Wednesday, October 19, 2011

அடுத்த காமெடி டைம் விரைவில்...!

சில நாட்களுக்கு முன்னர் மின்னரட்டையில் ஒரு சகபதிவர் எனது வலைப்பூ முகப்பிலிருந்த அண்ணா ஹஜாரேயின் படத்தை நீக்குமாறு அன்புக்கட்டளையிட்டார். அவர் கூறிய காரணங்களை விடவும் எனக்கே கூட எனது வலைப்பூவில் இன்னொரு காமெடியனின் படத்துக்கு அவசியமில்லை என்று தோன்றியதால் அதை அகற்றி விட்டேன். ஆனால், அண்ணா ஹஜாரேயும் அவரது ஆத்மார்த்த சிஷ்யர்களும் ஆரம்பித்திருக்கிற அடுத்த ரவுண்டு காமெடியைப் பற்றி பதிவு செய்வது முக்கியமாகப் பட்டது. (வரலாறு மிக முக்கியம்!). ஆகவே, விரைவில் புது தில்லியில் ராம்லீலா மைதானத்திலோ அல்லது செங்கோட்டை மைதானத்திலோ அரங்கேறப்போகிற அண்ணா ஹஜாரேயின் அடுத்த காமெடி டைம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

எதிர்பார்த்தபடியே ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியின் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது. எதிர்பார்த்தபடியே ’எல்லாம் அண்ணாஜியின் திருவருளால் விளைந்தது,’ என்று அவரது பக்தகோடிகள் நெக்குருகி கன்னத்தில் போட்டுக்கொண்டு கற்பூரம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் ஜெயித்தவர் ஏற்கனவே அந்தத் தொகுதியில் வென்று காலமானவரின் மகன் என்பதையோ, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் பலவீனமாக இருந்து வந்திருக்கிறது என்பதையோ அனாவசியமாக சுட்டிக்காட்டி அண்ணாஜியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் ’காங்கிரஸ் அடிவருடிகள்’ என்று சபிக்கப்படுவர். அதே போல, அர்விந்த் கேஜ்ரிவால் தனது சொந்த மாநிலத்தில், சொந்த ஊரில் மும்முரமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸைத் ’தோற்கடித்தது’ போல, ஏன் அண்ணா ஹஜாரே தனது ராலேகாவ் சித்தியிலிருந்து கூப்பிடுதூரத்திலிருக்கும் பூனே இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்றும் யாரும் கேட்கப்படாது. அண்ணாஜியும் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் ஒற்றுமையாக இருப்பது பிடிக்காதவர்கள் வேண்டுமானால் அப்படிக் கேட்கலாம். போதாக்குறைக்கு சுரேஷ் கல்மாடி போன்ற புண்ணியவான்களின் தொகுதியில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று அண்ணா ஹஜாரேவுக்கு என்ன அவசியம் இருக்கிறது சொல்லுங்கள்? அவர்கள் எதிர்ப்பது ஊழலைத்தானே தவிர, ஊழல்வாதிகளை அல்ல என்பது கூடவா இன்னும் புரியவில்லை...?

அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். அவர்கள் திருச்சி சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அண்ணாஜி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கலாம். வடை போச்சே!

சரி, ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? ஒரு மாதத்துக்கு முன்பு ’ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றா விட்டால், 2014 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்,’ என்று சொன்னவர், பிறகு ’குளிர்காலத் தொடரில் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் நாடெங்கும் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்,’ என்று சொன்னவர், திடீரென்று குளிர்காலத் தொடர் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் ஹிசார் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?- என்று கேட்கிறீர்களா? அப்படியெல்லாம் அண்ணாஜியை எதிர்த்துக் கேள்விகேட்டால் அது மகாபாவம். மவுன விரதத்தை முடித்துக் கொண்டு வந்து மீண்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்து விடுவார், ஜாக்கிரதை!

