Monday, August 1, 2011

அண்டப்புளுகர் அண்ணா ஹஜாரே!

’எதைத்தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற விரக்தி அண்ணா ஹஜாரேவுக்கும் அவரது சிஷ்யகோடிகளுக்கும் வந்துவிட்டது என்பதை அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 16 முதல் (மீண்டும் ஒரு முறை) "சாகும்வரை உண்ணாவிரதம்," இருப்பதாக அவர் அறிவித்ததும், பாராளுமன்றத்தொடரைக் காரணம்காட்டி அவருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து இந்த நான்கு நாட்களில் நான்குவிதமான அறிக்கைகளை அண்ணா ஹஜாரே விட்டுவிட்டார்.

"ஆஹா, எனக்கா அனுமதியில்லை? என் உயிரே போனாலும் சரி, உண்ணாவிரதம் இருந்தே தீருவேன்," என்று ஒரு அறிவிப்பு. பிறகு, "ஜந்தர் மந்தர் இல்லாவிட்டால் என்ன, எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கே உண்ணாவிரதம் இருப்பேன்," என்று கொஞ்சம் சால்ஜாப்பு. பிறகு, "எத்தனை பேர் வருவார்கள் என்று எனக்கென்ன தெரியும்?" என்று ஒரு நக்கல். இன்று மீண்டும் "துப்பாக்கிக் குண்டை வாங்கிக்கொள்ளத்தயார்; ஆனால், உண்ணாவிரதம் ஜந்தர்மந்தரில் தான் நடக்கும்," என்று புதிதாய் ஒரு உடான்ஸ்!

இவர்களின் நோக்கம் ஊழலை ஒழிப்பது இல்லை என்ற சந்தேகம் பலருக்கு வரத்தொடங்கி வெகுநாளாகி விட்டது. இதை உணர்ந்ததாலோ என்னவோ,"பொதுமக்களிடம் கருத்துக் கேட்போம்; நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்தைக் கேட்பேன்," என்று அண்ணா ஹஜாரே தெரிவித்திருக்கிறார். இப்படி இவர் சொல்வது இது மூன்றாவது தடவை. இதுவரை இவர் தில்லி, மும்பை,அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இவரது தொண்டரடிப்பொடியாழ்வார் அர்விந்த் கேஜ்ரிவால் சத்தமின்றி சென்னை IIT-க்கு வந்து வாக்குக்கணிப்பை முடுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். "ஒருவாரம் யாரும் பணிக்குச் செல்லாதீர்கள்; ஒருவாரம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! மூவண்ணக்கொடியை ஏந்தி அனைவரும் தெருவுக்கு வந்து போராடுங்கள்!" என்று என்டி.டிவி-ஹிந்துவுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

(ஐ.ஐ.டி.மெட்ராஸில் ஒருவாரம் லீவு கொடுப்பார்களா? - இதை நம்புவீர்கள் என்றால், அண்ணா ஹஜாரே ஊழலை ஒழிப்பார் என்று நம்புவதிலும் வியப்பில்லை!)

பி.எஸ்.எடியூரப்பாவைத் துரத்திய கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைவர் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூட, "மீண்டும் உண்ணாவிரதம் என்பதைத் தவிர்த்து, வேறு வழியில் போராடுங்கள்," என்று சொல்லியிருக்கிறார். அதையும் மீறி அண்ணாஜி மீண்டும் உண்ணாவிரதம் என்று அறிவித்திருப்பதும், தொடர்ந்து சவடாலாகப் பேசிக்கொண்டு வருவதும், அவருக்குத் துளிகூட பக்குவமில்லை என்பதை மிகவும் பட்டவர்த்தனமாக பறைசாற்றுகிறது. அவருக்குத் தேவை விளம்பரம் ஒன்றுதான்!

