Monday, February 15, 2010

ஜீரகசிந்தாமணி



தெரியாத்தனமாக நான் வலைப்பதிவு ஆரம்பிச்சிருக்கிறதையும், நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணிகிட்டே சொல்லிட்டேன். அவுங்க பேரு சிந்தாமணி! எங்க ஆபீசிலே அவங்களை எல்லாரும் "ஜீரகசிந்தாமணி"ன்னு தான் கூப்பிடுவாங்க! அனேகமா அவங்க காப்பி,டீ தவிர எதுவாயிருந்தாலும் "ஜீரகம் போட்டிருந்தா நல்லாயிருக்கும்,"னு சொல்லுவாங்க!

"நல்லாயிருக்குடா உன்னோட ப்ளாக்; சராசரியா ஒரு நாளைக்கு நூறு பேர் வர்றாங்க போலிருக்கே?"ன்னு ஆச்சரியமாக் கேட்டாங்க! இருக்காதா பின்னே, ஜக்குபாய் ஈ ஓட்டிக்கிட்டிருக்கிறபோது மக்குபாய்க்கு தினம் நூறு பேர் வர்றது ஆச்சரியம் தானே?

இன்னிக்கு அம்மணி வூட்டுக்குப் போனதும் அவங்க புருஷன் துணையோட வலைப்பதிவு போட்டிருவாங்கன்னு பட்சி சொல்லிச்சு! சிந்தாமணி அம்மாவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா இல்லே தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ஒரு பதிவை ஆரம்பிச்சிருவாங்கன்னு என் மனசுக்குப் பட்டுது. ரூமுக்கு வந்து நான் கண்ணை மூடினதும் சிந்தாமணியும் அவங்க புருஷனும் கணினி முன்னாடி உட்கார்ந்துகிட்டு வலைப்பதிவை ஆரம்பிக்கிற அந்தக் கண்கொள்ளாக்காட்சி எந்த விளம்பர இடைவேளையும் இல்லாம எனக்குத் தெரிய ஆரம்பிச்சது.

அது மட்டுமா? சிந்தாமணியோட கணவர் சிந்தினமணி மனசுக்குள்ளே என்னென்ன நினைக்கிறாரோ அதெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பிச்சிருச்சு. அவர் நல்ல நாளிலேயே பேச மாட்டாரு; போதாக்குறைக்கு அன்னிக்கு சிந்தாமணி "ஜலந்தர் ஜவ்வரிசி உப்புமா" பண்ணியிருந்தாங்க! (சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜலந்தர் மேலே போட்டுட்டாங்க.) ஜ.ஜ.உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து சிந்தினமணி குசேலன் படத்துலே பசுபதி மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்.

"முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு போடலாங்களா?"

"ம்" அதுக்கு மேலே சிந்தினமணியாலே வாயைத் தொறக்க முடியலே! ஜ.ஜ.உப்புமாவோட ஜாலம்!

அம்மணிக்குத் தமிழிலே தட்டச்சு செய்ய முடியாதுன்னுறதுனாலே சிந்தினமணி தான் பண்ணியாகணும். அவரு மனசுக்குள்ளே என்னை வாயிலே வந்தபடி திட்டிக்கிட்டே சிந்தாமணி சொல்லச் சொல்ல தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!

"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"

"சாப்பிட ரெண்டு பேர்!" சிந்தினமணி மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!

"ஏதாவது சொன்னீங்களா?" சிந்தாமணி கேட்குறாங்க. சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!

"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரபண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"

"ரொம்ப முக்கியம்...," இது சிந்தினமணியோட மனசாட்சி.

"வாணலி...."

"----------"

"ஐயோ, வானொலி இல்லீங்க...வாணலி.! இலுப்புச்சட்டி...உங்க தலையை மாதிரி இருக்குமே...!"

இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ சிந்தின மணி பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!

ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!

"பாம்பே ரவை!"

"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை," இது சிந்தினமணியின் மனசாட்சி.

"வெங்காயம்..."

"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."

"தக்காளி!"

"க்கும்..கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"

"உருளைக்கிழங்கு..."

"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"

"கேரட்!"

"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"

"பட்டாணி!"

"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."

"பச்சை மிளகாய்...இஞ்சி...கருவேப்பிலை..கொத்தமல்லி..."

"அட, சுக்கு,மிளகு,திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"

"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"

"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"

"கடுகு,கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."

"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"

"ஜீரகம்....!"

"அதானே பார்த்தேன்!"

"ரீஃபைண்டு ஆயில்..."

"என்ன வெலை விக்குது தெரியுமா?"

"தேவையான அளவு உப்பு!"

"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"

"தண்ணீர்..."

"சாப்பிடறதுக்கு முன்னாலேயும் அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."

"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"

"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."

"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."

"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."

"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."

"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."

"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."

"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"

"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."

"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"

"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."

"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."

"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."

