Friday, October 12, 2012

அர்த்தங்கள் ஆயிரம்











      ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு.......!  திருவள்ளூருக்கருகே,  ஒரு குக்கிராமத்தருகே இருந்த ஒரு சிறிய தொழிற்சாலையில், ஊழியர்கள் ஓய்வெடுக்கிற தகரக்கொட்டகையின் வாசல்பக்கத்தில் நான் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்க......

      ஏகரா மே குசல்பாதே நோட்டு பாக்கே காடி
      ஏஹிஸே புலாயல் பாதே ஏக்கருஹை பாடி!

       உள்ளே டேப் ரிகார்டர் முழங்கிக்கொண்டிருந்தது!

      கோவிந்த் யாதவ் பாட்டைக்கேட்டு ரசித்தபடி, அவ்வப்போது சிரித்தபடி, சிரிக்காதபோது பாட்டோடு சேர்ந்துபாடியபடி உற்சாகமாக சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருக்க, அவனருகில் அமர்ந்தவாறு வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்தவாறும், காலிஃபிளவரை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தவாறும், வெங்காயத்தை வியக்கத்தக்க வேகத்தில் பொடிப்பொடியாக நறுக்கியவாறுமிருந்த அவனது நண்பர்களும் உடன்சேர்ந்து சிரித்தனர்; பாடினர். சில வரிகள் வந்தபோது ‘ஓவென்று உற்சாகமாகக் கூவிச்சிரிக்க, இருப்பதிலேயே சிறுவனாக இருந்தவன் கூச்சத்தில் முகம் சிவந்து தலைகவிழ்ந்து, உதட்டைக் கடித்தவாறு சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தான். ஏதோ இரட்டை அர்த்தம் வருகிற வரிகள் என்றளவுக்குப் புரிந்ததேயன்றி, அவர்களோடு சேர்ந்து சிரிக்கவும் முடியாமல், ‘எதுக்குச் சிரிக்கிறீங்க?என்று கேட்கவும் மனம்வராமல் நான் அசட்டுச்சிரிப்போடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

      அதுபோன்ற போஜ்பூரிப்பாடல்களையும், கோவிந்த் யாதவ் மற்றும் அவனது நண்பர்களைப் போன்று பீகார் அல்லது ஜார்க்கண்டிலிருந்து வந்தவர்களையும், அவ்வப்போது அவர்கள் எங்கேனும் ஒரு தகரக்கொட்டகையில் அடுப்புமூட்டி, படுசிரத்தையாகச் சமைத்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாக வருகிற வாசனையையும், சென்னையில் பலர் கேட்டும், பார்த்தும், முகர்ந்தும் அறிந்து கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால், விரைவில் அறிவீர்கள் அவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

      போஜ்பூரிப்பாடல்கள் எனக்குப் புரிவதில்லை. இந்தி சினிமாக்களில் திலீப்குமார் தொடங்கி, அக்‌ஷய்குமார் வரையிலும் ஏதேனும் ஒரு படத்திலாவது ஒரு போஜ்பூரிப்பாடலுக்கு வாயசைத்திருப்பார்கள்; அமிதாப் பச்சன் ‘அதாலத்,‘காலியா,யாரானா,டான்போன்ற படங்களில் போஜ்பூரி பேசியது முழுமையாகப் புரியாதபோதிலும், அரங்கம் அதிர்வதிலிருந்தும், குலுங்குவதிலிருந்தும் அது நல்ல வசனம் அல்லது நகைச்சுவை வசனம் என்று புரிந்துகொண்டு, அதற்கு மேல் மெனக்கெடாமல் புறக்கணித்ததுமுண்டு.

      எனது மும்பை நண்பன் ஒருவன் எப்போதோ சொன்னதன் பேரில், மிதிலா என்று அழைக்கப்படுகிற போஜ்பூரி நாட்டுப்புறப்பாடல்களின் குறுந்தகட்டை ஒருமுறை வாங்கி, ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்ததுண்டு. காலப்போக்கில் காதல், தாய்ப்பாசம், ஊடல், பிரிவு, துயரம் ஆகியவை குறித்து அடித்தட்டு மக்களின் வெளிப்பாடுகளாய் இருந்த போஜ்பூரிப்பாடல்கள், சினிமாவின் தாக்கத்தால் ஆபாசத்துடனும், கொச்சைத்தனத்துடனும் சமரசங்கள் செய்து கொண்டன என்று கேள்விப்படுகிறேன். கோவிந்த் யாதவும் அவனது சினேகிதர்களும் அப்படியொரு பாடலைத்தான் லயித்து ரசித்துக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

      இவ்வளவு சிரிக்கிற அளவுக்கு என்ன இருக்கு இந்தப்பாட்டுலே?சற்று நேரம் கழித்து, அடுத்த பாடலின்போதும் அவர்கள் சிரிக்கவே, கொஞ்சம் எரிச்சலுடனேயே அவர்களிடம் கேட்டபோது கோவிந்த் தவிர மற்றவர்கள் அனைவரும் மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு எனது கோபம் தெரியாது என்பதால், கோவிந்த் அவர்களை அடக்கி விட்டு, விளக்கினான்.

