Wednesday, March 3, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.05

அடுத்து நாம் காணவிருக்கும் சிம்மராசிக்காரர்கள் சிங்கம் போலே சிங்கிளாய் வருபவர்கள். இவர்கள் எழுதுவதை யாராவது விமர்சித்தால், தாள முடியாமல் விமர்சித்தவர்களின் பதிவுக்குப் போய் அதகளம் பண்ணி விடுவார்கள் என்பதால் இவரிடம் மற்றவர்கள் அடங்கியே போவார்கள்.

மிளகாய் பஜ்ஜி,வெங்காய பக்கோடா,காரக்குழம்பு, சில்லி சிக்கன் போன்று அதிக காரமுள்ள சங்கதிகளை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதாலோ என்னவோ, இவர்களது பதிவுகளில் அதிகாரம் கொடிகட்டிப்பறக்கும். இவர்களுக்கு உருளைக்கிழங்கு, பருப்பு, தக்காளி, மாம்பழம் இவைகள் மிகவும் பிடித்தமானது என்பதை ஜோதிடம் பற்றிய அறிவு இல்லாதவர்களும் (தூரத்திலிருந்து) பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்சினிமாக்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்துகிற தற்பெருமைக் குத்துப்பாட்டுகளில் எதைக் கேட்டாலும் அது இவர்களுக்கும் பொருந்தும். ’தண்ணி’ இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது; அதாவது குற்றாலம் நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, காவேரியாறு மற்றும் கூவம் போன்றவைகளில் காணப்படும் ’தண்ணி’ என்று பொருள் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இயற்கையோடு இயைந்து வாழ விரும்பும் இந்தப் பதிவர்களை சந்திக்க விரும்பினால், முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும்; இல்லாவிட்டால் முண்டா பனியனும் பெர்முடாவுமாக உங்களை அவர் வரவேற்கக்கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு வலைப்பதிவு தவிர, இன்னும் பல விளையாட்டுக்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். மாதக்கடைசியில் கூட இவர்களுக்குப் பணமுடையென்பதே இராது என்பதால், பிற ராசிக்காரர்கள் இவர்களது கைபேசி எண்களை எப்போதும் கைவசம் வைத்திருத்தல் நன்மை பயக்கும்.(நான் சிம்மராசி இல்லை) இவர்களுக்கு சற்றே மறதியும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளபடியால், துணிந்து கைமாற்று வாங்கலாம்.

’இதெல்லாம் ஒரு பதிவா? மாப்பு, உடனே ஸ்டாப்பு," என்று எவரேனும் கேட்டிருந்தாலும் கூட, அந்த மறுமொழியை டெலீட்டி விட்டு, அதே போல அடுத்தடுத்து அதே போல பதிவுகளைப் போடுகிற சிம்மராசிக்காரர்கள், ’அண்ணே, வேண்டாண்ணே! விட்டிருங்கண்ணே! குருப்பெயர்ச்சி முடியுறவரைக்குமாவது தயவுசெய்து இந்த மாதிரியெல்லாம் பதிவு எழுதாதீங்கண்ணே," என்று யாராவது கெஞ்சினால் அவர்களின் அன்புக்குக் கட்டுப்படுவார்கள். மிகவும் துணிச்சலான சிம்மராசிக்காரர்கள் நாளொன்றுக்கு அலுப்பின்றி பத்து மொக்கைகள் எழுதுவதோடு, நூறு மொக்கைகளைப் படிக்கிற வல்லமையும் படைத்தவர்களாவர்.

தர்க்கமும் குதர்க்கமும் இவர்களுக்குத் தக்கதுணையாய் இருக்கும். முயலுக்கு மூணு கால் என்று முயலையே நம்ப வைத்து விடுவார்கள்; நேரில் பார்க்காமல் இவரது பதிவுகளை மாத்திரம் படிப்பவர்கள் இவரை ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யுமளவுக்குப் பதிவுகளெல்லாம் படுகம்பீரமாக இருக்கும். இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதால், இவரது படுசீரியசான பதிவுகளைப் படிப்பவர்களுக்கும் சிரிக்காமல் இருப்பது கடினம். பொது அறிவின் மீது இவர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும் என்பதால், அதிகம் சீண்டப்படாமல் அம்போவென்றிருக்கிற வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி செல்வார்கள். இவர்களில் பலர் சகலகலாவல்லவர்களாக இருப்பர். இலக்கியம் தொடங்கி இட்லி சாம்பார் வரையிலும் இவர்களால் எழுதப்படாத விஷயமே இருக்காது.

