Friday, October 14, 2011

பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்-ரிஷபராசி

பதிவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் தொடரில் அடுத்து நாம் காணவிருப்பது ரிஷபராசி!

ரிஷபம் என்றால் காளை! ’பொதுவாக என் மனசு தங்கம்; ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்,’ என்ற படமொழி இவர்களுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும்.

ரிஷப ராசிக்காரர்களின் கற்பனை அதிகமா அல்லது 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு அதிகமா என்று தீபாவளிக்கு பட்டிமன்றம் நடத்தலாம். இயல்பாகவே மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள் என்பதால், இடுகையைப் போட்டவுடன், ’எளுதிட்டோமில்லே, மத்ததை வாசிக்கிறவங்க பார்த்துக்குவாங்க,’ என்று படுத்து உறங்கப் போய்விடுவார்கள்(பகலாயிருந்தாலும் சரி!). அவர்களது இடுகைகளுக்கு அவர்களே கூட ஓட்டுப்போடாமல் "யாராவது தமிழ்மணத்துலே சேர்த்திருவாங்க,’ என்று நம்பிக்கையோடு இருப்பார்கள். பெரும்பாலும் இவர்களது இடுகைகளுக்கான கமெண்டுகள் மாடரேஷன் செய்யப்பட மாட்டா.

ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ரிஷப ராசிக்கு எட்டாவது இடமானது தனுசு! (ரஜினி மாப்பிள்ளை தனுசு இல்லை; தனுசு ராசி). அந்த தனுசில் சந்திரன் காலாற வாக்கிங் போகிற காலம் சந்திராஷ்டமம் என்று கருதப்படுகிறது. எனவே, அரசியல் பதிவுகளை எழுதுதல், ஆர்வக்கோளாறு காரணமாக இலக்கிய விமர்சனம், பயனுள்ள இடுகைகளை எழுதுவது குறித்து யோசித்தல் போன்ற விபரீதமான எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இந்த ரிஷபராசிக்காரப் பதிவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாமா?

இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு சில எதிர்பாராத காரியங்கள் ஈடேறும். உதாரணமாக, எழுத ஆரம்பித்து பாதியிலே நிறுத்திய சிறுகதையை அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’ என்று பல பின்னூட்டங்கள் வரக்கூடும். அதற்காக நீங்கள் முடித்த சிறுகதைகளை முக்கால்வாசி மட்டும் பதிவேற்றுகிற விஷப்பரீட்சைகள் செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், குருபகவான் உங்களிடம் சற்று அப்ஸெட் ஆகியிருக்கிறார். குறிப்பாக, நெருங்கிய நண்பர்களில் எவரேனும் அரைப்பக்கத்துக்குப் பாராட்டி பின்னூட்டம் எழுதிவிட்டு, ஓசைப்படாமல் வெறோரு ஐ.டியில் வந்து மைனஸ் ஓட்டுப் போடவும் வாய்ப்பிருக்கிறது.

மற்றபடி, பொதுவான பலன்கள் என்று பார்த்தால் உங்கள் வலைப்பதிவில் ஹிட்ஸுக்குப் பஞ்சமேயிருக்காது என்பதால், இன்னொரு வலைப்பூ ஆரம்பித்தாலென்ன என்று பல்விளக்கும்போது ஒரு பல்நோக்குச் சிந்தனை எழலாம். முன்பு உங்கள் இடுகையைப் படித்துவிட்டு எரிந்து விழுந்தவர்கள் இப்போது எழுந்து உட்கார்ந்து  உங்கள் இடுகைகளை வாசித்து இம்முறை விழுந்து விழுந்து சிரிப்பதாகப் பின்னூட்டம் எழுதுவார்கள். வீழ்வது வாசகர்களாயிருந்தாலும் ஆள்வது நீங்கள்தான்!

சிலருக்கு திடீரென்று வெளியூர்ப்பயணம் ஏற்படக்கூடும் என்பதால் மடிக்கணினியின் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்கவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். கடுப்படிக்கும் மேலதிகாரிகள் விடுப்பில் செல்லக்கூடும்  என்பதால் இடுகை எழுதுவதற்கு எவ்வித இடையூறும் நேராது. இருந்தாலும், நீங்கள் வலைப்பதிவு எழுதுவதைத் தெரிந்துகொண்ட லீவு கிடைக்காத இன்னொரு மேலதிகாரி விரக்தியில் தானும் வலைப்பதிவு எழுதவேண்டும் என்ற கொலைவெறிக்குத் தள்ளப்படவும்  வாய்ப்புண்டு.

