Monday, August 6, 2012

ஜிஸ்ம் - சன்னி லியோனிஸம்


ஜிஸ்ம்-1 படத்தை எப்படி பிபாஷா பாசுவுக்காகப் பார்த்தேனோ, அதே போல ஜிஸ்ம்-2 படத்தை சன்னி லியோனுக்காகவே பார்த்தேன் என்ற உண்மையைச் சோற்றில் மறைக்க விரும்பவில்லை. ‘பிக் பாஸ்நிகழ்ச்சியில் அம்மணி பங்கேற்றபோது, இயக்குனர் மகேஷ் பட் அவரை ஒப்பந்தம் செய்த நாளிலிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இந்தப் படத்தைப் பற்றிய சிறிய, பெரிய தகவல்களை இணையத்திலும், ஆங்கில ஏடுகளிலும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாத அளவுக்குத் திகட்டத் திகட்டப் புகட்டி விட்டிருந்தார்கள்.

       கரேன் மல்ஹோத்ரா என்ற இயற்பெயர் கொண்ட இந்த சன்னி லியோன் அமெரிக்காவில் மிகப்பிரபலமான பலான பலான படத்து நடிகை என்பதனால், பிபாஷாவையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுவார் என்பது முதலிலேயே தெரிந்து விட்டிருந்தது. முன்று வருடங்களாக கூகிளாரில் அதிக பக்தகோடிகளால் தேடப்பட்ட கத்ரீனா கைஃபை கத்தரித்து விட்டு 2011-ல் முண்டியடித்து முன்னேறியிருந்தார் சன்னி லியோன். போதாக்குறைக்கு, இணையத்தில் கசாப்புக்கடையில் தொங்கும் உரித்த ஆடு போல சன்னி லியோனின் படங்கள் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போதெல்லாம் இந்தி சினிமாக்களில் தாராளமயமாக்கல் கொள்கை தண்ணீர்பட்ட பாடாகிவிட்டதால், ‘வந்ததும் பார்த்துடணுமய்யாஎன்று நண்பர்கள் வட்டாரத்தில் ஏகோபித்த தீர்மானம் எப்போதோ நிறைவேற்றப்பட்டிருந்தது. ஓ.சியில் பார்த்ததாலோ என்னவோ, படமும் எனக்கு அவ்வளவு மோசமாக இருப்பதாய்ப் படவில்லை.

       விமர்சனம் என்று வந்துவிட்டால், கதையைப் பற்றி இரண்டு வரியாவது எழுதாவிட்டால், ‘மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்என்ற கிண்டலுக்கு ஆளாக நேரிடும். எனவே....

       இஸ்னா (சன்னி லியோன்) ஒரு ஆபாசப்பட நடிகை. அவரது முன்னாள் காதலனும் இன்னாள் கொலைகாரனுமான கபீர் (ரந்தீப் ஹூடா) தேசத்தின் பிரமுகர்களைக் குறிவைத்துத் தீர்த்துக் கட்டுகிறவன். வயிற்றுப்பிழைப்புக்காக (?) தினம் ஒரு ஆடவருடன் புழங்கிக்கொண்டிருக்கும் இஸ்னாவை அணுகுகிறான், ஒரு அனாமத்து ரகசிய புலனாய்வுத்துறையில் பணிபுரியும் கதாநாயகன் அயான் (அருணோதய் சிங்). கபீரின் ரகசியங்களைக் கண்டுபிடித்து நாட்டைக் காப்பாற்ற இஸ்னாவின் உதவியை நாடுகிறான் அயான். அதைத் தொடர்ந்து இருவரும் கபீரைத் தேடி இலங்கைக்குச் சென்று சிலபல முத்தங்கள் பரிமாறி, ஓரிரு டூயட்டுகளுக்கு உதடசைத்து, முக்கோணக்காதலில் திக்குமுக்காடி, உணர்ச்சிமயமாக வசனம் பேசி, பெரும்பாலான காட்சிகளில் போனால் போகிறதுஎன்பதுபோல குறைந்தபட்ச உடைகளோடு நடமாடி, ஒருவழியாக தங்களது தேசபக்தியை இறுதியில் நிலைநாட்டுகிறார்கள்.

       இப்போதெல்லாம் தீவிரவாதம், தேசபக்தி ஆகிய கருவேப்பிலை, கொத்துமல்லி இல்லாமல் இந்தியில் பக்த பிரகலாதா படம்கூட எடுக்க முடியாது போலிருக்கிறது. ஒரு வித்தியாசத்துக்காக இலங்கைப்பக்கமாகப் போய், கண்ணுக்குக் குளிர்ச்சியாக பளிச்சென்ற இயற்கைக்காட்சிகளைப் படம்பிடித்து வந்திருக்கிறார்கள். அப்புறம், இது போன்ற B-Complex தேசபக்திப்படங்களில் இருந்தே தீர வேண்டும் என்பது போல கதாநாயகியின் முதுகை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து ‘சாவுங்கடா என்று காண்பிக்கிறார்கள். முதுகுக்கும் தேசபக்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமெனில், தெரிந்தவர்கள் சட்டைபோட்டுக் கொண்டு வந்து விளக்கவும்.

