Sunday, March 7, 2010

கனவுப்பலன்கள்.01


நிறைய பேர் கனவுகளைப் பற்றி ஆராய்ச்சியெல்லாம் பண்ணி டாக்டர் பட்டமெல்லாம் வாங்கியிருக்கிறார்களாம். நம்மால் அதெல்லாம் முடியாது என்பதால், அட் லீஸ்ட் ஒரு கம்பவுண்டர் பட்டமாவது வாங்கலாமேயென்று தான் இந்த ஆராய்ச்சி!

நேற்று இரவு என் கனவில் ஒரு முன்னணி நடிகை மேக்-அப் இல்லாமல் வந்ததால், திடுக்கிட்டுக் கண்விழித்து விடியும்வரைக்கும் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன். (அக்கம் பக்கத்தில் வேப்பிலை தாரளமாக இருந்தபோதிலும், எங்கள் ஏரியாவில் எங்களை விட நாய்களே பெரும்பான்மை வகிக்கின்றனர்) அந்த பயங்கர அனுபவம் காரணமாக, இது போன்ற விபரீதங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொதுநலம் காரணமாக இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.

சில பேருக்கு வருகிற கனவுகள் லிபர்டி தியேட்டரில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தின் பழைய பிரிண்டைப் பார்ப்பது போல கொறகொறவென்ற சத்தங்களோடு, கோடுகோடாய்க் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். சிலர் காணும் கனவுகள் அயோநாக்ஸில் "அவ்தார்" படம் பார்ப்பது போல எழுபது எம்.எம்.மில் டோல்பி சவுண்டில் படுஜோராயிருக்கும்.

கனவுகளைக் குறித்து சிக்மண்ட் ஃபிராய்ட், கார்ல் ஜங் போன்றவர்கள் பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார்களாம். (இவங்கெல்லாம் யாரு?). எல்லாரும் கனவு காண்கிறவர்கள் என்பதால், அவரவர்க்கு வருகிற கனவுகளின் பொருளைப் புரிந்து கொண்டால், கனவு வரும்போது கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல(பாப்-கார்ன் சாப்பிட்டபடி) சுவாரசியமாகப் பார்க்கலாம் என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்!

ஒருவரின் வாழ்நாளில் அவர்கள் விதவிதமாக ஆயிரக்கணக்கில் கனவுகளைக் கண்டாலும், எல்லாக் கனவுகளையும் பத்துவிதமாகப் பிரித்து விடலாமாம். அடடா, இதை வைத்து பத்து மொக்கைகள் போடலாம் போலிருக்கிறதே என்று ஆரம்பத்தில் யோசித்தாலும், பொதுநலத்தைக்கருத்தில் கொண்டு, எட்டுபதிவுகளோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். எனவே தினசரி கனவு காண்கிறவர்களெல்லாம் இந்தப் பதிவைப் படித்து, அவரவர் கனவின் உட்கருத்தை உணர்ந்து, முடிந்தால் அது குறித்து ஒரு பதிவும் எழுதி இணையத்துள் வாழ்வாங்கு வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதைச் செய்ய விரும்புகிறவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

I. எந்தக் கனவு கண்டாலும், அதற்கு ஒரு பொருத்தமான பெயர் சூட்டி விடுவது நல்லது. உதாரணத்துக்கு நேற்று நான் கண்ட கனவுக்கு "விடாது கறுப்பு" என்று பெயர் சூட்டியிருக்கிறேன். இதையே மற்றவர்களும் கடைபிடிக்கலாம்.

II. நீங்கள் என்ன கனவு கண்டாலும், அதில் உங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் வந்த காட்சி, ஒலி எது என்று ஆழமாக சிந்திக்க வேண்டும். உதாரணமாக, நேற்று என் கனவில் வந்த அந்த நடிகை,"சேட்டை! உன்னைப் போன்ற ஆணழகனை நான் இதுவரை பார்த்ததேயில்லை!" என்று சொன்னாள். இதே போல உங்களில் பலரையும் கூட கனவில் எவரேனும் "புத்திசாலி, கவிஞர், அறிவுஜீவி," என்றெல்லாம் சொல்லும்போது அதை எங்காவது குறித்து வைத்துக்கொள்ளவும்.

III. கனவு எப்படியிருந்தது? சுகமான கனவா? சோகமான கனவா? பயங்கரமான கனவா? என்பதைப் பொறுத்து சென்சார் சர்டிபிகேட் வழங்குவது போல அதற்கும் அடைப்புக்குறிக்குள்ளே ஒரு எழுத்தைப் போட்டுத் தரம் பிரித்து வைத்து விடுங்கள்.

