"எங்கே இருக்கீங்க?"
"இதோ செல்ஃப்-சர்வீஸ் கவுன்டரிலே சாம்பல் கலர் முழுக்கை சட்டை, கண்ணாடி போட்டிருக்கேன்!"
"பார்த்திட்டேன்!" பேச்சு சட்டென்று துண்டிக்கப்பட, கைபேசியை சட்டைப்பையில் சொருகிக்கொண்டிருக்கும்போதே அவள் சற்றே பெரிதான புன்னகையோடு அவனை நெருங்கி விட்டிருந்தாள்.
"நீங்க என்னைத் தான் எதிர்பார்த்திட்டிருக்கீங்க!"
"ஓ!" பார்த்திபனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கைகுலுக்கினால் என்ன என்று ஒரு எண்ணம் தோன்றினாலும், அதை உடனே புறந்தள்ளி விட்டு மிகவும் மெனக்கெட்டு அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றான். கண்களைக் கட்டுப்பாடின்றி அலைய விடக்கூடாது என்று முன்னரே முடிவெடுத்திருந்தபோதும் ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது.
தோற்றத்தில் அதிசயிக்கத்தக்க கண்ணியம் தென்பட்டது. மாநிறம் என்றும் சொல்ல முடியாது. பதவிசாய் புடவையணிந்திருந்தாள். தலையை அழுத்திச் சீவிப்பின்னியிருந்தாள். நெற்றியில் மாங்காய் வடிவில் சின்னஞ்சிறிய ஸ்டிக்கர் பொட்டு! அதிக ஒப்பனை அவளுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை! வெயிலில் வந்திருந்ததால் நெற்றியில் சில வியர்வை முத்துக்கள் தென்பட்டன.
"என் பேர் பார்த்திபன்!"
"போனிலேயே சொன்னீங்களே?" அவள் சிரித்தாள். "என் பேரு ஜோதி!"
அது அவளது உண்மையான பெயராயிருக்க வாய்ப்பில்லையென்று பார்த்திபனுக்குப் புரிந்தது. பொய்யாயிருந்தாலும் அவன் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை. உண்மையோ, பொய்யோ, நாளைய தினம் இருவருமே ஒருவர் பெயரை மற்றவர் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை! மறுநாள் விடிந்தால், இன்றைய பொய்களோடு புதிதாய் முளைக்கும் பொய்களையும் சேர்த்துச் சுமந்தாக வேண்டும்.
"போலாமா?" என்று கேட்டவள், புருவத்தைச் சற்றே நெறித்தபடி,"எங்கே போறோம்?" என்று கேட்டாள்.
"கோவிலுக்குப் போறோம்!" என்றான் பார்த்திபன். "சாமி கும்பிடுவீங்க தானே?"
"ம்!" என்று சிரித்தாள் ஜோதி. பற்கள் வரிசையாய் இருந்தன. சிரித்தபோது கண்களில் கொஞ்சம் குழந்தைத்தனம் தெரிந்தது; வலது கன்னத்தில் சின்னதாய் ஒரு குழி விழுவதையும் கவனிக்க முடிந்தது.
கூட்டம் நெரித்துக்கொண்டிருந்த கடற்கரை ரயில் நிலையத்தில் அவ்வப்போது தற்செயலாய் உராய்ந்தபடி இருவரும் நடந்து, சாவகாசமாக பாதசாரிகள் பாலத்தில் ஏறி, ஆறாவது நடைமேடைக்குச் சென்று, கூட்டம் குறைவாயிருந்த முதல்வகுப்புப் பெட்டியில் ஏறி, கடைசி இருக்கைகளில் அமர்ந்தனர். சிறிது நேரம் என்ன பேசுவது என்ற குழப்பமும், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருந்த பரபரப்பும் பார்த்திபனை மென்று விழுங்கியது. பிறகு....
"இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்!" என்றான்.
"ஓ! வாழ்த்துக்கள்!!" என்று அவள் சட்டென்று அவன் கைபிடித்துக் குலுக்கினாள். பார்த்திபன் அதிர்ந்தான். ஆண்டாண்டுகாலமாக, பெண்ணின் ஸ்பரிசம் உணர்ந்திராத அவனது உள்ளங்கையில் மெல்லிய ஊசிகள் இறங்குவது போல சில்லென்ற உறுத்தல் ஏற்பட்டது.