காங்கிரஸ் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையாம். ஐயா சாமிகளே, எந்தக் காலத்தில் காங்கிரஸ் சொன்னதைச் செய்திருக்கிறார்கள்? ’ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவருவேன், ’ என்று வாக்குறுதியளித்து, இருப்பது போதாது என்று வண்டிவண்டியாய்க் கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பியவர்களை நம்பினால் அது உங்கள் குற்றம்தானே? போகட்டும், காங்கிரஸ் தான் நேர்மையற்றவர்கள்; நீங்கள் சொன்னதைச் செய்துகாட்டும் சூரப்புலிகள் அல்லவா? ’எங்கள் இயக்கத்துக்கு வந்த நன்கொடைகளின் விபரங்களை இன்னும் 24 மணி நேரத்தில் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம்,’ என்று ஆகஸ்ட் 20 2011 அன்று சூளுரைத்தீர்களே, அதைக் காப்பாற்ற முடிந்ததா? - என்றும் கேட்டுவிடாதீர்கள்! அது பஞ்சமாபாதகம்!

ஆக, அண்ணாவின் அலையில் அகப்பட்ட காங்கிரஸ் ஹிசாரில் அதோகதியாகி விட்டது என்று மட்டும் ஒப்புக்கொள்வதே உசிதம். அத்துடன், அடுத்து அண்ணா ஹஜாரே பிரச்சாரம் செய்யப்போகும் உத்திரப்பிரதேசத்திலும் காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பதும் சத்தியம். தனது அடுத்த பிரச்சாரத்துக்கு உ.பியை அண்ணா ஹஜாரே தேர்ந்தெடுத்திருப்பதன் சூட்சமத்தை எண்ணினால் புல்லரிக்கிறது!

என்.டி.திவாரியின் தலைமையில், 1988-89-ல் தோராயமாக ஒருவருடம் தாக்குப்பிடித்த அரசுக்குப்பிறகு, காங்கிரஸ் உ.பியில் ஆட்சிக்கு வரவேயில்லை என்பதே உண்மை. ஒரு நிமிடம்! ஒரு முறை கல்யாண் சிங் அரசை சட்டவிரோதமாக டிஸ்மிஸ் செய்து மூன்றே மூன்று நாட்கள் ஒரு காங்கிரஸ் முதலமைச்சர் இருந்தது (ஜகதம்பிகா பால்) இருந்தது தவிர, அங்கு பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி என்று தான் மக்கள் மாற்றி மாற்றி வாக்களித்தார்களே தவிர, காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே இருந்து வருகிறது.

ஆக, இருக்கிற சுவடே தெரியாமல் தொலைந்துபோன ஒரு கட்சியை அந்த மாநிலத்தில் தோற்கடிக்கிறேன் பார் என்று சூளுரைத்து, சிங்கம் போலப் புறப்பட்டிருக்கும் அண்ணா ஹஜாரேயின் வீரத்தை என்னென்று சொல்ல? சங்கப்புலவனாயிருந்தால் இவர்மீது பரணி பாடியிருக்கலாம். பரணியென்ன பரணி, அண்ணா ஹஜாரேயின் மீது பரணி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ் எல்லாம் பாடலாம்; அதற்கு அவர் தகுதியானவரே!

அண்ணா ஹஜாரேயின் போராட்டம் அரசியலில் முடிந்ததில் எனக்கொன்றும் வியப்பில்லை; இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுதிவிட்டேன்.

அண்ணா ஹஜாரேயின் குழுவில் விரிசல் ஏற்பட்டதிலும் வியப்பில்லை; அதையும் முன்பே எழுதிவிட்டேன்.

ஆனால், ஒரு விஷயத்தில் வியப்பு ஏற்படுகிறது. அண்மையில் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணைச் ராம்சேனா தொண்டர்கள் தாக்கியபோது அண்ணா சொன்னது: "யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது."

புல்லரிக்குது! தூணில் கட்டி பெல்ட்டால் அடிக்கிற ஆசாமி சொல்கிறார் இதை! இவர் எந்தக் காலத்தில் எந்தச் சட்டத்தை மதித்தாராம்? பிரசாந்த் பூஷணோ, அர்விந்த் கேஜ்ரிவாலோ - அவர்களது கருத்துக்களுடன் உடன்பாடில்லாதவர்கள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால்...

