Thursday, September 26, 2013

கல்யாணம் பண்ணியும் வரதாச்சாரி




பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். எனக்கு வைகுண்டம் கொடுத்து வைத்திருக்கிறதோ இல்லையோ, புளியோதரை கொடுத்து வைக்கவில்லை! சரி, இந்தக் கூட்டத்தில் இடிபடுவதைவிட, பெரிய தெருவிலிருக்கும் அக்கவுண்டண்ட் அம்புஜவல்லி வீட்டுக்குப்போனால், புளியோதரை கிடைத்தாலும் கிடைக்குமென்று  நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு நடையைக் கட்டினேன். ஆனால்...

      அம்புஜவல்லியின் மாமியார் அம்சவேணி வாசலில் அலறிக்கொண்டிருந்ததைக் கேட்டு, எனது அடிவயிற்றுக்குள் யாரோ சாண்ட்ரோ காரை சடன்பிரேக் போட்டு நிறுத்தியதுபோல அதிர்ச்சி ஏற்பட்டது.

      வா சேட்டை! இப்படி ஆயிடுத்தே பார்த்தியா?அம்சவேணி அம்மா அம்பத்தூர் ஃபேக்டரியின் ஆறுமணிச்சங்கு போல அலறினார். “நொடிக்கு நூறுதடவை வரது வரதுன்னு இனிமே யாரைக் கூப்பிடுவேன்!

      வரதுஎன்பது அம்புஜவல்லியின் கணவன் / அம்சவேணியின் மகன்  வரதாச்சாரியின் செல்லப்பெயர். இன்னும் சிலர் அவரை வரதா என்றும் கூப்பிடுவதுண்டு.

      என்னாச்சு மாமி? வரதுக்கு என்ன?

      என்னன்னு சொல்லுவேன் சேட்டை? உள்ளே போயிப் பாரு அந்தக் கொடுமையை!

      அடாடா! என்னவோ விபரீதம் போலிருக்கிறதே! அம்புஜவல்லியின் சமையலைச் சாப்பிடுகிறவர்களின் ஆயுள், அவள் அரைக்கிற சட்னியைவிடக் கெட்டியாயிற்றே! என்னவாயிருக்கும் வரதுவுக்கு! உள்ளே நுழைந்ததும் நான் கண்ட காட்சியால் எனக்குத் தலைசுற்றி, ஒரு கணம் எனது முதுகை நானே முழுசாகப் பார்க்க முடிந்தது.

      கத்திரிக்காய் சாம்பாரில் போட்ட கரண்டியைப்போல, சோபாவில் வரதாச்சாரி கம்பீரமாக அமர்ந்திருக்க, அம்புஜவல்லி ஏதோ ஒரு அழுக்குப்பிடித்த புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.

      அம்பு! வரது!

      சேட்டை!ஆச்சரியத்தில் அம்புஜவல்லியின் முகம் எண்ணையில்போட்ட அப்பளம்போல எக்கச்சக்கமாக உப்பியது. “வா சேட்டை! என்ன திடீர்னு...?

      சும்மா, உன்னையும் உன் புளியோதரையையும்...ஐ மீன், உன் புருஷனையும் பார்த்திட்டுப்போகலாம்னு வந்தேன்.!

      ஐயையோ!வெளியேயிருந்து அம்சவேணியம்மாள் அலறுவது கேட்டது. “இப்படியொரு அநியாயம் உண்டா? பெருமாளே! நான் என்ன பண்ணப்போறேன்?

      எதுக்கு அம்சவேணியம்மா இப்படிக் கத்தறாங்க? தயக்கமாய்க் கேட்டேன்.  என் புளியோதரைக்கனவு டாஸ்மாக் கடையின் பிளாஸ்டிக் தம்ளர்போல நசுங்கியது.

      அவங்க அம்சவேணியில்லை; இம்சைவேணி!அம்புஜவல்லி பல்லைக்கடித்த சத்தம் பெரியதெருவிலிருந்து பெருங்களத்தூர்வரை கேட்டிருக்கும்.
                               
