Monday, October 17, 2011

சினேகவீடு - மோகன்லால் ராஜ்ஜியம்


மலையாளப் படங்கள் மீதான எனது ஈர்ப்பு தற்செயலானது. எப்போதாவது ஏசியாநெட்-டில் சில படங்களைப் பார்த்து சற்றே ஆச்சரியப்பட்டதுண்டு. ’மனசினக்கரே’ படத்தில் நயன்தாராவைப் பார்த்து சற்றே வாயடைத்துப்போனேன். அதே போல ஊர்வசி-மீரா ஜாஸ்மின் நடித்த ’அசுவிண்டே அம்மா’ படத்தின் இறுதிக்காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் ஈரமாகியதையும் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். இவ்விரு படங்களுக்கும் இசைஞானி இளையராஜா தான் இசை; சத்தியன் அந்திக்காடு தான் இயக்கம். 

சத்தியன் அந்திக்காடு மலையாளத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற ஒரு இயக்குனர்; இளையராஜாவைப் பற்றி புதிதாய்ச் சொல்ல என்ன இருக்கிறது? ஆகவே, இவ்விரு பிரமிப்பூட்டும் கலைஞர்களுடன் மோகன்லாலும் இணைந்து வெளியாகியிருக்கும் ’சினேகவீடு’ படத்தை திரையரங்கில் சென்று பார்த்துவிட நண்பர்கள் விரும்பியபோது, நான் தயங்காமல் அவர்களுடன் கிளம்பி விட்டேன். பெரிதாக ஏமாற்றமில்லை என்றாலும், சில எதிர்பார்ப்புகள் மிச்சமிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்ம விக்கிரமன் படத்தின் கதைபோல, பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகவும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின்னர் சற்றே சலிப்பூட்டும் மெலோடிராமாவும் விக்கிரமனை நினைவூட்டுகிறது. இதை தைரியமாக ஒரு குடும்பக்கதை என்று சொல்லிவிடலாம் என்றாலும், கதை சொல்லியிருக்கிற விதம் பெரும்பாலும் சுவாரசியமாகவே இருக்கிறது.

கதாநாயகன் அஜயன்(லாலேட்டன்) சென்னை,மும்பை,வளைகுடா நாடு என்று ஒரு ரவுண்டு வேலைபார்த்து விட்டு தாயார் அம்முக்குட்டி(ஷீலா) வசிக்கும் பாலக்காட்டுக்கு வருகிறார். அம்மாவின் பாசம், நண்பர்கள் மற்றும் சினேகிதி (பத்மப்ரியா) ஆகியோருடன் படுஜாலியாக இருக்கும் அஜயனின் வீட்டுக்குள் ’நான் உன் மகன்’ என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வரவும், அதைத் தொடர்ந்து ஏற்படுகிற குடைச்சல்களையும், இறுதியில் ’யார் அந்த மகன்?’ என்ற முடிச்சை (சற்றே சொதப்பலாய்) அவிழ்த்திருக்கிறார்கள்.

முதல்பாதியில் முக்கியக் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக, போரடிக்காமல் கதையோட்டத்திலேயே அறிமுகப்படுத்துகிற விதமே சத்தியன் அந்திக்காடின் திறமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. லாலேட்டனின் அபாரமான நகைச்சுவை உணர்வும், அவரது ஸ்பெஷாலிட்டியான ’டைமிங்’ காமெடியும் இடைவேளை வரைக்கும் படத்தை படுசுவாரசியமாய் நகர்த்திச் செல்கிறது. குறிப்பாக ஷீலாவும், மோகன்லாலும் இணைந்து வரும் காட்சிகளில் ஒரு உணர்ச்சியோடையை எளிதில் அறிய முடிகிறது. அத்துடன், சேர நன்னாட்டுக் கிராமத்தின் அழகைக் குளுகுளுவென்று காண்பித்து அதிசயிக்க வைக்கிறார்கள்.