       பொதுவாக கதையில் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பது விமர்சகர்களின் முக்கிய வேலை. இயக்குனர் பூஜா பட் நமக்கு அந்த சிரமத்தை வைக்காமல், எக்கச்சக்க ஓட்டைகளை வைத்தே ஒரு கதையை ஒப்பேற்றி இருக்கிறார்.

       இந்தப் படத்தை இறுதிவரை பொறுமையாக பார்க்க வைத்த அம்சங்கள் (சன்னி லியோன் தவிர) ஒளிப்பதிவும், இசையும் தான். திரைக்கதை ஆங்காங்கே முக்கிய கதாபாத்திரங்கள் போலவே திருதிருவென்று விழித்தாலும், அதிக வளவளப்பில்லாத வசனங்களும், படப்பிடிப்பும், முக்கியமாக படத்தொகுப்பும் கைகொடுத்திருக்கின்றன.

       இந்தப் படத்தைப் பெரும்பாலானவர்கள் சன்னி லியோனுக்காகவே பார்க்க வந்திருப்பார்கள் என்பதால், முதலில் அவரைப் பற்றிச் சொல்லி விடலாம்.
      
       அறிமுகக் காட்சியிலேயே ‘பைசா வசூல்என்பதைப் புரிய வைக்கிற திடுக்கிட வைக்கும் கவர்ச்சி! உடை விசயத்தில் அதிக செலவு வைக்கவில்லை என்றாலும் ஓரிரு காட்சிகளுக்குப் பிறகு அவரது தோற்றமும் உடல்மொழியும் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துவது உண்மை. நடிக்க முயன்றிருக்கிறார் என்பது தெரிவதோடு, சில இடங்களில் அந்த முயற்சி நகைப்புக்குரியதாகியிருப்பதுதான் கொடுமை! அனேகமாக யாரோ டப்பிங் செய்திருப்பார்கள் என்றாலும், இப்படி தூரதர்ஷனில் செய்தி வாசிக்கிற மாதிரி பேசி கடுப்பேற்றியிருக்க வேண்டாம். ஆனால், வருகிற ஒவ்வொரு காட்சியிலும் திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஊடகங்களில் அவரது நடிப்பு எள்ளி நகையாடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. ( இந்த CNN-IBN  ராஜீவ் மசந்தை எப்பய்யா நாடுகடத்தப் போறீங்க?)

       படம் பார்த்துவிட்டு வருகிறவர்களிடம் யாராவது போய் ‘சன்னி லியோன் நடிப்பு எப்படி?என்று கேட்டால், அவர்கள் அசடுதான் வழிய வேண்டும். இந்த விமர்சகர்கள் ஏன் இப்படி புகாரி ஹோட்டலுக்குப் போய் புளியோதரை கேட்கிறார்களோ தெரியவில்லை.

       இந்திய சினிமாவுக்கு இப்படத்தில் வருகிற சில காட்சிகள் ரொம்பவே துணிச்சலாகப் படம்பிடிக்கப் பட்டவைதான்! ஆனால், இயந்திரத்தனமாக இருப்பதனாலோ என்னவோ சுவாரசியம் தட்டவில்லை. கதாநாயகன் நாயகி கெமிஸ்ட்ரி என்று சொல்வார்களே, அது எந்தக் காட்சியிலும் தென்படாததால் ஒட்டவில்லை.
      
       அயானாக வரும் அருணோதய் சிங்கும், கபீராக வரும் ரண் தீப்ஹூடாவும் சட்டை போடுவது பஞ்சமாபாதகம் என்பதுபோல பெரும்பாலான காட்சிகளில் தங்களது புஜபலபராக்கிரமங்களைக் காட்டியவாறே வருகின்றனர். இருவரில் நடிப்பில் தேறுபவர்கள் ரண்தீப் ஹூடா தான்!

       மொத்தத்தில், இந்தப் படத்தைப் பார்ப்பதனால் யாரும் அந்தகூபத்துக்குச் செல்லப்போவதில்லை என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

       அது சரி, நம்ம ஊர் ஷகீலா, கின்னாரத்தும்பிகள் போன்ற படங்களில் நடித்துவிட்டு, ஊர் ஊராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க, அமெரிக்காவிலிருந்து பலான பலான படத்து நடிகையை இறக்குமதி செய்து எடுத்த படத்தை மல்ட்டிப்ளக்ஸுகளில் ஆணும் பெண்ணும், கோக்கும் பாப்கார்னும் காம்போவில் வாங்கிக்கொண்டு, கண்டு களிப்பது நமது ரெண்டுங்கெட்டான் கலாச்சாரத்துக்கு ஒரு நல்ல சான்று!

       அடுத்து யாரை வைச்சுப் படம் எடுக்கப்போறீங்க சாமிகளா? பீ குவிக்! :-)

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

//முதுகுக்கும் தேசபக்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமெனில், தெரிந்தவர்கள் சட்டைபோட்டுக் கொண்டு வந்து விளக்கவும்.
//

அடடா.. என்ன ஒரு கேள்வி...

நல்ல விமர்சனம் சேட்டை அண்ணா....

முத்தரசு said...

ம்.....அப்படியா

Kannan.s Space said...

ஜொள்ளு விட்டு படத்தை பார்த்து விட்டு அப்படியென்ன ஒரு கடைசி பாரா?

Anbazhagan Ramalingam said...

SEMA SAETTAI