“கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே உனை மறவேன்,”
டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.
திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!
’தரைமேல் பிறக்க வைத்தான் – எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் – பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்
என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.
”ஒளி விளக்கு,” படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,” என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.
எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?
அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...
பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
கண்களால் தின்றாள்.
என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?
தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?
ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.
மரபு வழியில் – ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,’ என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!
அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.
Tweet |
22 comments:
இந்த கடைகோடி ரசிகனின் வாழ்த்தையும்
இணைத்துக்கொள்ளுங்கள்!
நான் பல பாடல்களைக்கேட்டு இது கண்ணதாசன் அல்லது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான் என நினைத்த பல பாடல்கள் பின்னாளில் வாலியுடையது என்று அறிந்து வியந்திருக்கிறேன்!
கவிஞர் வாலி விகடனில் நினைவு நாடாக்கள் என்னும் தலைப்பில் பல விஷயங்களைக் கூறியிருந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அவர் எழுத்தை விமரிசித்து வலையுலகிலேயே பதிவு படித்ததும் நினைவுக்கு வருகிறது. திறமை உள்ளவன் எப்படியாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வான்.
Ithu settai pathivaa???
No ulkuthu....no veli
kuthu...why ????
மாப்ள பகிர்வுக்கு நன்றி....வாலிபக்கவிக்கு வாழ்த்துக்கள்!
உங்கள் மிகவும் லாவக மான
இந்த பதிவை ரசித்து படித்தான்.
அழகு தமிழ்
மூலம்
ஒரு மகிழ்வான பதிவு
நன்றிகள் நண்பா.
யானைக்குட்டி
உங்கள் மிகவும் லாவகமான
இந்த பதிவை ரசித்து படித்தான்.
-யானைக்குட்டி-
அழகு தமிழ்
மூலம்
ஒரு மகிழ்வான பதிவு
நன்றிகள் நண்பா.
nice post!
Vaali & Kannadasan are my favourite poets!
வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு
:))
அருமையான கவிகர்
பொதிகையில் இவரது பேட்டி வியாழன் அன்று இரவு 9 மணிக்கு வருகிறது
கவிஞர் வாலி அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
வெகு அருமையான அலசல். கவிஞர் வாலி அவர்கள் மேலும் பல்லாண்டு வாழட்டும். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள். vgk
பல வருடங்களுக்கு முன்பு 'நீங்காத நினைவுகள்' என்ற படத்திற்காக அவர் எழுதிய 'ஒ, ஒ, சின்னஞ்சிறு மலரே மறந்து விடாதே...' என்ற மறக்க முடியாத பாடல்....
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?
இளமை துள்ளும் இந்த வரிகளுக்கும் சொந்தக்காரர்
படம் : அன்பே ஆருரே
கண்ணதாசன் பாடல்கள் என நான் நினைத்து வியந்த பல பாடல்களை வாலி எழுதியது என பின்னர் தெரிந்து வியந்திருக்கிறேன். உதா: அழகிய தமிழ் மகள் இவள்! அதேபோல் கவிதைகளிலும் கலக்கியவர். உதா: இந்த மனிதர்கள் நம்மைக் கொண்டு பல சிலுவைகளை உருவாக்குகிறார்கள். தம்மைக் கொண்டு ஒரு ஏசுவை உருவாக்க முடியவில்லையே... என்ற கவிதை. வாலிபக் கவிஞரை உங்களுடன் சேர்ந்து வாழ்த்துவதில் மகிழ்கிறேன் சேட்டையண்ணா!
அனைவருக்கும் பிடித்த கவிஞர் வாலி.... அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்!
நல்ல கவிஞர் வாலி அவர்களின் பிறந்த நாள் இன்று ஒரு பதிவு எழுதிய உங்களை என்ன சொல்லி பாராட்டுவது சேட்டை....
எனக்கும் பிடித்த கவிஞர் வாலி....
வாலியைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்ததும்தான் தெரிந்தது அவரின் பிறந்த நாள் இன்று என்று. வாலி நீவீர் நீடூழி வாழி!
வாழ்த்துவதில் நானும் இணைகிறேன்..
வாழ்க பல்லாண்டு.
காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கும் வாலி என்றுமே வியப்புக்குரியவர் தான். அவர் ஒரு நல்ல நடிகரும் கூட.. நன்றி.
எவர்க்ரீன் வாலி பாடல்கள் என்றும் வாழும்!
@கோகுல்
@G.M Balasubramaniam
@NAAI-NAKKS
@விக்கியுலகம்
@யானைகுட்டி @ ஞானேந்திரன்
@பெசொவி
@வெளங்காதவன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@சத்ரியன்
@வை.கோபாலகிருஷ்ணன்
@கே. பி. ஜனா...
@கடல்புறா
@கணேஷ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
@வெங்கட் நாகராஜ்
@ரேகா ராகவன்
@ரிஷபன்
@சாமக்கோடங்கி
@! சிவகுமார் !
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல!
Post a Comment