Saturday, October 5, 2013

16 வயதினிலே- என்றும் இனிக்கும்!




கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகள் விற்கிற (கோழை) கதாநாயகனும் கதாநாயகியும்; நாயகியை மோப்பம் பிடித்துத் துரத்துகிற பீடி குடிக்கிற வில்லன். ஆரம்பத்தில் நாயகனை வெறுத்து ஒதுக்கி, பின்னர் அவனை விரும்புகிற நாயகி ஒரு கட்டத்தில் திருமணத்துக்குச் சம்மதிக்க, இதையறிந்த வில்லன் நாயகியை பலாத்காரமாக அடைய முயல, அங்கு வருகிற கோழை கதாநாயகன், காதலியின் கற்பைக் காப்பாற்றுவதற்காக, அருகிலிருக்கும் ஒரு பெரிய கல்லை எடுத்து வில்லனின் தலையில் போட்டுக் கொலைசெய்கிறான். பிறகு, ஜெயிலுக்குப் போன நாயகன் திரும்பி வருவதற்காக, கன்னியாகுமரி கடற்கரையில் சிப்பிகளை விற்பனை செய்தவாறு நாயகி காத்திருக்கிறாள். இதுதான் கதை!

      ஹலோ! 16 வயதினிலேஎன்று தலைப்புப்போட்டுவிட்டு, கன்னியாகுமரி, கடற்கரை, சிப்பி வியாபாரம் என்று மூடிதிருகிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்கிறீர்களா? என்ன செய்ய, கே.எஸ்.சேதுமாதவன் இயக்கி, கமல்ஹாசன் மற்றும் ரீடா பாதுரி நடித்து வெளியான ‘கன்னியாகுமரிஎன்ற மலையாளப்படத்தின் கதையைச் சொன்னேன் சாமி! (1974-ம் ஆண்டில் ஏதோ ஒரு ‘பிலிமாலயாமாத இதழில் படங்களுடன் கதையும் போட்டிருந்தார்கள்!) இந்தப் படம் வெளியானது 1974-ல்; 16 வயதினிலேவெளியானது 1977-ல்! அனேகமாக கன்னியாகுமரிபடம் மலையாளத்தில் பணால் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆகையால், அதிகம் மெனக்கெடாமல் கதையை நைஸாக லவட்டிக்கொண்டு வந்து சிக்கனமாக இட்லி உப்புமாவாகக் கிண்டி விட்டார்கள். சினிமாவில் இதெல்லாம் சகஜம் அண்ணே!

      பரவாயில்லை! இந்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி அசடுவழிந்ததும், அமிதாப் பச்சன், “ரஜினிகாந்த், கோவிந்தா நடித்ததும், முகுல் ஆனந்த் இயக்கத்தில் உருவானதுமான ‘ஹம்படத்தின் கதையை உட்டாலக்கிடி செய்து ‘பாட்ஷாஎன்று எடுத்து வெளியிட்டு சில்லறை பார்க்கவில்லையா? அப்புறம், ‘சந்திரமுகிபடத்தின் கதைக்காக நடந்த குடுமிப்பிடி சண்டையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா? மற்ற விஷயத்தில் எப்படியோ, இதில் உலக நாயகனுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறதுங்கோ! நல்ல விஷயம்!

      சரத் சந்திரரின் ‘தேவதாஸ்தெலுங்கிலும், தமிழிலும் வரவில்லையா? அதே சாயலில் எத்தனை கதைகள் வெளிவந்திருக்கின்றன? கன்னியாகுமரியும், ஹம் படமும் சாதிக்க முடியாததை, 16 வயதினிலேயும் பாட்ஷாவும் சாதித்தது என்றால், அதில் இருந்த முனைப்புகளைப் பாராட்டியே தீர வேண்டும்.
      ’16 வயதினிலே சினிமா நூற்றாண்டில் தமிழின் சிறந்த பத்துப்படங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், எனது பட்டியலில் அவசியம் இடம்பெறும். காரணம், தமிழ் சினிமாவை அந்தப் படம் புரட்டிப்போட்டதுபோல வேறெந்தப் படமும் செய்ததில்லை. நடிப்பு, இசை, ஓளிப்பதிவு, இயக்கம், வசனம் என்று எந்த அம்சத்தை அளவுகோலாக வைத்துப் பார்த்தாலும் அது ஒரு மைல்கல்லாக அமைந்த படம்.

