அமெரிக்காவிலேருந்து வர்ற ஒரு பத்திரிகையிலே குறுக்கெழுத்துப்போட்டி வச்சாங்க! அதுலே ஐயாக்கண்ணுவும் கலந்துக்கிட்டாரு! எல்லாக் கட்டத்தையும் நிரப்பிட்டு ஊர்மக்களைக் கூப்பிட்டுக் காண்பிச்சாரு!
"எலேய், பாருங்கலே! ஆறு மாசத்துலே இந்தக் கட்டத்தையெல்லாம் நிரப்பிட்டேனில்லா?"
அதுலே ஒருத்தர் ரொம்பப் படிச்சவரு; எட்டாம் கிளாசு ஒன்பது தடவை ஃபெயில் ஆனவரு! அவரு ஐயாக்கண்ணு அண்ணாச்சி கிட்டே கேட்டாரு!
"அண்ணாச்சி! என்ன சொல்லுதீக? ஆறுமாசமா? ரொம்ப அதிகமாட்டில்லே இருக்கு?"
அண்ணாச்சிக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்திருச்சு.
"லேய், கீழே இங்கிலீஷிலே என்ன போட்டிருக்குன்னு பார்த்தியாலே?"
இங்கிலீஷ் தெரிஞ்சிருந்தா ஏன் அவரு ஆந்தைக்குளத்திலே இருந்துக்கிட்டு அண்ணாச்சி கிட்டே அவதிப்படணும்?
"தெரியலே அண்ணாச்சி! நீங்களே வழக்கம் போல வாசிச்சு அர்த்தமும் சொல்லிருங்க,"ன்னு கமுக்கமா இருந்துக்கிட்டாரு.
"படிக்கேன் கேளுங்க,"ன்னு அண்ணாச்சி போட்டியோட விதிமுறைகளிலே முதலாவதா போட்டிருந்ததை வாசிச்சாரு. "For 5-7 years....அதாவது இதை அஞ்சு வருஷத்துலேருந்து ஏழு வருஷம் வரை எடுத்துக்கிட்டு நிரப்பலாமுண்ணு எழுதியிருக்காமுல்லா? நான் ஆறே மாசத்துலெ முடிச்சிட்டேன் பார்த்தீகளா?"
ஆந்தைக்குளமே அல்லோல கல்லோலப்பட்டிருச்சில்லா? பட்டாசெல்லாம் வெடிச்சு பயபுள்ளைக அமர்க்களமே பண்ணிப்புட்டாக!
அஞ்சு வயசிலேருந்து ஏழு வயசான குழந்தைகளுக்குண்ணு வச்ச போட்டியிலே இந்தியாவிலேருந்து ஒரு ஆளு ஆறுமாசம் களிச்சு விடையனுப்பினதைப் பார்த்து அமெரிக்காக்காரன் அசந்து போய் நிக்கான். இந்தாளை அமெரிக்காவுக்கு வரவழைச்சு டிஸ்னி லாண்டுலே ஒரு கூண்டுக்குள்ளே உட்கார வச்சு டிக்கெட் போட்டு வித்தா நிறைய டாலர் தேறுமுண்ணு முடிவு பண்ணி, அண்ணாச்சியை அமெரிக்காவுக்கு வரச்சொல்லி கடுதாசு அனுப்பிட்டாங்கன்னா பாருங்களேன்.
"என்னமோ பாஸ்போர்ட் எடுக்கணுமுங்கான்; விசா வாங்கணுமுங்கான். நாளைக்குத் திருநேலி போயி சோலியை முடிச்சுப்போடுதேன்! எலேய், ஒரு பெரிய பையா எடுத்து வையி...எதுக்கும் வாங்குற விசாவை கூட ரெண்டு கிலோ வாங்கிட்டு வந்துருதேன்! பொறவு அலயாண்டாமில்லா?"
"பாஸ்போர்ட்டுண்ணா ஓட்டு அட்டைக்காண்டி பள்ளியோடத்துலே வச்சு எடுத்தாகளே! அதானே?" என்று ஐயாக்கண்ணுவிடம் தங்கள் பொது அறிவை வெளிப்படுத்தியவாறே கேட்டார் ஒருவர்.
