Wednesday, February 3, 2010

ஒருவழிச்சாலைகளில்...

அவ்வப்போது சிவப்பு விளக்குகளைப் பார்த்துச் சிணுங்குகிறபோதெல்லாம், நெரிசல்கள் பெருகுவது குறித்து நினைத்துப்பார்த்ததுண்டு. வலுக்கட்டாயமாக வாகனப்புகைகளை சுவாசித்தபடி, போக்குவரத்துக்காவலர்கள் கைகாட்டும் திசைகளிலும், துருப்பிடித்த கம்பங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் குறியீடுகளுக்கொப்ப அவரவர் வாகனம் பயணிப்பது போலவே வாழ்க்கையும் சின்னச் சின்னச் சந்துகளுக்குள்ளும் சென்றுகொண்டுதானிருக்கிறது. எத்தனையோ நெரிசல்களில் சிக்குண்டு தவித்த கசப்பான அனுபவங்களை, அதே போன்ற அடுத்த அனுபவம் ஏற்படும்போது ஒப்பிட்டுப் பார்க்கிற வழக்கமும் ஒட்டிக்கொண்டே உடன் வருகிறது.

சில அத்தியாவசியமான தருணங்களில் என்னை வீதியில் நிற்க வைத்ததை மறந்துவிட்டால், எனது இருசக்கர வாகனத்தின் மீது வேறு எந்த கோபமும் இல்லை. ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கிறபோதெல்லாம்,’இது தான் எனது முதல் சொத்து,’ என்ற பெருமிதம் ஏற்படுகிறது. அதில் பல சினேகிதர்களைப் பின்னால் அமர்த்தியதுண்டு என்றபோதிலும், நானோ எனது வாகனமோ, நகரத்தின் பெரும்பாலானவர் போல முதுகுடன் உரசியமர்கிற ஏதோ ஒரு பெண்ணுக்கு இடமளிக்கிற பிறவிப்பயனை இன்னும் அடையவில்லை. அந்தப் பொறாமையும் ஆற்றாமையும் எப்போதாவது விரக்தி சூழுகிற பொழுதுகளில் வெளிப்படுவதுண்டு.

உயிரற்ற வாகனம் என்கிறபோதும், அதன் மீது ஏற்படுகிற ஒரு அசாத்தியமான வாஞ்சை சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. ஆயினும், இந்த வாகனமும் எனக்கு சில மகிழ்ச்சியான தருணங்களை அளித்திருக்கிறது. நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் இந்த வாகனம் என்னுள் ஒரு அங்கமாகியிருக்கிறது. இது கேட்கிறவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்; எனக்கே இருந்ததுண்டு.

இந்த வாகனத்தை வாங்கி வந்த புதிதில், அதன் புதுச்சாயவாசனையின் போதை தெளியாத அந்த நாட்களில் சில நட்புக்களை ஊடுருவிப் பார்க்கிற மூன்றாம் கண்ணை அது எனக்கு வரமளித்திருந்தது. எனது வெற்றியின் முதல்படியாக அதை உருவகப்படுத்திய நண்பர்கள் தான் பெரும்பாலானவர்கள்- அவ்வளவு பெருந்தன்மையுள்ள நண்பர்கள் கிடைப்பது இறைவன் அபூர்வமாக அளிக்கிற வரங்களில் ஒன்று. ஆனால்......

"நாளைக்கு ஒரு நாள் உன் வண்டியைத் தர முடியுமா?"

கேட்டவன் எனது உயிர் நண்பர்களில் ஒருவன் தான்

"ஞாயிற்றுக்கிழமை தானே? தாராளமாக எடுத்துக்கொண்டு போ!"

மறுநாள் அவனுக்குச் சாவி கொடுத்தபோது, மனதில் ஏதோ உறுத்தியது. முதல்நாள் அவன் கேட்டதுமே முழுமனதோடு சம்மதித்த பெருந்தன்மையில் ஏதோ சேதாரம் ஏற்பட்டிருப்பது போலிருந்தது. அவன் ஓட்டிக்கொண்டு தெருமுனையில் திரும்பும்வரையிலும் பார்த்துக்கொண்டு நின்றவன், "இவனுக்குத் தானே கொடுத்திருக்கிறோம்?" என்று எண்ணிக்கொண்டு அறைக்குத் திரும்பி விட்டேன். அவனும் அன்று மாலை அல்லது முன்னிரவில் திரும்பிக்கொண்டு வந்து விட்டு ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டுச் சென்று விட்டான்.

ஆனால், அவன் திரும்பி வருகிற வரைக்கும் நான் கொடுத்தது சரிதானா என்று என்னையே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் மீது நம்பிக்கை இருந்திருந்ததால் முதலில் கொடுத்தவனுக்கு, பின்னால் இப்படியொரு சலனம் ஏற்பட்டதற்கு எனது வாகனத்தின் மீது எனக்கிருந்த ஈடுபாடே காரணமாயிருக்கலாம் என்று மீண்டும் ஒரு முறை ஒரு சுலபமான காரணத்தைக் கற்பித்துக் கொண்டு உறங்கி விட்டேன்.