      அம்புஜம்! எங்கம்மாவைப்பத்தி ஏதானும் பேசினே, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்!வரதாச்சாரி கர்ஜித்தார்.

      நான் சொல்றதை நீங்க பண்ணலேன்னா, நானும் மனுஷியா இருக்க மாட்டேன்!

      என்ன நடக்குது இங்கே?கொஞ்சம் குரலை உயர்த்தினேன். “அந்தம்மா வாசல்லே சத்தம் போட்டிட்டிருக்காங்க. உள்ளே நீங்க சண்டை போட்டுட்டிருக்கீங்க! யாரு காப்பி போடப்போறீங்க?“

       “சாரி சேட்டை! இதோ காப்பி போட்டுக்கொண்டு வரேன், என்று கிளம்பினாள் அம்புஜவல்லி.

       “வரது சார்! என்ன பிரச்சினை?“ கிசுகிசுப்பாய்க் கேட்டேன். “ஆம்பளையா லட்சணமா அடக்கவொடுக்கமா இல்லாம வொய்ஃபோட சண்டை போடலாமோ? பாருங்க, அம்புஜவல்லி கோபிச்சுக்கிட்டுக் காப்பிபோடப் போயிட்டாங்க!

       “சேட்டை! கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதே! ஒரு நல்ல ஆம்பிளைப் பெயராச் சொல்லேன்!

      அட! குழந்தையா? வரதாச்சாரியின் கையைப் பிடித்துக் குலுக்கினேன். “கங்கிராட்ஸ்! இந்த சந்தோஷமான விஷயத்துக்கா இவ்வளவு சண்டை? அம்புஜம் என்கிட்டே கூட சொல்லலியே?

      சேட்டை! இது குழந்தைக்கு இல்லை!வரதாச்சாரியின் குரல், கடவாய்ப்பல்லில் கடிபட்ட கடலைமிட்டாய்போல உடைந்தது. எனக்குத்தான் புதுப்பெயர் வைக்கணும்னு அம்புஜம் ஒத்தைக்காலிலே நிக்கிறா!

      ஏன் சார்? இத்தனை வயசுக்கு மேலே எதுக்குப் பெயரை மாத்தணும்?

      நன்னாக் கேளு சேட்டை! அம்சவேணியம்மாள் உள்ளே நுழைந்தார். “எட்டு கழுதை வயசுக்கப்புறம் யாராவது பேரை மாத்துவாளா?

      யாருக்கு எட்டு கழுதை வயசாச்சு?பொருமினார் வரதாச்சாரி.

      விடுங்க சார்!சமாதானப்படுத்தினேன் நான். “வயசானவங்க, தப்புக்கணக்குச் சொல்றாங்க! ஒண்ணு ரெண்டு கழுதை விட்டுப்போனா என்ன குடியா முழுகிடும்?”

      பெருமாளே!அம்சவேணியம்மாள் கைகூப்பினார். “என் நாட்டுப்பொண்ணுக்கு நல்ல புத்தியைக் கொடு! கடைசிப் புரட்டாசி சனிக்கிழமைக்கு அக்கார அடிசல் பண்றேன்.

      கரெக்ட் மாமி!அக்கார அடிசலின் பெயரைக் கேட்டதும் என் வாயில் நிற்காமல் எச்சில் ஊறியது. “ஆனா, பச்சைக்கற்பூரம் கொஞ்சமாப் போடுங்கோ! எனக்கு ஆகாது!

      தோ பாருடா வரது!மடிசார் கட்டிய மமதா பானர்ஜி போல அம்சவேணி அறைகூவல் விடுத்தார். “அவ சொல்றா இவ சொல்றான்னு பெயரை மாத்தினே, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.

      மொத்தத்துலே இந்த வீட்டுலே யாருமே மனுஷாளா இருக்கப்போறதில்லையா?நொந்துகொண்டேன் நான். “பேசாம வண்டலூருக்கு வாலண்டரி டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிடுங்க.

