Sunday, January 30, 2011

இது பொறுக்குதில்லை! #TNfisherman

தமிழக மீனவர் படுகொலைச் செய்தி வெளியானதும் எனது உணர்வுகளை "கடுதாசு போடுவோம் வாங்க!" என்ற இடுகையில் முன்னரே வெளிப்படுத்தியிருந்தேன். இது, இரண்டொரு நாட்களாக இணையத்தில் தமிழர்கள் மூட்டியிருக்கிற உணர்வுத்தீயில், ஒரு தமிழனாக நான் செலுத்த வேண்டிய ஆகுதி!

இயல்பில் நான் பெருங்கோபக்காரன். எனது சினத்தை பெரும்பாலும் ஏளனத்தில் பொதிந்து எழுதுகிறவன் என்றாலும், அவ்வப்போது சுருண்டுபடுத்திருக்கிற எனது கோபம் சீறியெழுந்து படமெடுப்பதுமுண்டு. ஒட்டுமொத்த வலைத்தமிழரும் ஒரே இலக்கினை நோக்கி தத்தம் கோபத்தை ஏவுகணைகளாய்ச் செலுத்திக்கொண்டிருக்கையில், ஓரமாக ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை.

இந்த தேசம் தற்கொலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது; அதனால்தான் விருப்பமாக விஷத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப்பிரிவிலிருப்பவனிடம் "நீ பிழைத்துவிடுவாய்," என்று மருத்துவர் மழுப்புவது போல, ரைஸினாக்குன்றின் ராஜதந்திரிகள் பொய்யறிக்கைகளைச் சொல்லிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பிட்டுத் தனிமைப்படுத்தி பெருமிதப்பட முடியாத அளவுக்கு, காணும் திசையெல்லாம் மிஞ்சிக்கிடப்பதெல்லாம் பொறுப்பின்மை ஒன்றுதான். இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.

அரசியல்- ஊழலை நேரடி முதலீடாகவும், மக்களின் மறதியை மறைமுக முதலீடாகவும் கொண்டு நடத்தப்படுகிற வர்த்தகமாகி விட்டது. எல்லா நம்பிக்கைப் பொறிகளின் மீதும் எச்சிலை உமிழ்ந்து உமிழ்ந்து அவை கொழுந்து விட்டு எரியவிடாமல் கொன்றுவிட்டார்கள். இத்தகைய சூழலில், இணையத்தில் நிகழ்பெறுகிற பெருமுயற்சி ஒரு பெருவேள்வியின் துவக்கம் என்று பெருமை கொள்ளலாம்; தவறில்லை!

உடலில் ஓடுகிற உதிரத்தில் உப்புச்சத்து மிச்சமிருக்கிற அரசியல்வாதி எவனேனும் இருந்தால், அவன் நம்மைச் சற்றேனும் கவனிப்பான் என்ற அற்ப நம்பிக்கை ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பிணமெண்ணிச் சோர்ந்துபோன விரல்கள் இப்போது ஒருங்குறியில் உம்மைக் குறிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாணங்களைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. குண்டுதுளைக்காத கற்சுவர்களுக்குப் பின்னால், காகிதக்குழிக்குள் கவிழ்ந்து கிடக்கும் உங்களை நோக்கி, காற்றுவழியாக எங்களது கண்டனக்கணைகள் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.

இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!

எரிய மறுக்கிற எல்லா ஈரவிறகுகளுக்குமுள்ளே ஒரு மவுனத்தீ மயக்கமுற்றுக் கிடக்கிறது. எப்போதாகிலும் அது விழித்தெழுகிறபோது அதன் ஆவேசத்தீயின் நாக்குகள் அரசாங்கங்களையே சுருட்டி விழுங்கிவிடுகின்றன. சரித்திரப்பாடத்தின் இந்த சத்தியமான செய்தியை, புது தில்லியின் புத்திமான்களே, புறந்தள்ளி விடாதீர்கள்! இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.

எங்களது கடற்புறத்தின் மணல்பரப்பு, எம் சகோதரரை எரித்த சாம்பலை உடுத்தி விதவைக்கோலம் பூண்டிருக்கிறது. காற்றில் அதன் துகள்கள் பறந்து ராஜதானிகளின் கற்கோட்டைகளின் மீது இன்னும் கவியாதிருப்பதற்கு, அந்த சாம்பல்படுகையின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் எம் கண்ணீரின் ஈரப்பதமே காரணம் என அறிக!

