பீடிகை இரண்டு: மீண்டும் அண்ணா ஹஜாரேயைக் குறிவைத்து எழுதப்பட்டது.(எனக்குச் சலிக்காது; உங்களுக்குச் சலிப்பாக இருந்தால், ப்ளீஸ், மேற்கொண்டு வாசிக்க வேண்டாம்!)
பீடிகை மூன்று: ஒரு மொக்கைக்குக் கூட இணையத்தில் தேடி தகவல் சேகரித்துப் பிறகு எழுதுபவன் நான். இந்த இடுகையும் செய்தித்தாள்கள், இணையதளங்களிலிருந்து பெற்றுத் தொகுக்கப்பட்டதே! தவறான தகவல் இருப்பின், சுட்டிக்காட்டினால், உரிய சுட்டி தருகிறேன் அல்லது செய்தித்தாள் ஸ்கேன் செய்து போடுகிறேன். தகவல் தவறாயிருப்பின், வருத்தம் தெரிவிப்பேன்.
எது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கேட்பதற்கு முன், எது முதலாவது சுதந்திரப் போராட்டம் என்று பார்க்கலாம். 18-ம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கி, நானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாமல் இருக்க, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திரம் கிடைப்பதற்கு முற்பட்ட அனைத்துப் போராட்டங்களையும் முதலாவது சுதந்திரப்போராட்டம் என்று சொல்லி விடுவதே சவுகரியமாய் இருக்கும். (இல்லாவிட்டால், எழுதுவது சேட்டைக்காரனா, ராமச்சந்திர குஹாவா என்ற சந்தேகமும் வரலாமல்லவா?) இனி, இரண்டாவது சுதந்திரப்போராட்டம் எதுவென்று சொல்லியாக வேண்டுமே? எது?
கண்டிப்பாக, ஆகஸ்ட் 16, 2011 முதல் புது தில்லியில் நடைபெறப்போகிற கேலிக்கூத்தாக இருக்க முடியாது என்பது மட்டும் சத்தியம். தொடர்ந்து படிக்கிற பொறுமையிருக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
ஜூன் 25 2011 அன்று பெரும்பாலான ஆங்கிலச் செய்தித்தாள்களிலும், குறிப்பிட்ட சில தமிழ் செய்தித்தாள்களிலும், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதே நாளில் இந்தியாவையே புரட்டிப்போட்ட அந்த நிகழ்வைப் பற்றிப் பல செய்திக்குறிப்புகளை வாசிக்க நேர்ந்தது. இந்திய வரலாற்றின் அந்தக் கருப்புப்பக்கங்களை வாசித்தபோதே, எது இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்பது குறித்து எனக்கிருந்த சந்தேகங்கள் முற்றிலும் தீர்ந்து போய்விட்டன.
இந்திரா காந்தி அம்மையார் அமல்படுத்திய எமர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டமே அது!
இந்தியாவின் இன்றைய மக்கள் தொகையான 120 கோடியில் ஏறக்குறைய 50 சதவிகிதம் 1975-க்குப் பிறகே பிறந்திருக்கக் கூடும் என்பது ஒரு அனுமானம். எமர்ஜென்ஸி குறித்து குல்தீப் நய்யார் எழுதிய "தி ஜட்ஜ்மெண்ட்’ போன்று பல புத்தகங்கள் உள்ளன.
இந்தி அறிஞரும் எழுத்தாளருமான ராஹி மாஸூம் ரஜா எழுதிய "கத்ரா பி ஆர்ஸூம்" என்ற இந்தி நாவல். (இவர் பல இந்தித் திரைப்படங்களுக்கும் ’மகாபாரதம்’ தொடருக்கும் வசனம் எழுதியவர்)
ரோகின்டன் மிஸ்திரி எழுதிய "A Fine Balance," என்ற ஆங்கில நாவலில் எமர்ஜென்ஸி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சல்மான் ருஷ்டியின் "Midnight's Children" நாவலில் கதாநாயகன் சலீம் சினாயின் வீடு எமர்ஜென்ஸியில் நகரை அழகுபடுத்துவதற்காக இடிக்கப்படுவதாக எழுதப்பட்டிருந்தது. இவர் மீது இந்திரா காந்தி வழக்குத்தொடர்ந்தார்.
வி.எஸ்.நைபால் எழுதிய "India; A wounded Civilization!"
சஞ்சீவ் தரே எழுதிய "The Plunge" என்ற நாவல், நாக்பூரில் எமர்ஜென்ஸியில் அடக்குமுறைக்கு ஆளான நான்கு கல்லூரி மாணவர்களின் கதைகளைத் தழுவியது.
1980-ல் சத்யத்ஜித் ரே இயக்கத்தில் வெளிவந்த "ஹிராக் ராஜர் தேஷே" என்ற குழந்தைகளுக்கான படத்தில், எமர்ஜென்ஸியை செமத்தியாகக் கலாய்த்திருந்தார்.
1985-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த "யாத்ரா" (தமிழில் ’அது ஒரு கனாக்காலம்") என்ற மலையாளப் படத்தில் கதாநாயகன் மம்மூட்டி எமர்ஜென்ஸியில் போலீசாரால் கொடுமைப்படுத்தப்படுவது போல அமைக்கப்பட்டிருந்தது.
1988-ல் வெளிவந்த "பிறவி" என்ற மலையாளப்படம் கேரளாவைக் கலக்கிய ராஜன் கொலைவழக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
2005-ல் வெளிவந்த சுதீர் மிஷ்ராவின் "ஹஜாரோன் க்வாயிஷேன் ஐஸி," என்ற படத்தில் எமர்ஜென்ஸி காலத்தில் மாவோயிஸ்டுகளாக மாறிய மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை.
இன்னும் நிறைய புத்தகங்கள், திறனாய்வுகள், திரைப்படங்கள் இருப்பதாக அறிகிறேன். இந்த இடுகையின் நீ...ளம் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எத்தனைபேர் எமர்ஜென்ஸி குறித்து அறிந்திருப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி! நான் வாசித்து அறிந்த தகவல்களைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை!
அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது போட்ட ஒரு கையெழுத்து, இந்தியாவின் தலையெழுத்தையும், ஜனநாயகத்தின் வரைமுறைகளையும் ஒரே இரவில் அதிரடியாய் மாற்றியமைத்தது. ஏறக்குறைய இருபது மாதங்கள் நீடித்த அந்த இருண்ட காலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், எவ்வித முகாந்திரமுமின்றி சிறையிலடைக்கப்பட்டனர். பாகிஸ்தானுடன் நடந்து முடிந்த போர் மற்றும் உள்நாட்டில் ஆங்காங்கே வெடித்துக்கொண்டிருந்த கிளர்ச்சிகள் போன்றவற்றைக் காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு நிலையை நிலைநிறுத்துவதாகச் சொல்லிக்கொண்டு இந்திரா காந்தி அம்மையார் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.
ஆனால், உண்மையான காரணங்கள் என்னென்ன?
சமூக ஆர்வலரும் காந்தீயவாதியுமான ஜெயபிரகாஷ் நாராயண் மாநிலங்களுக்கு தன்னாட்சி கோரி பீஹாரில் அறப்போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். மாணவர்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை ஒன்றுதிரட்டி அஹிம்சை வழியில் இந்திய சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி உருவாக்கக் களமிறங்கியிருந்தார். குஜராத் மாநிலத்தில் நடந்த பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரஸை முறியடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
அப்போதைய தேர்தல் ஆணையம் இப்போதிருப்பதுபோல வானளாவிய அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்துக்கு சலாம் போடுகிற முதுகெலும்பற்ற அமைப்பாக இருந்தது. அதைப் பயன்படுத்திய காங்கிரஸ் 1971-ம் ஆண்டு நடந்தேறிய பாராளுமன்றத்தேர்தலில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம் என்று அனைத்து முறைகேடுகளையும் வெட்கமின்றி அரங்கேற்றி வெற்றி பெற்றது. அப்படித்தான் இந்திரா காந்தி அம்மையாரும் அலஹாபாத் தொகுதியில் ராஜ்நாராயணனைத் தோற்கடித்தார். தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட ராஜ்நாராயணன் வழக்குத்தொடர்ந்தார்.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜகன்மோகன்லால் இந்திரா காந்தி பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதை ஊர்ஜிதம் செய்து, அவரது வெற்றி செல்லாது என்றும், தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். உச்சநீதி மன்றத்தில் இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தபோது அதை விசாரித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர், அலஹாபாத் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக இந்திரா காந்திக்கு அளித்த கால அவகாசத்தை ரத்து செய்ததோடு, அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடைவிதித்துத் தீர்ப்பளித்தார்.
இது குறித்து நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"I refused the Prime Minister the right to vote in Parliament, I referred to the dharma of politics and insisted that equal protection of the law could not make a difference in favour of the Prime Minister, the great proposition being ``Be you ever so high, the law is above you.''
(லோக்பால் சட்டத்தில் பிரதமர் வரக்கூடாது என்று சொல்பவர்கள் கவனிக்கவும்!)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாரதீய லோக்தளம், ஜன சங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் போர்க்கொடி உயர்த்தினர். பத்திரிகைகள் இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று காரசாரமாகத் தலையங்கங்கள் எழுதின. இந்திரா காந்தி, தனது நம்பிக்கைக்குரியவரும், அப்போதைய மேற்கு வங்க முதலமைச்சருமான சித்தார்த் சங்கர் ரேயுடன் ஆலோசனை மேற்கொண்டார். "வெளி அச்சுறுத்தல், உள்நாட்டுக்கலகம்" என்று காரணங்கள் காட்டப்பட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. Maintenance of Internal Security Act (MISA) என்ற கருப்புச்சட்டம் அமலுக்கு வந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாயி, அத்வானி போன்ற அரசியல் தலைவர்களும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தொழிற்சங்கத்தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
"விநாஷ காலே விபரீதபுத்தி!( அழிவு நெருங்கினால் புத்தி பேதலிக்கும்!)," என்று கைது செய்யப்பட்டபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் கூறினார். அவர் சொன்னது பின்னாளில் உண்மையானது.
"வெள்ளைக்காரன் காலத்துலே நடக்காத கொடுமையெல்லாம் இந்தம்மா ஆட்சியிலே நடக்குது," என்று பெருந்தலைவர் காமராஜர் விசனப்பட்டார்.
காங்கிரஸ் அல்லாத குஜராத், தமிழ்நாடு அரசுகள் கலைக்கப்பட்டன. விசாரணையேயின்றி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்ளாகின. "கடையில் சரோஜாதேவி புஸ்தகம் கிடைக்கும். ஆனா, தினமணி பேப்பர் கிடைக்காது," என்று என்னிடம் சொன்னவர் இந்நாள் வரையிலும் த.நா.கா.கமிட்டியில் இருப்பவர்.
அரசியல் சட்டத்தின் 352-வது பிரிவைப் பயன்படுத்திய இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமைக் கழகங்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்தார். கட்சியிலும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, இளையமகன் சஞ்சய் காந்தி மற்றும் ஜால்ரா கோஷ்டிகளின் ஆலோசனைகளைக் கேட்டபடி ’இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்,’ என்று இஷ்டம்போல சட்டத்தை வளைத்தார். அலஹாபாத் உயர்நீதி மன்றத்தீர்ப்பும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் தனது பதவியைப் பறித்து விடாதபடி, சட்டத்திருத்தங்களை, தனது கட்சிக்குப் பாராளுமன்றத்திலிருந்த மிருகத்தனமான பெரும்பான்மையை உபயோகப்படுத்திக் கொண்டுவந்தார். அரசியல் சாசனத்தில் அவர் கொண்டுவந்த 42-வது திருத்தத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் தொலைநோக்குப்பார்வைக்கே குந்தகங்கள் விளைந்தன.
(எமர்ஜன்ஸிக்குப் பிறகு, அரசியல் சாசனத்தில் அதன் அடிப்படைத் தன்மையையே மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பின்னாளில் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.)
