Sunday, March 13, 2011

குடும்பஸ்தர்களுக்கு ஒரு நற்செய்தி!

Justify Fullஎங்களது DSN டெலிஷாப்பிங் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்! உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தி ஐந்து லட்சம் பேர் இறக்கிறார்கள். அதிலே பத்துலட்சம் பேர் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். மீதமுள்ள பதினைந்து லட்சம் பேர் திருமணமானவர்கள் என்று ஆதாரமற்ற ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, ’கொசுக்களால் வருடத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே பிரச்சினை; ஆனால், திருமணவாழ்க்கை அப்படியா?’ என்று தழுதழுத்த குரலில் வேதனையோடு கேள்வியெழுப்புகிறார்கள்.


அந்தப் பிரச்சினைகளை ஆண்டவனால் கூட தீர்க்க முடியாது என்றாலும், கொசுக்களால் ஏற்படுகிற பிரச்சினையைத் தீர்க்கலாம் அல்லவா?

இந்தக் கொசுக்கடியால் எத்தனை குடும்பங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன தெரியுமா? இப்படி கொசுக்களால் பலர் தீராத மன உளைச்சலுக்கும், வீண் செலவுக்கும் ஆளாகியிருக்கிற அவலத்தை எப்படி நீக்குவது என்று விஞ்ஞானிகள் அயராது ஆராய்ச்சி செய்து வந்தனர். அதன் விளைவாக உருவாகியிருப்பதுதான் பிரபல மின்னணுப்பொருள் தயாரிப்பாளர்கள் ’பாராசைட்ஸ்’-ன் அரிய கண்டுபிடிப்பான புத்தம் புதிய, அதிநவீன அல்ட்ரா டீலக்ஸ் மஸ்க்விட்டோ டெஸ்ட்ராயர் என்னும் ஏ.டி.எம்.டி(ADMD). இதோ டி.எஸ்.என். தண்டச் செலவு நெட்வொர்க் நேயர்களின் பார்வைக்காக, எமது கண்கவர் அதிநவீன அதிநுட்ப கொசுக்கொல்லி இயந்திரம்.

பாருங்கள் நேயர்களே!


பார்த்தீர்களா? பார்க்கவே மிகவும் கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? இந்த ஏ.டி.எம்.டியோட சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இருந்தாலும், சில முக்கியமான அம்சங்களை இப்போது பார்க்கலாமா?

முதலாவதாக, இந்த கொசுக்கொல்லியை பகல்நேரத்தில் உங்கள் வீட்டில் கார் நிறுத்துமிடத்திலேயே நிறுத்தலாம். சூரிய ஒளியால் இதற்கு எந்த பாதிப்பும் வராது. 100 % ஸோலார் ரேடியேஷன் புரூஃப்! வெயில் அதிகமானால் இதன் டீசல் டாங்கி வெடித்தாலும் வெடிக்குமே தவிர இதன் வண்ணம் கலையாது; மெருகு குலையாது. இதே போல, எவ்வளவு மழைபெய்தாலும் இதில் உங்களால் ஒரு துருவையும் கண்டே பிடிக்க முடியாது. காரணம், சின்னத் தூறல் போட்டாலே நொடியில் கரைந்து போகிற மாதிரியான உலோகத்தில் தான் இதை வடிவமைத்திருக்கிறார்கள் நமது பாராசைட்ஸ் நிறுவனத்தார்.

இதில் இருக்கையை எப்படி அமைத்திருக்கிறார்கள் பாருங்களேன்! இரவில் இருக்கைப்பகுதியில் இருக்கிற குடுவை போன்ற பகுதிக்குள்ளே குதித்து உட்கார்ந்து கொண்டால், ஒரு கொசுவும் அண்டாது. நீங்கள் உட்கார்ந்தபடியே உறங்குவதற்கு வசதியாக, சிவப்புக்கம்பளம் ஒன்றை கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

இதில் கொரிய தொழில்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மஸ்குவிட்டோ எவால்யுவேட்டர், அதாவது டி.எம்.ஈ என்ற புதுமையான தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் மூலம், உங்கள் வீட்டில் இதுவரை எத்தனை கொசுக்கள் கொல்லப்பட்டன, அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும். ஹா..ஹா! எவ்வளவு வசதி பார்த்தீர்களா?