போடலாமா வேண்டாமா என்று பூவா தலையா போட்டுப் பார்த்துக் குழம்பிய இடுகைகள் போட்டவுடன் ’சூடான இடுகை’யாவதற்கு சாத்தியமுண்டு. உங்கள் வலைப்பதிவுக்கு புதியவர்களின் வரத்து அதிகமாகும் என்பதால், நீங்களும் ஒரு சிலரை ஃபாலோ செய்ய வேண்டிவரலாம்.

இனி, ரிஷபராசிக்கான நட்சத்திரப் பலன்கள்:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பதிவர்கள் ( 2,3 மற்றும் 4 ம் பாதங்கள்) தொட்டது துலங்கும்; இட்டது ஹிட் ஆகும்! தற்போது சொதப்பிக் கொண்டிருக்கும் இண்டெலியிலும் மீண்டும் பாப்புலர் ஆகலாம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். சமையல் குறிப்பு எழுதுவோர் காட்டில் மழை பெய்யும் என்பதால், வாசிப்பவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படலாம்.

ஆனால், இந்த மிருகசீரிஷம் நட்சத்திரப் பதிவர்களுக்கு வரலாறு காணாத மாற்றங்கள் ஏற்படும். பழைய கணினியை காயலான்கடையில் கடாசிவிட்டு, புத்தம்புது மடிக்கணினி வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. இதற்குக் கடன்வழங்க ஒரு இளிச்சவாயன் வங்கி மாட்டினாலும் மாட்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு:

ஒன்றும் செய்ய வேண்டாம்! பெண்களும் வலைப்பதிவு வாசிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் அம்மன் அருள் கிடைக்கும்.


24 comments:

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி...

பால கணேஷ் said...

ரிஷப ராசிக்காரர்களின் கற்பனை அதிகமா அல்லது 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு அதிகமா என்று தீபாவளிக்கு பட்டிமன்றம் நடத்தலாம்.
-என்ன சப்ஜெக்ட் எழுதினாலும் சேட்டை சேட்டைதான்!

நாய் நக்ஸ் said...

Nee kalakku thalai.....

Rekha raghavan said...

சேட்டை பேசாமல் நீங்க ஜோசியரா போயிடலாம்! பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். நல்ல பதிவு.

வைகை said...

அண்ணே.. பான்ட் கலர் ப்லாக் கலரே வைங்கண்ணே... இது படிக்க கஷ்டமா இருக்கு.. கண்ணு கூசுது :))

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

மாப்ள என் ராசிய புட்டு புட்டு வச்சிட்டய்யா...ஹிஹி....உங்கள தொடர்பு கொள்ள நெனச்சேன் முடியல...ராசி பலன நம்பாத நான் இப்போ இந்த விஷயத்த நம்ப வேண்டி இருக்கு...என்னே மதுரைக்கு வந்த சோதனை ஹிஹி!

SURYAJEEVA said...

அடுத்து வாஸ்து எண்கணிதம் பற்றி எல்லாம் எழுதும் எண்ணமிருக்கா? ஏன்னா ஏற்கனவே ஜாதகம் பார்க்கிறவங்க எங்கடா சேட்டைன்னு கேட்டுகிட்டு இருக்காங்களாம்

kaialavuman said...

நீங்கப் போட்டிருக்கும் பலன் பார்த்து என் ராசியை ரிஷபதுக்கு மாத்திக்கலாம் போலிருக்கிறது, அதற்கான வழிமுறைகளைக் கூறவும்.

கும்மாச்சி said...

சே சேட்டைகிட்டே நம்ம ராசிய முதலிலேயே சொன்னது தப்பா போச்சு.
புட்டு புட்டு வச்சிருக்காரு.

மடிக்கணினி வேறே புட்டுக்கிச்சு.

Prabu Krishna said...

என்ன கலர் எழுத்து பயன்படுத்துவது என்று சொல்லலியே. ஒரு வேளை படுத்துவது வாசகர்களை என்பதால் விட்டுட்டீங்களோ?

இராஜராஜேஸ்வரி said...

ஒன்றும் செய்ய வேண்டாம்! பெண்களும் வலைப்பதிவு வாசிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் அம்மன் அருள் கிடைக்கும்.


