Saturday, February 27, 2010

சின்னஞ்சிறு வயதில்....!


பதின்ம நினைவுகள் என்னும் தொடர்பதிவில் என்னை(யும்) அழைத்து விட்டார்கள் என்பதற்காக, அதிக மெனக்கெட்டு, எனது இயல்பான தோலை உரித்துப் புதிய சட்டையைப் போர்த்துக்கொண்டு எழுதிய பதிவல்ல. எவராயிருந்தாலும் சரி, நினைவுகளை நிறுத்துப்பார்க்கிறபோது அதில் தாழ்ந்திருக்கும் தட்டில் காயாமலிருக்கிற கண்ணீரின் முத்துக்களே அதிகம் குவிந்திருக்கும்- ஆனந்தக்கண்ணீர் உட்பட! நகைச்சுவையாய் எழுத யோசிக்க வேண்டியிருக்கிறது; எவரது முகமூடியையோ சிறிது நேரம் இரவல் வாங்கி அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்து வந்த காலங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு நடத்துகிறவர்களுக்கு, ஒப்பனைகள் தேவைப்படுவதில்லை. பால்ய பருவங்களில் தாமணிந்த துணிமணிகளை யாரும் இன்னும் வைத்திருப்பதில்லை என்றாலும் அப்பாவின் விரல்பிடித்துக்கொண்டு போய் வாங்கிய அந்த நாளும், அந்த ஜவுளிக்கடையின் புதுத்துணி வாசமும், வெளியேறும்போது உயிரற்ற பொம்மைகளுக்கு நாமும் திருப்பி வணக்கம் சொன்ன அறியாமைக்கணங்களும் யாருக்கு மறந்திருக்கக்கூடும்?

நீங்களே மறந்து விட்டிருக்கிற ஒரு பழைய தழும்பை எப்போதாவது ஒரு நண்பர் சுட்டிக்காட்டி இது எப்படி ஏற்பட்டது என்று கேட்கிறபோது, அந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் புன்னகையும், விதிவிலக்காக மவுனமும் பதிலாக அளிக்கத்தோன்றும். இரத்தம் வடித்துக் காய்ந்து தழும்பான சில நினைவுகளுக்குப் பின்புலத்தில் சில இனிமையான நினைவுகள் இருக்கலாம். சைக்கிளில் ஒரு குட்டிதேவதையை அமர்த்தி பயமும் பரபரப்பும் கலந்து மிதித்த பயணங்களில் தடுமாறி விழுந்து வாங்கிய விழுப்புண்களின் தழும்பாக இருப்பின், அந்தப் புன்னகையின் வெப்பத்தை சினேகிதர்களால் அறிய முடியாது. ஆனால், மறக்க முயன்றும் முடியாத அந்தத் தழும்பின் சரித்திரத்தை நினைவுகூர்கிறபோது, வேப்பெண்ணையும் வியர்வையும் கலந்து வீசிய நெடி நுரையீரலுக்குள் திரும்பவும் வந்து நிரம்பியது போலிருக்கும்.

சில சமயங்களில் நினைவுச்சின்னங்களை விடவும் கூரிய ஆயுதங்கள் இருக்க முடியாது என்று தோன்றும். ஒவ்வொன்றையும் பார்க்கிறபோதெல்லாம் சமநிலமாக முயன்றுகொண்டிருக்கும் இதயத்தில் எங்கிருந்தோ வந்த ஏர் உழுது உழுது உதிர ஈரத்தை உற்பத்தி செய்வது போலிருக்கும். தற்செயலாக சந்திக்கிற பழைய உறவுகள் போல, முகமும் பெயரும் மறக்காமலிருக்கிற பல நினைவுகள், வழியனுப்பினாலும் வலுக்கட்டாயமாக நம்மோடு இருந்து இம்சித்து விட்டுத்தான் போகும்.

நினைவுகள் பசுமையாக இருக்கிறதா, பழுப்பு நிறத்திலிருக்கிறதா என்பதைக் காட்டிலும் அவை மக்கிப்போகாமல் இருப்பதே அவசியமாகிறது.

ஆண்டுக்கணக்காய் செருப்புமின்றி பள்ளிக்கு நடந்தும் முள்குத்திய சம்பவங்கள் அதிகம் நினைவுக்கு வருவதில்லை. ஆனால், மனிதாபிமானத்தோடு ஏற்றிக்கொண்ட மாட்டுவண்டிகளில் என் உடலோடு உரசி உட்கார்ந்த சில இரட்டைப்பின்னல்களில் வெள்ளைச்சிரிப்பு இப்போது நினைத்தாலும் குத்தி இறங்குகிறது.

