Thursday, January 27, 2011

மறக்க முடியுமா?

"என்னது இது? வழக்கமா நான் ஆபீஸ் போகும்போது காப்பி கொடுப்பே! இன்னிக்கு பால் கொடுக்கிறே?" என்று பரிதாபமாகக் கேட்டார் ஆவுடையப்பன்.

"இது பாதாம்பாலுங்க! நெய்யிலே வறுத்து மிக்ஸியிலெ அரைச்சு பாலிலே தண்ணிவிடாம காய்ச்சிக் கலந்தெடுத்திட்டுக் கொண்டு வந்திருக்கேன்," என்று அந்த பாலைச் சுரந்த பசுவைத் தவிர மீதமிருந்த எல்லா விபரங்களையும் கணவரிடம் ஒப்பித்தாள் காந்திமதி.

"என்ன கொடுமை? உன் புருசன் பெட்ரோல்லே ஓடுற வண்டி. திடீர்னு டீசலைப் போட்டா வண்டி எப்படி ஓடும்?" என்று கெஞ்சினார் ஆவுடையப்பன்.

"சும்மாயிருங்க! உங்களுக்கு மறதி அதிகமாயிருச்சு! தினமும் பாதாம்பால் சாப்பிடணுமுன்னு டாக்டர் சொன்னாரில்லே? இனிமே பாதாம்பால்தான்!" என்று பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டுப் பேசுகிற மத்திய மந்திரிபோலக் கண்டிப்பாகக் கூறினாள் காந்திமதி.

"சரி, நான் ஆபீசுக்குப் போயி காப்பி குடிச்சா என்ன பண்ணுவே?" என்று எரிச்சலோடு கேட்டார் ஆவுடையப்பன்.

"அதெல்லாம் குடிக்க மாட்டீங்க! நீங்க ஆபீஸுக்குப்போனா என்னையே மறந்திடறீங்க, காப்பியையா ஞாபகத்துலே வச்சுக்கப்போறீங்க?" என்று நக்கலடித்தாள் காந்திமதி.

’அதெப்படி காப்பியை மறப்பேன்? நான் என்ன அதைக் கல்யாணமா பண்ணிக்கிட்டேன்?’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார் ஆவுடையப்பன். வாய்விட்டு கேட்கவா முடியும்?

"அதெல்லாம் போகட்டும்! டிரைவர் கிட்டே வல்லாரை மாத்திரை கொடுத்திருக்கேன். எப்பெப்போ மறதி வருதோ அப்பப்போ போட்டுக்கோங்க," என்று அறிவுரை கூறினாள் காந்திமதி.

"மறதி வரும்போது மாத்திரை இருக்கிறதையே மறந்திட்டா?"

"கவலைப்படாதீங்க, சுத்தியிருக்கிறவங்க கண்டுபிடிச்சு டிரைவருக்குத் தகவல் சொல்லுவாங்க!"

"சரி, டிரைவர்னு சொன்னியே....." என்று காருக்குள் நோக்கினார் ஆவுடையப்பன். "உள்ளே ரெண்டு பேரு இருக்காங்களே? இதுலே யாரு டிரைவர்? முன்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரா, பின்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரா?"

"கடவுளே! பின்னாடி உட்கார்ந்திட்டிருக்கிறவரு உங்க பி.ஏ! முன்னாடி இருக்கிறவரு தான் டிரைவரு! ஐயையோ, ரொம்ப முத்திருச்சு போலிருக்கே!" என்று புலம்பினாள் காந்திமதி.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே! நான் வரட்டுமா இந்துமதி?" என்று கையில் பையை எடுத்துக்கொண்டார்.

"அப்பனே முருகா, என் பேரு காந்திமதி; இந்துமதி இல்லீங்க!" என்று தலையிலடித்துக்கொண்டாள்.

"ஏன் டென்சனாகிறே? மறந்துபோயிட்டேன்னு நினைச்சியா, வாய்தவறிச் சொல்லிட்டேன். வேணுமுன்னா என்னோட பெயரை ஒருவாட்டி கரெக்டா சொல்றேன் பார்க்கறியா?"

"ஒண்ணும் வேண்டாம்; நேரமாச்சு! கிளம்புங்க," என்று கணவனைப் பிடித்துத் தள்ளாதகுறையாக கார்வரையிலும் கூட்டிக்கொண்டு போனாள் காந்திமதி.

