Friday, January 21, 2011

கார்த்தி வலைப்பூ வாசிப்பவரா?

கார்த்தி வலைப்பூ வாசிப்பவரா? இல்லாவிட்டாலும் அவருக்கு நெருங்கிய ரசிகர்களில் ஒருவரோ அல்லது திரைப்படத்துறையில் இருப்பவர் எவரேனும் இந்த இடுகையை வாசிக்கலாம் என்ற ஒரு அசட்டு நம்பிக்கையில் இந்த இடுகை.

நேற்று வாசித்த செய்தி இது: பெட்டிக் கடைகளில் சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்கின்றனர்-கார்த்தி புகார்

தற்போது அரசியல் சூடுபிடித்திருக்க, நடிகர் சங்கத்துப் பெருந்தலைகள் கட்சிப்பணியாற்றிக் கொண்டு இருப்பதால், கார்த்தி திரைப்படத்துறையின் பிரதிநிதியாக இந்த புகாரை அளித்திருக்கிறாரா? அல்லது இந்தப் படம் அவரது உறவினர் தயாரித்தபடம் என்பதாலா என்பது போன்ற கேள்விகளை ஒதுக்கி வைத்து விட்டு பார்க்கலாம்.

அவரது புகார் மிகவும் நியாயம் தான். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை எடுத்து, தியேட்டர் பிடித்து, வெளியிட்டு போட்ட முதலாவது திரும்பக்கிடைக்காதா என்று கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் அல்லாடுகிற இந்த சூழலில் திருட்டு சிடிக்கள் விற்பனை பெரிய குற்றம் தான். யாரோ முதல்போட, யாரோ அதிகம் மெனக்கெடாமல் பணத்தை அள்ளிக்கொண்டு போவது அநியாயம் தான். இரும்புப்பிடி கொண்டு அடக்குகிற சட்டங்கள் இருந்தும், அவை குறித்து சட்டை செய்யாமல் ஒரு கும்பல் சுளுவாக காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கொள்ளைப்பணம் சம்பாதிப்பது அட்டூழியம் தான். மாவைத்தின்றால் பணியாரம் கிடைக்காது என்பதுபோல, திருட்டு சிடிக்கள் வியாபாரத்தை விட்டுவைத்தால் அது நாளடைவில் திரைப்படத்தொழிலை முற்றிலும் ஒழித்து விடும் என்பதும் அபாயம்தான். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்தான்.

இது நாணயத்தின் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம்....? திருட்டு சிடிக்கள் ஏன் விற்பனையாகின்றன? ஏன் பொதுமக்கள் வாங்குகிறார்கள்?

திருட்டு சிடி விற்பது குற்றமென்றால், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதும் குற்றம் தானே?

கமல்,ரஜினி தொடங்கி, கார்த்தி வரையில் அத்தனை நடிகர்களும் அவ்வப்போது திருட்டு சிடிக்கள் குறித்து அறிக்கைகள் விடுகிறீர்கள்; காவல்துறை ஆணையரைச் சென்று சந்தித்துவிட்டு, தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளிக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளில் எந்த நடிகராவது காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று,"திரையரங்கங்களில் புதுப்படங்கள் வெளியாகிறபோது, ஒன்றுக்கு இரண்டு, மூன்று, நான்கு மடங்கு விலையில் விற்பனை செய்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துங்கள்," என்று கோரிக்கை வைத்திருப்பீர்களா? பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்கிற ரவுடிக்கும்பலை அடக்கி வைக்குமாறு கேட்டிருப்பீர்களா? இதில் யார் யாருக்கு எத்தனை பங்கு இருக்கிறது என்பது கூட அறியாத குழந்தையல்ல கார்த்தி என்று நம்புவோமாக!

இரண்டுமே சட்டவிரோதமான செயல்கள். உங்களது ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்? காரணம் பெரிய சிதம்பர ரகசியமல்ல. உங்களுக்கு நீங்கள் போட்ட முதலீடு மட்டும்தான் பணம். நீங்கள் சிந்துவது மட்டும்தான் வியர்வை. உங்களுக்கு ஏற்படுவது தான் நஷ்டம்!

ஆனால், திரையரங்கத்துக்கு படம் பார்க்க வருகிற ரசிகன் கேனயன். அவன் திரையரங்கிலேயே நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கவுன்டரில் விற்பனை செய்தாலும் சரி, பிளாக்கில் முன்னூறு ரூபாய்க்கு விற்றாலும் சரி, வாங்குவான்; படம் பார்ப்பான். அப்படித்தானே?

ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு சினிமாவுக்குப் போனால் ஆகிற செலவு என்ன என்று தெரியுமா? குறைந்தபட்சம் எண்ணூறு ரூபாய்! டிக்கெட் மட்டுமல்ல; குளிர்பானங்கள், தின்பண்டங்கள் முதற்கொண்டு சகலமும் திரையரங்கங்களில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்கிறார்கள்! ஒரு பாப்-கார்ன், ஒரு பெப்ஸி வாங்கினால் எழுபத்தி ஐந்து ரூபாய் காலி! மாதத்துக்கு ஒரு சினிமா பார்த்தாலே கூட பட்ஜெட் எகிறி விடும் அவனவனுக்கு! ஒரு சினிமா பார்க்கிற பணத்தில் ஒருமாத பால்கணக்கை பைசல் பண்ணிவிடலாம். மின்சாரக்கட்டணத்தையோ அல்லது தொலைபேசிக்கட்டணத்தையோ கட்டிவிடலாம்.

வெங்காயம் என்ன விலை? சமையல் வாயு என்ன விலை? பெட்ரோல் என்ன விலை? சராசரி மனிதனின் வாங்கும் திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிற இந்த சூழ்நிலையில், அவனால் சினிமாவுக்கென்று எப்படி பணத்தை ஒதுக்க முடியும்? அவன் இருபது ரூபாய்க்கு சிடி கிடைத்தால், வாங்கத்தான் செய்வான். பார்க்கத்தான் செய்வான். காரணம், உங்களுக்கு அவன் மீது இல்லாத அக்கறை அவனுக்கு உங்கள் மீதும் இருக்க வாய்ப்பில்லை. அதை எதிர்பார்க்காதீர்கள்!

சரி, ஓரளவு வசதியானவர்கள் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை திரையரங்குகளில் நான்கு சக்கரவாகனங்களை நிறுத்துகிற வசதியிருக்கிறது? எத்தனை திரையரங்கங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன? ஒன்றா இரண்டா நெருடல்கள்? எழுத ஆரம்பித்தால் நாறி விடும்!

என்னவோ உலகத்தீவிரவாதிகளின் கொட்டம் தமிழகமெங்கும் பரவிவிட்டது போல, குடிக்கிற தண்ணீரையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. பாதுகாப்புக் காரணங்களாம்- புடலங்காய்!

சில திரையரங்கங்களில் பாதுகாப்பு என்ற பெயரில் பண்ணுகிற அலப்பறை இருக்கிறதே, சொல்லி மாளாது. கமலா திரையரங்கில் ஆண்களைத் தடவித் தடவி பரிசோதித்து விட்டுத்தான் உள்ளே அனுப்புகிறார்கள். சிகரெட் வைத்திருந்தால் உள்ளே அனுமதி இல்லையாம். இத்தனை உளவு கேமிராக்கள், புகை கண்டுபிடிப்புக் கருவி, சீருடையணிந்த பாதுகாவலர்கள் அத்தனையும் மீறி எவன் உள்ளே புகை பிடிப்பது? பிடித்தால் அவனை காவல்துறையிடம் ஒப்படையுங்கள்; அபராதம் போடச்சொல்லுங்கள்! சிகரெட் பாக்கெட்டை வெளியே போட்டால்தான் அனுமதியாம். "சர்தான் போய்யா," என்று டிக்கெட்டைக் கைமாற்றி விட்டு அதே சிகரெட் பாக்கெட்டுடன் இன்னொரு திரையரங்கில் போய் அதே ராவணனைப் பார்த்தேன். அதென்னய்யா, ஆண்களை மட்டும் தடவுகிறீர்கள்? நாங்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

இதையெல்லாம் தாண்டி, திரைப்படத்துறை அழியாமலிருக்க வேண்டும் என்ற சமூகநோக்கோடு (?!) ஒரு பெருந்தொகையைச் செலவழித்து பொதுமக்கள் ஏன் சினிமா பார்க்க வேண்டும்? நீங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கா அல்லது அவரவர் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதற்கா?

தமிழ் சினிமாக்கள் தொடர்ச்சியாய்த் தோல்வியடைவதற்கு காரணம் திருட்டு சிடி மட்டும் தானா? தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று அனைவருக்கும் இருக்கிற பேராசைதான்! இது தவிர நீங்கள் எடுக்கிற படங்களின் லட்சணத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், அது பட்டி விக்கிரமாதித்தன் கதை போலாகி விடும். மன்மதன் அம்பு போல இன்னும் இரண்டு படங்களை எடுத்தால், சினிமா பார்க்கிற ஆசையே மனிதனுக்கு இல்லாமல் போய்விடும். (மருத்துவர் ராமதாஸ் சந்தோஷப்படுவார் பாவம்!)

