அறைக்குள் பவித்ரா நுழைந்தவுடன், தலைமை ஆசிரியையின் முகத்திலிருந்த கடுமை அவளை சுரீரென்று தாக்கியது.
“ப்ளீஸ் ஸிட் டவுண்!” என்று சொல்லியவர், பவித்ரா உட்காருமுன்னரே தனது முதல் கேள்வியைத் தொடுத்தார். “என்ன, அஜிதாவைக் கூட்டிட்டுப்போக வந்திருக்கீங்களா? இன்னிக்கு யாரு சீரியஸா இருக்காங்க?”
“மேடம்!”
“இங்கே பாருங்கம்மா, குழந்தைகள் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கொடுக்க வேண்டியவங்க நீங்க! ஆனா, ஒவ்வொரு தடவையும் நீங்களே புதுசு புதுசாப் பொய்சொல்லி, உங்க பொண்ணைக் கூட்டிட்டுப் போயிடிருக்கீங்க! ஆஸ்பத்திரின்னு சொல்லிட்டு ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போறீங்க! போன வருஷம் வரைக்கும் கிளாஸ்லே முதல் அஞ்சு ரேங்குக்குள்ளே வந்திட்டிருந்த பொண்ணு இப்போ இருபத்தி ரெண்டுக்குப் போயாச்சு! அடிக்கடி லீவு! போதாக்குறைக்குப் பர்மிஷன் வேறே! ஆனா, மியூசிக் கிளாசுக்கும், டான்ஸ் அகாடமிக்கும் தவறாம அனுப்பறீங்க! எங்க ஸ்கூலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது! இன்னிக்குக் கூட்டிட்டுப் போங்க! ஆனா, இன்னொருவாட்டி இந்த மாதிரி ஆப்ளிகேஷனோட வந்து நிக்காதீங்க!”
“மேடம் ப்ளீஸ்! அஜிதாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க! அதான்......!” பவித்ராவை மேற்கொண்டு பேசவிடாமல் தலைமை ஆசிரியை இடைமறித்தார்.
“எதிர்காலமா? என்ன அது? நீங்க குதிரையை வண்டிக்குப் பின்னாடி கட்டிட்டிருக்கீங்கன்னு தோணுது! அவ டிவியிலே பாடி ஜெயிச்சபோது சந்தோஷமாத்தான் இருந்திச்சு! அசம்பிளியிலே அவளை மேடையேத்தி நானே பாராட்டினேன். ஆனா, ஒரு பத்து வயசுப்பொண்ணு தலையிலே எவ்வளவு சுமையை ஏத்துவீங்க? சரி, உங்க குழந்தை; என்னமோ பண்ணுங்கன்னு விட்டா, தெரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கீங்க! ஹௌ அடாஷியஸ், எங்க ஸ்கூல் சுவத்திலேயே போஸ்டர் ஒட்டியிருக்கீங்க!”
“சாரி மேடம்! தெரியாம....!”
“தெரியாமலா போஸ்டர் அடிச்சீங்க? உங்களாலே மத்த பசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்திருச்சு! அஜிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்டான்னு பேரன்ட்ஸ் சண்டைக்கு வர்றாங்க! எங்க ஸ்கூலிலே எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸுக்கு நிறைய செய்யறோம். அதுக்காக, படிக்கற பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பாம, சோப்பு விளம்பரத்துலேயும் கோவில் திருவிழாவுலேயும் ஆட வைக்கிறீங்களே? சின்ன வயசுலே அவ எதையெதை இழந்திட்டிருக்கான்னு கூடவா தெரியலே?”
“மேடம், இந்த ஒருவாட்டி....!”
“அதான் கூட்டிட்டுப்போங்கன்னு சொல்லிட்டேனே. கோ அஹெட்!” என்று கடுமையாகக் கூறிய தலைமை ஆசிரியை, பவித்ராவைப் பார்க்க விரும்பாதவர் போல, மேஜை மீதிருந்த எதோ ஒரு ரிஜிஸ்தரை, குறிக்கோளின்றிப்புரட்டவும், தலைகுனிந்தபடி வெளியேறினாள் பவித்ரா.
அஜிதா வகுப்பிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தபோது, செல்போன் சிணுங்கியது.
“ஹலோ! சார்..ஸ்கூலிலே தானிருக்கேன் சார்! கிளம்பிட்டேயிருக்கோம்!”