பாவம், அவளுக்கென்ன தெரியும், தன் கணவனுக்கு உண்மையிலேயே அவரது பெயரே மறந்து போனதென்று! கணவனுக்கு மறதிவியாதியென்று அவள் எண்ணியிருக்க, மற்றவர்களோ ஆவுடையப்பனுக்கு மறைகழண்டுவிட்டதென்றே எண்ணிக்கொண்டிருந்தனர். அதன்காரணமாகவே, முன்ஜாக்கிரதையாக எப்போது வேண்டுமானாலும் ’எஸ்’ ஆக வசதியாக, அவரது காரியதரிசியும் டிரைவரும் முதலிலேயே காருக்குள் தயாராக அமர்ந்திருந்தனர்.

ஆனால், கார் கிளம்பியதும் ஆவுடையப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. டிரைவரின் பெயர் என்ன? பி.ஏ-வின் பெயர் என்ன? இதெல்லாவற்றையும் விட அவருக்குத் தன் சொந்தப் பெயர் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

"டிரைவர்! உங்க லைசன்ஸைக் காட்டுங்க!"

"எதுக்கு சார்?"

"ஷட் அப் யுவர் ப்ளடி மவுத் அண்டு ஷோ மீ யுவர் லைசன்ஸ் இம்ம்மீடியட்லீ...," என்று மருதமலை வடிவேலுவே மயக்கம்போட்டு விழுகிறமாதிரி ஆங்கிலத்தில் இரைந்தார் ஆவுடையப்பன். வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தனது லைசன்ஸை எடுத்து நீட்டினார். பிறகு வண்டி நகர்ந்தது.

"ம்ம்! பழனிச்சாமியா?"

"அது எங்கப்பா பேரு சார்!"

"ஐ நோ! ஐ நோ!! உலகளந்தபெருமாளா?"

"அது கையெழுத்துப்போட்ட ஆர்.டி.ஓ.பேரு சார்! என் பேரு கரிகாலன் சார்!"

"எனக்குத் தெரியாதா உங்க பேரு கரியபெருமாள்னு...?"

பி.ஏ தயங்கித் தயங்கி...

"சார், இது என்னோட டிரைவிங் லைசன்ஸ்! இது என்னோட ஐ.டி.கார்டு! என் பேரு சாமிக்கண்ணு சார்!"

"ஏன்யா உசிரை எடுக்கிறீங்க? எனக்கென்ன அவ்வளவு மறதியா? உங்க பேரு பெருமாள்கண்ணு. டிரைவரு பேரு ஐ.டி.கார்டுதானே?"

"ஆமா சார்! மாத்திரை தரட்டுமா சார்?"

"நீங்களா டிரைவர்? எங்கே உங்களுக்கு முன்னாலே ஸ்டீயரிங்கைக் காணோம்?"

"சார்...சார்...டிரைவரும் முன்னாலே இருக்காரு, ஸ்டீயரிங்கும் முன்னாலே இருக்கு. மாத்திரையும் அவர் கிட்டே தானிருக்கு சார்!"

"ஓ! சரிதான்! யெப்பா டிரைவர், ஒரு ஸ்டீயரிங்கைக் கொடுப்பா, அதாவது வந்து, ஒரு மாத்திரையைக் கொடுப்பா!" என்று தடுமாறினார் ஆவுடையப்பன்.

கரிகாலனுக்கும் சாமிக்கண்ணுவுக்கும் பதட்டமாகத்தான் இருந்தது. மாத்திரையைச் சாப்பிட்டவுடனேயே ஆவுடையப்பனுக்கு தன் பெயர் ஞாபகம் வருவது போலிருந்தது. முதல் எழுத்து கூட ஆவிலே ஆரம்பிக்கும்.

"பி.ஏ! ஆபீஸ் போறதுக்குள்ளே நாம ஒரு ஆட்டம் விளையாடுவோமா? எனக்குத் தெரிஞ்சவருக்கு ஆண்குழந்தை பொறந்திருக்கு! ஆவன்னாவிலே தொடங்குறா மாதிரி ஒரு பெயர் சொல்லுங்க பார்க்கலாம்!"

"ஆனந்த்?"

"ஊஹும்....அது..இது...இல்லை...வேறே சொல்லுங்க!"

"ஆறுமுகம்!"

"இது சரிப்பட்டு வராது போலத்தோணுது! சரி, விடுங்க! இப்போ நான் கேட்கிற கேள்வியைக் கேட்டு நீங்க பயப்படக்கூடாது! பதறாம நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும். சரியா?"

