Monday, March 15, 2010

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.05

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.02

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.03

சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.04



இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை இதுவரை படிக்காதவர்களுக்காக, சில முக்கியமான குறிப்புகள்.

பாத்திரங்கள்

சொறிகால்வளவன் - சோற்றுப்புதூர் சாம்ராஜ்யத்தின் அரசன்
உலக்கைநாயகி - சொறிகால்வளவன் மனைவி/அரசி
அடங்காவாயர் - தளபதி / உலக்கைநாயகியின் அண்ணன்
குக்கரசி - அடங்காவாயரின் மனைவி
திருவாழத்தான் - நிதியமைச்சமர்
அவியலூர் அடுப்பங்கவிஞர் - ஆஸ்தான புலவர்
வரலட்சுமி - ஆஸ்தான நர்த்தகி
கன்னக்கோலன் - யானைப்பாகன்
மெய்யாமொழி - ஓற்றன்

இது தவிர இந்த வரலாற்றுக்காவியத்தில் ஏறக்குறைய யானை போலவே இருக்கிற ஒரு யானையும் முக்கிய அங்கம் வகிக்கிறது.
கதைச்சுருக்கம்

நிதியமைச்சர் திருவாழத்தான், சொறிகால்வளவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் நர்த்தகி வரலட்சுமியை காந்தர்வமணம் புரியவே, வெகுண்டு போன மன்னன், மறுநாள் அரசவையில் ராஜநர்த்தகியின் நடனம் நடைபெறாவிட்டால், (கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல்) தளபதி அடங்காவாயரை யானையின் காலில் வைத்து மிதிக்குமாறு உத்தரவு பிறப்பித்து விடுகிறார். அடங்காவாயரின் மனைவி குக்கரசியை சோற்றுப்புதூரில் வேறு யாரும் பார்த்ததில்லை என்பதால், தானே ராஜநர்த்தகியாகி மன்னரை ஆடி மகிழ்விப்பதாகக் கணவருக்கு ஆறுதல் கூறுகிறார். தன்னை மன்னரிடம் காட்டிக்கொடுத்த அவியலூர் அடுப்பங்கவிஞர் மற்றும் தளபதி அடங்காவாயரைப் பழிவாங்க நிதியமைச்சர் திருவாழத்தானும், யானைப்பாகன் கன்னக்கோலனும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி, புரண்டு படுக்கவும் தெம்பின்றி மெலிந்து போன யானைக்கு உணவளித்து அதனை எழுப்பி நிற்க வைக்க முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்படுகிறது. தன் கணவனே தனது ஒரே ஒரு அண்ணனையும், இருந்த ஒரே ஒரு யானையின் காலில் வைத்து மிதிக்குமாறு உத்தரவிட்டதையெண்ணி அரசி உலக்கைநாயகி உள்ளம் குமுறுகிறார். இனி.....!

இடம்: அரசவை

(நிதியமைச்சர் திருவாழத்தான் ஓடோடி வருகிறார்)

திருவாழத்தான்: ஆபத்து!ஆபத்து!!

அவியலூர் அடுப்பங்கவிஞர்: ஆஹா! திருவாழத்தாரே! வரலட்சுமியை நீர் மணமுடிக்கும்போதே இப்படியொரு நாள் அலறியடித்துக்கொண்டு வருவீர் என்பதை யாம் அறிவோம்.

திருவாழத்தான்: புலவரே! வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெந்தபுண்ணிலே வெண்பா எழுதாதீர்! மன்னர் எங்கே?

அ.அ.கவிஞர்: அவர் நித்திராதேவியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

திருவாழத்தான்: யார்? நித்திராதேவியா? அப்படியென்றால் மகாராணியார்...?

அ.அ.கவிஞர்: நீர் நிதியமைச்சரல்ல, என் தலை விதியமைச்சர்! மன்னர் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னேன். கொஞ்சம் கவிதைநயமாகப் பேச விட மாட்டீரே?

திருவாழத்தான்: ஓய் புலவரே! ஊரே அமளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. உமக்குக் கவிதைநயமா கேட்கிறது. எனக்கு வருகிற கோபத்திற்கு உம்மை உதைத்து எனது கழுதைநயத்தைக் காண்பித்து விடுவேன்!

அ.அ.கவிஞர்: அப்படியென்ன ஆபத்து வந்து விட்டது?

திருவாழத்தான்: அரண்மனைக்கு வெளியே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அ.அ.கவிஞர்: என்னது? நிலநடுக்கமா? அட, ஆமாம் திருவாழத்தாரே! நான் கூட நேற்று இரவு அருந்திய பானத்தின் பக்கவிளைவாயிருக்குமோ என்று கவனிக்காமல் இருந்து விட்டேன். ஐயையோ! அரண்மனை குலுங்குவது போலிருக்கிறதே!

(உறக்கத்திலிருந்து விழித்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் வருகிறார்)

திருவாழத்தான்: புலவரே, மன்னர் வந்து கொண்டிருக்கிறார்!

