Friday, March 12, 2010

மனிதராய்ப் பிறப்பதற்கே!


எனக்குப் பிடித்த பத்து பெண்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவுக்காக, எனது சகபதிவாளர் நண்பர்கள் அழைத்ததன் பேரில், இந்திய அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் பலவற்றின் வலைத்தளங்களுக்குச் சென்று சில முக்கியமான தகவல்களைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான புகைப்படங்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக எனது கண்களில் ஒரு இழை தட்டுப்பட்டது. சொடுக்கி உள்ளே நுழைந்தேன். அதில் விவரிக்கப்பட்டிருந்த ஒரு செய்தி என்னை ஒரு கணம் நிலைகுலையச் செய்து விட்டது.

"கொ********ல் வசிக்கிற ம********** என்ற வாலிபர், அண்மையில் ரா** என்ற பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த தம்பதியருக்கும், அவர்களது குடும்பத்துக்கும் அவர்களது அக்கம்பக்கத்தாரும், அவர்கள் சார்ந்த சமூகமும் பெருந்தொல்லையளித்து வருகின்றனர். இந்த இளம்ஜோடிகளுக்கு நமது ஆதரவு தேவையென்பதோடு, அவர்களை குறித்து மகிழ்ச்சி அடைபவர்களும், அவர்களை வாழ்த்துபவர்களும் நிறைய உள்ளனர் என்ற நம்பிக்கைய அளிக்க வேண்டும். தயவு செய்து இந்த வாலிபரைத் தொடர்பு கொண்டு அவருக்குத் தைரியம் அளிக்கவும். அவரது மின்னஞ்சல் முகவரி *******@sify.com."

அத்தோடு அந்த தம்பதியரின் கைபேசி எண்களும் அளிக்கப்பட்டிருந்தன.

இதைப் படிப்பவர் எவராக இருந்தாலும், வழமை போல மனதுக்குள்ளே இயல்பான மனக்குமைச்சலும், எளிதில் உணர்ச்சிவசப்படுகிற என்னைப்போன்றவர்களுக்கு உடனடியாக ஆத்திரமும் ஏற்படுமல்லவா? ஒரு கணம் அந்த வாலிபனின் தியாகத்தை எண்ணி மலைத்துப்போனேன்; மறுகணம், மாறுதல்களை மறுதலிக்கிற மனிதர்களின் மடமையை எண்ணி கோபமுற்றேன். பிறகு, தனிமைப்படுத்தப்படுகிற இந்த ஜோடிகளுக்காக, இணையத்தில் ஆதரவு தேடுகிற அந்தப் பெண்ணின் துணிவை எண்ணி வியந்தேன். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய், நாமும் ஊமை சாட்சியாய் இருப்பதைக் காட்டிலும், அந்த இளம்ஜோடிகளுக்கு ஏதேனும் உதவி செய்தாலென்ன என்று தாமதமாக உறைத்தது. சிகரெட்டுக்கும், டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும் கணக்கு வழக்குப் பாராமல் செலவழிக்கிற பணத்தில், முடிந்தால் சிறிது பொருளுதவியோ அல்லது தெரிந்தவர்களின் மூலம் வேறு ஏதேனும் உதவியோ செய்யலாமே என்று எண்ணினேன்.

நல்ல வேளை! எனக்குள்ளே ஒரு எச்சரிக்கை மணி அடித்தது! இந்த இழையில் கொடுக்கப்பட்டிருந்த அந்த வாலிபரின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன், நான் வாசித்த இழை குறித்தும், அதனால் எனக்கு ஏற்பட்ட மனக்கிலேசம் குறித்தும், என்னால் ஆன உதவியை அவர்களுக்குச் செய்ய விரும்புவது குறித்தும் தெரிவித்தேன். ஆனால்....

"சார்! நீங்கள் வாசித்த செய்திகள் முழுக்க முழுக்கப் பொய்! எங்களுக்கு வேண்டாதவர்கள் யாரோ திட்டம் தீட்டி இப்படியொரு பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து நாங்கள் சைபர் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்திருக்கிறோம். நாங்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப் பட்ட புரளிகளை நம்பி அவ்வப்போது எவரேனும் தொலைபேசியில் அழைத்து விசாரிப்பது மனதை நோகடிக்கிறது. உங்கள் அழைப்புக்கு நன்றி!"

