Friday, October 26, 2012

கேஜ்ரிவாலும் கேப்பையில் நெய்யும்!




முஸ்கி: 
எதிர்வினைகளை எதிர்பார்த்துத்தான் இதை எழுதியிருக்கிறேன்;
ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முடியுமோ, முடியாதோ;
 ஆனால், கருத்துக்களை வரவேற்கிறேன்; மதிக்கிறேன்.
                 


      எப்படி அண்ணா ஹஜாரே குறித்த எனது அனுமானங்கள் பின்னாளில் அவ்வண்ணமே இனிதே நடந்து முடிந்ததோ, அப்படியே இது விஷயத்திலும் நடக்குமென்றெல்லாம் ஆருடம் சொல்லவில்லை. தற்போதைய கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் உண்டாக்கக்கூடிய பின்விளைவுகளைப் பற்றிய எனது கணிப்புகள் தவறானால், அதற்காக வருந்தவோ, வெட்கப்படவோ நான் அரசியல் ஆய்வாளன் அல்லன். இன்றைய சூழலில் அர்விந்த் கேஜ்ரிவால் செய்துகொண்டிருக்கும் சாகசங்கள் அவர் கொண்டுவர விரும்புகிற மாற்றத்தை முளையிலேயே கிள்ளி எறிவதைத் தவிர வேறு எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதே எனது உறுதியான நம்பிக்கை. அதற்கான முகாந்திரங்களை முடிந்தவரை கோர்வையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.


     ஊழல் மட்டும்தான் பிரச்சினையா?

      சுதந்திர இந்தியாவில் ஊழல் எப்போதுமே ஒரு தற்காலிகமான பிரச்சினையாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்திரா காந்தி அம்மையாரின் நகர்வாலா ஊழல் குறித்து இன்று எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்? லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ் அரசை நீக்குவதற்காக போராடியபோது, அவரது முக்கியமான குற்றச்சாட்டுகள் இந்திரா காந்தியின் ஊழல் குறித்து மட்டும்தானே? அதைத் தொடர்ந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதனால் கிலியில் இந்திரா அம்மையார் பிரகடனம் செய்த அவசர நிலை, மிசா ஆகியவற்றின் காரணமாகவே ஜனதா கட்சி ஆட்சியமைத்தது என்பது வரலாறு.

      போபர்ஸ் ஊழல்! ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இருந்த வி.பி.சிங்கே வெளியேறி, தேசமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, காங்கிரஸ் ஆட்சியை அகற்றியதும் இன்னொரு வரலாறு.

      கொஞ்சம் தமிழகத்தின் சமீபத்திய வரலாற்றையும் பார்க்கலாமா? செல்வி ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன கொஞ்சமா? அதைத் தொடர்ந்து தி.மு.க-த.மா.கா கூட்டணியமைத்து கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்ததே! அதன்பிறகு இன்றுவரை தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி ஆட்சியமைக்கிறார்களேயன்றி, இரு கட்சிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நாளாவட்டத்தில் மக்களால் மறக்கடிக்கப்படுகின்றன என்பது தானே உண்மை?

      ஆக, ஊழலை மட்டுமே முன்னிறுத்திப் போராடினால், நிகழ்கிற ஆட்சி மாற்றங்கள் தற்காலிகமானவை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஜெ.பி அரும்பாடு பட்டு காங்கிரஸ் அரசை அகற்றியும் கூட,கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியினர் தவறி விட்டனர். ராஜீவ் காந்தி எதிர்ப்பு அலையில் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங்காலும் அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இவர்கள் செய்த குளறுபடிகளின் காரணமாக, ‘இவர்களுக்கு ஊழல் காங்கிரஸ் ஆட்சியே மேல்என்ற முடிவுக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதுதானே உண்மை? சிறுபான்மையோ, பெரும்பான்மையோ தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் மீண்டும் அமர்ந்திருப்பது காங்கிரஸ் தானே? தொன்றுதொட்டு ஊழல் செய்துவரும் காங்கிரசுக்கு இது சாத்தியமாகிறது என்றால், ஊழலைக் காட்டிலும் மக்களை நேரிடையாக பாதிக்கிற பிரச்சினைகள் உள்ளன என்பதுதானே பொருள்?

