Monday, March 28, 2011

தண்டநாளங்கள்

சென்னையும், இந்த மின்சார இரயில் பயணங்களும் எனது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிப்போய் விட்டன. பல விடுமுறைகளில் ஏதோ ஒரு தினசரிக்கடமையிலிருந்து தப்பித்து வந்த குற்ற உணர்ச்சி போல உணர்ந்ததுண்டு. இந்த சகபயணிகளோடு ஒரு இனம்புரியாத பரிச்சயம் ஏற்பட்டு விட்டதுபோலத் தோன்றுவதுண்டு. பலருக்கும் எனக்கும் இடைப்பட்ட உறவு ஒருசில புன்னகைகள் மட்டுமே என்றாலும், பார்த்தால் அவர்களுக்காய் இடம்பிடித்து அமரச்சொல்கிற ஒரு அலாதியான நட்பு நாளடைவில் உருவாகி விட்டது.

இந்தப் பயணத்தின் ஆரம்பக்கட்டங்களில் ஏற்பட்ட பிரமிப்புகளும், எரிச்சல்களும் முற்றிலும் அடங்கிவிட்டன. எதுவாயிருப்பினும் சற்றே தலைதூக்கிப் பார்த்துவிட்டு, அதற்கு மேல் கவனம் செலுத்த விரும்பாமல் அவரவர் கையில் இருப்பதை வாசிக்கவோ, அலைபேசியில் பண்பலை கேட்பதோ, எதுவுமேயில்லாமல் போனாலும் ’நான் இதில் சம்பந்தப்பட விரும்பவில்லை,’ என அழிச்சாட்டியமாய் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதோ, தொடர்ந்து இரயில் பயணத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு ஏற்பட்டு விடுகிற தவிர்க்க முடியாத குணாதிசய மாற்றம்!

இந்தப் பயணத்தில் தினசரி வந்துபோகிற பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம் ஒரு குரூரமான சுவாரசியத்தைச் சேர்க்கிறார்கள். அனுதாபத்துக்குப் பதிலாக, அவர்களது பாணியை அன்றாடம் கவனித்து வருவதால், அவர்களது யுக்தி சிரிப்பை வரவழைக்கிறது. எப்போதாவது தன்னிச்சையாக கை சட்டைப்பையிலிருந்து ஒரு நாணயத்தை அகழ்ந்தெடுத்து அவர்களது டப்பாக்களில் சத்தமாகப் போடுகிறது. சற்றே நெரிசல் அதிகமாகி, நின்று பயணிக்கிற சூழலில் அவர்கள் மீது புதிதாய் ஒரு எரிச்சல் ஏற்படுகிறது.

ஆனால், இத்தனை எரிச்சல்கள், அருவருப்புகள், அவமானங்கள் எல்லாவற்றையும் கடந்து அவ்வப்போது இரயிலில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதானிருக்கின்றது.

சில நாட்களாக தாம்பரம்-கடற்கரை தடத்தில் புதிதாக ஒரு பிச்சைக்காரர் வந்து கொண்டிருக்கிறார். கையில் மரத்தாலான, தட்டையான, தந்திகள் கொண்ட ஒரு வினோதமான இசைக்கருவியுடன்! ஒருவர் ’சந்தூர்’ என்றார்; மற்றொருவர் ’சரோத்’ என்றார். எனக்குப் பெயர் பிடிபடவில்லையென்றாலும் அவர் வாசித்த ’ரகுபதி ராகவ ராஜாராம்,’ பிடித்திருந்தது.

தினசரியும் இரயிலில் போயே தீரவேண்டிய கட்டாயம் இருப்பவர்களுக்கு, நாளடைவில் பிச்சைக்காரர்கள் மீதான சலிப்பு மறைந்து போய் விடுகிறது. வினோதமாக, சில சமயங்களில் ஏதேனும் ஒருசில பிச்சைக்காரர்களுக்காக, சட்டைப்பையில் கொஞ்சம் சில்லறை வைத்துக்கொள்ளுகிற பழக்கமும் ஏற்பட்டு விடுகிறது.