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கிடையாது. தமிழ்நாட்டைப் போல, எந்த மாநிலத்திலும் திரைப்படத்துறைக்கு இத்தனை சலுகைகளும் கிடையாது. இத்தனை சலுகைகளைப் பெற்ற நீங்கள், அதில் ஒரு சிறுபகுதியையாவது பொதுமக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து அவர்களைத் திரையரங்குக்கு வர ஊக்கப்படுத்தியதுண்டா? உங்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமா ரசிகன் ஏமாந்த சோணகிரி-அம்புட்டுத்தேன்!

உண்மையில், சினிமா பார்க்க வருகிற ரசிகர்களை, நடிகர்கள் மதிக்கிறவர்களாயிருந்தால் செய்ய வேண்டியது இரண்டு:

பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்!
திரையரங்கங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்! உள்ளே விற்பனையாகிற பொருட்களின் விலைகளை ஒரு சீரான கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள்! - இவற்றின் மூலம் முன்போல, எல்லா வர்க்கத்தினரும் திரையரங்குக்கு வந்து சினிமா பார்க்க வழிவகை செய்யுங்கள்!

முடியலியா, படத்தில் நடித்தோமா, பணத்தை வாங்கினோமா என்று போய்க்கொண்டேயிருங்கள்.

நான் கிளம்புகிறேன்- பெட்டிக்கடைக்கு!

54 comments:

"ராஜா" said...

திருட்டு VCD கள் மட்டும் சினிமாவின் தோல்விக்கு காரணம் இல்லை என்பதை இவர்கள் எல்லாம் எப்பொழுது ஒத்து கொள்ளவே மாட்டார்கள் .. தூங்குரவனுக்கும் தூங்குற மாதிரி நடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு

Madurai pandi said...

இந்த விளாசல் இவங்களுக்கு தேவை தான்.. ஆனா இதையெல்லாம் இவனுங்க கண்டுக்க மாட்டானுங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

சேட்டைக்காரன் said...

//"ராஜா" said...

திருட்டு VCD கள் மட்டும் சினிமாவின் தோல்விக்கு காரணம் இல்லை என்பதை இவர்கள் எல்லாம் எப்பொழுது ஒத்து கொள்ளவே மாட்டார்கள் .. தூங்குரவனுக்கும் தூங்குற மாதிரி நடிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு//

அதே! அதே!! ஏறக்குறைய இருநூறு படங்களில் வெறும் ஐந்து படங்கள்தான் வெற்றின்னு இராம.நாராயணன் சொல்லுறாரு? இதுக்கு சிடியா காரணம்??

மிக்க நன்றி ராஜா!

சேட்டைக்காரன் said...

//Madurai pandi said...

இந்த விளாசல் இவங்களுக்கு தேவை தான்.. ஆனா இதையெல்லாம் இவனுங்க கண்டுக்க மாட்டானுங்க!!!//

நஷ்டம் அவங்களுக்குத் தான் மதுரை பாண்டி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

♠புதுவை சிவா♠ said...

"பெட்டிக் கடைகளில் சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்கின்றனர்-கார்த்தி புகார்"

சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்க்கும் பெட்டிக் கடைகளில் பெயர்கள் தமிழில் இருந்தால் நடவடிக்கை ரத்து - தலைவர் சுனா பானா.

:-)))))

Ramesh said...

நன்று சொன்னீர்கள் நண்பரே!! ஆனாலும் உபயோகமில்லை சமந்தப்பட்டவர்கள் உணரும் வரை. இல்லையேல் இதுவும் ஒரு விளம்பர யுத்தி (நானும் ஒரு ரவுடி தான் என்று வடிவேலு அடம் பண்ணுவது போல).

வெங்கட் நாகராஜ் said...

அடிச்சு விளையாடியிருக்கீங்க சேட்டை. முக்கால்வாசி படத்தில் கதை என்ற ஒன்றே இருப்பதில்லை.இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

மாணவன் said...

//முடியலியா, படத்தில் நடித்தோமா, பணத்தை வாங்கினோமா என்று போய்க்கொண்டேயிருங்கள்.//

சரியான சாட்டையடி பதிவு பாஸ்...

சொல்ல வந்ததை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க..

யாராவது அவர்கள் மெயில் ஐடி இருந்தால் மெயில் அனுப்புங்கபா, தக்காளி திருந்தாட்டியும் மக்கள் விவரமாத்தான் இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டும்....

எல் கே said...

இலவச வீட்டை விட்டுவிட்டேர்களே சேட்டை ?? படத்துக்கு வரி விலகு தருவதால் மக்களுக்கு என்ன லாபம் ??? இதுக்கு யாரவது வழக்கு போட்டார்களா ??

ஜீ... said...

