Sunday, September 15, 2013

நினைத்தாலே சலிக்கும்!









கே.ஆஸிப் தயாரித்து இயக்கிய ‘மொகல்-ஏ-ஆஜம்இந்தித் திரைப்படம், இன்றளவிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த 10 படங்களின் பட்டியலில் தவறாமல் இடம்பெறும். கருப்பு வெள்ளையில் ஒரு காவியமாகக் கருதப்பட்ட அப்படத்தைப் பற்றி, நடிப்பு, வசனம், இசை, அரங்க அமைப்பு, இயக்கம் என்று தனித்தனியாக எழுதினாலே ஒரு டஜன் இடுகைகளைத் தேற்றலாம். சில வருடங்களுக்கு முன்னர், அந்தப் படத்தை டிஜிட்டல் முறையில் வண்ணமூட்டி, மெருகூட்டி வெளியிட்டபோதும் அது பரவலான வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘நயா தௌர்திரைப்படத்துக்கும் சாயம்பூசி வெளியிட்டு சில்லறையை அள்ளினார்கள். இவ்விரு படங்களுமே கருப்பு-வெள்ளைப் படங்களாக இருந்தபோதிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்கள் என்பதால், அதை வண்ணத்தில் பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக, சுவாரசியமாக இருந்தது.

      தமிழில் கருப்பு வெள்ளையில் வந்து சக்கைபோடு போட்ட படங்களுக்குப் பஞ்சமேயில்லை. (80-களில் கூட, பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், ஸ்ரீதர் இன்னாரன்னோர் வண்ணப்படங்களாக எடுத்துக் கலக்கிக்கொண்டிருந்தபோது, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் விஜயகுமார்-சுஜாதாவை வைத்து எடுத்த ‘அடுக்குமல்லிஎன்ற கருப்பு-வெள்ளைப்படம் வசூலை அள்ளியது). இவ்வளவு ஏன், எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரது கருப்பு-வெள்ளை வெற்றிப்படங்களை டிஜிட்டலாக்க நினைத்தால், குறைந்தது ஐம்பது படங்கள் தேறும். இதற்கான தொழில்நுட்பம் மும்பையிலிருந்து சென்னைக்கு வருவதற்கு தாதர் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகக் கருத வாய்ப்பில்லை. ஆனால், இங்கிருப்பவர்களுக்கு இவ்வளவு மெனக்கெடுகிற விருப்பமோ, பொறுமையோ இல்லை. பழைய பித்தளைப்பாத்திரத்தின் ஓட்டைகளை அடைத்து, ஈயம்பூசிப் பளபளப்பாக்கி விற்றுக் காசாக்குகிற பேராசை மட்டுமே மிதமிஞ்சிக் காணப்படுகிறதோ என்ற சந்தேகம் உண்டு. இதற்கு உதாரணங்கள் ‘கர்ணன்’ ‘வசந்த மாளிகைபடங்களை டிஜிட்டல் மயமாக்குகிறோம் பேர்வழி என்று கிளம்பி, திரையரங்குகளில் பார்வையாளர்களின் காது ஜவ்வுகளைக் கிழித்தது.

      Die-hard எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் ‘பழைய நெனப்புடா பேராண்டிஎன்று திரையரங்கில் வந்து அப்போது விசிலடித்ததுபோலவே, அப்போது கைதட்டினதுபோலவே, இப்போதும் வந்து படம்பார்த்து உய்து உன்மத்த நிலையை எய்துவார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், ஒரு பட்ஜெட் படத்துக்குண்டான முதலீட்டைப் போட்டு இந்த ஜிகினா வேலைகளைத் திறம்படச் செய்து வருகின்றனர். என்னைப்போன்ற ஆசாமிகள் சிவாஜியின் ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தை டிஜிட்டலாக்கி வெளியிட்டாலும் வரிசையில் போய் நிற்போம் என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள், இரு திலகங்களின் படங்களையும், திரையரங்கில் பார்த்து மகிழும் சுவாரசியமான அனுபவத்தை மீண்டும் பெற விரும்புகிற ரசிகர்களின் பலவீனத்தைக் காசாக்குகிறார்கள். ஆனால், இது ஜனங்களுக்கு சலித்து விட்டது, இவர்களின் உத்தி புரிந்து விட்டது, இனியும் இந்தப் பருப்பு வேகாது என்பதை பலர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 

      எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நம்மோடில்லை என்பதால், இத்தகைய சாகசங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள், இப்போது கமல்-ரஜினியையும் சீண்டத்தொடங்கி விட்டார்கள். முதலில் 16 வயதினிலேபடம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இப்போது ‘நினைத்தாலே இனிக்கும் படம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வெளிவரப்போகிறதாம்; டிரெயிலரையும் வெளியிட்டுக் காட்டிக் கழுத்தறுக்கிறார்கள். 34 வருடங்கள் ஆகிவிட்டதால், ‘நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களுக்கு, மூப்பு காரணமாக காவிய அந்தஸ்து வழங்கி விட்டார்கள் போலிருக்கிறது. கருப்பு-வெள்ளையில், தெலுங்கில், இதே கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகி, ஆந்திராவில் மட்டுமின்றி, தமிழகத்திலும் சக்கைபோடு போட்ட ‘மரோ சரித்ராபடத்தை, வண்ணமயமாக்கி வெளியிட்டிருந்தால்கூட ஒரு சுவாரசியம் இருந்திருக்கலாம். கருப்பு வெள்ளையில் பார்த்த ‘மரோ சரித்ராவை கலரில் ‘ஏக் தூஜே கே லியேவாகப் பார்த்திருந்தாலும், ஒரிஜினலுக்கு ஈடாகுமோ? இந்தியில் கதாநாயகியாக தத்தி அக்னிஹோத்ரி, மன்னிக்கவும், ரத்தி அக்னிஹோத்ரி வந்து பிராணனை வாங்கியிருந்ததை எப்படி மறக்க முடியும்? அதை விட்டு ‘ நினைத்தாலே இனிக்கும்....?

      கே.பாலசந்தரின் அபிமானிகளும், கமல்-ரஜினி பக்தர்களும் முட்டியை மடக்குவதற்கு முன்னால் ‘நினைத்தாலும் இனிக்கும்எந்த வகையிலும் ஒரு மட்டமான படமே அல்ல: ஆனால், அது நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் சினிமா என்று சொல்வதற்கில்லை; கே.பி-கமல்-ரஜினி கூட்டணியில் உருவான மிகச்சிறப்பான படமென்றோ, மிகப்பெரிய வெற்றிப்படமென்றோ கூட சொல்லிவிட முடியாது. பல ஊர்களில் வந்த சுவடுதெரியாமல் காணாமல்போன படம் இது. இத்தனை பாடல்கள், கமல்-ரஜினி-ஜெயப்ரதா, பாலசந்தர், சிங்கப்பூர், பெல்பாட்டம், கிடார் இன்னபிற வஸ்துக்கள் இருந்தும், அது பெரிய வெற்றிப்படமும் அல்ல. எம்.எஸ்.வியின் இசையமைப்பில் பெரும்பாலான பாடல்கள் படத்தின் ‘தீம்ஆகச் சொல்லப்பட்ட ‘தேனிசை மழைஎன்பதை நிரூபித்திருந்ததால், மயிரிழையில் தப்பித்த படம். (குறைந்தது மூன்று சொதப்பல் பாடல்களும் படத்தில் உண்டு!)

      அண்மைக்காலமாக டிஜிட்டலாக்குகிறேன் பேர்வழி என்று கிளம்புகிற புண்ணியவான்கள், ஒரு கூடுதல் டிராக் சேர்த்து, பின்னணியில் கராவ்கே மாதிரி ஒரு இசையைச் சொருகி, இதுதாண்டா ஸ்டீரியோ எஃபெக்டுஎன்று பண்ணுகிற அழிச்சாட்டியம் தாங்கவில்லை. பெரிய ஓட்டல்களில் தயிர்சாதத்தில் முந்திரிப்பருப்பும், உலர்ந்த திராட்சையும் சேர்த்துப் பரிமாறுவதுபோல, இது தயிர்சாதமா, பாசந்தியா அல்லது இரண்டையும் குழைத்துப் போட்டார்களா?என்று குழப்புவதுபோல, இந்த டிஜிட்டல் கண்றாவிகள் பார்வையாளர்களை முழிபிதுங்க வைக்கின்றன.

