Sunday, August 21, 2011

காவிக்கும் கதருக்கும் கல்யாணமாம்..!

எனது "உண்ணா ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்," என்ற இடுகையில் சில கருத்துக்களை வேண்டுமென்றே தவிர்த்தேன். காரணம், அண்ணாவின் போராட்டத்திற்கு விபரீதமான சாயம்பூச முயல்கிறேனோ என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு! ஆனால், நேற்றைய தினம் அண்ணா ஹஜாரே தனது அடுத்த அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதற்கு மேலும், எனக்குத் தெரிந்ததை எழுதாமல் இருப்பது சரியல்ல.

"எங்களது போராட்டத்துக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்பவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் ," என்று முழங்கியிருக்கிறார் அண்ணா ஹஜாரே!

யாரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டுமாம்? அண்ணாவின் போராட்டத்தில் வலதுசாரிகளின் மறைமுகமான ஆதரவு இருக்குமோ என்று வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையையா?

முதலில் ஒரு சாம்பிள்! ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு தில்லி காவல்துறை முதலில் மறுத்தபோது, பா.ஜ.கவின் கட்டுப்பாட்டிலிருக்கும் தில்லி மாநகராட்சி அண்ணா ஹஜாரேவுக்கு அனுமதி வழங்கியிருந்தது என்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இனி, விபரமாகப் பார்க்கலாம்.

நான் பார்த்தவரையிலும் தமிழகத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பலருக்கு ஜன் லோக்பால் சட்டத்தைப் பற்றியே கூட சரியாகத் தெரியவில்லை. ஜன் லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிற கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தேசத்தையே சுபிட்சமாக்கி விடலாம் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வருகிறார்கள். (ஒருவேளை அண்ணா ஹஜாரே இதைச் சாக்கிட்டு ஒவ்வொரு வெளிநாடாகப் போய் அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார் போலிருக்கிறது.) ஆக, அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தின் குறிக்கோள் (?) பற்றியே சரிவர அறிந்திராதவர்களுக்கு, அந்தப் போராட்டம் தில்லியில் எப்படி நடக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ராம்லீலா மைதானத்தில் நாளொரு நகைச்சுவையும், பொழுதொரு வேடிக்கையும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அங்கே மேடையில் பேசுகிறவர்களிடத்தில் ஊழல் குறித்த புரிதல் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை உற்றுக்கவனித்தால், அது நான் வழக்கமாக எழுதுகிற மொக்கைகளை விடவும் படுகேவலமாக இருக்கிறது. (போகிற போக்கில் அண்ணா என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று பயமாயிருக்கிறது.)

ஒருவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தையும் ஊழல் என்று சாடியிருக்கிறார். இன்னொருவர் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மின் அடையாள அட்டை வழங்குவதையும் ஊழல் என்று பேசியிருக்கிறார். (பாவம் நந்தன் நிலகேனி, இனி அண்ணாவின் போராட்டத்தைப் பற்றிக் குறைகூறுவாரா?)

ராம்லீலாவில் வந்து குவிகிற ஆதரவுக்கூட்டம், ஒட்டுமொத்தமாக நம்பிக்கையையே இழந்துபோய், இனி அண்ணாவை விட்டால் வேறு விமோசனமேயில்லை என்று சரணாகதியான கூட்டம். அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டம் வந்தால், இருபது நிமிடத்தில் வீட்டுக்குப் பிஸ்ஸா வருவது போல ஊழலற்ற சமுதாயம் வந்துவிடும் என்று நாக்கைத் தொங்கப்போட்டபடி காத்திருக்கிறார்கள். இவர்களை நன்கு புரிந்து கொண்டுவிட்டதாலோ என்னமோ, கிரண் பேடி நேற்றொரு பொன்மொழியை உதிர்த்திருக்கிறார்.

"அண்ணா என்றால் இந்தியா; இந்தியா என்றால் அண்ணா!" (Anna is India; India is Anna)."

இந்திரா அம்மையாரின் எமர்ஜன்ஸியின் போது, காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப்பூசாரி டி.கே.பரூவா "Indira is India; India is Indira" என்ற துதியை உருவாக்கியது ஞாபகத்துக்கு வருகிறதா? இது கூட பரவாயில்லை. அடுத்து, கிரண் பேடி சொல்லியிருப்பதைக் கேட்டால், பலர் சிரித்துச் சிரித்துச் சுருண்டு விழுந்து செத்தே போய் விடுவார்கள்.

"அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்!" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர் கிரண் பேடி! கூடுகிற மக்களை அடிமுட்டாள்கள் என்று முடிவே கட்டிவிட்டார்கள் என்பதற்கு இந்தப் பிதற்றலைத் தவிரவும் வேறு சான்று வேண்டுமா?

அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? அண்ணா ஹஜாரேயின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஆளாளுக்கு முடிந்தவரையில் அண்டப்புளுகுகளை அள்ளி இறைக்கிறார்கள். அதற்கு சிகரம் வைத்தாற்போல், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் முயற்சிதான் - "எங்களுக்கு பா.ஜ.கவின் ஆதரவோ ஆர்.எஸ்.எஸ்சின் ஆதரவோ இல்லை," என்பதும்!

அந்தக் கணக்குப்படி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அடுத்தபடியாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய இருவர் வருண் காந்தியும், சுஷ்மா ஸ்வராஜும்! அவர்கள் இருவரும் எப்போது ’ஆம்புலன்ஸ்’ வருமோ என்ற அச்சத்தில் கதவுகளைச் சாத்திக்கொண்டு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக அவரவர் வீட்டில் "உள்ளிருப்புப் போராட்டம்," நடத்துவதாகக் கேள்வி!