      பெல்பாட்டமும், தொங்குமீசையுமாக டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்கமலை, கோவணத்தோடு வருகிற சப்பாணியாகக் காட்டுவதெல்லாம் சாமானியமான இயக்குனர்களால் ஆகாத காரியம். இதையும் செய்து பார்த்துவிடுவோம்என்று இமேஜ் பற்றியெல்லாம் யோசிக்காமல், அப்படி நடித்துக் காட்டிய கமல் ஒருவிதத்தில் தமிழ் சினிமாவில் நாயகன் என்பவனுக்கு வரையறுக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையெல்லாம் தகர்த்து எறிந்திருந்தார். இவனை எங்கோ பார்த்ததுபோலிருக்கிறதே என்று இன்றைய படங்களில் சில ஹீரோக்களைப் பார்க்கும்போது நமக்குத் தென்படுகிற அந்தப் பரிச்சயத்தின் முதல் புள்ளி 16 வயதினிலேபடத்தில்தான் வைக்கப்பட்டது.

      1975-ல் வெளியாகி இந்தியாவை ஒரு கலக்குக் கலக்கிய ‘ஷோலேபடம் எப்படி, இந்தித் திரைப்படங்களின் உருவாக்கத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அத்தகைய தாக்கத்தை 16 வயதினிலேதமிழில் ஏற்படுத்தியது என்று உறுதியாகச் சொல்லலாம். ஆகவே, குறைகள் அதிகமில்லாத தமிழ்ப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக 16 வயதினிலேஇருந்தது என்பதையும், அதிநாயகர்களை ஆராதித்துக் கொண்டிருந்த திரையுலகத்தில் சாமானியர்களும் தங்கள் வரவை அறிவிக்க வழிவகுத்தது என்பதையும் இன்றைய சினிமாவின் அபிமானிகள் நன்றியோடு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

      இப்போதெல்லாம் வருகிற பெரும்பாலான சினிமாக்களில் நம்மால் அவசியம் காணமுடிகிற ஒரு சொதப்பல் அம்சம் பாத்திரப்படைப்பு! விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திரங்கள் நடித்த படங்களில் கூட காணக்கிடைக்கிற இந்தக் குறைபாடுக்கு ஒரு உதாரணம்; நாயகன் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து எத்தனைபேர் வந்தாலும் அடித்துத் துவைத்து விடுவான்; ஆனால், பரிதாபத்துக்குரிய காமெடியனை மட்டும் எப்போதும் அடியாட்களிடம் மாட்டிவைத்துவிட்டு செமத்தியாக மொத்து வாங்க விட்டு விடுவான். ஒரு கதாபாத்திரம் என்பது, இயல்பான முரண்பாடுகள் தவிர்த்து, கதையில் எப்போதும் ஒரே மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்-என்ற அடிப்படையிலேயே கோட்டை விடுவதை நாம் பல படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 16 வயதினிலேபடத்தைப் பற்றி யோசித்தால், சட்டென்று முதலில் நினைவுக்கு வருவது அதன் துல்லியமான பாத்திரப்படைப்புகள் தான்!

       நாயகன், நாயகி, வில்லன், நாயகியின் அம்மா, அந்த டாக்டர் என்று ஒவ்வொரு பாத்திரமும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை முதலிலேயே படுலாவகமாகக் காட்டியதோடு, படம் முழுக்க அவரவர் அந்தந்த இயல்புகளுடனேயே இருப்பதாகவே சித்தரித்திருப்பார்கள். அதற்கு முன்பெல்லாம் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, ஒரு ஃப்ரேமை ஃபீரீஸ் செய்து, வாய்ஸ் ஓவரில் கதாகாலட்சேபம் நடத்துவார்கள். விஷுவலாக பார்வையாளர்களை ஒவ்வொரு பாத்திரம் குறித்தும் உஷார்ப்படுத்துகிற உத்தி நிச்சயம் 16 வயதினிலேபடத்தில்தான் குறிப்பிடத்தக்க விதத்தில் கையாளப்பட்டது. கிராமத்துக்கு வருகிற டாக்டர் பாராட்டுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நாயகியைப் பார்த்துத் தடுமாறுகிற காட்சி ஒரு சின்ன உதாரணம்.

