Sunday, October 2, 2011

பசி ஓரிடம்; பாவ் ஓரிடம்


மும்பையின் வடாலா ரயில் நிலையம் தொடங்கி மஸ்ஜித் பந்தர் வரையிலுமான ரயில்பாதையை ஒட்டி, அழகுப்பெண்ணைப் பின்தொடரும் வயசுப்பையன்கள் போல, பக்கவாட்டில் சில ஜோடித் தண்டவாளங்கள் கூடவே வரும். அந்தத் தண்டவாளங்கள் மும்பை துறைமுகத்துக்குச் சொந்தமானவை என்றாலும், குறிப்பிட்ட பகுதிகள் விதிவிலக்காக பிற பகுதிகளில் சாமானியர்கள் செல்வதற்கும் அனுமதியுண்டு. மும்பையின் பஞ்சுச்சந்தை இருக்கும் காட்டன்க்ரீன் ரயில்நிலையத்தில் இறங்கி, குறுக்கிடும் கணக்கற்ற தண்டவாளங்களைக் கவனமாய்க் கடந்து எங்கள் அலுவலகத்தின் துறைமுகத் தனிப்பிரிவு இருந்த ஃபோஸ்பரி சாலைக்குப் போவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

சில சமயங்களில் காலை முதல் மாலைவரை ஒரு கிடங்கிலிருந்து இன்னொரு கிடங்குக்குப் போகையில் குறுக்கே நீளமான சரக்கு வண்டிகள் ஆமைவேகத்தில் வந்தால், தாராளமாக ஏதேனும் மரநிழலில் படுத்து ஒரு குட்டி உறக்கமே போட்டு விடலாம். ஆகவே, மதிய உணவுக்காக மெனக்கெடாமல், கண்ணில் தென்படுகிற சின்னச் சின்ன ஹோட்டல்களுக்குள் புகுந்து கிடைக்கிற எதையோ வயிற்றுக்குள் தள்ளிக் கடமையை நிறைவேற்றினால், மாலை கிளம்பும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம். அப்படிக் கடைகடையாய் ஏறியிறங்கியபோதெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைத்ததுதான்- பாவ்!

நம்மூரில் ’பன்’ என்று அவசரப்பசிக்கு ஆராமுதாய்க் கிடைக்கும் வட்டவடிவமான, மிருதுவான வஸ்துவைத்தான், அங்கே சதுரமாக, தித்திப்பு இல்லாமல் ’பாவ்’ என்று பெயர்சூட்டி விற்பனை செய்கிறார்கள். இப்போது சென்னையில் கூட பாவ்-பாஜி கிடைக்கிறது என்றாலும், இங்கு கிடைப்பதை பாவ் என்று சொன்னால், அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது.

மும்பையில் ஆங்காங்கே காணப்படுகிற இரானி ஹோட்டல்களில் ஏறக்குறைய வெந்நீர் போலிருக்கும் இரானித்தேனீருடன் மஸ்கா-பாவ் சாப்பிடாதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது. பொதுவாக மெத்துமெத்தென்றிருக்கும் பாவ் தவிரவும், மொறமொறப்பாக ஏறக்குறைய ரஸ்க் போலிருக்கும் கடக்-பாவும் இரானி ஹோட்டல்களில் வைத்திருப்பார்கள். ’ஏக் கடக்பாவ் மஸ்கா லகாக்கே தேனா,’ என்று சொன்னால்போதும்; பாவைக் குறுக்குவாட்டில் கத்தியால் பிளந்து, உள்பக்கத்தில்  கொழுகொழுவென்று வெண்ணைதடவிக் கொடுப்பார்கள். அதை மென்று உள்ளே தள்ளினால், வயிற்றுக்குள்ளே சாயங்காலம் வரைக்கும் சாதுவாய்ப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும்.