துயரமும், ஏமாற்றமும், இழப்புமாய்ச் சேர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிற ரசவாதத்தில், எமது கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் கருவுற்று பல காலாக்கினிகளை பிரசவிக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. எங்களையே சாணைதீட்டிக்கொண்டிருக்கிறோம்; ஏவுகணைகளாய் உம் மீது வந்து விழுவதற்காக...! அடிவயிற்றுத்தீக்கு எரிபொருளாய் அடக்கமாட்டாத கண்ணீர் ஆறாய்ப்பெருகிக்கொண்டிருக்கிறது.

இந்தியத்தமிழன் இலங்கையை நோக்கி உமிழ்ந்த எச்சிலை விடவும், தென்புலத்திலிருந்து திரண்டுவரும் எமது கண்ணீர்க்கணைகள் வலிமையானவை. இந்த அஸ்திரங்கள் சினமுற்ற தமிழனின் இருதயக்கூட்டுக்குள்ளே குருதிதடவிக் கூர்தீட்டப்பட்டவை! விந்தியத்தைப் பிளந்தபடி வீறுகொண்டு வருகிற எமது சொல்லீட்டிகளை உங்களது காகிதக்கவசங்களால் முனைமழுங்கச் செய்ய முடியாது. தேன்தடவிய வார்த்தைகளால் இனியும் தேற்றிவிடவோ, மாற்றிவிடவோ முடியாது.

இது நிழல்யுத்தமல்ல: நிஜங்களின் கிளர்ச்சி! கேள்விக்குறிகளின் கூனை நிமிர்த்திக் கூர்தீட்டுகிற முயற்சி! மடிந்த மீனவனுக்காகக் கேட்கப்படுகிற மடிப்பிச்சையல்ல இது; உரிமைக்குரல்

இம்முயற்சி தொடரும்! எமது தமிழர் தமது உள்ளக்கிடக்கையை இங்கு
எழுதியெழுதி உம்மைத் துயிலெழுப்புகிற முயற்சியைத் தொடர்வார்கள்.

உதிரிகளாய்ச் சிதறிக்கிடக்கிற குமுறல்களையெல்லாம் இங்கே ஓரிடத்தில் குவித்து அதன் உச்சியில் இருக்கிற எம்மை அரசியல்வியாதிகள் அண்ணாந்து பார்க்க வைப்போம்.

நாங்கள் அனுப்புகிற மனுக்கள் நீங்கள் வாசிப்பதற்கல்ல; இப்போதாவது யோசிப்பதற்கு!

செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்.

35 comments:

கக்கு - மாணிக்கம் said...

// செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்.//

Hats of சேட்ட .....இறுதியில் இது தான் நடக்கபோகிறது.

மாணவன் said...

உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்பரே

அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்...

வெங்கட் நாகராஜ் said...

// செத்தவன்போல நடித்தது போதும்; சற்றே சொரணை கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களது இறையாண்மையை ஏதேனும் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க நேரிடும்.//

Great! Hope these words stir the sleeping Politicians!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இயல்பில் நான் பெருங்கோபக்காரன். எனது சினத்தை பெரும்பாலும் ஏளனத்தில் பொதிந்து எழுதுகிறவன் என்றாலும், அவ்வப்போது சுருண்டுபடுத்திருக்கிற எனது கோபம் சீறியெழுந்து படமெடுப்பதுமுண்டு.

akni அக்னி ஜூவாலை வீசுது அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

>>>>மருத்துவர் முழுப்புவதுபோல,


மழுப்புவது போல் ( இதை வெளியிட வேண்டாம்)

சி.பி.செந்தில்குமார் said...

>>>>எரிய மறுக்கிற எல்லா ஈரவிறகுகளுக்குமுள்ளே ஒரு மவுனத்தீ மயக்கமுற்றுக் கிடக்கிறது. எப்போதாகிலும் அது விழித்தெழுகிறபோது அதன் ஆவேசத்தீயின் நாக்குகள் அரசாங்கங்களையே சுருட்டி விழுங்கிவிடுகின்றன.