“சீக்கிரம் வாங்கம்மா! டைரக்டர் அவுட்-டோருக்காகப் பொள்ளாச்சிக்குக் கெளம்பிட்டிருக்காரு!”
“அரைமணியிலே இருப்போம் சார்! ப்ளீஸ்!”
பதட்டத்தில் நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த பவித்ரா, மகள் அஜிதா வருவதைப் பார்த்ததும் எழுந்து அவளை நோக்கி ஓடினாள்.
“சனியனே, அங்கே டைரக்டர் காத்திட்டிருக்காரு! நீ பாட்டுக்கு அழகர் ஆத்துலே இறங்குறா மாதிரி ஆடி அசைஞ்சு வந்திட்டிருக்கியே! வந்து தொலை!”
பவித்ரா அஜிதாவை இழுத்துக் கொண்டு ஏறக்குறைய ஓடுவதை ஜன்னல்வழியாகப் பார்த்த தலைமை ஆசிரியை பெருமூச்சு விட்டாள்.
“கந்தசாமிண்ணா, வண்டியைக் கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனிக்கு விடுங்க,” என்று கூறியவாறே, அஜிதாவையையும் அவளது புத்தகப்பையையும் காருக்குள் தள்ளியபடியே ஏறினாள் பவித்ரா.
”அடியே, யூனிபார்மோட போனா சரியா வராது. கலர் டிரஸ் கொண்டுவந்திருக்கேன். மாத்திக்கோ!” மகளின் காதில் கிசுகிசுத்தாள் பவித்ரா.
“வண்டிலேயா? டிரைவர் அங்கிள் இருக்காரே..?”
“குனிஞ்சு மாத்திக்கடி! அவரு ரோட்டைப் பார்த்துத்தானே ஓட்டிட்டிருக்காரு? நீ சின்னப்பொண்ணுதானே?”
கார் நின்றதும், பவித்ரா மீண்டும் மகளை இழுத்துக் கொண்டு ஓடினாள். இருட்டும் அழுக்கும் பரவியிருந்த ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் மாடிப்படிகள் தடதடக்க, தாயும் மகளும் விரைந்தனர். அழைப்பு மணியை அழுத்தியதும், கதவு திறந்து, சிகரெட் வாசனை வரவேற்றது.
“என்ன இம்புட்டு லேட்டா வர்றீங்க? டைரக்டர் கெளம்பிட்டாரு!” என்று சொன்னபடி உள்ளே திரும்பிச் சென்ற ராஜன் என்ற உதவி இயக்குனரின் பின்னால், பவித்ரா பதைபதைப்புடன் சென்றாள்.
“அதை ஏன் கேட்கறீங்க ராஜன் சார்? ஸ்கூலிலேருந்து கூட்டிட்டு வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு! லயோலா காலேஜ் பக்கத்துலே ஹெவி டிராபிக் ஜாம் வேறே!”
“சரி சரி உட்காருங்க,” என்று கூறிய ராஜன், அஜிதாவை தலைமுதல் கால்வரை நோக்கினான். “ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்குதேம்மா! நிறைய வசனம் பேசணுமே?”
”அவ ஸ்கூலிலே ஜான்சி ராணியா நடிச்சிருக்கா சார்! நல்லா வசனம் பேசுவா! இதோ பாருங்க சார், அவளோட போர்ட்-போலியோ!”
பவித்ரா கொடுத்த ஆல்பத்தைப் புரட்டினார் ராஜன். “யாரும்மா படம் எடுத்தது, கீரீன் ஹார்ஸ் சுரேஷ் நாயரா?”
“ஆமா சார்!”
“படத்தோட குவாலிட்டியே சொல்லுதே! என்ன ஒரு முப்பதினாயிரம் வாங்கியிருப்பாரே?”
“ஏறக்குறைய அம்பதாயிருச்சு சார்!”
“ஓ!” ராஜனின் அந்த ஒரு “ஓ”வுக்குள் புதைந்திருந்த பொருளை பவித்ரா புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
“சரிங்க, டைரக்டர் திரும்பி வந்ததும் தகவல் சொல்றேன். வந்து பாருங்க! கண்டிப்பா பாப்பாவைத் தான் செலக்ட் பண்ணுவாருன்னு தோணுது!” ராஜன் புன்னகையுடன் கூறவும், பவித்ராவின் முகம் மலர்ந்தது.