ஆந்தைக்குளத்தில் தன்னைப் போலவே நிறைய அறிவாளிகள் உருவாகிக்கொண்டிருப்பதை எண்ணி ஐயாக்கண்ணுவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் மணிமுத்தாறு அணை திறந்தது மாதிரி கொட்டத்தொடங்கியது.
இதற்கிடையில், ஐயாக்கண்ணு அமெரிக்கா போகிற செய்தியறிந்து திருநேலியிலிருந்து ஒரு பத்திரிகை நிருபர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பேட்டியே எடுக்க வந்து விட்டார்.
"இண்ணைக்கு என்னை அமெரிக்காவுக்கு வரச்சொல்லியிருக்காகன்னா, அதுக்குக் காரணம் என்னோட எருமைங்க தான்! அதுனாலே நான் என்னோட எருமைங்களோட இருக்குறா மாதிரி ஒரு படம் புடிச்சு முதப் பக்கத்துலே போடணும்," என்று நிபந்தனை விதித்தார் ஐயாக்கண்ணு.
செய்தித்தாள் படிக்கிறவர்களுக்கு யார் ஐயாக்கண்ணு என்ற குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தானும் தனது எருமைகளும் மட்டுமே இருக்குமாறு புகைப்படம் எடுக்க அனுமதித்தார் அண்ணாச்சி.
"எலேய், செய்தியைப் பார்த்துப் போடுலே! படிக்கிறவனுக்கு நான் தான் ஐயாக்கண்ணுன்னு நல்லாத் தெரியணும்," என்று நிரூபரிடம் திரும்பத் திரும்ப சொன்னார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி, நாளைக்குக் காலையிலே பேப்பர் பாருங்க," என்று உறுதிபடக்கூறினார் நிருபர்.
மறுநாள் காலைச்செய்தித்தாளில் எருமைகளோடு ஐயாக்கண்ணு நிற்கிற படத்தை முதல் பக்கத்தில் போட்டிருந்தார்கள். புத்திசாலி நிருபர் அண்ணாச்சியின் கட்டளைப்படியே எல்லாருக்கும் புரிகிற மாதிரி கீழே ஒரு குறிப்பும் எழுதியிருந்தார்.
"படத்தில் நடுநாயகமாக நின்று கொண்டிருப்பவர் தான் ஐயாக்கண்ணு! மற்றவை எல்லாம் எருமைகள்!"
இப்போ யாருக்கும் எந்தக் குழப்பமும் வராதீல்லீங்களா?
Tweet |
11 comments:
நல்ல காமெடி...
எலே... மக்கா...
யாராச்சும் என்னய காப்பாத்துங்க.....
என்னால முடியல....
ஆபிஸ்ல எல்லாரும் என்னய லூசு மாதிரி பாக்குறாங்க...
சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது. எப்படி இந்த மாதிரியெல்லாம் எழுத முடிகிறது உங்களால்...? :-))))))
//நல்ல காமெடி...//
நன்றி பட்டா பட்டி!
//எலே... மக்கா...
யாராச்சும் என்னய காப்பாத்துங்க.....
என்னால முடியல....
ஆபிஸ்ல எல்லாரும் என்னய லூசு மாதிரி பாக்குறாங்க...//
அதுக்குத் தானே இம்புட்டுக் கஷ்டப்படுறோம்? லூசாக்குறதுக்கு இல்லை; சிரிக்க வைக்குறதுக்கு.....!
//சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது. எப்படி இந்த மாதிரியெல்லாம் எழுத முடிகிறது உங்களால்...? :-))))))//
எல்லாம் உங்க ஆசிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தண்டபாணி அவர்களே!!
ரசித்தேன்.. கேரக்டர் பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப எளிதாக கைகூடி வருகிறது.. வாழ்த்துகள்..
//ரசித்தேன்.. கேரக்டர் பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப எளிதாக கைகூடி வருகிறது.. வாழ்த்துகள்..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்திகைப்பாண்டியன்! அடிக்கடி வாங்க!
அநியாயத்துக்கு அறிவாளியா இருக்கார் அய்யாக்கண்ணு.. :)
//அநியாயத்துக்கு அறிவாளியா இருக்கார் அய்யாக்கண்ணு.. :)//
வாங்க வாங்க! நீங்களே சொல்லிட்டீக! பொறவென்ன?
உங்களுக்கு சேட்டை அதிகம்தான்..
Post a Comment