பாவ்-வை எதனுடன் உண்ண வேண்டும் என்று மும்பையில் உடனடியாக ஒரு ஜன்லோக்-பாவ் சட்டம் நிறைவேற்றினால் சாலச்சிறந்ததாயிருக்கும். பயபுள்ளைக, ஷீரா என்று அழைக்கப்படுகிற ரவாகேசரி தொடங்கி எதைத் தின்றாலும் இரண்டு மூன்று பாவுடன் சாப்பிடுவதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், நானும் பாவ்-வை ஒருசில காம்பினேஷன்களில் உண்டுகளித்திருக்கிறேன். அவையாவன:

உசள்-பாவ்:

இந்த உசள் எனப்படுவது யாதெனில், நம்மூரு மிளகு ரசம் போன்று சற்றே உப்பும் உறைப்பும் நிறைந்த ஒரு மசாலாத் திரவம். ஆபத்து, அவசரத்துக்கு நான்கு பாவுகளை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து, இந்த உசளில் மூச்சுத்திணற மூழ்கடித்து வாயில்போட்டுக்கொண்டால், தொண்டைக்குழிக்குள் ரசவடையைப் போல விரைந்து இறங்கிவிடும். எக்ஸ்ட்ரா உசள் வாங்கினால் தப்பில்லை என்றாலும் மீதமிருக்கும் உசளை ’ஏன் விடணும்?’ என்று குடித்தால் அன்று லீவு போட நேரிடலாம். "As I am suffering from acute stomach ache, I request you to grant me a day's leave...yours painfully..."

மிசள்-பாவ்

மிசள் பாவ் என்பது அனேகமாக உசள்பாவின் சக்களத்தியாக இருக்கலாம் என்று எ.தி.ஏ.வி.சங்கத்தினர் கூறுகின்றனர். (எ.தி.ஏ.வி.சங்கம்= எதையோ தின்று ஏப்பம் விடுவோர் சங்கம்). அவ்விடத்தில் நம்கீன் என்று அழைக்கப்படுகிற ஓமப்பொடி, மிக்சர், காரச்சேவு இவற்றுடன் பொடிப்பொடியாக அரிந்த வெங்காயம் என்று பல அயிட்டங்களை உசளில் ஊறவைத்து ஒரு ஸ்பூனும் போட்டுக் கொடுத்து விடுவார்கள். ஒரு கையில் பாவும், மற்றோரு கையில் ஸ்பூனுமாய் தண்ணீர் குடிக்கவும் நாதியில்லாமல் சாப்பிடப்படுகிற அயிட்டம் இது. வாயுக்கோளாறு இருப்பவர்கள் இதனருகில் போகாமல் இருப்பது, அவர்கள் சமூகத்துக்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படும்.

பாவ்-சேவ்பூந்தி

இது அட்சய்குமார் நடிக்கிற இந்திப்படத்தை விட மட்டமான ஒரு அயிட்டம். என்னதான் பாவ் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்தாக இருந்தாலும், ஓமப்பொடியுடன், ஸ்வீட் பூந்தியைக் கலந்தா சாப்பிடுவார்கள்? சீவ்ரி ரயில் நிலையமருகே ஒரு குஜராத்தி இதை அனுபவித்துச் சாப்பிட்டதோடல்லாமல், ’கணு சாரு சே! (ரொம்ப நல்லாயிருக்கு!)" என்று பாராட்டியதைக் கேட்டதும் ’என்னய்யா ரசனை? சே..ச்சே!" என்று தலையிலடித்துக் கொண்டேன் நான்.

பாவ்-பாஜி

வரலாறு தெரியாதவர்கள் பாவ்-பாஜியின் ஜனனம் கி.பி.20-ம் நூற்றாண்டில் மும்பையில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுவது பஞ்சாபுக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதியாகும். உருளைக்கிழங்கு, தக்காளி, குடைமிளகாய் என்று பல கலர்களில் காய்கறிகளை வேகவைத்து, அதை ஒரு பெரிய பரோட்டாக்கல்லில் போட்டு நைநையென்று நசித்து மசித்து, அரிந்த வெங்காயத்தைத் தூவி, பைத்தியம் பிடிக்காமல் இருக்க எலுமிச்சையைப் பிழிந்து கொடுப்பார்கள். நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..!’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும். மும்பை சத்ரபதி சிவாஜி டர்மினஸுக்கு எதிரேயிருக்கிற கேனன் மற்றும் சயனில் இருக்கும் ’குருக்ருபா’வில் பாவ்-பாஜி சாப்பிட்டால் ’வாவ்-பாஜி(Paaji)' என்று பஞ்சாபியரைப் பாராட்டத்தோன்றும் என்பது உறுதி. இனி....