செம்மண்தரையில் வியர்க்க விறுவிறுக்க கபடியாடிவிட்டு, முங்கி முங்கி சுனையில் குளித்தபோதெல்லாம் சிராய்ப்புகளில் சுள்ளென்று கடித்த மீன்களைப் பற்றி நினைக்கிறேனோ இல்லையோ, அதே சுனையின் கரையில் எவருமின்றி வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த இலைகளை எண்ணிக்கொண்டிருந்த ஏகாந்தப்பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன.

ஓடுகள் விலகிய பள்ளிக்கூட அறைகளில், கிழிந்த கால்சராயின் மீது சிலேட்டை வைத்து மறைத்த கணங்களும், சரியான விடை சொல்லியபோதெல்லாம் எழும்பி நிற்க வைத்து, கைதட்டல் ஒலியால் காதுகளைக் குளிர வைத்த நல்லாசிரியைகளும் நினைவுக்கு வருகின்றனர்.

சொடலைமாடனின் சிலையைப் பார்த்துப் பயந்து கண்களை இறுக்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்ற பொழுதுகளும், கூடத்தில் முதல்முதலாய் ஒரு உயிரற்ற உடல்பார்த்து தூணை இறுக்கியணைத்த துக்கநிமிடங்களும் நினைவுக்கு வருகின்றன.

டயர் வண்டியோட்டி குருமலை ரயில் நிலையம் வரைக்கும் சென்று, விரைந்து செல்லுகிற வண்டிகளை வேலியின் மீது அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

நெல்லயப்பர் கோவிலில் முதல்முறையாய்ப் பார்த்த குட்டியானையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அடம்பிடித்து அழுததும் நினைவுக்கு வருகிறது.

நண்பர்களோடு கூட்டு சேர்ந்து ஆளுக்கு ஒன்றாய் அவரவர் வீட்டிலிருந்து, வெல்லம்,உப்பு,மிளகாய்,புளி என்று கொண்டுவந்து படித்துறைக்கல்லில் இடித்து, குச்சியில் உருட்டி சுவைத்த நொட்டாம்புளி இப்போது நினைத்தாலும் ருசிக்கிறது.

கொடைவிழாவில் சிலம்பம் சுற்றிச்சென்றதும், அசட்டுத்துணிச்சலில் நண்பர்களோடு மயானத்துக்குள் சென்று எரிந்து எழும்பிய உடலைக்கண்டு அஞ்சியதும், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு நெல்லைக்கு ரயில்பிடித்துச்சென்று பூர்ணகலாவில் படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

’என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று ஒரு அப்பாவி மாணவியிடம் கேட்டதும், அவள் அதைக் கெட்ட வார்த்தை என்று சொன்னதும்.....

சைக்கிளை வியர்க்க விறுவிறுக்க மிதித்துச் சென்று ஒரு புன்னகைக்காக மூச்சுவாங்கியபடி காத்திருந்த நாட்களும்...

எல்லா நண்பர்களும் எங்கேங்கோ சென்றுவிட, நாங்கள் சேர்ந்து சுற்றிய காடுகளில் செருப்பணிந்து நடந்தும் முள்ளாய்க் குத்திய நினைவுகளும்....

உடன் ஓடிவிளையாடிய சகோதரிகள் குமரிகளானதும், வீட்டுக்குள்ளே தனி ஆணாக விலகி வாழ நேர்ந்த காலங்களும்....

அவ்வப்போது அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த அண்ணன் வேலை கிடைத்து வெளியூருக்குப் புறப்பட்டபோது, பஸ் நிலையத்தில் என்னையுமறியாமல் சிந்திய கண்ணீரும்....

தன்னிரக்கம் போலிருக்கிறதோ? இந்தப் பருக்கைகள் சோற்றின் பதம் பார்ப்பதற்காக அல்ல. இன்னும் எங்கேயோ எனது உதட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணமும், எங்கிருந்தோ அம்மாவின் முந்தானைத்தலைப்பு அதைத் துடைத்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையும், தினசரியும் என்னுடன் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன.

அளவுக்கு மீறினால் நினைவுகளும் கூட நஞ்சுதான். அதனால், இப்போதைக்கு ஒரு காற்புள்ளி வைத்து விடுகிறேனே!