’மகன்’ என்று சொல்லிக்கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தும் ராகுல் பிள்ளை நிச்சயமாக ஒரு ரவுண்டு வருவார் என்றுதான் தோன்றுகிறது. சர்வசாதாரணமாக ஊதித்தள்ளியிருக்கிறார். இது தவிர பத்மப்ரியா போலவே படத்தில் இன்னும் சில உதிரிக்கதாபாத்திரங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் பங்கைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஆனால், இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை கொஞ்சம் பிசுபிசுத்து விடுகிறது. இதனாலோ என்னவோ ராகுல் பிள்ளையின் ரகசியம் தெரியும்போது வியப்புக்குப் பதிலாக சலிப்பே ஏற்படுகிறது. சராசரி தமிழ் சினிமாவில் அன்றாடம் பார்க்க நேரிடுகிற பொருத்தமின்மையும் அவ்வப்போது தலை தூக்குகிறது. யாரோ ஒருவன் மகன் என்று சொல்லிக் கொண்டு வந்தால், அவனது அம்மாவின் போட்டோவைக் கூடவா கேட்க மாட்டார்கள்?

இந்தப் படத்தின் இன்னொரு ஏமாற்றம் இளையராஜா! பின்னணி இசையில் காட்டிய சிரத்தையை பாடல்களில் காட்டவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. ’மரக்குடையான் முகம் மறைக்கும் மானல்லோ’ போலவோ ’எந்து பறஞ்சாலும்’ போலவே இந்தப் படத்தில் சட்டென்று மனதில் ஒட்டுகிற மாதிரி எந்தப் பாட்டும் அமையவில்லை என்பது ஏமாற்றம்.

ஆனால், பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டி, அந்தரத்தில் பல்டியடித்து குண்டர்களைத் துவம்சம் செய்து கொண்டிருந்த லாலேட்டன், தனது இயல்பான நகைச்சுவை, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கலாம்.

மோகன்லால் ரசிகர்களுக்கு ’சினேகவீடு’ சக்கப்பிரதமன் போல இனிக்கும் என்பது மட்டும் உண்மை. மற்றவர்கள், better avoid....!

19 comments:

சார்வாகன் said...

nice post.thank you

பால கணேஷ் said...

Ada! Neenga Cinema Vimarsanam kooda nandragave eluthi ulleergal. Naan Lalettanin Rasigan enpathal enakkum pidikkum ena ninaikirane. tks.

சேலம் தேவா said...

எத்தனை மொழிகள் தெரியும் சேட்டைக்கு..?! :)

K.s.s.Rajh said...

எனக்கும் மலையாளப்படங்கள் பிடிக்கும் பாஸ்

அம்பலத்தார் said...

மறுப்பதற்கு இல்லை, யதார்த்தமான படங்களைத் தருவதில் மலையாளப் படவுலகம் முன்னணியில் உள்ளது.

Philosophy Prabhakaran said...

நான் கேட்க நினைத்ததை சேலம் தேவா கேட்டுவிட்டார்...

Philosophy Prabhakaran said...

என்ன சேட்டை மாடரேஷன் தூக்கிட்டீங்க... இன்னா மேட்டர்...?

Philosophy Prabhakaran said...

நான் இதுவரைக்கும் எந்த மலையாள படமும் பார்த்ததில்லை... லயணம் பார்க்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நலமா?
இனிமேல் உங்களை என்னாலா சகோதரம் என்று சரிக்குச் சமனாகச் சொல்ல முடியாது,
காரணம் என்னை விட நீங்க வயதில உயர்ந்தவர் என்று நெனைக்கிறேன்.
பல மொழிகள் கற்றிருக்கிறீங்க
போல;-)))

நிரூபன் said...

மொழி கடந்து ஒரு படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலினை உங்களின் இவ் விமர்சனம் தந்திருக்கிறது,

அதுவும் படத்தின் இசை, இயற்கை வரணனைகள் பற்றி சிலாகித்திருப்பது படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

பொதுவாக மலையாள படங்கள் யதார்த்தமாக எடுக்கிறார்கள் என்பது என் கருத்து!!!!!

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்க்கும் எண்ணம வருகிறது, உங்கள் பதிவை படித்ததும் நன்றி....

shortfilmindia.com said...

மலையாள படங்களுக்கான விமர்சனஙக்ள் தமிழ் பதிவுகளில் அவ்வளவாக வருவதில்லை. இது நல்ல முயற்சி.


கேபிள் சங்கர்
http://udanz.com

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மலையாளம் எதுவாக இருந்தாலும் சரி ருசி தான்..
கதை - தகழி,வைக்கம்.
சாப்பாடு - சக்கப்ரதமன்,எரிசேரி
வித்வான் - செம்பை,ஜேசுதாஸ்
கேபிள் - ஏஷியானெட்..காலை ஐந்து மணிக்கு சூப்பர்..சூப்பர் கச்சேரி..
தெய்வம் - குருவாயூரப்பன், அனந்த பத்மனாபன்,ஜனார்த்தனன்..
இடம் - காலடி,அம்பலப்புழா..
பரசுராம க்‌ஷெத்ரத்தில் எது தான் பிடிக்காது?