“தேங்க்யூ சார்! ஷூட்டிங் எப்போ சார் ஆரம்பிப்பாங்க? ஏன் கேட்கிறேன்னா அடுத்த மாசம் அவளுக்கு மிட்-டெர்ம் பரீட்சை ஆரம்பிச்சிருவாங்க!”
“ஒரு நல்ல ஆபீஸ் தேடிட்டிருக்கோம்! சாலிக்கிராமத்துலே ஒரு ஆபீஸ் பார்த்திட்டோம். டெபாசிட்டுக்கு ஒரு முப்பதாயிரம் குறையது. அதான் இழுத்தடிச்சிட்டிருக்கு! புரொட்யூசர் வேறே ஊருலே இல்லை!”
“முப்பதாயிரமா? செக் தரலாமா சார்?”
“அட நீங்க எதுக்கும்மா பணம் தரணும்?”
“பரவாயில்லை சார்! புரொட்யூசர் பணம் தந்ததும் திருப்பிக் கொடுத்திருங்க! யாரு பேருலே செக் எழுதட்டும்?”
“ம்ம்ம், பேசாம பேரர் செக்கா கொடுத்திருங்கம்மா!”
பவித்ராவிடமிருந்து செக்கை வாங்கிக்கொண்ட ராஜன், “கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா, டைரக்டரையும் பார்த்திருக்கலாம். பாவம் இதுக்குன்னு இன்னொரு வாட்டி வரணும் நீங்க!” என்றார்.
“அதுக்கென்ன சார், சனி, ஞாயிறுன்னா பிரச்சினையில்லை. இல்லாட்டிப்போனா, ஸ்கூலிலே கெஞ்சிக்கூத்தாடி பர்மிஷன் வாங்க வேண்டியதுதான்!”
“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணுறாரு?”
“அவருக்கு இந்த கலையார்வமெல்லாம் கிடையாதுங்க! ரொம்ப கன்சர்வேட்டிவ்! அப்போ நாங்க கிளம்பறோம் ராஜன் சார்!”
பவித்ராவும் அஜிதாவும் வெளியேற முற்பட்டபோது, அந்த அறைக்குள் இன்னொரு ஆசாமி நுழைந்தார். அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, ராஜனிடம் கேட்டார்.
“யாருய்யா இவங்க?”
“அதாண்ணே, நம்ம படத்துலே ஒரு குழந்தை கேரக்டர் வருதில்லே, அதுக்கு சான்ஸ் கேட்டு வந்திட்டுப் போறாங்க!”
“என்ன வயசு?”
“ஒன்பதோ பத்தோ இருக்கும்!”
“யோவ் லூசு, யாருய்யா குழந்தையோட வயசைக் கேட்டாங்க?”
Tweet |
11 comments:
படித்துவிட்டி மனம் கனத்துப்போய் விட்டது நண்பரே... விட்டில் பூச்சிகளாய் எத்தனைபேர் இதுபோல்... யதார்த்தமாய் இருக்கிறது.
பிரபாகர்...
நல்ல புனைவு சேட்டை...
பெயருக்கும் புகழுக்கும் எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை அழகாய்ச் சொல்லிட்டீங்க....
மகளின் வாழ்வு கெடுவது மட்டுமல்லாது தன்னுடைய வாழ்வும் கெடப்போவது தெரியவில்லை அந்தப் பெண்ணுக்கு.. :(
கதை நிஜமாகி விடக்கூடாது என்று மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது.
சினிமா உலகின் கறுப்பு பக்கங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க சேட்டை..!!நல்ல புனைவு..!!
அருமையான கதை சேட்டை...!
யாரை நினைத்து வருத்தப்படுவது என்றே தெரியவில்லை....
நல்ல பதிவு
புனைவாக இருந்தாலும் , இன்று நடக்கும் ஒன்று. இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடி அலைகிறாய் ஞானத்தங்கமே
அருமையான கதை
இதை புனைவு என்று என்னால் நினைக்க முடியல்லிங்க .ஒரு சின்ன பெண் பல வருஷ முன்பு இப்படி திருவிழாவில் சினிமா பாடலுக்கு ஆடுவதை பார்த்திருக்கேன் .அப்பஆறு வயசு பொண்ணு .ஏனோ உங்க பதிவ படிச்சதும் அந்த குழந்தைதான் நினைவுக்கு வந்தா .அவ பெற்றோரும் அப்போது இப்படிதான் டிவி புகழ் .- - - - என்று போஸ்டர் அடுச்சு ஓட்டுனாங்க .இப்ப எப்படி இருக்காளோ தெரியல பாவம் .