      தமிழ் சினிமாவில் பாத்திரங்களின் பெயர்களை வைத்தே அவர்களது குணாதிசயங்களைக் கணிக்க முடிந்த காலமும் ஒன்றிருந்தது. நாகலிங்கம் என்று பெயர் வைத்திருந்தால், அவர் பெரும்பாலும் மீசைவைத்துக் கொண்டு, அடியாட்களை வைத்து கிராமத்துப் பெண்களைக் கடத்திச் சென்று துகிலுரிபவராக இருப்பார். அதுவே தர்மலிங்கமாக இருந்தால் பரோபகாரியாக, ஊருக்காக பனியன், அண்டிராயரைக் கூட தியாகம் செய்யத் தயாரானவராக இருப்பார். கலைஞர் வசனம் எழுதிய படங்களில், வில்லனுக்கு அவர் வைக்கிற பெயர்களைக் கேட்டாலே மலேரியா வந்துவிடும். இதையெல்லாம் தகர்த்துக்காட்டிய படம் 16 வயதினிலே’. சப்பாணி, பரட்டை, மயிலு, குருவம்மா என்று டைட்டிலிலேயே போட்டுக்காட்டி ‘ரொம்ப ஓவரா எதிர்பார்க்காதீங்க கண்ணுகளாஎன்று உஷார்ப்படுத்திய படம். ‘இனிமே உன்னை யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா, சப்புன்னு அறைஞ்சிடுஎன்று மயிலு சொன்னாலும், படம் பார்த்து இத்தனை வருடங்களாகியும், நம் மனதில் கோபாலகிருஷ்ணன் பதியவில்லை என்பதும், சப்பாணிதான் உலாத்துகிறார் என்பதும்தான் பாரதிராஜாவின் வெற்றி அல்லது பா.ராஜா & கமலின் வெற்றி!

      காலாபத்தர்’, ‘மேரே அப்னேபோன்ற படங்களில் சத்ருகன் சின்ஹா அறிமுகமாகும்போது அரங்கம் அதிரும் கரவொலியைக் கேட்டு அதிசயித்ததுண்டு. தமிழிலும் ‘ஆயிரத்தில் ஒருவன்நம்பியாரும், ‘ரிக்‌ஷாக்காரன்அசோகனும், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்வீரப்பாவும் அறிமுகமாகும் காட்சியிலேயே அப்ளாஸை அள்ளுவார்கள். ஆனால், ஒரு படத்தின் நட்சத்திர அந்தஸ்தை அதிகரித்த வில்லன் என்றால், என்னைப் பொறுத்தவரையில், தமிழில் ரஜினி அடைந்த வெற்றிதான் குறிப்பிடத்தக்கது! அதன்பிறகு, சத்யராஜ் கொஞ்சம் கிட்டத்தில் வந்தார் என்றாலும், ரஜினியின் வில்லத்தனம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் என்பது, மறுக்க முரண்டு பிடித்தாலும், மறுக்க முடியாத உண்மை.

      ஸ்ரீதேவியைப் பற்றி என்ன சொல்ல? ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு பெருமூச்சுகளாக இடுகை போட்டாயிற்று! ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, எந்தப் படத்தில் யார் மஞ்சள் தாவணி கட்டிக்கொண்டு வந்தாலும், ‘ஹை மயிலுஎன்று சொல்லுமளவுக்கு அந்தப் பாத்திரத்தை உயிர்ப்பித்தவர்! கமல், ரஜினி இருவர் இருக்கிற படத்தில், ஒரு கதாநாயகி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார் என்பதே போதுமே! சிவாஜியைப் போலவே, ஸ்ரீதேவியும் பாத்திரத்தின் தன்மை சற்று மாறும்போது, குரலைச் சற்றே மாற்றுவதில் கெட்டிக்காரர்! ’16 வயதினிலேபடத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் இந்த வித்தியாசத்தை கவனிக்க முடியும். ஆரம்பக்காட்சிகளில், கமலை அவர் கலாய்க்கும்போதெல்லாம் நமக்கு ஏற்படுகிற எரிச்சலையும் மீறி, மயிலுவைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும். இடைவேளைக்குப் பிறகு, பாவாடை தாவணியிலிருந்து கண்டாங்கிக்கு அவர் மாறும்போது, திடீரென்று அந்தப் பாத்திரத்துக்கு சற்று கண்ணியம் கூடியதுபோல இருக்கும். மலைக்கோவில் படிக்கட்டில், ‘தாலி வாங்கிட்டு வாஎன்று சொல்லும்போது, சப்பாணிக்கு ஏற்படுகிற அதே மகிழ்ச்சி நமக்கும் ஏற்படும். ’16 வயதினிலேபடத்தின் ஆணிவேர் என்றால், மயிலுதான்; ஸ்ரீதேவிதான்! Pivotal character என்பதற்கு அந்தக் கதாபாத்திரம் ஒரு சிறப்பான உதாரணம். (இந்தக் கதாபாத்திரத்தில் ஒரு நெருடலும் உண்டு; அது பின்னால்!)

