Sunday, May 23, 2010

அந்த ஒரு விளக்கு மட்டும்....!

சற்றே சாய்ந்து உட்கார்ந்தால், ஜன்னல் வழியாய், அந்த வீட்டில், அந்த விளக்கு இன்னும் எரிவதைக் காண முடிகிறது. ஜன்னலுக்குப் பின்னே திரையிட்டிருந்தாலும், அதை ஊடுருவியபடி இன்னும் அந்த மஞ்சள் வெளிச்சம் தென்பட்டு மனதைப் பிசைகிறது. அந்த ஜன்னலும், திரையும் வெளிச்சத்தின் வீரியத்தின் முன்பு தோற்றிருக்கலாம். ஆனால், அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள்ளே விடைகளில்லாத பல வினாக்கள் முறியடிக்கப்பட்டு முடங்கிக்கிடக்கின்றன.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அது நிகழ்ந்தது. ஓய்வுநாளாகியிருக்க வேண்டிய ஒரு ஞாயிறு அது. சோம்பல் முறித்து ஜன்னல் வழியாக தெருவை நோட்டமிட்டபோது, எதிர்ப்புறத்து அடுக்கு மாடிக் குடியிருப்பின் வாயிலில் இயல்புக்கு மீறிய கூட்டம் சேர்ந்திருந்தது. எவர் முகத்திலும் சிரிப்பின் மெல்லிய சுவடும் புலப்படவில்லை. என்னவாயிருக்கும் என்று ஊகித்துக் குழம்ப விருப்பமின்றி, அவரவர் வேலைகளைக் கவனித்து விட்டு, ஒரு மணிநேரம் கழித்து கீழே இறங்கியபோது தான் விபரம் தெரிந்தது. திடுக்கிட்டோம்!

"அந்தப் பையனா? நேற்று இரவு கூட என்னோடு பேசிக்கொண்டிருந்தானே?"

"இது எப்படி நடந்தது? தற்கொலையாக இருக்குமோ?"

"அப்பா,அம்மா இருவரும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே? என்ன பிரச்சினை புரியவில்லையே!"

"எதுவாயிருந்தாலென்ன, இருபத்தைந்து வயது என்ன சாகிற வயதா?"

"லவ் ஃபெயிலியரா இருக்குமோ?"

"அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சு நிச்சயதார்த்தமும் பண்ணிட்டாங்களாமே!"

இவர்களின் விவாதப்பொருளான அந்த இளைஞனோடு எனக்குப் பழக்கமில்லையென்றாலும், அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். பேசியதில்லை; என்னுடன் மட்டுமல்ல; அந்த இளைஞர் எவருடனும் பேசிப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால்....

அவனது பெற்றோர்களை அறிவேன்! தெலுங்கு பேசுபவர்கள்! அந்த இளைஞனின் அப்பாவின் கையில் ஆறாவது விரலாய் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும்! பெரும்பாலும் பெர்முடா, டி-ஷர்ட்டில் தான் வலம் வந்து கொண்டிருப்பார். அதே உடையுடன் அவர் முக்கிய சாலைகளில் மனைவியோடு நடந்து போய் வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவ்வப்போது எங்கள் பகுதியில் மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம், இரவின் இருட்டில் கூடி நின்று அளவளாவியதுண்டு. சற்றே உடைந்து போன ஆங்கிலத்தில் தான் பேசுவார்.

இறந்து போனவன் அவர்களது ஒரே மகன்! ஒரே மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டிருந்தது. பட்டப்படிப்பை முடித்து, அந்த இளைஞனும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனம், ஆடம்பரமான கைபேசி, பெரும்பாலும் சரிவர ஷவரம் செய்யப்படாத முகம்- இவற்றையும் மீறி எங்கு பார்த்தாலும் பரிச்சயமாய்ப் புன்னகைக்கிற அந்த முகம்!

"குளிப்பதற்கு முன்னர் போய்ப் பார்த்து விட்டு வரலாமே?" யாரோ கேட்டார்கள்; யாரும் ’வேண்டாம்’ என்று சொல்லவில்லை. அதற்கு முன்பு வரை போயிராதபோதிலும், அன்று போகாமல் இருக்கக் கூடாது என்று உள்ளே நுழைந்தோம்.