நான் அதிர்ந்து போனேன். இணைப்பைத் துண்டித்து ஒரு சில நிமிடங்கள், அந்த வாலிபர் அங்கு என்ன செய்து கொண்டிருப்பார் என்று யோசிக்கத் தொடங்கினேன். எவனோ ஒருவன் சென்னையிலிருந்து அழைத்து தன்னிடம் அனுதாபம் காட்டுகிறானே என்று எண்ணி ஆறுதலடைவாரா? அல்லது, தன் மனைவி பாலியல் தொழிலாளி என்று பரப்பப்பட்ட புரளியை மீண்டும் ஒருவன் நினைவுறுத்தி விட்டானே என்று வேதனைப்படுவாரா? அல்லது, ஆடு நனைகிறதே என்று அழுகிற ஓநாய் போல, இந்த தகவலை சாக்காக வைத்துக்கொண்டு, எவளேனும் கிடைத்தால் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள அலைகிற ஒரு சாமானிய மனிதனின் வக்கிரபுத்தியை நான் ஜாடைமாடையாய் தெரிவித்ததாக எண்ணிக் குமுறுவாரா? இவையெதுவுமேயில்லாமல், சிறிது நேரம் செய்து கொண்டிருக்கிற எல்லாப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி விட்டு, எங்கேனும் ஒரு ஆளரவமற்ற மூலைக்குச் சென்று, மவுனமாக தனக்காகவும் தன் மனைவிக்காகவும் இரண்டு சொட்டுக் கண்ணீரை வடிப்பாரா? எனக்குத் தெரியவில்லை!

ஆனால், குற்ற உணர்வு மிகுந்து விட்டது. "The Way to the hell is paved with good intentions" என்ற கார்ல் மார்க்ஸின் பொன்மொழி என்வரையில் இன்றைய தினம் நிஜம் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதோ என்ற ஆதங்கமும், அடக்கவொணா ஆத்திரமும் ஏற்படுகிறது.

இணையத்தில் இந்த வதந்தியைப் பரப்பியிருப்பது ரீட்டா பானர்ஜீ என்ற பெண்மணி(அல்லது பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டு இணையத்தை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு புல்லுருவி!) அதை விடக் கொடுமை, இந்தப் பதிவு இடப்பட்ட தேதி:

26-01-2010 - இந்தியாவின் குடியரசு தினம் அன்று!

ஆணாய்ப் பிறந்ததற்காக அவ்வப்போது அற்ப சந்தோஷப்பட்டதுண்டு. இன்று அந்த வாலிபரைப் பற்றி எண்ணும்போது, மனிதனாய்ப் பிறந்ததற்கே வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.

கடவுளே! என்ன கொடுமை இது?

21 comments:

Chitra said...

நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ஒரு ஜோடியின் சுதந்தரத்தை பிடுங்கி, சூழ்நிலை அடிமைகளாய் வைக்கிறார்கள். சே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

சைவகொத்துப்பரோட்டா said...

வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

Ananya Mahadevan said...

இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப்பரப்பரப்பும் இணைய தளங்களை ஹாக் செய்ய முடியாதா?

வெங்கட் நாகராஜ் said...

வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்பில்லை.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

மங்குனி அமைச்சர் said...

சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் முன்னாடி கோயம்பத்தூர்ல ஒரு நாயி தன்ன லவ் பண்ண மறுத்த ஒரு கேர்ள் பிரண்ட்டோட சிம் கார்டுஅ திருடி அந்த சிம் கார்டுல இருந்த அந்த பொண்ணு ரிலேடிவ்ஸ் நம்பர் எல்லாத்துக்கும் அந்த பொண்ண பத்தியே அசிங்கமா எஸ்.எம்.எஸ் கொடுத்து ...............................................................கடைசில போலீஸ்ல மாட்டிக்கிட்டான்

கபீஷ் said...

//இன்று அந்த வாலிபரைப் பற்றி எண்ணும்போது, மனிதனாய்ப் பிறந்ததற்கே வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது.//

எந்த வாலிபரைப்பற்றி எண்ணும்போதுன்னும் சொல்லியிருக்கலாம். ஏற்கனவே நிறைய ப்ளாக் படிச்சு மண்டகாஞ்சி போயிருக்கேன் இன்னிக்கு, அதனால எல்லாம் படிக்கறத விடவும் முடியல:-(

மசக்கவுண்டன் said...

"The Way to the hell is paved with good intentions"

கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இருந்தாலும் இம்மாதிரியான செய்திகள் கேட்டவுடன் மனம் பதைக்கிறதல்லவா, அதுதான் மனித நேயம். அது இருக்கட்டும்.

முகுந்த்; Amma said...

//இந்தப் பதிவு இடப்பட்ட தேதி: 26-01-2010 - இந்தியாவின் குடியரசு தினம்//


இணையத்தை உபயோகிச்சு அடுத்தவன் குடும்பத்த கெடுக்க நினைக்கற இந்த புல்லுரிவிகள் என்னைக்கு ஒழியராங்களோ அன்றைக்கு தான் உண்மையான குடியரசு தினம்.

Unknown said...

இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ யாருக்காவது உதவின்னு செய்தி வந்தா நம்பக் கூட முடியமாட்டேங்குது.

settaikkaran said...