வருண் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் என்ற தனிப்பட்ட தகுதியில் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறார் என்பதை அனைவரும் அறிவர். ஒரு வேளை, பா.ஜ.க அண்ணாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், வருண் காந்தியின் இந்தத் தன்னிச்சையான செய்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா? அவர்கள் கண்டித்திருக்க மாட்டார்களா?

எதற்குக் கண்டிக்க வேண்டும்? பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி அண்ணா ஹஜாரேவுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டார். நீதித்துறையை லோக்பாலில் கொண்டுவருவது போன்ற ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித்தலைவரான அருண் ஜேட்லியும் ஆதரவு தெரிவித்தாகி விட்டது.

லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பதில் அளித்தபோது அண்ணாவுக்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக ஒத்துக்கொண்டும் விட்டார். அத்தோடு நிறுத்தினாரா என்றால் அதுதான் இல்லை.

"India Against Corruption என்ற அமைப்பே பெருவாரியான ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்களால் துவங்கப்பட்ட அமைப்புதான். ஆகவே, யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறது," என்று பாராளுமன்றத்திலேயே அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். (India Against Corruption அரசியல் சார்பற்றது என்று புளுகி வந்தவர்களே, சுஷ்மா ஸ்வராஜ் சொல்லியிருப்பதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வக்கிருக்கிறதா?)

அண்ணாவின் உண்ணாவிரதம் நம்பர் 1-ன் போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த உமா பாரதியைத் திருப்பி அனுப்பிய கொள்கைவீரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சுக்கு இன்னும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க!

நான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல, மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி அண்ணாவின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கியிருந்தால், இம்முறை அவரது சாயம் வெளுத்திருக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பதினைந்து முறை அண்ணா ஹஜாரேயின் போராட்டங்களை பிசுபிசுக்கச் செய்த விலாஸ்ராவ் தேஷ்முக்கையோ, ஷரத் பவாரையோ கலந்தாலோசிக்காமல், குழப்படி மன்னர்களான சிதம்பரம், கபில் சிபல் ஆகியோரின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு, படுதோல்வியடைந்திருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிய பெருமை, மத்தியிலிருக்கிற விவஸ்தை கெட்ட காங்கிரஸ் அரசையே சாரும்!

ஆக, பா.ஜ.கவின் ஆதரவு அண்ணாவுக்கு இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆர்.எஸ்.எஸ்-ஸின் அனுமதியின்றி பா.ஜ.கவால் காதுகுடையவும் முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே! முழுக்க நனைந்தபிறகு முக்காடுபோட்டு மறைக்க முற்படுகிற அண்ணாவின் அண்டப்புளுகு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும்?

ஆரம்பகாலத்தில் அண்ணா ஆர்.எஸ்.எஸ்-சில் இருந்தார்.அதனால் தான் தனது தொண்டு நிறுவனத்துக்கு ’ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்’ என்று பெயரிட்டார். பா.ஜ.க-சிவ சேனா கூட்டணி ஆட்சி ஆரம்பத்தில் அவருக்குப் பின்புலத்தில் இருந்தது. அவர் மாணவர்களுக்கு சத்ரபதி சிவாஜியைப் பற்றியும் வீர் சாவர்க்கரைப் பற்றியும்தான் போதித்து வருகிறார் என்பதையும் நினைவூட்டியே ஆக வேண்டும்.

"அண்ணா ஹஜாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் தொடர்பிருந்தால், சிவசேனா அவருக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?’ என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்புகிறார்கள். பால் தாக்கரேவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடு, கொள்கை அடிப்படையிலானது அல்ல; தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள். அதனால் தான், முதலில் ’அண்ணா ஹஜாரே ஒரு தாலிபான் காந்தி,’ என்று முழங்கிய சிவசேனா, அடுத்த நாளே உத்தவ் தாக்கரேயின் அறிக்கையின் மூலம் அண்ணாவுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. அது மட்டுமா? அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா ஒரு நாள் "குளியாப் போராட்டம்," நடத்தியிருக்கிறது.


இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியிருப்பவர் சிவசேனாவின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் அவ்தி!

இது மட்டுமா? சங்பரிவாரின் இளைஞர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கிலும் போராடி வருவதை பல செய்திகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ABVP supports Hazare's campaign in MP-India Today

ABVP bandh on Anna shuts colleges for a day in UP

இதே போல அஸாம், குஜராத், பீஹார், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் ABVP ஆதரவாளர்கள் அண்ணா ஹஜாரேவுக்காக பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் வலுக்கட்டாயமாக மூடிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அத்துடன், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தைக் காரணமாக வைத்து சிறுபான்மையினரால் நடத்தப்படுகிற ஸ்தாபனங்களின் மீது சில தாக்குதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. உதாரணத்துக்கு....

Jharkhand: ABVP cadres ransack missionary school over Anna protest

நாடெங்கிலும் அண்ணாவுக்கு ஆதரவான போராட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்தேறின என்று பெருமைப்பட்டுக்கொள்கிற அண்ணாவின் பஜனைகோஷ்டி, ABVP யின் இந்த அராஜகத்தைக் கண்டுகொள்ளவில்லை; கண்டிக்கவில்லை என்பதற்கு என்ன பொருள்? அவர்களுக்கு எப்படியாவது நாடுமுழுவதும் போராட்டம் சூடுபிடிக்க வேண்டும்; யார் கூட்டத்தைக் கூட்டினாலும் பரவாயில்லை; எப்படிக் கூட்டினாலும் பரவாயில்லை; என்ன அசம்பாவிதம் நடந்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? (அது சரி, சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களிடம் எதிர்பார்ப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்?)

பா.ஜ.க அண்ணா ஹஜாரேவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறதல்லவா? அவர்களது சிவில் சொஸைட்டியிலேயே ஒரு முக்கியப் பிரமுகரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பாவின் சுரங்க ஊழலை லோகாயுக்தாவின் மூலம் அம்பலப்படுத்தியபோதும், அந்த ஊழலில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு உதவிபுரியும் ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையும் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அமைதி காத்த புண்ணியவான்கள் அல்லவா அண்ணாவின் பஜனை கோஷ்டி? இந்த கைமாறு கூட செய்யாவிட்டால் எப்படி?