      (மக்கள் காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டதால்தான் இந்த காங்கிரஸ் அசம்பாவிதங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்று சொல்பவர்களுக்கு அப்படியென்றால் அர்விந்த் கேஜ்ரிவால் முதலில் வாக்காளர்களைத் திருத்த வேண்டும்; அதற்கு முன் அரசியல் கட்சிகளைக் குறிவைப்பது ஒன்று அறியாமை அல்லது மோசடி வேலை என்றுதான் பொருள்.)


     மாற்று அரசியல் இருக்கிறதா?

      லோக்நாயக் ஜெ.பி காங்கிரஸை எதிர்க்க, அப்போதைய ஜனசங்கத்தின் ஆதரவையும் நாடினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது ஒன்றே குறிக்கோள் என்று, நேரெதிர் துருவங்களாக இருந்த கட்சிகளையும் இணைத்துத்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. தமிழகத்திலும் கூட, தி.மு.கவையும், த.மா.கா-வையும் இணைத்து ஒன்றுபட்ட கூட்டணியாக்கியதால்தான் அப்போது அ.தி.மு.க-வை முறியடிக்க முடிந்தது. இவ்வளவு ஏன்? முந்தையை தி.மு.க.ஆட்சியை அகற்றுவதற்கும் கூட, அ.தி.மு.கவுக்கு (அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட!), தே.மு.தி.க போன்ற கட்சிகளுடனான கூட்டணிதான் முக்கியமான காரணமாக இருந்தது.

      அண்ணா ஹஜாரே, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதமிருந்தபோது காங்கிரஸுக்குக் கிலி பிடித்ததற்கு முக்கியமான காரணம், அப்போது பா.ஜ.க. உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மன்மோகன் சிங்குக்கு எதிரான அண்ணாவின் ‘சத்யாகிரஹ(?!?!) போராட்டத்தைஆதரித்தன என்பதுதான். ஏற்கனவே உட்கட்சிப்பூசல், விலைவாசியேற்றம், கூட்டணிகளின் மிரட்டல், கட்டுப்படாத அமைச்சர்கள் என்று எல்லாப் பக்கமும் இடிவாங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ், அண்ணாவின் போராட்டத்தினால் ஏற்பட்ட எழுச்சி(?!)யைக் கண்டு மிரண்டு, அடிபணிந்தது. (அதன்பிறகு நடந்தேறிய சம்பவங்களின் பின்னணியைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? அண்ணாவுக்கும் தம்பி கேஜ்ரிவாலுக்கும் இடையே ஆயிரம் இருக்கும்; அதெல்லாம் நமக்கு எதற்கு? :-))  )


      இப்போது கேஜ்ரிவால் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் குறிவைத்து, தொடர்ந்து ‘கன்னித்தீவுகதை மாதிரி, பிட் பிட்டாக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இதில் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பலன் என்னவென்றால், மத்தியில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிக்கும் இடையிலிருக்கிற வினோதமான ‘நெருக்கம்வெளிப்பட்டிருக்கிறது. அதைத் தவிர, அர்விந்த் கேஜ்ரிவால் சாதித்தது என்ன?

      2014-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று திக்விஜய்சிங் கூட நம்ப மாட்டார். எமர்ஜென்ஸிக்குப் பிறகு, காங்கிரஸை உ.பியில் ஒரு கட்சியாகவே எவரும் மதிப்பதில்லை என்பது அடுத்தடுத்த தேர்தல்களில் நிரூபணமாகி விட்டது. இடதுசாரிகளும் ஒதுங்கியாகி விட்டது. போதாக்குறைக்கு உலகத்தில் எப்படியெல்லாம் ஊழல் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து, எப்படியெல்லாம் செய்ய முடியாதோ அவற்றையும் செய்து உலக அரங்கில் ஊழல்திலகங்களாகப் பரிமளிக்கிறது காங்கிரஸ். ஆகவே, அடுத்த தேர்தலில் காங்கிரஸை முறியடிப்பதுதான் குறிக்கோள் என்று கேஜ்ரிவால் சொல்வது, ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ஓமகுச்சி நரசிம்மனை விதவிதமாக அடித்துப் போட்டோ பிடித்துக் கொள்வதுபோல நகைச்சுவையாக இருக்கிறது.