இறந்து போயிருந்த இளைஞனின் சகோதரி நாற்காலியில் அமர்ந்திருந்தாள்; நிறைமாத கர்ப்பிணி! அம்மா சுவரோடு சுவராய் சாய்ந்தபடி எவருடனோ கைபேசியில் தெலுங்கில் என்ன நடந்தது என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பாவோ பார்த்துப் பழக்கப்பட்ட பெர்முடா, டி-ஷர்ட்டில் அறையின் ஒரு மூலையில் நின்றிருக்க, நட்ட நடுவே கம்பளி போன்ற போர்வையால் போர்த்தப்பட்டு, அந்த இளைஞனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. ஏதோ நெருடியது!

கண்கள் திறந்திருந்தன; வாய் பிளந்திருந்தது. ஒரு கை, ஒரு கால் மடக்கப்பட்ட நிலையில் உடல் இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது கழுத்தின் இடது பக்கத்தில் கட்டைவிரலளவுக்குக் கருகருவென்று நீளமாக ஒரு தடம் தெரிந்தது.

சிறிது நேரத்துக்குப் பின்னர் நாங்கள் வெளியேறியதும் எங்களில் பலருக்கு அந்த சந்தேகம் இருந்தது.

"இது இயற்கையான மரணமல்ல; தற்கொலை தான்! மாரடைப்பு வருகிற வயதா அவனுக்கு?"

"தற்கொலையென்றால், இறக்கும் முன்னர் அவன் தனது உடலை நகங்களால் பிறாண்டி விட்டுக்கொண்டிருப்பான்! கழுத்து நீண்டிருக்கும்! உடம்பிலிருந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறியிருக்கும்! ஒருவேளை மின்சாரம் தாக்கி இறந்திருப்பானோ? ஆனாலும், இது இயற்கை மரணம் என்று ஏன் சொல்ல வேண்டும்? போலீஸ், வழக்கு என்று பயந்து விட்டார்களோ?"

என்னவெல்லாமோ ஊகங்கள்! விவாதங்கள்! முடிவில் எல்லாரும் குழம்பித்தான் போயிருந்தோம்.

எங்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தெருவுக்குமே பலவிதமான சந்தேகங்கள்! அவற்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, அந்த இளைஞனின் அப்பா வீட்டை விட்டு வெளியே வந்தார். நாங்களெல்லாம் நிற்பதைப் பார்த்துக்கொண்டே, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஊதத்தொடங்கினார். அவரது முகத்தில் அதிகம் தென்பட்டது அதிர்ச்சியா? துயரமா? புரியவில்லை!

இப்படிக் கேட்பது மிகவும் குரூரம் தான்! ஆனாலும், ஒரு துயரச்சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று வந்த எங்களுக்கு, அந்த இளைஞனின் பெற்றோர் கண்ணிலோ, சகோதரி கண்ணிலோ ஒரு துளி கண்ணீர் கூட காண முடியாதது புதிராக இருந்தது. ஆனால்....

அவ்வப்போது அந்த இளைஞன் அழைத்துக்கொண்டு வந்த, அந்த இளம்பெண் வந்ததும் காட்சி சற்றே மாறியது. இடைவிடாத கூச்சலும் அழுகுரலும்!

"நேற்று இரவு கூட பேசினியேடா! தூங்குறதுக்கு முன்னாடி கூட எஸ்.எம்.எஸ்.அனுப்பினியேடா! என்னடா நடந்தது? யாரு என்ன பண்ணினாங்கடா? என்ன சொன்னாங்கடா? ஏண்டா இப்படிப்பண்ணினே?"

மடேர் மடேரென்று அந்தப் பெண் முகத்திலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுத சத்தம் கேட்டு எல்லாருக்கும் வலித்தது. அதே சமயம் அவள் கேட்ட கேள்விகள் எங்களுக்குள்ளே ஆழமாக இறங்கின. அவளது கேள்விகளுக்கு பதில் என்ன?