"ஓ.கே சார்!"

"என்னை ஆபீஸ்லே எல்லாரும் எப்படிக் கூப்பிடுவாங்க?"

"அது...வந்து....சார்!"

"தயங்காமச் சொல்லுங்க! பீ ய ஸ்போர்ட்! ஆபீஸ்லே என் பேரு என்ன?"

"ஓணான் சார்!"

"என்னது?"

"ஆமா சார், மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்டுலே உங்களை எல்லாரும் ஓணான்னு கூப்பிடுவாங்க சார்! அப்புறம் அக்கவுண்ட்ஸ்லே உங்களை அடைக்கோழின்னு கூப்பிடுவாங்க சார்! டெஸ்பாட்சுலே தான் உங்களுக்கு மரப்பல்லின்னு பேரு வச்சிருக்காங்க!"

"ஷட் அப் யுவர் பிளடி மவுத் அண்டு டெல் மீ மை ரியல் நேம்!" என்று ஆத்திரத்தில் இரைந்தார் ஆவுடையப்பன்.

"ஆவுடையப்பன் சார்!"

"ஆவுடையப்பன்? மீ? ஆர் யூ ஷ்யூர்? நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க, எனக்கென்னமோ என் பேரு இன்னும் கொஞ்சம் மாடர்னா இருந்தா மாதிரி ஞாபகம்!"

"இல்லை சார், உங்க பேரு ஆவுடையப்பன் தான் சார்! உங்க பாஸ்போர்ட்டுலே கூட அந்தப் பெயருதானிருக்கு !"

"என்னது? பாஸ்போர்ட்டா? அப்போ நான் வெளிநாடெல்லாம் போயிருக்கேனா?"

"என்ன சார் இப்படிக் கேட்குறீங்க? போனவாரம் கூட ஜெனிவா கான்ஃபிரன்ஸுக்காக நீங்க காத்மாண்டு போயிட்டு வந்தீங்களே?"

"என்னய்யா உளர்றே? ஜெனிவா கான்பிரன்ஸுக்கு எதுக்கு காத்மாண்டு போனேன்?"

"அந்த ஃபிளைட்டுலே தான் டிக்கெட் கிடைச்சுதுன்னு போயிட்டீங்க சார்!"

"டிரைவர், இன்னொரு மாத்திரையைக் கொடுய்யா!"

சிறிது நேரம் கார் பயணம் அமைதியாகக் கழிந்தது.

"டிரைவர், அதென்னய்யா இம்புட்டுப் பெரிய பில்டிங்? எப்போ கட்டினாங்க?"

"சார், மவுண்ட் ரோடு எல்.ஐ.ஸி.பில்டிங் சார்!"

"ஓ சரி சரி, மிஸ்டர் ஆவுடைக்கண்ணு!"

"என் பேரு சாமிக்கண்ணு சார், நீங்க தான் ஆவுடையப்பன்!"

"அதுனாலென்ன, ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்துலே உட்கார்ந்திருக்கிறதுனாலே குழம்பிட்டேன். ஒண்ணு பண்ணுவோமா? எனக்கு தூக்கம் வர்றா மாதிரி இருக்கு! இன்னிக்கு நான் லீவு போட்டுரட்டுமா?"

"யூ ஆர் மோஸ்ட் வெல்கம் சார்!"

"தேங்க்யூ மிஸ்டர்....மிஸ்டர்.....!"

"பரவாயில்லே சார், கஷ்டப்படாதீங்க! டிரைவர், வண்டியைத் திருப்பு! பாஸுக்கு தூக்கம் வருதாம். வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுத்துக்கட்டும்..!"

கரிகாலன் உற்சாகமாக காரைத் திருப்பி வந்தவழியே செலுத்தினான். அப்பாடா, சனி விட்டது!

"பி.ஏ சார், வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு கேட்கறேன்!"

"வேண்டாம் சார், எதுவாயிருந்தாலும் இன்னிக்குத் தூங்கிட்டு நாளைக்குக் கேளுங்க சார்!"

"ப்ளீஸ்....ஒரே ஒரு கேள்வி! அதுக்கப்புறம் நான் வீடு போயிச் சேருற வரைக்கும் எதுவுமே கேட்கமாட்டேன்."