ஒரே ஒரு நல்ல மாறுதல் நடந்தது. அரசு அலுவலகங்களில் போராட்டங்கள், தர்ணா, மறியல் போன்று எதுவுமின்றி எல்லாரும் ஒழுங்கு மரியாதையாக, மூச்சுக் காட்டாமல் வேலை பார்த்தனர். தொழிற்சங்கத்தலைவர்கள் எல்லாரும் சிறையில் இருக்கும்போது, போராட்டமாவது மறியலாவது? மூச்!!
எதிர்க்கட்சிகளின் குரலுமின்றி, அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களை அறியவும் வழியின்றி நாடே புழுங்கியது. இந்திரா அரசின் அராஜகத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்கள் சீக்கியர்கள் தான்! முகலாயர்களுடனும், பிரிட்டிஷாருடனும் போரிட்ட வரலாற்றை மேற்கோள் காட்டி, ’பாசிச அரசுக்கெதிரான போர்!’ என்று ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி அறிவித்தது. காவல்துறை கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைது செய்தது.
(இந்தப் போராட்டத்தை மழுங்கடிக்க இந்திரா காந்தி சீக்கியத்தலைவர்களில் சற்றே தீவிரவாதியாக இருந்த பிந்தரன்வாலே-க்கு ஆரம்பத்தில் கொம்பு சீவியதும், அது விபரீதமாகி பஞ்சாபில் வன்முறை பற்றியெரிந்ததும் தனிக்கதை!)
பஞ்சாபில் ஏற்பட்ட மக்களின் எழுச்சி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவினால் ஆபத்து என்பதைப் புரிந்து கொண்ட இந்திரா காந்தி சமரசப்பேச்சுக்கு அழைத்தார். ஆனால், அவசர நிலையைத் திரும்பப் பெறும்வரைக்கும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று சீக்கியர்களின் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தருகிற புள்ளிவிபரங்களின் படி, எமர்ஜென்ஸியின் போது சுமார் 1,40,000 பேர்கள் கைது செய்யப்பட்டனர்:(20 மாதங்களுக்குள்!), அதில் 40,000 பேர்கள் சீக்கியர்கள்( மொத்த மக்கள்தொகையில் 2% இருந்தவர்கள்!).
தில்லியை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் குடிசைவாசிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். கட்டாயக் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. உத்திரப்பிரதேசம் முஜபர்நகரில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு! கேரளாவைக் கலக்கிய மாணவன் ராஜனின் படுகொலை! அதிகார அத்துமீறலில் பலாத்காரத்துக்கு ஆட்பட்ட பெண்கள்! உலகத்தில் எத்தனை அட்டூழியங்கள் இருக்குமோ அத்தனையும் அவசரநிலையின் போது இந்திராவின் அரசால் நிகழ்த்தப்பட்டன.
அமெரிக்கா-சோவியத் யூனியன் பனிப்போர் காரணமாக, அதிபர் பிருஷ்னேவ் இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலையை ஆதரித்தார்.(கம்யூனிஸ்டுகள் சிறையில் தள்ளப்பட்டிருந்தபோதும் கூட!) இந்தியாவிலும் ஜே.ஆர்.டி.டாட்டா, குஷ்வந்த் சிங் மற்றும் (நம்பினால் நம்புங்கள்!) அன்னை தெரசா ஆகியோர் அவசர நிலையை ஆதரித்தனர். பொற்கோவிலில் ராணுவம் "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்," என்ற பெயரில் பின்னாளில் நுழைந்தபிறகு, நல்லபுத்தி வந்த குஷ்வந்த் சிங் ரொம்ப யோசித்து "நான் ஏன் அவசரநிலையை ஆதரித்தேன்?" என்று தன்னிலை விளக்கமாக ஒரு புத்தகமே எழுத வேண்டிவந்தது.
பஞ்சாபிலிருந்து தில்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு அரசுக்கெதிரான போராட்டம் படர்ந்தது. அதைத் தொடர்ந்து வடமாநிலங்களிலும், கேரளா போன்ற தென்மாநிலங்களிலும் போராட்டம் பரவி, காட்டுத்தீயைப் போல அரசுக்கெதிரான மக்களின் எழுச்சி விசுவரூபம் எடுத்தது. உலகநாடுகளில் பல இந்திரா காந்திக்கு நெருக்கடி தரத்தொடங்கின. தன்னை ஒரு சர்வாதிகாரியாக, பெண் ஹிட்லராக உலகம் சித்தரிப்பதை இந்திரா காந்தி விரும்பவில்லை. 1977-ம் ஆண்டு, ஜனவரி 23 அன்று பொதுத்தேர்தல்களுக்கான அறிவிப்பை இந்திரா காந்தி வெளியிட்டார். அவசரநிலை ரத்து செய்யப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளிவந்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்தனர்.
"சர்வாதிகாரமா? ஜனநாயகமா? இந்தத் தேர்தல் இந்தக் கேள்விக்கு விடைகாணும் இறுதிப்போர்!" என்று அறிவித்தனர். ஜனநாயகம் தான் என்று மக்கள் தேர்தலில் தீர்ப்பளித்தனர். எப்படி? காங்கிரஸை மட்டுமல்ல; இந்திரா காந்தியையும், அவசர நிலையில் பல அக்கிரமங்கள் நடந்தேறக் காரணமாயிருந்த சஞ்சய் காந்தியையும் தோற்கடித்தனர். 542 சீட்டுக்களில் காங்கிரஸ் பெற்றது வெறும் 153. (அதிலும் 92 தென்னிந்திய மாநிலங்களில் வென்றவை!) இதைத் தொடர்ந்து மொரார்ஜீ தேசாய் பிரதமராகி, சரண்சிங், தேவிலால், ராஜ்நாராயண் போன்றவர்களின் கோமாளித்தனங்களாலும் குளறுபடிகளாலும் இரண்டு ஆண்டுகளிலேயே பொதுமக்களின் வெறுப்பைச் சம்பாதித்து, அடுத்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸையே ஜெயிக்க வைத்ததும் துணைக்கதை!
சிலர் (நான் உட்பட) இன்று அண்ணா ஹஜாரேயை விமர்சிப்பது போலவே, அன்றைய காலகட்டத்தில் ஜெயபிரகாஷ் நாராயணையும் பலர் விமர்சித்திருக்கின்றனர். ஆனால், அவருக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் என்ன வித்தியாசம்?