சரி, அண்ணாவின் போராட்டத்தில் மதச்சார்புடைய அமைப்புக்கள் குதித்துவிட்டன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அத்தோடு முடிந்ததா?

இப்போது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிற சாகும்வரை அல்லது காலவரையற்ற அல்லது முடிந்தவரை உண்ணாவிரதத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பது யார்? கிராந்திகாரி மனுவாதி மோர்ச்சா(KMM).

கிராந்திகாரி என்றால் புரட்சிவாதிகள்; மனுவாதி என்றால் மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள். இந்த KMM-இன் அடிப்படைக் கொள்கையே ஜாதி அடிப்படையில் இட ஓதுக்கீடு கூடாது என்பதுதான். அந்தக் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.பரத்வாஜ் கடந்த இரண்டு மாதங்களில் 30 நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியிருக்கிறார். ஊழல் ஒழிப்புக்கும் மனுதர்மத்துக்கும் என்ன தொடர்பு?

"மனுதர்மத்தைப் புரட்சியின் மூலம் நிலைநிறுத்தினாலொழிய ஊழல் ஒழியாது. காரணம், ஊழலுக்கு அடிப்படைக்காரணமே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான். சலுகை பெறுகிறவர்கள் பதவிக்குப் போய் ஊழல் செய்கிறார்கள். சலுகை பெறத் தகுதியற்றவர்கள் புழுங்குகிறார்கள்." - இதுவே ஆர்.கே.பரத்வாஜின் விளக்கம்

திக்விஜய் சிங் அண்ணா ஹஜாரேயைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் ஆரம்பத்தில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அதை நானே அதிகப்பிரசங்கித்தனம் என்று கருதினேன். ஆனால், இப்போது இந்த ஆதாரபூர்வமான செய்திகளை வாசிக்கும்போது, நடுநிலையிலிருந்து யோசித்தால் அவர் சொன்னதில் என்ன தவறு என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதே போல, அண்ணாவின் போராட்டத்தை உலக ஊடகங்கள் கண்டுகொள்ளத்தொடங்கியதும் பாரதீய ஜனதாக் கட்சியும் முன்பு எப்போதுமில்லாத முனைப்புடன் லோக்பால் சட்டத்தைக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தத்தானே செய்கிறது?

மதசார்புடைய கட்சிகளோ, ஜாதீய உள்நோக்கமுடைய அமைப்புகளோ ஊழலை எதிர்த்துப் போராடக்கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாகப் போராடுங்கள். ஆனால், அவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்ற உண்மையை மூடிமறைக்க அண்ணாவின் பஜனைகோஷ்டி பிடிவாதமாக முயல்வது ஏன்?

எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள்,’ என்று பொத்தம்பொதுவாகக் குற்றம் சாட்டிய அண்ணா ஹஜாரே, அதே திருடர்களின் ஒத்தாசையோடு போராடிக்கொண்டிருப்பது ஏன்?

ஆகஸ்ட் முப்பதுக்குள் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யாவிட்டால் சிறைநிரப்பும் போராட்டம் என்று சூளுரைத்த சிங்கம், திடீரென்று ’அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று யார் கொடுத்த தைரியத்தில் புதிய மிரட்டலை விடுத்திருக்கிறார்?

யோசிக்க விரும்புகிறவர்கள் யோசிக்கட்டும். மற்றவர்கள் கிரண் பேடி சொன்னது போல ’அண்ணா தான் இந்தியா; இந்தியா தான் அண்ணா,’ என்று குருட்டுத்தனமாக அந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கட்டும்.

டிஸ்கி: பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு, வசைமாரி பொழியக் காத்திருக்கும் அண்ணாவின் தொண்டர்களுக்கு ஒரு நற்செய்தி! அண்ணாவின் நாடகம் முடியும்வரை தொடர்ந்து அவ்வப்போது எழுதிக்கொண்டே இருப்பேன் - அவரைப் பற்றி! :-)))))))))

38 comments:

rajamelaiyur said...

Very confusion. .

த. ஜார்ஜ் said...

அண்ணா ' நாமம்'.. வாழ்க..!

Unknown said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...தாங்கள் சொல்ல வருவது என்ன.....ஊழலுக்கு எதிரான முயற்சியை எந்த வடிவத்திலும் ஆதரிப்பவனே ஒரு சராசரி இந்தியன்....இது என் கருத்து....!

Unknown said...

இந்த மாதிரி பதிவை படித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

நாய் நக்ஸ் said...

ஒரே பேஜாரா கீதுபா!!!
ஒன்னும் முடிவெடுக்க முடியாது போல!!!

ஸ்ரீராம். said...

"அண்ணா என்றால் இந்தியா; இந்தியா என்றால் அண்ணா!" //

You too kiran bedi...!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.சேட்டைக்காரன்...

வ்வ்வாஆஆஆஆஆஆவ்வ்வ்வ்...!

மிக முக்கியமான பதிவு சகோ. இது..!

எடுத்துக்கொண்ட தலைப்பில்... எனக்குத்தெரிந்து எந்த ஒரு செய்தியையும் நீங்க விட்ட மாதிரியே தெரியவில்லை. சில விஷயங்கள் எனக்கு முற்றிலும் புதிது. சுட்டிகள் மூலம்தான் அந்த செய்திகளையே இன்று அறிந்து கொண்டேன்.