      எச்.எம்.வியின் பழைய ஒலி நாடாக்களில், குறிப்பாக கே.எல்.ஸேகல், ஷம்ஷாத் பேகம், மன்னாடே போன்றோரின் பாடல் தொகுப்புகளில், ‘original sound maintained for the purpose of nostalgia’ என்று குறிப்பிட்டிருப்பதை நாம் கவனித்திருக்கிறோம். சில பாடல்கள், சில படங்கள் அவை வெளிவந்த காலத்தில், பார்வையாளர்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய ஒரு அலாதியான அன்னியோன்னியமான அனுபவத்தை அளித்திருக்கின்றன. அதை நவீனப்படுத்துகிறேன் பார் என்று மல்லுக்கட்டிக்கொண்டு, ரீ-மிக்ஸ் பாடல்களைப் போல, ரீ-மிக்ஸ் படங்களை வண்டி வண்டியாய்த் தயாரித்துக் கொண்டுவந்து கொட்டுவது ஒரு ஆரோக்கியமான நிலையாகக் கருதமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் கனவுகளோடு எழும்பூரில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிற இளைஞர்களுக்கும், ஏற்கனவே ஜட்டி,பனியன் வரை விற்றுக் காசாக்கிப் படமெடுத்துக் காத்திருக்கிறவர்களுக்கும், இருக்கிற திரையரங்கப் பற்றாக்குறை போதாதென்று இந்த ‘க்ரோம்-ப்ளேட்சினிமாக்களும் ஒரு பெரிய தலைவலியாகவும் ஆக வாய்ப்பிருக்கிறது.

      இந்தப் படத்தின் ஹீரோ கமலும் இல்லை; ரஜினியும் இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதன் தான்,என்று ‘நினைத்தாலும் இனிக்கும்திரைப்படம் வெளியானபோது, கே.பாலசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ‘இது ஒரு தேனிசை மழைஎன்றுதான் சுவரொட்டிகளிலும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதை நிரூபிப்பதுபோல ‘எங்கேயும் எப்போதும்என்ற முதல் பாடலிலேயே, தான் ஏன் மெல்லிசை மன்னர் என்று எம்.எஸ்.வி அழுத்தம் திருத்தமாகச் சான்று அளித்திருப்பார். அதைத் தொடர்ந்து ‘சம்போ சிவ சம்போ, யாதும் ஊரே யாவரும் கேளிர், பாரதி கண்ணம்மா, இனிமை நிறைந்த உலகம்என்று படம் முழுக்க நினைவுகூரத்தக்க பல பாடல்கள் இருந்தாலும், ராஜேஷ் தியேட்டர் கைமுறுக்கு, சம்சா, டீ வியாபாரத்துக்குச் செழிப்பு சேர்த்த சில பாடல்களும் உண்டு. உதாரணம், எல்.ஆர்.ஈஸ்வரி அலறிய ‘ஆனந்தத்தாண்டவமோ...ஓஓஓஓஓஓஓஎன்ற இம்சை!

      நம்ம ஊரு சிங்காரி அனேகமாக பிரேமாலயா வெங்கட்ராமனின் அன்னியச் செலாவணி கோவிந்தா ஆனபிறகு படமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சென்னையில் ஏதோ ஒரு பங்களா மொட்டைமாடியிலும், பூங்காவிலும் எடுக்கப்பட்டு, சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று சாயத்திரையை போட்டிருப்பார்கள். (அப்போதெல்லாம் பாலசந்தர் படங்களைக் குறை சொல்வது மகா அபசாரம் என்று கருதப்பட்டது). எது எப்படியோ, ‘நினைத்தாலே இனிக்கும்படத்திலிருந்து எம்.எஸ்.விஸ்வநாதனைக் கழித்துப் பார்த்தால், ராமராஜனின் ‘ஊரைவிட்டு ஊரு வந்துபடத்தையே டிஜிட்டலில் வெளியிட்டிருக்கலாமே என்றுதான் தோன்றும்.