      ஆத்தா!வாக வந்த காந்திமதி! இந்த எளவெடுத்த கோழி எங்கடா இருந்திச்சு?என்று பதைபதைப்போடு கேட்கிற காட்சியிலும் ‘பக்கென்று சிரிக்க வைத்தார். ‘நீ வாடா என் ஆசை மருமகனே!என்று கமலின் முதுகில் ஓங்கி அறைகிற காட்சியாக இருக்கட்டும்; ‘எங்க இருந்து பார்த்தாலும் ஆடறபடம்தான் ஆடும்என்று ஸ்ரீதேவியிடம் எகத்தாளமாகச் சொல்கிற காட்சியாக இருக்கட்டும்; அப்படியே ஒரு கிராமத்து ஆத்தாவைக் கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தினார். இந்தப் பெண்மணியை இதற்கு முன்பு ஏன் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டு விட்டார்கள்?என்று கேட்க வைத்த படம் 16 வயதினிலே’.

      அந்த டாக்டரை எனக்கு ஏனோ பிடிக்கவில்லை! கொஞ்சம் பார்க்கபிளாகவும், சஹிக்கபிளாகவும் ஒரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரா என்ற ஆதங்கம் எனக்கு இன்றளவிலும் இருக்கிறது. அதுவும் மயிலுவுக்கே கண்டதும் காதல் வருகிற அளவுக்கு அந்த டாக்டரிடம் கண்ணாடியைத் தவிர்த்துப்பார்த்தால், பெரிதாக எந்த பர்சனாலிட்டியும் கிடையாது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம் என்பதால், அந்த வயிற்றெரிச்சல் கடைசியில் காணாமல் போய்விட்டது.

      வசனத்திலும் 16 வயதினிலேஒரு முன்னோடிதான்! ‘ஆத்தா ஆடு வளர்த்தா; கோழி வளர்த்தா; நாய் வளர்க்கலேஒரு சோறுபதம்! பரட்டையும் அவரது அடிபொளிகளும் அவ்வப்போது அடிக்கிற சில்லறைக் காமெடிகள் (கவுண்டமணியாக்கும்!) அப்படியே கிராமத்து வாசனையடிக்கிற சங்கதிகள்!

      வைத்தியராக ஓரிரு காட்சிகளில் டைரக்டர் கே.பாக்யராஜ். இப்போது 16 வயதினிலேபடத்தைப் பார்த்தால், ஒரு நட்சத்திர இரவு பார்க்கிற அனுபவம் கிடைத்தாலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

      ’16 வயதினிலேபடம் வெளியாகி, ஒரு காய்ச்சல்போல அது குறித்த செய்திகள் பரவி, மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். ஆனால், 16 வயதினிலேபடத்தை, முதல் நாள், முதல் காட்சியே பார்க்கத் தூண்டியது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான்! ‘அன்னக்கிளியில் தான் அடைந்த வெற்றி வெறும் ஃப்ளூக் அல்ல என்று இளையராஜா நிரூபித்திருக்கிறார்என்று ஆனந்த விகடன் விமர்சனத்திலேயே பாராட்டுமளவுக்கு!