      அம்சவேணி அங்கிருந்து நகர்ந்ததும், வரதாச்சாரி வராத பெருமூச்சை வரவழைத்து விட்டார்.

      சேட்டை! கல்யாணமான புதுசுலே, காதல் மயக்கத்துலே அம்புஜம் சொல்றாளேன்னு பேரை மாத்திக்கச் சம்மதிச்சது உண்மைதான். ஆனா இப்போ ரேஷன்கார்டு, பான்கார்டு, ஏ.டி.எம்.கார்டு, விசிட்டிங் கார்டு எல்லாத்துலேயும் வரதாச்சாரின்னு போட்டிருக்கே! பேரை மாத்தறது எவ்வளவு கஷ்டம்?

      பாவம் சார் நீங்க!நான் உச்சுக்கொட்டினேன். “கார்டு வாவாங்குது; வீடு போபோங்குது.

      ஒரே குழப்பமாயிருக்கு!வரது தலையைச் சொரிந்தார். “அதுலேயும் வரதாச்சாரிங்குறது எங்க தாத்தாவோட பேரு!

      அடப்பாவி! வரதாச்சாரிங்குறது உம்ம பேருன்னில்லே நம்பிட்டிருந்தேன்? இன்னொருத்தர் பேரை எதுக்குவேய் வைச்சுண்டிருக்கீர்?

      இருக்கிற இம்சை போதாதுன்னு நீ வேறே படுத்தாதே சேட்டை!வரதாச்சாரி எரிந்துவிழுந்தார். “அம்புஜவல்லி ஏதாச்சும் டப்பாப்பேரை வைக்கிறதுக்கு முன்னாடி நானே ஒரு புதுப்பெயர் செலக்ட் பண்ணனும். வாயிலே நுழையறா மாதிரி ஒரு பேரு சொல்லேன் சேட்டை!

      வாயிலே நுழைஞ்சாப் போதுமா? அப்ப டூத்பிரஷ்-னு பேரு வைச்சா ஒத்துப்பீரா? மனசுலே நுழையுற மாதிரி பேரு வைச்சுக்கணும்!

      சரி, அப்படியே சொல்லு சேட்டை!

      ஜிம்மி, டாமி, சீஸர்.....!

      நாராயணா நாராயணா!வரதாச்சாரி தலையிலடித்துக் கொண்டார். “செல்லப்பிராணிக்கு வைக்கிற பேரெல்லாம் சொல்றியே?

      அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே! இந்தப் பெயரையெல்லாம் பிராணிக்கும் வைக்கலாம்; உம்மை மாதிரி அப்பிராணிக்கும் வைக்கலாம்.

                உன்னை மாதிரி சாம்பிராணிகிட்டே கேட்டேன் பாரு!சலித்துக் கொண்டார் வரதாச்சாரி.

      என்ன புலம்பறார் எங்காத்துக்கார்?என்று கேட்டவாறு, காப்பியுடன் வந்தாள் அம்புஜவல்லி.

      இப்ப எதுக்காக இவரோட பேரை மாத்தணும்கிறே?எச்சரிக்கையாக முதலில் காப்பியை வாங்கிக்கொண்டு, துணிச்சலாகக் கேட்டேன். “அதுக்கெல்லாம் எவ்வளவு சட்டம் இருக்கு தெரியுமா? கெஜட் நோட்டிஃபிகேஷன்லாம் தேவைப்படும். பேப்பர்லே போடணும்.

      அப்படியாவது இவர் பேரு பேப்பர்லே வந்தா சரிதான்!என்று முகத்தை நொடித்தாள் அம்புஜவல்லி. “இத பாரு சேட்டை! இவர் பேராலே எவ்வளவு பிரச்சினை தெரியுமா?

      என்ன பிரச்சினை?

      கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானும் இவரும் தெருவுலே போயிண்டிருந்தோமா? எங்க பின்னாடியே ஒரு எருமை மாடு வந்திண்டிருந்தது. நாங்க கவனிக்கலை. எதுத்தாப்புலே வந்த ஒருத்தர் இவரைப் பார்த்து ‘எருமை வரது, எருமை வரதுன்னு சொல்லிட்டாரு! அப்படியே கோபம் பொத்துண்டு வந்துடுத்து.

      எருமைக்கா?

      இல்லை; நேக்கு! அவர் பின்னாலே வந்திட்டிருக்கிற எருமையைத்தான் வரது வரதுன்னு சொல்றார்னு தெரியாம, முன்னாலே போயிண்டிருந்த இந்த வரதுவைத்தான் எருமை எருமைன்னு சொல்றார்னு தப்பா நினைச்சிண்டு சண்டைக்குப் போயிட்டேன்.

      அதுக்குன்னு சண்டைக்குப் போவாங்களா? எருமையே சும்மாயிருக்கும்போது, அதாவது, வரதுவே சும்மாயிருக்கும்போது நீ எதுக்குச் சண்டைக்குப் போறே?

                தப்புத்தான் சேட்டை! ஐயோ பாவம்னு நல்ல எண்ணத்துலே சொன்னவரோட சண்டைக்குப் போயி, ஆயிரம் சாரி சொல்ல வேண்டியதாயிடுத்து!

      ஹை! எனக்கு அடுத்த இடுகைக்கு நல்ல தலைப்புக் கிடைச்சிடுச்சே! ஆயிரம் சாரி கேட்ட அபூர்வ அம்புஜவல்லி!

      எங்க கஷ்டம் உனக்கு ஜாலியா இருக்கா?எகிறினாள் அம்புஜவல்லி. “எருமைக்குத் திண்டாட்டம்; காக்காய்க்குக் கொண்டாட்டம்கிற மாதிரியில்லே இருக்கு?

      நீ எருமையை விட மாட்டியா?இடையில் புகுந்தார் வரதாச்சாரி. “சேட்டை! என்னமோ என்னை எல்லாரும் வரது வரதுன்னு சொல்றது கஷ்டமாயிருக்குன்னு சொல்றாளே! என் பேரை யூஸ் பண்ணி எங்கப்பாவை வீட்டுக்கு வர விடாமப் பண்ணிட்டா தெரியுமா?

      எப்படி?

      ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாள் நான் குளிச்சிண்டிருந்தேன்.

      ஐயையே! நீர் ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டிதான் குளிப்பீரா?

      பிராணனை வாங்காதே சேட்டை! வரதாச்சாரி எரிந்து விழுந்தார். “நான் குளிச்சிண்டிருக்கச்சே எங்கப்பா செல்லுலே கூப்பிட்டிருக்காரு!

      அதை அம்புஜவல்லி எடுக்கவேயில்லையா?

      அப்படிப் பண்ணியிருந்தாப் பிரச்சினையே வந்திருக்காதே. இவ போனை எடுத்திருக்கா? எங்கப்பா வரதான்னு என்னைக் கூப்பிட்டாரா, அவர் ஊருலேருந்து கிளம்பி வரதான்னு கேட்கறார்னு நினைச்சுண்டு, இவ ‘வர வேண்டாம்னு சொல்லி போனை டிஸ்கனெக்ட் பண்ணிட்டா!

      ஐயையோ!

                என் நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு சேட்டை!

      வாட் நான்சென்ஸ்!நான் சீறினேன். “நீங்க எந்த நிலைமையிலே குளிச்சிட்டிருந்தீங்கன்னு நான் எதுக்கு யோசிச்சுப் பார்க்கணும்?

      ஐயோ பெருமாளே!அலறினார் வரதாச்சாரி. இவா ஆஃபீஸ்லே ஒரு புத்திசாலிகூடக் கிடையாதா?

      தோ பாருங்கோ!அம்புஜவல்லி ஆட்காட்டி விரலை ஆட்டினாள். “எங்க ஆபீஸைப்பத்தித் தப்பாப் பேசினேள்.......?