மேலும், இந்த ஏ.டி.எம்.எமை ஒரு பிரத்தியேக ஏ.வி. கேபிள் மூலமாக உங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியோடு தொடர்புகொடுத்தால், அதன்பிறகு எந்தெந்த மெகாசீரியல்கள் பார்க்கும்போது கொசு அதிகமாகக் கடிக்கிறது என்ற விபரத்தையும் மிகத்துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, உங்கள் வீட்டில் இருப்பதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான கொசுவை தொலைக்காட்சிப் பெட்டியில் கண்டுகளிக்கலாம். இப்படி இந்த ஏ.டி.ஏ.எம்மில் பல புதுமையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

முன்பக்கத்தில் பீரங்கிபோலிருக்கிற இதன் மல்ட்டி சென்ஸிட்டிவ் மஸ்க்விட்டோ சென்ஸரைப் பார்த்தீர்களா? இது சுமார் எட்டேமுக்கால் அடிவரை பரப்பளவில் எங்கு கொசுவிருந்தாலும், கண்டுபிடித்து தீயணைக்கும்படை வாகனம்போல ஒலியெழுப்பும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். இருக்கையில் அமர்ந்து மானிட்டரில் தெரிகிற கொசுவைக் குறிவைத்து பொத்தானை அழுத்தினால் ஏ.டி.எம்.டியின் அல்ட்ரா வயலட் கதிர்கள் அந்த கொசுவைத் தாக்கிக்கொன்றுவிடும். எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா? கையிலும் இரத்தமாகாது; கொசுவடிக்கப்போய் மனைவியை நீங்கள் தெரியாத்தனமாக அடிக்க வாய்ப்பில்லை.

இன்னொரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் அசந்துபோய் விடுவீர்கள்! இதற்கு டிரைவர், கிளீனர் யாரும் தேவையில்லை. இரவில் உறங்குவதற்கு முன்பு முடுக்கிவிட்டால், அதுபாட்டுக்கு வி.ஆர்.எஸ்.வாங்கிய மாமனார் மாதிரி ஒரு மூலையில் இருமிக்கொண்டே இருக்கும். அதிகமான கொசுக்களை அழிக்க விரும்புகிறவர்கள் என்றால், ஒருவர் இதில் அமர்ந்து இரவு முழுக்க இயக்கிக்கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டர் கேம்ஸ் மாதிரியே சுவாரசியமாக இருக்கும். மேலும், தண்ணியடித்துவிட்டு வருகிற கணவர்களுக்கு இந்த வேலையைத் தண்டனையாகவும் தரலாம்.

பாராசைட்ஸ் நிறுவனம் இதற்கு ஒருவருடம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. விபரங்களுக்கு அவர்களுடைய இணையதளத்துக்குச் சென்று, அது இன்னும் இருந்தால், மேலதிக விபரங்களைப் பெறலாம்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருக்கிற இந்த கொசுக்கொல்லியின் விலை எவ்வளவு என்று கேட்க ஆவலாக இருக்கிறதல்லவா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இதன் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் தொண்ணூற்றி ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் தொண்ணூற்றி ஒன்பது பைசா மட்டுமே! இவ்வளவு மலிவாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் தானே?

அதுதானே எங்களது தண்ட செலவு நெட்வொர்க்கின் தனிச்சிறப்பு. உங்களுக்குத் தேவையான பொருட்களை, மலிவான விலையில், உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறோம். திரையில் தென்படும் முகவரியைச் சரியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

டி.எஸ்.என். தண்ட செலவு நெட்வொர்க்
’கொசு டவர்ஸ்’, கழுத்தறுத்தான் தெரு,
கொலைகாரன்பேட்டை
சென்னை-14

தொலைபேசி: 044-420420420

இன்னொரு முக்கியமான விஷயம்! 31-03-2011-க்கு முன்னர் முழுத்தொகையையும் அனுப்புபவர்களுக்கு உபரித்தொகை வாங்காமலே, ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி தரப்படும்.

அது மட்டுமல்ல! நமது தண்ட செலவு நெர்வொர்க் சார்பாக, அவர்களுக்கு விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் அனுப்பி வைக்கப்படும்.


எனவே முந்துங்கள்!
அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போமா?

38 comments:

Sivakumar said...

தொலைபேசி: 044-420420420


இந்த நம்பரை டெலிபோன் டைரக்டரில தேடிப்பாத்தா....எ.ச.மு.க. கட்சி ஆபிஸ் நம்பராமே...ஒரு ஓட்டு போட்டா பத்து ஓட்டா காட்டுற மிசின் இருக்கான்னு கேக்குறாங்க. வச்சிருக்கீங்களா???

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DONT WANT VADA.....

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
vasu balaji said...