இதை யார் வேண்டுமானாலும் இங்கிருந்து தொடரலாம்; ஆனால், என்னை எழுத வைத்தவர்கள் இவர்கள்:

அநன்யா மஹாதேவன்

ஸ்டார்ஜன்


இவர்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பதிவுக்காக மட்டுமல்ல! இந்த சேட்டைக்காரனின் முகமூடியை சற்றே கழற்றி விட்டுக் காற்று வாங்க வைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வைத்ததற்காக! இருவருக்கும் நன்றி! இங்கு வருபவருக்கும் நன்றி!!

25 comments:

Ananya Mahadevan said...

very touching post!!

இளந்தென்றல் said...

நினைவுகள் பசுமையாக இருக்கிறதா, பழுப்பு நிறத்திலிருக்கிறதா என்பதைக் காட்டிலும் அவை மக்கிப்போகாமல் இருப்பதே அவசியமாகிறது.

தன்னிரக்கம் போலிருக்கிறதோ? இந்தப் பருக்கைகள் சோற்றின் பதம் பார்ப்பதற்காக அல்ல. இன்னும் எங்கேயோ எனது உதட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணமும், எங்கிருந்தோ அம்மாவின் முந்தானைத்தலைப்பு அதைத் துடைத்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையும், தினசரியும் என்னுடன் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன.

மிகவும் அருமை.

Thamiz Priyan said...

அழகா இருக்குங்க... :)

\\\
சைக்கிளை வியர்க்க விறுவிறுக்க மிதித்துச் சென்று ஒரு புன்னகைக்காக மூச்சுவாங்கியபடி காத்திருந்த நாட்களும்...\\\

சேம் பிளட்!

Unknown said...

அருமையான நடை..

சொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே சொன்ன விதம் ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்பப்ப முகமூடியக் கழட்டி வச்சிட்டு இது மாதிரியும் எழுதுங்க..

Chitra said...

எல்லா நண்பர்களும் எங்கேங்கோ சென்றுவிட, நாங்கள் சேர்ந்து சுற்றிய காடுகளில் செருப்பணிந்து நடந்தும் முள்ளாய்க் குத்திய நினைவுகளும்....

உடன் ஓடிவிளையாடிய சகோதரிகள் குமரிகளானதும், வீட்டுக்குள்ளே தனி ஆணாக விலகி வாழ நேர்ந்த காலங்களும்....

அவ்வப்போது அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த அண்ணன் வேலை கிடைத்து வெளியூருக்குப் புறப்பட்டபோது, பஸ் நிலையத்தில் என்னையுமறியாமல் சிந்திய கண்ணீரும்....

தன்னிரக்கம் போலிருக்கிறதோ? இந்தப் பருக்கைகள் சோற்றின் பதம் பார்ப்பதற்காக அல்ல. இன்னும் எங்கேயோ எனது உதட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணமும், எங்கிருந்தோ அம்மாவின் முந்தானைத்தலைப்பு அதைத் துடைத்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையும், தினசரியும் என்னுடன் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன.


..........It touches the heart and memories.......... very nice.

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன சேட்டை அண்ணாச்சியா இது!!, டச் பண்ணீட்டீங்க.

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

சிநேகிதன் அக்பர் said...

வழக்கமான உங்கள் பதிவுகளில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது இந்த இடுகை. உங்கள் இடுகைகளில் மிகவும் பிடித்த ஒன்று.

நுட்பமான பார்வை.

க்ளாஸ்.

அகல்விளக்கு said...

இப்பதிவைப் போலவே தனித்துத் தெரிகிறாய் நண்பா...

படித்து முடிக்கையில் நெகிழ்ச்சி ஆட்கொள்கிறது...

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை உங்கள் மலரும் நினைவுகளை அற்புதமா வெளிப்படுத்தியிருக்கீங்க. உங்க ஊர் திருநெல்வேலி பக்கம்தானா, கொஞ்சம் சொல்லப்படாதா..

கலக்கிட்டீங்க. அற்புதமான வரிகள்;

ரிஷபன் said...

முகமூடியைக் கழற்றியபின் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.. அப்பப்ப இந்த மாதிரி ஒப்பனைகள் இல்லாம வாங்க..

பிரபாகர் said...

நண்பா!

பால்ய நினைவுகள் பெரும்பாலும் என் பருவத்தே செய்ததவைகளில் 90 சதம் ஒத்துப் போகிறது. கிராமச்சூழலின் இருவரும் இருந்திருப்பதால் இருக்கலாம். என்னை எழுத சொன்னால் நீங்கள் எழுதியது + இன்னும் கொஞ்சம் என இருக்கும். அருமையான பகிர்வு....

இதுபோல் இன்னும் நிறைய!

பிரபாகர்.

settaikkaran said...