அருமை பாஸ்! சரி அப்படியே குரல் கொடுத்தாலும் தமது உறவினர்/சொந்தப் படத்துக்கு மட்டுமே! ஒரு டப்பா படத்த எடுத்துட்டெல்லாம் என்னமா அழுறாங்க சீன் போடுறாங்க!
நாங்க உங்க கட்சிதான்! பெட்டிக்கடையே எங்களுக்கு நல்லது!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே ஆச்சரியம் நெம்பர் 2. சினிமா பதிவு போட்டிருக்கீங்க..

Speed Master said...

நெத்தியடி

சேட்டைக்காரன் said...

//♠புதுவை சிவா♠ said...

சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்க்கும் பெட்டிக் கடைகளில் பெயர்கள் தமிழில் இருந்தால் நடவடிக்கை ரத்து - தலைவர் சுனா பானா. :-)))))//

சுனா பானாவுக்கு சூவன்னா கேவன்னா (சூட்கேஸ்) போவலியா? :-))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சேட்டைக்காரன் said...

//Ramesh said...

நன்று சொன்னீர்கள் நண்பரே!! ஆனாலும் உபயோகமில்லை சமந்தப்பட்டவர்கள் உணரும் வரை. இல்லையேல் இதுவும் ஒரு விளம்பர யுத்தி (நானும் ஒரு ரவுடி தான் என்று வடிவேலு அடம் பண்ணுவது போல).//

செவிடர்கள் என்பது தெரிந்தும் சில சமயங்களில் பாழாய்ப் போன சங்கை ஊதித்தொலைக்க வேண்டியிருக்கிறதே! மிக்க நன்றி! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செருப்படி இவனுகளுக்கு

சேட்டைக்காரன் said...

//வெங்கட் நாகராஜ் said...

அடிச்சு விளையாடியிருக்கீங்க சேட்டை. முக்கால்வாசி படத்தில் கதை என்ற ஒன்றே இருப்பதில்லை.இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.//

கதையை நம்புவதை விடவும், சதையை நம்பத்தொடங்கி நீண்ட நாட்களாகி விட்டன ஐயா! :-)

//நல்ல பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி ஐயா!

சேட்டைக்காரன் said...

//மாணவன் said...

சரியான சாட்டையடி பதிவு பாஸ்...

சொல்ல வந்ததை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க..

யாராவது அவர்கள் மெயில் ஐடி இருந்தால் மெயில் அனுப்புங்கபா, தக்காளி திருந்தாட்டியும் மக்கள் விவரமாத்தான் இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டும்....//

மக்கள் விபரமாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் தான், வலிந்து வலிந்து அவர்களை முட்டாள்களாக்க முயற்சி செய்கிறார்கள். மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//எல் கே said...

இலவச வீட்டை விட்டுவிட்டேர்களே சேட்டை ?? படத்துக்கு வரி விலகு தருவதால் மக்களுக்கு என்ன லாபம் ??? இதுக்கு யாரவது வழக்கு போட்டார்களா??//

ஊரான் வூட்டு நெய்யை என் பொண்டாட்டி கையே-ன்னுறா மாதிரி, மக்களோட வரிப்பணத்தை எடுத்து சினிமாத்துறைக்கு சலுகை மேலே சலுகை! தமிழிலே பெயர் வச்சாத்தான் வரிவிலக்குன்னு சொல்லுறாங்க! தமிழிலே விளம்பரப்பலகை வச்சு வியாபாரம் பண்ணினா, விற்பனை வரிக்கு விலக்கு கொடுப்பாங்களா?

மிக்க நன்றி கார்த்தி!

சேட்டைக்காரன் said...

//ஜீ... said...

அருமை பாஸ்! சரி அப்படியே குரல் கொடுத்தாலும் தமது உறவினர்/சொந்தப் படத்துக்கு மட்டுமே! ஒரு டப்பா படத்த எடுத்துட்டெல்லாம் என்னமா அழுறாங்க சீன் போடுறாங்க!//

ரஜினி கூட அவரு படத்துக்கு ஒரு பிரச்சினைன்னாத் தான் குரல் கொடுப்பாரு! கமலைப்பத்தி பேசாமல் இருக்கிறதே நல்லது! :-)

//நாங்க உங்க கட்சிதான்! பெட்டிக்கடையே எங்களுக்கு நல்லது!//

வேறே என்ன பண்ணுறது? எல்லாம் விலைவாசி ஏற்றத்தாலே வந்த வினை!
மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே ஆச்சரியம் நெம்பர் 2. சினிமா பதிவு போட்டிருக்கீங்க..//

தல, நான் சினிமாவைப் பத்தி இனிமேல் நிறைய எழுதலாமுன்னு இருக்கேன். கொஞ்சம் டிப்ஸ் கொடுங்கோ! :-)

மிக்க நன்றி தல!