      கொஞ்சம் சலங்கைபடத்தின் ‘சிங்காரவேலனே தேவாபாடலுக்குப் பிறகு, பாடகி எஸ்.ஜானகிக்கு தமிழில் விருதுகளைக் குவித்த ‘செந்தூரப்பூவேபாடல் ஒன்றுபோதும்! சோளம் வெதக்கையிலே...தான் இளையராஜா முதன்முதலாக சொந்தக்குரலில் பாடிய பாடல். ரீரிகார்டிங்கில் இன்றைய தேதியிலும் ராஜாவை மிஞ்ச ஆளில்லை என்பது எனது கருத்து. 16 வயதினிலே’ படத்தில் அவ்வப்போது பின்னணியில் வயலின் இசையில் ஒலித்த மெட்டையே பின்னாளில் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘வீட்டுக்கொரு மகனைப்போல’ என்ற பாடலுக்கு ராஜா உபயோகப்படுத்தியிருந்தார். (இதே போல ‘பத்ரகாளி’ படத்தின் ரீரிகார்டிங்கையே ‘பெண் ஜென்மம்’ என்ற படத்தில் ‘ஒரு கோவிலில் இரு தீபங்கள்’ என்று பாட்டுக்கு மெட்டாகவும் உபயோகித்திருப்பார். ஜீனியஸ்!)


      மஞ்சக்குளிச்சு அள்ளிமுடிச்சுபாடலும், அதை பாரதிராஜா படமாக்கியிருந்த விதமும் புதுசு கண்ணா புதுசு! அதிலும், இடையில் கமல் தலையில் ஸ்ரீதேவி மஞ்சள் நீரைக் கொட்டுவதுபோல ஒரு குட்டி இடைச்செருகலைக் காட்டி, அதற்கு கமல் தலைசிலுப்புவது போலக் காட்டியிருந்தது அட்டகாசம்! ‘செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்காபாடலைப் பார்க்கும்வரை, க்ரூப் டான்ஸ்கள் என்றால் ஐ.வி.சசியைப் போலப் படமாக்க முடியாது என்று எண்ணியிருந்தேன். பாரதிராஜா அந்தப் பாடலைப் படமாக்கியிருந்த விதம் அபாரம்! ஆனால், 16 வயதினிலேபடத்தைக் குறித்த ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்திய ஒரு பாடல் உண்டென்றால் அது ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுதான்!

      வொய் திஸ் கொலவெறி,’ ‘எவண்டி உன்னைப் பெத்தான்போன்ற வரிகளுடன் ஒரு பாடல் தொடங்கினால், அது எப்படி கேட்பவர்களின் ஆர்வத்தைக் கிளப்புகிறதோ, அதேபோல ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டுஎன்ற பல்லவியைக் கேட்டதுமே ‘என்னய்யா பாட்டு இது? எந்தப் படம்?என்று கேட்க வைத்து, அந்தப் பாட்டுக்காகவே வேறேந்த எதிர்பார்ப்புமின்றிப் பார்த்த படம் 16 வயதினிலே’. பார்த்தால், அந்தப் படத்தில் ‘ஆட்டுக்குட்டியைத் தவிர ஆச்சரியப்படுத்த பல்வேறு அம்சங்கள் இருந்தன; இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் இருக்கின்றன.

                ’16 வயதினிலேபடத்தின் ஆரம்பக்காட்சி எனக்குப் பிடித்தமான ஒன்றல்ல. ஒரு ரயில் நிலையத்தில், ஒரு பெண் நின்று கொண்டிருந்தாலே, அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலா போய்விடும்? அப்புறம் எதுக்குங்காணும் அந்த ‘யார் வரவையோ ஆவலோடு காத்திருக்கும் கண்கள்...என்று வாய்ஸ் ஓவர் போட்டு, டைரக்டரின் குரலில் ஒரு ரன்னிங் கமெண்டரி? ‘ஒரு பாலசந்தர் போதாதா சாமி?என்ற சலிப்போடுதான் படம் பார்க்கத் தொடங்கினேன். மீதிப்படத்தையும் பார்த்து முடித்ததும் அந்தச் சலிப்பு மாயமானது என்னமோ உண்மைதான்!

      மயிலோட அழகுக்கும் படிப்புக்கும் சீமையிலேருந்து சூட்டுக்கோட்டு போட்ட ஒருத்தன் வருவான்என்று  நாயகி பருவமடைந்ததும் யாரோ சொல்ல, அதைக் கேட்ட மயிலு, கிராமத்துக்கு வந்த டாக்டரைப் பார்த்ததும், இன்ஸ்டண்ட் காதல்வசப்படுவதெல்லாம் ரொம்பவே ஓவர்! (மீண்டும் இந்த இடத்தில் அந்த டாக்டராக நடித்தவர் கொஞ்சம் பர்சனாலிட்டியாக இருந்திருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது!).