அ.அ.கவிஞர்: வாழ்க சொறிகால்வளவன்! வளர்க புகழ்! ஓங்குக....

திருவாழத்தான்: நிறுத்துக புலவரே! இந்த இக்கட்டான நேரத்தில் இதெல்லாம் தேவையா? விஷயத்தைக் கூறும்!

சோ.சொ.வளவன்: யாரது? திருவாழத்தானா? ராஜதுரோகியே! எனது அரசவையில் இருந்த ஒரே ஒரு நர்த்தகியையும் நயவஞ்சமாகத் திருமணம் செய்து கொண்ட பாவியே! உம்மை என்ன செய்கிறேன் பாரும்!

அ.அ.கவிஞர்: அரசே! சொந்தப் பிரச்சினையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். நாடே பூகம்பத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது.

சோ.சொ.வளவன்: என்னது? பூகம்பமா? நான் கூட அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து வந்ததால் தான் இப்படித் தோன்றுகிறதோ என்று எண்ணி விட்டேன்.

திருவாழத்தான்: மன்னா! ஏதாவது செய்யுங்கள் மன்னா!

சோ.சோ.வளவன்: வாருங்கள், வேகமாக வெளியே ஓடி விடலாம்.

(பாகன் கன்னக்கோலன் ஓடி வருகிறார்)

கன்னக்கோலன்: அரசே! ஆபத்து! ஆபத்து!!

சோ.சொ.வளவன்: தெரியும்! பூகம்பம் வந்திருக்கிறது என்று சொல்லப்போகிறாய்? அது தானே?

கன்னக்கோலன்: இல்லை மன்னா! இன்று தளபதியின் தலையை மிதிப்பதாக இருந்த யானை தப்பித்துத் தலை தெறிக்க ஓடி விட்டது.

அ.அ.கவிஞர்: என்னது? யானை ஓடி விட்டதா? அதைப் பிடித்து நிறுத்த வேண்டியது தானே?

கன்னக்கோலன்: அது யானையாய் இருந்திருந்தால் பிடித்திருப்பேன். மாசக்கணக்கில் பட்டினியாய் இருந்து மான் போல இளைத்துத் துரும்பாகி விட்டது. அது ஓடிய வேகத்துக்கு இன்னேரம் அது ஒரிசாவுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்.

அ.அ.கவிஞர்: அடப்பாவி! இருந்த ஒரு யானையையும் தொலைத்து விட்டாயே! இப்போது தளபதிக்கு அளிக்க வேண்டிய தண்டனையை எப்படி நிறைவேற்றுவது?

கன்னக்கோலன்: கவலைவேண்டாம் மன்னா! என் வீட்டருகில் ஒருவர் பத்து வருடங்களாக யானைக்கால் நோயால் அவதிப்படுகிறார். அவரை வைத்துத் தளபதியை மிதித்து விடலாமா?

திருவாழத்தான்: என்னது? நம் தளபதியையா?

அ.அ.கவிஞர்: பிறகென்ன அண்டைநாட்டுத் தளபதியையா?

சோ.சொ.வளவன்: நிறுத்துங்கள்! பூகம்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் பூசல் செய்கிறீர்களே?

(ஒற்றன் மெய்யாமொழி ஓடி வருகிறான்.)

மெய்யாமொழி: அரசே! ஆபத்து! ஆபத்து!!

சோ.சொ.வளவன்: வாடா மெய்யாமொழி! தாமதமாகச் செய்தி கொண்டுவரும் தறுதலை ஒற்றனே! பூகம்பம் வந்திருக்கிறது என்று சொல்லப்போகிறாய், அது தானே?

மெய்யாமொழி: இல்லை மன்னா! நீங்கள் நினைப்பது போல அது பூகம்பம் இல்லை. தளபதி அடங்காவாயரின் வீட்டில் யாரோ நடனப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆடுகிற அதிர்வில் கோட்டை கொத்தளங்கள் அப்பளங்களைப் போல தவிடுபொடியாகி விடும்போலிருக்கிறது மன்னா!

சோ.சொ.வளவன்: சபாஷ்! அடங்காவாயரின் கடமையுணர்ச்சியைப் பாராட்டுகிறேன்.

மெய்யாமொழி: அரசே! அது அப்புறமாகப் பாராட்டலாம்! உடனடியாக நடனத்தை நிறுத்தாவிட்டால் அண்டைநாட்டின் அணைக்கட்டு உடைந்து ஊரே வெள்ளபெருக்காகி விடும்.

அ.அ.கவிஞர்: அப்படியாவது நமக்குத் தண்ணீர் கொடுத்தால் சரிதான்!

திருவாழத்தான்: மன்னரே! அரண்மனைக் கூரையில் விரிசல் ஏற்பட்டு விட்டது பாருங்கள்! காரை பெயர்ந்து விழத்தொடங்கி விட்டது. உடனடியாக ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி உத்தரவு பிறப்பியுங்கள்!