சேட்டைக்காரன் said...

//Speed Master said...

நெத்தியடி//

மிக்க நன்றி!

புதுகைத் தென்றல் said...

சினிமா பாக்க போகணும்னு நினைக்கும்பொழுதே பார்க்கிங், மூட்டைப்பூச்சிக்கடி எல்லாம் ஞாபகம் வருது. அதுக்காக பெரிய தியேட்டர்களுக்கு போனால் கொள்ளைதான். என் மனசுல இருப்பதை நீங்க சொல்லிட்டீங்க தம்பி. ஆனா இது கார்த்தி மட்டுமில்ல எல்லா நடிகர்களுக்கும் தான். நல்ல கதை, அருமையான டைரக்‌ஷன் மட்டுமல்ல தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட திரையரங்குகளும் வேணும். இல்லாட்டி திரையரங்குகள் கல்யாணம் மண்டபம்தான்.

கக்கு - மாணிக்கம் said...

// உங்களுக்கு அவன் மீது இல்லாத அக்கறை அவனுக்கு உங்கள் மீதும் இருக்க வாய்ப்பில்லை. அதை எதிர்பார்க்காதீர்கள்! //


மொத்த சினிமா காரர்களுக்கும் நல்ல செருப்படி.
இதெல்லாம் இவர்களுக்கு உரைக்காது. நெட்டில் இருந்து வலைப்பதிவுகள் அதுவும் தமிழில் படிக்க இவர்களுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன??

புதுகைத் தென்றல் said...

நெட்டில் இருந்து வலைப்பதிவுகள் அதுவும் தமிழில் படிக்க இவர்களுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன??//

என்ன அப்படி சொல்லிட்டீங்க. இங்கே வரும் விமர்சனங்கள்தான் படங்களோட தலையெழுத்தை நிர்ணயிப்பதா ஒரு இயக்குனர் சொல்லியிருப்பதா படிச்சேன். விஜய் பற்றிய விமர்சங்களை படிச்சுகிட்டுத்தான் இருக்காங்க. வலையுலகமும் ஒரு முக்கிய இடத்துல இருக்குங்க.

Anonymous said...

அற்புதமான பதிவு...

dr suneel krishnan said...

திரைத்துறையின் பிரச்சனை பல்வேரானது ,எப்படி சொல்லுவது - ப்ளாக் டிக்கெட் என் விற்பனை ஆகிறது ? படம் சரியாக ஓடுமா என்று சந்தேகம் எழும் போது ..முதல் மூன்று நாட்களில் ஓரளவு போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்று தியேட்டர் ஆட்களுக்கு பயம் ,பெரிய தொகை -திருட்டு சீ.டி ரிஸ்க் ,இது அவர்களின் தரப்பு ,நகர்புற திடர்கள் வேண்டுமானால் சற்று வலமாக இருக்கலாம் ,மற்ற இடங்களில் அவைகள் மண்டபமாக மாறுகிறது .
இன்னொருபுறம் -திடேர்காரர்களின் இத்தகைய நடவடிக்கையால் மக்கள் சினிமா செல்ல யோசிக்கின்றனர் .இது ஒரு மாறி சுழல் .ரஜினி சூர்யாவை தவிர யாரும் இப்பொழுது லாபம் அளிப்பது இல்லை ,தியேட்டர் காரர்களுக்கு எதிராக அவர்கள் ஏதாவது கூறினால் - நஷ்டத்துக்கு காசு திருப்பி கொடு என்று கிளம்பி விடுவார்கள் என்று பயம் இருக்கலாம் .
சினிமா தொழில் உண்மையில் கஷ்டமானது தான் ,அதை நலிவிலிருந்து காக்க அவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்

Elayaraja Sambasivam said...

நம்ப தமிழ் நாட்டுல மட்டுமே நடக்க கூடிய ஒரு கேவலமான விஷயம்

வெங்காயம் விலை அதிகமான, காய் கறி விலை அதிகமானா

நம்ப போலீஸ் காரங்க கண்டுக்கவே மாட்டாங்க, பதுக்கராங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணா நம்பல கமிஷ்னர் ஆபீஸ் உள்ளேய விட மட்டங்க ஆனா இந்த சினிமா காரங்க வந்தா உடனே நம்ப வீட்டு வரி பணத்துல அவங்களுக்கு வேலை பார்ப்பாங்க


என்னைக்கு இந்த சினிமா மோகம் போகுதோ அன்றைய தினம் தான் நமக்கு நல்ல நேரம் வரும்.

காட்டுவாசி said...

சூப்பர் தல

Good Cow One Heat

மதுரை சரவணன் said...

