Wednesday, August 18, 2010

150-வது சேட்டை!

வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின் ’வாங்க வம்பளக்கலாம்’ நிகழ்ச்சி! இன்றைக்கு நம்முடன் கலந்துரையாட வந்திருப்பவர் ஒரு பிரபல வலைப்பதிவாளர்! வணக்கம்!

வணக்கம்! என்னை மட்டும் தானே பேட்டி எடுக்கிறதா பேச்சு? இப்போ புதுசா யாரோ பிரபல பதிவாளரையும் கூப்பிட்டிருக்கீங்களா?

ஐயோ! நான் உங்களைத் தான் பிரபல பதிவாளர்னு சொன்னேன் சேட்டைக்காரன்!

ஓ! என்னைத் தான் சொன்னீங்களா? அதாவது எனக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்! யாராவது என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டா கூட கூச்சப்பட்டுக்கிட்டு லீவு போட்டு வீட்டுக்குப் போயிடுவேன்.

நீங்க வலைப்பதிவு ஆரம்பிக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?

அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நானும் நிறையபேரை மாதிரி சும்மா ஒரு உல்லுலாயிக்குத் தான் ஆரம்பிச்சேன்! நீங்க சந்தேகப்படுறா மாதிரி சின்ன வயசுலே மண்டையிலே அடிபட்டதுனாலே ஏற்பட்ட பின்விளைவோ, செகண்ட்-ஷோ சினிமா பார்த்திட்டு வரும்போது நாய்கடிச்சதோ காரணமில்லை!

உங்க வலைப்பதிவை நீங்க புத்தாண்டிலேருந்து ஆரம்பிச்சதைப் பத்தி ஒரு குற்றச்சாட்டு இருக்கு! ஒருத்தரையும் நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு புத்தாண்டு சபதம் எடுத்துக்கிட்டு நீங்க வலைப்பதிவு ஆரம்பிச்சதாகச் சொல்லுறாங்களே! அது பத்தி நீங்க என்ன சொல்லறீங்க?

இது தவறான தகவல்! ஏன்னா நான் ஜனவரி ஏழாம் தேதி நண்பகல்லேதான் பதிவை ஆரம்பிச்சேன்! உடனே ஏழரைச்சனி ஆரம்பிச்சிட்டுதுன்னு கூட சிலர் என்காதுபடவே பேசினாங்க! நான் என்னிக்குப் பதிவு ஆரம்பிச்சிருந்தாலும் வாசிக்கிறவங்களோட தலைவிதி மாறியிருக்கப்போறதில்லை! அதுனாலே ரெண்டுமே ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்!

வலைப்பதிவு ஆரம்பிக்கிறதுக்கு தமிழறிவு ரொம்ப முக்கியம்னு சொல்லுறாங்களே? இது உண்மை தானா?

நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இப்படியொரு மூடநம்பிக்கை இருந்தது உண்மைதான்! நான் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் தான் நிறைய பேருக்கு வலைப்பதிவுக்கும் தமிழறிவுக்கும் மட்டுமில்லே, வலைப்பதிவுக்கும் அறிவுக்குமே எந்த தொடர்பும் கிடையாதுங்கிற உண்மை புரிஞ்சுது.

உங்க இடுகைகளுக்கான விஷயத்தை எப்படி தேர்வு செய்யறீங்க?

இப்போ மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரத்துலே நீங்க சும்மா நின்னாலே போதும்; கூட்டமே உங்களை ரயிலுக்குள்ளே தள்ளிக்கொண்டு போயிடுது இல்லியா? அதே மாதிரி வலைப்பதிவு ஆரம்பிச்சா சப்ஜெக்டும் தானா கிடைக்கும்!

சமீபத்துலே உங்களோட 150-வது இடுகை எழுதியிருக்கீங்க! இதுக்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தாராமே?

ஆமாம்! ரொம்பப் பாராட்டினாரு! ’சேட்டை, உங்களை மாதிரி ஒவ்வொருநாட்டிலும் நாலு வலைப்பதிவருங்க இருந்தாப்போதும்; அமெரிக்காவை யாராலேயும் அசைச்சுக்க முடியாது,’ன்னு சொன்னாரு!

இதுதவிர வேறே யார் யாரெல்லாம் வாழ்த்துச் செய்தி அனுப்பினாங்க?

ஒவ்வொண்ணாப் படிக்கிறேன் கேளுங்க!

