Sunday, January 31, 2010

கடன்வாங்கிய கணங்கள்

ரொம்ப மொக்கை போட்டாகி விட்டது. கொஞ்சம் சீரியசாக எழுதினால் யாரும் கழுவிலேற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நம்மால் "ஆயிரத்தில் ஒருவன்," படத்துக்கு இரண்டாயிரமாவது விமர்சனம் எழுத முடியாது. ஒரு பிராட் பேண்டும் வாசிக்க பத்து பேரும் இருக்கிறார்கள் என்பதால் தினவெடுத்து சாருவுக்கோ, ஜெயமோகனுக்கோ திறந்த மடல்கள் எழுத முடியாது; ஏழு கோடி ரூபாய்களைக் கோட்டை விட்ட ஒரு நகைச்சுவை நடிகருக்கு ஏற்படக்கூடிய மனவேதனையை ஏளனப்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் எதையெதையோ எழுதி நமது மனதின் முகவரியை பகீரங்கப்படுத்த முடியாது. இப்படிச்செய்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதிவுகளைப் படிக்க மாட்டார்கள்; படித்தாலும் கவலைப்படமாட்டார்கள் என்பது புரியாமல் இல்லை. ஆனாலும், இருக்கிற சவுகரியத்தைப் பயன்படுத்தி சில விஷயங்களை எழுதுவதால் கிடைக்கிற சில சில்லறை மகிழ்ச்சிகளைத் தியாகம் செய்கிற பெரியமனது எத்தனை பேருக்கு வரும்? எனக்கும் இல்லையென்பதை ஊர்ஜிதப்படுத்தவே இந்தப் பதிவு.

பிப்ருவரி 14 நெருங்கியிருப்பதை நாட்காட்டிகளை முந்திக்கொண்டு வலைப்பதிவுகள் சொல்லி விட்டன.

புனித வேலன்டைன் என்பவர் ரோமாபுரியில் மூன்றாவது நூற்றாண்டில் மதகுருவாக இருந்தாராம். அப்போது ரோமாபுரியின் மன்னராக இருந்த இரண்டாம் க்ளாடியஸ் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தாராம். காரணம், திருமணமான இளைஞர்களைக் காட்டிலும் கட்டை பிரம்மச்சாரிகளே சிறந்த போர்வீரர்களாகத் திகழ்வார்கள் என்பது அவரது நம்பிக்கை. மன்னரின் எதேச்சாதிகாரமான இந்த சட்டத்தை எதிர்த்து புனித வேலன்டைன் தனது தேவாலயத்திலேயே இளைஞர்களுக்கு ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தாராம். இது குறித்து அறியவந்த மன்னர், புனித வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்தாராம். இது காதலர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிற வேலன்டைன்ஸ் டே குறித்து உலவுகிற பல கதைகளில் ஒன்று.

இன்னொரு கதைப்படி, வேலன்டைன் தான் முதல் முதலாக வேலன்டைன் வாழ்த்தையே அனுப்பினாராம். சிறையில் அடைபட்டிருந்த வேலன்டைனுக்கும் சிறையதிகாரியின் மகளுக்கும் காதல் மலர்ந்ததாம். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அவளுக்கு கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் "இப்படிக்கு, உனது வேலன்டைன்," என்று ஒப்பமிட்டிருந்தாராம்.

வேலன்டைன் குறித்த சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அது குறித்து இந்தியர்களாகிய நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரே ஒரு இந்தியராக இருந்திருந்தால், அவரது வரலாற்றின் இருட்டான பக்கங்களைப் பற்றிப் பேசி, எழுதி பரபரப்பை ஏற்படுத்த நிறைய பேர் முயன்றிருப்பார்கள். வேலன்டைன் ஐரோப்பியர் என்பதால்....வடை போச்சே!

புனித வேலன்டைன் செய்தது வரலாறு இதுவரை பார்த்திருக்கக்கூடிய எந்தப் புரட்சியிலும் சளைத்ததல்ல. ஒரு சர்வாதிகாரியின் கருப்புச்சட்டத்தை எதிர்த்து ஒரு தனிநபர் போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு உலக சரித்திரத்திலும், இந்திய சரித்திரத்திலும் எண்ணிலடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. அந்தப் போராட்டம் மரணத்தில் முடிவடைகிறபோது, அவரைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கருதுகிற மனப்பான்மைக்கும் குறைச்சலில்லை. புனித வேலன்டைன் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்று காக்கை குருவிகளின் எச்சத்தால் நிறம்மாறிய பல நூற்றுக்கணக்கான சிலைகளாகி, முச்சந்திக்கு முச்சந்தி நின்று கொண்டிருந்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், எதார்த்தம் நம் தலையில் குட்டி, "அப்படியெல்லாம் நடந்திருக்காது," என்று உறைக்குமாறு சொல்லுகிறது.