இருந்தாலும் திருட்டு சி.டி.யை ஒழிக்க வேண்டும். அல்லது டி.வி.டியாக படத்தை வெளியிட வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

ஹாலிவுட்டில் , படம் வெளியாகிய சில மாதங்களிலேயே தயாரிப்பு நிறுவனங்களே , குறைந்த விலையில், quality DVD and Blu Ray discs வெளியிட்டு, அதிலேயும் லாபம் பார்த்து விடுகிறார்கள்.

வெறும்பய said...

நான் பொட்டிக்கடையில தான் இருக்கேன்..

சேலம் தேவா said...

திரையரங்குகளை எல்லாம் பெரிய நிறுவனங்கள் கைப்பற்றிய பிறகு நிலைமை இன்னும் மோசம்.நடுத்தர குடும்பங்களின் யதார்த்தமான நிலையை பதிவு செய்துள்ளீர்கள்.அருமையான பதிவுக்கு வாழ்த்துகள்..!!

சேட்டைக்காரன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செருப்படி இவனுகளுக்கு//

அம்புட்டுத்தூரம் போகுமா? போனாலும் உறைக்குமா? :-)
மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//புதுகைத் தென்றல் said...

சினிமா பாக்க போகணும்னு நினைக்கும்பொழுதே பார்க்கிங், மூட்டைப்பூச்சிக்கடி எல்லாம் ஞாபகம் வருது. அதுக்காக பெரிய தியேட்டர்களுக்கு போனால் கொள்ளைதான். என் மனசுல இருப்பதை நீங்க சொல்லிட்டீங்க தம்பி. ஆனா இது கார்த்தி மட்டுமில்ல எல்லா நடிகர்களுக்கும் தான். நல்ல கதை, அருமையான டைரக்‌ஷன் மட்டுமல்ல தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட திரையரங்குகளும் வேணும். இல்லாட்டி திரையரங்குகள் கல்யாணம் மண்டபம்தான்.//

இடுகை பெரிதாகுமே என்று பல விஷயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதை நீங்கள் பின்னூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//கக்கு - மாணிக்கம் said...

மொத்த சினிமா காரர்களுக்கும் நல்ல செருப்படி. இதெல்லாம் இவர்களுக்கு உரைக்காது. நெட்டில் இருந்து வலைப்பதிவுகள் அதுவும் தமிழில் படிக்க இவர்களுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன??//

தெரியவில்லை நண்பரே! இது அவர்களுக்குப் போகுமா என்பதைக் காட்டிலும், சினிமா ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் ஒரு சிலருக்குப் போய்ச் சேர்ந்தாலும் எழுதிய நோக்கம் நிறைவேறியதாகத்தான் பொருள். மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//புதுகைத் தென்றல் said...

\\//நெட்டில் இருந்து வலைப்பதிவுகள் அதுவும் தமிழில் படிக்க இவர்களுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன??\\//

என்ன அப்படி சொல்லிட்டீங்க. இங்கே வரும் விமர்சனங்கள்தான் படங்களோட தலையெழுத்தை நிர்ணயிப்பதா ஒரு இயக்குனர் சொல்லியிருப்பதா படிச்சேன். விஜய் பற்றிய விமர்சங்களை படிச்சுகிட்டுத்தான் இருக்காங்க. வலையுலகமும் ஒரு முக்கிய இடத்துல இருக்குங்க.//

ஆஹா! இதை வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி நிகழ்கிறது என்றால், இனி மேலும் முனைப்பாய், பொறுப்பாய் சில விஷயங்களை எழுத பலர் முன்வரலாம். தகவலுக்கு மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//She-nisi said...

அற்புதமான பதிவு...//

மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//dr suneel krishnan said...

திரைத்துறையின் பிரச்சனை பல்வேரானது ,எப்படி சொல்லுவது - ப்ளாக் டிக்கெட் என் விற்பனை ஆகிறது ? படம் சரியாக ஓடுமா என்று சந்தேகம் எழும் போது ..முதல் மூன்று நாட்களில் ஓரளவு போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்று தியேட்டர் ஆட்களுக்கு பயம் ,பெரிய தொகை -திருட்டு சீ.டி ரிஸ்க் ,இது அவர்களின் தரப்பு ,நகர்புற திடர்கள் வேண்டுமானால் சற்று வலமாக இருக்கலாம் ,மற்ற இடங்களில் அவைகள் மண்டபமாக மாறுகிறது .//

இந்த பயத்தின் அடிப்படையே தவறு என்பதே எனது கருத்து. பொன்முட்டையிடுகிற வாத்தின் வயிற்றைக் கிழிப்பது போல, எந்த ரசிகர்களை நம்பிப் படம் தயாரிக்கப்படுகிறதோ, அதே ரசிகர்களிடம் பகல்கொள்ளை அடிப்பதற்கு என்ன நியாயம் சொல்ல முடியும்?