"ஒவ்வொரு வருஷமும் தனியாத் தான் கோவிலுக்குப்போவேன். ஃபிரண்ட்ஸ் இருக்காங்க! கோவிலுக்கு வர மாட்டாங்க! பிறந்தநாள்னா அவங்களைப் பொறுத்தவரையிலும் அர்த்தம் வேறே!" என்று விரக்தியாகச் சிரித்தான். "என்னாலே அந்தக் கேலிக்கூத்தையெல்லாம் சகிக்க முடியாது. எவ்வளவு நெருங்கின சினேகிதனா இருந்தாலும் அவன் வாந்தியெடுத்தா எரிச்சல் தான் வரும்! எல்லாரும் ஒழுங்கா வீடு போய்ச் சேர்ந்தாங்களான்னு பொறந்த நாள் ராத்திரியன்னிக்குக் கவலைப் பட்டுக்கிட்டுத் தூங்காம இருக்க முடியாது. அதுனாலே தான், இந்த வருஷம் யார் கூடவாச்சும் கோவிலுக்குப்போயி, எதையாவது பிடிச்சதைச் சாப்பிட்டு, பிடிச்ச விஷயம் பத்திப் பேசணுமுன்னு தான் உன்னை...ஸாரி, உங்களை....." என்று திருத்திக்கொள்ள முற்பட்டவனை அவள் கையமர்த்தினாள்.
"நீன்னே சொல்லலாம்!" அவள் முகத்தில் இன்னும் சிரிப்பு இருந்தது. கூடவே சற்று வியப்பும் கூட! பார்த்திபன் பதற்றத்தை மறைக்க அதிகமாகப் பேசி, இயல்பாய் இருப்பது போல நடிக்க முற்படுவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.
ரயில் புறப்பட்டது. சின்னக்குழந்தை போல அவள் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தாள். காற்று முகத்தில் அறைய அறைய கண்களை லேசாய் மூடியபடி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். அவளைக் கூர்ந்து கவனித்தபோது கழுத்தில் அவள் அணிந்திருந்தது கவரிங் நகை என்பது புரிந்தது. தலையில் பூச்சூடியிருக்கவில்லை; பிடிக்காதோ என்னவோ! காதுகளிலும் மூக்கிலும் சின்னப்புள்ளியளவுக்கு பளபளப்பாய் எதையோ அணிந்திருந்தாள்.
"வேளச்சேரி ரூட்டுலே நான் வந்ததில்லை!" அவள் திரும்பிப் பார்த்து அவனிடம் குதூகலமாய்ச் சொன்னாள். "நல்லாயிருக்கு இது!"
திருவல்லிக்கேணி ரயில்நிலையம் வந்ததும் இறங்கினார்கள். தானியங்கிப் படிக்கட்டுகள் வழியாக இறங்கியபோது, மீண்டும் அவளது முகத்தில் ஒரு குதூகலம்! காரணமின்றி, சற்று அளவுக்கு அதிகமாகவே அவள் சிரிக்கிறாளோ என்று பார்த்திபனுக்குத் தோன்றியது. ஆனால், ஒரு பெண்ணின் விகல்பமில்லாத சிரிப்பை அருகிலிருந்து பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. சற்றே நெடியடித்த தெருக்களில் நடந்து பார்த்தசாரதி கோவில் வாசலை அடைந்தனர்.
"அம்மா! பூ வாங்கிக்கம்மா!" வாசலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த கிழவி ஏறக்குறைய அவர்களை வழிமறித்தாள்.
"ஜோதி! பூ வாங்கிக்க!" பார்த்திபன் நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னான். ஒரு கணம் ஜோதி அவனை ஏறிட்டபோது, அவளது கண்களில் இன்னும் மலைப்பு அதிகமாயிருப்பது போலத் தோன்றியது.
"எனக்குப் பூன்னா ரொம்ப இஷ்டம்! நிறைய வச்சுக்குவேன், பரவாயில்லையா?"
"ம்!"
ஜோதி தலைநிறைய பூ வைத்துக்கொண்டாள். வெள்ளை வெளேர் என்ற மல்லிகைப்பூக்கள் அவளுக்கு ஒரு அலாதி அழகை ஏற்படுத்தின. பூக்காரக்கிழவியிடமே செருப்புகளை ஒப்படைத்து விட்டு கோவிலுக்குள் நுழையும்போது, பார்த்திபனின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள்.
"என்ன?"
"ஒண்ணுமில்லை!"
ஐந்தே நிமிடத்தில் தரிசனம் முடித்து இருவரும் வெளியேறினர்.
"பொறந்த நாள்னீங்க? அர்ச்சனை பண்ணியிருக்கலாமே?" ஜோதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"எதுக்கு?" பார்த்திபன் சிரித்தான். "அது போகட்டும், கோவிலுக்குள்ளே போனதும் சட்டுன்னு கையைப் பிடிச்சியே, ஏன்?"