"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."

"பச்சை மிளகாயைக் கீறவும்..."

"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."

"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."

"முதல் பதிவுலேயே இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"

"கருவேப்பிலை,கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."

"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"

"வாணலியிலே எண்ணையை விட்டு....."

"திரும்ப முதல்லேயிருந்தா....?அவ்வ்வ்வ்வ்.....!"

"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம்,வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு....."

"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"

"பொன்னிறமானதும்....."

"அதைக் கொண்டு போய் வும்மிடியிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."

"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."

"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்...ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."

"பட்டாணி,தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."

"ஆமா...அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."

"கருவேப்பிலை கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."

"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"

"ரவையை மெதுவாகக்கிளறிக்கிட்டே இருக்கணும்..."

"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."

"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."

"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."

"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."

"எதை? ஆவியையா....?"

"சூடான சுவையான உப்புமா தயார்!"

"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"

"உங்களுக்கு இந்தக் குறிப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடவும்..."

"ஆமா, இவ பண்ணுற உப்புமாவுக்கு ஓட்டுப்போட்டு பார்லிமெண்டுக்கு அனுப்புவாங்க...."

"இது முதல் பதிவு என்பதால் வெறும் குறிப்போடு நிறுத்திக்கொள்கிறேன். அடுத்த பதிவிலே பதார்த்தத்தின் போட்டோவும் இடம்பெறும்."

"அதை அப்புறம் பார்க்கலாம். இதைப் படிச்சுப்பார்த்திட்டு, செஞ்சு தின்னுப்புட்டு, நாளைக்கு பேப்பரிலே எத்தனை பேர் போட்டோ வரப்போவுதோ...?"

******

எனது ஞானதிருஷ்டி கலைந்தது. அனேகமாக, இன்னேரம் ஜீரகசிந்தாமணியின் வலைப்பதிவை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஹலோ, ஓடாதீங்க.....! நில்லுங்க....! ஒண்ணும் பண்ண மாட்டேன்.

25 comments:

manjoorraja said...

"பொன்னிறமானதும்....."

"அதைக் கொண்டு போய் வும்மிடியிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."


சிரிச்சி சிரிச்சு...... அலுவலகத்தில் எல்லோரும் ஒரு மாதிரி பாக்கவச்சிட்டெயே சேட்டை....!

Ananya Mahadevan said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடுத்து.

Ananya Mahadevan said...

அதெப்படி லைவ்வா பாக்கறமாதிரி இருக்கு உன் பதிவு? எக்ஸல்ண்ட் ஃப்ளொ!

சைவகொத்துப்பரோட்டா said...

தெய்வமே, செமை கிண்டு, நல்லாவே கிண்டி இருக்கீங்க (உப்புமாவ) :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

சேட்டை இங்கேயும் ஆரம்பிச்சாச்சா சேட்டையை ...

உப்புமாவை கிண்டோகிண்டுன்னு கிண்டி சட்டியோட ஒட்டிக்கிச்சா ..

கட்டபொம்மன் said...

மன்னர் அரண்மையில உங்களை உப்புமா கிண்ட கூப்பிட்டாங்க .

இது மன்னர் கட்டபொம்மன் உத்தரவு சாமியோவ் .

அண்ணாமலையான் said...

கலக்கல்....

settaikkaran said...

//சிரிச்சி சிரிச்சு...... அலுவலகத்தில் எல்லோரும் ஒரு மாதிரி பாக்கவச்சிட்டெயே சேட்டை....!//

ஹி..ஹி..ஹி! அதுக்குத் தானே இவ்வளவு மெனக்கிடுறது! சந்தோஷமாயிருக்கணும் எல்லாரும்...அம்புட்டுத்தேன்! நன்றிண்ணே!!

settaikkaran said...

// சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போயிடுத்து.//

உப்புமா சாப்பிடாமலேயா....? :-)))) நன்றி!!

settaikkaran said...

// அதெப்படி லைவ்வா பாக்கறமாதிரி இருக்கு உன் பதிவு? எக்ஸல்ண்ட் ஃப்ளொ!//

இருக்காதா பின்னே? நான் ஞானதிருஷ்டியிலே "லைவ்"வாப் பார்த்துக்கிட்டே எழுதினதாச்சே! மீண்டும் நன்றி...!!

settaikkaran said...

//தெய்வமே, செமை கிண்டு, நல்லாவே கிண்டி இருக்கீங்க (உப்புமாவ) :)) //

ஆஹா! ரொம்ப நன்றிங்கண்ணே! வேறென்ன வேணும்...? :-))

settaikkaran said...

//சேட்டை இங்கேயும் ஆரம்பிச்சாச்சா சேட்டையை//

எங்கும் சேட்டை; எதிலும் சேட்டைங்கிறது நம்ம கொள்கையாச்சே!