//இன்னொருபுறம் -திடேர்காரர்களின் இத்தகைய நடவடிக்கையால் மக்கள் சினிமா செல்ல யோசிக்கின்றனர் .இது ஒரு மாறி சுழல் .ரஜினி சூர்யாவை தவிர யாரும் இப்பொழுது லாபம் அளிப்பது இல்லை ,தியேட்டர் காரர்களுக்கு எதிராக அவர்கள் ஏதாவது கூறினால் - நஷ்டத்துக்கு காசு திருப்பி கொடு என்று கிளம்பி விடுவார்கள் என்று பயம் இருக்கலாம் .//

அதிகமான கட்டணம், தரமற்ற படங்கள் என்று பல காரணிகளை வரிசைப்படுத்தலாம். இதற்கு தீர்வு காண்பது பல அமைப்புவசதிகளை வைத்திருக்கிற திரைப்படத்துறையால் முடியாத காரியமல்ல. ஆனால், செய்வதில்லை என்பது தான் ஆதங்கம்!

//சினிமா தொழில் உண்மையில் கஷ்டமானது தான் ,அதை நலிவிலிருந்து காக்க அவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்//

சினிமா ரசிகர்களை வாடிக்கையாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினால், பாதி பிரச்சினை தீர்ந்து விடும். சினிமாக்களையும் நுகர்வோர் சட்டத்துக்கு ஆட்படுத்தினால், கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வருமோ? பார்க்கலாம்.

விளக்கமான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//Elayaraja Sambasivam said...

நம்ப தமிழ் நாட்டுல மட்டுமே நடக்க கூடிய ஒரு கேவலமான விஷயம்
வெங்காயம் விலை அதிகமான, காய் கறி விலை அதிகமானா நம்ப போலீஸ் காரங்க கண்டுக்கவே மாட்டாங்க, பதுக்கராங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணா நம்பல கமிஷ்னர் ஆபீஸ் உள்ளேய விட மட்டங்க ஆனா இந்த சினிமா காரங்க வந்தா உடனே நம்ப வீட்டு வரி பணத்துல அவங்களுக்கு வேலை பார்ப்பாங்க//

நீங்களும் நானும் அரசியல்வாதி பிறந்தநாளன்னிக்கோ, பாராட்டு விழாவிலோ போயி தையாத்தக்கான்னு ஆடிப்பாடினா, நம்ம பேச்சையும் போலீஸ் கேட்கும்! :-)

//என்னைக்கு இந்த சினிமா மோகம் போகுதோ அன்றைய தினம் தான் நமக்கு நல்ல நேரம் வரும்.//

சினிமா மோகம் என்பதை விட, சினிமாவை வைத்து நடத்தப்படுகிற மூளைச்சலவை, மோசடிகள் ஒழிய வேண்டும். மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//காட்டுவாசி said...

சூப்பர் தல Good Cow One Heat//

நன்றி நண்பரே! Good Fruit Language! (பழமொழின்னு சொன்னேன்!)

சேட்டைக்காரன் said...

//மதுரை சரவணன் said...

இருந்தாலும் திருட்டு சி.டி.யை ஒழிக்க வேண்டும். அல்லது டி.வி.டியாக படத்தை வெளியிட வேண்டும். பகிர்வுக்கு நன்றி.//

திருட்டு விசிடியின் காரணங்களை ஒழிக்காமல், அதை எப்படி ஒழிப்பது? :-)
மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//Chitra said...

ஹாலிவுட்டில் , படம் வெளியாகிய சில மாதங்களிலேயே தயாரிப்பு நிறுவனங்களே , குறைந்த விலையில், quality DVD and Blu Ray discs வெளியிட்டு, அதிலேயும் லாபம் பார்த்து விடுகிறார்கள்.//

ஹாலிவுட் மட்டுமல்ல; இந்தித் திரைப்படங்களின் உரிமம் பெற்ற டிவிடிக்களும் கூட தொண்ணூறு நாட்களிலேயே வந்து விடுகின்றனவாம். இங்கே செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் காரணமாக, இது நடப்பதில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது.

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//வெறும்பய said...

நான் பொட்டிக்கடையில தான் இருக்கேன்..//

நிறைய பேர் அப்படித்தான்.(என்னையும் சேர்த்து) மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//சேலம் தேவா said...

