Thursday, August 2, 2012

ரசிகர்களை ஏமாற்றிய பில்லா-II



படம்: பில்லா-II
தயாரிப்பு: ஜந்தர் மந்தர் பிக்சர்ஸ்
எடிட்டிங்: பிரசாந்த் பூஷண்
ஒலிப்பதிவு: அர்விந்த் கேஜ்ரிவால்
ஓளிப்பதிவு: கிரண் பேடி
கதை,திரைக்கதை,வசனம் & டைரக்‌ஷன்: அண்ணா ஹஜாரே

நடிகர்கள்: அண்ணா ஹஜாரேயும் 40 தொண்டர்களும்.

      பிரபலமான கதாநாயகன், கனல்பறக்கும் வசனங்கள், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், திகிலூட்டும் சண்டைகள் என்று பல அம்சங்கள் இருந்தாலும், வலுவான திரைக்கதை இல்லாவிட்டால், எவ்வளவு பிரம்மாண்டமான தயாரிப்பாக இருந்தாலும், படுத்துவிடும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

      கதை: கதாநாயகன் அண்ணா ஹஜாரே திருமணமாகாத ஒரு முன்னாள் ராணுவ வீரர்! (இதை எல்லா காட்சியிலும் திரும்பத் திரும்பச் சொல்லியிருப்பது அலுப்பூட்டுகிறது.) அண்ணாவின் ஊரில் காங்கிரஸ் என்ற ஒரு பண்ணையார் தனது 15 அடியாட்களுடன் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார். இதைக் கண்டு பொங்கியெழும் அண்ணாவும், அவரது தம்பிகளும், தங்கைகளும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.

      15 அடியாட்களும் அவர்கள் மீது அவர்களே வழக்குப்போட்டு, அவர்களை அவர்களே குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கி, அவர்கள் கையில் அவர்களே விலங்கு போடும்வரை நாங்கள் மம்மம் சாப்பிட மாட்டோம் என்று சபதம் மேற்கொள்கிறார்கள். அத்தோடு முந்தைய படத்தில் அந்தப் படத்தின் வில்லன் கடத்திக் கொண்டுபோன கதாநாயகி லோக்பாலையும் மீட்டு வருவதாகச் சூளுரைக்கின்றனர். இறுதியில், ‘அந்தக் கதாநாயகி வரமாட்டாள்; நாங்கள் இன்னொரு படம் எடுத்து புதிய கதாநாயகியை அறிமுகப்படுத்துகிறோம்என்று வில்லன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுச் சொல்லிவிட்டு, ஊரை விட்டே ஓடுகிறார்கள்.

      இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ராஜ்காட்டில் கதாநாயகன் ‘ நானடிச்சா தாங்க மாட்டே; நாலுமாசம் தூங்க மாட்டே!என்று கூட்டத்தோடு பாடிக்கொண்டு வருவதுபோலப் படமாக்கப்பட்ட விதம் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், பாடல் முடிந்ததும் துணை நடிகர்கள் உட்பட அனைவரும் மாயமாய் மறைந்து போனதும், அதைத் தொடர்ந்து கௌரவ நடிகராக வரும் பாபா ராம்தேவ் வந்து என்கிட்டே மோதாதே!” என்று பாடி கைதட்டலை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார். இந்த இடத்தில் திரைக்கதையில் ஏற்படும் தொய்வு இறுதிவரை தொடர்கிறது.

      கதாநாயகி லோக்பாலை முதலில் மீட்பதா அல்லது 15 அடியாட்களைப் பழிவாங்குவதா என்று கதாநாயகனும் அவரது சகாக்களும் சண்டையிட்டு மூக்கிலிருந்து ரத்தம் வடிகிற காட்சிகள் இதுவரை காணாத நகைச்சுவை! இது தவிரவும் படத்தில் ஆங்காங்கே வருகிற பல வீராவேசமான வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறது.

      நானும் ரவுடிதான்! என்னையும் ஜீப்புலே ஏத்துங்க!என்று அர்விந்த் கேஜ்ரிவால் உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைகிற காட்சியில், பக்கத்திலிருந்தவர் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்ததில் அவரது பல்செட்டு கழன்று பக்கத்துத் திரையரங்குக்குள் சென்று விழுந்து விட்டது.

      அடிவாங்குனது நாங்க! கப்பு எங்களுக்குத்தான்!என்று பிரசாந்த் பூஷண் கோதாவில் இறங்கி கர்ஜிக்கும்போது, ‘இது கார்ட்டூன் நெட்வொர்க் படத்தை விட நல்லாயிருக்கு,என்று குழந்தைகளும் குதூகலிப்பதைக் காண முடிந்தது.

      கூட்டமே வரவில்லையே என்று கேட்டவுடன், ‘பன்னிங்கதான் கூட்டமா வரும்; சிங்கம் வரவே வராது,என்று அண்ணா கூறிய பஞ்ச் டயலாக் ஆரவாரமாக வரவேற்கப்பட்டதையும் காண முடிந்தது.

      இப்படியே பட்டினி கிடந்தால் உயிருக்கு ஆபத்தாச்சே?என்று கேட்டதும், ‘பட்டினி கிடந்து செத்தாலும் சாக மாட்டோம்,என்று கிரண் பேடி பதிலளிக்கிற காட்சியில் ஆபரேட்டரே அரண்டுபோய் அரங்கத்தைவிட்டு ஓடிவிட்டதாக அரசல்புரசலாகப் பேசிக் கொள்கிறார்கள்.

      ஆனாலும், இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் பார்க்க அடுத்த படத்தையும் பார்க்க வேண்டும் என்று இடைவேளையிலேயே கார்டு போடுவது மோசமான டைரக்‌ஷன் ஆகும்! இருந்தாலும், பின்பாதியில் வருகிற சில உருக்கமான வசனங்கள் கல்மனதையும் கரைய வைப்பதாய் இருக்கின்றன.