"இந்த ஊருக்கு வந்த புதுசிலே இந்தக் கோவிலுக்குத் தான் வந்தோம்," என்று குரலைத் தாழ்த்திக்கொண்டாள் ஜோதி. "அவரு கூட்டிக்கிட்டு வந்தாரு! அந்த ஞாபகம் வந்திச்சு!"
"ஓஹோ!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான் பார்த்திபன். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்ற கேள்வி அவன் நாக்கின் நுனி வரை வந்தது. ஆனால், அதற்கு அவளிடம் ஒற்றை வரியில் பதில் இருக்க வாய்ப்பிலை என்பது புரிந்ததால் மவுனமாய் இருந்தான்.
"சரி, இப்போ இப்படியே ஆட்டோ புடிச்சு ரத்னா கஃபே போயி டிபன் சாப்பிடலாம். அப்புறம் தேவியிலே படம் பார்க்கலாம். இல்லாட்டி பீச்சுக்குப் போயி காத்து வாங்கலாம்! என்ன பண்ணலாம்?" என்று கேட்டான் பார்த்திபன்.
"பீச்சுக்கே போகலாமே?" என்று மீண்டும் உற்சாகம் ததும்பும் குரலில் கேட்டாள் ஜோதி. "நானும் ஒரு துணையோட பீச்சுக்கு போயி வருஷக்கணக்காச்சு! இல்லேன்னா......."
அவள் தயக்கமாக இழுக்கவும், பார்த்திபன் நின்று அவளை ஏறிட்டான்.
"இல்லேன்னா....?"
"ஐஸ் ஹவுஸ் பக்கத்துலே ஒரு இடம் இருக்கு! தெரிஞ்ச இடம் தான்! போலீஸ் தொந்தரவெல்லாம் இருக்காது!"
அவளது முகத்தில் எந்த சலனமுமின்றி சர்வசாதாரணமாகக் கூறியபோதும், பார்த்திபனுக்கு எரிச்சலாக இருந்தது.
"இத பாரு ஜோதி! பேச்சிமுத்து கிட்டேயே நான் தெளிவாச் சொல்லிட்டேன்! எனக்கு சும்மா கூட வந்து, பேசி, கூட சாப்பிட்டு கம்பனி கொடுத்தாப் போதும்! வேறே எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை! எதுக்காகவும் அலையுற ஆசாமியும் நானில்லை! சும்மா ஃபிரண்ட்ஸ் மாதிரி ரெண்டு மூணு மணி நேரம் பேசிட்டுப் போயிருவோம். அப்புறம் சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவோம். சரியா?"
"சரி, உங்க விருப்பம்," என்று அவள் சிரித்த முகத்தோடு கூறினாள். இருவரும் தொடர்ந்து நடக்கத்தொடங்கினர்.
மெரீனா சாலை நெருங்குவதற்கு முன்னரே, பலமாகக் கடற்கரைக் காற்று வீசத்தொடங்கியது. விருட்டென்று அவளது சேலைத்தலைப்பு பார்த்திபன் முகத்தில் அடித்தது. உப்புக்காற்றில் அவளது புடவைவாசனையுடன், பூவாசனையும் கலந்து அவனுக்குள்ளே இறங்கியது. சாலையைக் கடக்கும் போது, சற்று அழுத்தமாகவே அவளது கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் இறுக்கமாய்ப் பிடித்திருந்ததில், அவளது மோதிரம் இருவருக்குமே உறுத்திக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்தே அவளது கையை அவன் விடுவித்தான்.
"எத்தனையோ நாள் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்திருக்கேன்!" என்று ஒரு சிறிய பெருமூச்சை விட்டுச் சொன்னான். "அது எப்படியிருக்கும்னு ஒருவாட்டியாவது அனுபவிச்சுப் பார்க்கணுமுன்னு ஆசை! அதுனாலே தான் இவ்வளவு நேரம் கையை விட மனசு வரலே!"
"இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சிட்டிருந்திருக்கலாமில்லே?" அவள் மீண்டும் சிரித்தாள். அவளது சிரிப்பிலிருந்த வெகுளித்தனத்தோடு அவளது தொழிலைப் பிணைப்பது கடினமாக இருந்தது.
"உட்கார்ந்து பேசலாமா?" அவளது பதிலுக்காகக் காத்திராமல், மணலில் அமர்ந்தான் பார்த்திபன்.
"ஏய் சுக்குக்காப்பி!" என்று கூவினாள் அவள். "ரெண்டு கப்!"