"சரி சார், ஒரே ஒரு கேள்விதான் அலவ்டு! சிம்பிளாக் கேளுங்க சார், என்னை நம்பி பிள்ளைகுட்டிங்கெல்லாம் இருக்காங்க சார்!"

"ஓ.கே! ஓ.கே!!" என்று குரலைத் தாழ்த்தியவாறு கேட்டார் ஆவுடையப்பன். "என் பொஞ்சாதி பேரு சந்திரமதிதானே?"

பி.ஏ.சாமிக்கண்ணு மூர்ச்சையடைந்தார்.

டிஸ்கி: மக்களே! தினசரி குறைந்தபட்சம் ஏழுமணி நேரமாவது தூங்கணும். வேளாவேளைக்கு சாப்பிடணும். இல்லாட்டி நாமும் ஆவுடையப்பன் மாதிரி மறதி மாடசாமியாகி விடுவோமாம். (சே, எப்படி இதுலே ஒரு மெசேஜ் கொண்டு வந்திட்டேன் பார்த்தீங்களா? )

22 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

யப்பா வரிக்கு வரி நகைச்சுவை ரெக்கை கட்டிப் பறக்கிறது ரொம்ப நாளைக்கு அப்புறம் முழு நீள நகைச்சுவை பதிவு வாழ்த்துக்கள்

தங்கராசு நாகேந்திரன் said...

ஓட்டுப் போட்டாச்சு

Chitra said...

"ஓ.கே! ஓ.கே!!" என்று குரலைத் தாழ்த்தியவாறு கேட்டார் ஆவுடையப்பன். "என் பொஞ்சாதி பேரு சந்திரமதிதானே?"

பி.ஏ.சாமிக்கண்ணு மூர்ச்சையடைந்தார்.


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... எப்படிங்க..... இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

Philosophy Prabhakaran said...

// மக்களே! தினசரி குறைந்தபட்சம் ஏழுமணி நேரமாவது தூங்கணும். வேளாவேளைக்கு சாப்பிடணும். இல்லாட்டி நாமும் ஆவுடையப்பன் மாதிரி மறதி மாடசாமியாகி விடுவோமாம். (சே, எப்படி இதுலே ஒரு மெசேஜ் கொண்டு வந்திட்டேன் பார்த்தீங்களா? ) //

அதானே பார்த்தேன்... சேட்டை பதிவில் மெசேஜ் இல்லாமலா...

சாந்தி மாரியப்பன் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ :-)))))

எல் கே said...

புல் பார்ம்ல கலக்கறீங்க சேட்டை

Speed Master said...

அருமை அருமை

வெங்கட் நாகராஜ் said...

சிரிச்சு முடிச்சுட்டு கமெண்ட் போடவா சேட்டை .... :))))

தாங்க முடியல போங்க!

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_27.html

சிநேகிதன் அக்பர் said...

உங்க பிளாக்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமெண்ட் போட்ட ஞாபகம் இருக்கு.

பெசொவி said...

என்னடா, இது வரைக்கும் ஒரு லிங்க் கூட இல்லையேன்னு பார்த்துகிட்டிருந்தேன், பரவாயில்லை, டிஸ்கியில வந்து மெசேஜ் சொல்லிட்டீங்க!
(கமென்ட் எழுதி போஸ்ட் பண்ண மறந்துட்டேன், அதான் லேட்டா இந்த கமென்ட்)
:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

மறக்க முடியுமா? உண்மையிலேயே மறக்க முடியாத பதிவு தான்.

இரவில் தூக்கம் வராத நான், தெரியாமல் உங்கள் ப்ளாக்கில் நுழையப் போக ஒரு நகைச்சுவைக் கதை கிடைத்ததில் மகிழ்ச்சியே!

கடைசியில் கொடுத்துள்ள மெஸ்ஸேஜ் தான் என்னை மிகவும் பயமுறுத்துகிறது.

ஆனால் வேளாவேளைக்கு கரெக்ட் ஆக சாப்பிட்டு வருகிறேன். தூக்கம் மட்டும் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் ஆரம்பித்து, காலை பத்து மணி வரை தொடர்கிறது.

ஆவுடையப்பன் போல ஆகாமல் இருந்தால் சரியென்று தோன்றுகிறது உங்கள் பதிவைப் படித்ததும். பதிவுக்குப் பாராட்டுக்கள்.

