Sunday, October 14, 2012

பெருமூச்சு – ஸ்ரீதேவி.02








இந்தப் பகுதியில் ஸ்ரீதேவியின் இந்தித்திரையுலக வெற்றிகள் குறித்து, எனது கருத்துக்களைப் பதிவிட உத்தேசம்.

      தமிழில் காவிய அந்தஸ்தைப் பெற்ற ‘மூன்றாம் பிறைஇந்தியில் எடுக்கப்பட்டபோது (சத்மா), அதைப் பார்வையாளர்கள் நிராகரித்து விட்டனர். இருந்தாலும், ‘ஏக் தூஜே கே லியேபடத்துக்குப் பின், கமல் அசட்டையாக நடித்த(?) சில உருப்படாத படங்களுக்குப் பிறகு (உதாரணம்: சனம் தேரி கஸம்), ‘சத்மாஅவரை ரமேஷ் சிப்பி போன்ற இயக்குனர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. ஆனால், ஸ்ரீதேவிக்கு அழுத்தமான கதாபாத்திரங்களை அளிக்கிற துணிச்சல் எவருக்கும் வரவில்லை. ஏதோ விருது கிடைத்தாலும், ஒரு வெற்றி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்க வெகுநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

                அப்போதைய காலகட்டம் சற்று வினோதமாக இருந்தது. அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ஜிதேந்திரா, சஷி கபூர் போன்ற மூத்த நடிகர்கள் மட்டுமின்றி, மிதுன் சக்ரபர்த்தி, ரிஷி கபூர், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், குமார் கௌரவ் போன்ற இளம் நடிகர்களும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். மீனாட்சி சேஷாத்ரி, பூனம் தில்லான், பத்மினி கோலாப்பூரி போன்ற பல இளம் நடிகைகளுடன் போட்டிபோட்டு முந்துவதற்கு, ஸ்ரீதேவிக்குக் கைகொடுத்தவை தெலுங்கு மற்றும் தமிழிலிருந்து இந்திக்கு மாறிய படங்கள் தான்.

      இன்னொரு புறம், கே.விஸ்வநாத்-தின் ‘சிரிசிரி முவ்வாஇந்தியில் ரிஷிகபூர் கதாநாயகனாக நடிக்க ‘ஸர்கம்என்ற பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்டு, அதில் அறிமுகமான ஜெயப்ரதா பிரபலமாகியிருந்தார். அதைத் தொடர்ந்து, டி.ராமராவ், கே.பாப்பையா,கே.ராகவேந்திர ராவ், தாசரி நாராயண ராவ் போன்றவர்கள் தங்களது வெற்றிப்படங்களை ஜிதேந்திராவைக் கதாநாயகனாகப் போட்டு, ஜோடியாக ஸ்ரீதேவி அல்லது ஜெயப்ரதாவை நடிக்க வைத்து, பாலிவுட்டை அதிரடித்துக் கொண்டிருந்தனர். ஜிதேந்திரா-ஸ்ரீதேவி நடித்து வெளியான ‘ஹிம்மத்வாலாபடம் அபாரமாக வெற்றிபெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நைனோம் மே சப்னா, சப்னோம் மே ஸஜ்னா, ஸஜ்னா பே தில் ஆகயாஎன்ற பாடல் சூப்பர்ஹிட்டானது.

      ஹிம்மத்வாலாவைத் தொடர்ந்து மாவாலி, தோஃபா, ஜஸ்டிஸ் சௌத்ரி போன்ற பல படங்கள், முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டு, விந்தியமலைக்கு அப்பால் கலக்கத்தொடங்கின.  ஜிதேந்திரா, ஸ்ரீதேவி ஜோடி; பப்பிலஹரி இசை; காதர்கான் வசனம்; சக்திகபூர் காமெடி; ஏதோ ஒரு ராவ் தயாரிக்க, இன்னொரு ராவ் இயக்கம் என்று வெளிவந்து சந்தடியில்லாமல் ஹிட்டான படங்கள் ஏராளம். இந்த தெற்கத்திய படையெடுப்பை முதலில் விமர்சித்த அமிதாப் பின்னாளில் தானும் அந்த ஜோதியில் கலந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார். (ஒரு கைதியின் டைரி, என் தங்கச்சி படிச்சவ, திரிசூலம் இத்யாதி..) அமிதாப்பும் ஸ்ரீதேவியும் முதலில் இணைந்து நடித்த ‘இன்குலாப்படுதோல்வியடைந்தது என்றாலும், அதற்கு ஸ்ரீதேவி காரணமல்ல. ‘ஆங்க்ரீ யங் மேன்வயோதிகத்தை எட்ட ஆரம்பித்திருந்ததாலும், இளைஞர்கள் அந்த ராஜபாட்டையை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்ததாலும் ஒரே மாதிரியான அமிதாப் படங்களை மக்கள் நிராகரிக்கத்தொடங்கினர். ஆனால், ஸ்ரீதேவி வெற்றி மீது வெற்றி கண்டு மென்மேலும் உயர உயரப் பறந்து கொண்டிருந்தார்.