ஆவிபறக்கும் சுக்குக்காப்பியை அருந்தியபடி இருவரும் குறிக்கோளின்றி போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
"நீங்க என்ன எழுத்தாளரா? நிருபரா?" அமைதியை உடைத்து அவள் கேட்டாள்.
"ஏன்?" பார்த்திபன் சிரித்தான். "உன்னைப் பத்தி குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்பேன்ன்னு நினைக்கிறியா? அதிலெல்லாம் எனக்கு ஆர்வமில்லை! என்னைப் பத்தியும் நீ கேட்காதே!"
"என் கதையும் ஒண்ணும் புதுசில்லை!" என்று புன்னகைத்தாள் அவள். "புளிச்சுப்போன கதை! இன்னிக்கு உச்சுக் கொட்டிட்டு நாளைக்கே மறந்திடுவீங்க!"
தயக்கம் கலைந்து இருவரும் பேசத்தொடங்கினார்கள்! மெரீனா கடற்கரையிலிருந்து தொடங்கி, அரசியல்வரைக்கும் பேசினார்கள். இடையிடையே எதையாவது கொறித்தார்கள். வெளிச்சத்திலிருந்ததைக் காட்டிலும் அரையிருட்டில் ஜோதி அழகாய்த் தெரிந்தாள். அடிக்கடி சிரித்தாள். பார்த்திபனுக்கு அவளைப் பிடித்து விட்டிருந்தது. அவளுக்கும் அவனைப் பிடித்துவிட்டது போலத் தான் இருந்தது. நேரம் போவது தெரியாமல் பேசினார்கள் கடைசியில்......
"ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்குப்போயிடணும்," என்று அவள் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி கூறினாள்.
"சரி, லைட் ஹவுஸ் பக்கம் போனா, ஏதாவது சைனீஸ் அயிட்டம் வாங்கிச் சாப்பிடலாம்! அப்படியே ஆட்டோ பிடிச்சு நீ எங்கே போகணுமோ, இறக்கி விட்டுட்டு நான் போறேன். சரியா?"
அப்படியே செய்தார்கள்! வயிறாரச் சாப்பிட்டார்கள். பனாரசி பான் சவைத்தார்கள். பிறகு, சாலையைக் கடந்து ஆட்டோ பிடித்தார்கள்.
"உன்னை எங்கே விடட்டும்?" பார்த்திபன் கேட்டான்.
"கோடம்பாக்கம் பிரிட்ஜ் தாண்டி விவேக் பக்கத்துலே இறக்கிடுங்க!"
ஆட்டோ கிளம்பியதும் பார்த்திபன் அவள் கையில் ஒரு உறையைத் திணித்தான்.
"சொன்னபடி இருக்கான்னு பார்த்துக்க!"
அவள் எண்ணிப்பார்க்கவில்லை. கைப்பையில் திணித்துக்கொண்டு மீண்டும் அதே புன்னகை! அவள் இன்னும் சில நிமிடங்களில் இறங்கி விடுவாள் என்ற உண்மை திடீரென்று பார்த்திபனுக்கு மனதில் கனத்தது. அவளது ஒரு கையைப் பிடித்துக்கொண்டான்; இப்படியே அவள் இறங்கும்வரையிலும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.
பயணத்தின் போது இருவரும் பெரும்பாலும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பார்த்திபன் அடிக்கொரு தடவை அவளையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்தான். போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டபோதெல்லாம் அவள் சலிப்புடன் வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்தாள். கைக்கடியாரத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டு ஞாபகம் வந்து விட்டது போலும்! வீட்டில் கணவனோ, குழந்தையோ அல்லது இன்னும் யார் யாரோ காத்திருக்கலாம். யார் கண்டார்கள்?
ஆற்காட்டு சாலையில் ஆட்டோ நின்றது. ஜோதி இறங்கிக்கொண்டாள்.
"அப்ப நான் வர்றேன்," அவள் இம்முறை சிரித்தபோது பார்த்திபனுக்கு இனம்புரியாத ஒரு வலி மனதில் உறுத்தியது.
"சரி, பை!" என்று கையசைத்தான். "ஆட்டோ, சாலிக்கிராமம் போப்பா!"
வீடு திரும்பும் அந்தப் பயணம் மிகவும் வலிமிகுந்ததாக இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்கள் அந்த வலியும், அவளைப் பற்றிய சிந்தனையும் வலுத்துக்கொண்டே போனது. யாராவது சிரித்தால் ஜோதியின் கன்னக்குழி நினைவுக்கு வந்தது. மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்தால் என்ன?
குழப்பமும் தயக்கமுமாய் நாட்கள் கடந்தன. ஒரு நாள், அவனே எதிர்பாராத நேரத்தில் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.
"யாரு தெரியுதா?" அதே இனிமையும் முதிர்ச்சியும் கலந்த குரல்
"மறக்க முடியுமா?" பார்த்திபனுக்கு இதயம் படபடத்தது.
"என்னமோ தெரியலே! போன் பண்ணனுமுன்னு தோணிச்சு!" என்று மறுமுனையில் களுக்கென்ற சிரிப்பு. "அன்னிக்கு நாம சந்திச்சது வித்தியாசமா இருந்தது; கொஞ்சம் நிம்மதியாவும் இருந்தது!"
"எனக்கும்...," என்று தடுமாறினான் பார்த்திபன். "இன்னொரு முறை சந்திக்கணும் போலிருக்கு!"
"சந்திக்கலாமே?" என்று அவள் உற்சாகமாகச் சொன்னாள்."ஒரு நாள் முன்னாடி சொல்லுங்க! சந்திக்கலாம்! நான் சந்திச்சதிலேயே நீங்க ரொம்ப வித்தியாசமான நபர்!"
"சந்திப்போம் ஜோதி," என்று மென்றுவிழுங்கிய பார்த்திபன், துணிவை வரவழைத்துக்கொண்டு மனதிலிருந்த அரிப்பைப் போட்டு உடைத்தான். "ஆனால், இந்த முறை பீச்சிலே சந்திக்க வேண்டாம்! நீ அன்னிக்கு சொன்னியே, தெரிஞ்ச இடம் இருக்குன்னு....அங்கே போகலாம்! சரியா?"
மறுமுனையில் திடீரென்று மயான அமைதி!
"ஜோதி?" பார்த்திபன் பரபரத்தான்."நான் சொன்னது காதுலே விழுகுதா?"
பதிலுக்காகக் காத்திருந்த பார்த்திபனுக்கு, தொடர்ந்து நீண்ட அவளின் மவுனம் பெரும் வதையாக இருந்தது.
அந்த நெடிய மவுனத்தின் முடிவிலே, மறுமுனையில் இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.
Tweet |
40 comments:
நல்ல உணர்ச்சி பூர்வமான சிறுகதை. முதல் மரியாதையில் சிவாஜி கணேசனுக்கும் ராதாவிற்கும் இப்படியான ஒரு உறவுதான் இருந்தது.
//
மசக்கவுண்டன் said...
நல்ல உணர்ச்சி பூர்வமான சிறுகதை. முதல் மரியாதையில் சிவாஜி கணேசனுக்கும் ராதாவிற்கும் இப்படியான ஒரு உறவுதான் இருந்தது.
//
கவுண்டரே! அது வேறங்க!
பிரபாகர்...
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு நண்பா! எதிர்ப்பார்ப்புக்கள் மாறுகின்றன அல்லவா! விரும்புதல் கிடைக்காத போது ஏமாற்றம் வருமல்லவா! இங்கு இருவருக்கும்...
பிரபாகர்...
ரொம்ப நல்லாருக்குங்க. இது இன்னொருவிதமான சேட்டை. பொய்முகங்களை எப்பவும் சுமந்துக்கிட்டிருக்க முடிவதில்லை.
ஓரளவுக்கு கதையின் முடிவை யூகித்திருந்தேன். ஆகையால் பெரிய அதிர்ச்சி இல்லை. ஆனால் மிகவும் அழகான நடை. உரையாடல் என படித்ததும் ஒரு திருப்தி ஏற்பட்டது.
பாராட்டுகள்.
மசக்கவுண்டனாரே அது வேறெ! இது வேறெ!.
இதை எழுதுனது நம்ம சேட்டைதானா? ரொம்பவே அருமையா இருக்கு நண்பா.. முடிக்கிறப்போ மனசு கனத்துப் போச்சு..
அட.. நம்ம சேட்டையா இது?.. சூப்பராயிருக்கு அப்பு..
இப்படி ஒரு கதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்.. (சுஜாதா?) முடிவு மட்டும மாற்றமாய்.. ஆனால் உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது.
அவன் ஒன்னும் செய்யாம அவளை அனுப்புனப்பவே முடிவை யூகிக்க முடிஞ்சது. இருந்தாலும் சுவாரசியமாத்தான் இருந்தது.
அடிக்கடி இது மாதிரியும் எழுதுங்க சேட்டை.. :))
எது எழுதினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அருமை.
தொடர்ந்து இது போல் வெரைட்டியாக படையுங்கள் நண்பரே.
இது மாதிரி வெரைட்டியா கொடுங்க... நல்லா இருந்தது.
அட்டகாசம்!! தொடருங்கள்!!!
நண்பா,
அருமையான கதை.
நல்ல எழுத்து நடை. நீங்கள் இதை ஏன் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கக்கூடாது.
தொடர்ந்து எழுதுங்கள்.
என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்
நல்லாருக்கு நண்பா
கதை சொன்ன பாணி நன்று.
வர்ணனைகள் சற்றே அதிகம்
என்பது என் எண்ணம்.
சேட்டைக் காரன் அவர்களே... அந்தப் பெண்ணின் இடத்தில் இருந்து நான் அழுகிறேன்...
வாழ்த்துகள்...
--
நன்றி
பிரகாஷ் (எ)சாமகோடங்கி
நல்லா இருக்கு சேட்டை..
//அந்த நெடிய மவுனத்தின் முடிவிலே, மறுமுனையில் இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.//
முடிவு உண்மையிலேயே சூப்பர்....
கலக்கிடீங்க போங்க...!!!
அருமை சேட்டை...இயல்பா, உணர்வுபூர்வமா இருந்தது..
குட் ஒன் சேட்டை! வாழ்த்துகள்
நல்ல எழுத்துநடை...
நல்ல எழுத்துநடை..தொடருங்கள்..
முடிவு உண்மையிலேயே சூப்பர்..நல்லா இருக்கு சேட்டை.
ஆழமான கருத்து. நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள் சேட்டை.
யதார்த்தமான எண்ணங்களின் வெளிப்பாடு..
சராசரி ஆண்களின் மனோபாவத்தை அழகா சொல்லிருக்கீங்க.
அந்த பெண்ணோட ஆழ் மனசுல இருக்குற ஏக்கம், சுமை
எல்லாமே அருமையா வெளிப்படுது.
தனிப்பட்டு யோசிச்சிருக்கீங்க..
மேலும் இது மாதிரி நிறைய எழுதுங்கள்.
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே
நன்னாயிருக்கு சேட்டைவாள்
மசக்கவுண்டன் said...
//நல்ல உணர்ச்சி பூர்வமான சிறுகதை. முதல் மரியாதையில் சிவாஜி கணேசனுக்கும் ராதாவிற்கும் இப்படியான ஒரு உறவுதான் இருந்தது.//
பின்னூட்டத்துக்கு நன்றி மசக்கவுண்டரே! ஆனால், முதல் மரியாதை கதை...? ஓ.கே! :-)
பிரபாகர் said...
//ரொம்ப ரொம்ப நல்லாருக்கு நண்பா! எதிர்ப்பார்ப்புக்கள் மாறுகின்றன அல்லவா! விரும்புதல் கிடைக்காத போது ஏமாற்றம் வருமல்லவா! இங்கு இருவருக்கும்...//
அதே! எதிர்பார்ப்புகள் மாறுகிற போது ஏற்படுகிற ஏமாற்றங்களே கரு! மிக்க நன்றி!:-)
அமைதிச்சாரல் said...
//ரொம்ப நல்லாருக்குங்க. இது இன்னொருவிதமான சேட்டை. பொய்முகங்களை எப்பவும் சுமந்துக்கிட்டிருக்க முடிவதில்லை.//
முகங்களைக் காட்டிலும் கலைந்து போகிற ஒப்பனைகளே நம்மையும், பிறரையும் பெரும்பாலும் ஏமாற்றுகின்றன அல்லவா? மிக்க நன்றி!! :-)
மஞ்சூர் ராசா said...
// ஓரளவுக்கு கதையின் முடிவை யூகித்திருந்தேன். ஆகையால் பெரிய அதிர்ச்சி இல்லை. ஆனால் மிகவும் அழகான நடை. உரையாடல் என படித்ததும் ஒரு திருப்தி ஏற்பட்டது. பாராட்டுகள்.//
இது எதார்த்தமான நிகழ்வுகளைப் பற்றிய ஒரு புனைவு என்பதால் முடிவு ஊகத்துக்கு எளிதாக இருக்கலாம். மிக்க நன்றி அண்ணே!
கார்த்திகைப் பாண்டியன் said...
//இதை எழுதுனது நம்ம சேட்டைதானா? ரொம்பவே அருமையா இருக்கு நண்பா.. முடிக்கிறப்போ மனசு கனத்துப் போச்சு..//
சேட்டைக்கும் அவ்வப்போது பேராசை வருகிறதே புனைவு எழுத? :-) மிக்க நன்றி!
பட்டாபட்டி.. said...
//அட.. நம்ம சேட்டையா இது?.. சூப்பராயிருக்கு அப்பு..//
உம்! சேட்டையே தான்! மிக்க நன்றி அண்ணே! :-))
ரிஷபன் said...