ஒரு இரண்டு கொயர் நோட்டில் நான் சொன்னது போல குறிப்பெடுத்து வைத்துக்கொள்வது நல்லது. எப்பொழுதாவது நமக்கு சுயசரிதை எழுத வேண்டும் என்ற நப்பாசை வந்தால், நிஜவாழ்க்கையில் உருப்படியாக ஏதும் இல்லாதபோது, இந்த நோட்டில் இருப்பதை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.

சரி, இனி கனவுகளில் பத்து வகைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா? முதலாவதாக....

1. கனவில் துரத்தப்படுகிறீர்கள்

இந்த மாதிரி கனவு வருபவர்களுக்கு மிக அதிகமான மன அழுத்தம் இருக்கிறது என்பது பொருள்.இருந்தாலும் யார் அல்லது எது உங்களைத் துரத்துகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

1a. நாய் துரத்துவது:

நீங்கள் நிறைய இரவுக்காட்சி சினிமா பார்க்கிறீர்கள் என்று பொருள். எனவே இதை நீங்கள் குறைத்தால், கனவில் நாய்கள் குரைப்பதும் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

1b. நண்பர் துரத்தினால்:

மாதக்கடைசி வந்துவிட்டதென்று பொருள். எதற்கும் சட்டைப்பையில் பத்து ரூபாய்க்கு மேல் வைத்துக்கொள்ளாமல் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளுவது நல்லது.

1c. உறவினர் துரத்தினால்:

திருமணமானவர்களின் கனவில் உறவினர்கள் துரத்தினால், ஓரிரு நாட்களில் இரண்டு ஆட்டோக்களில் ஊரிலிருந்து விருந்தாளிகள் வரப்போகிறார்கள் என்று பொருள். அதுவே திருமணமாகாதவர்களின் கனவில் உறவினர்கள் துரத்தினால், உங்களுக்கு(ம்) பொருத்தமாக ஒரு ஜாதகம் எங்கோ அமைந்துவிட்டதென்று பொருள்.

1d. முன்பின் தெரியாதவர் துரத்தினால்

இது சற்று பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்படியொரு கனவு வந்தபிறகுதான் நான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.

(தொடர்ந்து பயமுறுத்துவேன்)

8 comments:

சிநேகிதன் அக்பர் said...

சான்ஸே இல்லை. அருமையான எழுத்து நடை சிரித்து முடியலை.

கலக்கல் சேட்டைக்காரன்.

பொது இடத்துல ட்ரெஸ்ஸை யாரோ உருவுற மாதிரி கனவு வந்தா என்ன பலன் :)

ரிஷபன் said...

கனவே வேண்டாம்னு ஆக்கிருவீங்க போல.. அப்பவாச்சும் இஷ்டத்துக்கு இருக்க விடறீங்களா..

Ananya Mahadevan said...

அடப்பாவி,
இதையெல்லாம் கூட வெச்சா போஸ்ட்டு போடுவாய்ங்க? அநியாயம்!
சூப்பர்!

Unknown said...

// முன்பின் தெரியாதவர் துரத்தினால்

இது சற்று பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்படியொரு கனவு வந்தபிறகுதான் நான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.
//
இந்தக் கனவு வந்தா நம்மள விட மத்தவங்களுக்குத்தான் டேமேஜ் சாஸ்தி போலயே?

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை, எனக்கு யானைத் துரத்துகிறமாதிரி கனவு அடிக்கடி வரும். இதுக்கு என்ன அர்த்தம் ?...

Chitra said...

1d. முன்பின் தெரியாதவர் துரத்தினால்

இது சற்று பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இப்படியொரு கனவு வந்தபிறகுதான் நான் வலைப்பதிவை ஆரம்பித்தேன்.


......... கனவு பலிச்சிருச்சு.

settaikkaran said...

//சேட்டை, எனக்கு யானைத் துரத்துகிறமாதிரி கனவு அடிக்கடி வரும். இதுக்கு என்ன அர்த்தம் ?...//

ஐயையோ அண்ணே! எனக்கும் இப்படியொரு கனவு வந்து தான் ரெண்டு நாளா கேரளாவுலே மாட்டிக்கிட்டிருக்கேன். :-((((

settaikkaran said...

//......... கனவு பலிச்சிருச்சு.//

அவசரப்படாதீங்க! இன்னும் பல பயங்கரமான கனவுகள் பாக்கியிருக்கு!
:-)))))