அண்ணா ஹஜாரேயொன்றும் பெரிய யோக்கியசிகாமணியல்ல. அவரால் தேசீயவாத காங்கிரஸ் கட்சியின் மந்திரி சுரேஷ் ஜெயின் பதவி விலகினார் என்று பீற்றிக்கொள்கிறார்கள். ஆனால், சுரேஷ் ஜெயின் பதவி விலகக் காரணமாக இருந்த பி.பி.சாவந்த் கமிட்டியின் அறிக்கையில், அண்ணா ஹஜாரேயின் தொண்டு நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது பிறந்த நாளுக்காக, தொண்டு நிறுவனத்திலிருந்து 2.21 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவிர நிர்வாகச் சீர்கேடு தொடங்கி, கட்டப்பஞ்சாயது வரை அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் உள்ளன. இவ்வளவு ஏன், ஒரு வழக்கை கடந்த 13-07-11 அன்றுதான் சமரசப்பேச்சு வார்த்தை மூலம் வாபஸ் பெறச்செய்திருக்கிறார்.

சரி, பா.ஜ.க. இவரது உண்ணாவிரதத்தை ஆதரிக்கிறதே, ஏற்றுக்கொள்வாரா? முதல்முறை விரட்டியடிக்கப்பட்ட உமா பாரதி இம்முறை வந்தால் என்ன செய்வார்? நிதிஷ் குமாருக்கென்று தனியாக லோக்பால் வரைவொன்றை அனுப்பியது ஏன்? ஏன் இந்த இரட்டை வேடம் இந்த மனிதருக்கு?

இன்று இன்னொரு வேடிக்கையை நிகழ்த்தியிருக்கிறார் ஊழலை ஒழிக்க வந்த இந்த உத்தமர்! மத்திய மந்திரி கபில் சிபலின் தொகுதியான சாந்தினி சௌக்கில் ஒரு கணக்கெடுப்பு நடத்திவிட்டு, 85% மக்கள் தன் சட்டவரைவை ஆதரிப்பதாக புரூடா விட்டிருக்கிறார். எப்படியென்று பார்ப்போமா?

அந்தத் தொகுதியில் அண்ணா ஹஜாரே & கம்பனி நான்கு லட்சம் படிவங்களை விநியோகிக்கிறார்கள். அதில், 86,000 படிவங்கள் நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 85% மக்கள் அண்ணா ஹஜாரேயால் தயாரிக்கப்பட்டுள்ள ஜன் லோக்பால் மசோதாவின் வரைவையே ஆதரிக்கிறார்கள். (அப்படியென்று நான் சொல்லவில்லை; அவர்களே பீற்றிக்கொண்டிருக்கிறார்கள்! இதோ...!)

அதாவது, படிவத்தை நிரப்பியவர்கள் வெறும் 21.5%. அண்ணா ஹஜாரேயின் லோக்பால் மசோதாவை ஆதரிப்பவர்கள் வெறும் 18.25% தான். இந்தக் கணக்கின்படி மீதமுள்ள 81.75% பேர் அண்ணா ஹஜாரேயை ஆதரிக்கவில்லை என்று பொருள் கொள்ளலாமா? இப்படிப் பொருள் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அதை விட முட்டாள்தனம் அண்ணா ஹஜாரேயின் புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்வது. மேலும், இந்த கணக்கெடுப்பு எடுக்க, அவர்கள் எந்த முறையைக் கையாண்டார்கள், எந்த புள்ளிவிபர நிறுவனம் அவர்களுக்கு உதவி செய்தது என்று யாருக்கும் தெரியாது.

யார் கேட்பார்கள்? அண்ணா ஹஜாரேயைப் பற்றி கேள்விகேட்டால்,காங்கிரஸ் அடிவருடி என்றல்லவா சொல்கிறார்கள்? பல ஆங்கில தளங்களில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தின் உள்நோக்கம் குறித்துக் கேள்வி கேட்கத்தொடங்கி விட்டார்கள். பல பத்திரிகையாளர்களும் அவரது அணுகுமுறையைக் குறைசொல்லத்தொடங்கி விட்டார்கள். இப்போது, இதிலிருந்து தப்பிக்க அடுத்த புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் அண்ணாவின் தம்பிகள்!

சோனியா காந்தி-கருணாநிதி படத்தைப் போட்டு "மோசடிக்கும்பலை முறியடிப்போம்; ஜனநாயகம் காப்போம்," என்று எனது வலைப்பதிவில் தமிழகத்தில் பொதுத்தேர்தலின் பிரச்சாரம் ஓய்கிற நாள்வரை பேனர் வைத்திருந்தவன் நான். எத்தனையோ இடுகைகளில் காங்கிரஸை செமத்தியாகக் கலாய்த்திருக்கிறேன். அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் (ஓரு நாள் லீவு போட்டு) கலந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், அண்ணா ஹஜாரே ஏமாற்றி விட்டார்; தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஏமாற்றுவார். மகாத்மா காந்திஜீக்கு ஜே! சத்யமேவ ஜெயதே!!