எந்தப் பதிவு போட்டாலும் மளமளவென்று மறுமொழிகளை ஈர்ப்பதில் இவர்களுக்கு நிகர் இவரே! ஆனாலும், இவர்களிடமிருந்து எப்படியும் ஒரு இலக்கியத்தரம் வாய்ந்த பதிவை வரவழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் பழகும் நண்பர்கள் இவர்களது பதிவுகளை திடுதிப்பென்று unfollow செய்ய வாய்ப்பிருக்கிறது. போதாக்குறைக்கு சனி இரண்டாம் இடத்தில் இருப்பதால், உடனடியாக பதிவுகளை முடிக்க விடாமல் மேனேஜர்கள் அலுவலக நேரத்தில் வேலை வேலை என்று படுத்துவார்கள்.

சிம்மராசிக்காரர்கள் ரொம்ம்ம்ப நல்லவர்கள் என்பதால், சகபதிவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஏற்கனவே பின்னூட்டம் இட்ட பதிவுகளில் திரும்பத் திரும்பப் பின்னூட்டம் இட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டுவார்கள். இவர்களுக்கு சம்பிரதாயங்களில் மிகவும் நம்பிக்கையிருக்கும் என்பதால், கவிதைகளை இராகு காலத்திலும், கட்டுரைகளை எமகண்டத்திலும் எழுத மாட்டார்கள். ஆனால் படிப்பவர்கள் எந்த நேரத்தில் வாசிக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் பொறுப்பல்ல. இவர்களிடம் அள்ள அள்ளக்குறையாமல் அறிவுரைகள் கிடைக்கும் என்பதால் சகபதிவர்களும் நண்பர்களும் ஜீமெயிலில் இன்விசிபிளாகவே இருப்பார்கள். இவர்களுக்கு நேரம் மிக நன்றாக இருப்பதால், சினிமா, பத்திரிகை,அரசியல் போன்ற துறைகளில் நுழைந்து வெற்றி பெறுவதற்கான அபாய அறிகுறிகள் தென்படுகின்றன.

இவர்கள் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பதிவு எழுதினாலும், "காதல்" என்ற ஒரு வார்த்தையில்லாமல் எழுத முடியாது. ஆனால், கவிதையில் இருக்கிற அளவுக்கு இவர்களது நிஜ வாழ்க்கையில் காதல் அதிகம் இருக்காது என்பதால், காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே கல்யாணத்தில் முடிகிற சோகமான சூழ்நிலை காணப்படுகிறது.

பழகுவதற்கு இனியவராக இருந்தாலும் பட்டென்று கோபப்படுகிறவர்கள் இவர்கள். கோபத்தை வெளிப்படுத்த இவர்கள் கவிதை,கட்டுரை என்று பல விபரீதமான வழிமுறைகளைக் கையாள்வார்கள். அவ்வப்போது, தவறாமல் ஓட்டுப்போட்டு பின்னூட்டம் எழுதுகிறவர்களிடமே கூட கோபப்படுவார்கள்! இருந்தாலும் மனதளவில் மிகவும் மென்மையானவர்கள் என்பதால் எதிர்காலப்பதிவுகள் குறித்து எப்போதும் மிகுந்த கவலையோடு காணப்படுவர். கோபம் தணிந்துவிட்டால் தன்னையும், பிறரையும் உற்சாகப்படுத்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!

சிம்மராசிக்காரர்கள் தங்களுக்குள்ளே மிக ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பதால் பல தொடர்பதிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிம்மராசி ஆண்கள் பெரும்பாலும் தங்களது கஷ்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், இவர்களது நகைச்சுவைப்பதிவுகள் மூலம் பிறர் அவரது துன்பங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

பிற ராசிக்காரர்களே! உங்கள் முறையும் வந்தே தீரும்!

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

இன்னாப்பா சேட்டை - உங்க ராசி என்னாபா? சேட்டை நல்லாவே போய்ட்டு இருக்கு.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com

Ananya Mahadevan said...

:-))
mudiyalai..
hey, you havent submitted this post to Tamilish. couldnt vote for you.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்க ராசி என்ன சேட்டை :))

Chitra said...

நான் என்ன ராசி, தெரியலையே......
very funny article.....

மங்குனி அமைச்சர் said...