      அம்புஜவல்லி மனுஷியாவே இருக்க மாட்டா...!என்று எடுத்துக் கொடுத்தேன் நான்.

      போதுமே உங்க ஆஃபீஸ் பிரதாபம்!வரதாச்சாரி நக்கலடித்தார். “உனக்கெல்லாம் அக்கவுண்டண்ட் போஸ்ட் கொடுத்திருக்காளே, இதுலேருந்தே அவா எவ்வளவு புத்திசாலியா இருப்பான்னு தெரியறதே!

      வரது! திஸ் இஸ் டூ மச்! அம்புஜவல்லி உறுமினாள். “எங்க ஆபீஸ்காரா ஒவ்வொருத்தரும் சூப்பர் இண்டெலிஜெண்ட்! எல்லாரும் சேட்டை மாதிரின்னு தப்பா நினைச்சுறாதேள்.

      என்னது?நான் எகிறினேன். “புளியோதரை சாப்பிடாமலே வயித்தைக் கலக்கறியே! இதுக்குமேலே நான் இருந்தா என் மரியாதை கெட்டிரும். நான் கிளம்பறேன்.

      சேட்டை, நில்லு!என்று வரதுவும் அம்புஜவல்லியும் வருவதைப் பற்றி சட்டை செய்யாமல் வெளியேறினேன். என்னவானாலும் சரி, வரதாச்சாரியின் பெயரை மாற்ற விடக்கூடாது என்பதோடு, நானும் புத்திசாலிதான் என்பதை அம்புஜவல்லிக்கு நிரூபிக்க வேண்டும்;  அதுவரை புளியோதரை சாப்பிடுவதில்லை என்று சபதம் மேற்கொண்டேன்.

      இரண்டொரு நாட்கள் கழித்து, எனது திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, அதிகாலை எட்டுமணிக்கு அம்புஜவல்லிக்குப் போன் போட்டேன்.

      அம்புஜவல்லி! இன்னிக்குப் பேப்பர் பார்த்தியா? லெட்டர்ஸ் டு தி எடிட்டர்லே வரதாச்சாரி சூப்பரா எழுதியிருக்காரே?

      என்னது? இவரா?வத்தக்குழம்பில் மிதக்கும் மணத்தக்காளிபோல, அம்புஜத்தின் குரலில் ஆச்சரியம் மிகுந்து காணப்பட்டது. “அது வேறே யாராவது புத்திசாலி வரதாச்சாரியா இருப்பார்!

      என்ன அப்படிச் சொல்லிட்டே? அவர்தான் அட்ரஸ்லேயே, வரதாச்சாரி, ஹஸ்பண்ட் ஆஃப் அம்புஜவல்லி, பெரியதெரு, ட்ரிப்ளிகேன்னு போட்டிருக்காரே!

      நெஜமாவா?

      முதல்லே பேப்பரை எடுத்துப் பாரு!என்று போனைத் துண்டித்துவிட்டு, எல்லா நண்பர்களுக்கும் குறும்செய்தி அனுப்பினேன். ஆபீஸுக்குச் சென்றுசேர்ந்ததும் வரதாச்சாரியிடமிருந்து போன் வந்தது.

      சேட்டை! இதெல்லாம் என்ன கூத்து? நான் ஒரு லெட்டரும் எந்தப் பேப்பருக்கும் எழுதலியே? இதென்ன புதுசாப் புரளி கிளம்பியிருக்கு?

      ஓய்! உம்ம பேருலே நான்தான் எழுதினேன்! அதை விடும்! அம்புஜவல்லி என்ன பண்ணினா, அதைச் சொல்லும்!

      ஆபீஸுக்குப் போற வழியிலே பத்துப் பதினஞ்சு பேப்பர்வாங்கி, தெரிஞ்சவாளுக்கெல்லாம் கொடுத்துப் படிக்கச் சொல்லப்போறாளாம்.