      கமலுக்கு அப்போதெல்லாம் அழுகையே வராது என்பது ஜெகப்பிரசித்தம்! ‘ஏழாம் அறிவுபடத்தில் சுருதிஹாசன் ஒரு காட்சியில் அழுததைப் பார்த்தபோது, 16 வயதினிலேபடத்தின் இறுதிக்காட்சியில் கமல் அழுததையும், தியேட்டரில் பார்வையாளர்கள் ‘ஓவென்று ஊளையிட்டதும் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், ‘சத்யம்’, ‘பட்டாம்பூச்சிபோன்ற படங்களில் தான் அழுது பார்வையாளர்களைச் சிரிக்க வைத்த கமல், இந்தப் படத்தில் கொஞ்சம் அழுகையில் முன்னேற்றம் அடைந்திருந்தார் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். விதிவிலக்காக அமைந்த இந்த ஒரு காட்சி தவிர, சப்பாணியாகக் கலக்கியிருந்தார் கமல் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதே படம் ‘சோல்வா சாவன்என்ற பெயரில் வெளியானபோது, இந்தியின் நிரந்தர இடிச்சபுளி அமோல் பாலேகர் சப்பாணி பாத்திரத்தையே நிர்தாட்சண்யமாகக் கொன்றே போட்டு விட்டார்.

      ’16 வயதினிலேபடத்துக்குப் பிறகு, விளம்பரங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் கூட சப்பாணி, மயிலு உபயோகப்படுத்தப்பட்டார்கள். ‘இந்தக் கடையிலேதான் 100% பட்டுச்சேலை கிடைக்கும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ‘இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடணும்னு மயிலு சொல்லிச்சுஎன்றும் ஆளாளுக்கு எவ்வளவு வம்புக்கு இழுக்க முடியுமோ வம்புக்கு இழுத்தார்கள்.

      ’16 வயதினிலேபடத்தால் தமிழ் சினிமாவில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, கிராமத்துக்கதை எடுக்கிறேன் பேர்வழி என்று ஆட்டுப்புளுக்கை போல அடுத்தடுத்து கிராமத்துப்பின்னணியில் அறுவைப்படங்களாக எடுத்துத் தள்ளியது. கே.பாலசந்தர் கூட ‘எங்க ஊர் கண்ணகிஎன்ற ஆகச்சிறந்த படத்தை எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். இது போதாதென்று, கிராமத்து ஐதீகம் என்ற பெயரில் பல பேத்தல்களை மையமாக வைத்தும் சில படங்கள் வெளியாகின. ‘பொண்ணு ஊருக்குப் புதுசுஎன்ற ஒரு படத்தில், ஒரு கிராமத்தில் 999 பேர் மட்டும்தான் இருக்க முடியும் என்ற ஐதீகம் இருப்பதாகவெல்லாம் காதிலே பூ சுற்றினார்கள்.

      கிழக்கே போகும் ரயில்படத்தில், நாயகன் பரஞ்சோதியின் தங்கைக்குத் திருமணம் நடைபெறுகிற காட்சியில், மொய் எழுதுபவர்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதில் ‘பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணியோட மொய் பத்து ரூபாய்என்று யாரோ ஒலிபெருக்கியில் சொல்வார்கள். நிச்சயம் சப்பாணி வருவான்; மயிலின் வாழ்வு மலரும்என்று முடித்த பாரதிராஜா, தனது அடுத்த படத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதை உறுதி செய்திருப்பார்.

      மயிலின் வாழ்வு மலர்ந்ததோ இல்லையோ, நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்தது. அதை மலர வைத்தவர் பாரதிராஜா என்பதால் அவர் எத்தனை ‘அன்னக்கொடி’ எடுத்தாலும் மறந்து பாராட்டலாம். (ஒரு ஃபார்மாலிட்டிக்காகச் சொன்னேன் பா.ராஜா சார்!)

***************************

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

16 வயதினிலே ....

என்றும் மறக்கவே முடியாத மிக அழகான படம். ;)))))

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

மயிலின் வாழ்வு மலர்ந்ததோ இல்லையோ, நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்தது.

