Wednesday, February 3, 2010

ஜிம்மாயணம்-02

அவரைக்காய் போலிருந்த உடம்பை ஆர்னால்டு போல மாற்றுவதற்கு அத்தியாவசியப் பொருளான அலாரம் டைம்பீஸையும், நாங்களும் உடற்பயிற்சி செய்கிறோம் என்று நானிலத்தோருக்கு இயம்பும்பொருட்டு வாங்கிய உடைகளையும் வாங்கி முடித்து விட்டு ஜனவரி 1-ம் தேதி நாங்கள் மூவரும் அறைக்குத் திரும்பினோம். மூவருமே ஆங்காங்கே அவரது எடைகளைப் பார்த்து விட்டு, கைபேசியில் சேமித்து வைத்திருந்தோம்.

"இன்னிக்குக் கொழம்பு ரொம்பக் காரம்," என்றான் வைத்தி. "எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டா, உப்பு, காரமெல்லாம் குறைக்கணும்."

"ஆர்னால்டெல்லாம் அப்போ காரமே சாப்பிட மாட்டாரா?" என்று கேட்டான் சுரேந்தர்.

"அது தெரியாது. ஆனா நிச்சயமா சாம்பார் சாப்பிட மாட்டார்," என்று நான் எனக்குத் தெரிந்த உண்மையை எடுத்து ஓதினேன்.

"ஏண்டா கவலைப்படுறே? நாளைக்கே ஒரு கலோரீஸ் டேபிள் வாங்கிட்டு வர்றேன்," என்றான் வைத்தி

"இந்த ரூமுலே டேபிள் போட எங்கடா இடமிருக்கு?" என்று அஞ்ஞானமாகக் கேட்டேன் நான்.

"கடுப்படிக்காதடா," என்று சினந்தான் வைத்தி. "கலோரீஸ் டேபிள்னா ஒரு நாளைக்கு உடம்பிலே எவ்வளவு புரோட்டீன் சேர்க்கணும், எவ்வளவு விட்டமின், எவ்வளவு கார்போஹைட்ரேட்னு கட்டம் கட்டமாப் போட்டு சார்ட் மாதிரி பெரிசா சொல்லியிருப்பாங்க!"

"ஓ! அப்படியா," என்று புரிந்து கொண்ட நான் அடுத்தகணமே வைத்தியை எச்சரித்தேன். "இதோ பாரு, அதை ரூமுலே ஒட்டுறதாயிருந்தா, அதுக்காக என்னோட சானியா மிர்ஸா போஸ்டரை எடுத்திராதே! அப்புறம் நான் மனிசனாயிருக்க மாட்டேன்."

"இந்த சானியாப் பைத்தியம் தெளியுற வரைக்கும் நீ சோனியாத் தானிருப்பே," என்று சாபமிட்டான் வைத்தி.

"அவனை விடுறா! ஏண்டா வைத்தி, தினமும் காலையிலே எழுந்திரிச்சு ஓடினா உடம்பு ஆர்னால்டு மாதிரி ஆயிருமா?" என்று இன்னொரு சந்தேகத்தை எழுப்பினான் சுரேந்திரன்.

"குறைஞ்சது ஒரு மாசமாவது தினமும் ஒடிட்டு, அப்புறம் மெதுவா எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிக்கணும். ஒரு நல்ல ஜிம்மாப் பார்த்துப் போகணும்." என்று வைத்தி தனது திட்டத்தைக் குறித்து விளக்கினான்.

"சே! அவசரப்பட்டு தீபாவளிக்கு ரெண்டு செட் டிரஸ் எடுத்திட்டேனே, ஆறு மாசத்துக்கப்புறம் அதையெல்லாம் போட்டுக்கவே முடியாது," என்று ரொம்பவே விசனப்பட்டான் சுரேந்திரன்.

"இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்குப் புது டிரஸ் வாங்குறதாவே இல்லை," என்றேன் நான். "ஓரளவுக்கு பாடி டெவலப் ஆனதுக்கப்புறம் தான் புது டிரஸ்!"