ஓரிரு மாதங்களாக புல்லாங்குழல் இசைத்தவாறு வருகிற பார்வையற்ற பிச்சைக்காரருக்கு, நான் அவ்வப்போது சில்லறை போடுவதுண்டு. முதல்முதலாக கோடம்பாக்கம் நிலையத்தில் அவரது குழலிசையைக் கேட்டேன். ’ராஜாதிராஜா’ படத்தின் ’மீனம்மா..மீனம்மா..கண்கள் மீனம்மா,’ பாட்டை அசத்தலாக வாசித்தபடி பெட்டிக்குள் நுழைந்தார். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடைப்பட்ட சங்கதியைக் கூட அதன் நெளிவுசுளிவுகளுடன் அவர் புல்லாங்குழலிலேயே இசைத்தபோது சற்றுக் கிறங்கித்தான் போனேன்.

பொதுவாக, ஒரு ஆர்மோனியத்துடன் வந்து, பெரும்பாலும் இரண்டுகட்டைகளுக்கு மேல் பயன்படுத்தாமல் பாடிக்கொண்டு பிச்சையெடுக்கிற பிச்சைக்காரர்கள் நாளடைவில் அலுப்புத்தருகிறார்கள். சில சமயங்களில் அவர்களது அபசுரங்கள் அவர்கள் மீது நமக்கு இயல்பாக வர வேண்டிய பச்சாதாபத்தைச் சற்றே குறைத்து விடுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல..?

பிறரின் அனுதாபத்தைப் பெற்று சில்லறை தேற்றுகிற இவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று சொல்ல மனம் தயங்குகிறது. ஆனால்...

தினசரி கடலை பர்பி வியாபாரம் செய்ய வரும் அந்த மூன்று பார்வையற்றவர்கள். இருவர் ஆண்கள்; ஒருவர் பெண்! கடற்கரையிலிருந்து எழும்பூர் வரைதான் அவர்களது வியாபாரம்; பயணம்! அதிலும் பூங்கா ரயில் நிலையம் வரைக்கும்தான் விற்பனை. பிறகு, இருக்கையிருந்தால் அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்குள் எதையோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அவர்களது சிரிப்பைப் பார்க்கும்போது யாரோ தொண்டைக்குள் கையை விட்டு இதயத்தைப் பிழிவதுபோல ஒரு மெல்லிய வலியை ஏற்படுத்தும். எழும்பூர் வந்ததும் இறங்கிச்சென்று விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருப்பேன்.

சென்னை என்ற நகரத்தை சிலர் விதண்டாவாதமாக கழித்துக்கட்ட எண்ணுகிறார்களோ என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது. சொல்லப்போனால், சென்னையின் இரத்த ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களில், மாங்குமாங்கென்று உழைக்கிற வர்க்கத்தையும், இரத்தத்தை உறிஞ்சுகிற வர்க்கத்தையும் அடுத்தடுத்த இருக்கைகளில் காண முடிகிறது.

சாமானிய மனிதன் முதல், பிச்சைக்காரன் வரை பெரும்பாலானோர் இந்த நகரத்தில் எப்படியோ கவனத்தை ஈர்த்து, எதையோ செய்து, வயிற்றைக் கழுவிக்கொண்டிருப்பதை ஓரிரு இரயில் பயணங்களிலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயம், எவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல், கூட்டத்தினுள் தனித்திருந்து மவுனம் காத்து, எவருடனும் அல்லது எதனுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பாமல், மிதந்து கொண்டிருக்கிற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!

47 comments:

RVS said...

அற்புதம்ங்க.. நானும் கொஞ்ச நாள் மின்சாரத்ல போயிருக்கேன்.. எக்மோர் வரை.. மறக்க முடியாத நினைவுகள்.. டைட்டில் குடுத்தீங்க பாருங்க.. அது அபாரம்.. ;-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மின்சார ரயிலில் தங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் கிடைத்தது.