ராஜ் தாக்கரே வடமாநிலங்களிலிருந்து வருகிறவர்களைத் தாக்கியபோது அதைக் கண்டிக்காததோடு, ’எங்கள் மாநிலத்தில் இவர்களுக்கு என்ன வேலை?’ என்று கேட்டவரல்லவா இந்த அண்ணா ஹஜாரே?

ராம்லீலா மைதானத்தில் காவல்துறையினர் மீது அண்ணாவின் அடிப்பொடிகள் நிகழ்த்திய தாக்குதல் குறித்து அண்ணா என்ன கண்டனம் தெரிவித்தார்?

உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் கெட்ச்-அப்பா?

ஆனால் ஒரு விசயத்தில் அண்ணா ஹஜாரேயைப் பாராட்டியே தீர வேண்டும். "எங்கள் போராட்டத்துக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உதவியாக இருந்தார்,’என்று இரங்கல் செய்தியைக் காமெடியாக்கியதிலிருந்து, ’பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் போரிடுவேன்,’ என்று அல்டாப் பண்ணுவது வரையில், அவரது அறிக்கைகள் வடிவேலு இல்லாத குறையை ஓரளவு குறைத்து வருகின்றன. (இவர் ராணுவத்தில் டிரைவராகத்தான் பணியாற்றினார் என்பது வேறு விஷயம்!)

வாழ்க அண்ணா ஹஜாரே! வளர்க உங்கள் காமெடி!

22 comments:

வெளங்காதவன்™ said...

பிரசென்ட் மை லார்ட்!

வெளங்காதவன்™ said...

//உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் கெட்ச்-அப்பா?//

அரசியல்னு வந்துட்டாலே!
ஹி ஹி ஹி...

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி...வாத்தியாரே ரொம்ப குயப்பமா இருக்கு நான் வரல இந்த வெளாட்டுக்கு உட்ரு ஹிஹி!

Unknown said...

இந்த ஆளு சாகுற வரை மௌன விரதம் இருந்தா புண்ணியமா போகும்!!

பால கணேஷ் said...

24 மணி நேரத்தில் வெப்சைட்டில் எங்களுக்கு வந்த நன்கொடைகளை வெளியிடுவோம் என்று அறிவித்ததை சேட்டை மாதிரி ஆசாமிகள் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியவில்லையே... வடிவேல் இல்லாத குறையை அண்ணா ஹசாரே தீர்க்கிறார் என்று சொன்னீர்களே.. அது நிஜம்தான்!

குடுகுடுப்பை said...

எனக்கு தமிழ்நாடு தாண்டி ஒன்னும் தெரியமாட்டேங்குது, நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீரு, காமெடிக்காக நம்ம அண்ணாவையும் சேத்து

Renga said...

Hi.. please do not waste your precious time on this comedian... You are very great political observer and you can write a lot about it...

This CYNIC Buddda... has nothing to do with the Constitutional Changes in India...

lbrrenga

அம்பலத்தார் said...

இப்படிப்போகுதா கதை. ரொம்பவும் சுவாரசியமாகத்தான் இருக்கு.

kaialavuman said...

நல்ல அலசல் சேட்டை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

என் வருகையை பதிவு செய்கிறேன்.

SURYAJEEVA said...

//கெட்ச்-அப்பா?//
தக்காளி சட்னின்னு போட்டிருந்தா விக்கி கொவிச்சுக்குவாரோ? -டவுட் கோவாலு

SURYAJEEVA said...

உங்கள் அக்மார்க் காமடி கொஞ்சம் கம்மி, இருந்தாலும் நல்ல அலசல்

Muthuvel Sivaraman said...

"
உங்களுக்கு வந்தால் இரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் கெட்ச்-அப்பா?

"
ஹி ஹி ஹி...
ஹி ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு எழவும் புரியலை ங்கே ங்கே....

பெசொவி said...

//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். அவர்கள் திருச்சி சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அண்ணாஜி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கலாம். வடை போச்சே!//

:))))))))))))
settai special!

பெசொவி said...