//உப்புமாவை கிண்டோகிண்டுன்னு கிண்டி சட்டியோட ஒட்டிக்கிச்சா ..//

அண்ணே! இது ஜீரகசிந்தாமணி வலைப்பதிவைப் படிச்சவங்க கிட்டே கேட்க வேண்டிய கேள்வில்லா? :-))) நன்றிண்ணே!!

settaikkaran said...

//மன்னர் அரண்மையில உங்களை உப்புமா கிண்ட கூப்பிட்டாங்க .//

மன்னரே, தங்கள் சித்தம் என் பாக்கியம்!

//இது மன்னர் கட்டபொம்மன் உத்தரவு சாமியோவ்//

கிளம்பிட்டோமில்லே...? நன்றி மன்னரே!

settaikkaran said...

//கலக்கல்....//

நன்றிங்கண்ணே!

அகல்விளக்கு said...

ஹிஹிஹிஹிஹி...

இப்பதிவைப் பற்றிய அவர்களது கருத்து என்ன அண்ணே......

:-)

settaikkaran said...

//ஹிஹிஹிஹிஹி...

இப்பதிவைப் பற்றிய அவர்களது கருத்து என்ன அண்ணே......

:-)//
இன்னிக்கு அவங்க பிஸி! புது அயிட்டம் பத்தி பதிவு ரெடி பண்ணிட்டிருக்காங்க! பிரண்டை அல்வாய்! ஹி..ஹி..!

நன்றிண்ணே!!

பனித்துளி சங்கர் said...

ஏலே மக்கா நல்லா இருக்குல
சொல்றது எல்லா சொல்லிட்டு இது முதல் பதிவுனு வேற எழுதிருக்க .
வாழ்த்துக்கள் !!!!

settaikkaran said...

//ஏலே மக்கா நல்லா இருக்குல
சொல்றது எல்லா சொல்லிட்டு இது முதல் பதிவுனு வேற எழுதிருக்க .
வாழ்த்துக்கள் !!!!//

ஹி...ஹி! வாங்கண்ணே! பிடிச்சிருந்ததா? சந்தோஷம்..! அடிக்கடி வாங்க...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜீரகசிந்தாமணி மூணு பார்சல்...
நம்ம பிரெண்ஸ் சிலபேரு இருக்கானுக..

பிப் 14 , டீரீட் வேணுமாம.. வாய அடைக்க
வேற வழியில்ல..
தயவுசெஞ்சு , ஆறின பின் அனுப்பவும்..

இதுமட்டும் நான் நினைத்தது போல் நடந்தால், உங்களுக்கு
மேல் மேலும் ஆர்டர் கிட்டும் என் தெரிவித்துக்கொள்கிறேன்..
-இவன் பட்டாபட்டி

settaikkaran said...

//ஜீரகசிந்தாமணி மூணு பார்சல்...
நம்ம பிரெண்ஸ் சிலபேரு இருக்கானுக..பிப் 14 , டீரீட் வேணுமாம.. வாய அடைக்க வேற வழியில்ல..தயவுசெஞ்சு , ஆறின பின் அனுப்பவும்..//

சூடா சாப்பிட்டா விசாவே வேண்டாமாம்! போர்டிங் பாஸ் கையோட கொடுத்திருவாங்களாம்.

//இதுமட்டும் நான் நினைத்தது போல் நடந்தால், உங்களுக்கு மேல் மேலும் ஆர்டர் கிட்டும் என் தெரிவித்துக்கொள்கிறேன்..//

இப்பவே ஆர்டர் வந்து குவிய ஆரம்பித்து விட்டது. அப்பப்பா, ஒரு பதிவைப் போட்டாலும் போட்டேன், காலங்கார்த்தாலே தூக்கத்துலேருந்து எழுப்பி எழுப்பி உப்புமா கேட்குறாங்க அண்ணே!

நன்றி...

Chitra said...

ஜக்குபாய் ஈ ஓட்டிக்கிட்டிருக்கிறபோது மக்குபாய்க்கு தினம் நூறு பேர் வர்றது ஆச்சரியம் தானே?

.............இந்த அளவுக்கு நகைச்சுவை இருந்தா, எப்படி கூட்டம் சேராம இருக்கும்? ஹா,ஹா,ஹா,.....

settaikkaran said...

///...........இந்த அளவுக்கு நகைச்சுவை இருந்தா, எப்படி கூட்டம் சேராம இருக்கும்? ஹா,ஹா,ஹா,.....//

ரொம்ப நன்றிங்க! அடிக்கடி வந்து நாலு வார்த்தை நல்லதாச் சொல்லிட்டுப்போங்க!

ரிஷபன் said...

நல்ல காமெடி

settaikkaran said...

//நல்ல காமெடி//

நன்றி ரிஷபன் அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Mythili (மைதிலி ) said...

உப்புமாவை எப்படி கிண்டி எடுத்தீங்களோ? நல்ல கிண்டி விட்டிருக்கீங்க.. சிரிப்பை...