ப்ச். ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன். அந்த ஹெட்ஃபோன்ல ஸ்க்ராச்சருக்கு பதிலா தலைக்கு மேல பறக்கற கொசுவ டப்புன்னு தட்டி எத்தன கொசு சிக்கிச்சின்னு வாய்ஸ்ல சொல்றா மாதிரி வரப்போ ஆர்டர் பண்ணிக்கிறேன். வெத்து மண்டைய இது வறட்டு வறட்டுன்னு சொறிஞ்சி வச்சா கஷ்டம்:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

Revised one

கொசுக்கடியுட்ன் ந்ள்ளிரவில் ப்டித்ததும், நல்லதொரு தீர்வு அதுவும் மிகக்குறைந்த விலையில், பந்திக்கு முந்திக்க்ணும் என் நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு அர்ஜெண்ட் ஆகத்தேவைப்படுவது இந்த
ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி + விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் தான்.

நிரூபன் said...

’கொசுக்களால் வருடத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே பிரச்சினை; ஆனால், திருமணவாழ்க்கை அப்படியா?//

என்னம்மா கடிக்கிறீங்க, கண்ணீர் தான் வருது பாஸ். திருமணத்திற்கு முன் கணவன் சொன்னானன், சொறி காதலன் சொன்னானாம், நான் உனக்கு செருப்பாகவும் இருக்கத் தயார் என்று.
ஆனால் திருமணத்திற்குப் பின் காதலன் சொன்னான் இனி நான் உனக்கு கணவனாக இருக்கவும் தயாரில்லை. (அந்தளவு கொடுமையோ?)

நிரூபன் said...

மேலும், இந்த ஏ.டி.எம்.எமை ஒரு பிரத்தியேக ஏ.வி. கேபிள் மூலமாக உங்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியோடு தொடர்புகொடுத்தால், அதன்பிறகு எந்தெந்த மெகாசீரியல்கள் பார்க்கும்போது கொசு அதிகமாகக் கடிக்கிறது என்ற விபரத்தையும் மிகத்துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்.//

என்ன ஒரு அருமையான சர்வே நடத்தும் கருவிக் கண்டு பிடிப்பு! நீர் வாழ்க! உமது தொழில் நுட்பம் வாழ்க!

நிரூபன் said...

இதில் கொரிய தொழில்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் மஸ்குவிட்டோ எவால்யுவேட்டர், அதாவது டி.எம்.ஈ என்ற புதுமையான தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் மூலம், உங்கள் வீட்டில் இதுவரை எத்தனை கொசுக்கள் கொல்லப்பட்டன, அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும். ஹா..ஹா! எவ்வளவு வசதி பார்த்தீர்களா?//

மாம்ஸ்.. என்ன ஒரு காமெடி. ஹா...ஹா. நீங்க விஞ்ஞானியாக சான்ஸ் இருக்கு பாஸ்! சீரியஸ்ஸாக தான் சொல்லுறன். றை பண்ணுங்க.

நிரூபன் said...

அது மட்டுமல்ல! நமது தண்ட செலவு நெர்வொர்க் சார்பாக, அவர்களுக்கு விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் அனுப்பி வைக்கப்படும்.//

இது தலை சொறியும் இயந்திரமா இல்லை பாட்டுக் கேட்கும் இயந்திரமா?

நிரூபன் said...

பதிவில் அருமையான விளம்பரத்தை, புதிய வடிவில் கலாய்த்துத் தந்திருக்கிறீர்கள். பராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

”தொலைபேசி – 044-420420420” – ஒரு 420 இருந்தாலே தாங்காது! இதுல மூணு 420 ஒண்ணா சேர்ந்துடுச்சா!

தலைசொறியும் இயந்திரம்! - ஒரு சின்ன சந்தேகம்! - “இதை மாட்டிக்கொண்டால் – “சின்ன சின்ன ஆசை சொறிந்து விட ஆசை!” என்ற பாட்டு இயந்திரத்தின் குரலில் காதில் ஒலிக்குமா!

ADMD – தண்டச் செலவு நெட்வொர்க்-கின் புதிய கண்டுபிடிப்பு சூப்பர் சேட்டை.

எல் கே said...

சேட்டை உன்னோட சேட்டை தாங்கல

பெசொவி said...

இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா, கொசு மருந்து அடிசுக் கொல்லுங்கடா!

பிரபாகர் said...

சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்சிகளில் ஒன்றாய் மாற்றிவிடுங்கள் என் இனிய நண்பா... நிறைய சிரித்தேன். கலக்கல்...