சிறிது நேரத்தில் ஒரு அமரர் ஊர்தி வந்தது. அதிலிருந்து ஒரு குளிரூட்டும் பெட்டியும் வந்து இறங்கியது. உள்ளே போன அந்த ஓட்டுனரும் உதவியாளரும் சில நிமிடங்களிலேயே வெளியே வந்து ஏதோ ரகசியம் பேசிக்கொண்டனர். அன்றாடம் உயிரற்ற உடல்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிய அவர்களுக்கு, கண்டிப்பாக அது தற்கொலை என்று புரிந்திருக்காதா என்ன?

அவர்கள் எதையோ விவாதித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பிக்கொண்டு போன சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் வந்து நின்றது. அடுத்த பத்தாவது நிமிடமே மீண்டும் அந்த அமரர் ஊர்தி வந்து நின்றது. அந்த இளைஞனின் வாகனம் பிரேதப்பரிசோதனைக்காக, ஸ்டேன்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவல் கிடைத்த வாய்கள் அலறின!

"என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பொம்பளைக்கு! கதவைத் தட்டியும் திறக்கலேன்னதும் வெளியிலே போயி ஜன்னல் வழியாப் பார்த்திருக்கா! பையன் தூக்குலே தொங்கிட்டிருந்திருக்கான்! ஒரு சத்தம் கூட போடாம, புருசனையும் சேர்த்துக்கிட்டுக் கதவை உடைச்சு உள்ளே போயி, பொணத்தை இறக்கி, சுத்தம் பண்ணி யிருக்கிறா! அவன் போட்டிருந்த டிரெஸ்ஸையெல்லாம் சுத்தி வெளியிலே குப்பைத்தொட்டியிலே வீசிட்டு, புள்ளையை நடு ஹாலிலே படுக்கப்போட்டு, போர்வையாலே போர்த்தி ஊரையே ஏமாத்தப் பாத்திருக்கா! சீ, இவளெல்லாம் ஒரு அம்மாவா?"

கேட்பதற்கும் ஜீரணிப்பதற்கும் கடினமாக இருந்தது. ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அது தெரிந்து செய்ததா, தெரியாமல் செய்ததா?

அடுத்தடுத்து அந்த இளைஞனின் ஈமச்சடங்குகள் முடியும் வரையிலும், அதன் பின்னரும் கூட அடர்த்தியாகப் பல கேள்விகள் எழுப்பப் பட்டன.

"விடுங்கடா! அந்தப் பையனோ போயிட்டான்! அவங்களே புள்ளையைப் பறிகொடுத்த சோகத்துலே இருப்பாங்க! கடைசியிலே எல்லாத்தையும் முறைப்படி செஞ்சிட்டாங்க இல்லே? இதைப் பத்தியே பேசறதை நிறுத்திட்டு அடுத்த வேலையைக் கவனிப்போம்!"

மீண்டும், விடைகளைக் கண்டுபிடிக்க முடியாத இயலாமைக்கு சப்பைக்கட்டு கட்டுகிற அலுத்துப்போன அழுகுண்ணி சமாதானம்! அன்றாடமும் வாழ்க்கை முழுவதும் விடைகள் கிடைக்காமல் அபலைகளாய் நாதியற்றுக் கிடக்கிற கேள்விகளோடு, அன்று பிறந்த கேள்விகளும் ஐக்கியமாகின.

விடுமுறைக்காக ஊர் சென்றிருந்த நண்பர்கள் திரும்பி வந்ததும், விஷயம் கேள்விப்பட்டனர். துக்கம் விசாரிக்க செல்ல விரும்பினர். மறுநாள் மாலை, அவர்களில் ஒரு சிலரோடு மீண்டும் நானும் சென்றேன்.

க்தவு திறந்தேயிருந்தது! உள்ளே ’ஈ-டிவி’ ஓடிக்கொண்டிருக்க, தெலுங்குப்பட நாயகனும் நாயகியும் ஆடிக்கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளே சென்று, அமர்ந்து, உரையாடிய அந்த ஐந்து நிமிடங்களிலும் அந்தப் பெண்மணியின் கண்கள் தொலைக்காட்சிப் பெட்டியிலே நிலைகுத்தியிருந்தன. ஒலியின் அளவைக் கூடக் குறைக்கவில்லை.

