Friday, February 12, 2010

மண்ணடிச்சிந்தனை



சேட்டைக்காரன் என்ற பெயரைக்காட்டிலும் மண்ணடியார் என்ற பெயர் வைத்திருக்கலாமோ என்று நினைப்பதுண்டு. (என்னிடம் காப்பிரைட் இல்லை; சென்னைப்பிரியர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.) ஏறக்குறைய எட்டாண்டுகளாக இந்த மண்ணடியில் புழங்கிப் புழங்கி, எனது இரத்தத்திலிருக்கும் பிராணவாயுவின் அளவில் பாதி மண்ணடியிடமிருந்து வாங்கிய தீராக்கடனோ என்றும் தோன்றுவதுண்டு.

ஒரு பதிவிலோ அல்லது பல தொடர்பதிவுகளிலோ கூட மண்ணடியின் மகோன்னதத்தை விளக்கி விட முடியாது. சென்னைவாசிகளிலும் கூட எத்தனை பேருக்கு மண்ணடியின் அனைத்துச் சந்துகளும் அத்துப்படியாயிருக்குமோ தெரியாது. தாஜ்மஹாலுக்கு அருகே ஆக்ராவில் விற்கப்படுகிற சிறிய பொம்மையைப் போல, மண்ணடி சென்னை நகரத்தின் மாதிரியென்றால் மறுக்க முடியாது.

இங்கு "டை"கட்டிக்கொண்டு, டாம்பீகமாக ஆங்கிலத்தில் அளவளாவுபவர்களையும், சாக்கடை நாற்றத்தில் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிற அரைநிர்வாணச் சிறுவர்களையும் பார்க்க முடியும். இங்கு வசதிக்கேற்ப சாப்பாடு கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் மசூதியில் தொழுகை முடித்து வருபவர்களும், காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றுவரும் சிவப்புப்புடவைகளும், இரானியர்களும், கிறிஸ்துவர்களும், உருதுவும், ஹிந்தியும், ஆங்கிலமும், தெலுங்கும், மலையாளமும் என்று சென்னையைப் பிழிந்தெடுத்து வடிகட்டிய சாற்றைக் காணமுடியும். இங்கு பென்சில் தொடங்கி பெரிய இயந்திரங்கள் வரைக்கும் வாங்க முடியும். மழைக்காலங்களின் போது கரீம்பாய் கடையில் வரிசையில் நின்று குடை வாங்கிப்போவார்கள். லிங்கிச்செட்டித்தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, தம்புச்செட்டித்தெருவில் மாத்திரம் ஏறக்குறைய இருநூறு கப்பல் நிறுவனங்கள் உள்ளதென்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்? ஒருக்களித்து ஏறவேண்டிய அரையிருட்டுப்படிக்கட்டுகள், ஒவ்வொரு கட்டிடத்திற்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும் இருபது முதல் ஐம்பது வரையிலான கடைகண்ணிகளுக்கு நம்மை இட்டுச்செல்லும்.

முதல் முதலாக மண்ணடிக்கு வருகிறவர்களுக்கு சென்னையை ஏளனம் செய்வதற்கான ஒரு நல்ல முகாந்திரமாகவும் அது அமைந்துவிடும். ஆனால், சென்னையின் ஜீவன் இந்தச் சின்னச்சின்னச் சந்துக்குள்ளே தான் ஓடிவிளையாடிக்கொண்டிருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எளிதில் பட்டியலிட்டு விட முடியாது. குறிப்பாக எனக்குப் பரிச்சயமான முகங்களில் இன்றும் நான் தொடர்ந்து காணுகிற புன்னகை; இன்னும் பிரிட்டிஷ் காலத்தில் வசிக்கிறோமா என்ற பிரமையை அங்கிருக்கும் சூழல் ஏற்படுத்துமேயானால், நன்று, இந்த இணக்கமான சூழலுக்காக அது குறித்து சங்கடப்பட வேண்டியதில்லை.

இங்கே வழிப்போக்கனாக இருப்பது மிகவும் கடினம் என்று தோன்றுகிறது. எவரேனும் ஒருவருக்கு இங்கு வழிசொல்லியாவது நீங்கள் மண்ணடியில் ஐக்கியமாவதற்கான குறைந்தபட்ச செய்கையைச் செய்தே தீருவீர்கள்.

"ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் எங்கேயிருக்கு?"

"க்ரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் எங்கேயிருக்கு?"

"ராம பவன் ஹோட்டல் எந்தப்பக்கம்?"