//very touching post!!//

Thank You very much. :-))

settaikkaran said...

//மிகவும் அருமை.//

இளம்தென்றலுக்கு எனது நன்றி!

settaikkaran said...

//அழகா இருக்குங்க... :)//

தமிழ்ப்ரியனுக்கு மனமார்ந்த நன்றி! :-)

settaikkaran said...

//அருமையான நடை..

சொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே சொன்ன விதம் ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்பப்ப முகமூடியக் கழட்டி வச்சிட்டு இது மாதிரியும் எழுதுங்க..//

சம்பவங்களை பிரித்து மேய விரும்பவில்லை. காரணம், சுவாரசியம் கூட்ட நகைச்சுவையை சொருகி விடுவேனோ என்ற பயம்தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகிலன் அவர்களே!

settaikkaran said...

//..........It touches the heart and memories.......... very nice.//

மிக்க நன்றி சித்ரா அவர்களே! எழுதியதன் குறிக்கோள் நிறைவேறியது போலிருக்கிறது.

settaikkaran said...

//என்ன சேட்டை அண்ணாச்சியா இது!!, டச் பண்ணீட்டீங்க.//

ஹி..ஹி! அப்பப்போ இந்த மாதிரி எழுதணுமுன்னு ஆசைதான். ஸ்டார்ஜன்னும் அநன்யாவும் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க! ரொம்ப நன்றிண்ணே!!

settaikkaran said...

//தங்கள் பதிவுக்கு நன்றிகள்..//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

settaikkaran said...

//வழக்கமான உங்கள் பதிவுகளில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது இந்த இடுகை. உங்கள் இடுகைகளில் மிகவும் பிடித்த ஒன்று.

நுட்பமான பார்வை.

க்ளாஸ்.//

எனது ஆரம்பப்பதிவுகள் இப்படித்தான் இருந்தன. அவற்றில் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்தேன்; இதில் சமரசம் செய்து கொள்ளாமல் எழுதியிருக்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி அக்பர் அவர்களே!

settaikkaran said...

//இப்பதிவைப் போலவே தனித்துத் தெரிகிறாய் நண்பா...

படித்து முடிக்கையில் நெகிழ்ச்சி ஆட்கொள்கிறது...//

மிக்க நன்றி அகல்விளக்கு! உங்கள் கருத்து எனக்கு உற்சாகம் அளிக்கிறது, இது போல தொடர்ந்து எழுதுதற்கு!

settaikkaran said...

//சேட்டை உங்கள் மலரும் நினைவுகளை அற்புதமா வெளிப்படுத்தியிருக்கீங்க. உங்க ஊர் திருநெல்வேலி பக்கம்தானா, கொஞ்சம் சொல்லப்படாதா..

கலக்கிட்டீங்க. அற்புதமான வரிகள்;//

இந்தப் பதிவை எழுத வைத்த சூத்திரதாரிகள் நீங்களும் அநன்யாவும் தானே? உங்களால் உந்தப்பட்டு எழுதிய பதிவே இது! உங்களது தாராளமான பாராட்டில் உங்கள் இருவருக்கும் சேர வேண்டிய பங்கும் இருக்கின்றது அண்ணே! மிக்க நன்றி!

settaikkaran said...

//முகமூடியைக் கழற்றியபின் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.. அப்பப்ப இந்த மாதிரி ஒப்பனைகள் இல்லாம வாங்க..//

மிக்க நன்றி ரிஷபன் அவர்களே! இது போல துணிவாய் ஒப்பனையின்றி அவ்வப்போது வருவேன்; வரணும்! :-))

settaikkaran said...

//பால்ய நினைவுகள் பெரும்பாலும் என் பருவத்தே செய்ததவைகளில் 90 சதம் ஒத்துப் போகிறது. கிராமச்சூழலின் இருவரும் இருந்திருப்பதால் இருக்கலாம். என்னை எழுத சொன்னால் நீங்கள் எழுதியது + இன்னும் கொஞ்சம் என இருக்கும். அருமையான பகிர்வு....

இதுபோல் இன்னும் நிறைய!//

பதிவுகள் குறித்து மட்டுமின்றி, வலைப்பதிவு குறித்தும் நீங்கள் எனக்கு அளித்த நல்ல அறிவுரைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன் பிரபாகர் அவர்களே!

manjoorraja said...

ஆழத்துடனும் அழுத்தத்துடனும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டாய். எல்லோர் மனதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இது போன்றவற்றை படிக்கையில் மீண்டும் நினைவுக்கு வந்து அசைபோட வைக்கின்றன.

நல்லதொரு பதிவு.