ஜே.பி பாட்னாவிலோ தில்லியிலோ மட்டும் போராடவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தாலுகாவிலும் தனது போராட்டத்தை இடைவெளியே இன்றி நடத்தி, அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். அதுவும், அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்த ஒரு அரசுக்கு! இந்திரா காந்தி போன்ற சர்வ வல்லமை பொருந்திய பிரதமர் தலைமை ஏற்றிருந்த ஒரு அரசுக்கு!
இப்போது மத்தியில் இருக்கிற அரசின் லட்சணம் என்ன?
ஒரு ரயில் விபத்து நடந்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்து, ’போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்,’ என்று சொன்னால், "நான் கேபினட் அமைச்சரில்லையே, நீங்கள் போய்ப் பாருங்கள்," என்று ஒரு கூட்டணிக்கட்சி அமைச்சர் சொல்கிற அளவுக்குத்தான் நமது மன்மோகன் சிங் இன்று இருக்கிறார்.
2G வழக்கின் விசாரணையின் போது கூட, "ஒரு பிரதம மந்திரிக்கு இப்படியா பதில் எழுதுவீர்கள்?" என்று ஆ.ராசா கண்டிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் ஒருபடி மேலே போய், ’ராகுல்காந்தி பிரதமராக வேண்டும்,’ என்று சொல்வதையும் ஜீரணித்துக்கொண்டு போகிற அளவில்தான் நமது பிரதமர் இருக்கிறார்.
சரி, அவரது கட்சி எப்படி? ’நித்தியகண்டம் பூரண ஆயுசு,’ என்பதுபோல, எப்போது கவிழும், யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்ல முடியாமல், திக்கித் திணறிக்கொண்டிருக்கிற ஒரு மத்திய அரசின் பிரதானக் கட்சி காங்கிரஸ்!
ஜன் லோக்பால் சட்ட வரைவு நிராகரிக்கப்பட்டு, அரசின் வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க, கம்யூனிஸ்டுகள், ஏன் தி.மு.கவுக்குக் கூட அரசின் வரைவில் கருத்துவேறுபாடு இருக்கிறது. இப்போதிருக்கிற நிலையில் இந்த லோக்பால் வரைவு பாராளுமன்றத்தின் நிலைக்குழு(Standing Committee)க்கு அனுப்பப்படும்.
அண்ணா ஹஜாரே என்ன செய்யலாம்? பலவீனமாயிருக்கிற மத்திய அரசைப் பணிய வைக்க நிலைக்குழுவுக்கு முன் சென்று தனது வாதங்களை வைக்கலாம். (நீங்களும் நானுமோ கூட போகலாம்!)
எதிர்க்கட்சிகளை அழைத்து அவர்களது ஆதரவைப் பெற்று, தேவைப்பட்டால் பாராளுமன்றத் தொடரை நீட்டித்து, அவரது ஜன் லோக்பாலை தாக்கல் செய்ய வலியுறுத்தலாம்.
இது தவிர, சட்டபூர்வமாக அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. ஆனால், அவர் செய்வது என்ன? மசோதாவைக் கொளுத்துகிறார்! பாராளுமன்றத்தை அவமதித்ததன் மூலம் அவர் அனைத்துக் கட்சிகளையும் விரோதம் செய்து கொண்டிருக்கிறார். இனி, அடுத்து நடக்கப்போவதென்ன? ஒருவேளை, காங்கிரஸ் வேறு வழியின்றி பணிந்து அண்ணா ஹஜாரே சொல்வது போன்ற ஒரு ஜன்லோக்பால் சட்டத்தை அறிமுகம் செய்வதாய் வைத்துக் கொள்வோம். (இந்தக் காங்கிரஸ் அரசு எது வேண்டுமானாலும் செய்யும்!). அது பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், பா.ஜ.கவும் கம்யூனிஸ்டுகளும் ஓரணியில் திரண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பதுதான் உண்மை. ஒருவேளை, அண்ணாவின் ஆசை அதுதானோ என்னமோ?
"நீ ஒரு வீரனை அடிச்சிருந்தாப் பரவாயில்லை; நீ அடிச்சது ஒரு பிள்ளைப்பூச்சியை! அதுனாலே உனக்கு கப்பு கிடையாது," என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே! அது போல ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிற காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியை அண்ணா ஹஜாரே போன்றவர்கள் மிரட்டுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அது என்ன பெரிய வீரமா?
"ஓரினச்சேர்க்கை ஒரு வியாதி!" என்று சொன்ன குலாம் நபி ஆசாத், ஊடகங்களும், சில அமைப்புக்களும் எதிர்ப்புச் சொன்னதும், "நான் அப்படிச் சொல்லலே...நான் சொல்ல வந்தது என்னான்னா, அதாவது, தன்னான்னா, தானேதானேன்னா.." என்று மழுப்புகிறார் என்பதிலிருந்தே இந்த அரசு எவ்வளவு வலுவானது என்று தெரியவில்லையா?
இந்திரா காந்தியை எதிர்த்த ஜே.பி எங்கே? உலுக்கினால் உதறெலெடுக்கும் இந்த அரசை எதிர்க்கும் இந்த சந்தர்ப்பவாதி அண்ணா ஹஜாரே எங்கே?
அன்று நடந்தது இரண்டாவது சுதந்திரப்போராட்டமா அல்லது ஊடகங்களின் கவனத்துக்காக அலைகிற இந்த விளம்பரவிரும்பி அண்ணா ஹஜாரேயின் கேலிக்கூத்து சுதந்திரப்போராட்டமா?
"நான் உண்ணாவிரதம் இருப்பேன்; ஆறு ஏழு நாட்கள் கழித்து அரசு ஏதும் செய்யாவிட்டால், நாங்கள் சிறையை நிரப்புவோம்!" என்று அண்ணாஜீ நேற்று டிவியில் காரசாரமாகச் சொல்லிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் நான் பக்கென்று சிரித்து விட்டேன்.
