கடும் வியாபாரப்போட்டியென்கிற எலிப்பந்தயத்தில்(Rat-race)முந்திச்செல்ல இதுவரை உலகத்தில் எந்த நிறுவனமும் தராத ஒரு சேவையை நம்ம ஏர்லொள் நிறுவனம் ஆரம்பிச்சிட்டாங்க! இதுக்காக அவங்க மத்தவங்க மாதிரி ரூம் போட்டு யோசிக்காம, கண்ணம்மாபேட்டையிலே கடுஞ்சாயாவும் காஜா பீடியும் குடிச்சு ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க! இனிமேல் செத்துபோனவங்களோட ஆவியோட பேசுறதுக்கு நாம எந்த பாவியோட உதவியையும் நாடாமல், இருந்த இடத்துலேருந்து அவங்கவங்க கைபேசி மூலமா தொடர்பு கொள்ளலாம். பிரபலமானவங்க தவிர, இதுவரை காலமான உங்க உறவினர்,நண்பர்களோட புகைப்படமும், அவங்களோட டேட் ஆஃப் டெத்தும் வச்சிருக்கீங்களா? ஏர்லொள் ஷோரூமுக்குப் போயி இதையெல்லாம் கொடுத்து 9999 ரூபாயும் கொடுத்திட்டாப்போதும். அவங்க வைகுண்டம், கைலாசம் எங்கேயிருந்தாலும் சரி அவங்களோட நீங்க ஒரு மாசத்துக்கு முப்பதே முக்கால் நிமிசம் முழுசாப் பேசலாமாம். இறந்தவர்களிடமிருந்து ஒரு நயா பைசா கூட வசூலிக்கப்பட மாட்டாது என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். எவ்வளவு நல்ல திட்டம் பார்த்தீங்களா?
இதுலேயே ஒன் ப்ளஸ் ஒன்னுன்னு ஒரு புது திட்டம் வேறே இருக்கு. அதை வாங்கினீங்கன்னா, செத்துப்போனவங்களும் நீங்களும் எப்ப வேண்ணா எவ்வளவு வேண்ணா பேசலாம்-செல் டு செல் ஃப்ரீ!
இது மட்டுமல்ல! அவங்களுக்கு நீங்க அனுப்புற ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸுக்கும் தலா ஐம்பது காசு தான் சார்ஜ்! இப்போ இருக்கிற செல்போன் நிறுவனங்களெல்லாம் பிறந்தநாள்,திருமணநாள்,காதலர் தினம்,தீபாவளி,பொங்கல் மாதிரி பண்டிக்கைக்குன்னு தனி எஸ்.எம்.எஸ்.சேவை வச்சிருக்கிறா மாதிரி, ஏர்லொள் கம்பனியிலே இறந்தநாள் வாழ்த்துக்கள்னு புதுசா அறிமுகப்படுத்தியிருக்காங்க!
"ஹேப்பி டெத் டே!"
"விஷ் யூ மெனி மோர் ஹேப்பி டெத்ஸ்!"
"டோண்ட் கம் பேக்! வீ ஆர் ரிலீவ்ட்!"
இந்த மாதிரி பலவிதமான ரெடிமேட் எஸ்.எம்.எஸ். தயார் பண்ணியிருக்காங்க!
பாட்டன் முப்பாட்டனோட பேசுறதோட நாம நிறுத்திக்க மாட்டோம்னு தெரிஞ்சு, மறைந்த பிரபலங்கள் சிலரோடவும் நீங்க பேசலாம், அவங்க பேச விரும்பினால்! ஆனால், இதுக்கு இரட்டிப்பு சார்ஜூடன் சேவை வரி 110.8475 % வசூலிக்கப்படும்.
எல்லாம் சரி, அவங்க நம்பர் எப்படித்தெரியுமுன்னு யோசிக்கிறீங்களா? அதுலே தான் ஏர்லொள் ஆளுங்க அறிவைப் பயன்படுத்தியிருக்காங்க! இந்த சேவையைப் பயன்படுத்துறவங்களோட நம்பருக்கு முன்னாலே ஒரு மூன்று இலக்க எண்ணைச் சேர்த்துக்கணும். பாட்டி=111,தாத்தா=211....இப்படி ஒவ்வொரு உறவுமுறைக்கும் ஒரு எண் கொடுத்திருக்காங்க! தயவு செய்து முன்னாலே சைபர் சேர்த்திராதீங்க! அது வேறே எங்கேயோ போகுது! இது தெரியாம நான் தப்பா ஒரு நம்பரைப் போட, போன் நேரா எமதர்மராஜனுக்குப் போயிருச்சு! "ஹலோ! எமன் ஹியர், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?"னு கேட்டாரு. நான் டிஸ்கனெக்ட் பண்ணிட்டேன்.
இன்னிக்கு அப்பத்தாவோட ஆவி கூட பேசினேன். ஒரே ஆச்சரியம். அவங்க போனிலே "ஓ மகசீயா"வை காலர் ட்யூனா வச்சிருக்காங்க! அங்கே போயி இங்கிலீஷுலே வேறே பொளந்து கட்டுறாங்க! எட்வினா மவுண்ட்பேட்டன் பக்கத்துலே தான் இருக்காங்களாம்! எல்லாம் சகவாசதோசம்!