இந்தியாவில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழிகாட்டுதலுக்குரிய பல நல்ல விஷயங்களுக்காக முன்னுதாரணம் ஏற்படுத்தியவர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், புத்திசாலிகள் அவர்களை ஒதுக்க, மதம், இனம், மொழி என்ற அளவுகோல்களைக் கண்டுபிடித்து தள்ளி வைத்து விட்டார்கள். "ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே....," என்று பாரதியார் சொன்னாலென்ன? அவர் எட்டயபுரத்தின் பொட்டல் காட்டில் பிறந்தவராயிற்றே? இப்படி காந்தி தொடங்கி ஒரு நீண்ட பட்டியல் எழுதினாலும் கூட, "சே..சே! அவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என்று சொல்லி அந்த யுகபுருஷர்களை மட்டம் தட்ட சுயபட்டாபிஷேகம் செய்து கொண்ட சில சிந்தனைச்சிற்பிகள் காளான்களைப் போலத் தலைதூக்குவர். இவர்களின் பலிபீடத்திற்கு நமது மாமனிதர்களின் இரத்தத்தைக் கொடுப்பதை விட, அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பதே இறந்தவர்களுக்குச் செய்கிற மரியாதை என்ற கோழைத்தனமான சமாதானத்தோடு தான் பலர் உலவிக்கொண்டிருக்கிறோம். இல்லையா?

சில விஷயங்களை நாம் நமக்கோ, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ நினைவூட்டுவதை விடவும் வெட்கத்தக்க காரியம் எதுவும் இருக்க முடியாது. ஜனவரி 30-ம் தேதி ஒரு பள்ளிச்சிறுவனோடு பயணம் செய்ய நேர்ந்தது. தனது பள்ளிக்கூட டைரியில் யாரிடமே வாங்கிய ஒரு கையெழுத்தை என்னிடம் காட்டினான்.

"இவர் பேர் கல்யாணம். தமிழ்நாட்டில் பிறந்தவர் அல்ல்; ஆனால் தமிழ்நாட்டிலே வசிக்கிறவர். மகாத்மா காந்தியின் இறுதி ஐந்து ஆண்டுகளில் அவருடைய காரியதரிசியாகப் பணியாற்றியவர். எங்கள் பள்ளிக்கு இன்று வந்திருந்தார். அவரிடம் வாங்கிய கையெழுத்து இது."

அந்தச் சிறுவனின் முகத்தில் தான் அப்படியொரு பெருமை. காந்தியைப் பற்றி அவன் அறிந்து கொண்ட சில விஷயங்களை என்னிடம் கேட்டான்.

"காந்திக்கு மொத்தம் எத்தனை பசங்க?"

எனக்குத் தெரியவில்லை.

"காந்தி கடைசியாக எத்தனை ரூபாய்க்கு செக் எழுதினார்?"

தெரியாது.

"காந்தி இறக்கும்போது உண்மையிலேயே "ஹே ராம்," என்று சொன்னாரா?"

தெரியாது.


"காந்தியின் நினைவு நாளை இந்தியா எந்தப் பெயரில் அனுஷ்டிக்கிறது?"

தெரியாது.

சரி, எனக்கு என்ன தெரியும்? வேலன்டைன்ஸ் டே குறித்துத் தெரியும். அன்றைய தினம் காதலர்கள் தெருக்களிலும், பொதுவிடங்களிலும் அவிழ்த்துவிடப்பட்ட கன்றுக்குட்டிகள் போலத் துள்ளித்திரிவது தெரியும். ஆற்றாமையோ, ஆத்திரமோ மேற்கத்திய கலாச்சாரம் பரவுகிறதே என்று ஆதங்கப்படுகிறவர்கள் போல சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுகிற தண்டல்காரர்களைப் பற்றித்தெரியும்.

ஆனால், எனது சொந்தக்கணங்களை மட்டும் சுருங்கிவிட்ட துணிமணிகளை எங்கு,எப்போது என்றும் நினைவுகூராத அளவுக்கு குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து விட்டது போல, தலைமுழுகி விட்டிருக்கிறேன். ஒரு பள்ளிச்சிறுவன் என்னிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டு விட்டதுபோல அகந்தையைத் தொலைத்து தலைகவிழ்ந்து நிற்கிறேன்.

"காதலர் தினம்," பற்றித் தெரியாத லட்சக்கணக்கான அறிவுசூனியங்களில் ஒருவனாக நானும் ஏன் இருந்து தொலைத்திருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. மேற்கிலிருந்து கடன் வாங்கிய கணங்களை ஊதாரித்தனமாகச் செலவழிப்பது எனக்கு ஏன் உறுத்தவில்லை என்ற கேள்வி மட்டும் என்னை விட உயரமாக எழும்பி நிற்கிறது.

பிப்ருவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடவிருக்கும் அக்மார்க் இந்தியர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

2 comments:

சாமக்கோடங்கி said...

சரியாச் சொன்னீங்க அண்ணே...

settaikkaran said...

//சரியாச் சொன்னீங்க அண்ணே...//

வாங்க பிரகாஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி