Saturday, January 1, 2011

மாடு ஆனாலும் மணாளன்

(இந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே. உயிரோடிருக்கும் மனிதர்களுடனோ, மாடுகளுடனோ யாதொரு சம்பந்தமுமில்லை!)

மாடு ஆனாலும் மணாளன்

"ஹலோ! யாரு பேசறீங்க?"

"என்னங்க, குரலை மாத்திப் பேசினா என்னாலே கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா? காலையிலே ஆபீஸ் போனவரு, இன்னும் ஒரு போன் கூட பண்ணலியேன்னு கவலையோட இருக்கேன். உங்க செல்போனிலிருந்தே போன் பண்ணிட்டு யாருன்னு கேட்கறீங்களா?" -நக்கலாகக் கேட்டாள் கோமாதா.

"மேடம்! நான் டி-ட்வென்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குண்டுமணி பேசறேனுங்க!"

"ஐயையோ போலீஸா? என் வீட்டுக்காரருக்கு என்னாச்சுங்க?"

"பதறாதீங்கம்மா! அவரு நல்லாத்தானிருக்காரு! ராத்திரி ரோந்து வந்திட்டிருந்தோமா? உங்க வீட்டுக்காரரு தெருவுலே ராமராஜன் போஸ்டர் பக்கத்துலே நின்னுக்கிட்டு அதையே வெறிச்சுப்பார்த்திட்டிருந்தாரு. என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்குறாரு! அதான் அவரோட செல்லிலேருந்து ஐ.சி.ஈ. நம்பர் பாத்து உங்களுக்கு போன் பண்ணினோம்."

"அட கடவுளே, ஆரம்பிச்சிட்டாரா? இன்ஸ்பெக்டர் சார், உங்களுக்குப் பாடத்தெரியுமா?"

"விளையாடறீங்களா மேடம்? இங்கே உங்க புருசன் நடுத்தெருவுலே பித்துப்பிடிச்சது மாதிரி நின்னுட்டிருக்காரு! இப்ப உங்களுக்கு பாட்டு கேக்குதா? என் பொஞ்சாதியை விட மோசமாயிருக்கீங்களே?"

"இன்ஸ்பெக்டர் சார், எல்லாம் காரணமாத்தான் கேட்கறேன். நானு ஒரு பி.பி.ஓ-விலே வேலை பார்க்கிறேன். இப்போ நைட் ஷிஃப்டுங்க! முடிஞ்சு நேரா ஸ்டேஷனுக்கு வர்றேன். ஒருவாட்டி நீங்க ’செண்பகமே செண்பகமே,’ பாட்டைப் பாடுங்க. அவ்வளவுதான், பின்னாலேயே வந்திடுவாரு!"

"ஒரு நிமிஷம் இருங்க! யோவ் ஏட்டு தங்கமணி! உனக்கு ’செண்பகமே செண்பகமே’ பாட்டுத் தெரியுமாய்யா?"

"இல்லை சார்!"

"மேடம், எங்களுக்கு அந்தப் பாட்டு தெரியாதே?"

"பரவாயில்லே சார், மாடு சம்பந்தப்பட்ட எந்தப் பாட்டாயிருந்தாலும் பாடுங்க!"

"யோவ் ஏட்டு, வேறே மாட்டுப்பாட்டு ஏதாவது தெரியுமா?"

"வந்தேண்டா பால்காரன் அடடா பசுமாட்டைப் பத்திப் பாடப்போறேன்."

"மேடம், மேடம்...உங்க ஹஸ்பண்ட் பாட்டுக்கு திரும்பிப் பார்க்குறாரு மேடம்! சிரிக்கிறாரு மேடம்!"

"வெரி குட்! அப்படியே பாட்டை கன்டின்யூ பண்ணிக்கிட்டே என் புருசனை ஓட்டிக்கிட்டுப் போங்க!"

"ஓட்டிக்கிட்டுப்போறதா? என்ன கொடுமை மேடம்?"

"இன்ஸ்பெக்டர் சார், கேள்வியெல்லாம் கேட்காதீங்க! லேட் பண்ணப் பண்ண ஆபத்து. அவரு முட்டினாலும் முட்டுவாரு!"

"என்னது முட்டுவாரா? யோவ் கான்ஸ்டபிள்...ஏன்யா பாடுறதை நிறுத்தினே? பாடிக்கிட்டே நடய்யா!"