வலையுலகம் என்பது
வஞ்சிகள் நடனமிடும் அரங்கு!
சேட்டையே! நீ மட்டும்
வழிதவறிப்போய்
வனத்திலிருந்து
வராண்டாவில் குதித்த குரங்கு!
வாசகர்கள் பாவம்!
வாஞ்சையாய் மனம் இரங்கு!
கண்டேன் உன் வலைப்பதிவை!
கண்ணுக்குள் வந்தது சிரங்கு!

....அப்படீன்னு கவிஞர் சுக்ரீவன் எழுதியிருக்காரு! அடுத்ததா....

போதும், போதும்! ஒரு பானைக் கவிதைக்கு ஒரு சோறுபதம்! இதுவரை நீங்க போட்ட இடுகைகளிலேயே ரொம்பவும் பிரபலமானது எது?

கொஞ்ச நாளைக்கு முன்னாலே இனிமே எழுதமாட்டேன்னு ஒரு இடுகைபோட்டேன். அதுக்காக, ராணி சீதை அரங்கத்துலே ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு பண்ணி, சால்வையெல்லாம் போர்த்திப் பாராட்டினாங்க!

சேத்துப்பட்டு மேம்பாலத்துலே பிரம்மாண்டமா ஒரு ஃபிளக்ஸ் வச்சிருந்தாங்களாமே? அதை வச்சதுக்கப்புறம் அந்த ரோட்டுலே ஒரு விபத்து கூட நடக்கலேன்னு சொல்லுறாங்களே, உண்மையா?

இருக்காதா பின்னே? குழந்தைங்க பார்த்தா பயப்படுவாங்கன்னு, எல்லாரும் பூந்தமல்லி ஹைரோடு வழியா சுத்திப்போக ஆரம்பிச்சிட்டாங்க! தப்பித்தவறி அந்தப் பக்கமாப் போனவங்களையும் போலீஸ் ஸ்பர்டாங்க் ரோடு வழியா போகச் சொல்லி எச்சரிக்கை பண்ணிட்டாங்களாம். அப்புறம் எப்படி விபத்து நடக்கும்?

உங்களுக்கு டாக்டர் பட்டம் யாரு கொடுத்தாங்க?

சிட்லபாக்கம் சித்தப்பா பல்கலைக்கழகத்துலே ஏப்ரல் ஒண்ணாம் தேதி கொடுத்தாங்க! இது தவிர கண்ணம்மாபேட்டை கபாலி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துலே ’கம்பவுண்டர்’ பட்டமும் கொடுக்கிறதா லெட்டர் போட்டிருக்காங்க! இதோ பாருங்க, தர்மாமீட்டர், ஸ்டெதாஸ்கோப்பெல்லாம் கூட முன்கூட்டியே கொரியர்லே அனுப்பியிருக்காங்க!

நீங்க அமாவாசைக்கு அமாவாசை கவிதை எழுதுறதா சொல்றாங்களே? அதுக்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா?

இருக்கு! ஏன்னா அன்னிக்குப் பெரும்பாலானவங்க கோவிலுக்குக் கண்டிப்பா போவாங்க! அதுனாலே கடவுள் அவங்களையெல்லாம் காப்பாத்துவாருன்னுற நம்பிக்கைதான்.

வலையுலகத்துலே ஜனநாயகம் எப்படியிருக்குது?

ரொம்ப நல்லாயிருக்கு! இங்கேயும் கள்ள ஓட்டுப் போடலாம். ’உன் ஜாதி, என் ஜாதி,’ன்னு சண்டை போடலாம். வாய்புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசலாம். கோஷ்டி சேர்க்கலாம். படிக்காமலே எழுதலாம். ரெண்டு பேருக்கு சண்டையை மூட்டிவிட்டுட்டு வேடிக்கை பார்க்கலாம். அடுத்தவன் வேட்டியை உருவுறது தவிர ஜனநாயகத்துலே சராசரி குடிமகன் என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் வலையுலகத்துலேயும் செய்யலாம்.

150 பதிவுகளை எழுதிட்டீங்க! உங்களோட அடுத்த உடனடி லட்சியம் என்ன?

151-வது இடுகை எழுதணும்! இன்னிக்கு ’தட்ஸ் டமில்’ பார்த்திட்டு எழுதிட வேண்டியது தான்!

