Sunday, August 1, 2010

பூர்வஜென்மத்திலே....!

நேற்று எழுதிய இடுகையில் மருந்துக்குக் கூட நடிக,நடிகையரைப் பற்றி எழுதவில்லை என்று கண்டனம் தெரிவித்து அடுக்கடுக்காய் பல தனிமடல்கள்; தொலைபேசி அழைப்புக்கள். 'விஜயகாந்த், சரத்குமார், விஜயசாந்தி இவர்களெல்லாம் நடிகர்கள் தானே?’ என்று கேட்டதால் கோபமடைந்த ஒரு நண்பர் ’வேலாயுதம்’ படத்தின் முதல் டிக்கெட்டை எனக்கு அனுப்புவதாக 'பகீர்’ மிரட்டல் விடுத்துள்ளார். 'இது என்ன சோதனை,’ என்று நொந்து கொண்டிருந்தபோதுதான், நான் தயாரித்த ஒரு ரிப்போர்ட்டைப் படித்துவிட்டு எனது மேலாளர் "எல்லாம் நான் போன ஜென்மத்தில் செய்த பாவம்," என்று தலையிலடித்துக் கொள்வதைப் பார்த்தேன்.

ஒரு வேளை நானும் போன பிறவியில் செய்த பாவத்தின் பலனாகத் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ? போன பிறவியில் நான் என்னவாக இருந்திருப்பேன்? எங்கு இருந்திருப்பேன்? என்ன செய்து கொண்டிருந்தேன் என்று ஆழமாக சிந்தித்தபோது (சிரிக்காதீங்க..ப்ளீஸ்! சீரியசா சொல்லிட்டிருக்கேன்!) எனது பூர்வஜன்மத்தின் சரித்திரம் எனக்குப் புலப்பட்டது. அதை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.

எனது இதற்கு முந்தைய பிறவி 16-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது. (அப்பவும் இங்கே தானா? ஒரு மாறுதலுக்காக சுவிட்சர்லாந்திலே பிறந்து தொலைத்திருக்கக் கூடாதா?)

அந்தப் பிறவியில் நான் சாலைகளையும், பாலங்களையும், துறைமுகங்களையும் கட்டியிருந்திருக்கிறேன். (அது போன பிறவியில்! இந்த பிறவியில் என்னால் ஒழுங்கா வட்டி கூட கட்ட முடியவில்லையே!)

மிகவும் அபாரமான உற்சாகமும், திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வையிடுதலில் மிகுந்த திறமையும் கொண்டிருந்திருக்கிறேன். (அதையெல்லாம் இந்தப் பிறவியில் எந்தக் காக்காய் கொத்திக் கொண்டு போனதோ? யாருய்யா ஆட்டையைப் போட்டது?)

நான் ஒரு குப்பையள்ளுகிறவனாக இருந்திருந்தாலும், தலைசிறந்த குப்பையள்ளுகிறவனாக இருந்திருக்கிறேன். (இந்தக் குப்பையள்ளுற மேட்டர் மட்டும் தான் இரண்டு பிறவிகளுக்கும் இருக்கிற ஒற்றுமை!)

போன பிறவியிலிருந்து இந்தப் பிறவிக்கு நான் கொண்டுவந்த பாடம் என்ன? இதையும் எனது ஞானதிருஷ்டி சொன்னது. அதாவது......

"பிறமனிதர்களைப் படித்து, அவர்களைப் புரிந்து கொள்ள முயல்வேன்; வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியான மனதுடன் எதிர்கொள்வேன்: மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்து அவர்களுக்கு உதவுவேன்."

எங்கேயோ உதைக்குதே! ஒருவேளை ’சங்கரா நேத்ராலயா’ போயி என்னோட ஞானதிருஷ்டியையும் செக் பண்ணி கண்ணாடி மாட்டணுமோன்னு தோணிச்சு! சரி, நம்மளை மாதிரி நொந்தவங்களோட பூர்வஜென்ம வரலாற்றையும் பார்ப்போமே! ஒத்துவருதுன்னா, நம்முளுதும் சரியாத் தானிருக்குமுன்னு யாரெல்லாம் நொந்து போயிருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து, அவங்கவங்க பூர்வஜென்மவரலாற்றையும் சுருக்கமாக் கொடுத்திருக்கேன் பாருங்க!