      சாப்ஜீ, ஊ அய்ஸன் ஹை...என்று அவன் விளக்க விளக்க, கேட்டுக்கொண்டிருந்த எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்ததேயன்றி, கொஞ்சம்கூட அருவருப்பு ஏற்படவில்லை. வார்த்தைகளுக்குள் அடக்கப்படமுடியாத பல அருவருப்புகள் எங்கு நோக்கினும் காணவும், உணரவும் கிடைக்கிறபோது, புரியாத மொழியில் இருந்த விரசம் என்ன அசூயையை ஏற்படுத்திவிட முடியும்?

      அந்தப் பாட்டில் பெண்ணை ஒரு ஏ.டி.எம்.இயந்திரத்துடன் ஒப்பிட்டு வருணித்திருந்தார்கள் என்ற சுருக்கமான விவரணையைக்கூட யாரேனும் விரசமென்று சொல்லும் அபாயமிருப்பதை நான் உணராமலில்லை. ஆயினும், இது குறைந்தபட்சத் தேவையாகிறது.     
     
      இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் பல வருடங்கள் வசித்தவன் என்பதால், பீகாரிகள் பலருடன் பழகியிருக்கிறேன். போஜ்பூரி குறித்து அவர்களுடன் அளவளாவி பல தகவல்களை அறிந்திருக்கிறேன். போஜ்பூரிகளின் வரலாறு புராணகாலத்தோடு உரசுகிறது. ராமாயணத்தின் சீதையின் தந்தை ஜனகர் ஆண்ட மிதிலைவாசிகளின் வம்சாவளிகள் என்று கருதப்படுகிறார்கள். போஜ்பூரி மொழி இந்தியாவின் பீகார், உத்திரப்பிரதேசம் தவிர நேபாலிலும் பரவலாகப் பேசப்படுகிறது. அவர்களின் கிராமீயப்பாடல்களை ‘மிதிலாஎன்றே அழைக்கிறார்கள். ஆக, சீதை பிறந்த நாட்டின் வம்சாவளிகள், ஒரு பெண்ணை இப்படி வருணித்து ஆபாசமாகப் பாடல்கள் எழுதி அவை சூடாக விற்பனையாவதே ஒரு நகைமுரணாகத் தோன்றியதால் சற்று அதிர்ச்சி! அடுத்து, நம் தமிழ் சினிமாப்பாடல்களைப் போலவே சர்வசாதாரணமாக இப்போதைய போஜ்பூரிப் பாடல்களில் ஓசைநயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிற ஆங்கில வார்த்தைகளைக் கேட்டு சற்று ஆச்சரியம்! அவ்வளவே, வாசிக்கிறவர்கள் முன்பு பாசாங்கு செய்வதற்காக, அந்தப் பாடல்கள் ‘ச்சீய், ஆபாசம்,என்றெல்லாம் பொய் சொல்ல நான் தயாரில்லை.

      மராட்டியின் ‘லாவணிப் பாடல்களிலும், தமிழில் சில கானாப் பாடல்களிலும் கூட கொஞ்சம் விரசம் தொனிப்பதை கவனிக்க முடிந்திருந்தது. இவை எல்லாவற்றையும் விட, பகுதிநேரப் பணியாக கணக்கெழுத நான் போன முதல் நாளில் எனக்கு கோவிந்த் யாதவுடன் ஏற்பட்ட பரிச்சயம் காரணமாக, அவன்மீது ஒரு இனம்புரியாத அனுதாபம் ஏற்பட்டிருந்தது என்பதால், அவனது ரசனை எனக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

      ஒரு பால்பாக்கெட்டின் நுனியை பிளேடால் கீறி, காய்ச்சாத பாலை அப்படியே பருகிய கோவிந்தை முதன்முதலாகப் பார்த்தபோது, அவனுக்குள் ஒரு சின்ன, ஆனால் சுவாரசியமான காதல் கதையிருக்குமென்று எனக்குத் தெரியாது. அதிகபட்சம் பத்தொன்பது வயதிருக்கலாம்; நல்ல நிறம் சிரிக்கும்போது முகம் குங்குமச்சிவப்பாவதையும், வலது கன்னத்தில் குட்டியாக ஒரு குழி விழுவதையும் கவனித்தேன். புகையிலை, மது போன்று எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பதையும் பின்னாளில் அறிந்தேன். அவனது நண்பர்களுக்கு அவன் ஒரு தலைவன் மாதிரி! அந்த ஆறு ஏழு பேர்களுக்கும் ஏதாவது ஒரு சோகப்பின்னணி இருந்தது என்றாலும், கோவிந்தின் கதை கொஞ்சம் வித்தியாசமான, அசந்தால் தமிழில் ஒரு பட்ஜெட் படத்துக்கு ஏற்ற காதல் கதைபோலத் தோன்றியது.