பேசி விட்டு வெளியேறியபோது, தட்டித் தூங்க வைத்த கேள்விகள் நெட்டி முறித்துக் கொண்டு மீண்டும் கண்விழித்தன. சிறிது நேரம் கழித்து அந்த தம்பதியினர் வழக்கம் போல காற்று வாங்குவதற்காக நடந்து போவதைப் பார்த்தபோது குழப்பமும் மலைப்பும் அதிகரித்தது. பிறகு, அடுத்த நாள் முதல் எங்களது அன்றாட வாழ்க்கையின் வாடிக்கைகள் இழுத்த இழுப்புக்கு நாங்கள் செல்லத்தொடங்கினோம். அதன்பிறகு, இன்றுவரையிலும் அந்த தம்பதியை நான் பார்க்கவில்லை!

ஆனால், இரண்டொரு நாட்கள் கழித்து, அந்த அப்பா சுத்தமாக ஹேர்-கட் செய்து கொண்டு, பளபளவென்று ஷவரம் செய்து கொண்டு, தலை நிறைய பூவைத்திருந்த தன் மனைவியோடு கடைத்தெருவில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்ததாக இன்னொரு நண்பர் சொன்னார். இது எப்படி முடிகிறது, ஒரு பெற்றோரால்....?

வெளியூர் சென்று விட்டார்களாம்! ஆனால், மகன் தூக்கில் தொங்கிய அறையில் ஒரு மின்விளக்கை மட்டும் அணைக்காமல் விட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொரு இரவிலும், ஒவ்வொரு முறை எங்கள் ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போதெல்லாம் அந்த ஜன்னலுக்குப் பின்னர் சில கேள்விகள் அழுது கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அந்த இளைஞனின் காதலி கேட்ட வினாக்களும் அந்த அறைக்குள்ளே எங்கேயே திக்குமுக்காடிக்கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

அந்த தம்பதியினர் திரும்பி வரும்போது, பகலில் வந்தால் நல்லது என்று படுகிறது! இரவில் வந்து இறங்கினால், அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அந்த ஒற்றை மின்விளக்கின் சன்னமான ஜன்னல் வெளிச்சம் அவர்களை வரவேற்கக் கேள்விகளோடு காத்திருக்கின்றது.

38 comments:

Unknown said...

கதையாக இருந்தாலும் மனம் கனக்கிறது ...

King Viswa said...

இது கதையா என்ன?

நிஜமாக இருந்தால் அந்த பெற்றோர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே.

அந்த அளவுக்கு மனவுறுதி இந்த காலத்தில் அசாத்தியம்.

ஜில்தண்ணி said...

இப்படியும் சில மனிதர்கள் இருப்பார்களோ என்று யோசிக்க வைத்தது இந்த கதை
ரொம்ப நல்லா இருக்கு சேட்டை

பனித்துளி சங்கர் said...

/////அந்த தம்பதியினர் திரும்பி வரும்போது, பகலில் வந்தால் நல்லது என்று படுகிறது! இரவில் வந்து இறங்கினால், அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அந்த ஒற்றை மின்விளக்கின் சன்னமான ஜன்னல் வெளிச்சம் அவர்களை வரவேற்கக் கேள்விகளோடு காத்திருக்கின்றது ///////

நண்பரே வார்த்தைகள் எதுவும் அற்றவனாய் நானும் பல கேள்விகளுடன் மிகவும் சிறப்பாக .எழுதி வாழ்த்துக்கள் !

ராஜா said...

நல்ல பதிவு சே.கா

ஹேமா said...

சிலரது வாழ்வு கேள்விக்குறியினூடேதான்.
கதை நகர்வு அருமை.

Unknown said...

லேபிள் அனுபவம்னு சொல்லுது.

ஆனா இது கதையா அனுபவமான்னு தெரியலை..
*********

அந்த இளைஞனின் தற்கொலைக்கு என்ன காரணம்னு தெரியலை. அந்தக் காரணம் தெரிஞ்சாத்தான் பெற்றோர்களுக்கு இருந்தது மன உறுதியா, இல்லை அழுத்தமான்னு தெரியும்.

vasu balaji said...