அபிமான ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவுக்காக காத்திருக்கிறேன்.

பிரபாகர்...

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

தொலைபேசி: 044-420420420 இந்த நம்பரை டெலிபோன் டைரக்டரில தேடிப்பாத்தா....எ.ச.மு.க. கட்சி ஆபிஸ் நம்பராமே...ஒரு ஓட்டு போட்டா பத்து ஓட்டா காட்டுற மிசின் இருக்கான்னு கேக்குறாங்க. வச்சிருக்கீங்களா???//

அது ரெடியாயிட்டிருக்கு! ஏப்ரல் முத வாரத்துலே ரிலீஸ் ஆயிடும். அறிவிப்பு விரைவில்....! :-))
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DONT WANT VADA.....//

ஸ்டாக் தீர்ந்து போச்சு! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

கொசுக்கடியுட்ன் ந்ள்ளிரவில் ப்டித்ததும், நல்லதொரு தீர்வு அதுவும் மிகக்குறிந்த் விலையில், பந்திக்கு முந்திக்க்ணும் என் நினைக்கிறேன்.//

அதுக்கென்ன, உங்களுக்காக விசேஷ தள்ளுபடி! நீங்க அந்த தொண்ணூத்தி ஒன்பது பைசா தரவேணாம்! :-)

//ஆனால் எனக்கு அர்ஜெண்ட் ஆகத்தேவைப்படுவது இந்த ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி + விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் தான்.//

உங்க கிட்டே மட்டும் சொல்றேன். அதை கழிச்சுக்கட்டத் தான் இவ்வளவு பெரிய விளம்பரமே பண்ணிட்டிருக்கோம்.

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

ப்ச். ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன். அந்த ஹெட்ஃபோன்ல ஸ்க்ராச்சருக்கு பதிலா தலைக்கு மேல பறக்கற கொசுவ டப்புன்னு தட்டி எத்தன கொசு சிக்கிச்சின்னு வாய்ஸ்ல சொல்றா மாதிரி வரப்போ ஆர்டர் பண்ணிக்கிறேன். வெத்து மண்டைய இது வறட்டு வறட்டுன்னு சொறிஞ்சி வச்சா கஷ்டம்:))//

அதுக்கு தனியா ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் இருக்குது. ஆம்பிளைக்குரல்லே வேணுமா, பொம்பளைக்குரல்லே வேணுமா ஐயா? :-)

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

Revised one//

ஹிஹி!

கொசுக்கடியுட்ன் ந்ள்ளிரவில் ப்டித்ததும், நல்லதொரு தீர்வு அதுவும் மிகக்குறைந்த விலையில், பந்திக்கு முந்திக்க்ணும் என் நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு அர்ஜெண்ட் ஆகத்தேவைப்படுவது இந்த
ஒரு புத்தம் புதிய ஸ்டெப்னி + விசேஷ பரிசாக, சூப்பர் ஹெட்-ஸ்க்ராட்சர் என்னும் தலைசொறியும் இயந்திரமும் தான்.//

ரைட்டு! ஏற்பாடு பண்ணிரலாம்! :-)

மீண்டும் நன்றி! :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>>17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....:


அண்ணே... என்னை மாதிரி யூத்துங்க கமெண்ட் போடறப்ப மேலே உள்ள பெரியவங்க என்ற வார்த்தை மனசுக்கு கஷ்டமா இருக்குங்கண்ணே...


ஹி ஹி

settaikkaran said...

//நிரூபன் said...

என்னம்மா கடிக்கிறீங்க, கண்ணீர் தான் வருது பாஸ். திருமணத்திற்கு முன் கணவன் சொன்னானன், சொறி காதலன் சொன்னானாம், நான் உனக்கு செருப்பாகவும் இருக்கத் தயார் என்று. ஆனால் திருமணத்திற்குப் பின் காதலன் சொன்னான் இனி நான் உனக்கு கணவனாக இருக்கவும் தயாரில்லை. (அந்தளவு கொடுமையோ?)//

என்னங்க ஒரு முழுக்கதையை சொல்லிட்டு, என்கிட்டேயே கேள்வி கேட்கறீங்க? :-))

//என்ன ஒரு அருமையான சர்வே நடத்தும் கருவிக் கண்டு பிடிப்பு! நீர் வாழ்க! உமது தொழில் நுட்பம் வாழ்க!//

ஆக்சுவலி இதுவந்து கொரியா தொழில்நுட்பமுங்க! சிங் ஜக் ஜொய்ங்க் என்ற விஞ்ஞானியோட கண்டுபிடிப்பு இது!