உங்க வலைப்பதிவை இதுவரை 53000 பேர் படிச்சிருக்காங்க! 175 பேர் உங்களைப் பின்தொடர்ந்து வர்றாங்க! இதுக்கு என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க?

இதுக்கெல்லாம் எப்படி பதில் சொல்றது? காளஹஸ்தி கோபுரம் இடிஞ்சதுக்கு என்ன காரணம்? பாகிஸ்தானிலே வெள்ளம் வந்ததுக்கு என்ன காரணம்னு நான் எப்படி சொல்ல முடியும்? எல்லாம் இறைவன் செயல்- அவ்வளவு தான்!

இவ்வளவு நேரம் பொறுமையாக பதில் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சேட்டைக்காரன்! ஸ்டூடியோவை விட்டுப் போறதுக்கு முன்னாடி கோட்டைக் கழட்டித் திருப்பிக் கொடுத்திட்டுப் போங்க! வேறே ஸ்பேர் கோட்டு இல்லை! நீங்க 300-வது இடுகை எழுதினதுக்கப்புறமும் இதே கோட் போட்டுக்கிட்டுத்தான் பேட்டி கொடுக்கணும்.

சேட்டை டிவி நேயர்களுக்கு மிக்க நன்றி!

22 comments:

Unknown said...

150 க்கு வாழ்த்துக்கள்...சேட்டை தொடரும்...

சாந்தி மாரியப்பன் said...

பேட்டி கலக்கலா இருக்குது..

எல் கே said...

//ரொம்ப நல்லாயிருக்கு! இங்கேயும் கள்ள ஓட்டுப் போடலாம். ’உன் ஜாதி, என் ஜாதி,’ன்னு சண்டை போடலாம். வாய்புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசலாம். கோஷ்டி சேர்க்கலாம். படிக்காமலே எழுதலாம். ரெண்டு பேருக்கு சண்டையை மூட்டிவிட்டுட்டு வேடிக்கை பார்க்கலாம். அடுத்தவன் வேட்டியை உருவுறது தவிர ஜனநாயகத்துலே சராசரி குடிமகன் என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் வலையுலகத்துலேயும் செய்யலாம்./


romba rasichen. vaalthukkal settai

Ramesh said...

150 வது சேட்டைக்கு வாழ்த்துக்கள்...

தோழி said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நிறைய எழுதுங்க..

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை...

150க்கு வாழ்த்துக்கள்....
அடிக்கடி உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்....

இன்னும் இன்னும் எழுதுங்க....

pudugaithendral said...

150 congrats thambi

Anonymous said...

150 பதிவு போட்டாச்சா??? அதையெல்லாம் சகிச்சுகிட்ட எங்களுக்கு தான முதல்ல விழா எடுக்கணும்???
ம் ம் எப்படியோ இம்சை தொடர வாழ்த்துக்கள்

வரதராஜலு .பூ said...

மேலும் மேலும் சேட்டைகள் பெருக வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள் சேட்டை. மேலும் பலப்பல பதிவுகள் எழுதிட வேண்டி....


வெங்கட்.

Anonymous said...

அருமை... வாய்விட்டுச் சிரித்தேன் :)

150-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

விரைவில் 300-வது பதிவை எதிர்பார்க்கிறோம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

150க்கு வாழ்த்துக்கள்....

சால்வை ’சேல்’ல வித்தா சொல்லுங்க.. :)

முகுந்த்; Amma said...

150 - Congratulations Settai annachchi. thodarnthu kalakkunga.

Jey said...

வழக்கம்போல கலக்கல் சேட்டை.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

150 வது சேட்டைக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

150க்கு வாழ்த்துகள்!

சிநேகிதன் அக்பர் said...

150க்கு வாழ்த்துகள்.

சேட்டை அருமை. தொடருங்கள்.

Chitra said...

150 !!!! Congratulations!!!

நக்கல் திலகமே, உங்கள் பதில்கள் அத்தனையும் கல கல பட பட சரவெடி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா..ஹா.. கலக்கல்..
150 ஆச்சே.. ஏதாவது பார்ட்டி..கீர்ட்டி..

சொல்லுங்க..ஓடி வரோம்..ஹி..ஹி

பருப்பு (a) Phantom Mohan said...

Superb Boss!

Nakkal Thookkal! &

Hearty Congratulations!

Kousalya Raj said...

வாழ்த்துகள்....! nice 150...!!

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் அண்ணே இன்னைக்குத்தான் ரீடலில் படித்தேன்.