      ரிஷிகபூர்-ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘நகீனா அவருக்கு ஒரு திருப்புமுனைப் படமென்று சொல்லலாம். நாக கன்னிகையாக அவர் நடித்த அந்தப் படம் வசூலில் பல அமிதாப் படங்களின் ரிகார்டுகளையே தகர்த்தது. (பின்னாளில் ‘நிகாஹேன் என்று இதன் தொடர்ச்சியாகவும் ஒரு படம் வெளிவந்தது)

      அப்போதிருந்த இளம் நடிகைகளிடம் இல்லாத ஒரு திறமை ஸ்ரீதேவியிடம் இருந்தது என்றால், அது நகைச்சுவை நடிப்புத்தான்! ‘மிஸ்டர் இந்தியாபடம் ஸ்ரீதேவியின் நகைச்சுவை நடிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். முதல் பாதியில் அனில்கபூரின் வீட்டில் குழந்தைகளின் லூட்டியைச் சகிக்க முடியாமல் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியாகட்டும்; பின்பாதியில் சூதாட்ட விடுதியில் சார்லி சாப்ளின் கெட்-அப்பில் வந்து அவர் செய்கிற அலப்பறையாகட்டும், இந்தித் திரைப்படக் கதாநாயகிகள் எவரிடமும் முன்பு காணப்படாத ஒரு அற்புதமான திறமையாக, புதுமையாக இருந்தது. (ஸ்ரீதேவியைப் பார்த்து ‘கிஷன் கனையாபடத்தில் பின்னாளில், மாதுரி தீட்சித்தும் சார்லி சாப்ளின் கெட்-அப்பில் நடித்தார் என்றாலும், ஊஹும், ஸ்ரீதேவியோடெல்லாம் ஒப்பிடவே முடியாத்.....!)

      மிஸ்டர் இந்தியாபடம் என்றாலே சட்டென்று ஞாபகத்துக்கு வருவது; ஸ்ரீதேவி சிகப்பு நிற ஷிஃபான் புடவையணிந்தவாறு, காற்றில் கூந்தலும் புடவைத்தலைப்பும் அலைபாயத்தோன்றி, ‘காட்டே நஹி கட்தே யே தின் யே ராத்என்று பாடியாடி இளம் நெஞ்சங்களை (அப்போ நான் யூத் தான்!) கொள்ளை கொண்ட அந்தப் பாடல்தான்! யூ-ட்யூபில் இருக்கிறது; அவசியம் பாருங்கள்!

      கரம்சந்த்துப்பறியும் தொடரைத் தயாரித்த பங்கஜ் பராஷர் இயக்கிய ‘சால்பாஜ்ஸ்ரீதேவியின் பன்முகத்திறனுக்கு இன்னொரு சான்று. அந்தப் படத்தில் அவருக்கு இரண்டு வேடங்கள்; சன்னி தியோல், ரஜினிகாந்த் என்று இரண்டு டம்மி ஹீரோக்கள்! எங்க வீட்டுப் பிள்ளைமாதிரி அது ‘எங்க வீட்டுப் பெண்என்று சொல்லலாம். அதில் பீர் குடித்துவிட்டு அவர் அடிக்கிற லூட்டியாகட்டும்; ‘கிஸீ கீ ஹாத் நா ஆயேகி யே லட்கிபாட்டில் அவர் ஆடிய சுறுசுறுப்பாகட்டும்; வில்லன் சக்திகபூரைக் கலாய்ப்பதற்காக ‘பல்ல்ல்ல்ம்மாஎன்று குழந்தைக்குரலில் கொஞ்சுகிற குறும்பாகட்டும்; அடிக்கடி இடம் மாறி, ரஜினிக்குக் கடுப்பேற்றுகிறதாகட்டும்; பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் குரலை மிமிக்ரி செய்து ரோஹிணி ஹத்தங்கடியை மிரட்டுகிற காட்சியாகட்டும்! நோ சான்ஸ்! ‘சீதா அவுர் கீதாஹேமாமாலினியைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நகைச்சுவையின் முக்கிய அம்சமான ‘டைமிங்கில், ஸ்ரீதேவியை மிஞ்சிய நடிகையை நான் கண்டதில்லை.