முதலில் இந்த RSS டாப்பிக்கைத்தான் இன்று எழுதலாம் என்று யோசித்து ஓரளவு செய்திகளை திரட்டினேன்..! "நான்"... ஆர் எஸ் எஸ் கோணத்தில் இதை பற்றி எழுதினால்...//அண்ணாவின் போராட்டத்திற்கு விபரீதமான சாயம்பூச முயல்கிறேனோ என்ற சந்தேகம்//நிச்சயமாக ஏற்பட்டுவிடும் என்பதால்... இன்று பொதுவான விஷயங்களை தொட்டுவிட்டு அடுத்த பதிவாக இந்த RSS BJP BACKUP குறித்து எழுதலாம் என்று நினைத்து இருக்கையில்.....

ஒரே நேரத்தில்...! அப்ப்ப்ப்ப்ப்பாடா..! நான் ரிலாக்ஸ்..!

சூப்பரான அசத்தல் பதிவு சகோ.சேட்டை..! மறுபடியும் கலககிட்டீங்க..! ஹாட்ஸ் ஆஃப்..!

மிகவும் நன்றி..!

//(போகிற போக்கில் அண்ணா என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று பயமாயிருக்கிறது.)//---அண்ணா ஹசாரே செய்த இன்னொரு நல்ல காரியம்..!!!

நன்றி அண்ணா ஹசாரே..! (அவ்வ்வ்வ்வ்...)

periyar said...

எல்லாம் சரி தான்.திராவிட தமிழ் கும்பலும்,ஐ எஸ் ஐ/எல் ஐ டி கும்பலும் ஊழலுக்கு ஆதரவாக ஆளும் கட்சி அடி வருடி பிழைக்கிறார்களே கேவலமாக இல்லையா?

உமர் | Umar said...

+1

It is 'அன்னா' and not 'அண்ணா'.

Anonymous said...

வயதான அண்ணா என்பதால் ஒரு சுழி அதிகம் போட்டிருப்பார்..சேட்டைக்காரன் :)

ராஜ நடராஜன் said...

//அண்ணாவின் நாடகம் முடியும்வரை தொடர்ந்து அவ்வப்போது எழுதிக்கொண்டே இருப்பேன் - அவரைப் பற்றி! :-))))))))) //

அண்ணாவின் நாடகங்களை தி.மு.க காரர்கள் கூட இப்பொழுது படிப்பதில்லை:)

//
"எங்களது போராட்டத்துக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்பவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் ," //

இது மட்டுமா சொன்னார்?முன்னாடி எங்கள் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது என்று சொன்னார்கள்.விட்டால் பாகிஸ்தான் கூட ஆதரவளிக்கிறார்கள் என்றும் சொன்னார்:)

அன்னா ஹசாரேவுக்கான இளைய தலைமுறையின் கூட்டம் உங்கள் பதிவை பொய்யாக்குகிறது மட்டும் சொல்வேன்.

ராஜ நடராஜன் said...

ப.ஜ.க சுயநல நோக்கில் ஜன் லோக்பால் குழுவிடம் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தது.ஆனால் அன்னா ஹசாரே குழு மறுத்து விட்டது என்பது மட்டுமே உண்மை.

சரி!இப்படி வைத்துக்கொள்ளலாம்.அன்னா ஹசாரே குழு ப.ஜ.க முகமூடி போட்டுக்கொண்டு செயல்படுகிறது.
காங்கிரஸ் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்பதனை மறுமொழ்யில் தெரிவிக்கவும்.வெயிட்டிங்:)

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
என் வழமையான பங்களிப்புக்களை இங்கே வழங்கி விட்டுச் செல்கிறேன்,.
மன்னிக்கவும்,
அடியேனால் இப் பதிவினைச் சரியாகப் புரிந்து கருத்துக்களை வழங்குமளவிற்கு ஹசாரேயின் போரட்டம் பற்றிய என் சிற்றறிவு இடங்கொடுக்கவில்லை பாஸ்.

www.eraaedwin.com said...

மிக அருமை சேட்டை.
நிறைய எதிர் வினைகள் தேவைப் படுகிற நேரம் இது.

மனுவின் எதிரிகள் ஒன்று திரள வேண்டிய சந்தர்ப்பம் இது

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Very confusion. .//

இன்னுமா confusion? :-)
மிக்க நன்றி!


//த. ஜார்ஜ் said...

அண்ணா ' நாமம்'.. வாழ்க..!//

அவரை நம்பி நெற்றியைக் காட்டுகிற வரையிலும் ’நாமம்’ வாழும்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//விக்கியுலகம் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி//

இதில் எனது கருத்து கொஞ்சம்; ஆதாரங்களே அதிகம். :-)

//தாங்கள் சொல்ல வருவது என்ன//

ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் நடக்கிற கேலிக்கூத்தின் இரட்டைநிலை

//ஊழலுக்கு எதிரான முயற்சியை எந்த வடிவத்திலும் ஆதரிப்பவனே ஒரு சராசரி இந்தியன்//

எந்த வடிவத்திலும் என்றால், தீவிரவாதமும் சரிதானா? திரைமறைவில் சில நிகழ்வுகள் நடைபெறும்போது, போராட்டத்தின் நோக்கத்தை சந்தேகிப்பதும் சராசரி இந்தியனின் இயல்புதான்.

மிக்க நன்றி!

உணவு உலகம் said...

வந்தேன்.

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

இந்த மாதிரி பதிவை படித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.//

உங்கள் விருப்பம்! :-)
மிக்க நன்றி!

//NAAI-NAKKS said...

ஒரே பேஜாரா கீதுபா!!! ஒன்னும் முடிவெடுக்க முடியாது போல!!!//

உங்களை முடிவெடுக்க விட்டால்தானே? எல்லா முடிவுகளையும் ஒருத்தரே எடுக்கிறார். மிக்க நன்றி!

//ஸ்ரீராம். said...

"அண்ணா என்றால் இந்தியா; இந்தியா என்றால் அண்ணா!" //

You too kiran bedi...!!//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு கிரண் பேடி பதம்! மிக்க நன்றி!

settaikkaran said...