உணர்வுகளைத்தூண்டி எழுப்பும் உன்னத வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>இந்தியத்தமிழன் இலங்கையை நோக்கி உமிழ்ந்த எச்சிலை விடவும், தென்புலத்திலிருந்து திரண்டுவரும் எமது கண்ணீர்க்கணைகள் வலிமையானவை.

கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு தெரிந்து நீங்கள் போட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புப்பதிவுகளில் இது காலத்தால் மறக்க முடியாத பதிவு.. அண்ணே.. ஹாட்ஸ் ஆஃப்

சேலம் தேவா said...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!!நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு..!!

சிநேகிதன் அக்பர் said...

//இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.//

உண்மையான வார்த்தைகள்.

சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனின் மனக்குமுறல் இது.

மாத்தி யோசி said...

உங்கள் கோபமான வார்த்தைகளும், கருத்துக்களும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தீயை மூட்டும்!//இங்கே மனிதனின் உயிர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிற ஆணுறைகளைக் காட்டிலும் மலிவாகிவிட்டது.//

இந்த உண்மை பலபேரைச் சுட வேண்டும்

மாத்தி யோசி said...

/இணையத்தில் எங்கோ, யாரோ ஒரு குச்சியைக் கொளுத்தியிருக்கிற ஒலியை, உங்களது குறட்டையொலியின் பேரரவம் கேட்க அனுமதித்திராவிடில், தெறித்துக்கொண்டு வருகிற அதன் பொறிகள் உங்களைப் பொசுக்கிவிடுமென்பது விதி.//

உண்மையான வார்த்தைகள்.

சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனின் மனக்குமுறல் இது.//

நண்பர் அக்பர் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்!

ரிஷபன் said...

என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்ந்திருக்கிற ஆட்களுக்கு..
நம் குமுறல் உடம்பில் ஏதேனும் ஒரு செல்லைத் தொட்டால் கூட போதும்..
தீர்வு கிடைத்து விடும்.

செ.சரவணக்குமார் said...

//இன்று இணையத்தில் நடந்து கொண்டிருப்பது, என்றேனும் ஒருநாள், அதிகாரமதில்கள் அதிர அதிர உங்கள் அலங்காரவாயில்களிலும் ஒலித்தே தீரும். இது ஒரு அச்சாரம்!//

மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே. அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது.

# கவிதை வீதி # சௌந்தர் said...

மீனவர் படுகொக்கு அனைத் து பதிவரும் குரல் கொடுத்து ஒரே அணியில் உ ள்ளோம்..
உங்களுக்கும் எனக்கும் உரவுகள் நெருங்குகிறது..


தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம்..

sakthistudycentre-கருன் said...

உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்பரே,,,
அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்... மேலும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

asiya omar said...

உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல்லட்டும்.

சேட்டைக்காரன் said...

//கக்கு - மாணிக்கம் said...

Hats of சேட்ட .....இறுதியில் இது தான் நடக்கபோகிறது.//

எனக்கும் அந்த அச்சம் இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//மாணவன் said...

அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்...//

ஆம். இது ரொம்ப முக்கியம். வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//வெங்கட் நாகராஜ் said...

Great! Hope these words stir the sleeping Politicians!//

ஊதுகிற சங்கை ஊதியாகிவிட்டது! மிக்க நன்றி ஐயா!

சேட்டைக்காரன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

akni அக்னி ஜூவாலை வீசுது அண்ணே//

ஆமா தல, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை.

//மழுப்புவது போல் ( இதை வெளியிட வேண்டாம்)//

திருத்திவிட்டேன். குறைகளை சுட்டிக்காட்டுவது பெரிய உதவி தல.

//உணர்வுகளைத்தூண்டி எழுப்பும் உன்னத வரிகள்//
//கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள்//
// எனக்கு தெரிந்து நீங்கள் போட்ட உணர்ச்சிக்கொந்தளிப்புப்பதிவுகளில் இது காலத்தால் மறக்க முடியாத பதிவு.. அண்ணே.. ஹாட்ஸ் ஆஃப்//

சென்ற ஆண்டு இது போல சில இடுகைகள் எழுதியிருந்தேன். பிறகு, நக்கல் நையாண்டியே போதும் என்று சற்று தளரத் தளர எழுதினேன். ஆனால், இவ்விஷயத்தில் மற்ற பதிவர்களின் குரலுக்குத் துணைகொடுக்க வேண்டும் என்பதே அடிமனதில் தோன்றியதால், இப்படி எழுதினேன். மிக்க நன்றி தல!