திரையரங்குகளை எல்லாம் பெரிய நிறுவனங்கள் கைப்பற்றிய பிறகு நிலைமை இன்னும் மோசம்.நடுத்தர குடும்பங்களின் யதார்த்தமான நிலையை பதிவு செய்துள்ளீர்கள்.அருமையான பதிவுக்கு வாழ்த்துகள்..!!//

பொதுவாக பெரிய நிறுவனங்கள் திறமையான நிர்வாகத்துக்குப் பெயர்போனவை. ஆனால், அவர்களது பருப்பு சினிமாத்துறையில் வேகாதுபோலிருக்கிறதே!

மிக்க நன்றி! :-)

டக்கால்டி said...

நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க?

சிவகுமார் said...

பல நாட்டு படங்களை திருடுபவர்களுக்கு என்ன தண்டனை?? ராஸ்கோல்ஸ்!!

துரை. ந.உ 9443337783 said...

பொங்கிட்டாரே சேட்டை.....
இந்தக் கோணத்துல நான் யோசிக்கவே இல்லையே...... அருமையான சூடு

ஜோதிஜி said...

இது திரைப்பட பதிவு இல்லை. உண்மையான அக்கறையான பதிவு. திரை அரங்கத்திற்கு போவதைவிட விசிடி பார்ப்பது தவறே இல்லை. இது திருட்டு விசிடி இல்லை. காசு கொடுத்து தானே வாங்கி பாக்குறோம்.
எப்போதும் என் முழுமையான ஆதரவு உண்டு.

இரவு வானம் எழுதியுள்ள விஜய் பட விமர்சனத்தின் கடைசி பகுதியை படித்துப் பாருங்க. திருப்பூர் நிலவரம் புரியும்.

இது போல் அடிக்கடி எழுதுங்க.

எஸ்.கே said...

நல்லா சொல்லியிருக்கீங்க! ஆனா இதை அவங்க படிச்சா கூட திருந்த மாட்டாங்க! தேவை ஒன்றே அது லாபம்! அது குறைவதுதான் இந்த குரல்களின் வெளிப்பாடு!

சேட்டைக்காரன் said...

//டக்கால்டி said...

நல்லா நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க?//

வயிறு எரிந்தது; அதனால் தான் இப்படி எழுதத்தோன்றியது.
மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//சிவகுமார் said...

பல நாட்டு படங்களை திருடுபவர்களுக்கு என்ன தண்டனை?? ராஸ்கோல்ஸ்!!//

திருட்டு சிடிக்கள் பரவுவதற்கும் கூட, திரைப்படத்துறையினரில் ஒரு சிலரே தானே காரணம்?

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//துரை. ந.உ 9443337783 said...

பொங்கிட்டாரே சேட்டை.....இந்தக் கோணத்துல நான் யோசிக்கவே இல்லையே...... அருமையான சூடு//

வாங்க வாங்க! எம்புட்டு நாளாச்சு நீங்க இந்தப் பக்கம் வந்து!
பொங்கித்தானே தீரணும்? இவங்க பண்ணுற அலப்பறை தாங்கலியே! மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//ஜோதிஜி said...

இது திரைப்பட பதிவு இல்லை. உண்மையான அக்கறையான பதிவு. திரை அரங்கத்திற்கு போவதைவிட விசிடி பார்ப்பது தவறே இல்லை. இது திருட்டு விசிடி இல்லை. காசு கொடுத்து தானே வாங்கி பாக்குறோம்.//

சரி எது, தவறு எது என்பதை விடவும் எது எளிது, எது கடினம் என்று பார்க்கிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் திரைப்படத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் வருவதை எப்படி எளிமையாக்கலாம் என்று அவர்கள் யோசிக்க வேண்டும்.

//எப்போதும் என் முழுமையான ஆதரவு உண்டு.//

மிக்க நன்றி! உங்கள் வருகையும் கருத்தும் உற்சாகமூட்டுகின்றன.

//இரவு வானம் எழுதியுள்ள விஜய் பட விமர்சனத்தின் கடைசி பகுதியை படித்துப் பாருங்க. திருப்பூர் நிலவரம் புரியும். இது போல் அடிக்கடி எழுதுங்க.//

அவசியம் அடிக்கடி இது போல எழுத முயற்சிப்பேன். மீண்டும் நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//எஸ்.கே said...

நல்லா சொல்லியிருக்கீங்க! ஆனா இதை அவங்க படிச்சா கூட திருந்த மாட்டாங்க! தேவை ஒன்றே அது லாபம்! அது குறைவதுதான் இந்த குரல்களின் வெளிப்பாடு!//

அவர்கள் படிப்பார்கள், படித்துத் திருந்துவார்கள் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. இது சினிமா பார்வையாளர்கள் சிலரின் பார்வைக்குப் போய், அவர்களது அணுகுமுறையில் ஒரு மாற்றம் வந்தாலே போதும். ஒரே ஒருத்தராக இருந்தாலும் கூட...மிக்க நன்றி! :-)