//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோ.சேட்டைக்காரன்...//

மிக்க நன்றி சகோதரரே!

//எடுத்துக்கொண்ட தலைப்பில்... எனக்குத்தெரிந்து எந்த ஒரு செய்தியையும் நீங்க விட்ட மாதிரியே தெரியவில்லை.//

இல்லை நண்பரே! நிறைய விஷயங்களை இதிலும் தவிர்த்திருக்கிறேன் - நீளம் கருதி! :-)

//சில விஷயங்கள் எனக்கு முற்றிலும் புதிது. சுட்டிகள் மூலம்தான் அந்த செய்திகளையே இன்று அறிந்து கொண்டேன்.//

ஒரு சில செய்திகளை நானே அண்மையில்தான் அறிந்தேன்!


//அடுத்த பதிவாக இந்த RSS BJP BACKUP குறித்து எழுதலாம் என்று நினைத்து இருக்கையில்.....//

ஆர்.எஸ்.எஸ்.மட்டுமா? :-)

//ஒரே நேரத்தில்...! அப்ப்ப்ப்ப்ப்பாடா..! நான் ரிலாக்ஸ்..!//

மகிழ்ச்சி! எப்படியோ உண்மை வெளிப்பட்டால் சரி!

//சூப்பரான அசத்தல் பதிவு சகோ.சேட்டை..! மறுபடியும் கலககிட்டீங்க..! ஹாட்ஸ் ஆஃப்..!//

மீண்டும் மிக்க நன்றி நண்பரே! :-)

///(போகிற போக்கில் அண்ணா என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று பயமாயிருக்கிறது.)//---அண்ணா ஹசாரே செய்த இன்னொரு நல்ல காரியம்..!!! நன்றி அண்ணா ஹசாரே..! (அவ்வ்வ்வ்வ்...)//

அப்படியென்ன உங்களுக்கு நான் தீங்கிழைத்து விட்டேன் சகோதரரே? நான் மொக்கை போட்டால் தப்பு, அதையே ராம்லீலாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி ஒருவர் போட்டால், எல்லாரும் விழுந்து விழுந்து பாராட்டுகிறார்களே...? :-))

settaikkaran said...

//periyar said...

எல்லாம் சரி தான்.திராவிட தமிழ் கும்பலும்,ஐ எஸ் ஐ/எல் ஐ டி கும்பலும் ஊழலுக்கு ஆதரவாக ஆளும் கட்சி அடி வருடி பிழைக்கிறார்களே கேவலமாக இல்லையா?//

ஊழல் யார் செய்தாலும் தவறுதான்! ஆனால், அண்ணா செய்து கொண்டிருப்பதற்கும் அதற்கும் இருக்கிற வித்தியாசம் தெரியவில்லையா?

மிக்க நன்றி!

//உமர் | Umar said...

+1

மிக்க நன்றி!

//It is 'அன்னா' and not 'அண்ணா'.//

இந்தியில் ’அன்னா’ என்றும் மராட்டியில் ’அண்ணா’ என்றும்தான் அழைக்கிறார்கள். "अण्णा" என்றுதான் மராட்டியச் செய்தித்தாள்களில் எழுதுகிறார்கள். எனவே, "அண்ணா" என்பதே சரி! :-)

//! சிவகுமார் ! said...

வயதான அண்ணா என்பதால் ஒரு சுழி அதிகம் போட்டிருப்பார்..சேட்டைக்காரன் :)//

ஊஹும்! மேலே விளக்கம் கொடுத்திருக்கேன் பாருங்க நண்பரே! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

அண்ணாவின் நாடகங்களை தி.மு.க காரர்கள் கூட இப்பொழுது படிப்பதில்லை:)//

அவரது தாய்மொழியான மராட்டியில் அவரை எப்படி அழைக்கிறார்கள் என்று சரிபாருங்கள்! :-)

//இது மட்டுமா சொன்னார்?முன்னாடி எங்கள் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது என்று சொன்னார்கள்.விட்டால் பாகிஸ்தான் கூட ஆதரவளிக்கிறார்கள் என்றும் சொன்னார்:)//

காங்கிரஸ் சொல்வதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? இது என் போன்றவர்களுக்கு ஆரம்பம் முதலே இருக்கிற சந்தேகம். ஆதாரங்களை எடுத்துப் போட்டிருக்கிறேன். மறுக்க முடியுமா? :-)

//அன்னா ஹசாரேவுக்கான இளைய தலைமுறையின் கூட்டம் உங்கள் பதிவை பொய்யாக்குகிறது மட்டும் சொல்வேன்.//

ஹாஹா! மைக்கேல் ஜாக்சன் இந்தியாவுக்கு வந்தபோது என்ன நடந்தது தெரியுமா? :-))

தெருவில் இறங்கிப் போராடத் துணிவற்ற படித்த இளைஞர்களும், நடுத்தர வர்க்கமும் தங்களது கையாலாகாத்தனத்தை மறைக்க, அண்ணா ஹஜாரேயின் கைகளை பலப்படுத்துவதாக குரல் எழுப்புகிறார்கள். அவ்வளவே!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ராஜ நடராஜன் said...

ப.ஜ.க சுயநல நோக்கில் ஜன் லோக்பால் குழுவிடம் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தது.ஆனால் அன்னா ஹசாரே குழு மறுத்து விட்டது என்பது மட்டுமே உண்மை.//

யார் மறுத்தார்கள்? சுட்டி தர முடியுமா? :-)

India Against Corruption - ஆர்.எஸ்.எஸ்ஸால் நடத்தப்படுகிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் சொல்லியதற்கு யாராவது மறுப்புத் தெரிவித்திருக்கிறார்களா?

ABVP நாடெங்கும் போராட்டம் நடத்துவதை யாராவது மறுத்திருக்கிறார்களா?