அண்ணா ஹஜாரேயின் தொண்டர்களே! அதாவது, அவர் உண்ணாவிரதம் இருப்பாரு! அதாவது ஆறு, ஏழு நாட்கள் (சாகும்வரை) உண்ணாவிரதம் இருப்பாரு - எனக்குப் புரிஞ்சுது; உங்களுக்குப் புரிஞ்சுதா?
’ஏன் சேட்டை, எதுக்கு அடிக்கடி அண்ணா ஹஜாரேயை கலாய்க்கிறே? உனக்கு அவரோட போராட்டத்தில கலந்துக்க விருப்பமில்லேன்னா விட்டிரேன்! ஏன் அந்த வயசான மனுசனோட ’தியாகத்தை’ (?!) கொச்சைப்படுத்துறே?" என்று கேட்பவர்களுக்கு.....
நீங்களும் அண்ணாவின் உண்ணாவிரதத்துக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! அவருக்கு கோவில் கட்டுங்கள்! ஆனால், அதை "இரண்டாவது சுதந்திரப்போராட்டம்" என்று சொல்லி, ஆயிரக்கணக்கில் பத்தொன்பது மாதங்கள் வரையிலும் சிறையிலிருந்து சித்திரவதைப்பட்டவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
தகவல்களுக்கு நன்றி:
1. INDIA: Symbol in Chains
2. Yes, Prime Minister
3. Emergency And Laws Imposed On Media
4. A bitter harvest
5. MEMORIES OF THE EMERGENCY-LK.ADVANI's Blog
6. INDIA: Indira Gandhi's Dictatorship Digs In
Tweet |
31 comments:
நிறைய படிச்சு கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க...மறுபடியும் அதே கேள்வி தான் என் மனசிலே...
ஏன் உங்களுக்கு அவர் மேல இவ்வளவு கோபம்...
ஒரு நல்ல ரோல் மாடலே இல்லாத நம்ம நாட்டிலே அவர் கொஞ்ச நாளைக்கு மக்களை நல்ல விசயங்களை யோசிக்க வச்சிருக்கார் இல்லையா..இந்த கால கட்டத்தில் அதுவே பெருசு...எவனோ ஒருத்தன் ஒரு மாட்சிலே 50 ரன் அடிச்சத உலக மகா சாதனை மாதிரி மணிக்கணக்கா பேசுரவங்களையும்...கண்டவனுக்கும் கட் அவுட் வச்சுட்டு வாழ்கையை கெடுத்து கொண்டிருக்கவங்களையும் நம்ம தேசம் ...ஊழல் எதிர்ப்பு ...இப்படி நினைக்க...பேச வச்சது...ஒரு வருஷம் ஜெயில் ல இருந்ததுக்கு சமம் இல்லையா?
Reverie said...
//மறுபடியும் அதே கேள்வி தான் என் மனசிலே...ஏன் உங்களுக்கு அவர் மேல இவ்வளவு கோபம்...//
அவரது குறிக்கோளில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அரசியல் சாசனம், பாராளுமன்றம் என்று எதற்கும் அடிபணிய மாட்டேன் என்று அவர் அடம்பிடிப்பதும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும், விளம்பரத்துக்காக அலைவதும், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதிலளிக்காமல் இருப்பதும் என்று பல காரணங்கள் இருக்கின்றன.
//ஒரு நல்ல ரோல் மாடலே இல்லாத நம்ம நாட்டிலே அவர் கொஞ்ச நாளைக்கு மக்களை நல்ல விசயங்களை யோசிக்க வச்சிருக்கார் இல்லையா..//
திரு.ஷம்பு தத்தா என்ற 93 வயதான காந்தீயவாதி ஊழலுக்கு எதிராக பல வருடங்களாக போராடி வருகிறார். அண்ணா ஹஜாரேக்கு முன்னால் முதலில் தில்லியில் உண்ணாவிரதம் இருந்தவர் அவர்தான். ஆனால், அவரை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. சரியாக, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்தவுடன், அண்ணா ஹஜாரேயின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு, தொலைக்காட்சிகளில் அவர் பிரபலப்படுத்தப்படுகிறார். ஏன்? இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்?
//இந்த கால கட்டத்தில் அதுவே பெருசு...எவனோ ஒருத்தன் ஒரு மாட்சிலே 50 ரன் அடிச்சத உலக மகா சாதனை மாதிரி மணிக்கணக்கா பேசுரவங்களையும்...கண்டவனுக்கும் கட் அவுட் வச்சுட்டு வாழ்கையை கெடுத்து கொண்டிருக்கவங்களையும் நம்ம தேசம் ...ஊழல் எதிர்ப்பு ...இப்படி நினைக்க...பேச வச்சது...ஒரு வருஷம் ஜெயில் ல இருந்ததுக்கு சமம் இல்லையா?//
ஊழலை ஒழிக்க நினைப்பவர் செய்ய வேண்டியதையா அவர் செய்து கொண்டிருக்கிறார்? இடுகையை இன்னொரு தடவை வாசிக்கச் சொல்லி உங்களை சிரமப்படுத்த நான் விரும்பவில்லை. :-)))))))))))))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ஒரு மொக்கைக்குக் கூட இணையத்தில் தேடி தகவல் சேகரித்துப் பிறகு எழுதுபவன் நான்.
...... :-)
சாப்பிட்டுப்புட்டு சாவகாசமாப் படிங்க! நீளமான இடுகை - (நானே சொல்கிறேன் என்றால் புரிந்து கொள்க!)
...Thank you for the warning. :-)))
நிறைய தேடுதலில் நீளமான பதிவு
அண்ணா ஹசாரே மீதான கருத்து ஒரு பக்கம் இருக்க, எமர்ஜென்சியை விடவும் ஒரு இரண்டாவது சுதந்திரப் போர் இல்லை என்பது நிதரிசனம். மிக அருமையாக எழுதப்பட்ட ஒரு அத்தியாவசியமான கட்டுரை. வாழ்த்துகள்!
சேட்டை
சில திருத்தங்கள் உங்கள் பதிவில்
இந்திரா காந்தி வென்றது ரே பரேலி தொகுதியில். அலஹாபாத் இல்லை. அலஹாபாத் உள்ள உபி உயர் நீதிமன்றம் அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது.