//பிரபாகர் said...
படித்துவிட்டி மனம் கனத்துப்போய் விட்டது நண்பரே... விட்டில் பூச்சிகளாய் எத்தனைபேர் இதுபோல்... யதார்த்தமாய் இருக்கிறது.//
ஓய்வுபெற்ற ஒரு தலைமை ஆசிரியையை சந்திக்க நேர்ந்தபோது, அவர் சொன்ன ஒரு தகவலை வைத்து எழுதிய புனைவு இது நண்பரே!
மிக்க நன்றி!
//வெங்கட் நாகராஜ் said...
நல்ல புனைவு சேட்டை... பெயருக்கும் புகழுக்கும் எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பதை அழகாய்ச் சொல்லிட்டீங்க....//
இது குறித்துப் பல இடுகைகளைப் பலர் எழுதியிருந்தாலும், இந்த விஷயம் குறித்து எழுத வேண்டும் என்ற உந்துதல் சமீபத்தில்தான் ஏற்பட்டது வெங்கட்ஜீ!
//மகளின் வாழ்வு கெடுவது மட்டுமல்லாது தன்னுடைய வாழ்வும் கெடப்போவது தெரியவில்லை அந்தப் பெண்ணுக்கு.. :(//
நண்பர் பிரபாகர் கூறியிருப்பதுபோல, விட்டில் பூச்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி வெங்கட்ஜீ!
//ரிஷபன் said...
கதை நிஜமாகி விடக்கூடாது என்று மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது.//
நிஜமாகிய நிகழ்வுகளின் தாக்கமே இந்தக் கதை! :-(
மிக்க நன்றி!
//சேலம் தேவா said...
சினிமா உலகின் கறுப்பு பக்கங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க சேட்டை..!!நல்ல புனைவு..!!
சினிமா உலகம் மட்டுமல்ல; எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் தாமாகவோ, பிறரால் உற்சாகப்படுத்தப்பட்டோ இருக்கத்தான் செய்வார்கள்.
மிக்க நன்றி நண்பரே!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான கதை சேட்டை...!//
மிக்க நன்றி பானா ராவன்னா!
//middleclassmadhavi said...
யாரை நினைத்து வருத்தப்படுவது என்றே தெரியவில்லை....//
எனக்கு அந்தக் குழந்தை மீதே அதிக அனுதாபம் ஏற்படுகிறது. :-(
//நல்ல பதிவு//
மிக்க நன்றி சகோதரி!
//எல் கே said...
புனைவாக இருந்தாலும் , இன்று நடக்கும் ஒன்று. இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடி அலைகிறாய் ஞானத்தங்கமே//
ஆமாம் கார்த்தி! உள்ளதும் போச்சு நொள்ளச்சாமி என்ற கதையாகி தெருவுக்கு வருகிறவர்கள் நிறைய!
மிக்க நன்றி கார்த்தி!
//மாலதி said...
அருமையான கதை//
மிக்க நன்றி சகோதரி!
//angelin said...
இதை புனைவு என்று என்னால் நினைக்க முடியல்லிங்க .ஒரு சின்ன பெண் பல வருஷ முன்பு இப்படி திருவிழாவில் சினிமா பாடலுக்கு ஆடுவதை பார்த்திருக்கேன் .
இப்படியொரு விபரீதமான ஆசை இன்று பல குடும்பங்களைப் பிடித்து ஆட்டுகிறது. தொலைக்காட்சியின் தாக்கம் தான் இதற்குக் காரணம்.
//அப்பஆறு வயசு பொண்ணு .ஏனோ உங்க பதிவ படிச்சதும் அந்த குழந்தைதான் நினைவுக்கு வந்தா .அவ பெற்றோரும் அப்போது இப்படிதான் டிவி புகழ் .- - - - என்று போஸ்டர் அடுச்சு ஓட்டுனாங்க .இப்ப எப்படி இருக்காளோ தெரியல பாவம் .//
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு, சுயநலம் என்பதுதான் பொருள் என்று பலர் தவறாய் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். பாவம்!
பல குழந்தைகள் இது போல....! அனுதாபப்படத்தான் முடிகிறது. மிக்க நன்றி!
Post a Comment