இப்போதைக்கு ரொம்ப நொந்து போயிருக்கிறவங்க, நம்ம நமீதா தான்! ’இளைஞன்’-ன்னு ஒரு படத்துலே அம்மணி வில்லியா நடிக்கிறாங்களாம்; "வில்லியாக நடிப்பதால் ரசிகர்கள் யாரும் என்னை வெறுத்திடாதீங்க."-ன்னு அறிக்கை விட்டிருக்காங்க! இதைக் கேட்டதுலேருந்து ஆபீஸிலே தூக்கம் வரமாட்டேங்குது! பாதி ராத்திரியிலே ஃபுல் ப்ளேட் பிரியாணி இறங்க மாட்டேங்குது! ஒரு ஆறடி பெண்மணியே அசந்து போயிட்டாங்களேன்னு அவங்களோட பூர்வஜன்ம வரலாற்றை என்னோட ஞானதிருஷ்டியாலே கண்டுபிடிச்சேன். அது என்னான்னா.....

"நமீதா இதற்கு முந்தைய பிறவியில் பெண்ணாக இருந்திருக்கிறார். (அப்படீன்னா இந்தப் பிறவியிலே என்னான்னு நக்கல் பண்ணாதீங்க! இதற்கு முந்தைய பிறவியிலும் பெண்ணாகத் தான் இருந்திருக்கிறார். போதுமா?)

அவர் கி.பி.450-ல் வட ஆப்பிரிக்காவில் பிறந்திருக்கிறார். (மறுபடியும் சொல்றேன். சீரியசாப் பேசிட்டிருக்கும்போது சிரிக்கப்படாது.) அனேகமாக அவர் ஒரு நூலகக்காப்பாளராகவோ, மதபோதகராகவோ அல்லது பண்டைய பொருட்களின் பாதுகாவலராகவோ இருந்திருக்கலாம். (ஓஹோ! அதனால் தான் இந்தப் பிறவியில் அவருக்குக் கோவில் எழுப்ப முயன்றார்கள் போலிருக்கிறது!)

முந்தைய பிறவியில் அவர் உண்மையையும் ஞானத்தையும் தேடியிருக்கிறார். (இந்தப் பிறவியிலும் அவங்க ஒரு துறவி மாதிரித்தானே?) தனது வருங்கால வாழ்க்கை குறித்து அறிந்திருக்கிறார். (அதுனாலே தான் இந்தப் பிறவியிலும் குஜராத்துலேருந்து தமிழ்நாட்டுலே வந்து குதிச்சிட்டாங்களோ?) போனபிறவியில் மற்றவர்கள் இவரைப் பின்பற்றியிருக்கிறார்கள். (ஆப்பிரிக்காவிலே தானே? இருக்கும் இருக்கும்! ஃபோட்டோவெல்லாம் பார்க்கத்தானே செய்யுறோம்?)

இந்தப் பிறவியில் மிகுந்த கருணை உள்ளவங்களா இருப்பாங்களாம். ஓரளவு சரியாத்தானிருக்கு! அவங்க வர்ற டி.வி.அப்படி...!!

பி.கு: நமீதா வில்லியா நடிக்கிற "இளைஞன்" முதல்வர் கலைஞர் வசனம் எழுதுற படமாச்சே! அப்படீன்னா, இந்தப் படத்தோட முதல் காட்சியை அவர் பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கப்போற கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இப்பவே நொந்து போயிருப்பாங்களே! அவங்க பூர்வஜென்ம வரலாற்றைப் போடலியான்னெல்லாம் கேட்கப்படாது; சொல்லிப்புட்டேன்.

சரி, அடுத்ததா நொந்து போயிருக்கிறவரு நம்ம இளையதளபதி விஜய்! (நம்ம வேதனை இப்போவாச்சியும் புரிஞ்சா சரிதான்!). ஒரு படத்துலே அசின் கூட நடிக்கிறாருன்னுறதுனாலே..................அட இருங்கப்பா, அசின்னு சொன்னதுமே ’சேட்டைக்காரனைப் புறக்கணிப்போம்,’னு கோஷம் போடாதீங்க! சொல்ல வர்ற விஷயத்தை முழுசாக் கேட்டுட்டு அப்புறமா கொடிபிடியுங்க! விஜயோட அடுத்த படத்துலே அவருக்கு ஜோடி அசினாம்.அதுனாலே, "அசினால் விஜய் படத்துக்கும் தலைவலி!"

இப்போ இளையதளபதி விஜய் பூர்வஜென்ம வரலாற்றைப் பார்க்கலாமா?

’நம்ம விஜய் இதற்கு முந்திய பிறவியில் ஒரு பெண்ணாக இருந்தாராம். (இக்கி..இக்கி..இக்கி!) கி.பி.1825-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் (இவரும் ஆப்பிரிக்காவா?) ஒரு நாட்டுவைத்தியராகவோ, அறுவை சிகிச்சை நிபுணராகவோ, மூலிகை வைத்தியராகவோ இருந்தாராம்."