எமெர்ஜென்சி நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. சோவியெத் நாட்டை ஆதரிப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை. (மார்க்சிஸ்ட் - சீனா). அதனால் சோவியெத் ரஷ்யா இந்திராவை ஆதரித்ததில் ஆச்சர்யம் இல்லை.
தேவிலால் 1977-79 மொரார்ஜி ஆட்சியில் இல்லை. அவர் அரியானா அரசியலில் தான் இருந்தார். மொரார்ஜி அரசு கவிழ ராஜ்நாராயணன், சரண் சிங் போன்றவர்களின் கூத்து ஒரு காரணம். அது தவிர அத்வானி, வாஜ்பாய் போன்றோரின் 'double membership' - RSS மற்றும் ஜனதா கட்சி என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் எதிர்த்தது மற்றொரு காரணம்.
//Chitra said...
..Thank you for the warning. :-)))
எஸ் ஆயிட்டீங்களா? :-)))
Thanks!
//தமிழ் ரசிகா said...
நிறைய தேடுதலில் நீளமான பதிவு//
தேடி இடப்பட்டிருப்பது வரலாற்றின் ஒரு துளி நண்பரே! அதை சவுகரியமாக மறந்து அல்லது மறைத்துவிட்டு, ஒரு விளம்பர ஸ்டண்டை இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்று வெட்கமில்லாமல் சொல்லுகிற அண்ணா ஹஜாரேயை என்னவென்று சொல்வது?
மிக்க நன்றி!
//பெசொவி said...
அண்ணா ஹசாரே மீதான கருத்து ஒரு பக்கம் இருக்க, எமர்ஜென்சியை விடவும் ஒரு இரண்டாவது சுதந்திரப் போர் இல்லை என்பது நிதரிசனம். மிக அருமையாக எழுதப்பட்ட ஒரு அத்தியாவசியமான கட்டுரை. வாழ்த்துகள்!//
இரண்டாவது சுதந்திரப்போராட்டம் எது என்பதை விளக்கவே இந்த இடுகை. ஆகவே, தனது உண்ணாவிரதத்தை இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்று பீற்றிக்கொள்ளூம் அண்ணா ஹஜாரேயைப் பற்றி அவரவர்கள் புரிந்து கொண்டாலே போதும். மிக்க நன்றி நண்பரே!
//SRINIVAS GOPALAN said...
சேட்டை சில திருத்தங்கள் உங்கள் பதிவில்//
மிக்க மகிழ்ச்சி! இடுகையை பொறுமையாய் முழுமையாய் வாசித்திருக்கீறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. அதுவே நிறைவு தருகிறது.
//இந்திரா காந்தி வென்றது ரே பரேலி தொகுதியில். அலஹாபாத் இல்லை. அலஹாபாத் உள்ள உபி உயர் நீதிமன்றம் அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது.//
//எமெர்ஜென்சி நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. சோவியெத் நாட்டை ஆதரிப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை. (மார்க்சிஸ்ட் - சீனா). அதனால் சோவியெத் ரஷ்யா இந்திராவை ஆதரித்ததில் ஆச்சர்யம் இல்லை.//
//தேவிலால் 1977-79 மொரார்ஜி ஆட்சியில் இல்லை. அவர் அரியானா அரசியலில் தான் இருந்தார். மொரார்ஜி அரசு கவிழ ராஜ்நாராயணன், சரண் சிங் போன்றவர்களின் கூத்து ஒரு காரணம். அது தவிர அத்வானி, வாஜ்பாய் போன்றோரின் 'double membership' - RSS மற்றும் ஜனதா கட்சி என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் எதிர்த்தது மற்றொரு காரணம்.//
மிக்க நன்றி! நேரமின்மை மற்றும் இடுகையின் நீளம் குறித்த கவலை காரணமாய், பல தகவல்களை சரிபார்க்காமல் எழுதியிருக்கிறேன். அதற்காக அனைவரும் என்னை மன்னிக்கவும். சரியான தகவல்களை பொறுமையுடன் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி! இனி இது போன்ற இடுகைகள் எழுதுகையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
கோடி நன்றிகள் உங்களுக்கு! :-)
அருமையான கட்டுரை சேட்டை...!
அன்பின் சேட்டைக்காரனுக்கு, (இப்படி அழைப்பது என்னவோபோல் இருக்கிறது.என்ன செய்ய.?அப்படித்தானே அறிமுகமாகி இருக்கிறீர்கள்.)நிறையவே மெனக்கெட்டு அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள். சாதாரணமாகவே நம் மக்கள் அறிவின்படி செல்லாமல் உணர்வின்படி வழிநடப்பவர்கள்.நான்கு பேர் என்ன சொல்கிறார்கள் என்றுதான் சிந்திப்பார்களேயல்லாமல், காய்தல் உவத்தல் அகற்றி ஆராய மாட்டார்கள். எனக்கு அந்த ஆதங்கம் உண்டு, நான் ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். 6-ம் தேதி வெளியாயிற்று. அது குறித்து ஒரு பதிவும் பதிவிட உள்ளேன். தனிப்பட்ட விஷயங்கள் எழுதுவதை தவிர்த்து வருகிறேன். என் கருத்துக்கு ஒத்து வரும் உங்கள் எழுத்துக்கு துணை கூட்ட உங்களை 7-ம் தேதி ஹிந்துவில் ஓப்பென் பேஜில் ஹேமா ராகவன் அண்ணாஹசாரேக்கு எழுதிஉள்ள கடிதத்தைப் படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்து மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான கட்டுரை சேட்டை...!
மிக்க நன்றி பானா ராவன்னா! :-)
//G.M Balasubramaniam said...
அன்பின் சேட்டைக்காரனுக்கு, (இப்படி அழைப்பது என்னவோபோல் இருக்கிறது.என்ன செய்ய.?அப்படித்தானே அறிமுகமாகி இருக்கிறீர்கள்.)//
ஐயா, இது நான் விரும்பியே வைத்துக்கொண்ட புனைபெயர். நீங்களும் அப்படியே அழைக்கலாம். சேட்டை என்று சுருக்கியும் அழைக்கலாம். :-)
//நிறையவே மெனக்கெட்டு அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள்.//
ஊதுகிற சங்கை ஊதியிருக்கிறேன் ஐயா. இதனால் பல நண்பர்களை இழந்திருக்கிறேன். கவலையில்லை ஐயா! கூட்டத்தோடு கோவிந்தா போட நான் தயாராயில்லை.
//சாதாரணமாகவே நம் மக்கள் அறிவின்படி செல்லாமல் உணர்வின்படி வழிநடப்பவர்கள்.நான்கு பேர் என்ன சொல்கிறார்கள் என்றுதான் சிந்திப்பார்களேயல்லாமல், காய்தல் உவத்தல் அகற்றி ஆராய மாட்டார்கள். எனக்கு அந்த ஆதங்கம் உண்டு,//
அதே நிலைதான் எனக்கும். ‘உனக்கேன் இந்த வேலை? நீ பாட்டுக்கு மொக்கை போட்டுக்கொண்டிரேன். எதற்கு எதிர்நீச்சல் போடுகிறாய்? என்று தனிமடல்கள், தொலைபேசிகள் என்று பல அறிவுரைகள்.
எனது சகபதிவர்கள் எவரையும் நீங்கள் இப்படித்தான் எழுத வேண்டுமென்று நான் சொல்வதில்லை. அதே போல் அவர்களுக்கு பிடித்தமாதிரித்தான் நான் எழுத வேண்டும் என்று என்னையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எனது ஆதங்கம் எல்லாம், சட்டத்திலும் அரசியல் சாசனத்திலும் நடக்கவே வழியில்லாத ஒரு விஷயத்தை நடத்துவதாக லட்சக்கணக்கான மக்களை ஒரு தனிநபர், தனது சுய நலத்துக்காகப் பயன்படுத்துவதும், புரிந்து கொள்ளாமல் புரட்சி செய்கிறோம் என்று மக்கள் போய் விழுவதும் தான்.
// நான் ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். 6-ம் தேதி வெளியாயிற்று. அது குறித்து ஒரு பதிவும் பதிவிட உள்ளேன். தனிப்பட்ட விஷயங்கள் எழுதுவதை தவிர்த்து வருகிறேன். என் கருத்துக்கு ஒத்து வரும் உங்கள் எழுத்துக்கு துணை கூட்ட உங்களை 7-ம் தேதி ஹிந்துவில் ஓப்பென் பேஜில் ஹேமா ராகவன் அண்ணாஹசாரேக்கு எழுதிஉள்ள கடிதத்தைப் படித்துப் பாருங்கள்.//
இரண்டையும் வாசித்து விட்டேன். இது தவிர, நம் போன்ற பலர் பல ஆங்கிலத்தளங்களில் எழுதுவதையும், அதற்கு அண்ணாவின் தொண்டர்கள் அளித்துவரும் அடாவடி பதிலையும் பார்க்கிறபோது சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கை மென்மெலும் வலுப்படுகிறது.
//உங்கள் எழுத்து மேலும் மெருகு பெற வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி ஐயா!
பதிவின் மையக்கருத்து அருமை. கங்கை நதி மாசுபடுவதை எதிர்த்து உண்மையாக சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த வயது இளம் துறவி நிகமானந்தா பற்றி அவர் இறந்த பின்புதான் செய்திகள் வெளிவந்தன. அன்னாவுக்கு கிடக்கும் விளம்பர வெளிச்சம் ஆய்வுக்குரியதே.
மேலும் மொரார்ஜி முதல்வர் ஆனார் என்று எழுதியிருக்கிறீர்கள். அதை பிரதமர் என்று மாற்றி விட்டால் தகவல் பிழை இல்லாமல் இருக்கும்.
Hazare shop
------------
இங்கு அனைத்துவிதமான ஊழல்களும் ஒழிக்கப்படும்!
இரண்டாவது மற்றும் முன்று, நாலாவது சுதந்திர போராட்டம் நடத்தப்படும்!
சாகும் வரை உண்ணாவிரதம் (சாகாமல்)இருப்பது எப்படி என்று கற்றுத்தரப்படும்.
அருமையான கட்டுரை!
தொடருங்கள் நண்பரே!
//Jagannath said...
பதிவின் மையக்கருத்து அருமை. கங்கை நதி மாசுபடுவதை எதிர்த்து உண்மையாக சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த வயது இளம் துறவி நிகமானந்தா பற்றி அவர் இறந்த பின்புதான் செய்திகள் வெளிவந்தன. அன்னாவுக்கு கிடக்கும் விளம்பர வெளிச்சம் ஆய்வுக்குரியதே.//
அண்ணா ஹஜாரேவுக்கு முன்னாலேயே அக்டோபர் 2010-ல் ஷம்பு தத்தா ஷர்மா என்ற 93 வயதான காந்தீயவாதி, ஊழலை எதிர்த்து இதே தில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோதும் எந்த ஊடகங்களும் அவரைக் கண்டு கொள்ளவில்லை! ஆனால், உலகக்கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததும், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறார்: அவரது வாலைச் சுற்றிக்கொண்டு ஊடகங்கள் கேமிராவைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்றன. (இது ஒரு கார்ப்பரேட் சதி என்று சில ஆங்கிலப்பதிவுகளில் எழுதியிருப்பதில் உண்மையிருந்தாலும் இருக்குமோ என்னவோ!)
//மேலும் மொரார்ஜி முதல்வர் ஆனார் என்று எழுதியிருக்கிறீர்கள். அதை பிரதமர் என்று மாற்றி விட்டால் தகவல் பிழை இல்லாமல் இருக்கும்.//
மாற்றிவிட்டேன். மிக்க நன்றி!
//ProfWolfMan said...
Hazare shop
------------
இங்கு அனைத்துவிதமான ஊழல்களும் ஒழிக்கப்படும்! இரண்டாவது மற்றும் முன்று, நாலாவது சுதந்திர போராட்டம் நடத்தப்படும்! சாகும் வரை உண்ணாவிரதம் (சாகாமல்)இருப்பது எப்படி என்று கற்றுத்தரப்படும்.//
ஹாஹா! முக்கியமாக ஓழிப்பது எப்படி என்று நேரடி ஒளிபரப்பு நடத்தப்படும்.