      ஹாஹாஹா!” சிரித்தேன் நான். “இத்தோட விடப்போறதில்லை. எல்லாப் பேப்பருலேயும் உங்க பேருலே லெட்டர் போடப்போறேன். அடுத்தபடியா எல்லாப் பத்திரிகை, பேப்பர்லேயும் உம்ம பேரு வரப்போறது. அப்புறம் உம்ம பேரை மாத்தச் சொல்லுவாளா அம்புஜவல்லி?

      என்ன உளர்றே? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

      ஒரு நிமிஷம்!செல்போனைப் பொத்திக்கொண்டு திரும்பியபோது, அம்புஜவல்லி ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். “என் ஹஸ்பண்ட் வரதாச்சாரி எழுதின லெட்டர் டு தி எடிட்டர் இன்னிக்குப் பேப்பர்லே வந்திருக்கு. படியுங்கோஎன்று சொல்லியவாறு கண்ணில் அகப்பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

      ஓய் வரதாச்சாரி! மூச்சுக்கு முன்னூறு வாட்டி இனிமே வரதாச்சாரி வரதாச்சாரின்னு சொல்லப்போறா அம்புஜவல்லி!

      அதெல்லாம் சரி சேட்டை! என்னைப் படிக்க விடாம அவ பேப்பரை எடுத்திண்டு போயிட்டா! என் பேருலே அப்படியென்ன விஷயத்தைப் பத்திப் பேப்பர்லே லெட்டர் எழுதினே?

      அதுவா? திருவல்லிக்கேணி தெருவுலே பாதசாரிகளுக்குத் தொந்தரவா நிறைய எருமை வரதுன்னு எழுதினேன்.

**********************************

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா.... செம திட்டம்...!

Anonymous said...

சேட்டை, எப்படித்தான் உங்களுக்கு இது போல் எழுத வருகிறதோ தெரியவில்லை. குமுதத்தில் பாக்கியம் ராமசாமியின் சீதாப்பாட்டி-அப்புசாமி தொடருக்கு இணையாக மிக மிக அற்புதம். வாழ்த்துக்கள்.

Unknown said...

சேட்டைக்காரன் ...காமெடியாய் சுடுவதில் நல்ல வேட்டைக்காரன் !
கல்யாணம் பண்ணியும் உங்களுக்கு மட்டும் எப்படி ,இப்படி காமெடியாய்எழுத வருகிறது ?

கதம்ப உணர்வுகள் said...

சேட்டை மேலே கேசே போடலாம்.. என்ன ஒரு அழிச்சாட்டியமா என் பகிர்வை படிக்கிறவாளை சிரிக்கவைக்காம விடமாட்டேன்னு சபதம் எடுத்துண்டு எழுதின மாதிரியே ஒவ்வொரு வரியிலயும் இப்படி சிரிக்க வைச்சுட்டீங்களே சார்...

நீங்க எழுதின வரிகளில் எல்லாமே செம்ம டைமிங் ஹ்யூமர் சென்ஸ் அள்ளி தெளிச்சிருக்கீங்கன்னு பார்த்தா பின்னி பெடல் இல்ல எடுத்திருக்கீங்க.

இம்சைவேணி.. ச்சேச்சே அம்சவேணில தொடங்கி... எருமை வரது.. ச்சேச்சே வரதாச்சாரியோட அவஸ்தைகள் எல்லாம் விலாவாரியா போட்டு.. அம்புஜவில்லி.. சேச்சே அம்புஜவல்லி வரை எல்லாரையும் ஒரு ரௌண்டு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டீங்களே..


எனக்கென்னவோ புளியோதரை கிடைக்காத கடுப்புல தான் கடைசி வரில பேப்பர்ல எழுதின எருமை வரதுன்னு போட்டு பிரபல்யப்படுத்திட்டீங்களோன்னு தோணுது சார்..

இடைவிடாம சிரிச்சுட்டே இருந்தால் ஆபிசில் என்னை பைத்தியம்னு நினைக்கமாட்டாளா? ஆனாலும் போறும்னு சொல்லமாட்டேன். இன்னும் உங்க ஆரோக்கியம் நன்றாய் இருந்து நிறைய இதேபோல் நகைச்சுவைகளை எழுத அன்பு வாழ்த்துகள் வேணு சார்.