தங்களின் அனுபவத்தை தங்கள் பாணியிலேயே விவரித்தது அருமை.

கடைசி வரிகள் நல்லதொரு நகைச்சுவை யான எதார்த்தமான உண்மை தான்.

வாழ்த்துக்கள்.

Chitra said...

ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!


.....சில மாதங்களுக்கு முன், மெட்ரோ ரயிலில், இரண்டு குழந்தைகளுடன் சிரிப்பும் பாட்டுமாய் பயணித்துக் கொண்டு இருந்த ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை, ஒரு கல்லூரி மாணவ கூட்டத்தினர் "திருடி" சென்றதை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்களே..... அதுவும் நினைவுக்கு வந்தது.

எல் கே said...

சேட்டை இது உங்களோட சிறந்த படைப்புகளில் ஒன்று. வாழ்த்துக்கள்

மேவி... said...

நானும் தினமும் பெருகளத்தூர் ல இருந்து பார்க் வரைக்கும் மின்சார ரயிலில் தான் சென்று வருவேன் .... அப்படியே நான் உணர்ந்த விஷயங்களை எழுதி இருக்கீங்க ...

அகல்விளக்கு said...

simply superb thala......

keep going....

பிரபாகர் said...

ஆம் நண்பரே... நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நம்மைச்சுற்றி ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. ரயில் சம்மந்தமான விஷயங்களைப் பற்றி எழுத என் சேட்டைக்கு நிகர் சேட்டைதான்!...

பிரபாகர்...

நிரூபன் said...

வணக்கம் சகோ, இயற்கையை ரசிக்கிறீங்க சகோ! நகைச்சுவைப் பதிவுகளைத் தாண்டி, உங்களின் வழமையான உரையாடல் பதிவுகளையும் தாண்டி ஒரு உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்..

நிரூபன் said...

ஓரிரு மாதங்களாக புல்லாங்குழல் இசைத்தவாறு வருகிற பார்வையற்ற பிச்சைக்காரருக்கு, நான் அவ்வப்போது சில்லறை போடுவதுண்டு. முதல்முதலாக கோடம்பாக்கம் நிலையத்தில் அவரது குழலிசையைக் கேட்டேன். ’ராஜாதிராஜா’ படத்தின் ’மீனம்மா..மீனம்மா..கண்கள் மீனம்மா,’ பாட்டை அசத்தலாக வாசித்தபடி பெட்டிக்குள் நுழைந்தார். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடைப்பட்ட சங்கதியைக் கூட அதன் நெளிவுசுளிவுகளுடன் அவர் புல்லாங்குழலிலேயே இசைத்தபோது சற்றுக் கிறங்கித்தான் போனேன்.//

பிச்சையெடுக்கும் போது இசையினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தும் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

கும்மாச்சி said...

“ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!”

அருமையான பதிவு. எனது கல்லூரி காலங்களையும், உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நாட்களையும் அசை போட வைக்கிறது.

நிரூபன் said...

சில சமயங்களில் அவர்களது அபசுரங்கள் அவர்கள் மீது நமக்கு இயல்பாக வர வேண்டிய பச்சாதாபத்தைச் சற்றே குறைத்து விடுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல..?//

இது மனிதனின் இயல்பு தானே. நாங்கள் மட்டும் நல்லவர்களாக நடித்துக் கொண்டு, மற்றவர்களை இழக்காரமாக, ஏளனத்துடன் பார்ப்பது, மூக்கைச் சுழிப்பது. இப்படி பிச்சைக்காரர்களுடன் பழகும் பலரை எங்களூரிலும் பார்க்கிறேன். நான் உட்பட எல்லோரும் அவர்களின் உடை, உடல் மணம் முதலியவற்றால் ஒரு மாதிரியான உணர்வுடன் தான் நோக்குகிறோம். இவ் இடத்தில் அவர்கள் மீது ஒரு சில் நாணயக் குற்றிகளைப் போட்டு இரங்பட்டாலும், அவர்கள் போன பின்னர் ....
ம் .... மணத்தைப் பாரன் என்று ஏசுவோரையும் கண்டிருக்கிறேன்.