படிக்கும்போதே என்னமோ செய்கிறது. :(

எல் கே said...

இப்படியும் இருப்பார்களா??

Chitra said...

கதையா? அனுபவமா? காட்சி நேரில் தெரிவது போல, நல்ல எழுத்து நடை.

prince said...

ம்ம்ம்ம்ம்....... நல்ல எழுத்து நடை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் ...:(

அண்ணாமலை..!! said...

சேட்டை மனதில் தைத்த ஒரு
நிகழ்ச்சிக்கான நல்ல விவரிப்பு..!
துயரங்கள் இப்போதெல்லாம்
பெரிதாகப் பாவிக்கப்படுவதில்லை!
இறந்த வீட்டில் இப்போது அழுவதே
குற்றமாகப் பார்க்கப்ப்டுகிறது..

மசக்கவுண்டன் said...

நல்ல அனுபவம்.

வெங்கட் நாகராஜ் said...

சில மனிதர்கள் இப்படித்தான் போலும். நல்ல அனுபவம்.:(

பித்தனின் வாக்கு said...

good story

சிநேகிதன் அக்பர் said...

சில ரகசியங்கள் கடைசி வரை தெரிவதில்லை. வீரப்பன் மரணம் போல். ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது உங்களிடம். சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறீர்கள்.

ஹுஸைனம்மா said...

சமீபத்தில நடந்த டெல்லி பெண் பத்திரிகையாளர் (தற்)கொலை நினைவுக்கு வருகிறது!!

இந்தக் கதையில், பிரேத பரிசோதனை செய்த பின் என்ன சொன்னார்களாம்?

ஸ்ரீராம். said...

என்ன மரத்துப் போன உணர்வுகள்...உணர்வுகள்...?

கோமதி அரசு said...

கண்ணாடி பெட்டிக்குள் சொந்தத்தை போட்டு விட்டு, கட்டி அழக்கூட முடியாத உறவுகள்.

காலம் கலி காலம்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல கதை என்பது எது நிஜம் எது கற்பனை என வாசகன் தெளிந்து அறிய முடியாதபடி இருக்க வேண்டுமென எங்கோ படித்திருக்கிறேன்.அந்த வகையில் நீங்க வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

//அன்றாடமும் வாழ்க்கை முழுவதும் விடைகள் கிடைக்காமல் அபலைகளாய் நாதியற்றுக் கிடக்கிற கேள்விகளோடு, அன்று பிறந்த கேள்விகளும் ஐக்கியமாகின.//

அருமை.

கோமதி அரசு said...

உங்கள் அனுபவ பதிவு.படித்து மனம் வலிக்கிறது. அந்த பையனின் மரணம் ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.

Muruganandan M.K. said...

மனது கனக்கறது. சுவையாகவும் மனத்தில் பாரம் அழுத்துமாறும் சொல்லியிருக்கிறீர்கள்.

அகல்விளக்கு said...

என்ன தல இது....??
:(

கதையாக இருப்பின் வாழ்த்துக்கள்...

நிஜம் என்றால்......

ஜெய்லானி said...

@@@அக்பர்--//
சில ரகசியங்கள் கடைசி வரை தெரிவதில்லை. வீரப்பன் மரணம் போல். ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது உங்களிடம். சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறீர்கள்.//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சேட்டை..________________ ..

1) சூப்பர்...
2) கலக்கல்
3) தூள்..

( ஏதாவது ஒண்ணை fill பண்ணிக்கோங்க பாஸ்..)

insight said...

நல்ல பதிவு .... இது போன்ற எத்தனையோ மரணங்கள் கேள்வி எழுப்ப படாமலே மூட படுகிறது .இந்தனை போன்ற சம்பவங்கள் உறவுகள் எல்லாம் போலியாக மாயையாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்ப்பட்டு பின் சமாதனம் அடைகிறது நமக்கு அப்படி இல்லை என்று . ஆனால் சுய கௌரவம் என்று சொல்லும் கருத்தியல் மனித மனங்களை மூடமாக்குகிறது என்பது உண்மைதான் நன்பா

r.v.saravanan said...

