Wednesday, February 10, 2010

ஜஸ்ட் டென் ருபீஸ்!

தமிழ்சினிமாவிலே, குத்துப்பாட்டு, சண்டைகளுக்கு நடுவிலே அப்பப்போ சென்டிமென்ட்டைச் சொருகிற மாதிரி, மொக்கைகளுக்கு நடுவிலே கொஞ்சம் சீரியசான பதிவு போடுறதா யாருக்கும் சத்தியம் பண்ணிக்கொடுக்கலே! ரொம்ப நாளா சீண்டப்படாம இருந்த சோற்றுப்புதூர் சொறிகால் வளவனைத் தொடரலாமுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா, பாருங்க, நாம கிண்டல் பண்ணுறதுக்காக கற்பனையா உருவாக்குற பாத்திரங்களை விடவும், ஒரு ஒப்பனையுமே போடாம நிஜ உலகத்துலே பல குணாதிசயங்களை நேருக்கு நேர் பார்க்க முடியுது. அதே போல, சில சந்திப்புகளின் போது, யாரோ ஒருத்தரோட ஏற்படுகிற பரிச்சயம் நமக்கு இருக்கிற அவநம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தி விடுறதும் உண்டு. இந்த உலகம் இன்னும் அவ்வளவு மோசமாகிடலே சாமின்னு நினைக்க வைக்குது. அப்படியொரு சந்திப்பைப் பத்தி எழுதினா என்ன?

நேத்து எங்க அலுவலகத்தோழி ஒருத்தருக்குப் பிறந்தநாள்; அவரோட பதவி உயர்வுக்குக் கூட (ஆறுமாசமாகியும்) ட்ரீட் கொடுக்காததினாலே, இரண்டையும் சேர்த்து விமர்சையா கொண்டாட மதிய உணவு நேரத்துலே சரவண பவன் போயிட்டோம். இருபத்தி ரெண்டு பேர் சரவண பவனுக்குப் போனா என்னாகிறது? ஒரே அரட்டையும் வெடிச்சிரிப்பும் தான்.

தந்தூரி அயிட்டத்துக்காகக் காத்திட்டிருக்கும்போது, நாங்க அஜீத் பேசின பேச்சு பத்தி காரசாரமா விவாதிச்சிட்டிருந்தோம். அடுத்த டேபிளிலே நரைச்சுப்போன முறுக்கு மீசையும், குங்குமப்பொட்டுமா, பெயர் தெரியாட்டியும் தினமும் 8:20 லோக்கலிலே பார்க்கிற அந்த பெரியவர் உட்கார்ந்திருந்தாரு.

"எவ்வளவு போலீஸ் தெரியுமாடா? எவன் அப்பன் வூட்டுப்பணம்?" -இது எங்களில் ஒருவனது கேள்வி.

"இதுக்கெல்லாம் எலெக்ட்ரிசிட்டி பில் எவ்வளவு ஆகியிருக்கும்? சினிமாக்காரனுங்க கொடுத்திருப்பானுங்க?" -இது இன்னொரு சமூக அக்கறை.

"12 பர்சென்ட் வாட் சென்ட்ரல் கவர்ன்மென்ட் கொண்டு வந்ததும் முடியாதுன்னு முரண்டு பிடிச்சாங்க. 33 பர்சன்ட் என்டர்ட்டெயின்மென்ட் டாக்ஸையே ஒழிச்சிட்டாங்க!" - இதுவும் ஆதங்கமே!

இவ்வளவும் பேசிக்கொண்டிருக்கையில், அந்த முதியவர் தலைநிமிர்ந்து கூட பார்க்காமல் சாப்பிட்டுக்கொண்டுதானிருந்தார். ஆனால், எங்களில் ஒருவன் சொன்ன ஒரு கருத்து அவரை நிமிர்ந்து உட்காரச் செய்து விட்டது.

"முதல்லே நம்ம நாட்டுலே இருக்கிற கெளவனுங்களையெல்லாம் போட்டுத்தள்ளணும்."

நிமிர்ந்து பார்த்தவர் வாய்விட்டுச் சிரித்தார்.

"சார், உங்களைச் சொல்லலே சார்!" என்று மழுப்பினான் எங்க ஆளு.

"சொன்னாலும் தப்பில்லே தம்பி!" என்று தொடர்ந்து சிரித்தவர்," இப்போ நீங்க கேட்டுக்கிட்டிருந்தீங்களே கேள்வி, இதுக்கெல்லாம் விடை கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம் தெரியுமா? ஒரு பத்து ரூபா செலவு பண்ணினா போதும். உங்களை மாதிரி இளைஞர்கள் நூறு பேர் தலைக்குப் பத்து ரூபா செலவு பண்ணி அரசாங்கம் தப்புப் பண்ணுறபோதெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா பொறுப்புலே இருக்கிறவங்களுக்கு பயம் வரும்."