"டேய், முக்கியமான விஷயம் சொல்லவே மறந்திட்டேனே?" என்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து உட்கார்ந்தான் வைத்தி.

"என்னடா?"

"பாதாம் பிசின்!"

"அப்படீன்னா?"

"டேய், அது வெள்ளையா ஜெவ்வரிசி மாதிரி இருக்குண்டா! அதை ஒரு கிளாஸ் தண்ணியிலே ஊற வச்சிட்டு மறுநாள் காலையிலே எந்திரிச்சு வெறும் வயத்துலே சாப்பிட்டதுக்கப்புறம் எக்ஸர்சைஸ் பண்ணினா உடம்பு சும்மா கிண்ணுன்னு ஆயிரும்!"

"ஒரே நாளிலேயா?" என்று நான் கேட்டதும் வைத்தி என்னைக் கொங்கணவன் போலக் கோபமாகப் பார்த்தான்.

"மணி இப்பவே ஒன்பதரையாயிடுச்சேடா? அது எங்க கிடைக்குமோ?" என்று படுக்கையிலிருந்து எழ மனமின்றி பரிதாபமாகக் கேட்டான் சுரேந்திரன்.

"டேய், செய்வன திருந்தச் செய்னு சொல்லுவாங்க! முத நாளே அரைகுறையா ஆரம்பிக்கக் கூடாது. ஒண்ணு ஆளுக்கு ஒரு பக்கமாப் போயி பாதாம் பிசின் எங்கே கிடைச்சாலும் வாங்கிட்டு வரணும்.இல்லாட்டி நாளைக்கு வாங்கிட்டு வந்திட்டு, நாளை மறுநாள்லேருந்து எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிக்கணும்," என்று உறுதிபடக் கூறினான் வைத்தி.

நானும் சுரேந்திரனும் ஒருவரையொருவர் ஜாடையாய்ப் பார்த்தோம். அவனாவது படுக்கையிலிருந்து எழுந்திருப்பதாவது?

"நீ சொல்லுறது தான் கரெக்ட் வைத்தி," என்றேன் நான்."எதையுமே அரைகுறையா ஆரம்பிக்கக் கூடாது."

"கரெக்ட்!" என்றான் வைத்தி.அவனது முகத்தில் ஆஸ்கார் வாங்கிய பெருமிதம்.

"ஒண்ணு பண்ணுவோம்! நாளைக்கு பாதாம் பிசின் வாங்கிட்டு நாளை மறுநாளிலேருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கலாம்...," என்று நான் சொன்னதும் வைத்தியின் முகம், மோர்மிளகாயைப் போல சுருங்கி விட்டது.

"குட் ஐடியா!" என்று சுரேந்திரன் படுக்கையிலிருந்து எழுந்து அலாரம் டைம்பீஸை எடுத்தான். "அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிருக்கு! அதை ஏழரை மணியாக்கிடறேன். இன்னிக்கு ஒரு நாள் நல்லாத் தூங்குவோம். நாளைக்கு ஒரு நாள் இஷ்டம் போலச் சாப்பிடுவோம்."

"ஆமா, அனேகமா நாளைக்கு மெஸ்ஸிலே வத்தக்குழம்பு வச்சாலும் வைப்பாங்க! ஒரு பிடி பிடிக்கலாம்," என்று சொல்லி விட்டு, வைத்தியை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவின்றி கால்நீட்டிப் படுத்து போர்வையால் முகத்தை மூடிக்கொண்டேன்.

"அடப்பாவீகளா!" வைத்தி முணுமுணுத்தது எங்கள் காதில் விழவேயில்லை.

3 comments:

Unknown said...

எங்க ரூம்லையும் இப்படி நடக்கும்

settaikkaran said...

//எங்க ரூம்லையும் இப்படி நடக்கும்//

எல்லா ரூமிலேயும் நடக்கிறது தான்! :-)
நன்றி சங்கர்! வருகைக்கும் கருத்துக்கும்...!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது சூப்பரு...
எப்பத்தான் ஆரம்பிக்கறது...