"வந்தேண்டா பால்காரன் அடடா பசுமாட்டைப் பத்திப் பாடப்போறேன்."

"சார், நடந்து வராரா?"

"வர்றதா? குழந்தைமாதிரி தவழ்ந்துக்கிட்டில்லே வர்றாரு மேடம்?"

"அது அப்படித்தான் வருவாரு! தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு அசல் மாடு மாதிரியே வருவாரு! கவனமாக் கூட்டிக்கிட்டுப் போங்க சார், வழியிலே எங்கேயாவது புல்லைப் பார்த்தா மேய ஆரம்பிச்சிருவாரு!"

"என்ன கண்றாவி மேடம் இது? இவரு என்ன மனுசனா மாடா?"

"ரெண்டும் தான்! எல்லாம் நேருலே வந்து விளக்கறேன்! இப்போ அவரை உங்க ஸ்டேசனுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க சார்! ப்ளீஸ்!"

"ஓ.கேம்மா! ஏம்மா, உங்க புருசன் பேரு என்ன மாடசாமியா?"

"இல்லீங்க, பசுபதி!"

"பொறந்தப்போ வச்ச பேரா, சமீபத்துலே வச்சதா? எனிவே, நாங்க போய் தகவல் கொடுத்ததும் வந்து சேர்ந்திடுங்கம்மா. ரொம்ப நேரம் காக்க வச்சிடாதீங்க!"

"சரி சார், எதுக்கும் ஸ்டேஷனுக்குப் போனதும் அவரை வாசல்லேயே கட்டி வையுங்க. முடிஞ்சா கொஞ்சம் வைக்கோல் கொடுத்தீங்கன்னா, அவரு பாட்டுக்கு அசைபோட்டுக்கிட்டு அமைதியா படுத்திருவாரு!"

"என்னம்மா கொழந்தைக்கு அமுல்ஸ்ப்ரே கொடுக்கச் சொல்லுறா மாதிரி சொல்றீங்களே? எல்லாம் என் தலையெழுத்து! யோவ் ஏட்டு! பாட்டை நிறுத்தாதே, அப்படியே இந்தாளை இட்டுக்கினு வா!"

ஒருவழியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததும், இன்ஸ்பெக்டர் குண்டுமணியும் ஏட்டு தங்கமணியும் பசுபதியை வாசலிலிருந்த தூணில் கட்டி விட்டு நிம்மதிப்பெருமூச்சு விடுத்தனர். குண்டுமணி உடனே கைபேசியை எடுத்தார். கோமாதாவை அழைத்தார்.

"மேடம்! உங்க ஹஸ்பண்டை பத்திரமா ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்திட்டோம்! சீக்கிரம் வந்து கூட்டிக்கிட்டுப்போங்க!"

"எனக்கு ஷிஃப்ட் முடிய இன்னும் நேரமிருக்கு சார்! எங்க ஃபேமிலி டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் வந்துக்கிட்டேயிருக்காரு சார்!"

"ஏன் மேடம்? உங்க ஹஸ்பெண்ட் என்ன ஸாஃப்ட்வேர் கம்பனியிலே வேலை பார்க்கிறாரா?"

"அட, எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"

"தலையிலே அங்கங்கே முடியை எலி கரண்டிட்டுப்போனா மாதிரி இருக்குதே! அதான் கேட்டேன்!"

"ம்..ம்மா....ம்ம்ம்மா.....ஆ!" - திடீரென்று பசுபதி குரல்கொடுக்கவும்......

"சார் சார், அந்தாளு மாடு மாதிரியே கத்துறான் சார்!" என்று ஏட்டு தங்கமணி இன்ஸ்பெக்டர் குண்டுமணியின் முழங்கையில் இடித்துக் கூறினார்.

"மேடம், உங்க புருசன் மாடு மாதிரியே ம்ம்மா-னு கத்துறாரு! என்ன பண்ணட்டும்?"

"ஐயையோ, சார், உங்க ஸ்டேஷனிலே புண்ணாக்கு இருக்கா?"