வடா-பாவ்

பாவ் உலகின் சூப்பர் ஸ்டார் வடா பாவ். ஆனானப்பட்ட சச்சின் டெண்டுல்கரே ’இதையடிச்சுக்க வேறே டிஷ்ஷே கிடையாது,’ என்று பாவாட்டி, அதாவது பாராட்டியிருக்கிறார் என்றால் பாருங்களேன்.

நம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்-டில் வரும் சிம்ரன் என்றால், மும்பையின் ’வடா’ ’வாலி’யில் பார்த்த சிம்ரன். அளவுதான் மாறுபடுமே தவிர இரண்டுமே போண்டாதான். மும்பையில் இந்த வடாவுக்கென்று ஒரு பூண்டுசேர்த்த மிளகாய்ப்பொடியுடன், பாவிலே பச்சைச்சட்னி தடவி, போண்டாவை பாவுக்குள்ளே வைத்து அமுக்கித் தருவார்கள். தெரியாத்தனமாய், முழுசாக வாய்க்குள்ளே திணித்துக்கொண்டால், ராக்கி சாவந்தைக் கனவில் பார்த்த பாபா ராம்தேவ் மாதிரி பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். மெதுவாகக் கடித்து, ரசித்து மென்றால் தாராளமாக நாலைந்து சாப்பிடலாம். உறங்குவதற்கு முன்னர் ஜெலூசில் அரைக்கால் தம்ளர் குடிப்பது நல்லது; இல்லாவிட்டால் தமிழகம் திரும்பியதும் ஒரு நடை திருநள்ளாறு போக நேரிடலாம்.

இந்த இடுகையை எழுதுவதற்குக் காரணம் - இன்று மதியம் சென்னையின் மிகப்பிரபலமான ஒரு ஹோட்டலில் பாவ்-பாஜி சாப்பிட்டுத் தொலைத்ததுதான்! (அடப்பாவிகளா!)

தென்னாட்டில் பஞ்சாபி சமோசாவை சம்சாவாக்கி, பூரிக்குச் செய்கிற கிழங்கை வைத்து அதன் குலப்பெருமையைக் குழிதோண்டிப் புதைத்ததனால் தான், வட மாநிலங்களில் தோசை ஆர்டர் செய்தால், ஒரு தட்டில் தோசைக்கல்லையே கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலும் சமோசாவுக்குள்ளே முட்டைக்கோசை வைக்கிற நம்மவர்களின் அடாதசெயலை ஆண்டவனே மன்னிக்கமாட்டார். இந்தப் பாவத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பாவ்-பாஜியின் பாரம்பரியத்துக்கே இழுக்கு ஏற்படுத்துவதுபோல, அதிலே புடலங்காய், பூசணிக்காய் தவிர எல்லாக் காய்கறிகளையும் போட்டு பிளேட்டுக்கு ஐம்பத்தி ஐந்து ரூபாய் வாங்குகிறவர்கள் எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் அவர்களுக்கு ’பாவ்-மன்னிப்பு’ கிடைக்காது.

25 comments:

கோகுல் said...

பா,,,,,,,,,,,,,,,வ்

இப்படித்தான் சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டிங்களா?

Anonymous said...

’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா?

வெங்கட் நாகராஜ் said...

Yours painfully! :)) ஆங்கிலத்திலும் சேட்டை!

Be a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....

SURYAJEEVA said...

அருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்

பால கணேஷ் said...

ஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க... (நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..!’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே... பதிவு வழக்கம்போல் (சூப்பர்).

கும்மாச்சி said...

சேட்டை பாவ் அலசல் சூப்பர்.

உங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர "உசிள் பாவா" முனைவர் "பாவ்"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>நம்மூரு உருளைக்கிழங்கு போண்டா ஜாக்பாட்-டில் வரும் சிம்ரன் என்றால், மும்பையின் ’வடா’ ’வாலி’யில் பார்த்த சிம்ரன். அளவுதான் மாறுபடுமே தவிர இரண்டுமே போண்டாதான்.

அடடா.....அறிவுக்கொழுந்துண்ணே!!

நாய் நக்ஸ் said...

Nalla aaivu ....

Mahi_Granny said...

பாவ் இ.

Unknown said...

அன்பரே
சென்னையில் பாவ் பாஜி
சாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக
கருதுவதாகத் தெரிகிறது

பாவ் பற்றிய ஆய்வு அருமை!