//சரி!இப்படி வைத்துக்கொள்ளலாம்.அன்னா ஹசாரே குழு ப.ஜ.க முகமூடி போட்டுக்கொண்டு செயல்படுகிறது.//

எதற்கு வைத்துக் கொள்ளணும்? அதுதான் உண்மை! நான் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன்!

// காங்கிரஸ் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்பதனை மறுமொழ்யில் தெரிவிக்கவும்.வெயிட்டிங்:)//

இடுகையிலேயே எழுதியிருக்கிறேன் - விவஸ்தை கெட்ட காங்கிரஸ் அரசு என்று! :-)))

மிக்க நன்றி!

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், என் வழமையான பங்களிப்புக்களை இங்கே வழங்கி விட்டுச் செல்கிறேன்,.//

வாங்க சகோ! உங்களது வருகையே பெரிய பங்களிப்புதான்! :-)

//அடியேனால் இப் பதிவினைச் சரியாகப் புரிந்து கருத்துக்களை வழங்குமளவிற்கு ஹசாரேயின் போரட்டம் பற்றிய என் சிற்றறிவு இடங்கொடுக்கவில்லை பாஸ்.//

வெளிநாட்டில், அதுவும் பல பிரச்சினைகளில் உழன்றுகொண்டிருக்கும் ஒரு வெளிநாட்டில் இருக்கிற உங்களுக்கு சில விஷயங்கள் புரியாமலிருப்பதில் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் இருக்கிற படித்தவர்கள் பலருக்குமே அண்ணாவைப் பற்றி சரியாகப் புரியவில்லை என்பதுதான் எனது ஆதங்கமே! மிக்க நன்றி சகோ! :-)

//இரா.எட்வின் said...

மிக அருமை சேட்டை. நிறைய எதிர் வினைகள் தேவைப் படுகிற நேரம் இது. மனுவின் எதிரிகள் ஒன்று திரள வேண்டிய சந்தர்ப்பம் இது//

இதனால் நான் இழந்த நட்புகள் அதிகம்! :-(

ஆனால், அதற்கெல்லாம் பயந்து எனது கருத்துக்களை, அவற்றிற்கு ஆதாரங்கள் மண்டிக்கிடக்கிறபோது எழுதாமல் இருக்க முடியாதல்லவா?
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//FOOD said...

வந்தேன்.//

வாங்க! நன்றி! :-)

பால்ராஜன் ராஜ்குமார் said...

அன்பு சேட்டைக்காரன்,

அன்னா ஹசாரே பற்றிய பதிவுகள் ஆனைத்துமே ஒரு
பத்திரிகை செய்தியாளனின் ஆதாரம் சேகரிப்பிற்கான
உழைப்பையும், ஒரு எழுத்தாளனின் தேர்ந்த நடையையும்,
ஒரு மனிதனின் நேர்மையையும் பிரதிபலிக்கின்றது.

வாழ்த்துக்கள். உஙகள் பணி தொடரட்டும்.

உஙகள் கருத்துக்கு எதிர்வினையாளர்கள், ஆதாதரமற்று
எழுதுவதை கட்டாயம் வெளியிடுங்கள். அப்போதுதான்
அவர்கள் வெளிகாட்டபடுவார்கள்(exposed).


பால்ராஜன் ராஜ்குமார்

Unknown said...

நான் கூட அன்னா செய்வது சரி என்றே நினைத்து இருந்தேன். இதற்கு முன் உங்கள் இடுகையிலும் பின்னூட்டம் இட்டு இருந்தேன். ஆனால் அது தவறு என்று பிறகு உணர்ந்தேன்..

ஊழல் இந்தியாவில் உண்டு தான், அது தவறு தான், ஆனால் அது ஜன லோக்பால் வந்தால் சரி ஆகிவிடும் என்று கூவிக்கொண்டு இருப்பது தான் கேலிக்கூத்து..

அதுவும் இல்லாமல் நம்முடைய பங்கை சரியாய் செய்தாலே 90 % குறைந்து விடும். அதாவது எங்கும் எதற்கும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன் என்பதில் நாம் உறுதியாய் இருந்தாலே போதுமே!!??

சி.பி.செந்தில்குமார் said...

diski top

சிவானந்தம் said...

கலக்கறீங்க சேட்டை. வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

நல்ல அலசல்!

ஜனங்கள் யாராவது ஒரு தேவதூதன் வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்கிக் கிடப்பது நன்றாகவே தெரிகிறது!!

Anonymous said...

மாற்று கருத்தையும் கவனிக்க வேண்டும் என்ற ரீதியில் உங்கள் பதிவு வெற்றி பெறுகிறது...லோக்பால் கறுப்பு பணத்தை மீட்குமா ,பிரதமரை லோக்பால் வரம்பில் கொண்டு வந்தால் உடனேஅவரை ஊழல் வழக்கில் (சம்பந்தம் இருந்தால்!)மாட்டிவிட சாத்தியம் உண்டா,லோக்பால் சாதக பாதகம் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.அன்னா ஊழலுக்கு எதிராக மக்களை தூண்டும் சக்தியாக அதாவது மக்கள் ஊழல் எதிர்ப்பு உணர்ச்சிக்கு உருவகமாக மாடலாக இருக்கிறார்.அதனால் மக்கள் அவர் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு கண்ணன் காப்பான் என்பதுபோல அன்னாவுக்கு எல்லாம் தெரியும் என்ற ரிதியில் அவரை நோக்கி விழுகிறார்கள்.எனக்கென்னவோ காங்கிரஸ் அசைந்து கொடுக்காது என்றுதான் தோன்றுகிறது..இன்னும் ஒரு மாசம் போராடினாலும்.காங்கிரஸ் எதிரி பிஜேபிக்கு நண்பன் தானே..அதனால் அன்னாவுக்கு உதவலாம்தானே...அப்படியிருந்தாலும்தப்பில்லை..மந்தையாடு போல இத்தனை ஊழல் நடந்தும் மதமத என இருக்கும் தூங்கு மூஞ்சி பிரதமரை இப்படி நோகடிக்க ஒரு மனிதர் வேண்டும்தான்

settaikkaran said...