"மேடம், மரியாதையாப் பேசுங்க! பார்த்தா டீசண்டான ஆசாமியா இருக்காரேன்னு இவ்வளவு ரிஸ்க் எடுத்தா, பப்ளிக் மாதிரியே நீங்களும் புண்ணாக்குன்னு சொல்றீங்களே?"

"அடடா, எங்க வீட்டுக்காரரு பசியிலே கத்துறாருன்னு நினைக்கிறேன். அதான் கொஞ்சம் புண்ணாக்கு கொடுத்தா டாக்டர் வர்ற வரைக்கும் அமைதியா இருப்பாருன்னு சொல்ல வந்தேன்."

"என்ன மேடம்? இதென்ன போலீஸ் ஸ்டேஷனா? புண்ணாக்கு மண்டியா?"

"ஓ.கே..! ஓ.கே!! புண்ணாக்கு இல்லாட்டி கொஞ்சம் புல்லாவது போடுங்க!"

"புல்லுக்கு எங்க போறது? டியூட்டி முடிஞ்சதும் சாப்பிடறதுக்கு ஒரு ஃபுல் வச்சிருக்கேன். அத வேண்ணா கொஞ்சம் ஊத்திக்கொடுக்கிறேன்."

"ஐயையோ...வேண்டாங்க சார், அவரு மிரண்டிருவாரு! அப்புறம் அடக்கவே முடியாது!"

"சார் சார்," என்று தங்கமணி இன்ஸ்பெக்டரின் தோளைத் தட்டினார். "அதோ பாருங்க சார், தலையிலே ஆப்பாயில் போட்டது மாதிரி ஒரு ஆசாமி வர்றாரு! அனேகமா அவருதான் டாக்டரா இருப்பாருன்னு நினைக்கிறேன்."

"மேடம், டாக்டர் வந்திட்டாரு! நான் அப்பாலே பேசறேன்!"

"ஹலோ பசுபதி...டுர்ர்ர்ர்றா....ஹைஹை! பாபாபாபா...டுர்யோ டுர்யோ...." என்று டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் பசுபதியைப் பார்த்து மாட்டுபாஷையில் பேசவும், பசுபதியும் பதிலுக்கு,’ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!" என்று குரல் கொடுத்தார்.

"ஏன் சார், நீங்கதான் டாக்டரா? மாட்டு டாக்டரா?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"இன்ஸ்பெக்டர்! நான் மாட்டு டாக்டரில்லை; மனோதத்துவ டாக்டர்!" என்று உறுமினார் டாக்டர் உலகப்பன். "வாங்க உள்ளே போயி விலாவரியா பேசுவோம்!"

ஸ்டேஷனுக்குள்ளே மூவரும் சென்றதும், டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் குண்டுமணிக்கும், தங்கமணிக்கும் விளக்க ஆரம்பித்தார்.

"கவனமாக் கேளுங்க சார், மிஸ்டர் பசுபதிக்கு (Boanthropy) போன்திராபின்னு ஒரு வினோதமான மனநலக்குறைபாடு இருக்கு. இதுனாலே பாதிக்கப்படுறவங்க, தங்களைத் தாங்களே பசுமாடுன்னு நினைச்சுக்குவாங்க! பசுமாடு மாதிரியே நடந்துக்குவாங்க! வைக்கோல், புல்லைப் பார்த்தா கடிச்சுத் தின்னுருவாங்க! அசைபோடுவாங்க!"

"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்று அதிர்ந்துபோய்க் கேட்டார் குண்டுமணி. "அப்போ மிஸ்டர் பசுபதி எத்தனை லிட்டர் பால்கொடுப்பாரு டாக்டர்?"

"விளையாடுறீங்களா இன்ஸ்பெக்டர்?" என்று எரிந்துவிழுந்தார் டாக்டர். "விட்டா எவ்வளவு சாணி போடுவாருன்னு கேட்பீங்க போலிருக்கே! இது ஒரு மனோவியாதி! இதை நான்தான் குணப்படுத்திட்டிருக்கேன். முன்னைக்கிப்போ நல்ல முன்னேற்றமிருக்கு! போனவாட்டி திர்லக்கேணியிலே இவரு ஒரு காளைமாட்டுக்குப் பின்னாடி ஃபாலோ பண்ணிப்போயி, அது மிரண்டு காட்டாங்குளத்தூருக்கே ஓடிப்போயிருச்சு!"