சேட்டைக்காரன் said...

//சேலம் தேவா said...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!!நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு..!!//

அதே! அதே!! இப்போது தேவை ஒற்றுமை; ஒருங்கிணைப்பு. மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//சிநேகிதன் அக்பர் said...

உண்மையான வார்த்தைகள். சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியனின் மனக்குமுறல் இது.//

மிக்க நன்றி அண்ணே! இதற்கு தூண்டுதல் அளித்தவர்கள் உங்களைப் போன்ற பதிவர்கள் தான்.

சேட்டைக்காரன் said...

//மாத்தி யோசி said...

உங்கள் கோபமான வார்த்தைகளும், கருத்துக்களும் கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் தீயை மூட்டும்!//

அவர்களும் கோபப்பட்டுவிடாமல், ஒன்றிணைந்து உரக்கக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

//இந்த உண்மை பலபேரைச் சுட வேண்டும்//

சுடும்! அடிமீது அடிவைத்தால் அம்மியும் நகருமே! மிக்க நன்றி நண்பரே!
உங்களது பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது.

சேட்டைக்காரன் said...

//ரிஷபன் said...

என்ன சொன்னாலும் அசையாமல் உட்கார்ந்திருக்கிற ஆட்களுக்கு..நம் குமுறல் உடம்பில் ஏதேனும் ஒரு செல்லைத் தொட்டால் கூட போதும்..தீர்வு கிடைத்து விடும்.//

அவ்வளவுதான்! பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை; ஆனால், ஒருமித்த குரலில் சொல்கிறபோது சிலரது கவனத்தை ஈர்த்துவிட முடியும் என்பது நம்பிக்கை. மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//செ.சரவணக்குமார் said...

மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே. அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது.//

துவங்கிவிட்டோம்; தொடர்கிறது; இனியும் தொடரும் என்று எதிர்பார்ப்போம்.
மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...

மீனவர் படுகொக்கு அனைத் து பதிவரும் குரல் கொடுத்து ஒரே அணியில் உ ள்ளோம்.. உங்களுக்கும் எனக்கும் உரவுகள் நெருங்குகிறது..தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம்..//

இது ஒரு வியக்கத்தக்க முயற்சி. பல கருத்துவேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு பதிவர்கள் ஈடுபட்டிருக்கிற முயற்சி என்பதால், நான் செய்ய வேண்டிய பங்கை மட்டும் செய்திருக்கிறேன். மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//sakthistudycentre-கருன் said...

உங்களின் பங்களிப்புக்கும் முயற்சிக்கும் நன்றி நண்பரே,,,அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம்... மேலும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...//

இந்த ஒற்றுமை இந்த விஷயத்தில் தொடரவேண்டும்; வலுவுற வேண்டும் என்பது என் போன்றவர்களின் ஆவல். கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//asiya omar said...

உணர்வுள்ள பதிவு.முயற்சி வெல்லட்டும்.//

வெல்வோம். மிக்க நன்றி!

அரசன் said...

கூடுவோம் வென்று காட்டுவோம்

! சிவகுமார் ! said...

>>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. அது என்ன இறையாண்மை??

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உங்கள் கோபம் புரியுது

கண்டிப்பா செயிப்போம்

சேட்டைக்காரன் said...

//அரசன் said...

கூடுவோம் வென்று காட்டுவோம்//

நிச்சயமாக! மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//! சிவகுமார் ! said...

>>> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. அது என்ன இறையாண்மை??//

அது கடவுள் மாதிரி. இருக்குன்னும் இல்லைன்னும் ரெண்டு தரப்பில் மக்கள் பிரிந்து வாதம் செய்கிற மறைபொருள். :-)

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

உங்கள் கோபம் புரியுது கண்டிப்பா செயிப்போம்//

மிக்க நன்றி நண்பரே! செய்வோம்!