சேட்டை ஆனாலும் ரொம்ப சாஸ்தி தான் நீங்க... இப்பவே இப்டின்னா குழந்தைல உங்கக்கிட்ட மாட்டிண்டு அவஸ்தைப்பட்ட டீச்சர்ஸ், அக்கம்பக்கத்து குழந்தேள், அம்மா அப்பா கதி எல்லாம் என்ன ஆகி இருந்திருக்கும்னு நினைச்சாலே எனக்கு மயக்கம் வருது சார் :)

ரசித்து சிரித்தேன் வேணு சார்.. செம்ம அசத்தல் பகிர்வு...நூத்துக்கு நூறு மார்க்ஸ்பா உங்களுக்கு...

கதம்ப உணர்வுகள் said...

/உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!//

ச்ச்ச்ச்சோ ச்சுவீத்து :)

Unknown said...



சேட்டைக் காருக்கு இணை யாருமில்லை! அவருக்கு இணை அவரேதான்! வாழ்க வளமுடன்!

ஸ்ரீராம். said...

உவமைகளை வைத்துத் தாளித்து விட்டீர்களே... அபாரம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எருமையான நகைச்சுவை ... ஸாரி அருமையான நகைச்சுவை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

சௌமியா said...

:-))

Happy Birthday Anna! God Bless You!

இராஜராஜேஸ்வரி said...

எருமை மாடுகள் மழையில் நனைந்தால் கூட அலட்டிக்கொள்ளாதுகள்..

ஆனால் சேட்டையின் பதிவைப்படித்தால்
சிரிப்பு மழையில் நனைந்து
சிரிப்பாய் சிரித்து மகிழும்.

middleclassmadhavi said...

Modi pesuvathai TVla ippothu kettuk konde padiththEn! Modi pesuvathai kindal seithu siripathaaga en kanavar muraikiraar!! Engal sandaiyaiyum theerthu veiyunga Sir!!

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா... சேட்டையின் அக்மார்க் உவமைகளுடன்... சூப்பர்...

ரூபக் ராம் said...

வழக்கம் போல் உங்க ஸ்டைல்ல ஒரு கலக்கல் பதிவு

”தளிர் சுரேஷ்” said...

குலுங்க குலுங்க சிரிக்க வைத்த கதை! அருமை! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

சிரிச்சு மாளலை... :)

பொன் மாலை பொழுது said...

”வாயிலே நுழைஞ்சாப் போதுமா? அப்ப டூத்பிரஷ்-னு பேரு வைச்சா ஒத்துப்பீரா?//

ஒரே ஒரு சேட்டை போதும்.

அருணா செல்வம் said...

haaa... haaa...arumai.

பால கணேஷ் said...

ERUMAI VARATHU... Ha... Ha.. Ha... Ore Oru varthai-yai vaithu ippadi humour panna Settaikaranaal than anna mudiyum. Soooooperu!

மலரின் நினைவுகள் said...

//அப்படியே கோபம் பொத்துண்டு வந்துடுத்து.”
”எருமைக்கா?”//

//”வாட் நான்சென்ஸ்!” நான் சீறினேன். “நீங்க எந்த நிலைமையிலே குளிச்சிட்டிருந்தீங்கன்னு நான் எதுக்கு யோசிச்சுப் பார்க்கணும்?”//

சேட்டை சேட்டைதான்.... ரணகளம்...!!

துளசி கோபால் said...

என்னங்க சேட்டை,

உடம்பு சரி இல்லைன்னு மின்னல் சொல்லிக்கிட்டு இருக்கார். இங்கே என்னன்னா.... நல்லஃபார்மிலிருக்கீங்க!!!!

அடிச்சு ஆடுங்க!

அட்டகாசம் அத்தனையும் சூப்பர்!இனிய பாராட்டுகள்.