      சரி, அப்படியே காங்கிரஸை ஒழிப்பதுதான் லட்சியம் என்று வைத்துக் கொண்டால், பா.ஜ.க மீதும் குற்றம் சாட்டி இந்த மனிதர் என்ன சாதித்து விட்டார்? ‘அடப் போங்கப்பா, எல்லாக் கட்சியும் ஊழல் கட்சிதான்!என்ற ஒரு விரக்தியைத்தான் பொதுமக்களுக்கு அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இதன் நேரிடை விளைவு ரொம்பவும் வேடிக்கையாக இருக்கப்போகிறது; காங்கிரஸ்-பா.ஜ.க இரண்டு கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகளையும் இவர் பிரித்து, மீண்டும் இரண்டு கட்சிகளுக்கும் ‘உபகாரம்செய்யப்போகிறார்.

      இல்லை; கேஜ்ரிவால் உண்மையிலேயே பா.ஜ.கவின் ஊழலையும் எதிர்க்கிறார்,என்றால், டிசம்பரில் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறப்போகிறது; அங்கு போய்ப் பிரச்சாரம் செய்வாரா? தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது; அங்கு போனாரா?

      விஷயம் இதுதான்! அர்விந்த் கேஜ்ரிவால் குறிவைப்பது தில்லிக்கு மட்டும்தான்! தில்லியில் நடக்கப்போகிற தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்றுதான், அங்கு எலெக்ட்ரீஷியன், பிளம்பர் வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தார். இதற்கு முன்னர், தன் சொந்த ஊரில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த புண்ணியவான், பூனேயில் நடந்த இடைத்தேர்தலுக்கு ஏன் போகவில்லை?

      லாவாஸா நில அபகரிப்பு குறித்து ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்டு வருகிறது. ஆனால், ஷரத் பவார் குறித்து கேஜ்ரிவால் வாயே திறக்கவில்லை. ஏன் இந்த ‘செலக்டிவ் அம்னீஷியாஎன்று கேட்டால் பதிலுமில்லை. சல்மான் குர்ஷித் பதவி விலகும்வரை ஓயமாட்டேன் என்றேல்லாம் சவடால் பேசிவிட்டு, ‘அப்புறம் பார்த்துக்கறேன்என்று ஜகா வாங்கியாகி விட்டது. மொத்தத்தில் அண்ணா ஹஜாரேயும் சரி, தம்பி கேஜ்ரிவாலும் சரி, ‘வாய்ச்சொல்லில் வீரரடிஎன்பதற்கு உதாரணமாக இருப்பதைத்தவிர உருப்படியாக எதையும் செய்கிறவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

      இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், ‘இனி ஊழலுடன் சமரசம் செய்துகொண்டுதான் தீர வேண்டும்,என்ற விபரீதமான மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதுதான். காரணம், ஊழல்வாதி அரசியல்வாதிகளைப்போலவே ஊழல் எதிர்ப்புவாதிகளும் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதே காரணம்.

      சினிமாவில் ஹீரோக்கள் பத்து பேரைப் பந்தாடுகிறதைப் பார்த்து விசிலடித்துக் கரவொலி எழுப்புகிற பார்வையாளர்களாய், அர்விந்த் கேஜ்ரிவால் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

*************

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான அலசல் + விளக்கம்...

முடிவில் சொன்னீர்களே... அது உண்மை...

நன்றி...
tm2

சமீரா said...

மத்திய அரசியல் பற்றி ஒரு விரிவான அலசல்.. தமிழக அரசியல் அளவுக்கு எனக்கு மத்தியில் இருபவர்களை சரிவர தெரியாது.. உங்கள் இந்த கட்டுரை மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் சொன்னது போல தொடக்கம் முதலே எனக்கு அன்னா ஹசாரே மீது ஒரு நம்பிக்கை பிடிப்பு வரவில்லை.. இந்திய அரசியலில் தன்னலம் பார்க்காத தலைவர்களை பொருக்கி எடுத்தால் கூட கிடைப்பது வெகு சிலர்!!

இந்திய அடிமைப்பட்ட காலத்தில் கூட இப்படி உலக அரங்கில் அசிங்க பட்டு இருக்காது. இதற்கு முடிவு எனபது எப்போதோ தெரியவில்லை....
இந்தியா முதலிடம் வசிப்பது ஊழல்-லில் தான்!!