//பால்ராஜன் ராஜ்குமார் said...

அன்னா ஹசாரே பற்றிய பதிவுகள் ஆனைத்துமே ஒரு பத்திரிகை செய்தியாளனின் ஆதாரம் சேகரிப்பிற்கான உழைப்பையும், ஒரு எழுத்தாளனின் தேர்ந்த நடையையும், ஒரு மனிதனின் நேர்மையையும் பிரதிபலிக்கின்றது.//

இணையத்தில் எழுதுகிற எதுவும் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை நாம் அறிவோம். நகைச்சுவை, புனைவு, கவிதைகள் போலன்றி, சமகால நிகழ்வுகள் குறித்து எழுதும்போது, தகவல்களைச் சரிபார்க்காமல் எழுதக்கூடாது என்று பல அனுபவசாலி பதிவர்கள் எனக்கு அறிவுறுத்தியுள்ளனர். :-)

//வாழ்த்துக்கள். உஙகள் பணி தொடரட்டும்.//

ஒருபோதும் அவதூறு பரப்ப மாட்டேன் என்பது மட்டும் உறுதி. இயன்றவரை ஒன்றுக்குப் பல செய்தித்தாள்களை / இணையதளங்களை வாசித்தே இனியும் எழுதுவேன். இதை ஒரு பிடிவாதமாகவே வைத்திருக்கிறேன்.

//உஙகள் கருத்துக்கு எதிர்வினையாளர்கள், ஆதாதரமற்று எழுதுவதை கட்டாயம் வெளியிடுங்கள். அப்போதுதான் அவர்கள் வெளிகாட்டபடுவார்கள்(exposed).//

இணையத்தில் எதிர்க்கருத்து சொல்பவர்களை எதிரிகளாய் பாவிக்கிறவர்கள் ஒருசிலர் இருந்தாலும், எனது வலைப்பதிவுக்கு வந்து மாற்றுக்கருத்தைச் சொல்லுகிற அன்பர்களுக்கு இயன்றவரையில் எனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லியே வருகிறேன். இப்போதைக்கு அதுவே போதும் என்று கருதுகிறேன். (நேரத்தட்டுப்பாடும் ஒரு காரணமே!)

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நான் கூட அன்னா செய்வது சரி என்றே நினைத்து இருந்தேன். இதற்கு முன் உங்கள் இடுகையிலும் பின்னூட்டம் இட்டு இருந்தேன். ஆனால் அது தவறு என்று பிறகு உணர்ந்தேன்..//

நான் கூட அண்ணாவை ஆதரித்து இடுகை எழுதியவன் தான். :-)
ஆனால், மே மாதம் மும்பைக்குச் செல்ல நேரிட்டபோது, அங்கே திரட்டிய தகவல்கள் என்னை யோசிக்க வைத்தன. அதன்பிறகுதான், நேர் மாறான நிலையை நானும் மேற்கொண்டேன்.

//ஊழல் இந்தியாவில் உண்டு தான், அது தவறு தான், ஆனால் அது ஜன லோக்பால் வந்தால் சரி ஆகிவிடும் என்று கூவிக்கொண்டு இருப்பது தான் கேலிக்கூத்து..//

பல பின்னூட்டங்களைப் பார்த்தபிறகு, லோக்பால் ஊழலை ஒழித்து விடுமா என்பதுகுறித்து ஒரு இடுகை எழுதுவது மிக அவசியமென்று தோன்றுகிறது. விரைவில் விரிவாக எழுதுவேன்.

//அதுவும் இல்லாமல் நம்முடைய பங்கை சரியாய் செய்தாலே 90 % குறைந்து விடும். அதாவது எங்கும் எதற்கும் நான் லஞ்சம் குடுக்க மாட்டேன் என்பதில் நாம் உறுதியாய் இருந்தாலே போதுமே!!??//

அதுதான் முக்கியம்! எவ்வளவு சட்டம் வந்தாலும், நாம் நமது சுயநலத்துக்காக, லஞ்சம் கொடுத்துக் கொண்டிருக்கும்வரையில் ஊழலை ஒழிப்பது என்பது நடக்கிற காரியமல்ல என்பதே எனது நிலையும் கூட!
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

diski top//

காப்பிரைட் மீறல் இல்லையே தல..? :-)
நன்றி!

//சிவானந்தம் said...

கலக்கறீங்க சேட்டை. வாழ்த்துக்கள்.//

எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆதரவு தருகிற உற்சாகம்தான்! நன்றி! :-)

//middleclassmadhavi said...

நல்ல அலசல்! ஜனங்கள் யாராவது ஒரு தேவதூதன் வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்கிக் கிடப்பது நன்றாகவே தெரிகிறது!!//

இது மிக இயல்பானது. அரசின் தவறான கொள்கைகளாலும், அரசியல் சூதாட்டங்களினாலும் வெறுப்புற்றிருப்பவர்கள், ஏதேனும் ஒரு கொழுகொம்பைத் தேடுவது நியாயமே! ஆனால், அவர்கள் மிகவும் நம்பி, மிகவும் ஏமாந்துபோய், எல்லாவற்றிலும் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஆபத்தில் கொண்டுபோய் விடுமல்லவா?

மிக்க நன்றி சகோதரி! :-)

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

மாற்று கருத்தையும் கவனிக்க வேண்டும் என்ற ரீதியில் உங்கள் பதிவு வெற்றி பெறுகிறது.//

உண்மை நண்பரே! இன்று அண்ணாவின் தொண்டர்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டின் முன்பு சென்று தர்ணா செய்திருக்கிறார்கள். இந்த உரிமையை அவர்களுக்கு அளித்திருப்பதே நமது அரசியல் சட்டம்தானே? வளைகுடா நாட்டில் ஐந்து பேர் போன ஊர்வலத்தைத் தடை செய்துவிட்டார்களே?