//மாம்ஸ்.. என்ன ஒரு காமெடி. ஹா...ஹா. நீங்க விஞ்ஞானியாக சான்ஸ் இருக்கு பாஸ்! சீரியஸ்ஸாக தான் சொல்லுறன். றை பண்ணுங்க.//

என்னை எல்லாரும் அஞ்ஞானின்னு சொல்றாங்க; நீங்க விஞ்ஞானின்னு சொல்றீங்களே? இன்னும் செல்போனை வச்சுக்கிட்டு என்ன பண்ணனுமுன்னு தெரியாது எனக்கு...!

//இது தலை சொறியும் இயந்திரமா இல்லை பாட்டுக் கேட்கும் இயந்திரமா?//

அப்படீன்னா, நம்ம ஏ.டி.எம்.டியைப் பார்த்து இதென்ன டிராக்டரா-ன்னு கேட்பீங்களா? :-))

// பதிவில் அருமையான விளம்பரத்தை, புதிய வடிவில் கலாய்த்துத் தந்திருக்கிறீர்கள். பராட்டுக்கள்.//

இந்த டெலிஷாப்பிங் ஆசாமிங்களும், அம்மணிங்களும் பண்ணுற அலப்பறை தாங்காம, கடுப்புலே எழுதினேனுங்க!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

”தொலைபேசி – 044-420420420” – ஒரு 420 இருந்தாலே தாங்காது! இதுல மூணு 420 ஒண்ணா சேர்ந்துடுச்சா!//

இது கூட்டணி வெங்கட்ஜீ! :-)

//தலைசொறியும் இயந்திரம்! - ஒரு சின்ன சந்தேகம்! - “இதை மாட்டிக்கொண்டால் – “சின்ன சின்ன ஆசை சொறிந்து விட ஆசை!” என்ற பாட்டு இயந்திரத்தின் குரலில் காதில் ஒலிக்குமா!//

இல்லீங்க, சொரிமா சொரிமா நீயென் தலையைச் சொரிமா-ன்னுதான் பாடும். நான் யூஸ் பண்ணிட்டேன்.

//ADMD – தண்டச் செலவு நெட்வொர்க்-கின் புதிய கண்டுபிடிப்பு சூப்பர் சேட்டை.//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை உன்னோட சேட்டை தாங்கல//

அதுனாலே தான் முகப்புலேயே எச்சரிக்கை போட்டுட்டோமில்லே கார்த்தி...? :-))

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா, கொசு மருந்து அடிசுக் கொல்லுங்கடா!//

ஹிஹி! ரொம்ப predictable இந்த கமெண்டு! :-)
இது கொசுவாயிருந்தாலும் எந்த மருந்தாலேயும் இதை ஒண்ணும் பண்ண முடியாது. நிறைய பேரு ட்ரை பண்ணி தோத்துட்டாங்க! :-)

settaikkaran said...

//பிரபாகர் said...

சேட்டை டிவியின் பிரதான நிகழ்ச்சிகளில் ஒன்றாய் மாற்றிவிடுங்கள் என் இனிய நண்பா... நிறைய சிரித்தேன். கலக்கல்...//

மிக்க நன்றி நண்பரே! சும்மானாச்சும் அரசியல், சினிமா இல்லாம ஒரு பதிவு எழுதலாமேன்னு போட்டது.

//அபிமான ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவுக்காக காத்திருக்கிறேன்.//

அனேகமா, அடுத்தது அவராத்தான் இருப்பாரு! :-))

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

// >>>17 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....:

அண்ணே... என்னை மாதிரி யூத்துங்க கமெண்ட் போடறப்ப மேலே உள்ள பெரியவங்க என்ற வார்த்தை மனசுக்கு கஷ்டமா இருக்குங்கண்ணே...ஹி ஹி//

ஹிஹி! சமீபகாலமா அடிக்கடி யூத்து, யூத்துன்னு சொல்லிட்டே இருக்கீங்களே தல, என்ன சமாச்சாரம்? :-)

என்னைப் பொறுத்தவரைக்கும், இங்கிட்டு வந்து கமெண்ட் போடுறவங்க எல்லாருமே பெரியவங்கதான்! அதை மாத்துறதா எண்ணமே இல்லை! :-)

நன்றி தல...!

sudhanandan said...

அப்டி போடு போடு .....

இதற்கு லோன் உண்டா? இ‌.எம்.‌ஐ. எவ்வளவு?