நல்ல பதிவு

நாடோடி இலக்கியன் said...

ஆமா இது புனைவு இல்லையா?

புலவன் புலிகேசி said...

Good one..

Anisha Yunus said...

குழம்பிட்டேன். அனுபவமா இருந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படியும் ம‌னிதர்கள். வாழ வேண்டிய வயதில் மகன் இறந்த பின்னும் அவர்கள் வாழ்வில் எந்த சலன‌மும் தென்படாதது வியப்பு மட்டுமல்ல, இங்கும் பல கேள்விகளை நிறுத்துகின்றது. எனினும், கதையாக இருந்தால், நல்ல குழப்பமான கதை. உண்மைலயே உக்காந்து யோசிப்பீங்களோ?

settaikkaran said...

கே.ஆர்.பி.செந்தில் said...

//கதையாக இருந்தாலும் மனம் கனக்கிறது ...//

இது கதையல்ல; நிஜம்! :-(
கருத்துக்கு நன்றி நண்பரே!

King Viswa said...

//இது கதையா என்ன? நிஜமாக இருந்தால் அந்த பெற்றோர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே. அந்த அளவுக்கு மனவுறுதி இந்த காலத்தில் அசாத்தியம்.//

இது புனைவல்ல; அனுபவம் என்ற குறியீட்டைத் தான் பயன்படுத்தியிருக்கிறேன்.
மிக்க நன்றி!

ஜில்தண்ணி said...

//இப்படியும் சில மனிதர்கள் இருப்பார்களோ என்று யோசிக்க வைத்தது இந்த கதை. ரொம்ப நல்லா இருக்கு சேட்டை//

நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏன்? ஏன்??
மிக்க நன்றி!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//நண்பரே வார்த்தைகள் எதுவும் அற்றவனாய் நானும் பல கேள்விகளுடன் மிகவும் சிறப்பாக .எழுதி வாழ்த்துக்கள் !//

கேள்விகள் இனப்பெருக்கம் செய்தபடி இருக்கின்றன நண்பா.
மிக்க நன்றி!

ராஜா said...

// நல்ல பதிவு சே.கா//

மிக்க நன்றி!

ஹேமா said...

//சிலரது வாழ்வு கேள்விக்குறியினூடேதான். கதை நகர்வு அருமை.//

உண்மை. கேள்விகளின் சுமை அதிகமாயினும் பயணம் தொடர்கிறது.
மிக்க நன்றி!

settaikkaran said...

முகிலன் said...

// லேபிள் அனுபவம்னு சொல்லுது. ஆனா இது கதையா அனுபவமான்னு தெரியலை..//

அனுபவமே தான்! சந்தேகமே வேண்டாம்!

//அந்த இளைஞனின் தற்கொலைக்கு என்ன காரணம்னு தெரியலை. அந்தக் காரணம் தெரிஞ்சாத்தான் பெற்றோர்களுக்கு இருந்தது மன உறுதியா, இல்லை அழுத்தமான்னு தெரியும்.//

இன்னும் காரணம் புரியாமல், அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கும் வர இயலாமல், தொடரும் குழப்பத்துடன் நாங்கள்.....!

மிக்க நன்றி!

வானம்பாடிகள் said...

//படிக்கும்போதே என்னமோ செய்கிறது. :(//

பத்து நாட்களுக்கு முன்னரே எழுதி முடித்து, பலரிடம் வாசித்துக் காண்பித்த பின்னரே இடுகையிட்டேன். மிக்க நன்றி ஐயா!

LK said...

// இப்படியும் இருப்பார்களா??//

இதையே நாங்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மிக்க நன்றி!

Chitra said...

// கதையா? அனுபவமா? காட்சி நேரில் தெரிவது போல, நல்ல எழுத்து நடை.//

அனுபவமே தான்! நேரில் கண்டதை உங்கள் அனைவரிடமும் ஒப்பித்திருக்கிறேன். மிக்க நன்றி!