கௌதமன் said...

நீங்கள் சொல்லியிருப்பது எல்லாமே நியாயமான வாதங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

விரிவான அலசல்...

T.R.Vejayanantham I.A.S said...

nachu nu oru padhivu sir

வெளங்காதவன்™ said...

வுடு தல...

இதுக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, ராணுவ ஆட்சிய செயல்படுத்துறோம்!

#காங். ஆட்சிக்கும் ராணுவ ஆட்சிக்கும் ஆறு வித்தியாசங்கள் பகிர்க'ன்னு டமாசா கேக்கப்படாது...

G.M Balasubramaniam said...


அன்பு சேட்டை, உங்கள் விரிவான அலசல் நன்று. இத்தனை ஊழல்களுக்கும் புகார்களுக்கு பிறகும் மத்தியில் காங்கிரஸ்தலைமையும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளின் தலைமையும் ஆட்ச்யில் இருக்கிறது, பின்னும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால், இவ்வள்வுக்குப் பிறகும் மக்கள் எதிர்பார்க்கும் நன்மையும் , எதிர்பாராத நல் விளைவுகளும் நடந்திருக்கிறது, நடக்கும் எனும் நம்பிக்கையும்தானே. ஒரு சிறு பட்டியல். நூறு நாள் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு, இவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டு பிடிக்க உதவும் தகவல் அறியும் சட்டம், கட்டாயக் கல்வி திட்டம் ( சில நாட்களுக்குப் பிறகாவது நடை முறைக்கு வரும் )சுகாதார திட்டங்கள்எவ்வளவுதான் குறை கூறினாலும் பலரும் பயன்பெரும் இலவசங்கள்,இன்ன பிற விஷயங்களை மக்கள் அவர்கள் அறியாமலேயே நினைவு கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.?நிறையவே நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இருந்தாலும் நான் ஊழல் குறித்து சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை. ஊழலை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டாதிர்கள் என்றுதான் கூறுகிறேன். மற்றபடி அரசியலில் நுழையத்துடிக்கும் கேஜ்ரிவால் பணமில்லாமல் ஏதாவது செய்கிறாரா செய்ய முடியுமா.? இவரும் அரசியல் குட்டையில் மூழ்கினால் ஊழல் முத்தெடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம். எந்த விஷயத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு. விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆய்ந்தறிய வேண்டும் என்பதே என் கட்சி.

Vetirmagal said...

ஊழல் எல்லா இடத்திலும் பரவி உள்ளது என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? முதல் சுற்று உண்ணாவிரதத்தில் , மக்களை கவர்ந்தவர்கள், இப்போது, தனி மனிதர்களின் , ஊழலை பட்டியிலிடுவதில் என்ன சாதிக்க போகிறார்கள். இன்கம் டாக்ஸ் ஆபீஸரின் குண்ம் இப்பவும் மற்றவர்களை சுட்டி காண்பிப்பதிலேயே நின்று விட்டது. ஒரு பரபரப்பான செய்திகளை உணர்ச்சிகரமாக வெளியிட்டு புகழ் பெற்றது மட்டுமே.

அன்னாவும் , கிரன் பேடியும் , இந்த கேசரிவாலை நம்பி, பொது மக்கள் மத்தியில் அவர்களுக்கிருந்த நல்ல பிம்பத்தையும் ,மதிப்பையும் குறைத்து கொண்டார்கள்.

நிசமான மாற்றம் வேண்டுபவர்களாக இருந்தால், அதே மன நிலை , செயல்பாடு உள்ள , சமூகத்திற்கு, நல்லது செய்யும் உண்மை உழைப்பாளிகளை, நாடெங்கும் , தேடி, ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்ச்சித்திருக்கலாம்.

ஆனால் தில்லியின் மீது கண் வைத்து, செயல் படும் அவசர்ம் உள்ளவர்களை , நாடு முழுவதும் மக்கள் நம்ப முடியாது.

நீங்கள் விளக்கியவை, மிகச்சரியானவை. தெளிவாக எழுதியுள்ள பதிவு.
பாராட்டுக்கள்.

வணக்கம்.

ராஜ நடராஜன் said...