டாக்டர் உலகப்பன் பேசிக்கொண்டிருந்தபோதே ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒரு இளம்பெண் பசுபதியைப் பார்த்ததும், "பசு, டார்லிங் பசு!" என்று கூவியவாறே மயக்கம் போட்டு விழுந்தார். முதலுதவிக்குப் பிறகு சுயநினைவு திரும்பியவரை டாக்டர் ஆசுவாசப்படுத்தினார்.

"மிசஸ் கோமாதா! டேக் இட் ஈஸி! உங்க புருஷனுக்கு ஒண்ணுமில்லே! ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டா, கைத்தாங்கலா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போயிடலாம். டோண்ட் வொர்ரி!"

"புருசனா? யாரு இவரா?" என்று அலறினாள் கோமாதா.

"இதென்னய்யா புதுக்கூத்து?" என்று தலையில் கைவைத்தார் இன்ஸ்பெக்டர் தங்கமணி.

"இன்ஸ்பெக்டர்! ஒண்ணுமில்லே! புருசனை மாதிரியே இவங்களுக்கும் ஒரு பிரச்சினை இருக்குது!" என்று குட்டை உடைத்தார் டாக்டர் உலகப்பன்.

"என்னது? இவங்க எருமை மாடா?"

"இல்லீங்க சார், இதுக்குப் பேர் (Capgras Delusion) காப்கிராஸ் டில்யூஷன்! தங்களுக்கு ரொம்பவும் வேண்டியவங்களை, ’இது அவங்க இல்லை; அவங்களை மாதிரி இருக்கிற வேறே யாரோ,’ன்னு அடம்பிடிப்பாங்க! இதுவும் ஒரு மனநலக்குறைபாடுதான்!"

"என்ன கண்றாவி டாக்டர் இது? புதுசு புதுசா இவ்வளவு வியாதிகள் பேரைச் சொல்றீங்களே? இதுக்கெல்லாம் என்ன காரணம்?"

"நீங்க பேப்பர் படிக்கிறதில்லையா? தேவையில்லாத மன அழுத்தம், அளவுக்கதிகமா ட்ரிங்க்ஸ் சாப்பிடறது, சரியாத் தூங்காம இருக்கிறது-ன்னு பணம் சம்பாதிக்கிற வெறியிலே வாழ்க்கையைத் தொலைச்சு, விதவிதமான மனோவியாதிகளுக்கு ஆட்படுகிறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுதே! சமீபத்துலே கூட சென்னையில் இந்த மாதிரி அழுத்தம், மதுப்பழக்கம், பதற்றம் காரணமாக நிறைய பேர் தூக்கமில்லாமல் தவிக்கிறாங்கன்னு செய்தி வந்ததே?"

"கடவுளே! இதென்ன கொடுமை? கேட்டியா ஏட்டு? இப்படியெல்லாம் வியாதியா?"

"எனக்கு வியாதியே வராது சார்," என்று சிரித்தார் ஏட்டு தங்கமணி. "ஏன்னா நான் எப்பவோ செத்துப்போயிட்டேன். என்னை ஏன் இன்னும் புதைக்காம வச்சிருக்கீங்க?"

"யோவ் தங்கமணி! என்னய்யா உளர்றே? டாக்டர், இதென்னா?"

"இதுக்குப் பேரு (Cotard Delusion) கோடார்ட் டில்யூஷன்! இந்த வியாதியாலே பாதிக்கப்படுறவங்க தாங்கள் ஏற்கனவே செத்துப்போயிட்டதாக நினைச்சுக்குவாங்க!" என்று அனுதாபத்தோடு விளக்கினார் டாக்டர்.

"உங்களுக்குப் புண்ணியமாகப்போகட்டும் டாக்டர்!" என்று கையெடுத்துக் கும்பிட்டார் இன்ஸ்பெக்டர். "சீக்கிரமா இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு இடத்தைக் காலிபண்ணுங்க! இன்னும் கொஞ்ச நேரம் இருந்தீங்க, நான் ஓன்னு கத்தி அழுதிடுவேன்."

"அதுவும் ஒரு வியாதிதான்...அதுக்குப் பேரு...," என்று டாக்டர் உலகப்பன் சொல்லுமுன்னரே, இன்ஸ்பெக்டர் குண்டுமணி பின்னங்கால் பிடறியில் பட, தலைதெறிக்க ஓடத்தொடங்கினார்.