நிரூபன் said...

அதிலும் பூங்கா ரயில் நிலையம் வரைக்கும்தான் விற்பனை. பிறகு, இருக்கையிருந்தால் அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்குள் எதையோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அவர்களது சிரிப்பைப் பார்க்கும்போது யாரோ தொண்டைக்குள் கையை விட்டு இதயத்தைப் பிழிவதுபோல ஒரு மெல்லிய வலியை ஏற்படுத்தும். எழும்பூர் வந்ததும் இறங்கிச்சென்று விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருப்பேன்.//

ஆகா... ஆகா.. சகோ சொந்தச் செலவிலை சூனியம் வைக்கிறாரு. எழும்பூர், தாம்பரம் கடற்கரையடி என்றெல்லாம் சொல்லி தான் எந்த ரயிலில் போறார் என்பதை குறிப்பால் சொல்லுகிறார். சேட்டை ரசிகர்கள், வாசகர்கள் இப்பொழுதே புறப்பட்டு விடுவார்கள். யார் இந்தச் சேட்டைக்காரன் என்று அறிய. பார்த்து சகோ, நாளைக்கு காலையிலை ஸ்டேசன் புல்லா தேடி அலையப் போறாங்க நம்மாளுங்க.

நிரூபன் said...

ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்.//

நிஜம்!
பதிவு தன் வாவில் தினம் தினம் கண்டவற்றை, கடந்து போன ரயில் பயண அனுபவங்களைச் சுவையாகவும் சுவாரசியாமாகவும் சொல்லிச் செல்கிறது.

சகோ பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சின்ன question.
ரயில் பயணங்களிலை உங்களுக்கு ஒரு சேட்டைக்காரி இன்னமும் மாட்டலையா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து அடிக்கடி புன்னகைப்பதாக அறிந்தேன். உண்மையா?
ச்ச்..........சும்மா ஒரு கிண்டலுக்கு கேட்டேன்.

Unknown said...

முன்னாள் நினைவு வந்து போனது நண்பா பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

முன்னாள் நினைவு வந்து போனது நண்பா பகிர்வுக்கு நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் செம சீரியசா ஒரு பயணக்கட்டுரை போட்டிருக்கார் போல,,

சி.பி.செந்தில்குமார் said...

>>பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல

வெரிகுட் சைக்கலாஜிக்கல் சர்ச்

சி.பி.செந்தில்குமார் said...

>>அதே சமயம், எவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல், கூட்டத்தினுள் தனித்திருந்து மவுனம் காத்து, எவருடனும் அல்லது எதனுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பாமல், மிதந்து கொண்டிருக்கிற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

70 சதவீதம் பேர் இந்த சராசரிகள் தான்

sathishsangkavi.blogspot.com said...

//சென்னையின் இரத்த ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களில், மாங்குமாங்கென்று உழைக்கிற வர்க்கத்தையும், இரத்தத்தை உறிஞ்சுகிற வர்க்கத்தையும் அடுத்தடுத்த இருக்கைகளில் காண முடிகிறது.//

உண்மைதான்...

சேலம் தேவா said...

தண்டநாளங்கள் உங்கள் ரத்தநாளங்களைப்போல் என்பதை அருமையான பதிவாக்கியுள்ளீர்கள்.தலைப்பே ஒரு வரி ஹைக்கூ கவிதையைப்போல் அமைந்து விட்டது.அருமை. :)

middleclassmadhavi said...

தினசரி ரயில் பயணங்கள் - மறக்க முடியாத அனுபவங்கள்!!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் மும்பை'ல நிறைய பேரை மிதிச்சிருக்கேன் மிதியும் வாங்கி இருக்கேன்...

settaikkaran said...