இவருடைய அண்மைக்காலப் படங்களைப் பார்ப்பவர்களின் சந்தேகம் இப்போது உண்மையிலேயே ஊர்ஜிதம் ஆகிவிட்டது. பூர்வஜென்மத்தில் 'அறுவை’ சிகிச்சை நிபுணராக இருந்தவரின் படங்களென்றால் கத்தி வைக்கத்தானே செய்வார்கள்? - அது போகட்டும்! முற்பிறவியில் நமது விஜய் எப்படிப்பட்டவராக இருந்திருக்கிறார் என்று பார்க்கலாமா?

’சிக்கலான கட்டங்களில் முடிவுகளை மிக கவனமாக எடுப்பவராம். அதிரடி ஆசாமியாம். மிகுந்த மன உறுதியும் சுய கட்டுப்பாடும் கொண்டவராம். இப்படிப் பட்ட மனிதர்களை மற்றவர்களுக்குப் பிடிக்கும் என்றாலும் ரொம்பவும் விரும்பவும் மாட்டார்களாம்’

கரெக்ட்! சுறா க்ளைமேக்ஸ் ஒண்ணு போதாதா இதெல்லாம் சரியென்று சொல்வதற்கு? போகட்டும். முற்பிறவியிலிருந்து இப்பிறவிக்கு விஜய் கொண்டுவந்தது என்னவோ?

மிக மிக சாதாரணமான சூழலிலும் இவரிடம் ஏதோ ஜாலம் இருக்குமாம். (இத்தனை மொக்கைப் படங்களுக்கு அப்புறமும் பில்ட்-அப்பு தூக்கலா இருக்கிறதைச் சொல்லுறாங்களோ?) இந்த ஜாலத்தை இவர் அறிந்து கொள்வதோடு, அதை மற்றவர்கள் பார்க்கவும் உதவி செய்ய வேண்டுமாம். (இதற்காகத் தான் கொஞ்ச நாளா அரசியல் பேசிட்டிருந்திருக்காரு, நாம சரியாப் புரிஞ்சுக்காம போட்டு மொத்து மொத்துன்னு மொத்தியிருக்கோம். சே!)

ஆக, நமீதா, விஜய் இரண்டு பேருடைய பூர்வஜென்ம வரலாற்றுக்கும், இந்தப் பிறவியோட தொடர்பும் சரியா ஒத்து வருதே! எதுக்கும் இன்னொரு வரலாற்றைப் பார்த்திருவோமா? யார் தலையை உருட்டலாம்?

ஏற்கனவே நொந்து போனவங்க ரெண்டு பேரோட வரலாற்றைப் பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இனிவரும் நாட்களில் நொந்து நூடுல்ஸாகப் போறவர் ஒருத்தரோட பூர்வஜென்ம வரலாற்றைப் பார்க்கலாமா?

அது யார்? நம்ம கார்த்தி தான்! 'பையா’ சக்கை போடு போட்டுது! 'நான் மகான் அல்ல’ வரப்போகுது! அவரு ஏன் நொந்து நூடுல்ஸ் ஆகணுமுன்னு கேட்கறீங்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா? இதைப் படியுங்க!
பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்

என்னாதிது, கல்யாணம் பண்ணிக்கிட்டா நொந்து நூடுல்ஸ் ஆயிருவாங்கன்னு எப்படிச் சொல்லலாமுன்னு என் கிட்டே சண்டைக்கு வர நினைக்கிறவங்களுக்கு, குறிப்பா பெண்களுக்கு என்னோட வேண்டுகோள்! செய்தியை முழுசா படியுங்க!

அதாவது, நம்ம கார்த்தியைப் பத்தி நிறைய வதந்திகள் வர்றதுனாலே அவங்க வீட்டுலே மும்முரமா பொண்ணு பார்த்திட்டிருக்காங்களாம். சரி, பார்க்கட்டும்; தப்பில்லை! கார்த்திக்காக அவங்க அம்மா தமிழ்நாடு முழுக்க பெண் தேடிட்டிருக்காங்களாம். நியாயம் தான்; உங்களுக்கும் தெரிஞ்ச நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க; நல்லது தான்! இதுவரைக்கும் ஓ.கே! இதுக்கப்புறம் கார்த்தி விட்டிருக்காரு பாரு ஒரு ஸ்டேட்மெண்ட்!

"வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்." - இதற்கு என்ன பொருள்?

வேலைக்குப் போகிற பெண் வீட்டுக்கு அடங்கி இருக்க மாட்டாளா? அல்லது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டாளா? ஆணும் பெண்ணும் சமம் என்று அகிலமெங்கும் அவரவர் அறைகூவல் விடுத்துக்கொண்டிருக்கையில், கார்த்தி இப்படிப் பேசியிருப்பதனைக் கண்டிக்க தமிழ் கூறும் நல்லுலகிலுள்ள பெண்கள் எவரும் இதுவரையில் முன்வராதது ஏன்?

வானகமே! வையகமே!