      ரூப் கீ ரானி சோரோன் கா ராஜாபடத்தில் தமிழ்ப்பெண் வேடத்தில் வந்து அனில்கபூரை ‘யோவ் மச்சான்என்று உறவுகொண்டாடி, நடுத்தெருவில் குந்தவைத்து அவர் ஒப்பாரி வைக்கிற காட்சியில் தமிழ் தெரியாதவர்கள் கூட விழுந்து விழுந்து சிரித்ததை நான் பார்த்திருக்கிறேன்.

      முந்தானை முடிச்சுபடம் இந்தியில் ‘மாஸ்டர்ஜீஎன்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது, அதில் ராஜேஷ் கன்னாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி அபரிமிதமாக கவர்ச்சி காட்டி நடித்தும் படம் எடுபடவில்லை. அதே போல ஃபெரோஸ்கானின் ‘ஜான்பாஜ்படத்தில் ‘ஹர் கிஸீ கோ நஹீ மில்தா யஹா பியார் ஜிந்தகி மேஎன்ற பாட்டில் புடவையில், ஸ்ரீதேவி ஒரு தேவதை போலத் தெரிந்தார். சுபாஷ் கய்யின் ‘கர்மாபடத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக, ஒப்புக்குச் சப்பாணியாக வந்து போனார். இப்படி வெற்றிக்கு நடுநடுவே சறுக்கிய படங்களுக்கும் குறைச்சலில்லை.

      காதல் கதைகளை எடுப்பதில் மன்னரான யாஷ் சோப்ராவின் ‘சாந்தினிஸ்ரீதேவியை இந்தித்திரையுலகின் முடிசூடா ராணியாக்கியது என்றால், அனேகர் ஒப்புக்கொள்வார்கள். அந்தப் படத்தின் வெற்றி, அதே போல கதைகளைப் பின்னாளில், பற்பல வருடங்கள் கழித்தும் எடுப்பதற்கு ஒரு முன்னோடி மாதிரி இருந்தது. (குச் குச் ஹோதா ஹை, தில் தோ பாகல் ஹை வகையறா). இதே நிறுவனத்தின் ‘லம்ஹேபடம் இந்தியின் சிறந்த 50 படங்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறும். வியாபாரரீதியான வெற்றி தவிரவும், ஸ்ரீதேவியை ஒரு சிறந்த நடிகையாக முன்னிறுத்திய படங்கள் அவை.

      முகுல் ஆனந்தின் இயக்கத்தில் அமிதாப்-ஸ்ரீதேவி இணைந்து நடித்த ‘குதா கவாதிரைப்படம், தோல்விப்படம் என்றாலும் கூட, ஸ்ரீதேவியின் விசிறிகளால் மறக்க முடியாத படம். ஆப்கானிய பெண்ணாகவும், இந்தியாவில் வளர்ந்த மகளாகவும் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்தார் ஸ்ரீதேவி. குறிப்பாக, அமிதாப்பின் ஜோடியாக, உருதுவை திருத்தமாகப் பேசி, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘தும் முஜே கபூல் மே துஜே கபூல்’ ‘ ந ஜானா மேரா பாதுஷாபோன்ற பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மற்றும் ஸ்ரீதேவியின் தோற்றம் காரணமாக இன்றும் சிலாகித்துப் பேசப்படுகின்றன.