//RVS said...

அற்புதம்ங்க.. நானும் கொஞ்ச நாள் மின்சாரத்ல போயிருக்கேன்.. எக்மோர் வரை.. மறக்க முடியாத நினைவுகள்.. டைட்டில் குடுத்தீங்க பாருங்க.. அது அபாரம்.. ;-)//

முதல் முதலாக வருகையும் புரிந்து, பின்தொடரவும் தொடங்கியிருக்கிறீர்கள். மனம்திறந்து பாராட்டியும் இருக்கிறீர்கள். மிக்க நன்றி!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மின்சார ரயிலில் தங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் கிடைத்தது. தங்களின் அனுபவத்தை தங்கள் பாணியிலேயே விவரித்தது அருமை.//

இரயில் பயணங்கள் குறித்து பல இடுகைகள் எழுதிவிட்டேன். எனது அன்றாட நடவடிக்கை என்பதால், இயல்பாகவே அமைந்து விடுகிறது போலும்.

//கடைசி வரிகள் நல்லதொரு நகைச்சுவை யான எதார்த்தமான உண்மை தான்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Chitra said...

//.....சில மாதங்களுக்கு முன், மெட்ரோ ரயிலில், இரண்டு குழந்தைகளுடன் சிரிப்பும் பாட்டுமாய் பயணித்துக் கொண்டு இருந்த ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை, ஒரு கல்லூரி மாணவ கூட்டத்தினர் "திருடி" சென்றதை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்களே..... அதுவும் நினைவுக்கு வந்தது.//

ஆம்! அது போன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்கின்றன. ஒரு நகரத்தின் வளர்ச்சிக்காக சில சமயங்களில் கொடுமையான விலை கொடுத்தாகவும் நேரிடுகிறது என்பது சற்று வேதனை தான்!

மிக்க நன்றி!

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை இது உங்களோட சிறந்த படைப்புகளில் ஒன்று. வாழ்த்துக்கள்//

நன்றி கார்த்தி! வித்தியாசமாக முயலும்போதெல்லாம் இதுபோல உற்சாகப்படுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை? :-)

vasu balaji said...

இது எலக்ட்ரிக் ட்ரெயினா எலக்கிய ட்ரெயினாண்ணா. சூப்பர்ப்:)) ரியல்லி அமேஸிங் நேரேஷன்.

settaikkaran said...

//மேவி said...

நானும் தினமும் பெருகளத்தூர் ல இருந்து பார்க் வரைக்கும் மின்சார ரயிலில் தான் சென்று வருவேன் .... அப்படியே நான் உணர்ந்த விஷயங்களை எழுதி இருக்கீங்க ...//

இது சென்னை இரயில் பயணிகளுக்கெல்லாம் பொதுவான, இயல்பான உணர்வுகள்தான் நண்பரே! we are travelling in the same train, perhaps! :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//அகல்விளக்கு said...

simply superb thala......keep going....//

மிக்க நன்றி நண்பரே, எவ்வளவு நாட்களாகி விட்டன உங்களைப் பார்த்து..? :-)

settaikkaran said...

//பிரபாகர் said...

ஆம் நண்பரே... நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நம்மைச்சுற்றி ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. //

நிச்சயமாக! இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களோடு பயணிக்கிறபோது, கண்களைச் சற்று அகலத்திறந்திருந்தாலே போதுமானது.