மாற்றுப்பார்வையென்று பதிவை எடுத்துக்கொண்டாலும் கூட ஆமாம் சாமி பின்னூட்டங்கள் ஆச்சரியமளிக்கின்றன.எண்ணம் போல் வாழ்க்கையென்று சொல்வார்கள்.எண்ணங்களை ஓரளவுக்கு வெளிப்படுத்த முடிந்த உங்களால் கூட செக்கு மாட்டு வாழ்க்கையும்,ஊழலை ஒழிக்க முடியாது,அதனோட சென்று வாழ்வோம் என்று நினைக்கும் போது பொது விசயங்களை யோசிக்கவோ அலசவோ வாய்ப்புக்கள் இல்லாத பல கோடி மக்களின் மனநிலை எப்படியிருக்கும்?

இந்திரா காந்தி,ஜெயபிரகாஷ் நாராயணன் காலம் முதல் நரசிம்ம ராவ் காலம் வரையிலான கட்டுப்படுத்தப்பட்ட ஊடக செய்திகளே இருந்தன.ஆனாலும் அப்பொழுதும் கூட இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் பணி அளவிட முடியாதது.

முந்தைய காலத்துக்கும் இப்பொழுதுக்குமான ஒரே வித்தியாசம் கருத்து பரிமாறல்,ஊடக செய்திகளின் வீச்சும் வேகமும்.முன்பு கிடைப்பதை வைத்தே சிந்திக்கும் வாய்ப்புக்கள் மட்டுமே.இப்பொழுது மாற்றுப்பார்வைகளும் இருக்கின்றன.ஏனைய நாடுகளில் பெரும் திட்டங்களின் அடிப்படையில் அரசு,தனியார் துறை சார்ந்து திட்டமிடுபவர்கள்,தீர்மானிப்பவர்கள் என்ற அளவிலேயே அன்பளிப்பு என்ற முறையில் ஊழல் வலம் வருகிறது.இந்தியா போல் அரசுத்துறையின் அடிமட்டம் வரையிலோ வாழ்வின் அனைத்து சுழல்களிலும் ஊழல் பங்கு கொள்வதில்லை.

அன்னா ஹசாரேவுக்கும்,கெஜ்ரிவாலுக்கும் அரசியலில் பங்கு கொள்வதா வேண்டாமா என்ற நிலையில் மட்டுமே கருத்து மாறுபாடுகள்.கெஜ்ரிவாலின் குரல் காங்கிரஸ்,பி.ஜே.பி அல்லாத மூன்றாம் அணிக்கு வாய்ப்பளிக்குமே!ஜனதா ஆட்சி நிலைத்து நிற்காமல் போயிருக்கலாம்.ஆனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசியலைக் கொண்டு வந்தது.கெஜ்ரிவால் குழு ஒருவேளை ஆட்சிக்கு வந்து செயல்படுவதைப் பொறுத்தே கணிக்க முடியும்.அவர்கள் வந்தாலும் ஊழல் செய்வார்கள் என்பது புள்ள பெத்துக்கறதுக்கு முன்னாடியே பழமொழி மாதிரி இருக்குது:)

நமது தலைமுறையில் ஊழல்களிலிருந்து விடுபட முடியவில்லையென்றாலும் கூட அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கைகளையாவது விதைத்து செல்வோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

அய்யா பாலசுப்ரமணியம்!வாங்கும் திறனும்,செலவு செய்யும் வலிமையுமே வலிமையான பொருளாதாரத்துக்கு அடையாளங்கள்.பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல் இலவசங்கள் மரத்திலா காய்க்கிறது:)

settaikkaran said...

@திண்டுக்கல் தனபாலன்
@சமீரா
@kg gouthaman
@வெங்கட் நாகராஜ்
@T.R.Vejayanantham I.A.S
@வெளங்காதவன்™
@G.M Balasubramaniam
@Pattu Raj