24 comments:

ரிஷபன் said...

இதே சந்தேகம்தான் இப்போது எல்லோருக்கும்.. விளம்பர ஆசையில் அவர் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறாரோ.. அவரது ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்டும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது.. காந்திக் குல்லாய் பார்த்து ஒரு நல்ல மனிதர் எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்க வைத்தது என்னவோ நிஜம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்கு புரிந்து விட்டது!

புரையோடிப்போய் நன்கு வேரூன்றியுள்ள லஞ்சத்தையும் ஊழலையும், அவ்வளவு எளிதாக யாராலும் அகற்றிவிட முடியாது என்று.

M.R said...

ஆனால், அண்ணா ஹஜாரே ஏமாற்றி விட்டார்; தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஏமாற்றுவார்




கொடுமை

Chitra said...

காரசாரமான பதிவுங்க.....

சேலம் தேவா said...

யாரைதான் நம்பறதுன்னு தெரியலயே..?! :(

நிரூபன் said...

அண்டப்புளுகர் அண்ணா ஹஜாரே!//

ஏன் சகோ, ஓவராப் புளுகிட்டாரோ ஆள்,
நம்பிக் கெட்டமாதிரிக் கோபத்தோடு ஒரு தலைப்பு வைச்சிருக்கிறீங்களே((((:

நிரூபன் said...

அண்டப்புளுகர் அண்ணா ஹஜாரே!//

ஏன் சகோ, ஓவராப் புளுகிட்டாரோ ஆள்,
நம்பிக் கெட்டமாதிரிக் கோபத்தோடு ஒரு தலைப்பு வைச்சிருக்கிறீங்களே((((:

நிரூபன் said...

ஆகஸ்ட் 16 முதல் (மீண்டும் ஒரு முறை) "சாகும்வரை உண்ணாவிரதம்," இருப்பதாக அவர் அறிவித்ததும், பாராளுமன்றத்தொடரைக் காரணம்காட்டி அவருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதும்//

என்னய்யா சேட்டை, அடுத்த நாடகம் தொடங்கிட்டாரா.

நிரூபன் said...

ஆகஸ்ட் 16 முதல் (மீண்டும் ஒரு முறை) "சாகும்வரை உண்ணாவிரதம்," இருப்பதாக அவர் அறிவித்ததும், பாராளுமன்றத்தொடரைக் காரணம்காட்டி அவருக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதும்/

ஏன் சகோ, அடுத்த நாடகம் ஆடப் போறாரா.

நிரூபன் said...

(ஐ.ஐ.டி.மெட்ராஸில் ஒருவாரம் லீவு கொடுப்பார்களா? - இதை நம்புவீர்கள் என்றால், அண்ணா ஹஜாரே ஊழலை ஒழிப்பார் என்று நம்புவதிலும் வியப்பில்லை!//

ஸப்பா....என்ன ஒரு டெடர் தனமான, ஒப்புவமைக் காமெடி.

நிரூபன் said...

சகோ, உங்களின் தீவிரமான நம்பிக்கையானது, ஏமாற்றத்தில் முடிந்திருப்பதை அடிப்படையாக வைத்து, ஹசாரே மீதான கோபத்தின் வெளிப்பாட்டினை விளக்கும் வண்ணம் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

எம்மால் ஆதங்கப்படத் தானே முடியும்,
காரணம், நாம் ஏமாளிகள் என்று நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்- அரசியல்வாதிகள்- சாமியார்கள்- போராட்டவாதிகள்.

என்ன கொடுமை சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட பாவமே?

Anonymous said...

நல்ல பதிவு...

ஆனாலும் அவர் மேல்...அவர் வயது மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...

தொடர்ந்து கலக்குங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த சந்தேகம் இப்போ எல்லாருக்கும் வந்துடுச்சு சேட்டை......!

Renga said...