//ரயில் சம்மந்தமான விஷயங்களைப் பற்றி எழுத என் சேட்டைக்கு நிகர் சேட்டைதான்!...//

உண்மையில், இது எனது தினசரி நடவடிக்கை என்பதால், பார்த்ததை ஒப்பிக்கிற சுலபமான வேலையும் கூட! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

அருமையான பதிவு. எனது கல்லூரி காலங்களையும், உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நாட்களையும் அசை போட வைக்கிறது.//

உண்மைதான் நண்பரே! தொடர்ந்து இரயில் பயணங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, பிறரது அனுபவங்களுடன் ஒத்த தமது அனுபவங்களை நினைவு கூர்வது மிகவும் எளிதானது என நானும் உணர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோ, இயற்கையை ரசிக்கிறீங்க சகோ! நகைச்சுவைப் பதிவுகளைத் தாண்டி, உங்களின் வழமையான உரையாடல் பதிவுகளையும் தாண்டி ஒரு உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்..//

வாருங்கள் சகோதரம்! நகைச்சுவை, நையாண்டி தவிரவும் அனுபவம் என்ற குறியீட்டின் கீழ் பல இடுகைகளை எழுத தொடர்ந்து முயன்று வருகிறேன்.

//பிச்சையெடுக்கும் போது இசையினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தும் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.//

உண்மை! இசைக்காகவேனும் இரக்கம் சுரக்கிறதே!

//இது மனிதனின் இயல்பு தானே. நாங்கள் மட்டும் நல்லவர்களாக நடித்துக் கொண்டு, மற்றவர்களை இழக்காரமாக, ஏளனத்துடன் பார்ப்பது, மூக்கைச் சுழிப்பது. இப்படி பிச்சைக்காரர்களுடன் பழகும் பலரை எங்களூரிலும் பார்க்கிறேன். நான் உட்பட எல்லோரும் அவர்களின் உடை, உடல் மணம் முதலியவற்றால் ஒரு மாதிரியான உணர்வுடன் தான் நோக்குகிறோம். இவ் இடத்தில் அவர்கள் மீது ஒரு சில் நாணயக் குற்றிகளைப் போட்டு இரங்பட்டாலும், அவர்கள் போன பின்னர் ....ம் .... மணத்தைப் பாரன் என்று ஏசுவோரையும் கண்டிருக்கிறேன்.//

அதே! நமக்கு ஒவ்வாத ஒன்றை, அதைப் பழிப்பதற்காகவேனும் தற்காலிகமாக உதவி செய்வது போல ஒரு பாவனை செய்து, பின்னர் மட்டம் தட்டி மகிழ்ச்சியடைகிற குரூரமான மனமும் மனித உளவியலின் ஒரு அபாயகரமான அம்சம் தானே?

//ஆகா... ஆகா.. சகோ சொந்தச் செலவிலை சூனியம் வைக்கிறாரு. எழும்பூர், தாம்பரம் கடற்கரையடி என்றெல்லாம் சொல்லி தான் எந்த ரயிலில் போறார் என்பதை குறிப்பால் சொல்லுகிறார். சேட்டை ரசிகர்கள், வாசகர்கள் இப்பொழுதே புறப்பட்டு விடுவார்கள். யார் இந்தச் சேட்டைக்காரன் என்று அறிய. பார்த்து சகோ, நாளைக்கு காலையிலை ஸ்டேசன் புல்லா தேடி அலையப் போறாங்க நம்மாளுங்க.//

யாருக்கு அவ்வளவு நேரம் இருக்கிறது சகோதரம்? எனக்குத் தெரிந்த சென்னைப்பதிவர்கள் பலரும் ஒருநாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம் போதாது என்று ஓடியோடி உழைக்கிறவர்கள் அன்றி பெரிய நிறுவனங்களில் பெரும்பொறுப்பு வகிப்பவர்கள். அவர்களுக்கு சேட்டையின் எழுத்தைப் பிடிக்கும்.

இதுதவிர, யார் சேட்டை என்ற ஆராய்ச்சி செய்யுமளவுக்கோ, துப்பறியுமளவுக்கோ இங்கிருக்கிற பதிவர்களுக்கு ஓய்வுமில்லை; எண்ணமுமில்லை. அப்படித் துப்பறிய முனைபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றுதான் பொருளாகும்.