சோ.சொ.வளவன்: ஐயையோ! இந்த ஒரு அரண்மனை இருப்பதனால் தானே என்னையும் மன்னன் என்று பக்கத்து நாட்டுக்காரர்கள் பரிவோடு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்? அடே மெய்யாமொழி! நீ உடனடியாக அடங்காவாயர் வீட்டுக்குச் சென்று நாட்டிய ஒத்திகையை உடனே நிறுத்தச் சொல்!

மெய்யாமொழி: எனக்கு பயமாக இருக்கிறது மன்னா! வெளியே போனால் பூமி பிளந்து என்னை விழுங்கி விடும்.

சோ.சோ.வளவன்: நீ இங்கிருந்தால் உன்னை நானே விழுங்கி விடுவேன்! ஓடு! ஆட்டத்தை நிறுத்து!

(தளபதி அடங்காவாயர் ஓடி வருகிறார்)

அடங்காவாயர்: மன்னா! ஆபத்து! மன்னா!! ஆபத்து

சோ.சொ.வளவன்: என்னாலே முடியலே!

20 comments:

Ananya Mahadevan said...

ஆஹா, சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்!!!! இரு என் ஃபேவரைட் ராஜாவைப்பத்தி படிச்சுட்டு வர்றேன்.மீ த ஃபர்ஷ்ட்டு!

Chitra said...

யாரங்கே, சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கவும். அருமை.

Ananya Mahadevan said...

சூப்பரு, அவ்ளோ தானா? அடுத்த பார்ட்டு எப்போ?

Anonymous said...

பொறுமையில எறுமையா இருந்து படிக்கணும் போல..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா!! அற்புதமான கதையல்லவா..

பித்தனின் வாக்கு said...

நல்லா வாய்விட்டுச் சிரித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடரவும். நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

தங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னா.

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது . கலக்கல் . வாழ்த்துக்கள் !

மசக்கவுண்டன் said...

இப்பத்தான் உங்க ஊருக்கு வந்திருக்கனுங்க. பதிவு நல்லா இருக்குதுங்க.

முகுந்த்; Amma said...

சோற்றுப்புதூர் சொறிகால் வளவனுக்கு ஜே!

வாழ்க சேட்டையார் புகழ்

settaikkaran said...

//ஆஹா, சோற்றுப்புதூர் சொறிகால் வளவன்!!!! இரு என் ஃபேவரைட் ராஜாவைப்பத்தி படிச்சுட்டு வர்றேன்.மீ த ஃபர்ஷ்ட்டு!//

வாங்க, வாங்க, அகில உலக சோ.சொ.வளவன் ரசிகர் மன்ற கொள்கைப் பரப்புச் செயலாளர் அவர்களே!

settaikkaran said...

//சூப்பரு, அவ்ளோ தானா? அடுத்த பார்ட்டு எப்போ?//

மயிர்க்கூச்செரியும் க்ளைமேக்ஸுடன் இறுதிக்காட்சி மட்டும் தான் பாக்கி! நன்றிங்க!!

settaikkaran said...

//யாரங்கே, சேட்டைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கவும். அருமை.//

முதல்லே உங்க பங்குக்கு ஒரு தங்கக்காசை அனுப்புங்க! பவுனு என்ன விலை தெரியுமா இந்தியாவிலே...? :-)))

நன்றிங்க!!!!

settaikkaran said...

//பொறுமையில எ"று"மையா இருந்து படிக்கணும் போல..//

படிக்கிறது மட்டுமில்லீங்க, பின்னூட்டம் எழுதும்போதும் பொறுமை வேணும்.:-))

அது எ"று"மை இல்லீங்க; எ"ரு"மை! நன்றிங்க!!

settaikkaran said...

//ஆஹா!! அற்புதமான கதையல்லவா..//

ஹி..ஹி! ஆமாங்க! முடியப்போகுதுண்ணே! நன்றிண்ணே!!

settaikkaran said...

//நல்லா வாய்விட்டுச் சிரித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடரவும். நன்றி.//

ஆஹா! அது தான் வேணும் எனக்கு! மிக்க நன்றிங்க!!!

settaikkaran said...

//தங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னா.//

ஹாஹா! படிச்சதும் உங்களுக்கும் தொத்திக்கிச்சா? நன்றிங்க!!!

settaikkaran said...

//எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோணுது . கலக்கல் . வாழ்த்துக்கள் !//

எல்லாம் ஒரு ஃப்ளோவுலே வர்றது தான். மிக்க நன்றிங்க!!!!!

settaikkaran said...

//இப்பத்தான் உங்க ஊருக்கு வந்திருக்கனுங்க. பதிவு நல்லா இருக்குதுங்க.//

வாங்க வாங்க கவுண்டரே! சென்னை வரவேற்கிறது!! மிக்க நன்றி!!!!!

settaikkaran said...

//சோற்றுப்புதூர் சொறிகால் வளவனுக்கு ஜே! வாழ்க சேட்டையார் புகழ்//

உங்கள் புலமையை மெச்சினோம்! மிக்க நன்றிங்க!!!!