தமிழ்ப்படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகும்போதே அங்கேயும் ரிலீஸ் ஆயிடுதாம். அங்கே வைகுந்தா டி.வி,கைலாசா டி.வி.ன்னு இருந்தாலும் இந்திரன்.டி.வி.தான் ரொம்ப பாப்புலராம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரோட ஹைலைட்ஸ் அடிக்கடி காட்டுறாங்களாம். அப்புறம் ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமையெல்லாம் தெனமும் நியூஸ் வாசிக்கிறாங்களாம். சமீபத்துலே நடந்த ஒரு சுயம்வரத்தை லைவ்-டெலிகாஸ்ட் பண்ணினாங்கன்னா பார்த்துக்குங்க!
"தாத்தா எப்படியிருக்காரு அப்பத்தா?"ன்னு கேட்டேன்.
"அவரா? அவரு இங்கே வந்ததேலிருந்து பத்மினி பின்னாடியே சுத்திட்டிருக்காரு,"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. "இங்கேயும் வம்பை விலைக்கு வாங்கிட்டாருன்னா திருப்பி அனுப்பிருவாங்களோன்னு பயமாயிருக்கு!"
"ஏன் அப்பத்தா? திருப்பி அனுப்பிச்சா வந்திரேன்!"
"போடா போக்கத்தவனே! அங்கே என்ன இருக்கு திரும்பி வரதுக்கு? நீங்களே இங்கே வரதுக்குத் தானேடா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தெனம் அடிச்சிக்கிட்டுச் சாவறீங்க?"
"உண்மை தானே!" என்று நினைத்துக்கொண்டேன்.
"இன்னும் கொஞ்ச நேரத்துலே சீரியல் ஆரம்பிச்சிரும். வுட் யூ மைண்ட் காலிங் மீ ஆஃப்டர் தர்ட்டி மினிட்ஸ்?"ன்னு கேட்டு அப்பத்தா போனை கட் பண்ணிட்டாங்க! அங்கே போயும் சீரியலா? கஷ்டம்!!
Tweet |
12 comments:
காலங்கார்த்தால படிக்க என்ன ஒரு வித்தியாசமான பதிவு!!அருமை போ.Out of the Box thinking ன்னா இதானா? கலக்கிட்டே.
நீ நிஜம்மாவே வித்தியாசமானவன் தான்,பேசாம தமிழ் சினிமால சேந்துரு.சினிமா உருப்படும்ஸ்ரீயாவும் உன்னை கல்யாணம் பண்ணிப்பா.சீக்ரமே விவாஹப்ப்ராப்த்தி ரஸ்த்து.
மேலோக ஆட்சி மொழி ஆங்கிலம்ன்னு சொல்லுங்க
ஸ்ஸ்ஸ்ஸ்சோ...........
போன எடுத்தா நச்சு நச்சு கிறாங்க...
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...:)
//காலங்கார்த்தால படிக்க என்ன ஒரு வித்தியாசமான பதிவு!!அருமை போ.Out of the Box thinking ன்னா இதானா? கலக்கிட்டே.//
ஹி...ஹி! ரொம்பப் புகழாதீங்க, கூச்சமாயிருக்கு அக்கா!
//நீ நிஜம்மாவே வித்தியாசமானவன் தான்,பேசாம தமிழ் சினிமால சேந்துரு.சினிமா உருப்படும்//
இதை இங்கே சொன்னதோட விட்டுருங்க அக்கா! வெளியிலே சொன்னா அஜீத்,விஜய்க்கு ஜூரம் வந்திரப்போகுது!
//ஸ்ரீயாவும் உன்னை கல்யாணம் பண்ணிப்பா.சீக்ரமே விவாஹப்ப்ராப்த்தி ரஸ்த்து.//
அது ஸ்ரீயா இல்லை, ஸ்ரேயா! அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்னு தனியா ஒரு பதிவு போடப்போறேன். உங்க ஆசீர்வாதம் பலிக்கட்டும். நாத்தனார் முடிச்சு போட ஆள் ரெடின்னு சொல்லுங்க!
ரொம்ப நன்றிக்கா
//மேலோக ஆட்சி மொழி ஆங்கிலம்ன்னு சொல்லுங்க//
அண்ணே, அங்கேயும் நம்மாளுக தான் அதிகமாம்! இங்கிலீஷ்லே தான் பேசுறாக! நன்றிண்ணே!!
//ஸ்ஸ்ஸ்ஸ்சோ...........
போன எடுத்தா நச்சு நச்சு கிறாங்க...//
அண்ணே, உங்களுக்கும் ஆரம்பமாயிருச்சா...? ஹையோ...ஹையோ! நன்றிண்ணே!!
//எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...:) //
கண்ணகி அவர்களே!எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றது தானுங்கோ! முதல் முதலா வந்து கருத்து எழுதினதுக்கு ரொம்ப நன்றிங்கோ..
என்னா ஒரு சேட்டை, கலக்கல் தலைவா.
//என்னா ஒரு சேட்டை, கலக்கல் தலைவா.//
நன்றி சைவக்கொத்துப்பரோட்டா அண்ணே! எல்லாம் உங்களை மாதிரி சீனியருங்களைப் பார்த்துப் படிச்சு ஒப்பேத்துற விஷயம் தானே?
//"டோண்ட் கம் பேக்! வீ ஆர் ரிலீவ்ட்!"//
//அங்கே போயும் சீரியலா? கஷ்டம்!! //
சான்ஸே இல்லை! கலக்குறியேய்யா!
மனசு விட்டு சிரிச்சேன்!
//சான்ஸே இல்லை! கலக்குறியேய்யா!
மனசு விட்டு சிரிச்சேன்!//
நாமக்கல் அனுமாரே வந்து ஆசீர்வாதம் பண்ணினா மாதிரி இருக்கு. நன்றிங்க! ரொம்ப நன்றி!!
Post a Comment