டிஸ்கி.1: மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களை வைத்து நகைச்சுவை செய்வதல்ல எனது நோக்கம். ஒவ்வொரு மனிதனும் தினசரி ஆறுமணி நேரமாவது நிம்மதியாக உறங்கி, மதுப்பழக்கம், பதற்றம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நல்லது என்ற மருத்துவர்களின் கருத்தையே இங்கே எழுதியிருக்கிறேன்.

டிஸ்கி.2. இது எனது 200-வது சேட்டை!

25 comments:

எல் கே said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் சேட்டை. நகைச்சுவையாய் எழுதினாலும், உங்கள் பதிவில் தகவல் இருக்கும். இதிலும் உள்ளது. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

அசத்தல் சேட்டை. ம்ம்மே.. சே சூப்பர்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

எஸ்.கே said...

மனரீதியான பிரச்சினைகளை தவிர்க்க சீரான பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்!

உங்கள் பெரும்பாலான பதிவுகள் எங்களை சிரிக்க வைத்து மன இறுக்கங்களை தளர்த்தியுள்ளது என்றால் மிகையாது. இந்த எழுத்து வழக்கத்தை தொடர்ந்திருங்கள்!

200வது பதிவிற்கு மிகுந்த வாழ்த்துக்கள்! மேலும் தங்கள் பணி செவ்வனே தொடரட்டும்!

Kumaran said...

எருமை Sorry.. அருமை.. கதை வாசித்த Effect இல் எருமை என்று வந்து விட்டது...Interesting....i like it.

நீச்சல்காரன் said...

பட்டவர்த்தனமான செய்தி

டபிள் நூறுக்கு வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

இருநூறுக்கு முதலில் வாழ்த்துக்கள். தூக்கம் சரிவர வராமல் தவிக்கும் பலபேரை பார்த்திருக்கிறேன். பணம் என்னும் ஒன்றிற்காக என்னவெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது? வழக்கம்போல் தகவல்களுடன் நகைச்சுவையாய் அசத்தல் இடுகை...

பிரபாகர்...

மாதேவி said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள்.


புத்தாண்டு மேலும் வெற்றிகளை அள்ளித் தர வாழ்த்துக்கள்.

Rekha raghavan said...

அருமை. 200-க்கு வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

200 பதிவுகள் எழுதிய சேட்டைக்கு வாழ்த்துக்கள்.

அம்மாஆஆஆஆஅ.... நகைச்சுவையாக இருந்தாலும் அதிலும் ஒரு செய்தியைச் சொல்லும் உங்கள் பாணியைத் தொடருங்கள்.

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Hilarious at the same time thoughtful... congrats on 200th post

சுபத்ரா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

200-வது பதிவிற்கு வாழ்த்துகள் சேட்டை!!!

(பதிவைப் படிச்சிட்டு வர்றேன்)

settaikkaran said...

//எல் கே said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் சேட்டை. நகைச்சுவையாய் எழுதினாலும், உங்கள் பதிவில் தகவல் இருக்கும். இதிலும் உள்ளது. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி கார்த்தி! அவ்வப்போது நான் தொய்வுற்றபோதெல்லாம் நீங்கள் அளித்த உற்சாகத்தை மறக்க முடியாது. மீண்டும்...நன்றிகள்...!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

அசத்தல் சேட்டை. ம்ம்மே.. சே சூப்பர். புத்தாண்டு வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அண்ணே! இதுவரையில் நான் வந்ததற்கு நீங்களும் ஒரு பெரிய தூண்டுதல் அல்லவா? :-)

settaikkaran said...

//எஸ்.கே said...

மனரீதியான பிரச்சினைகளை தவிர்க்க சீரான பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்!//

உண்மை. இது குறித்துப் பலர் சொல்லி, பல தகவல்களை இணையத்தில் வாசிக்க நேர்ந்தது.

//உங்கள் பெரும்பாலான பதிவுகள் எங்களை சிரிக்க வைத்து மன இறுக்கங்களை தளர்த்தியுள்ளது என்றால் மிகையாது. இந்த எழுத்து வழக்கத்தை தொடர்ந்திருங்கள்!//

உற்சாகமாக இருக்கிறது நண்பரே! மேலும் உங்களைச் சிரிக்க வைக்க தொடர்ந்து சேட்டைகளைத் தொடர்வேன்.

