Saturday, October 12, 2013

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

முற்குறிப்பு:  வலைத்திரட்டி ஓட்டுப்பட்டைகளை நீக்க, கணினி அஞ்ஞானியான அடியேன் எதையோ செய்யப்போக, எனது வலைப்பக்கத்தையே காக்காய் கொத்திக் கொண்டு போய்விட்டது. உங்களது துரதிருஷ்டம், இன்று ஒருவழியாய் மீட்டுவிட்டேன். இரண்டு நாட்களாகத் தப்பித்த பாக்கியசாலிகளுக்கு எனது பாராட்டுக்கள்!


சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

மிக்ஸி கிரைண்டரும் தையல் மிஷின்களும்
விலையின்றித் தருவார்- பஸ்
நிற்கும் இடத்தில் பாத்ரூம்போக
நிதமும் காசுகள் பெறுவார்
ரோட்டோரத்தில் நிற்குது கூட்டம்
பார்த்தால் முகம் சுளிக்கும்-நாம்
இதற்கும்கூட லஞ்சம் தரணுமா?
கேட்டால் ஊர்சிரிக்கும்

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

பயணம்கூட நம்தமிழ்நாட்டில்
பாவம்தானடா- செய்யும்
பாவம்தானடா
விடுதியென்ற பேரினில் எங்கும்
கூவம்தானடா- நாறும்
கூவம்தானடா
நடத்துனர்க்கும் ஓட்டுனருக்கும்
ஓசிதானடா-எல்லாம்
ஓசிதானடா
நம்மை மட்டும் இம்சை செய்வது
ஈசிதானடா-ரொம்ப
ஈசிதானடா

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

கொண்டையிலே பிச்சிப்பூவாம்
உள்ளேபார் ஈறும்பேனும்
ஓடுதுபார் பாலும்தேனும் என்று சொல்வாங்க- நம்
ஓட்டுக்காய் இலவசத்தைத் தந்து வெல்வாங்க
துட்டுக்கேட்கும் கழிப்பறையும் தூய்மையற்ற மோட்டல்களும்
தட்டித்தான் கேட்போரின்றி எங்கும் இருக்கு-வீண்
தம்பட்டத்தில் விழுந்தேமகிழும் ஆட்சியிருக்கு!

சின்னப்பயலே சின்னப்பயலே
இம்சை கேளடா- நாம்
சின்னாபின்னம் ஆகும் கதையை
எண்ணிப்பாரடா- கொஞ்சம்
எண்ணிப்பாரடா

வேண்டுகோள்: தயவுசெய்து யாரும் திரட்டிகளில் சேர்க்கவோ, ஓட்டு அளிக்கவோ வேண்டாம். விரைவில் அந்த நிரலிகளை அகற்றப்போகிறேன். நன்றி!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாடிப் பார்த்தேன்... அட்டகாசம்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் வேண்டுகோளின்படி செய்யவில்லை... ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா...?