//இப்படி ஒரு கதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்.. (சுஜாதா?) முடிவு மட்டும மாற்றமாய்.. ஆனால் உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது.//
மிக்க நன்றி! சில நேரங்களில் சிறுகதைகள் பழையவற்றோடு ஒப்பிடக்கூடியவை தானே? :-) மீண்டும் நன்றி!
முகிலன் said...
//அவன் ஒன்னும் செய்யாம அவளை அனுப்புனப்பவே முடிவை யூகிக்க முடிஞ்சது. இருந்தாலும் சுவாரசியமாத்தான் இருந்தது. அடிக்கடி இது மாதிரியும் எழுதுங்க சேட்டை.. :))//
ஆமாம். இது எதார்த்தமனிதனின் எண்ணங்கள் குறித்த புனைவுதானே? அவசியம் அவனது மனவோட்டத்தைக் கணக்கிடல் எளிதே! மிக்க நன்றி! :-)
அக்பர் said...
//எது எழுதினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அருமை.தொடர்ந்து இது போல் வெரைட்டியாக படையுங்கள் நண்பரே.//
எல்லாம் உங்களைப் போன்றோரின் நல்லாதரவும் ஊக்கமும் தருகிற உந்துதல் தான். மிக்க நன்றி! :-)
தமிழ் பிரியன் said...
//இது மாதிரி வெரைட்டியா கொடுங்க... நல்லா இருந்தது.//
அவசியம் முயற்சிப்பேன்! மிக்க நன்றி! :-)
சைவகொத்துப்பரோட்டா said...
//அட்டகாசம்!! தொடருங்கள்!!!//
மிக்க நன்றி! :-)
என். உலகநாதன் said...
//நண்பா, அருமையான கதை. நல்ல எழுத்து நடை. நீங்கள் இதை ஏன் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கக்கூடாது. தொடர்ந்து எழுதுங்கள்.//
நல்ல ஆலோசனை தான்! செயல்படுத்த இனி முயல்வேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருக!! :-)
நேசமித்ரன் said...
//நல்லாருக்கு நண்பா//
மிக்க நன்றி! :-)
NIZAMUDEEN said...
//கதை சொன்ன பாணி நன்று.வர்ணனைகள் சற்றே அதிகம் என்பது என் எண்ணம்.//
கருத்துக்கு மிக்க நன்றி! :-)
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//சேட்டைக் காரன் அவர்களே... அந்தப் பெண்ணின் இடத்தில் இருந்து நான் அழுகிறேன்...வாழ்த்துகள்...//
அந்த ஆணின் இடத்தில் இருந்தாலும் அழுகை வரலாம் அல்லவா? மிக்க நன்றி! :-)
முத்துலெட்சுமி/muthuletchumi said...
//நல்லா இருக்கு சேட்டை..//
மிக்க நன்றி! :-)
ஜெய்லானி said...
//முடிவு உண்மையிலேயே சூப்பர்....//
மிக்க நன்றி! :-)
ஜெகதீபன் said...
//கலக்கிடீங்க போங்க...!!!//
மிக்க நன்றி! :-)
ஸ்ரீராம். said...
// அருமை சேட்டை...இயல்பா, உணர்வுபூர்வமா இருந்தது..//
கருத்துக்கு மிக்க நன்றி! :-)
☀நான் ஆதவன்☀ said...
//குட் ஒன் சேட்டை! வாழ்த்துகள்//
மிக்க நன்றி! :-)
கண்ணகி said...
//நல்ல எழுத்துநடை..தொடருங்கள்..//
மிக்க நன்றி! :-)
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//முடிவு உண்மையிலேயே சூப்பர்..நல்லா இருக்கு சேட்டை.//
ஆஹா! கருத்துக்கு மிக்க நன்றி! :-)
வெங்கட் நாகராஜ் said...
//ஆழமான கருத்து. நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள் சேட்டை.//
வாங்க ஐயா, மிக்க நன்றி! :-)
இந்திரா said...
//யதார்த்தமான எண்ணங்களின் வெளிப்பாடு.சராசரி ஆண்களின் மனோபாவத்தை அழகா சொல்லிருக்கீங்க. அந்த பெண்ணோட ஆழ் மனசுல இருக்குற ஏக்கம்,சுமை எல்லாமே அருமையா வெளிப்படுது.தனிப்பட்டு யோசிச்சிருக்கீங்க..மேலும் இது மாதிரி நிறைய எழுதுங்கள்.ரொம்ப நல்லா இருக்கு நண்பரே//
வாசித்ததோடு இவ்வளவு தாராளமாகப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி! :-)
கரிகாலன் said...