அண்ணா ஹஜாரே குறித்த எனது முந்தைய இடுகைக்குப் பிறகு, சற்றுத் தயக்கத்துடன் தான் இந்த இடுகையை எழுதினேன் என்று நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அன்றைய சூழலில் எனது இடுகைக்குக் கிடைத்த எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் ஒப்பிடும்போது இந்த இடுகையை,ஒன்று, வாசித்தவர்கள் ‘ நோ கமெண்ட்ஸ்’ என்று ஒதுங்கியிருக்க வேண்டும்; அல்லது ‘இதற்கெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும்?’ என்று அலட்சியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பலர் இன்னும் வாசிக்காமலே கூட இருக்கலாம். ஆனால், ஊடகங்களாலும் சில கட்சிகளாலும் நாயக அந்தஸ்து வழங்கப்பட்ட ஒருவர் குறித்த விமர்சனத்தை ஆமோதிக்கிற கருத்துக்களைக் கொண்டிருக்கும் உங்களைப் பாராட்டி, மனமாற எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தனியாக பதில் எழுத முடியாமைக்கு நேரமின்மையே காரணம். மன்னிக்கவும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களால் உரமூட்டவும். மிக்க நன்றி!

//@ராஜ நடராஜன் said...

மாற்றுப்பார்வையென்று பதிவை எடுத்துக்கொண்டாலும் கூட ஆமாம் சாமி பின்னூட்டங்கள் ஆச்சரியமளிக்கின்றன.//

பாதிக்கோப்பைத் தத்துவம் தான் நண்பரே! ஊழல் எதிர்ப்பு நிலை என்ற தளத்திலிருந்து கொண்டு, அண்ணாவுக்கும் கேஜ்ரிவாலுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்களை என் போன்றவர்களும் ‘ஆமாம் சாமி’ என்று சொல்லும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? :-)

//எண்ணம் போல் வாழ்க்கையென்று சொல்வார்கள்.எண்ணங்களை ஓரளவுக்கு வெளிப்படுத்த முடிந்த உங்களால் கூட செக்கு மாட்டு வாழ்க்கையும்,ஊழலை ஒழிக்க முடியாது,அதனோட சென்று வாழ்வோம் என்று நினைக்கும் போது பொது விசயங்களை யோசிக்கவோ அலசவோ வாய்ப்புக்கள் இல்லாத பல கோடி மக்களின் மனநிலை எப்படியிருக்கும்?//

அப்படி அவர்கள் நினைக்க முடியாதபடி, இன்றைய சமூக பொருளாதார அவலங்கள் அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, எதிர்காலம் குறித்த கவலையை விடவும், நிகழ்காலத்தின் நிர்ப்பந்தங்களுக்குள்ளேயே சிறைப்படுத்தியிருக்கிறது. அதன் முன்னுதாரணங்களையே குறிப்பிட்டிருக்கிறேன். அதை ஊழல் குறித்த மக்களின் அலட்சியம் என்று சொல்ல முடியாது என்று நான் கருதுகிறேன். அதைக் காட்டிலும் அவர்களை அழுத்திப் பிசைகிற பல பிரச்சினைகள் அவர்களது பலவீனங்கள்.

//கெஜ்ரிவாலின் குரல் காங்கிரஸ்,பி.ஜே.பி அல்லாத மூன்றாம் அணிக்கு வாய்ப்பளிக்குமே!//

மூன்றாவது அணியிலேயே எத்தனை அணிகள் இருக்கின்றது என்று யாராவது சரியாக எண்ணிச்சொன்னால் தேவலாம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும் முதலில்! :-)

//கெஜ்ரிவால் குழு ஒருவேளை ஆட்சிக்கு வந்து செயல்படுவதைப் பொறுத்தே கணிக்க முடியும்.அவர்கள் வந்தாலும் ஊழல் செய்வார்கள் என்பது புள்ள பெத்துக்கறதுக்கு முன்னாடியே பழமொழி மாதிரி இருக்குது:)//

குறைந்தபட்சம், இந்த இடுகையில் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்வார் என்று நான் எழுதவில்லை. காரணம், என்னைப் பொறுத்தவரை அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட எவ்வித முகாந்திரமுமில்லை.

பாராட்டுகிற பின்னூட்டங்களைக் காட்டிலும், மாற்றுக்கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம். உங்கள் வருகைக்கும் மாற்றுக்கருத்தாக இருந்தாலும் அதை முன்வைத்த உங்களது நேர்மைக்கும் எனது நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

{இதற்காக எல்லாரும் மாற்றுக்கருத்து எழுத ஆரம்பித்து விடாதீர்கள்! :-) }