அண்ணாஜிப்பழம் என்ற பெயரில் நான்கு பாகங்கள் எழுதியிருக்கிறேன். அதையும் நேரம் கிடைத்தால் வாசியுங்கள்!
//அருமையான கட்டுரை! தொடருங்கள் நண்பரே!//
இது போன்ற இரண்டொரு பின்னூட்டங்கள் போதும், எனக்கிருக்கிற ஆதங்கங்கள் நிறைய பேருக்கு இருக்கிறதென்று நான் புரிந்து கொள்ள.!
மிக்க நன்றி நண்பரே! அடிக்கடி வாருங்கள்!
அன்புள்ள சேட்டை,
//இந்த இடுகையின் நீ...ளம் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்//
இது மாதிரி இல்லாமல், நீங்கள் அறிந்ததையும் கூற விரும்புவதையும் முழுவதுமாகப் (வேண்டுமானால் பகுதிகளாக) பதிவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. நகைச்சுவைப் பதிவாக இல்லாமல் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சீரியஸ் விஷயங்களைக் கொண்டுள்ளமையால் அவ்வாறு கேட்கிறோம். சிந்திக்க வைக்கும் பதிவு..நன்றாக இருக்கிறது சேட்டை..தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் :)
அருமையான பதிவு. தங்கள் சிரத்தை தெரிகிறது....
ஐயம் தெளிவுப் பெற்றது...
தங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்...
சேட்டையின் மறுபக்கம் இது. பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை தகவல்கள் . சரியான கோபம்தான் .தொடருங்கள்.
//சுபத்ரா said...
இது மாதிரி இல்லாமல், நீங்கள் அறிந்ததையும் கூற விரும்புவதையும் முழுவதுமாகப் (வேண்டுமானால் பகுதிகளாக) பதிவிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.//
அதைத்தான் "அண்ணாஜிப்பழம்," என்ற தலைப்பில் நான்கு பகுதிகளாகவும், "அண்டப்புளுகர் அண்ணா ஹஜாரே," என்று தனியாகவும் இதற்கு முன்னர் எழுதியிருந்தேனே! :-)
//நகைச்சுவைப் பதிவாக இல்லாமல் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சீரியஸ் விஷயங்களைக் கொண்டுள்ளமையால் அவ்வாறு கேட்கிறோம்.//
இந்த இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்று இவர்கள் அடிக்கிற கூத்தையும், அதை ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் பெரிதுபடுத்துவதையும் பார்த்ததனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவே இந்த இடுகை!
//சிந்திக்க வைக்கும் பதிவு..நன்றாக இருக்கிறது சேட்டை..தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் :)//
அனேகமாக, இது போல இன்னும் சில இடுகைகள் கூடிய விரைவிலேயே வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. பார்க்கலாம்.
மிக்க நன்றி!
//MUTHARASU said...
அருமையான பதிவு. தங்கள் சிரத்தை தெரிகிறது....//
இயன்றவரை நிறைய தகவல்களை அளிக்க வேண்டும் என்று முனைந்தேன். அவ்வளவே!
//ஐயம் தெளிவுப் பெற்றது...தங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்...//
அது போதும், ஒரு சிலராவது எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலே போதுமானது. எனது சிறுமுயற்சிக்குக் கிடைத்த பெரும்வெற்றி என்று கருதுவேன். மிக்க நன்றி!
//Mahi_Granny said...
சேட்டையின் மறுபக்கம் இது. பிரமிப்பாக இருக்கிறது. இத்தனை தகவல்கள் . சரியான கோபம்தான் .தொடருங்கள்.//
Those who forget the past shall be condemned to repeat it என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு பெரிய தியாகவரலாற்றை மறக்கடித்து விட சிலர் செய்த முயற்சியைக் கண்டித்தே இவ்வளவு தகவல்களைத் திரட்டி எழுதினேன்.
மிக்க நன்றி!
அருமையான பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
//Priya said...
அருமையான பதிவு. நன்றி, பிரியா http://www.tamilcomedyworld.com//
:-)
//தமிழா தமிழா said...
http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY//
நண்பரே, மிக்க நன்றி! இதன் அதிகாரபூர்வமான நகலே என்வசம் வந்து சில நாட்களாகி விட்டது. தற்சமயம் அதை மொழிபெயர்க்க கொடுத்திருக்கிறேன். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி! :-)
//சமூக ஆர்வலரும் காந்தீயவாதியுமான ஜெயபிரகாஷ் நாராயண் மாநிலங்களுக்கு தன்னாட்சி கோரி பீஹாரில் அறப்போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். //
As i understand this is not completely true. he just moved out of politics and was living as another Mahatma in ashram, he was not part of any political activities. (Please understand in many aspects he is admirable than Mahatma.) he went into a silent mode after failed in his all initiatives.
During that time, there was a students movement in Gujarat and then following that in Bihar for some simple problems. Government as usual tried to crush them. so students went and asked JP to lead them. JP found that this is a chance to bring a change in this country so he started a movement against corruption. if i am correct he would have lost his wife as well and was counting his last days. (there are tears in my eyes while writing this, not because he was counting his last days. they way we treated a freedom fighter who has sacrificed everything for this country)
i agree that our current effort against can ever match the movement JP has had. for a simple reason that we don't have a JP kind of people with us to lead us. we have to understand that people like JP didn't speak they lived what they preached.
Anna is not a another JP or Mahatma. and today what we are doing is not a freedom struggle. we are fighting against corruption.
in current India you and me are better than current PM/President for the simple reason they are not truthful. so we need to believe that we are the one who has the capability to lead this cause of fight against corruption, it need not be a lokpal bill. it can be be anything, but we need a change and solution for this problem.
i sencond what பெசொவி has said...
அண்ணா ஹசாரே மீதான கருத்து ஒரு பக்கம் இருக்க, எமர்ஜென்சியை விடவும் ஒரு இரண்டாவது சுதந்திரப் போர் இல்லை என்பது நிதரிசனம். மிக அருமையாக எழுதப்பட்ட ஒரு அத்தியாவசியமான கட்டுரை. வாழ்த்துகள்!
Post a Comment