      கதை,வசனம்: சுஜாதா என்று பெருமையாக இப்போது போட்டுக்கொண்டாலும், சுஜாதாவுக்கு இந்தப் படத்தைப் பற்றிப் பெரிய அபிப்ராயம் என்றுமே இருந்தது கிடையாது. (வேறு எந்தப் படத்தைப் பற்றி இருந்தது என்று கேட்டு விடாதீர்கள்!). ‘நிறையப் பாடல்களைப் போட்டுப் படத்தைத் தாளித்து விட்டார்கள்என்று அவரே எழுதியிருக்கிறார். ஆனால், எம்.எஸ்.விக்கு அடுத்தபடியாக, ‘நினைத்தாலே இனிக்கும்படத்தில் கவனத்தைக் கவர்ந்தவர் என்றால், சுஜாதா தான். பாலசந்தர் பிராண்டு நகைச்சுவை குறைச்சலாகவும், படம் முழுக்க சுஜாதாவின் இயல்பான புத்திசாலித்தனமான நகைச்சுவைக் காட்சிகள் அதிகமாகவும் விரவிக்கிடந்தன; சில சீரியஸான காட்சிகளில் கூட!

      ஏர்போர்ட்டில் கமல்-ஜெயப்ரதா உரையாடல், ரஜினி விமான டிக்கெட்டை மாற்றுகிற காட்சி, ரஜினி-எஸ்.வி.சேகர் வருகிற காட்சி என்று சுஜாதாவின் ‘டச்படத்தில் ஆங்காங்கே காணக்கிடைக்கும். நான் என் பொண்ணைக் கண்டிப்பா உனக்குத்தான் கட்டித்தருவேன். அதுக்காக நீ கிளாஸை உடைக்காதே!என்று பூர்ணம் விஸ்வநாதன் வில்லனிடம் சொல்கிற காட்சி, நகைச்சுவை எந்தக் காட்சியிலும் வரலாம் என்பதற்கு இன்னொரு உதாரணம். குள்ளமான கணவன் ஸ்டூலின் மீது ஏறி நின்று, உயரமான மனைவியிடம் பேசுவதுபோன்ற கே.பி.ஸ்டைல் காமெடியும் ஆங்காங்கே உண்டு.

      கே.பாலசந்தர் படத்தில் அவ்வப்போது ஓரிரு குறைகள் இருந்தாலும், பெரும்பாலும் கதாபாத்திரங்களைக் கனகச்சிதமாகச் செதுக்குவதில் வல்லவர். ஆனால், நினைத்தாலே இனிக்கும் படத்தில், ‘வாங்கப்பா, ஜாலியா சிங்கப்பூர் சுத்திப் பார்த்திட்டு வரலாம்என்று கிளம்பியதுபோல, ஒரு அசாதாரணமான அலட்சிய மனோபாவம் காணக்கிடைத்தது. கதாநாயகியைப் புரிந்து கொள்ள முடியாமல், நாயகன் அவ்வப்போது எரிச்சல்படுகிற போதெல்லாம் கூட, ‘அவ போனா வுட்டுத் தொலையேன். ஏம்பா இம்புட்டு அலட்டிக்கிறே?என்று நமக்கும் எரிச்சல் வரும்.

      உதாரணத்துக்கு ஒரு காட்சி! சிங்கப்பூரிலிருந்து நாயகனின் இசைக்குழு கிளம்பி, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, நாயகி எழுதிய கடிதத்தை வாசித்துவிட்டு ‘ஹோல்டான்...ஹோல்டான்என்று கத்துவார் நாயகன். அவளை உடனடியாப் பார்க்கணும்டாஎன்று பரிதவிப்பார். கட் பண்ணி அடுத்த காட்சிக்குப் போனால், படுஜாலியாக மாடிப்படிகளைத் துள்ளித்துள்ளி ஏறி அம்மா வீட்டுக்குள் நுழைந்து, சிங்கப்பூரில் பாம்பு, தவளை சாப்பிட்டது குறித்தும், அம்மாவின் பினாயில் வாசனையடிக்கிற காப்பி குறித்தும் ஜோக் அடித்துக் கொண்டிருப்பார். சரிதான், இவரும் அம்புட்டு சீரியஸ் இல்லை போலிருக்குஎன்பதுபோன்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே ஏற்படும். ஒரு உதாரணம் இது. எனக்குத் தெரிந்து கே.பாலசந்தர் இவ்வளவு சொதப்பலாகக் கதாபாத்திரங்களை வேறு எந்தப் படத்திலும் காட்டியதாக ஞாபகமில்லை. (எங்க ஊரு கண்ணகி இருக்கே என்று கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்கள்!)