//அண்ணா ஹஜாரேயின் குழு ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். அவர்கள் திருச்சி சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால், தமிழகத்திலும் காங்கிரஸுக்கு எதிரான அண்ணாஜி அலை வீசிக்கொண்டிருக்கிறது என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கலாம். வடை போச்சே!//

இன்னும் வடை போகலை. காங்கிரஸ் திருச்சி தேர்தலில் ஜெயித்தால்(????!!!!!), அன்னா பிரச்சாரம் செய்யாததுதான் காரணம் என்று அவரின் அடிவருடிகள் சொல்ல வாய்ப்பிருக்கிறது, சேட்டை!
:))

செவிலியன் said...

ஊர்ல இருக்குற செத்த பாம்பையெல்லாம்....நம்ம அன்னா ஹசாரே கிட்ட போடுங்க...அடிச்சுட்டு போகட்டும்....

Anonymous said...

திருச்சி தேர்தல்ல காங்கிரஸ் நிக்கலையே? எனிவே இந்தியன் தாத்தா ரேஞ்சில இருந்தவரு இப்ப அவ்வைசண்முகி ரேஞ்சுக்கு ஆகிட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

அதென்னமோ தெரியலை, உங்களுக்கும் ஹசாரேவுக்கும் 7ஆம் பொருத்தம்.. ஹா ஹா

Philosophy Prabhakaran said...

Renga கருத்தை வழிமொழிகிறேன்... அன்னா பற்றிய உங்கள் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியுமே... ஏன் அவரைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்கிறீர்கள்...

settaikkaran said...

//வெளங்காதவன் said...

பிரசென்ட் மை லார்ட்!//

தேங்க் யூ வெரி மச்! :-)

அரசியல்னு வந்துட்டாலே! ஹி ஹி ஹி...//

அதான்! அதே தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி...வாத்தியாரே ரொம்ப குயப்பமா இருக்கு நான் வரல இந்த வெளாட்டுக்கு உட்ரு ஹிஹி!//

இன்னும் புச்சு புச்சா குயப்பம் வந்துக்கினே கீது வாத்யாரே! :-)
மிக்க நன்றி! :-)

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இந்த ஆளு சாகுற வரை மௌன விரதம் இருந்தா புண்ணியமா போகும்!!//

யாரு சாகறவரைக்கும்? :-))))
மிக்க நன்றி நண்பரே!

//கணேஷ் said...

24 மணி நேரத்தில் வெப்சைட்டில் எங்களுக்கு வந்த நன்கொடைகளை வெளியிடுவோம் என்று அறிவித்ததை சேட்டை மாதிரி ஆசாமிகள் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியவில்லையே... வடிவேல் இல்லாத குறையை அண்ணா ஹசாரே தீர்க்கிறார் என்று சொன்னீர்களே.. அது நிஜம்தான்!//

வாங்க கணேஷ்! அவருக்கு மக்கள் மேலே, அதாவது மக்களின் மறதிமேலே அப்படியொரு அபார நம்பிக்கை! எத்தனை நாள் கைகொடுக்கும்னு பார்ப்போம்! மிக்க நன்றி! :-)

//குடுகுடுப்பை said...

எனக்கு தமிழ்நாடு தாண்டி ஒன்னும் தெரியமாட்டேங்குது, நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீரு, காமெடிக்காக நம்ம அண்ணாவையும் சேத்து//

புதுசா என்னண்ணே சொல்லிட்டேன், எல்லாம் பேப்பர்லே வர்றதுதான்! அண்ணாவை வச்சு பத்து இடுகை தேத்திட்டேன்னா அவரு எம்புட்டுப் பெரிய காமெடின்னு புரியுமே! :-))
மிக்க நன்றி!

//Renga said...

Hi.. please do not waste your precious time on this comedian... You are very great political observer and you can write a lot about it...//

I do agree! But, I felt it was necessary to do my bit in exposing the contradictions in Team Anna as many people still believe he means what he says.

//This CYNIC Buddda... has nothing to do with the Constitutional Changes in India...//

Cynic Budda! You have amply described him in just two words. Thank you very much Sir.

settaikkaran said...

//அம்பலத்தார் said...

இப்படிப்போகுதா கதை. ரொம்பவும் சுவாரசியமாகத்தான் இருக்கு.//

ரொம்ப நாளைக்கு இப்படி இருக்காது. சீக்கிரம் போரடிக்கப்போவுது! :-)
மிக்க நன்றி!