"ஆட்டோ வர்றதுக்கு ஐடியா கொடுக்கிறாரு சாரு," என்று சிரித்தேன் நான்.

"அப்படீன்னா சினிமா பார்த்திட்டு சும்மாயிருங்க தம்பி," என்று சிரித்தபடியே கூறினார் அவர். "இனிமேல் குஜராத்துலேயிருந்து காந்தி வரமாட்டாரு! அலஹாபாத்திலேருந்து நேரு வர மாட்டாரு! விருதுப்பட்டியிலேருந்து காமராஜர் வரமாட்டாரு! உங்க தலையை நீங்க தான் காப்பாத்திக்கணும். ஏதாவது செய்ய முடிஞ்சா செய்யுங்க. இல்லாட்டி கிளவனுங்க மேலே பழியைப் போடுறதை விட்டுட்டு சாப்பிட்டு முடிச்சுப் போங்க!"

இதற்கிடையில் பிறந்தநாள் தோழி, எங்கள் பக்கத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு விட்டதோ என்று கலவரத்தோடு எழுந்து வந்துவிட்டாள்.

"வாட்ஸப் கைஸ்?"

நாங்கள் நால்வரும் அசட்டுச்சிரிப்புச் சிரித்தோம். பெரியவர் தொடர்ந்தார்.

"தம்பிங்களா! பேசுறதும் திட்டறதும் ரொம்ப சுலபம். செய்யுறது ரொம்ப கஷ்டம்! நான் செஞ்சிட்டிருக்கேன். ரைட் டு இன்ஃபர்மேஷன் சட்டத்தை வச்சுக்கிட்டு நான் மலையைப் பிடிச்சு இழுத்திட்டிருக்கேன். இதுலே மயிர் போகுமா, உயிர் போகுமான்னு தெரியாது. ஆனாலும் செய்யறேன். எது நடந்தாலும் அது உங்களுக்காகத் தான்; என் தலைமுறை முடிஞ்சு போச்சு!"

சாப்பிட்டு முடித்து விட்டு அவர் எழுந்து போனார்.

"ஹோட்டல்லே பேசும்போது கொஞ்சம் கவனிச்சுப்பேசணும்," என்றான் ஒரு நண்பன்.

"சாரிடா," என்றான் கிளவன்களைப் போட்டுத்தள்ளச் சொன்னவன்.

எங்களின் நாட்டுப்பற்றும் அக்கறையும் எவ்வளவு தற்காலிகமானது என்பதைப் புரிய வைத்த அந்தப் பெரியவர் கைகழுவி விட்டுக் கீழே இறங்கும் முன்னர், நாங்கள் இருந்த இடத்தைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தபோது, அவரது கண்களை நான் தவிர்த்தேன்.

இவரைப் பற்றி எழுதுவதற்குக் காரணம், நிச்சயம் அவரை நான் விரைவில் மறந்து விடக்கூடும் என்பதே! கடமைகளையும், அதை நினைவுறுத்துபவர்களையும் மறந்து விட்டு தடங்கல்களின்றி ஆகாத கனவுகளைக் காணுகிற அசிங்கமான வழக்கத்திலிருந்து நான் மீளப்போவதில்லை.

6 comments:

அண்ணாமலையான் said...

நீங்க மட்டுமல்ல, நாம எல்லாருமே மாறனும்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப அப்ப நல்ல சீரியஸான போஸ்ட் போடுவதாக என்னிடம் சத்தியம் செய்து கொண்டதாக நினைச்சுங்க.. கண்டிப்பா இதைப்போன்ற விசயத்தை பகிர்ந்து வைக்கிறது படிக்கிறவங்களுக்க்கு மட்டுமில்ல உங்களுக்கே உங்களை கேள்வி கேட்டுக்கவும் பயன்படுமே..

Rajan said...

சூப்பர்

settaikkaran said...

//நீங்க மட்டுமல்ல, நாம எல்லாருமே மாறனும்...//

உண்மை தான் அண்ணாமலையாரே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!

settaikkaran said...

//அப்ப அப்ப நல்ல சீரியஸான போஸ்ட் போடுவதாக என்னிடம் சத்தியம் செய்து கொண்டதாக நினைச்சுங்க.. கண்டிப்பா இதைப்போன்ற விசயத்தை பகிர்ந்து வைக்கிறது படிக்கிறவங்களுக்க்கு மட்டுமில்ல உங்களுக்கே உங்களை கேள்வி கேட்டுக்கவும் பயன்படுமே..//

முத்துலட்சுமி அவர்களே! இது போல சில சுடும் நிஜங்கள் பற்றி அவ்வப்போது எழுத வேண்டும் என்பதை இனி ஒரு வைராக்கியமாகக் கொள்வேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

settaikkaran said...

//சூப்பர்//

நன்றி ராஜன்