் கழிந்தன. கிட்டாமணி கைவலிக்கும் வரை பழஞ்செருப்பால் அந்த உருவத்தை அடித்தபிறகு, மூச்சு வாங்கியபோதுதான் அந்த உருவம் மூர்ச்சையாகியிருப்பது புரிந்தது. ’வீரத்தை விடவும் விவேகம்தான் முக்கியம்’ என்பதால், விவேகமாக அங்கிருந்து திரும்பியும் பாராமல் ஓட ஆரம்பித்தார் கிட்டாமணி. காந்தாவின் ஆட்டம் கான்சல் ஆன கடுப்பில், கண்ணயர்ந்திருந்த தெருநாய்களெல்லாம் திடுக்கிட்டு எழுந்து, அசப்பில் எலும்புத்துண்டு போலிருந்த கிட்டாமணி ஓடுவதைப் பார்த்துத் துரத்த ஆரம்பித்தன. பேயோடு போரிட்டு வென்ற கிட்டாமணி, நாயோடு போரிடத் துணிவின்றி புறமுதுகு காட்டிப் புழுதிபறக்க ஓடினார்.
மறுநாள் காலை! திருவிழாவின் கடைசி நாள்! ஒலிபெருக்கியிலிருந்து பாடல் கணீரென்று கேட்டது: ‘டங்காமாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி’
’எழுந்திருங்க! எழுந்திருங்க!’ கிட்டாமணியை உலுக்கி எழுப்பினாள் பாலாமணி. “சீக்கிரமா வந்து என் தம்பியைப் பாருங்க!”
தூக்கத்தில் கண்விழித்த கிட்டாமணிக்கு, பாலாமணியைப் பார்த்ததும் சற்றே முத்தம்மாவின் ஞாபகம் வந்தாலும், திடுக்கிட்டு எழுந்து மச்சான் குப்பண்ணாவின் அறைக்கு ஓடினார். குப்பண்ணாவின் மனைவி பரிமளா, worryமளாவாகக் கன்னத்தில் கைவைத்தபடி நின்றிருக்க, குப்பண்ணா பரோட்டாவுக்குப் பிசைந்த மாவுபோலப் படுக்கையில் கம்பளிக்குள் சுருண்டு கிடந்தான்.
“மச்சான்! என்னாச்சு?”
”மாப்பிள்ளை! கரகாட்டம் பார்க்கப்போறேன்னு பொய்சொல்லிட்டு வொயின்ஷாப்புக்குப் போயி ஓவராக் குடிச்சிட்டு வந்தேனா? தூரத்துலே ஒரு உருவம் வந்திச்சா, பரிமளா சொன்னாமாதிரி ஒரு சிவப்புப்புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். உடனே முத்தம்மா ‘மசால்வடை மசால்வடை மசால்வடை’ன்னு மூணுவாட்டிச் சொல்லிச்சு. முத்தம்மாவுக்கு ‘கீரைவடைதான் பிடிக்கும்’ பரிமளா சொல்லியிருந்தாளா? நான் அப்படியே ஷாக் ஆயி நின்னுட்டேன். உடனே முத்தம்மா என் மேலே பாய்ஞ்சு பழஞ்செருப்பாலேயே என்னை அடிச்சுப் போட்டுட்டு ஓடிருச்சு. பின்னாலே நாயெல்லாம் துரத்திட்டுப் போச்சு. பாவம், அந்த நாயெல்லாம் என்னாச்சோ தெரியலை!”
பல்விளக்கிக் காப்பிகுடிக்காமலேயே கிட்டாமணியின் மூளைக்குள் சுவிட்சு போடாமலே பல்பு எரிந்தது. ‘அடப்பாவி, முத்தம்மான்னு நினைச்சு உன்னையா நான் போட்டு மொத்தினேன்?’
”முத்தம்மா ஏன் மசால்வடைன்னு சொல்லிச்சு? அதுக்குக் கீரைவடைதானே பிடிக்கும்?” என்று கேட்டாள் பாலாமணி.
”நேத்திக்கு நீ கீரைவடைன்னா எனக்குச் சொல்லிக் கொடுத்தே?” என்று கேட்கலாமா என்று யோசித்த கிட்டாமணி, அப்படிக் கேட்டால், மூன்று பேர் முத்தம்மாவாக மாறி தன்னை மொத்தமாக மொத்தி விடுவார்கள் என்று அமைதியாக நின்றார்.