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நல்ல அலசல் சேட்டை.//

மிக்க நன்றி! :-)

//NIZAMUDEEN said...

என் வருகையை பதிவு செய்கிறேன்.//

மிக்க நன்றி! :-)

//suryajeeva said...

தக்காளி சட்னின்னு போட்டிருந்தா விக்கி கொவிச்சுக்குவாரோ? -டவுட் கோவாலு//

ஊஹும்! அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாரு!

//உங்கள் அக்மார்க் காமடி கொஞ்சம் கம்மி, இருந்தாலும் நல்ல அலசல்//

அண்ணா ஹஜாரே-ன்னாலே காமெடிதான்! அதுனாலே கொஞ்சம் சுருதியைக் குறைச்சிட்டேன். மிக்க நன்றி நண்பரே! :-)

//Muthuvel Sivaraman said...

ஹி ஹி ஹி...ஹி ஹி ஹி...//

மிக்க நன்றி! :-)))))

//MANO நாஞ்சில் மனோ said...

ஒரு எழவும் புரியலை ங்கே ங்கே....//

கவலைப்படாதீங்க அண்ணாச்சி! சீக்கிரம் எல்லாரும் புரிஞ்சுக்குவாங்க! :-)
மிக்க நன்றி!

//பெசொவி said...

:))))))))))))
settai special!//

Thanks! :-)

இன்னும் வடை போகலை. காங்கிரஸ் திருச்சி தேர்தலில் ஜெயித்தால்(????!!!!!), அன்னா பிரச்சாரம் செய்யாததுதான் காரணம் என்று அவரின் அடிவருடிகள் சொல்ல வாய்ப்பிருக்கிறது, சேட்டை! :))//

காங்கிரஸ் ஜெயித்தால்...? இது தங்கபாலு, இளங்கோவன் காதுலே விழுந்தா தமிழ்நாடு என்ன ஆகும்? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

//செவிலியன் said...

ஊர்ல இருக்குற செத்த பாம்பையெல்லாம்....நம்ம அன்னா ஹசாரே கிட்ட போடுங்க...அடிச்சுட்டு போகட்டும்....//

அதே! அதே! இப்படித்தான் ரவுசு காட்டிக்கினு திரியுறாங்க அவங்க! நச்சுன்னு சொல்லிட்டீங்க! மிக்க நன்றி! :-)

//மொக்கராசு மாமா said...

திருச்சி தேர்தல்ல காங்கிரஸ் நிக்கலையே?//

சும்மா பகடிக்காகச் சொன்னேன். காங்கிரஸையும் விட்டு வைப்பானேன்?

//எனிவே இந்தியன் தாத்தா ரேஞ்சில இருந்தவரு இப்ப அவ்வைசண்முகி ரேஞ்சுக்கு ஆகிட்டாரு//

அவ்வை சண்முகி நல்ல படமாச்சே? அவ்வளவு மொக்கையாவா இருந்திச்சு? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

//சி.பி.செந்தில்குமார் said...

அதென்னமோ தெரியலை, உங்களுக்கும் ஹசாரேவுக்கும் 7ஆம் பொருத்தம்.. ஹா ஹா//

என்ன தல பண்ணுறது? யாராவது அவரைப் புகழ்ந்து பேசுனா எனக்கு டெம்பரேச்சர் ஏறுதே? :-)))

மிக்க நன்றி தல! :-)

//Philosophy Prabhakaran said...

Renga கருத்தை வழிமொழிகிறேன்... அன்னா பற்றிய உங்கள் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியுமே... ஏன் அவரைப் பற்றி எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்கிறீர்கள்...//

இணையம், அலைபேசி ஆகிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு போலியான தோற்றத்தை உருவாக்க அவர்கள் முயலும்போது, அதையே பயன்படுத்தி கொஞ்சம் மாற்றுக்கருத்துக்களையும் உருவாக்கணுமே? :-)

மிக்க நன்றி நண்பரே! :-)

//FOOD said...

நையாண்டியில் நையப்புடைச்சிருக்கீங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)