//நாட்டின் சுதந்தரத்தை எப்படியெல்லாம் உபயோகித்து, ஒரு ஜோடியின் சுதந்தரத்தை பிடுங்கி, சூழ்நிலை அடிமைகளாய் வைக்கிறார்கள். சே!//

உண்மை! கயவர்கள் எது கிடைத்தாலும் அதை தங்களது வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகிறார்களே!

மிக்க நன்றி!!

settaikkaran said...

//வக்கிர மனம் கொண்டோர்....... எண்ணிக்கை..... நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.//

ஆமாம் அண்ணே! மனது மிகவும் கனத்துப் போய்க்கிடக்கிறது. மிக்க நன்றி!!

settaikkaran said...

//:(//

புரிந்து கொண்டேன். நன்றி!!

settaikkaran said...

//இந்த மாதிரி மற்றவர்களை காயப்படுத்தும் வதந்திகளைப்பரப்பரப்பும் இணைய தளங்களை ஹாக் செய்ய முடியாதா?//

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? மேலும் ஒரு குற்றத்திற்கு இன்னோர் குற்றம் தீர்வாகுமா?

மிக்க நன்றி!!

settaikkaran said...

//வெட்கம்... இந்த புல்லுருவிகளை கொளுத்தினாலும் தப்பில்லை.//

ஒரு கணம் எனக்கும் இது போலவே ஆத்திரம் வந்தது உண்மை தான். மிக்க நன்றி!!

settaikkaran said...

//சேட்டை இந்த மாதிரி நிறைய இருக்கானுக, ஒன் வீக் முன்னாடி கோயம்பத்தூர்ல ஒரு நாயி தன்ன லவ் பண்ண மறுத்த ஒரு கேர்ள் பிரண்ட்டோட சிம் கார்டுஅ திருடி அந்த சிம் கார்டுல இருந்த அந்த பொண்ணு ரிலேடிவ்ஸ் நம்பர் எல்லாத்துக்கும் அந்த பொண்ண பத்தியே அசிங்கமா எஸ்.எம்.எஸ் கொடுத்து ...............................................................கடைசில போலீஸ்ல மாட்டிக்கிட்டான்//

கேட்கவே வருத்தமாயிருக்குதண்ணே! இந்த மாதிரி ஆளுங்களை கடுமையா தண்டிக்கணும்! இவங்க புற்றுநோயை விடக் கொடியவர்கள்!

மிக்க நன்றிண்ணே!!

settaikkaran said...

//எந்த வாலிபரைப்பற்றி எண்ணும்போதுன்னும் சொல்லியிருக்கலாம். ஏற்கனவே நிறைய ப்ளாக் படிச்சு மண்டகாஞ்சி போயிருக்கேன் இன்னிக்கு, அதனால எல்லாம் படிக்கறத விடவும் முடியல:-(//

இந்தப் பதிவை சரியாக வாசிக்கவில்லை போலும். இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற வாலிபர் ஒரே ஒருவர் தானே?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

settaikkaran said...

//கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இருந்தாலும் இம்மாதிரியான செய்திகள் கேட்டவுடன் மனம் பதைக்கிறதல்லவா, அதுதான் மனித நேயம். அது இருக்கட்டும்.//

கவுண்டரே! மனிதாபிமானத்தை வச்சுக்கிட்டு வருத்தம் தான் பட முடியுது. அதை விட வலுவா, அழுத்தமா, விளைவுகளை ஏற்படுத்துகிற ஒரு உணர்வு வரணுங்க! எனக்கு அது என்னவா இருக்கணுமுன்னு புரியலே!

மிக்க நன்றி!!

settaikkaran said...

//இணையத்தை உபயோகிச்சு அடுத்தவன் குடும்பத்த கெடுக்க நினைக்கற இந்த புல்லுரிவிகள் என்னைக்கு ஒழியராங்களோ அன்றைக்கு தான் உண்மையான குடியரசு தினம்.//

உண்மை தானம்மா! இது நடக்கணும்! அப்போ தான் எல்லாமே நிஜமுன்னு அர்த்தமாகும்.

மிக்க நன்றி!!

settaikkaran said...

//இந்த மாதிரி ஆட்களால இணையத்துலயோ இல்ல ஈ-மெயிலிலயோ யாருக்காவது உதவின்னு செய்தி வந்தா நம்பக் கூட முடியமாட்டேங்குது.//

எனக்குத் தெரிஞ்ச ஒரு பதிவர் அந்த தளத்துக்கு பொருளுதவி செய்வது குறித்து பதிவு போடுறதா இருந்தாராம். நல்ல வேளை, முழிச்சுக்கிட்டோம்.

மிக்க நன்றி!!

அஷீதா said...

Migavum varuthathirkuriya vishayam.

Nanringa indha vishayathai ungal padhivil pottu matravarkagalukkum theriyapaduthiadharku.