//200வது பதிவிற்கு மிகுந்த வாழ்த்துக்கள்! மேலும் தங்கள் பணி செவ்வனே தொடரட்டும்!//

நன்றிகள் பல! உங்களது ஊக்கமிருந்தால், எல்லாம் இனிதே நடக்கும்.

settaikkaran said...

//Sivany Kumaran said...

எருமை Sorry.. அருமை.. கதை வாசித்த Effect இல் எருமை என்று வந்து விட்டது...Interesting....i like it.//


கதையோடு மிகவும் ஒன்றிவிட்டீர்கள் போலிருக்கிறது. :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//நீச்சல்காரன் said...

பட்டவர்த்தனமான செய்தி! டபிள் நூறுக்கு வாழ்த்துக்கள்.//

நீண்ட நாட்களுக்குப் பின்னர், இங்கு வந்து ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//பிரபாகர் said...

இருநூறுக்கு முதலில் வாழ்த்துக்கள். //

எத்தனை முறை குறிப்பிட்டாலும், போதிய அளவு உங்களுக்கு நன்றி தெரிவிக்காதது போலிருக்கிறது நண்பரே! இந்தப் பயணத்தில், இவ்வளவு தூரம் வர உதவியர்களில் நீங்கள் முதன்மையானவர்.

//தூக்கம் சரிவர வராமல் தவிக்கும் பலபேரை பார்த்திருக்கிறேன். பணம் என்னும் ஒன்றிற்காக என்னவெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது? //

உண்மைதான்! எல்லாம் அதிகமாய் சம்பாதிக்கிற ஆசையால் ஏற்படுகிற பின்விளைவுகள் என்றுதான் நான் வாசித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

//வழக்கம்போல் தகவல்களுடன் நகைச்சுவையாய் அசத்தல் இடுகை...//

என்னை இப்படி எழுதுமாறு உற்சாகமூட்டிய உங்களுக்கு, அதற்காகவும் தொடர்ந்து ஊக்குவிப்பதற்காகவும், பல கோடி நன்றிகள் நண்பரே!

settaikkaran said...

மாதேவி said...

//இருநூறுக்கு வாழ்த்துக்கள். புத்தாண்டு மேலும் வெற்றிகளை அள்ளித் தர வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி சகோ! உங்களது ஊக்கமூட்டும் வரிகள் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகின்றன.

settaikkaran said...

//ரேகா ராகவன் said...

அருமை. 200-க்கு வாழ்த்துகள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//

மிக்க நன்றி! ஆரம்பநாட்கள் தொட்டே என்னைத் தொடர்ந்து மெருகேற்றி வருவதற்கு மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

200 பதிவுகள் எழுதிய சேட்டைக்கு வாழ்த்துக்கள்.//

ஐயா! எனது பெரும்பாலான இடுகைகளில் தவறாமல் உங்களது பின்னூட்டம் இருக்கும். அந்தப் பாராட்டுக்கள் தந்த வலுவினால் தான் இந்த இருநூறாவது இடுகை!

//அம்மாஆஆஆஆஅ.... நகைச்சுவையாக இருந்தாலும் அதிலும் ஒரு செய்தியைச் சொல்லும் உங்கள் பாணியைத் தொடருங்கள்.//

நீங்கள் இருக்கும்போது, உற்சாகத்துக்கு என்ன குறை? அப்படியே எழுத முயற்சிக்கிறேன் ஐயா. மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...//

பார்த்து, கருத்தும் எழுதிவிட்டேன் நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அப்பாவி தங்கமணி said...

Hilarious at the same time thoughtful... congrats on 200th post//

மிக்க நன்றி சகோ! உங்கள் பின்னூட்டம் உற்சாகமூட்டுகிறது.

settaikkaran said...

//சுபத்ரா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! 200-வது பதிவிற்கு வாழ்த்துகள் சேட்டை!!!//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)

//(பதிவைப் படிச்சிட்டு வர்றேன்)//

எங்கே?? இன்னும் காணோமே...? :-)))

RAJA RAJA RAJAN said...

அருமை... அதம் பண்ணிடீங்க பசு... சாரி, பாஸூ...!