அப்புறம், தெரியாத்தனமாய் அடுத்த பதிவுக்கான உங்கள் பின்னூட்டத்தை அவசரத்தில் டிலீட் செய்து விட்டேன். கன்னத்தில் போட்டுக்கிறேன். :-(

settaikkaran said...

ப்ரின்ஸ் said...

// ம்ம்ம்ம்ம்....... நல்ல எழுத்து நடை.//

மிக்க நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

// ம் ...:(//

மிக்க நன்றி!

அண்ணாமலை..!! said...

//சேட்டை மனதில் தைத்த ஒரு நிகழ்ச்சிக்கான நல்ல விவரிப்பு..! துயரங்கள் இப்போதெல்லாம் பெரிதாகப் பாவிக்கப்படுவதில்லை! இறந்த வீட்டில் இப்போது அழுவதே குற்றமாகப் பார்க்கப்ப்டுகிறது..//

ம். நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாயிருக்கலாம். ஆனாலும்....???

மிக்க நன்றி!

மசக்கவுண்டன் said...

//நல்ல அனுபவம்.//

மிக்க நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

//சில மனிதர்கள் இப்படித்தான் போலும். நல்ல அனுபவம்.:(//

சில நேரங்களில் சில மனிதர்களா? ம்! :-(
மிக்க நன்றி!

பித்தனின் வாக்கு said...

//good story//

மிக்க நன்றி! உங்களது பின்னூட்டம் பார்த்து ஒரு யுகம் ஆனது போலிருக்கிறது!

அக்பர் said...

//சில ரகசியங்கள் கடைசி வரை தெரிவதில்லை. வீரப்பன் மரணம் போல். ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது உங்களிடம். சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறீர்கள்.//

கண்முன்னே நிகழ்ந்தேறிய சம்பவங்களை இயன்றவரை கோர்வையாகச் சொல்ல முயன்றேன். அவ்வளவே!

மிக்க நன்றி!

settaikkaran said...

ஹுஸைனம்மா said...

//சமீபத்தில நடந்த டெல்லி பெண் பத்திரிகையாளர் (தற்)கொலை நினைவுக்கு வருகிறது!!//

ஓஹோ! அது பற்றி எனக்குத் தெரியாது. கூகிளில் தேடி வாசிக்க முயல்கிறேன்.

//இந்தக் கதையில், பிரேத பரிசோதனை செய்த பின் என்ன சொன்னார்களாம்?//

இன்றுவரை என்ன விஷயம் என்பது புரியாத மர்மமாயிருக்கிறது. குழப்பதில் நாங்கள் அனைவரும்...!

மிக்க நன்றி!

ஸ்ரீராம். said...

//என்ன மரத்துப் போன உணர்வுகள்...உணர்வுகள்...?//

ஏன் மரத்துப் போயின அல்லது உண்மையிலேயே மரத்துத்தான் போய்விட்டனவா என்பதே கேள்வியாய்...விசுவரூபம் எடுத்தபடி....!

மிக்க நன்றி!

கோமதி அரசு said...

//கண்ணாடி பெட்டிக்குள் சொந்தத்தை போட்டு விட்டு, கட்டி அழக்கூட முடியாத உறவுகள். காலம் கலி காலம்.//

அப்படியிருத்தல் சாத்தியமா? கலிகாலமேயாக இருந்தாலும்...? குழப்பம் தொடர்கிறதே!

மிக்க நன்றி!

நாடோடி இலக்கியன் said...

// நல்ல கதை என்பது எது நிஜம் எது கற்பனை என வாசகன் தெளிந்து அறிய முடியாதபடி இருக்க வேண்டுமென எங்கோ படித்திருக்கிறேன்.அந்த வகையில் நீங்க வெற்றி பெற்றுவிட்டீர்கள்.//

இது நிஜமே! இதன் பாதிப்பு இன்னும் என்னுள் இருக்கிறது! மேலும் கேள்விகளை எழுப்பி விடைதெரியாமலிருக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை.

//அருமை.//

மிக்க நன்றி!

கோமதி அரசு said...