சேட்டையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’ என்று பல பின்னூட்டங்கள் வரக்கூடும். //

ஹா ஹா ஹா ஹா அப்பிடித்தானே இப்போ நிறைய பேர் பொழப்பு நடத்திகிட்டு இருக்காங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழு...

Unknown said...

நண்பரே!
என் கைராசி பார்த்து
சொல்ல முடியுமா..?

கலக்கல் பதிவு!

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

இப்ப இப்படியும் ஆரம்பிச்சாச்சா ரசிக்கவைகின்றது பாஸ் சூப்பர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல தமாஷாத்தான் இருக்குது. அடுத்து என் மிதுன ராசிக்கு என்ன சொல்லிடுவீங்களோன்னு, கலக்கமா இருக்கு. சீக்கரமாச் சொல்லிடுங்க.

ம.தி.சுதா said...

/// ’சூடான இடுகை’யாவதற்கு சாத்தியமுண்டு///

நம்மளுக்கதெல்லாம் சரிவராதுங்க...

5 நிமிசம் அடுப்பில வைக்கணும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

த. ஜார்ஜ் said...

என்ன இருந்தாலும் உங்களுக்கு நீங்களே சோசியம் சொல்லிக்கொள்ளக் கூடாது. பலிக்காதாம்..!!!!

மகேந்திரன் said...

அப்போ நமக்கு பலன்
கடைசில தான் சொல்வீங்களா......!!!

வெங்கட் நாகராஜ் said...

அட... என்னா ஜோசியம் சேட்டை!

நம்ம ராசிக்கு என்ன சொல்லப் போறீங்களோ? பார்க்கலாம்...

ரேகா ராகவன் சார் சொன்ன மாதிரி பேசாம ஒரு சைடு பிசினஸ்-ஆ ஜோசியம் சொல்ல ஆரம்பிங்களேன்... :)

settaikkaran said...

//கணேஷ் said...

-என்ன சப்ஜெக்ட் எழுதினாலும் சேட்டை சேட்டைதான்!//
சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது. :-)
மிக்க நன்றி கணேஷ்!

//NAAI-NAKKS said...

Nee kalakku thalai.....//

டாங்க்ஸ்பா! :-)

//ரேகா ராகவன் said...

சேட்டை பேசாமல் நீங்க ஜோசியரா போயிடலாம்! பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். நல்ல பதிவு.//

மண்ணடியிலே ஒரு இடம் தேடிட்டிருக்கேன் ஐயா. :-)
மிக்க நன்றி!

//வைகை said...

அண்ணே.. பான்ட் கலர் ப்லாக் கலரே வைங்கண்ணே... இது படிக்க கஷ்டமா இருக்கு.. கண்ணு கூசுது :))//

மாத்திட்டேன்! சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி! :-)

//விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!//

மாப்ள என் ராசிய புட்டு புட்டு வச்சிட்டய்யா...ஹிஹி....உங்கள தொடர்பு கொள்ள நெனச்சேன் முடியல...ராசி பலன நம்பாத நான் இப்போ இந்த விஷயத்த நம்ப வேண்டி இருக்கு...என்னே மதுரைக்கு வந்த சோதனை ஹிஹி!//

இன்னும் நிறைய இருக்கு. ஆனா, அதெல்லாம் இலவச சேவை-யிலே வராது. கட்டண சேவை விரைவில்...!

மிக்க நன்றி நண்பரே! :-)

//suryajeeva said...

அடுத்து வாஸ்து எண்கணிதம் பற்றி எல்லாம் எழுதும் எண்ணமிருக்கா? //

இல்லாமலா? எல்லாத்தையும் ஒரு கை பார்த்திர வேண்டியதுதான்! :-)

//ஏன்னா ஏற்கனவே ஜாதகம் பார்க்கிறவங்க எங்கடா சேட்டைன்னு கேட்டுகிட்டு இருக்காங்களாம்//

இருப்பாங்க! இருப்பாங்க!! என்னை விட மோசமான ஜோசியருங்க கடையெல்லாம் கூட்டம் அலைமோதுதே! :-))

மிக்க நன்றி நண்பரே!

//வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நீங்கப் போட்டிருக்கும் பலன் பார்த்து என் ராசியை ரிஷபதுக்கு மாத்திக்கலாம் போலிருக்கிறது, அதற்கான வழிமுறைகளைக் கூறவும்.//

அதற்கு ஒரு பெரிய பலகாரம், அதாவது பரிகாரம் இருக்கிறது. கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா? :-)
மிக்க நன்றி நண்பரே!