"எஸ்பளனேடு போலீஸ் ஸ்டேஷன்?"

இத்தோடு அடிக்கடி வழிப்போக்கர்களை வழிமறிக்கிற இன்னொரு கேள்வி....

"********* ஜோசியர்.....?"

உண்மையில் முதலில் சிலர் என்னிடம் இது குறித்துக் கேட்டபோது, எனக்குத் தெரியாதென்று கைவிரித்து விட்டேன். பிறகொருநாள், காளிகாம்பாளை தரிசித்துவிட்டு சற்றுத்தள்ளி இன்னொரு பிள்ளையார் கோவில் இருப்பதை முதல் முறையாக பார்த்தபோது, அந்தக் கோவிலோடு ஒட்டியிருந்த குறுகிய சந்தில் "ஜோசியர்" என்ற பலகையையும், காத்திருக்கிற கூட்டத்தையும் கண்டேன். அந்தக் கோவிலில் அர்ச்சகரையும் காணவில்லை!

’தல, உன்னை விட உனக்குப் பின்னாலே இருக்கிற ஜோசியர் மேலே தான் ஜனங்களுக்கு நம்பிக்கை ஜாஸ்தியாயிருக்கு போலிருக்கே?’ என்று பிள்ளையார் அண்ணாத்தேயிடம் கேட்டு விட்டேன். அவரா பதில் சொல்லுகிறவர்?

இருந்துவிட்டுப்போகட்டுமே! இரும்புக்கம்பி தொடங்கி இயந்திரம் வரைக்கும் மண்ணடியில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சாரி சாரியாக மக்கள் வருகிறார்கள்; அதில் ஒரு பகுதி, தங்களது எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புக்களை, கணிப்புக்களை, அச்சுறுத்தல்களுக்கான சமாதானங்களை, நிஜத்தைப் பின்னுக்குத்தள்ளுகிற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் தேடி வந்துவிட்டுப்போகட்டும்! மண்ணடியில் இதுவும் கிடைக்கும் என்பது பெருமைதானே?

8 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சேட்டையிடம் இருந்து சீரியஸ் பதிவா, என நினைத்து கொண்டே படித்தேன், அந்த ஜோசியர் மேட்டரில், சேட்டை ஆஜர், நல்லா கவனிச்சு இருக்கீங்க.

settaikkaran said...

//சேட்டையிடம் இருந்து சீரியஸ் பதிவா, என நினைத்து கொண்டே படித்தேன், அந்த ஜோசியர் மேட்டரில், சேட்டை ஆஜர், நல்லா கவனிச்சு இருக்கீங்க.//

அப்பப்போ சீரியஸாவும் எழுத முயற்சி பண்ணுவேன்.
ஆனா, தும்பிக்கை வாலாயிடறதுமுண்டு! :-))

நன்றிண்ணே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சார்.. பொசுக்னு முடிச்சுட்டீங்க..
இதைப் பற்றி விரிவாக எழுதுங்க சார்...
இல்லாட்டி , அடுத்த எலெக்ஷ்ன்ல உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டொம்.
இப்பவே சொல்லிட்டேன்

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா...நான் மண்ணடி கொஞ்சம் பக்கம் தான் தலைவரே :) வண்ணாரப்பேட்டை.

settaikkaran said...

//என்ன சார்.. பொசுக்னு முடிச்சுட்டீங்க..
இதைப் பற்றி விரிவாக எழுதுங்க சார்...
இல்லாட்டி , அடுத்த எலெக்ஷ்ன்ல உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டொம். இப்பவே சொல்லிட்டேன்//

எழுதிட்டாப் போச்சு! நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க! நன்றிண்ணே!!

settaikkaran said...

//ஆஹா...நான் மண்ணடி கொஞ்சம் பக்கம் தான் தலைவரே :) வண்ணாரப்பேட்டை.//

வாங்க வாங்க ஆதவன்! ரொம்பவே நெருங்கிட்டோம்! நன்றிண்ணே!!

Ananya Mahadevan said...

ரொம்ப அழகான பதிவு. உன்னால இப்படி கூட எழுத முடியுமா? பேசாம மண்ண்டியைப்பத்தி வீக்லி போஸ்ட் போட்டுடேன், சூப்பரா வர்றதே! கலக்கிட்ட போ!ஸ்பிரிட் ஆஃப் சென்னை நல்ல ஆரம்பம்.

வெள்ளிநிலா said...

i am from thambu chetty street.,