புலவர் சா இராமாநுசம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து பானி பூரியா?

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,

பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.

Unknown said...

உருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி!

test said...

//yours painfully//
:-)

சூப்பர் சேட்டை பாஸ்!

MANO நாஞ்சில் மனோ said...

மிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும், யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...!!!

சாந்தி மாரியப்பன் said...

சமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))

மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந்த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.
மிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.

திருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))

Anonymous said...

தாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...

ஞாபகங்களை கிளறியது பதிவு...

settaikkaran said...

//கோகுல் said...

பா,,,,,,,,,,,,,,,வ்! இப்படித்தான் சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டிங்களா?//

ஒரிஜினல் பாவ்-னா அப்படித்தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

//ரெவெரி said...

’பாவ்-மன்னிப்பு’ கேட்கிற அளவுக்கு பெரிய பாவ் அமா?//

மகா பாவ்-அம்! மிக்க நன்றி நண்பரே! :-)

//வெங்கட் நாகராஜ் said...

Yours painfully! :)) ஆங்கிலத்திலும் சேட்டை!//

வாங்க வெங்கட்ஜீ! தெலுங்கும் படிச்சிட்டிருக்கேன். :-)

//Be a roman when you are in Rome... இது சாப்பாட்டிற்கும் பொருந்தும் சேட்டை. எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊர் சாப்பாட்டையே சாப்பிடுவது மேல்....//

சத்தியவாக்கு! இனி தமிழ்நாட்டுலே பாவ்-பாஜியெல்லாம் தொட மாட்டனே! :-)
மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

//suryajeeva said...

அருமையோ அருமை... நான் பாவ் பாஜி யா சொன்னேன்//

சாப்பிட்டீங்களா! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே! :-)

//கணேஷ் said...

ஆக, நல்ல பாவ் சாப்பிடனும்னா பா(வ்)ம்பேக்குத்தான் போகணும்கறீங்க...//

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி பெங்களூருவிலும் கிடைப்பதாகக் கேள்வி. :-)

//(நெய்தடவி வாட்டிய பாவின் துணையோடு இதை உண்டால் ’ஓ...பலேபலேபலேபலே..!’ என்று பங்க்ரா ஆடத்தோன்றும்.) நீங்க ஆடியதுண்டா... அடாடா... நான் பார்க்காமப் போயிட்டனே...//

கலையார்வத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்! :-)

//பதிவு வழக்கம்போல் (சூப்பர்).//

மிக்க நன்றி நண்பரே! :-)

//கும்மாச்சி said...

சேட்டை பாவ் அலசல் சூப்பர்.//

மிக்க மகிழ்ச்சி! :-)

//உங்களுக்கு டாக்குட்டர் பட்டம் தர "உசிள் பாவா" முனைவர் "பாவ்"வாணி சாரி பவானி பரிந்துரை செய்திருக்கிறார்.//

இன்னும் கம்பவுண்டர் பட்டமே வரலியே? எப்போ டாக்டர் பட்டம் வந்து, எப்போ நானும் முதலமைச்சராகி...?

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அடடா.....அறிவுக்கொழுந்துண்ணே!!//

கிள்ளிக் குழம்புலே போடாம இருந்தா சரிதான் தல! மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

Nalla aaivu ....//

மிக்க நன்றி! :-)

//Mahi_Granny said...

பாவ் இ.//

மிக்க நன்றி! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

அன்பரே
சென்னையில் பாவ் பாஜி சாப்பிடுவது ஏமோ ஒரு மேட்டுக்குடியினர் தனி நாகரீகமாக கருதுவதாகத் தெரிகிறது//

அப்படியெல்லாம் இல்லை ஐயா! மண்ணடிப் பக்கம் வந்தால் கவனிக்கலாம். எல்லாரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.

//பாவ் பற்றிய ஆய்வு அருமை!//

மிக்க நன்றி ஐயா! :-)

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னுக்குள்ள மசாலா வெச்சா அதுதான் பாவ் பாஜின்னு நெனச்சுட்டு இருந்தேன்.....//

அதுலே இன்னின்ன காய்கறிங்க தான் சேர்க்கணும்னு ரூல்ஸ் இருக்கு பானா ராவன்னா!