சேட்ட ஜாதகத்த காரமடை ஜோசியர் கிட்ட காண்பிச்சு கேட்டதுல , சேட்டைக்கு சனி சைடுல இருக்கு அதுனால உசுருக்கு பயமில்ல, ராகும் , கேதும் "அசல்" படம் பார்க்க போயிருப்பதால் இப்போதைக்கு டென்சன் இல்லை , சுக்கிரனும் மத்த பார்ட்டிகளும் சீட்டு விளையாண்டுகிட்டு இருப்பதால் பிரச்னை இல்ல , நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்

Rekha raghavan said...

நான் சிம்ம ராசி என்பதால் உங்கள் பதிவை எங்கள் குடும்பத்தினர் யாரும் பார்க்கக்கூடாது என்று உஷாராக மறைவிடத்துக்கு சென்று படித்துவிட்டு திரும்பினேன். அவங்க படிச்சிட்டா அப்புறம் பதிவே எழுத விடமாட்டாங்க. பதிவு எழுதாமல் விட்டா அப்புறம் நாடு எப்படி உருப்படும் ?

ரேகா ராகவன்.

settaikkaran said...

//இன்னாப்பா சேட்டை - உங்க ராசி என்னாபா? சேட்டை நல்லாவே போய்ட்டு இருக்கு.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே! அடிக்கடி வாங்க!!

settaikkaran said...

// :-)) mudiyalai..//

அவ்வளவு கொடுமையாவா இருக்கு? :-))) நன்றிங்க!!

settaikkaran said...

//உங்க ராசி என்ன சேட்டை :))//

சைவக்கொத்துப்பரோட்டா அண்ணே! நம்மளது கடைசியிலே தான் வருதுண்ணே! :-))

settaikkaran said...

//நான் என்ன ராசி, தெரியலையே......
very funny article.....//

எல்லா ராசிக்காரங்களும் படிக்கிற ஒரே ராசிபலன்னு சொல்லறீங்களா சித்ரா? ரொம்ப நன்றிங்க!! :-))

settaikkaran said...

//சேட்ட ஜாதகத்த காரமடை ஜோசியர் கிட்ட காண்பிச்சு கேட்டதுல , சேட்டைக்கு சனி சைடுல இருக்கு அதுனால உசுருக்கு பயமில்ல, ராகும் , கேதும் "அசல்" படம் பார்க்க போயிருப்பதால் இப்போதைக்கு டென்சன் இல்லை , சுக்கிரனும் மத்த பார்ட்டிகளும் சீட்டு விளையாண்டுகிட்டு இருப்பதால் பிரச்னை இல்ல , நம்ம குரு சேட்டைக்காரன் கூடே இருப்பதால சேட்டை கொஞ்சம் உச்சத்துக்கு போகும்னு காரமடை ஜோசியர் பலன் சொல்லி இருக்கார்//

மங்குனி அமைச்சர் பின்னூட்டத்துலே கூட பின்னிப் பெடல் எடுக்கிறாரு பாருங்க! நான் நகைச்சுவையா எழுத தேட வேண்டிய அவசியமேயில்லேண்ணே! உங்களை மாதிரி நாலஞ்சு பேரோட பதிவைப் படிச்சாலே போதும்! நன்றிண்ணே!!

settaikkaran said...

//நான் சிம்ம ராசி என்பதால் உங்கள் பதிவை எங்கள் குடும்பத்தினர் யாரும் பார்க்கக்கூடாது என்று உஷாராக மறைவிடத்துக்கு சென்று படித்துவிட்டு திரும்பினேன். அவங்க படிச்சிட்டா அப்புறம் பதிவே எழுத விடமாட்டாங்க. பதிவு எழுதாமல் விட்டா அப்புறம் நாடு எப்படி உருப்படும் ?//

ஆஹா! உங்க பொதுநலத்தை நினைச்சா மனசு பூரிக்குதுங்க! கரெக்டுங்க, நம்ம ராசிக்கு எவ்வளவு கஷ்டதசை இருந்தாலும் சரி, படிக்கிறவங்களை மட்டும் விடவே கூடாது! :-))

ரொம்ப நன்றிங்க!

Unknown said...

இப்ப விடுறதா இல்ல என்னது ராசி வரும் வரி பார்த்து கிட்டே இருக்கன்

பித்தனின் வாக்கு said...

என்னது இது எல்லாம் என்னைப் பார்த்து எழுதிய மாதிரி இருக்கு. முக்காவாசி சரியாத்தான் இருக்கு. ஆனா அந்த மாசக்கடைசி மேட்டர்தான் உதைக்குது.