//நிஜம்! பதிவு தன் வாவில் தினம் தினம் கண்டவற்றை, கடந்து போன ரயில் பயண அனுபவங்களைச் சுவையாகவும் சுவாரசியாமாகவும் சொல்லிச் செல்கிறது.//

தினசரிப் பயணங்களில் திரளும் அனுபவங்களின் ஒரு துளியே இது சகோதரம்!

//சகோ பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சின்ன question. ரயில் பயணங்களிலை உங்களுக்கு ஒரு சேட்டைக்காரி இன்னமும் மாட்டலையா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து அடிக்கடி புன்னகைப்பதாக அறிந்தேன். உண்மையா? ச்ச்..........சும்மா ஒரு கிண்டலுக்கு கேட்டேன்.//

என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆம், பெண்கள், இளம்பெண்கள் உட்பட நிறையவே இருக்கிறார்கள். காரணம், நான் பலருக்கு இரயில் சினேகிதன்! :-))

மிக்க நன்றி சகோதரம், வழக்கம்போல உங்களது தாராளமான பின்னூட்டங்கள் என்னை நெகிழ்விக்கின்றன. :-)

settaikkaran said...

//விக்கி உலகம் said...

முன்னாள் நினைவு வந்து போனது நண்பா பகிர்வுக்கு நன்றி!//

மிக்க மகிழ்ச்சி நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் செம சீரியசா ஒரு பயணக்கட்டுரை போட்டிருக்கார் போல,,//

ஆமாம் தல, மொக்கை கொஞ்சம் ஓவராயிட்டுதே! ஒரு மாறுதலுக்காக.....

>>பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல

//வெரிகுட் சைக்கலாஜிக்கல் சர்ச்//

தன்னிச்சையாக எழுந்த கேள்வி அது!

>>அதே சமயம், எவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல், கூட்டத்தினுள் தனித்திருந்து மவுனம் காத்து, எவருடனும் அல்லது எதனுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பாமல், மிதந்து கொண்டிருக்கிற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

//70 சதவீதம் பேர் இந்த சராசரிகள் தான்//

இருக்கலாம். என் கணக்குப் படி சற்றுக் குறைவுதான் என்று எண்ணுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல...!

settaikkaran said...

//சங்கவி said...

//சென்னையின் இரத்த ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களில், மாங்குமாங்கென்று உழைக்கிற வர்க்கத்தையும், இரத்தத்தை உறிஞ்சுகிற வர்க்கத்தையும் அடுத்தடுத்த இருக்கைகளில் காண முடிகிறது.//

உண்மைதான்...//

வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

தண்டநாளங்கள் உங்கள் ரத்தநாளங்களைப்போல் என்பதை அருமையான பதிவாக்கியுள்ளீர்கள்.தலைப்பே ஒரு வரி ஹைக்கூ கவிதையைப்போல் அமைந்து விட்டது.அருமை. :)//

எனக்கு மட்டுமல்ல, சென்னையில் கூட்டுவண்டியை உபயோகிப்பவர் அனைவருக்கும் இது ரத்தநாளம் போன்றதே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//middleclassmadhavi said...

தினசரி ரயில் பயணங்கள் - மறக்க முடியாத அனுபவங்கள்!!//

வாருங்கள் சகோதரி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

நானும் மும்பை'ல நிறைய பேரை மிதிச்சிருக்கேன் மிதியும் வாங்கி இருக்கேன்...//

ஆஹா, நானும் மும்பை இரயில் பயணத்தை அனுபவித்திருக்கிறேன். சென்னையை விட அதில் சுவாரசியம் அதிகம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

இது எலக்ட்ரிக் ட்ரெயினா எலக்கிய ட்ரெயினாண்ணா. சூப்பர்ப்:)) ரியல்லி அமேஸிங் நேரேஷன்.//

உங்களுக்குத் தெரியாததா ஐயா? இந்தப் பயணங்களில் கிடைக்கிற செய்திகளில் எதார்த்த வாழ்க்கையின் இயல்பு எளிதாகக் காணக்கிடைக்கிறதே! மிக்க நன்றி ஐயா!