      ஆனால், கமலுக்குப் பதிலாக வேறொரு நடிகர் நடித்திருந்தால், அந்தப் படம் என்னாகியிருக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியாது. வழக்கம்போலவே, கமல் படுசின்சியராக நடித்திருந்தார். குறிப்பாக, ஜெயப்ரதா இழுத்த இழுப்புக்கெல்லாம் இம்சைப்பட்டு, கோபத்தில் பொரிந்து தள்ளுகிற காட்சிகளில் பட்டை கிளப்பியிருப்பார்.

      ஜெயப்ரதாவை classic beauty என்ற வகையில் சேர்க்கலாம். சிரிசிரி முவ்வாதெலுங்குப்படத்தை ஜெயப்ரதாவுக்காகவே தமிழகமும் விழுந்து விழுந்து பார்த்து ஆந்திராவைப் போலவே, இங்கும் அந்தப் படம் அமோக வெற்றியடைந்திருந்தது. அப்பேர்ப்பட்ட ஜெயப்ரதாவுக்கு அந்த நாகரீக யுவதி வேடம் கொஞ்சம் கூட பொருந்தவேயில்லை. (நம்ம கே.ஆர்.விஜயா கூடத்தான் ‘கண்ணம்மா’ ‘நான் வாழ வைப்பேன்போன்ற படங்களில் ஸ்கர்ட், பெல்பாட்டம், ஸ்டாக்கிங்க்ஸ், லெக்கிங்க்ஸ் எல்லாம் போட்டு நடித்தார். பார்த்தவனுக்குத்தானே தெரியும், தெளிவதற்கு எவ்வளவு வேப்பிலை தேவைப்பட்டது என்று!) பாரதி கண்ணம்மாபாட்டில் ஜெயப்ரதா ஒருவழியாக சேலைகட்டிக் கொண்டுவரும்போது ‘அப்பாடா!என்றிருக்கும்.

      தில்லுமுல்லுபடத்தில் ரஜினியைப் போடுகிற துணிச்சல் கே.பிக்கு வந்ததற்கு, ‘ நினைத்தாலே இனிக்கும்படத்தில் ரஜினியின் நடிப்பே காரணமாக இருந்திருக்கலாம். (தில்லுமுல்லுவிஷயத்தில் கே.பாலசந்தருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், காரசாரமான பேட்டிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றன. அதெல்லாம் வரலாற்றில் பதிவாகி விட்டதால் விட்டுவிடுவோம்!). இந்தப் படத்தில் ரஜினியின் காமெடியும் ஒரு பெரிய ஆறுதல் என்றுதான் சொல்ல வேண்டும்.

      பொதுவாக கே.பி.படங்கள் என்றாலேயே கொஞ்சம் ஜாக்கி வைத்துத் தூக்கி விடும் பத்திரிகைகள் கூட, அப்போது எழுதிய விமர்சனங்கள் அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்காது. (குறிப்பாக ‘ஆனந்த விகடன்விமர்சனம்) அந்த அளவில்தான், ‘என்னப்பா, பழைய பாகவதர்படம் மாதிரி இருக்குஎன்று சொல்லுமளவுக்குத்தான் ‘நினைத்தாலே இனிக்கும்படம் இருந்த்து. அதுவும் கடைசி இருபது முப்பது நிமிடங்கள் இருக்கின்றனவே, ‘படத்தை முடிக்கலாமா வேண்டாமா?என்று கே.பி. சீட்டுக்குலுக்கிப் பார்த்து சீன் எழுதியது போலிருக்கும். டிப்பிக்கல் கே.பி பிராண்டு பிளேடு!

      எல்லாவற்றையும் விட, அரங்கில் கமல்-ரஜினி ரசிகர்கள் மற்றவர்களை அமைதியாகப் படம்பார்க்க விடுவார்களா என்பதும் ஒரு பெரிய கேள்வி! இந்தப் படம் வெளியானபோது, 34 வருடங்களுக்கு முன்னரேயே கூட, கமல்-ரஜினி ரசிகர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டது ஞாபகமிருக்கிறது. இப்போது என்னாகுமோ?