கே. பி. ஜனா... said...

விமரிசனத்துக்கு விமரிசனம், சுவையான தகவலுக்கு சுவையான தகவல்!

மகேந்திரன் said...

பொதுவாகவே மலையாளப் படங்களில்
யதார்த்தம் மேலோங்கி இருக்கும்.
உள்ளதை உள்ளபடி தெரிவிப்பதில்
படைப்பாளிகள் சிறந்தவர்கள்.

தங்களின் விமர்சனம் மிக அருமை.

kaialavuman said...

//பஞ்ச் வசனம் பேசிக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டி, அந்தரத்தில் பல்டியடித்து குண்டர்களைத் துவம்சம் செய்து கொண்டிருந்த லாலேட்டன்//
என்ன செய்வது, தனது Super Star Satusஐ தூக்கி நிறுத்தவும், அது போன்ற தமிழ் படங்களுக்கு அங்கே இருக்கும் வரவேற்ப்பும் அவருக்குள் அதுபோன்ற ஆசையை உண்டாக்கியிருக்கும். போதாததற்கு இருக்கவே இருக்கிறார்கள் ஜால்ராக்கள் அவர்களும் தூபமிட்டிருப்பார்கள். அவருடைய பலமே இயல்பான நடிப்புதான். அது புரிந்து நடித்தால் நன்றாகவே இருக்கும்.

settaikkaran said...

//சார்வாகன் said...

nice post.thank you//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கணேஷ் said...

Ada! Neenga Cinema Vimarsanam kooda nandragave eluthi ulleergal. Naan Lalettanin Rasigan enpathal enakkum pidikkum ena ninaikirane. tks.//

சினிமாவை ஒரு சராசரி பார்வையாளனாக விமர்சிப்பதுண்டு. மற்றபடி, சினிமா விமர்சனத்தின் நுணுக்கங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//சேலம் தேவா said...

எத்தனை மொழிகள் தெரியும் சேட்டைக்கு..?! :)//

தமிழ் & ஆங்கிலம் மட்டுமே! கற்றுக்கொண்டிருப்பது சில!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//K.s.s.Rajh said...

எனக்கும் மலையாளப்படங்கள் பிடிக்கும் பாஸ்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//அம்பலத்தார் said...

மறுப்பதற்கு இல்லை, யதார்த்தமான படங்களைத் தருவதில் மலையாளப் படவுலகம் முன்னணியில் உள்ளது.//

ஆனால், இதை மலையாளப்பட ரசிகர்களே கேள்விக்குறியாக்கி வருமளவுக்கு மசாலாப்படங்கள் அதிகரித்திருப்பதும் உண்மை!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//Philosophy Prabhakaran said...

நான் கேட்க நினைத்ததை சேலம் தேவா கேட்டுவிட்டார்...//

அவருக்குச் சொன்னதுதான் உங்களுக்கும் பதில் நண்பரே!

//என்ன சேட்டை மாடரேஷன் தூக்கிட்டீங்க... இன்னா மேட்டர்...?//

ஜஸ்ட் லைக் தட்! நீங்களும் தான் மாடரேஷனைத் தூக்கிட்டீங்க! :-)))

//நான் இதுவரைக்கும் எந்த மலையாள படமும் பார்த்ததில்லை... லயணம் பார்க்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...//

நான் இப்போதெல்லாம் பிறமொழிப்படங்களே பார்ப்பது மிகக்குறைவு! அபூர்வமாகப் பார்ப்பதை மட்டும் எழுதுகிறேன். அவ்வளவே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் அண்ணே, நலமா?//

வாங்க சகோ! நலமே!

//இனிமேல் உங்களை என்னாலா சகோதரம் என்று சரிக்குச் சமனாகச் சொல்ல முடியாது, காரணம் என்னை விட நீங்க வயதில உயர்ந்தவர் என்று நெனைக்கிறேன்.//

போச்சு! இப்பவே நிறையே பேர் அண்ணே என்று அழைக்கிறார்கள். :-)

//பல மொழிகள் கற்றிருக்கிறீங்க போல;-)))//

கற்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். அவ்வளவே!