//தேவை விளம்பரம் ஒன்றுதான்// exactly right... but People who are opposing Congress are supporting this comedian...

So.. this guy will be in limelight till next election...

settaikkaran said...

//ரிஷபன் said...

இதே சந்தேகம்தான் இப்போது எல்லோருக்கும்.. விளம்பர ஆசையில் அவர் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறாரோ..//

இந்த சந்தேகம் ஏற்படுவதற்குக் காரணங்கள் பல. ராஜீவ் காந்தியிடமிருந்தும், ஷரத் பவாரிடமிருந்தும் விருது வாங்கியபோது, லோக்பால் சட்டம் குறித்து அண்ணா ஹஜாரே மூச்சே விடவில்லை. அவர் நடத்தி வரும் ஹிந்த் ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் முக்கியப்பொறுப்பு வகிக்கிற அவரது மருமகன் முன்பு காங்கிரஸிலும், இன்றளவிலும் ஷரத் பவாரின் தேசீயவாத காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிற நிலையில், 1986 -க்குப் பிறகு இவருக்கு மாநில அளவிலோ, மத்திய அளவிலோ எந்த விருதும் வழங்கப்படாதது கூட காரணமாயிருக்குமோ என்று சில ஆங்கில வலைப்பதிவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

//அவரது ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்டும் முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது.//

அவரது குறிக்கோளில் கோளாறு இருக்கிறது என்பதை பலருக்கு புரிய வைத்ததே அவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுதான்! :-)

//காந்திக் குல்லாய் பார்த்து ஒரு நல்ல மனிதர் எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்க வைத்தது என்னவோ நிஜம்.//

அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது, விமானக்குண்டு வீச்சில் அவரது சகாக்கள் இறந்துவிட்டதாகவும், இவர் மட்டும் தப்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட தினத்தன்று எந்த விமானத்தாக்குதல்களும் நடைபெறவேயில்லை என்று பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

1975 -ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், அதே ஆண்டு ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் துவங்கி, அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியும் பெற்றிருக்கிறார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது. அரசியல்வாதிகளின் தயவுதாட்சணியமின்றி இதை அவரால் செய்திருக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அண்ணா ஹஜாரேயின் அண்டப்புளுகுகளுக்கு இவை சான்றுகள்.

மிக்க நன்றி!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்கு புரிந்து விட்டது! புரையோடிப்போய் நன்கு வேரூன்றியுள்ள லஞ்சத்தையும் ஊழலையும், அவ்வளவு எளிதாக யாராலும் அகற்றிவிட முடியாது என்று.//

முடியும் ஐயா! 2G ஊழல், காமன்வெல்த், ஆதர்ஷ் மற்றும் கர்நாடக சுரங்க ஊழல் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தவர்கள் (Whistleblowers) நம்மைப் போன்ற சாமானியர்கள். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்களை வெளிக்கொணர்ந்தார்கள்.

ஆனால், அண்ணா ஹஜாரே போன்றவர்கள், இருக்கிற சூழலைக் குழப்பி, அதில் குளிர்காய நினைக்கிற சுயநலவாதிகள். நமது சட்டங்களை நாம் சரிவர பயன்படுத்தத் துணிந்தால், இது போன்ற போலிகளை நம்பியிருக்கத் தேவையில்லை.

மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//M.R said...

கொடுமை//

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா....என்று ஒரு பழமொழி சொல்வார்கள். :-(

மிக்க நன்றி!

//Chitra said...

காரசாரமான பதிவுங்க.....//

வாங்க சகோதரி, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். என்ன செய்ய, சில சமயங்களில் சேட்டைக்கும் கோபம் வருதே! :-)

மிக்க நன்றி!

சேலம் தேவா said...

யாரைதான் நம்பறதுன்னு தெரியலயே..?! :(//

தகவல் உரிமைச் சட்டத்தையும் நமது அடிப்படை உரிமைகளையும் நம்புவோம் நண்பரே! அதனால் தான் பல ஊழல்கள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மிக்க நன்றி!

//ஷர்புதீன் said...

:-)//

:-)

settaikkaran said...

//நிரூபன் said...