அதை மலர வைத்தவர் பாரதிராஜா என்பதால் அவரை நிச்சயமாகப் பாராட்டலாம்.

>>>>>

கும்மாச்சி said...

சேட்டை நான் மிட்லண்டில் இந்தப்படத்தை முதல் நாள் பார்த்த நியாபகங்களை கொண்டுவந்துவிட்டீர்கள்.
பகிர்விற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவில் காட்டியுள்ள முதல் படம் நெஞ்சைவிட்டு நீங்காத நினைவலைகள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள வேணு Sir,

வணக்கம்.

நம் சமீபத்திய இனிய சந்திப்பைப்பற்றி இன்று என் பதிவினில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2013/10/60.html

அன்புடன் VGK

ஸ்ரீராம். said...


இந்தப் படத்தைப் பற்றி எல்லோருக்கும் இருக்கும் மலரும் நினைவுகளை- மாறா நினைவுகளை - அழகாக வெளிப்படுத்தி விட்டீர்கள்.

தனிமரம் said...

16 வயதினிலே அது ஒரு காலம் ! அதிகம் எனக்கும் பிடிக்கும் ராஜாவின் இசை தூக்கல், !

இராஜராஜேஸ்வரி said...

கன்னியாகுமரியும், ஹம் படமும் சாதிக்க முடியாததை, 16 வயதினிலேயும் பாட்ஷாவும் சாதித்தது என்றால், அதில் இருந்த முனைப்புகளைப் பாராட்டியே தீர வேண்டும்.

ரசித்துப் படிக்க வைத்த சித்திரம் ...!

கலாகுமரன் said...

விரிவான பல தகவல்கள். ஒரு படத்தை. மத்தவங்களும் எப்படி ரசித்திருப்பாங்க என்கிற பாங்கை உணர முடிந்தது. புது படத்தோட விமர்சனத்தை படிப்பதை போல படித்தேன் நன்றி

letty said...

Very Nice

நம்பள்கி said...

நல்ல படம். நீங்கள் சொன்ன குறை: கிராமங்களில் டாக்டர்கள் மதிப்பு அதிகம். மயிலு மாதிரி அழகான பெண்களுக்கு அடிக்கடி ஆத்தாக்கள் (பாட்டிகள்), "உனக்கெல்லாம், டவுனிலிருந்து தான் மாப்பிளை வரும்" என்று போதை ஏற்றுவார்கள்!

ஒரே வரியில்...Very well written!

நானும் இந்த பட விமர்சனம் இன்று மாலை எழுதுகிறேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

கல்லூரி நாட்களில் கும்பகோணம் ஜூபிடரில் ஏங்க வைத்து லேட்டர் ரிலீஸ்.
பின்னர் விடுமுறையில் மெட்ராஸ் மிட்லண்டில் என மீண்டும் மீண்டும் ஓடி பார்த்து அனுபவித்த படம். தமிழில் நிச்சயம் ஒரு மைல்கல் தான்.

Unknown said...

தன்னை ஏமாத்திட்டு கட்டை வண்டில போற டாக்குட்டரை மயிலு தொரத்திக்கிட்டு போய் ஒரு மேட்டுப்பாங்கான எடத்துல பறிகுடுத்துட்டு நிக்கிறப்ப ஒரு பின்னணி இசை வரும் பாருங்க... ரொம்ப சோக்கா இருக்கும்பா...

வர்மா said...

தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயத்தை எழுதிய படம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் சுவைத்தேன்

mohan baroda said...

I saw this movie only when it was telecasted in TV i.e. after almost 15 years later. Though I have heard the songs and other dialogues through my friends, I enjoyed this movie to the core.

Pudukairavi said...

கடைசி வரியை படித்ததும் வாய்விட்டு சிரித்து விட்டேன். சரியாக சொன்னீர்கள் சார்.

Ponchandar said...

விகடன் 62 மார்க் கொடுத்ததாக ஞாபகம்... இதை அடுத்து உதிரிப்பூக்கள் 60 மார்க் வாங்கியது

YESRAMESH said...

மிகவும் சுவாரசியமாக எழுதுகிறீர்கள். தொடர்புள்ள பல தகவல்களை தருகிறீர்கள். சினிமா பற்றிய உங்கள் புத்தகம் மிக சிறப்பானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.