//மொழி கடந்து ஒரு படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலினை உங்களின் இவ் விமர்சனம் தந்திருக்கிறது,//

அதே ஆவலினால்தான் நானும் இப்படத்தைப் பார்த்தேன்.

//அதுவும் படத்தின் இசை, இயற்கை வரணனைகள் பற்றி சிலாகித்திருப்பது படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது.//

வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்! அவ்வளவு மோசமான அனுபவமாய் இராது! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ! :-)

//MANO நாஞ்சில் மனோ said...

பொதுவாக மலையாள படங்கள் யதார்த்தமாக எடுக்கிறார்கள் என்பது என் கருத்து!!!!!//

எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்று அங்கே குறைப்படுகிறார்கள்.

//படம் பார்க்கும் எண்ணம வருகிறது, உங்கள் பதிவை படித்ததும் நன்றி....//

உங்க ஊருலே தான் உடனுக்குடன் மலையாளப்படம் வந்துவிடுமே! கொடுத்து வைத்தவர் நீங்கள்! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்ணாச்சி!

//shortfilmindia.com said...

மலையாள படங்களுக்கான விமர்சனஙக்ள் தமிழ் பதிவுகளில் அவ்வளவாக வருவதில்லை. இது நல்ல முயற்சி.//

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுவது போலிருக்கிறது. நான் எப்போதாவது பார்க்கிற பிறமொழிப்படங்கள் குறித்துப் பகிர விரும்பினேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மலையாளம் எதுவாக இருந்தாலும் சரி ருசி தான்..
கதை - தகழி,வைக்கம்//

கேள்விப்பட்டதேயில்லை! :-)

//சாப்பாடு - சக்கப்ரதமன்,எரிசேரி//

ஓணம் சத்தியில் ஒருகை பார்த்திருக்கிறேன். :-)

//வித்வான் - செம்பை,ஜேசுதாஸ்//

பின்னவரின் தீவிர விசிறி நான்!

//கேபிள் - ஏஷியானெட்..காலை ஐந்து மணிக்கு சூப்பர்..சூப்பர் கச்சேரி..//

பார்க்கணும்!

//தெய்வம் - குருவாயூரப்பன், அனந்த பத்மனாபன்,ஜனார்த்தனன்..//

குருவாயூர், திருவனந்தபுரம் போகிற வாய்ப்புக் கிடைத்தது.

//இடம் - காலடி,அம்பலப்புழா..//

அம்பலப்புழா என்றாலும் பாயசம் ஞாபகத்துக்கு வருகிறது. :-)

//பரசுராம க்‌ஷெத்ரத்தில் எது தான் பிடிக்காது?//

உண்மை! இன்னும் நிறைய அறிய வேண்டும்!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கே. பி. ஜனா... said...

விமரிசனத்துக்கு விமரிசனம், சுவையான தகவலுக்கு சுவையான தகவல்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//மகேந்திரன் said...

பொதுவாகவே மலையாளப் படங்களில் யதார்த்தம் மேலோங்கி இருக்கும்.
உள்ளதை உள்ளபடி தெரிவிப்பதில் படைப்பாளிகள் சிறந்தவர்கள்.தங்களின் விமர்சனம் மிக அருமை.//

இப்போது எதார்த்தமான படங்கள் வெளிவருவது குறைவாகிவிட்டது என்று மலையாள நண்பர்களே சொல்வது. இருப்பினும், பல நல்ல படங்கள் வருவது உண்மை! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

என்ன செய்வது, தனது Super Star Satusஐ தூக்கி நிறுத்தவும், அது போன்ற தமிழ் படங்களுக்கு அங்கே இருக்கும் வரவேற்ப்பும் அவருக்குள் அதுபோன்ற ஆசையை உண்டாக்கியிருக்கும். போதாததற்கு இருக்கவே இருக்கிறார்கள் ஜால்ராக்கள் அவர்களும் தூபமிட்டிருப்பார்கள். அவருடைய பலமே இயல்பான நடிப்புதான். அது புரிந்து நடித்தால் நன்றாகவே இருக்கும்.//

உண்மைதான்! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்ட கதைதான் மலையாளத்தில் இருப்பதாய் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இருந்தாலும் அவ்வப்போது நல்ல படங்களும் வருவது என்னைப் போல அபூர்வமாக பிறமொழிப் படங்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு அனுபவமாய் அமையக்கூடும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)