மறுநாள், எனது வண்டியைக் கிளப்புகையில், அதில் தென்பட்ட சில கீறல்களும், கூர்ந்து கவனித்தால் தட்டுப்பட்ட ஓரிரு நசுங்கல்களையும் பார்த்து ஒரு கணம் எனது இதயம் ஸ்தம்பித்து நின்றது. உயிரற்ற எனது வாகனத்திற்கு மரணக்காயம் ஏற்பட்டு விட்டது போல என் மனதுக்குள்ளே ஒரு வேதனைக்குரல் எம்பி எழுந்தது. அதை விடவும், தான் நண்பனின் வாகனத்தைச் சேதப்படுத்தியது குறித்துத் தெரிவிக்க வேண்டியது தனது கடமையென்பதைக் கூடவா அவன் மறந்து விட்டான் என்ற கேள்வியின் இறுக்கத்தில் உள்ளுக்குள்ளே ஒரு தீ பற்றிக்கொண்டது.

நட்பு என்பது பரஸ்பர நம்பிக்கை மட்டுமே என்ற இலகுவான சூத்திரத்தை அவன் நூல்கண்டில் ஏற்பட்ட சிக்கலாக்கி விட்டுச் சென்றிருந்தான். வண்டியின் கீறல்களை சீர்செய்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை; அது உயிரற்றது என்பதால் மிகவும் எளிதில் இழந்த பளபளப்பை மீண்டும் அடைந்தது.

ஆனால், அவனுடனான எனது நட்பு நகரத்தின் நெரிசல்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒருவழிச்சாலைகள் போல இருப்பதைத் தாள முடியாமல் ஏற்பட்ட ஒரு கண்ணுக்குத் தெரியாத விரிசல்- ஒவ்வொரு முறை ஒருவழிச்சாலைகளில் விரையும்போதும் மேலும் பிளந்துகொண்டு தன்னை உணர்த்துவதுபோல இருக்கிறது.

அதன்பிறகு, அவனும் நாளாவட்டத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி விட்டான். அவனிடம் யாராவது வண்டி இரவல் கேட்டார்களா, தெரியவில்லை.

3 comments:

Ananya Mahadevan said...

அருமையான எழுத்து நடை.

settaikkaran said...

//அருமையான எழுத்து நடை.//


மிக்க நன்றிங்க!

manjoorraja said...

சொந்த வண்டி வைத்திருப்பவர்கள் பலருக்கும் இப்படி நேருவது சகஜம் தான்.

ஆனால் அதே நேரத்தில் நாமே சில சமயம் கவனக்குறைவால் எங்காவது உரசியிருப்போம். அல்லது எங்காவது நிறுத்தியிருக்கும் போது யாரேனும் உராய்ந்ந்து செல்வதன் காரணமாய் சிறு கீறல்கள் ஏற்பட்டிருக்கும். அதை கவனிக்காமல் விட்டிருப்போம். நண்பர் எடுத்து போய் திரும்ப கொண்டு வரும் போது நாம் நம் வண்டியை உற்றுப்பார்க்கும் போதே (ஏதேனும் தப்பு கண்டுப்பிடிக்க நம் மனம் தயாராகிவிடுகிறது என்பது கசப்பான உண்மை) கீறல்களை கண்டுப்பிடிக்கும் போது நண்பனால் தான் அது ஏற்பட்டிருக்கவேண்டும் என நினைத்துக்கொள்கிறோம். நம்பி விடுகிறோம். நண்பருக்கே தெரியாமல் கீறல்கள் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதையும் நாம் மறந்துவிடுகிறோம். அதை நண்பரும் கவனித்திருக்க மாட்டார். இது போன்ற சூழ்நிலைகளில் நாம் யாரை குறை சொல்லியும் பிரயோசனம் இல்லை அல்லவா...

நண்பனை கேட்டால் நான் எதுவுமே செய்யவில்லை, எந்த விபத்தும் நடக்கவில்லை என்பான். நீங்களும் கீறல்கள் முதலில் இருக்கவில்லை இப்ப தான் இருக்கிறது என்பீர்கள். இதனால் தேவையற்ற மனக்கசப்புகள் நண்பர்களுக்கிடையே ஏற்படும் வாய்ப்பு உண்டு (உங்களுக்கு ஏற்பட்டது போல)

(இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருப்பதால் தான் இதை எழுதுகிறேன்) நான் சொல்லவந்தது இதை ஒரு பெரிய விசயமாக எடுத்து நல்ல நட்பில் விரிசல் ஏற்படக் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதே

புரிதலுக்கு நன்றி.