      ஆனால், இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டின்போது நிறைய பேர் பேசியதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது மட்டும் நிச்சயம். இந்தப் படத்தைப்போய், இப்படிப் புகழ்ந்து பலர் பேசியதைக்கேட்டு, கே.பாலசந்தரே குலுங்கக் குலுங்கச் சிரித்திருப்பார் என்று தோன்றுகிறது. நேரம்!

      அது போகட்டும்! எம்.கர்ணனின் ‘ஒரே தந்தை’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜக்கம்மாபோன்ற படங்களையும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் என்று டிஜிட்டல்மயமாக்கி வெளியிடுவீங்களா சாமீ? இப்படிக்கு முன்னாள் ராஜ்கோகிலா தலைமை ரசிகர் மன்றத்தலைவர் சேட்டை!

23 comments:

இராஜராஜேஸ்வரி said...

தயிர்சாதத்தில் முந்திரிப்பருப்பும், உலர்ந்த திராட்சையும் சேர்த்துப் பரிமாறுவதுபோல, ’இது தயிர்சாதமா, பாசந்தியா அல்லது இரண்டையும் குழைத்துப் போட்டார்களா?’ என்று குழப்புவதுபோல,

சேட்டையின் சட்டையர் - நகைச்சுவை..,,,!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அசத்தல் சேட்டை...

Unknown said...

நாங்கள்சொல்ல வேண்டியதை நீங்களே தலைப்பில் சொல்லி விட்டதால் ,சொல்வதற்கு இருப்பது ...உங்களின் நகைசுவையான நடை மட்டுமே !ரசித்தேன் !

Unknown said...

’தில்லுமுல்லு’ விஷயத்தில் கே.பாலசந்தருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், காரசாரமான பேட்டிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றன. அதெல்லாம் வரலாற்றில் பதிவாகி விட்டதால் விட்டுவிடுவோம்!\\\\\\\\\

இதை ஒரு பதிவாக போட்டால் நாங்களும் அறிந்து கொள்வோம்

சசிகலா said...

சொல்ல வேண்டியதை நாசுக்காக உங்களால் மட்டுமே சொல்ல இயலும்.. சினிமா உலகம் உணர்ந்தால் நல்லது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலைப்பே கலக்கல். நினைத்தாலே இனிக்கும் படத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து உங்கள் பாணியில் விமர்சனம் சூப்பர்

Ponchandar said...

முன்னால ராஜ்கோகிலா தலைமை ரசிகர் மன்றத்தலைவர்........ தற்போது யாரோட தலைமை ரசிகர் ??????

வெங்கட் நாகராஜ் said...

அருமையான அலசல்....

//நம்ம கே.ஆர்.விஜயா கூடத்தான் ‘கண்ணம்மா’ ‘நான் வாழ வைப்பேன்’ போன்ற படங்களில் ஸ்கர்ட், பெல்பாட்டம், ஸ்டாக்கிங்க்ஸ், லெக்கிங்க்ஸ் எல்லாம் போட்டு நடித்தார். பார்த்தவனுக்குத்தானே தெரியும், தெளிவதற்கு எவ்வளவு வேப்பிலை தேவைப்பட்டது என்று!//

வேப்பிலை அல்ல, வேப்ப மரமே தேவைப் பட்டிருக்கும்! :)

குட்டிபிசாசு said...

சேட்டையோ சேட்டை. வழக்கம்போல அட என ரசிக்கவைத்தது.

குட்டிபிசாசு said...

முதல்முறை இந்தப்படத்தைப் பார்த்தபோது, அந்த முகமூடியோட ஜெயப்ரதாவை துரத்துபவன் யார் என யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் பல வருடம் கழித்து தான் தெரிந்தது அது புற்றுநோய் என்று. இதுவும் கேபி டச் தான். அக்னி சாட்சி படத்திலும் ஒரு வெள்ளைக்காரி சுத்திசுத்தி ஆடுவாங்க.

Pudukairavi said...

படித்து சிரித்து மகிழ்ந்தேன். ஏனென்றால் கே.ஆர்.விஜயாவின் மாடர்ன் டிரஸை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயக்கம் போட்டவர்களில் நானும் ஒருவன்.

mohan baroda said...