//உங்கள் அனுபவ பதிவு.படித்து மனம் வலிக்கிறது. அந்த பையனின் மரணம் ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.//

அந்தக் கேள்வி தொடர்கிறது, நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டேயிருக்கிறது.
மிக்க நன்றி!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

//மனது கனக்கறது. சுவையாகவும் மனத்தில் பாரம் அழுத்துமாறும் சொல்லியிருக்கிறீர்கள்.//

பாரத்தை இறக்கினேனா, அதிகரித்து விட்டேனா என்பதும் புரியவில்லையே!

மிக்க நன்றி!

அகல்விளக்கு said...

//என்ன தல இது....?? :(

//கதையாக இருப்பின் வாழ்த்துக்கள்... நிஜம் என்றால்......

நிஜமே! நூறு சதவிகிதம் நிஜம்! அதனால் தான் விடைகள் புரியாமல் இன்னும் குழம்பியபடி...

மிக்க நன்றி!

settaikkaran said...

ஜெய்லானி said...

//@@@அக்பர்--// சில ரகசியங்கள் கடைசி வரை தெரிவதில்லை. வீரப்பன் மரணம் போல். ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது உங்களிடம். சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறீர்கள்.// ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//

மிக்க நன்றி நண்பரே!

பட்டாபட்டி.. said...

// சேட்டை..________________ ..

1) சூப்பர்...
2) கலக்கல்
3) தூள்..

( ஏதாவது ஒண்ணை fill பண்ணிக்கோங்க பாஸ்..)//

உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்? மூன்றையுமே தனித்தனியாய் போட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி அண்ணே!

insight said...

// நல்ல பதிவு .... இது போன்ற எத்தனையோ மரணங்கள் கேள்வி எழுப்ப படாமலே மூட படுகிறது .இந்தனை போன்ற சம்பவங்கள் உறவுகள் எல்லாம் போலியாக மாயையாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்ப்பட்டு பின் சமாதனம் அடைகிறது நமக்கு அப்படி இல்லை என்று . ஆனால் சுய கௌரவம் என்று சொல்லும் கருத்தியல் மனித மனங்களை மூடமாக்குகிறது என்பது உண்மைதான் நன்பா//

இதன் காரணங்கள் புரியாமல் முன்முடிவுகளுக்கு வரக்கூடாது என்று காத்திருந்து, அது புரியாத விரக்தியும், அதை விரைவில் மறந்து விடுகிற அபாயமுமாகச் சேர்ந்தே என்னை எழுதத்தூண்டியது. மிக்க நன்றி!

r.v.saravanan said...

// நல்ல பதிவு//

மிக்க நன்றி!

நாடோடி இலக்கியன் said...

// ஆமா இது புனைவு இல்லையா?//

இல்லை, இது நிகழ்வு! அனுபவம்! இப்படி வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது! மிக்க நன்றி!

புலவன் புலிகேசி said...

// Good one..//

மிக்க நன்றி!

அன்னு said...

//குழம்பிட்டேன். அனுபவமா இருந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படியும் ம‌னிதர்கள். வாழ வேண்டிய வயதில் மகன் இறந்த பின்னும் அவர்கள் வாழ்வில் எந்த சலன‌மும் தென்படாதது வியப்பு மட்டுமல்ல, இங்கும் பல கேள்விகளை நிறுத்துகின்றது. எனினும், கதையாக இருந்தால், நல்ல குழப்பமான கதை. உண்மைலயே உக்காந்து யோசிப்பீங்களோ?//

இது புனைவல்ல; அனுபவம்! எட்ட இருந்தும் கிட்ட இருந்தும் பார்த்த காட்சிகளின் தொகுப்பு. இவற்றில் உள்ள குழப்பங்கள் உண்மையில் எனக்குள்ள குழப்பங்களோடு ஒப்பிடுகையில்...? என்ன சொல்வது?

மிக்க நன்றி!

பொன்கார்த்திக் said...

சகா படித்து 20 நிமிடங்கள் ஆகிவிட்டது இன்னும் நன் அதிலிருந்து மீளவில்லை. அருமை சகா!!!

smilzz said...

shocking story,I just can't move to next activities ?