//கும்மாச்சி said...

சே சேட்டைகிட்டே நம்ம ராசிய முதலிலேயே சொன்னது தப்பா போச்சு.
புட்டு புட்டு வச்சிருக்காரு. மடிக்கணினி வேறே புட்டுக்கிச்சு.//

நீங்களும் ரிஷபமா? :-) சரிதான்! நம்ம ஜோசியம் நல்லாவே வொர்க்-அவுட் ஆவுது போலிருக்குது. விடுறதா இல்லை. மிக்க நன்றி! :-)

//Prabu Krishna said...

என்ன கலர் எழுத்து பயன்படுத்துவது என்று சொல்லலியே. ஒரு வேளை படுத்துவது வாசகர்களை என்பதால் விட்டுட்டீங்களோ?//

சூப்பர் ஐடியா! இதை முடிச்சிட்டு வாசகர்களுக்குத் தனி பலன் போடலாம் போலிருக்குதே! மிக்க நன்றி! :-)

//இராஜராஜேஸ்வரி said...

சேட்டையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

மிக்க நன்றி சகோ! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

அவசரத்தில் நீங்கள் பதிவிட்டாலும் ’முடிவு சூப்பர்,’ என்று பல பின்னூட்டங்கள் வரக்கூடும். //

ஹா ஹா ஹா ஹா அப்பிடித்தானே இப்போ நிறைய பேர் பொழப்பு நடத்திகிட்டு இருக்காங்க...!!!//

அண்ணாச்சி சொன்னா அப்பீல் ஏது? நான் சும்மா தோராயமா எழுதினேன்; மெய்யாலுமே அப்படியா? :-))

//தமிழ்மணம் ஏழு...//

மிக்க நன்றி அண்ணாச்சி! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

நண்பரே! என் கைராசி பார்த்து சொல்ல முடியுமா..?கலக்கல் பதிவு!//

உங்கள் கை பார்க்காமலே சொல்லலாம் ஐயா. உங்கள் கையில் கலைமகளின் தாமரை இருக்கிறது. :-) மிக்க நன்றி ஐயா!

//K.s.s.Rajh said...

இப்ப இப்படியும் ஆரம்பிச்சாச்சா ரசிக்கவைகின்றது பாஸ் சூப்பர்//

எப்பவோ ஆரம்பிச்சாச்சு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல தமாஷாத்தான் இருக்குது. அடுத்து என் மிதுன ராசிக்கு என்ன சொல்லிடுவீங்களோன்னு, கலக்கமா இருக்கு. சீக்கரமாச் சொல்லிடுங்க.//

நான் என்ன ஐயா சொல்றது? எல்லாம் கிரகங்கள் சொல்றது தானே? (எப்புடி எஸ்கேப் ஆகுறேன் பாருங்க!) மிக்க நன்றி ஐயா! :-)

//♔ம.தி.சுதா♔ said...

நம்மளுக்கதெல்லாம் சரிவராதுங்க...5 நிமிசம் அடுப்பில வைக்கணும்...//

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கீங்க! மிக்க நன்றி! :-)

//த. ஜார்ஜ் said...

என்ன இருந்தாலும் உங்களுக்கு நீங்களே சோசியம் சொல்லிக்கொள்ளக் கூடாது. பலிக்காதாம்..!!!!//

அப்போ என்னையும் வலைப்பதிவாளர்-னு ஒத்துக்கறீங்களா? ஹையா..ஜாலி...! :-)

//மகேந்திரன் said...

அப்போ நமக்கு பலன் கடைசில தான் சொல்வீங்களா......!!!//

ஆஹா, நீங்க நம்ம ஆளுங்க! :-))
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

அட... என்னா ஜோசியம் சேட்டை! நம்ம ராசிக்கு என்ன சொல்லப் போறீங்களோ? பார்க்கலாம்...//

ஆராய்ச்சி பண்ணித்தான் போடுறேன் வெங்கட்ஜீ! :-)

//ரேகா ராகவன் சார் சொன்ன மாதிரி பேசாம ஒரு சைடு பிசினஸ்-ஆ ஜோசியம் சொல்ல ஆரம்பிங்களேன்... :)//

இடம்தான் வசதியாக் கிடைக்க மாட்டேங்குது வெங்கட்ஜீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

ezhil said...

மெய்யாலுமே சேட்டைதாங்கோ. நன்றி