//அடுத்து பானி பூரியா?//

அது ஒரு அசட்டு அயிட்டம்! பேல்பூரி கூட ஓ.கே! :-)
மிக்க நன்றி பானா ராவன்னா! :-)

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், பாவ் பாயி சாப்பிட்டு, நமக்கும் இந்த அருமையான உணவினைச் சாப்பிட வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் வகையில் இப் பதிவினைப் படைத்திருக்கிறீங்க.//

சாப்பிடற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால், சென்னையில் விரும்புவது மாதிரி கிடைப்பதில்லை சகோ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

உருள உருள...கிழங்கு கிழங்கு ஹிஹி!//

அது இல்லாமல் வட இந்திய சாப்பாடு முழுமையடையாதே! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ஜீ... said...

:-) சூப்பர் சேட்டை பாஸ்!//

மிக்க நன்றி நண்பரே!

//MANO நாஞ்சில் மனோ said...

மிஷல் பாவ்ல கொஞ்சம் வெங்காயம் போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்,//

நிறையவே போட்டுக்குவேன் அண்ணாச்சி! :-)

//யோவ் நீர் மும்பையிலா இருக்குறீர், நான் மும்பை இன்டர் நேஷனல் ஏர்போர்ட் பக்கம் ஐ டீ சி ஹோட்டல் பக்கம்தான் வசிக்கிறேன்...!!!//

அண்ணாச்சி! நான் மும்பையில் இருந்த முன்னாள் அனுபவத்தை வைத்து எழுதியிருக்கிறேன். இப்போ சிங்காரச்சென்னைவாசி! மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

//அமைதிச்சாரல் said...

சமோசா பாவை லிஸ்டில் விட்டது ஏனோ :-)))//

சமோசாவை நான் அப்படியே தான் சாப்பிடுவேன். சென்னையிலே அதை நசுக்கி சுண்டலோட சாப்பிடுவாய்ங்க! கடவுளே! :-(

//மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவாக்கும் இந்த வடா பாவ். உசள், மிசள் இதெல்லாம் அந்தூரு கிராமத்துப் பலகாரங்கள்.//

தெரியுமே! பல நாட்கள் அதையே தின்று வயிற்றை ரொப்பியிருக்கிறேனே! :-)

//மிசள்ல கொஞ்சூண்டு ஃபர்ஸான், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.//

ஃபர்ஸான்! அந்தப் பெயரைச் சரியாகச் சொல்லத் தெரியாமல் தான் ஓமப்பொடி, காரச்சேவுன்னு சொதப்பியிருக்கிறேன். :-))

//திருனேலில ஒரு இடத்துல, பாவ் பாஜியை பொரியல் மாதிரி உதிரியா கொண்டாந்து வெச்சாங்க.. என்னாத்தை சொல்றது :-))//

நல்ல வேளை! இனிமேல் தமிழ்நாட்டுலே பாவ்-பாஜி சாப்பிடறதுல்லேன்னு வைராக்கியம் எடுத்துக்கிட்டேன். மிக்க நன்றி! :-)

//ஷீ-நிசி said...

தாம்பரத்தில் பஸ் டெர்மினஸ் அருகே ஒரு கடையில் பாவ் பாஜி ரொம்ப நல்லாருக்கும்...//

அட நம்ம ஏரியாவா? இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பலே நண்பரே! வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி! :-)

//FOOD said...

ஒருமுறை மும்பை வந்தபோது பாவ் பாஜி சாப்பிட்டதை உங்கள் பகிர்வு நினைவு கொள்ள வைத்தது.//

அங்கே தான் பாவ்-பாஜி அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்போட கிடைக்கும். மிக்க நன்றி! :-)

கே. பி. ஜனா... said...

அனுபாவிச்சு எழுதியிருக்கீங்க.

Prabu Krishna said...

ஆகா லேட்டா வந்ததுல பாவ் பாஜி தீந்து போச்சே. பாவ் பாவ்

pudugaithendral said...

வடா பாவ் ரசிகையா பதிவை ரசிச்சேன். நான் சமீபத்துல தபேலி சாப்பிட்டேன். பதிவு இங்கே. http://pudugaithendral.blogspot.com/2011/10/blog-post_11.html

Unknown said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ..

மும்பை போய் வடை பாவ் சாப்பிட்டது போல் ஆயிட்டு ..