      கோவிந்துக்கு அவனது கிராமத்தில் பதினாறு வயதில் ஒரு முறைப்பெண்; ஏழை! கோவிந்த் சற்றே வசதியானவன் என்று சொல்லலாம். இரண்டு குடும்பங்களுக்குமிடையே நிலுவையிலிருந்த சில உரசல்கள் காரணமாக, கோவிந்த் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை! அந்தப் பெண்ணின் அப்பாவோ, ஊர் முக்யா( பண்ணையார்)விடம் வாங்கியிருந்த கடனை அடைத்து, நிலத்தை மீட்டால், கோவிந்துக்கு மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். பையன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ரயில்பிடித்து சென்னைவந்து அங்கங்கே சுற்றி திருவள்ளூரிலிருந்த சில தொழிற்சாலைகளில் ஒன்றில் வேலை பிடித்தான். மாதாமாதம் காதலியின் அப்பாவுக்குப் பணம் அனுப்புகிறான். அவ்வப்போது அவளுடன் குழைந்து குழைந்து செல்போனில் (ஐபோன்!) பேசுகிறான்.

      சாப்ஜீ, ரோட்டி காயேங்கே?என்று கேட்டவாறு, ஒரு சுக்காச் சப்பாத்தியும், நீளநீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கில் குறுக்குவாட்டில் வெட்டப்பட்ட பச்சைமிளகாய் சேர்த்துச் செய்த ‘சப்ஜியும், எலுமிச்சைச்சாறு பிழிந்த பச்சை வெங்காயமுமாய் ஒரு அலுமினியத்தட்டில் கொடுத்தபோது, யோசிக்காமல் வாங்கிச் சாப்பிட்ட நாள்முதல் அவனும் நானும் சினேகமாகி விட்டோம்.

      அதன்பிறகு, வேலை முடிந்து கம்பெனி வேன் வரும்வரையில், அந்தத் தகரக்கொட்டகையில் காத்திருப்பது வாடிக்கையானது. அப்போதுதான், போஜ்பூரியுடனும், போஜ்பூரிப்பாடல்களுடனுமான எனது தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

      ஏ.டி.எம்.இயந்திரம், கோடவுன், டைம்பாம், ஜெனரேட்டர், கம்ப்யூட்டர், ப்ளூடூத், மொபைல் போன் என்று பற்பல பொருட்களுடன் பெண்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட பற்பல பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, கோவிந்த் யாதவும் அவனது நண்பர்களும் உற்சாகமாய் சிரித்தவாறே அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான பாடல்கள் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் என்றாலும், ‘தர்மாமீட்டர்என்ற பாடல் முழுக்க முழுக்க ஒரு பெண்ணே பாடியது. பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று ஓம் சாந்தி ஓம்ரிங்டோன் ஒலித்ததும், கோவிந்த் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு தூரமாக ஓடிப்போய், சுவரோடு சாய்ந்து நின்று பேசுவான், இல்லை இல்ல, சிரித்துக்கொண்டே பேசுவான்! பத்து நிமிடத்திலிருந்து அரை மணி வரையிலும் கூட அவன் அப்படிப்பேசுவதைக் கவனித்திருக்கிறேன். பேசி முடித்துத் திரும்பியதும், நண்பர்கள் போஜ்பூரியில் எதையோ சொல்லிக் கிண்டல் செய்வதும், இவன் வெட்கப்பட்டு முகம் சிவப்பதும் எனக்கு ஒரு அலாதியான வேடிக்கையாகவே இருந்தது.

      என்ன சொல்றா உன் கேர்ள் ஃபிரண்ட்?என்று கேட்டால்,பக்லீ ஷரமாத்தீ ஹை! (கிறுக்கி வெட்கப்படுறா!)என்று சொல்லிவிட்டு இவன் மீண்டும் வெட்கப்படுவான்.