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் விளம்பரம்...

சிரி சிரி என்று சிரித்தேன்...

middleclassmadhavi said...

இன்ஸ்டால்மென்ட் வசதி உண்டா? (மாதம் 420 வீதம்?) :))

பொன் மாலை பொழுது said...

சேட்ட, நீங்க எங்கய்யா உங்காந்து அல்லது படுத்துகிட்டு யோசிப்பீங்க?
கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பண்ணுவோம் மில்ல??
எனக்கு ஒரு நல்ல இடம் தோணுது . கத்தி பார மேம்பாலத்தின் கீழே ரொம்ப நல்ல இடமா தெரியுது. உங்களுக்கு ?

ரிஷபன் said...

உங்கள் வீட்டில் இருப்பதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான கொசுவை தொலைக்காட்சிப் பெட்டியில் கண்டுகளிக்கலாம்.

பிடிச்ச கொசுவா.. கொசுவம் வச்சு கட்டியிருக்குமா..

Unknown said...

மிக ரசித்த இடங்கள்..
//அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.//கொசுவடிக்கப்போய் மனைவியை நீங்கள் தெரியாத்தனமாக அடிக்க வாய்ப்பில்லை. //
// தண்ணியடித்துவிட்டு வருகிற கணவர்களுக்கு இந்த வேலையைத் தண்டனையாகவும் தரலாம். //
// அவர்களுடைய இணையதளத்துக்குச் சென்று, அது இன்னும் இருந்தால்,//

settaikkaran said...

//sudhanandan said...

அப்டி போடு போடு .....இதற்கு லோன் உண்டா? இ‌.எம்.‌ஐ. எவ்வளவு?//

இப்போத்தான் சில புண்ணாக்கு, சாரி, சில பன்னாட்டு வங்கிகளோடு பேசிக்கிட்டிருக்கோம்! சீக்கிரம் அறிவிப்பு வரும். நன்றி! :-)

settaikkaran said...

//சங்கவி said...

கலக்கல் விளம்பரம்...சிரி சிரி என்று சிரித்தேன்...//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//middleclassmadhavi said...

இன்ஸ்டால்மென்ட் வசதி உண்டா? (மாதம் 420 வீதம்?) :))//

இன்ஸால்வன்ஸி வசதி இருக்குன்னு சொன்னாங்க! :-)
மிக்க நன்றி - தொடரும் உங்களது ஆதரவுக்கு!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

சேட்ட, நீங்க எங்கய்யா உங்காந்து அல்லது படுத்துகிட்டு யோசிப்பீங்க? கொஞ்சம் சொன்னா நாங்களும் ட்ரை பண்ணுவோம் மில்ல??//

ஆபீஸ்தான் பெஸ்ட் போதிமரம்! அங்கண வேலைபார்க்குறா மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே யோசிக்கிறது ரொம்ப ஈஸி!

//எனக்கு ஒரு நல்ல இடம் தோணுது . கத்தி பார மேம்பாலத்தின் கீழே ரொம்ப நல்ல இடமா தெரியுது. உங்களுக்கு ?//

ஓஹோ! அதுதான் உங்க ஏரியாவா? சூப்பர் செலக்ஷன்!
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

பிடிச்ச கொசுவா.. கொசுவம் வச்சு கட்டியிருக்குமா..//

மாமியாரை ஜாஸ்தி கடிச்ச கொசுவா இருந்தா...? :-)))
எல்லாத்தையும் உடைச்சுச் சொல்லவா முடியும்.??
மிக்க நன்றிங்க! :-)

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

மிக ரசித்த இடங்கள்..
//அவற்றில் ஆண்கொசுக்கள் எத்தனை, பெண்கொசுக்கள் எத்தனை போன்ற பல அரிய தகவல்களை ஒரு பொத்தானை அழுத்தினாலே உங்களால் அறிந்து கொள்ள முடியும்.//கொசுவடிக்கப்போய் மனைவியை நீங்கள் தெரியாத்தனமாக அடிக்க வாய்ப்பில்லை. //
// தண்ணியடித்துவிட்டு வருகிற கணவர்களுக்கு இந்த வேலையைத் தண்டனையாகவும் தரலாம். //
// அவர்களுடைய இணையதளத்துக்குச் சென்று, அது இன்னும் இருந்தால்,//

மிக்க நன்றி நண்பரே! எனக்கு வந்த சில தனிமடல்களிலும் பலர் நீங்கள் கூறியவை பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். :-)