//நன்னாயிருக்கு சேட்டைவாள்//
மிக்க நன்றி! :-)
VELU.G said...
//அருமையான கதை//
மிக்க நன்றி! :-) வருகைக்கு நன்றி! அடிக்கடி வாருங்கள்!
நல்லதொரு
சிறுகதை வாசித்த உணர்வு.
உங்களின் சேட்டையில்லாத
ஒரு முகமோ!
மிகவும் அருமையான கதை நண்பரே வாழ்த்துக்கள் ! இதுவரை நான் மிகவும் ரசித்த கதைகளின் பட்டியலில் இனி இதுவும் ஒன்றாக இருக்கும் . பகிர்வுக்கு நன்றி . தொடரட்டும் உங்களின் சாதனைகள் !
arumai
நல்லா இருக்குங்க கதை... அப்படியே சுத்தி இருக்கறத மறக்க வெக்கற எழுத்து வரம் தான் உங்களுக்கு. வாழ்த்துக்கள்
சேட்டை, அருமையான கதைய்யா. பாராட்டுக்கள்.
சேட்டை ரொம்ப நுணுக்கமான உணர்வுகள் சேட்டை. கொஞ்சமும் கலப்படமில்லாமல் கொடுத்ததற்கு நன்றி. கத்திமேல் நடக்கிறார்போல் கொஞ்சம் ஒரே ஒரு வார்த்தை பிசகினாலும் விரசமாகிப்போகும் ஆபத்து. தேர்ந்த எழுத்து சேட்டை. ஜோதியின் மனதின் வலியும் கனமும் படிப்பவரை சுமக்கவைத்து விட்டீர்கள்.இந்த எழுத்துக்கு நமஸ்காரம்.:) க்ரேட்.
பாராட்டுவதற்கு வார்த்தை வரவில்லை... SIMPLY SUPERB!!
ஹேமா said...
// நல்லதொரு சிறுகதை வாசித்த உணர்வு.உங்களின் சேட்டையில்லாத ஒரு முகமோ!//
எவ்வளவு ஒப்பனை செய்தாலும், நிஜமுகம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறதே! மிக்க நன்றி! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//மிகவும் அருமையான கதை நண்பரே வாழ்த்துக்கள் ! இதுவரை நான் மிகவும் ரசித்த கதைகளின் பட்டியலில் இனி இதுவும் ஒன்றாக இருக்கும் . பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் உங்களின் சாதனைகள் !//
தொடர்ந்து வருகை தருவதோடு, உற்சாகமூட்டுகிற உங்களைப் போன்றோர் அளித்த துணிச்சலின் விளைவு இது. மிக்க நன்றி! :-)
LK said...
//arumai//
மிக்க நன்றி! :-)
அப்பாவி தங்கமணி said...
//நல்லா இருக்குங்க கதை... அப்படியே சுத்தி இருக்கறத மறக்க வெக்கற எழுத்து வரம் தான் உங்களுக்கு. வாழ்த்துக்கள்//
உங்களின் மனம்நிறைந்த பாராட்டில் மகிழ்ச்சியால் என் மனம் நிரம்பி விட்டது. மிக்க நன்றி! :-)
அமர பாரதி said...
//சேட்டை, அருமையான கதைய்யா. பாராட்டுக்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
வானம்பாடிகள் said...
//சேட்டை ரொம்ப நுணுக்கமான உணர்வுகள் சேட்டை. கொஞ்சமும் கலப்படமில்லாமல் கொடுத்ததற்கு நன்றி. கத்திமேல் நடக்கிறார்போல் கொஞ்சம் ஒரே ஒரு வார்த்தை பிசகினாலும் விரசமாகிப்போகும் ஆபத்து. தேர்ந்த எழுத்து சேட்டை. ஜோதியின் மனதின் வலியும் கனமும் படிப்பவரை சுமக்கவைத்து விட்டீர்கள்.இந்த எழுத்துக்கு நமஸ்காரம்.:) க்ரேட்.//
பலமுறை திருத்தி, பலரிடம் வாசித்துக் காட்டி, சிலவற்றை மாற்றி இறுதிவடிவம் கொடுத்த புனைவு இது! அந்த முயற்சிகள் வீண் போகவில்லை என்பதற்கு உங்களது தாராளமான பாராட்டால் உணர்ந்து அகமகிழ்கிறேன். மிக்க நன்றி ஐயா!
ராதை said...
//பாராட்டுவதற்கு வார்த்தை வரவில்லை... SIMPLY SUPERB!!//
நன்றி சொல்ல மட்டும் வார்த்தைகள் உள்ளனவா என்ன? மிக்க நன்றி! :-)
Post a Comment