      ஹோலிப் பண்டிகைக்கு அழைத்திருந்தான். நான் போயிருக்கவில்லை. ஏனோ அந்தப் பண்டிகை எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை. அதன்பிறகு, அங்கிருந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை பெரியமேட்டுக்கு மாற்றினார்கள் என்பதால், திருவள்ளூர் போவது குறைந்தது. கடைசியாகப் போனது ஆகஸ்ட் பதினாறாம் தேதி! கோவிந்த் மட்டுமே தனித்திருந்தான். இப்போது, டேப் ரிகார்டரில் கயிறுகட்டி ஊஞ்சல் போலத் தொங்க விட்டிருக்க, அது வழக்கம்போல போஜ்பூரிப்பாடலை முழங்கிக் கொண்டிருந்தது. இது தர்மாமீட்டரா, ஜெனரேட்டரா, ஏ.டி.எம்மா என்று நான் கொஞ்சம் யோசித்தது உண்மை!

      உன் சினேகிதர்கள் எல்லாரும் எங்கே?

      ஊருக்குப் போயிருக்கிறார்கள்!

      நீ போகவில்லையா?

      எதுக்கு? கோவிந்த் சிரித்தான். “என்ன இருக்கிறது அங்கே?

      ஏன்?

      அவளை அந்த முக்யா(பண்ணையார்) திருமணம் செய்து கொண்டுவிட்டார்!

       நான் அதிர்ந்து போய் அவனையே பார்த்திருக்க, அவன் தலை நிமிராமல், அவனது வேலையைச் செய்து கொண்டிருந்தான். திடீரென்று அந்தத் தொழிற்சாலையே நிசப்தமாகி விட்டதுபோலத் தோன்ற, அந்த அமைதியில் ஒற்றைச்சத்தமாய்க் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாட்டு, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிகவும் ஆபாசமாய் இருப்பதுபோலப் பட்டது எனக்கு.

****************

14 comments:

Unknown said...

கதைதானே?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் நகைச்சுவை பதிவுகளை படித்திருக்கிறேன். ஆனால் இது போன்ற பதிவை இப்போதுதான் படிக்கிறேன். ஒரு அழகான சிறுகதைக்குரிய அத்தனை அம்சங்களும் உள்ளன.

ஸ்ரீராம். said...

சேட்டையிடமிருந்து வித்தியாசமான ஆழமான மனதைத் தொடும் பதிவு. நீங்கள் சொல்லும் மக்களை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஏழைப் பெற்றோர் கதைகளும் கேட்டிருக்கிறேன். ஊர் செல்ல விரும்பாத அவனின் சோகம் மனதில் தங்கியது.

துளசி கோபால் said...

மனதை ஊடுருவிப்போன சம்பவம்:(

அருமையான நடை!

ஃபிஜி இந்தியர்கள் பேசும் ஹிந்தி பெரும்பாலும் போஜ்புரி கலந்ததுதான்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

போஜ்புரி பாடல்கள் ஊடே நீங்கள் சொன்ன கோவிந்த் கதை மனதைத் தொட்டது.

இந்த ஊர் மக்களிடம் தினமும் பழகிக் கொண்டிருக்கும் எனக்கு இவர்கள் படும் அவஸ்தைகள் புரிகிறது....

கும்மாச்சி said...

சேட்டை அருமையான நடை, உங்களது எழுத்தின் ரசிகன் நான்.

கலாகுமரன் said...

கற்பனை கதை முடிவு பல சமயங்களில் ஜீரணிக்க இயலாமல் போய்விடும். தங்கள் எழுத்து நடை மிக அருமை. கடின உழைப்பாளிகள் நாடோடியான அவர்கள் வாழ்விலும் இது போன்ற உருக்கம் மிகுந்த வாழ்வு ஒளிந்திருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றிய பாடல் வரிகள் பகிர்வுகளுக்குப் பின் நல்லதொரு கதை... அருமை...

மாதேவி said...

அனுபவம் என்று போட்டுள்ளீர்கள். கதை முடிவு அட... பாவமே.

மனத்தை நெருடுகிறது.

ராஜி said...

Amirtha Raja said...

கதைதானே?
>>
அப்படித்தான் நினைக்குறேன்.

Unknown said...


மனதை வருத்திய பதிவு!

சமீரா said...

கோவிந்த் நினைச்ச ரொம்ப கஷ்டமா இருக்கு .... என்ன சார் திடீர்ன்னு இப்படி ஒரு சோக காதல் கதைய(!) சொல்லிடீங்க... வட மாநிலங்கள் நம்மை விட பின் தங்கியே இருக்கு எல்லா விதத்திலும் .....

வல்லிசிம்ஹன் said...

இன்னுமா இந்தப் பண்ணையார்கள் சாம்ராஜ்யம் நடக்கிறது. நான் சினிமாவோடு அவை ஓவர் என்று நினைத்திருந்தேன்:(
பாவம் கோவிந்த்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான வாசிப்பனுவத்தை தந்ததற்கு நன்றி சேட்டை. சோகமான முடிவுதான். ஆனால் அதுதான் யதார்த்தமாக தோன்றுகிறது.