//லோக்பால் கறுப்பு பணத்தை மீட்குமா ,பிரதமரை லோக்பால் வரம்பில் கொண்டு வந்தால் உடனேஅவரை ஊழல் வழக்கில் (சம்பந்தம் இருந்தால்!)மாட்டிவிட சாத்தியம் உண்டா,லோக்பால் சாதக பாதகம் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்.//

அண்ணா ஹஜாரே கோரியிருக்கிறபடி, லோக்பாலில் மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டுவந்தால், வெளிநாட்டில் இருக்கிற கருப்புப்பணத்தைக் கொண்டுவர ஆரம்பகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், வங்கிகள் இருக்கிற நாடுகளின் சட்டங்கள் அனுமதித்தாலொழிய பணத்தை மீட்க முடியாது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. அரசின் சட்டத்தில் சி.பி.ஐ-யை லோக்பாலின் கீழ் கொண்டுவருவதற்கான பரிந்துரை இல்லை.

//அன்னா ஊழலுக்கு எதிராக மக்களை தூண்டும் சக்தியாக அதாவது மக்கள் ஊழல் எதிர்ப்பு உணர்ச்சிக்கு உருவகமாக மாடலாக இருக்கிறார்.அதனால் மக்கள் அவர் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு கண்ணன் காப்பான் என்பதுபோல அன்னாவுக்கு எல்லாம் தெரியும் என்ற ரிதியில் அவரை நோக்கி விழுகிறார்கள்.//

விலைவாசி ஏற்றம், பொருளாதார நிலை, பெருகிவரும் ஊழல், பல மாநிலங்களில் நிகழும் சட்ட ஒழுங்குச்சீர்கேடுகள், அரசியல் சூதாட்டங்கள் ஆகிய பலவற்றால் நொந்துபோயிருக்கிற மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தங்களது சினத்தை வெளிப்படுத்த அண்ணாவின் போராட்டம் ஒரு வடிகாலாய் அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

//எனக்கென்னவோ காங்கிரஸ் அசைந்து கொடுக்காது என்றுதான் தோன்றுகிறது.//

அசைந்து கொடுத்தே தீர வேண்டும்; வேறு வழியில்லை! :-)

இப்போதே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அண்ணாவின் குழுவில் சற்றே மிதவாதியான சுவாமி அக்னிவேஷ், நிதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்றவர்கள் முயன்றால், காங்கிரஸில் உள்ள மிதவாதிகளான சல்மான் குர்ஷித் போன்றவர்களுடன் பேசி சில சர்ச்சைக்குரிய விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளலாம். ஒரு தனிமனிதரிடம் தோற்று விட காங்கிரஸின் ஈகோ இடம் கொடுக்காது.

//இன்னும் ஒரு மாசம் போராடினாலும்.காங்கிரஸ் எதிரி பிஜேபிக்கு நண்பன் தானே..அதனால் அன்னாவுக்கு உதவலாம்தானே.//

பி.ஜே.பி.ஆட்சியிலிருக்கும் குஜராத்தில் இன்னும் லோகாயுக்தா நிறுவப்படவில்லை. அதே போல கர்நாடக லோகாயுக்தாவின் பரிந்துரைப்படி ரெட்டி சகோதரர்கள் மீதும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படவில்லை. ஆளுனர் அனுமதியளித்தும் எடியூரப்பாவின் மீது எதிர்பார்த்த அளவுக்கு நடவடிக்கைகள் துவங்கப்படவில்லை. ஆக, காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இந்த ஒரு விஷயத்தில் ஒரு மர்மமான ஒற்றுமை இருப்பது போலத்தோன்றுகிறது.எனது அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.

//படியிருந்தாலும்தப்பில்லை..மந்தையாடு போல இத்தனை ஊழல் நடந்தும் மதமத என இருக்கும் தூங்கு மூஞ்சி பிரதமரை இப்படி நோகடிக்க ஒரு மனிதர் வேண்டும்தான்//

மன்மோகன் சிங்கின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பது உலகறிந்த விஷயம். அவரால், ஒரு இணை அமைச்சருக்கே உத்தரவிட முடியாத சூழல் இருக்கிறபோது, வேறு என்ன எதிர்பார்ப்பது?

லோக்பால் குறித்த இடுகை - எழுத விருப்பம் இருக்கிறது. நேரம் கிடைத்தால், பகுதி பகுதியாக எழுத விருப்பம்.பார்க்கலாம்.

மிக்க நன்றி நண்பரே! :-)

நடராஜன் said...

என்ன இது கடைசி இரண்டுமே சீரயஸ் ரகம்! கொஞ்சம் எங்களை குஷிப்படுத்துங்க! சிரிச்சு ரொம்பநாள் ஆச்சு!

siraj said...

ஆசிரியறே உங்கள் கருத்து கனிப்பு மிகவும் அபாரம்.தகவல் அருமை

siraj said...

ஆசிரியரே உங்கள் கருத்துகள் அபாரம்..வாழ்க ஜனநாயகம்.

Krishnan said...

2 மாதத்திற்கு முன் எழுதப்பட்ட இந்த இடுகை இப்போது நிஜமாகி உள்ளது. பூனைக் குட்டி வெளியே வர இரண்டு மாதகாலம் ஆனது. அவ்வளவுதான். காந்தியை கொன்றவனின் படத்தை காந்தியின் படத்திற்கு பக்கத்திலேயே பாராளுமன்றத்தில் மாட்டிவைத்த மாபெரும் தியாகிகள் தான் பி.ஜே.பி.
வாழ்க புரட்டு அரசியல்.