ஏன் சகோ, ஓவராப் புளுகிட்டாரோ ஆள், நம்பிக் கெட்டமாதிரிக் கோபத்தோடு ஒரு தலைப்பு வைச்சிருக்கிறீங்களே((((://

என்னை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பேர்களுக்கு நப்பாசை காட்டி இன்னும் ஏய்த்துக்கொண்டு திரிகிறது இந்த கிழம்!

//என்னய்யா சேட்டை, அடுத்த நாடகம் தொடங்கிட்டாரா.//

கைதட்டி விசிலடிக்க ஆளிருக்கும்போது தொடங்க மாட்டாரா என்ன? அடுத்த ஷோ ரெடி! :-)

//ஸப்பா....என்ன ஒரு டெடர் தனமான, ஒப்புவமைக் காமெடி.//

ஐ.ஐ.டியில் இருப்பவர்கள் மட்டும்தான் ஊழலில் பாதிக்கப்பட்டவர்களா? நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகிறவர்களும், அழுக்குப்படாமல் வேலைபார்க்கிற நபர்களும், உயர்தட்டு மக்களும் ஊழலுக்காக தெருவில் இறங்கிப்போராடுவார்களா? இது தான் எனது கேள்வி சகோ! :-)

//சகோ, உங்களின் தீவிரமான நம்பிக்கையானது, ஏமாற்றத்தில் முடிந்திருப்பதை அடிப்படையாக வைத்து, ஹசாரே மீதான கோபத்தின் வெளிப்பாட்டினை விளக்கும் வண்ணம் ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.//

அது மட்டுமல்ல. தொடர்ந்து பொய்யும் பித்தலாட்டமுமாகச் செய்து மேலும் மேலும் மக்களைத் திசைதிருப்புகிற இந்த ஆசாமியைப் பற்றி கலாய்த்து எழுதினால் போதாது, சற்றுக் காட்டமாகவே எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றே எழுதினேன்.

//எம்மால் ஆதங்கப்படத் தானே முடியும், காரணம், நாம் ஏமாளிகள் என்று நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்- அரசியல்வாதிகள்- சாமியார்கள்- போராட்டவாதிகள்.//

ஆனால், இம்முறை அண்ணாவின் நாடகம் பலிக்காது. அனேகமாக, இந்த உண்ணாவிரத நாடகத்தில் அவரது சாயம் வெளுத்து விடும். அவர் முகத்தில் அனைவரும் காறித் துப்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

//என்ன கொடுமை சகோ.//

கொடுமைதான்! மிக்க நன்றி சகோ! :-)

Anonymous said...

////ஆனால், அண்ணா ஹஜாரே ஏமாற்றி விட்டார்; தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். இன்னும் ஏமாற்றுவார். மகாத்மா காந்திஜீக்கு ஜே! சத்யமேவ ஜெயதே!!/////

இந்த வயதில் ஒரு மனிதர் ஊழலை எதிர்த்து போராடுவது என்பதே மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம்.. 71 வயதில் இவருக்கு என்ன வேண்டும் விளம்பரம்? இவருக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம் இப்படி கொச்சைப்படுத்தாமலிருக்கலாமே நண்பரே!

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

அட பாவமே?//

ம்! மிக்க நன்றி!

//Reverie said...

நல்ல பதிவு... ஆனாலும் அவர் மேல்...அவர் வயது மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...//

சுரேஷ் கல்மாடியின் வயது என்ன? ஷரத் பவாரின் வயது என்ன? முலாயம் சிங்கின் வயது என்ன? இந்தியாவின் பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அண்ணாவின் வயதில் தான் செய்திருக்கிறார்கள். :-)

//தொடர்ந்து கலக்குங்க...//

மிக்க நன்றி! :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த சந்தேகம் இப்போ எல்லாருக்கும் வந்துடுச்சு சேட்டை......!//

வரணும் பானா ராவன்னா! நிறைய பேருக்கு சந்தேகம் வராட்டி, போலி சாமியார் மாதிரி போலி காந்தீயவாதிகள் அதிகமா புழங்க ஆரம்பிச்சிருவாங்க! மிக்க நன்றி! :-)

Renga said...

//தேவை விளம்பரம் ஒன்றுதான்// exactly right... but People who are opposing Congress are supporting this comedian...