ஏதாவது முக்கியமாக எழுத மறந்து விட்டேனோ? ஆமாம்... ஆமாம்... ஞாபகம் வந்து விட்டது.

gopu1949.blogspot.com என்ற என் வலைப்பூவுக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க!

settaikkaran said...

//தங்கராசு நாகேந்திரன் said...

யப்பா வரிக்கு வரி நகைச்சுவை ரெக்கை கட்டிப் பறக்கிறது ரொம்ப நாளைக்கு அப்புறம் முழு நீள நகைச்சுவை பதிவு வாழ்த்துக்கள்//

ஐயையோ, அப்படீன்னா இதுக்கு முன்னாடி எழுதினதெல்லாம் மொக்கையா? :-)))
பரவாயில்லை, உண்மையைத் தானே சொல்றீங்க? மிக்க நன்றி! :-)

//ஓட்டுப் போட்டாச்சு//

எத்தனை சார்? :-)))

settaikkaran said...

//Chitra said...

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... எப்படிங்க..... இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?//

நாங்களும் நிறைய வல்லாரை மாத்திரை சாப்டுறோமில்லே...? :-))
மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

அதானே பார்த்தேன்... சேட்டை பதிவில் மெசேஜ் இல்லாமலா...//

ரொம்பக் கஷ்டப்பட்டு நுழைச்சேன் நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ :-)))))//

ஐயையோ, அம்புட்டு வசதியெல்லாம் இல்லீங்க! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//எல் கே said...

புல் பார்ம்ல கலக்கறீங்க சேட்டை//

நெசமாவா? ரொம்ப நன்றி கார்த்தி! :-)

settaikkaran said...

//Speed Master said...

அருமை அருமை//

நன்றி நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

சிரிச்சு முடிச்சுட்டு கமெண்ட் போடவா சேட்டை .... :))))//

அம்புட்டுச் சிரிப்பாணியாவா இருக்குது? :-)

//தாங்க முடியல போங்க!//

மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

உங்க பிளாக்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கமெண்ட் போட்ட ஞாபகம் இருக்கு.//

யாரங்கே, சினேகிதன் அக்பருக்கு வல்லாரை மாத்திரை பார்சல்! :-)
மிக்க நன்றி அண்ணே!

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னடா, இது வரைக்கும் ஒரு லிங்க் கூட இல்லையேன்னு பார்த்துகிட்டிருந்தேன், பரவாயில்லை, டிஸ்கியில வந்து மெசேஜ் சொல்லிட்டீங்க!//

அப்பப்போ இந்த மாதிரி சொந்தமாவும் யோசிப்பேனே! :-)

//(கமென்ட் எழுதி போஸ்ட் பண்ண மறந்துட்டேன், அதான் லேட்டா இந்த கமென்ட்) :))//

அதுனாலென்ன நண்பரே, வந்து கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//VAI. GOPALAKRISHNAN said...

மறக்க முடியுமா? உண்மையிலேயே மறக்க முடியாத பதிவு தான்.//

ஆஹா, நன்றி!

//இரவில் தூக்கம் வராத நான், தெரியாமல் உங்கள் ப்ளாக்கில் நுழையப் போக ஒரு நகைச்சுவைக் கதை கிடைத்ததில் மகிழ்ச்சியே!//

உங்களை மகிழ்விக்க முடிந்திருந்தால் அது எனக்கும் மகிழ்ச்சியே!

//கடைசியில் கொடுத்துள்ள மெஸ்ஸேஜ் தான் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆனால் வேளாவேளைக்கு கரெக்ட் ஆக சாப்பிட்டு வருகிறேன். தூக்கம் மட்டும் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் ஆரம்பித்து, காலை பத்து மணி வரை தொடர்கிறது.//

அடடா, இப்படியும் கூட நடக்குமா? ஹிஹி..எனக்கும் சமயங்களிலே இப்படித்தான்! :-)

// ஆவுடையப்பன் போல ஆகாமல் இருந்தால் சரியென்று தோன்றுகிறது உங்கள் பதிவைப் படித்ததும். பதிவுக்குப் பாராட்டுக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்! :-)

//ஏதாவது முக்கியமாக எழுத மறந்து விட்டேனோ? ஆமாம்... ஆமாம்... ஞாபகம் வந்து விட்டது. gopu1949.blogspot.com என்ற என் வலைப்பூவுக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க!//

கண்டிப்பாக வருகிறேன்! மீண்டும் எனது நன்றிகள்! :-)

Madurai pandi said...

ha ha!! gud story