      எங்க காலில் வந்து விழுங்கன்னு எம்புட்டு நாளா காலை நீட்டிட்டுப் படுத்திருக்கோம். ஒரு பய கூட வரலியே! இந்த வில்லனுங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா? “ என்று அண்ணா ஹஜாரே கேட்கிற காட்சியில் ஆளாளுக்குக் கர்ச்சீப்பைப் பிழிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

      மரியாதையா எங்க காலில் வந்து நீங்க விழுங்க! இல்லாட்டி உங்க காலில் நாங்க வந்து விழணும்னாவது சொல்லுங்க! இப்படி ஒண்ணுமே சொல்லாட்டி எப்படி?என்று கிரண்பேடி கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்கிற காட்சி லேடீஸ் ஆடியன்ஸுக்கு மிகவும் பிடித்தமான செண்டிமெண்ட் காட்சியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

      பொதுவாக, நல்லவனாக இருக்கும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் வில்லனை எதிர்கொள்ள கெட்டவனாக மாறுவது பன்னெடுங்காலமாக திரைப்படங்களில் காணப்படுகிற உத்தி. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை, கதாநாயகனின் மாற்றத்தை அடுத்த படத்துக்கு ஒத்தி வைத்திருப்பதுதான் படத்தின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

      படம் பார்க்கிற ஜனங்களே! நீங்களே சொல்லுங்க! நாங்க இருக்கிறதா, சாவுறதா? என்று பார்வையாளர்களைப் பார்த்து இறுதிக்காட்சியில் கதாநாயகன் கேட்பதும், அதைப் பார்த்துக்கொண்டு வில்லன் கோஷ்டி தலையிலடித்துக் கொண்டு சிரிப்பதும் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு சற்றும் ஒவ்வாத காமெடி!

      இந்தப் படம் எல்லா அரங்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம். திருட்டு விசிடிக்க்காரர்கள் கூட இப்படத்தைப் பகீஷ்கரித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, ஜந்தர் மந்தர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு வெளிவரும் வரையில், பார்வையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று தில்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

11 comments:

sathishsangkavi.blogspot.com said...

//”படம் பார்க்கிற ஜனங்களே! நீங்களே சொல்லுங்க! நாங்க இருக்கிறதா, சாவுறதா?’//

படம் ஊத்தினாலும் பதிவு சூப்பர் ஹிட் தலைவரே...

கோவை நேரம் said...

இது என்ன டெல்லி பில்லா வா..?

பால கணேஷ் said...

வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது ஜந்தர் மந்தர் பிக்சர்ஸாரின் படத்துக்கான உங்களின் விமர்சனம்(?). சூப்பருங்கோ!

வெங்கட் நாகராஜ் said...

சூப்பர்...

தற்போதைய செய்தி: நாளை முதல் ஜந்தர் மந்தர் பிக்சர்ஸ் மூடப்படுகிறது.... அடுத்த வெளியீடு விரைவில்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா.. ரசித்தேன்...

நன்றி…

சிவக்குமார் said...

அருமையான கற்பனை உண்மையைச் சொல்லிவிட்டது

ஸ்ரீராம். said...

கிரண்பேடியின் டயலாக் அருமை! ஒவ்வாத காமெடியும், கடைசி பாராவும் டாப்!

S. Arul Selva Perarasan said...

சூப்பர்

கோமதி அரசு said...

சேட்டைக்காரன் உங்களை மறுபடியும் பதிவுலகில் கண்டதும் மகிழ்ச்சி.

இந்தப் படம் எல்லா அரங்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம். திருட்டு விசிடிக்க்காரர்கள் கூட இப்படத்தைப் பகீஷ்கரித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, ஜந்தர் மந்தர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு வெளிவரும் வரையில், பார்வையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று தில்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.//

உண்மையை நகைச்சுவையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Pushparagam said...

padam odalvillyaam. theatre
kadhavai izhuthtu mUdivittarkal
innum sollaponaal OOththikidissu
Raghavan

kankaatchi.blogspot.com said...

கற்பனை அருமைதான்.
இப்படிதான் நம் நாட்டு மக்கள் தம்மை ஒவ்வொரு கணமும் சுரண்டி தின்றுகொண்டிருக்கும் லஞ்ச பேயின் ஆபத்தை உணராமல் லஞ்சத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கேலிக்குரிய பொருளாக சித்தரித்து மகிழ்வது வருத்தத் திர்க்குரியது லஞ்சத்தை ஒழிக்க ஒவ்வொரு தனி மனிதனும் சில தியாகங்களை செய்யாமல் அதை ஒழிக்க முடியாது. அது ஏதாவது உருவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இனிமேல் இந்த நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது .இங்கு யார் வேண்டுமானாலும் வந்து கொள்ளையடித்து கொண்டு போகலாம்.குழப்பங்களை விளைவிக்கலாம். நாட்டிற்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கலாம். ஆளும் அரசுகள் அறிக்கைகள் விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெயரளவில் உதவித்தொகை அளித்துவிட்டு அடுத்த தேர்தலுக்கான இலவசங்களை அளிக்க திட்டங்கள் தீட்ட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள். அப்படியே கொள்ளையடித்த பணத்தை
ச்விச்ஸ் வங்கியிலோ,பிரான்சிலோ போட்டுவிட்டு உலகம் சுற்றி வருவார்கள். திரும்பி வரும்போது வரவேற்பு அளிக்க ஏமாளிகளான மக்களும் கட்சி தொண்டர்களும் தயாராக இருப்பார்கள்.