There are several tamashas taking place because of the political intolerance in the country and Anna Hazare's drama is one among them.

// So.. this guy will be in limelight till next election...//

Yes. That is what a reader had said in Hindustan Times. "Anna will continue his fast unto death for another five years."

Thank you very much!

settaikkaran said...

ஷீ-நிசி said...

//இந்த வயதில் ஒரு மனிதர் ஊழலை எதிர்த்து போராடுவது என்பதே மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம்.. 71 வயதில் இவருக்கு என்ன வேண்டும் விளம்பரம்? இவருக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை... குறைந்தபட்சம் இப்படி கொச்சைப்படுத்தாமலிருக்கலாமே நண்பரே//

நண்பரே, யாரையும் கொச்சைப்படுத்தி எழுதுபவன் அல்ல நான். அதே சமயம் வயது ஒன்றே தகுதி என்று நினைப்பவனும் அல்ல. ஆமை கூட விட்டு வைத்தால் ஆயிரம் வருசம் உயிரோடு இருக்கும்.

அவரது குறிக்கோளே ஊழலை ஒழிப்பதல்ல. அறுபது ஆண்டுகளாய் லோக்பாலை எந்த அரசும் கவனிக்கவில்லை. அதே அறுபது ஆண்டுகளாய் அதை அண்ணா ஹஜாரேயும் கவனிக்கவில்லை. 1986 வரை அவருக்கு லோக்பால் குறித்து எந்த சொரணையும் வரவில்லை. (அதாவது அவரை அரசியல்வாதிகள் அவ்வப்போது பட்டம் கொடுத்து கௌரவித்த வரையில்!)

மேலும், அண்ணா ஹஜாரேயைக் காட்டிலும் பி.ஆர்.அம்பேத்கார் தீர்க்கதரிசி என்று ஒப்புக்கொள்வீர்களா? அவரது நேரடி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தை சீர்குலைக்க அண்ணா முயல்வது எவ்விதத்தில் சரி?

அப்படியே வயது ஒன்றுதான் அண்ணாவின் தகுதி என்றால், 93 வயதான காந்தீயவாதி ஷம்பு தத்தா ஷர்மா என்பவர், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதமிருந்த அதே தில்லியில் அக்டோபர் 2010-ல் உண்ணாவிரதம் இருந்தார். அவர் வெறும் போராட்டம் மட்டுமல்ல; ஊழலுக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடுத்துப் போராடிக்கொண்டிருப்பவர். அவருக்குக் கிடைக்காத மரியாதை அண்ணாவுக்குக் கிடைப்பது ஏன் என்று இன்னும் ஒரு இடுகை எழுதலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

naren said...

Why i can Believr LOKPAL ?
Just one reason is enough.
If lokpal comes, maybe corruption is reduced. Definitly, corruption cannot increased by LOKPAL.
then, why are you against LOKPAL?

settaikkaran said...

//Why i can Believr LOKPAL ? Just one reason is enough.If lokpal comes, maybe corruption is reduced. Definitly, corruption cannot increased by LOKPAL.then, why are you against LOKPAL?//

Let me tell you that I want to see a corruption free country like anybody. I want a strong Lokpal Bill that acts as the deterrant to corruption but for the bill to get passed it needs the concurrence of all parties concerned including the elected representatives.

Anna Hazare is not helping the cause of LOKPAL with his coercive tactics. He wants to supercede an established parliamentary system without even knowing whether his draft has been accepted by the people by and large.

thank you very much.

Anbu said...

போனதடவை உண்ணாவிரதம் இருந்தப்போ 85 லட்சரூபாய் நன்கொடை வசூலித்தார் இந்த கசாரே. இந்ததடவை 85 கோடி வசூலிச்சிருப்பாரு.. இந்த காந்தியவாதி மிக எளிமையாக தங்குவது 5 நட்சத்திர ஓட்டலில்தான். பயணிப்பதோ பி.எம்.டபில்யூ ஆடி போன்ற விலை உயர்ந்த கார்களில்தான். ஊழலை பற்றி பேசுவார். ஆனால் பாஜக ஆட்சியில் நடந்த ஊழலையும் கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழலையும் பற்றி பேசவே மாட்டார் இந்த காவி காந்தியவாதி.