I endorse the views of the Sakkara Katti. Kindly post the words of war between kamalhasan and balachander on tillu mullu.
Murphy Radio was good in those days. But the same company was not successful in marketing their TV sets. Same is the case with the digitalization of old movies. Let the old be old for ever. Your analysis on this subject is quite
serious with settai touch in between.

”தளிர் சுரேஷ்” said...

புது சாயம் பூசுபவர்களை ஒரு வெளுப்பு வெளுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தை சிறப்பாக அலசி ஒரு ஆராய்ச்சியே பண்ணிவிட்டீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

என்னது ராஜ்கோகிலா தலைமை ரசிகர் மன்றத்தலைவரா? அது எப்படி என்னிடமிருந்து தலைமைப் பதவியை பறிப்பீர்கள்?.

YESRAMESH said...

வெளியானபோது நானும் பலமுறை பார்த்தவன் தான். இப்போது நினைத்தால் காமெடியாக இருக்கிறது.

பொன் மாலை பொழுது said...

அந்த நாட்களில் ஊரில் விழுந்து விழுந்து பார்த்த படம் இது. சென்னையில் பழைய நூர்ஜகானில் கூட காலை கட்சிகள் என்றால் வழித்துக்கொண்டு ஓடியது ஒரு காலம். ABBA படமாக வந்து சென்னை தேவியில் சக்கை போடு போட்டதே அப்போது பாலச்சந்தருக்கு வந்த ஐடியா இந்த படம்.
அது சரி ....தமிழ் நாட்டில் ராஜ கோகிலாவை இன்னமும் நினைவு வைத்திருக்கும் ஒரு பரிசுத்த ஆன்மா நீங்களாகவே இருக்கும் சேட்டை.

ஜிலென்று கொஞ்சம் தண்ணீர் குடியுங்க :)))

Deepak said...

அண்ணா மிகவும் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான பதிவு . படித்து ரசித்தேன். தில்லு முல்லு பஞ்சாயத்து பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

பால கணேஷ் said...

‘­நா­ட­க­மே ­உ­ல­கம்’ ­­மா­தி­ரி ­இன்­னும் ­ஒண்­ணு ­ரெண்­டு ­ப­டங்­கள் ­உண்­டு ­கே.ஆர்.வி­ஜ­யா ­­ப­டுத்­தி ­எ­டுத்­த ­லிஸ்­டில்! வேப்பி­லைல்­லாம் ­பத்தா­து ­தெ­ளி­ய­ற­துக்­கு... ஒ­ரு ­ஆஃ­பே ­அ­டிக்­க ­வேண்டி­யி­ருக்­கும். ஹி... ஹி...! நி­னைத்­தா­லே ­இ­னிக்­கும்­ ­அ­ல­ச­லை ­வி­ட ­ரீ ­மிக்ஸ் ­­தொல்­லை ­பத்­தி­ன ­உங்­க ­க­ருத்­துக்­கள் ­எ­னக்­கு ரொம்­பப் ­பு­டி­ச­ச­து!

Unknown said...

தலைப்பே அசத்தல்!நலமா!

வரதராஜலு .பூ said...

//எம்.கர்ணனின் ‘ஒரே தந்தை’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜக்கம்மா’ போன்ற படங்களையும் //

ஜம்பு படத்தை விட்டுட்டிங்களே. ஏன்ன்ன்ன்? :)

வரதராஜலு .பூ said...

தில்லுமுல்லு பஞ்சாயத்து என்னான்னு சொல்லுங்களேன். எனக்கெல்லாம் தெரியாது.

சமீரா said...

எப்படி சார்,,, இவ்ளோ விஷயம் தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.....
இந்த படம் எத்தன முறை டிவி ல போட்டாலும் பாக்கணும் தோணவே இல்லை.. நீங்க சொல்றத பார்த்த ஒரு தலைவலி மாத்திரை எனக்கு மிச்சம்-னு தோணுது!!!

//தில்லுமுல்லு’ விஷயத்தில் கே.பாலசந்தருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், காரசாரமான பேட்டிகள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றன. அதெல்லாம் வரலாற்றில் பதிவாகி விட்டதால் விட்டுவிடுவோம்!//

அப்படி என்னதான் நடந்தது? ஒரு பதிவு போடுங்க சார்...

மாதேவி said...

அசத்தல்.