ஆராய்ச்சிமணி கட்டி ஆண்டுவந்த தென்னகமே!புறாவுக்காகத் தன் சதையையும், முல்லைக்குத் தேரையும், மூலைக்கு மூலை டாஸ்மாக்கும் தந்த தமிழகமே!

இஃதென்ன கொடுமை? இந்த ஆணாதிக்கத்தின் கோரத்தாண்டவத்தை இன்றளவிலும் எந்தப் பெண்ணியப் போராளிகளும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லையே, அந்தோ! (சே! எவ்வளவு நல்லா சாவி கொடுக்கிறேன்!)

ஹலோ, இருங்க! இருந்து கார்த்தியோட பூர்வஜென்ம வரலாற்றைக் கேட்டுட்டுப் போங்க! என்னது, விட்டா வேறே யாராவது பதிவு போட்டிருவாங்களா? அப்ப சரி, போய் இடுகை போட்டுட்டு வாங்க! அப்பாலே கார்த்தியோட பூர்வஜென்ம வரலாற்றை சொல்லுறேன்.

கவனம்! என்னோட ஞானதிருஷ்டி ரகசியத்தைச் சொல்லப்போறேன்!

கார்த்தி மட்டுமில்லே; இன்னும் யார் யாரோட பூர்வஜென்ம வரலாறு தெரியணுமின்னாலும் 'இங்கே’ போங்க! அவங்களோட பிறந்தநாள், மாதம், வருடம் மூன்றையும் நிரப்பி ஒரு சொடுக்கு சொடுக்கினீங்கன்னா, புட்டுப் புட்டு வைக்கிறாங்க! :-)

(அப்புறம், சும்மா பொழுது போகலியேன்னு உசுப்பி விட்டேனுங்க! பாவம் கார்த்தி, நல்ல புள்ளை! நல்லா நடிக்கிறாரு! ஒண்ணும் பண்ணிராதீங்க....!)

9 comments:

கடைக்குட்டி said...

ஒங்க பக்கம் இப்பத்தான் வர்றேன்..

மானாவாரியா காலாய்க்குறீங்க :-)

Jey said...

சேட்டை, நீரு நெசமாலுமே சேட்டக்காரந்தாய்யா( என்னா கண்டுபிடிப்பு...), இபடி போட்டு கலக்குரியே....ஓட்டுபோட்டுட்டேன். நைட் 2 மனியாச்சு... ஸ்ரீச்சிகிடே போய் தூங்குறேன்:)

ப.கந்தசாமி said...

போன ஜன்மத்துல நான் என்னமோ பண்ணீருக்கேன், இல்லைன்னா இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் என் கண்ணில் படுமா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லா சேட்டை பண்றீக...
நல்லாத்தான் சாவி கொடுக்கிறீங்க...

சத்ரியன் said...

அடடடடா..!

என் பூர்வஜென்ம பலன் தான் என்னை வலையுலகுக்கு கொண்டு வந்து வுட்ருச்சோ...?

ஜில்தண்ணி said...

ஹலோ சேட்டை

என்ன இப்டி ஆயிடிச்சி என்னோட பூர்வ ஜென்ம பலன்கள்

போன ஜென்மத்துல நீங்க பொம்பள புள்ளையாத்தான் பொறந்திருக்கனும்
அதுவும் 850 வருடவாக்கில் தான்,உங்க தொழில் வரைபடங்கள் உருவாகுவது,ஜோசியம் பார்ப்பதது,ஆராய்ச்சி கூட பன்னியிருக்கீங்க

அந்த தளத்தில் இருந்தவை தான் இவை :)

நல்லா சொறிஞ்சி விடுறீங்களே மக்கள

Anonymous said...

போன ஜென்மத்துல நாங்க என்ன பாவம் செய்தோமோ..
இந்த மாதிரி பதிவுகளை எல்லாம் நாங்க படிக்க வேண்டியிருக்கு..

பனித்துளி சங்கர் said...

தொடரட்டும் உங்களின் சேட்டைகள் . பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

அது ஏன் இன்னும் யாரும் கார்த்திய எதிர்க்கலனா , வேல பார்குற நிறைய பொண்ணுங்களுக்கு வீட்டில் இருந்து கணவனையும் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்வதில் ஆசை தான். எனினும் இன்றைய சூழ்நிலைகளில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை விட்டுக்கொடுப்பதில்லை என்பது தான் நிஜம். இக்கருத்தை எதிர்க்கும் பெண்களும் உண்டு தான்! இருந்தாலும் நிறைய தோழிகளிடம் நானாகக் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயம் இது :)

அதனால் கார்த்தி நினைப்பதில் எதுவும் தப்பில்லை :)

ஆனால், "வீட்டுக்கு அடங்கிய பெண்" அப்படின்னு கார்த்தி என்ன மீன் பண்றார்னு புரியல சேட்டை!