      திருமணத்துக்கு முன்னர் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது ஜுதாயி. ‘இரட்டை ரோஜாதமிழ்ப்படத்தில் ஊர்வசி ஏற்றிருந்த கதாபாத்திரத்தை இந்தியில் ஸ்ரீதேவி செய்திருந்தார். அதன் பிறகு, சுரத்தில்லாமல் ஓரிரு படங்களைச் செய்து, மாதுரியின் பேரலையில் சிக்குண்டு சற்றே தடுமாறினாலும், ஏறத்தாழ பத்து வருடங்கள் இந்தித் திரையுலகை ஆட்சி செய்தவர் ஸ்ரீதேவி என்பதே என் போன்ற விசிறிகள் மட்டுமல்ல, விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

      இன்னும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மாதுரியின் பேரலையில் சிக்குண்டு சற்றே தடுமாறினாலும்,//

அது அலை இல்லைய்யா "புயல்"ன்னுதான் சொல்லணும்...!

MANO நாஞ்சில் மனோ said...

ஏறத்தாழ பத்து வருடங்கள் இந்தித் திரையுலகை ஆட்சி செய்தவர் ஸ்ரீதேவி என்பதே என் போன்ற விசிறிகள் மட்டுமல்ல, விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஸ்ரீதேவி அபார திறமை வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

Anonymous said...

போன பதிவுல ரொம்பவே சிலாகிச்சு அனுபவிச்சு சூப்பர்ரா ஸ்ரீதேவியுடனான உங்கள் அனுபவகளை!! எழுதி இருந்தீங்க ஐயா.. இந்த பதிவு ஜஸ்ட் பாஸ்!!

Anonymous said...

ஆனாலும் ஸ்ரீதேவியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தெரியாத எங்கள மாதிரி பசங்களுக்கு நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...

பால கணேஷ் said...

இந்தித் திரையுலகில் அவர் பங்களிப்பு பற்றி சரியாகத் தெரியாத என் போன்ற விசிறிகளுக்கு அருமையான தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.

kaialavuman said...

ஸ்ரீதேவி-மாதுரி இருவரில் ஸ்ரீ கொஞ்சம் சீனியர் மாதுரிக்கும் முன்னாள் வந்தவர். அதனால் அவர் வெளியேற்றம் மாதுரிக்கு முன்னரே நிகழ்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. [காரணம், மாதுரியும் திறைமையானவர் தான் என்பது தான்]
இருவருடைய career graph-ம் சற்றேரக் குறைய ஒரே மாதிரிதான்.ஒரு ஹிட் இரண்டு ப்ளாப் மீண்டும் ஹிட் என்று.

//காட்டே நஹி கட்தே யே தின் யே ராத்’//
90-களில் இந்த நடன பாணியை அநேகமாக அனைத்து நடிகைகளும் (ரவீனா போன்றவர்கள்) காப்பியடித்தனர் என்பது நினைவுக்கு வருகிறது.

இந்திரா said...

//இன்னும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.//

நானும் தான்..

ஸ்ரீராம். said...

ஹேமா ஒரு ரகம், ஸ்ரீதேவி ஒரு ரகம், மாதுரி ஒரு ரகம் என்று சொல்லலாம் ஒருவரை மிஞ்சி ஒருவர் என்று சொல்ல முடியாது! :))

//(அப்போ நான் யூத் தான்!) //

ஏன், இப்போதும்தான்!

Unknown said...



நான் பெரும் பாலும் சினிமா பார்பதில்லை என்றாலும் தற்போது வந்துள்ள ஸ்ரீதேவி நடித்தப படத்தை
பார்க்க முயல்வேன்!

வல்லிசிம்ஹன் said...

எனக்கு மீண்டும் கோகிலா ஸ்ரீதேவியைத்தான் நிறையவே பிடிக்கும்:)

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை...

அருணா செல்வம் said...

அழகுடன் சேர்ந்த திறமையுள்ளவர்கள்...
வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றி ஐயா.

சமீரா said...

உங்களுக்கு நியாபக சக்தி அதிகம் சார்.. பார்த்த படம் அனைத்தையும் ரசித்ததையும் ஒன்று விடாமல் எழுத இல்லை முக்கியமான அனைத்தையும் எழுத திறமை வேண்டும் அது உங்களிடம் கொட்டி கிடக்கிறது...
ஸ்ரீதேவி பற்றி அதிக தகவல் தெரிந்து கொண்டேன்...