Jey said...

எஸ். ராமகிருஷ்னன் கட்டுரை வாசித்த அனுபவம் சேட்டை.

ஒரு நல்ல எழுத்தாளரோட எழுத்துக்களோட எல்லா அம்சமும் இந்த கட்டுரைல இருக்கு சேட்டை.

வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து தன்னையும், தன்னை சுற்றியுள்ள சூழலையும் ரசிப்பவர்களால் மட்டுமே, இப்படி எழுத முடியும்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

www.eraaedwin.com said...

வணக்கம் தோழர் சேட்டை,
கணினியில் நான் இன்றளவும் தத்தக்கா பித்தக்கா. இருப்பினும் நானும் எப்படியோ ஒரு வலையினை ஒப்பேத்தி வருகிறேன். நமக்குப் பிடித்த வலைகளை எப்படி நம் வலை முகப்பில் வைப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தேன். இப்போது சேட்டைக் காரனும் என் முகப்பில் அடக்கம். பாருங்கள். இனி தொடர்ந்து உங்கள் படைப்புகளோடு பேசுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தரமான கட்டுரை சேட்டை, சுகமான வாசிப்பனுபவம்....!

settaikkaran said...

//Jey said...

எஸ். ராமகிருஷ்னன் கட்டுரை வாசித்த அனுபவம் சேட்டை.//

இதற்கு முன்பொருமுறை ஒரு நண்பர் இதையே சொன்னதும், எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மீண்டும் நினைவூட்டியிருக்கிறீர்கள்.

//ஒரு நல்ல எழுத்தாளரோட எழுத்துக்களோட எல்லா அம்சமும் இந்த கட்டுரைல இருக்கு சேட்டை.//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சிவகுமாரன் said...

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து தன்னையும், தன்னை சுற்றியுள்ள சூழலையும் ரசிப்பவர்களால் மட்டுமே, இப்படி எழுத முடியும்.//

சுருக்கமாக நம்மைப்போல பாசாங்கின்றி வாழ்கிறவர்களின் இயல்பான வெளிப்பாடு என்று சொல்லியிருக்கலாம் நண்பரே! :-)

//அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//இரா.எட்வின் said...

வணக்கம் தோழர் சேட்டை, கணினியில் நான் இன்றளவும் தத்தக்கா பித்தக்கா. இருப்பினும் நானும் எப்படியோ ஒரு வலையினை ஒப்பேத்தி வருகிறேன்.//

உங்களைப் போல பிற திறமைசாலிகள் குடத்திலிட்ட விளக்காக வலையுலகின் கவனத்திற்கு இன்னும் வராமல் இருக்கலாம். ஆனால், இறுதியில் திறமையே வெல்லும் நண்பரே! :-)

//நமக்குப் பிடித்த வலைகளை எப்படி நம் வலை முகப்பில் வைப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தேன். இப்போது சேட்டைக்காரனும் என் முகப்பில் அடக்கம். பாருங்கள். //

உங்களை ஓராண்டுக்கும் மேலாகப் பின்தொடர்கிறேன் நண்பரே! அதில் எனக்குத்தான் பெருமை. :-)

//இனி தொடர்ந்து உங்கள் படைப்புகளோடு பேசுவேன்//

யான் பெற்ற பேறு நண்பரே! இன்னும் எனது படைப்புகளை உங்களைப்போன்ற பன்முகத்திறன் கொண்டவர்கள் வாசித்து ஆதரவளிப்பதே எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

தரமான கட்டுரை சேட்டை, சுகமான வாசிப்பனுபவம்....!//

பானா ராவன்னா, நல்ல நட்புகளின் தொடரும் ஆதரவே எனது இத்தகைய முயற்சிகளுக்குக் காரணம். அதில் மிக முக்கியமானவர் நீங்கள்...! மிக்க நன்றி!