பூங்காவில் இறங்கி சுரங்கப்பாதையின் நெரிசலில் கலந்து படியேறி வெளிப்பட்டு பெரியமேட்டிலிருக்கும் அலுவலகம் நோக்கி நடந்தபோது, சண்முகத்துக்கு மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"கடையிலே வாங்கினாத்தானே விலை அதிகம்? உங்க ஆபீஸு பக்கத்துலே பிளாட்பாரத்துலே சீப்பாக் கிடைக்குதாமே? இப்போதைக்கு அதையாவது வாங்கிட்டு வாங்களேன்!"
’அதையாவது’- அந்த ஒருவார்த்தைக்குப் பதிலாக, செல்வி அவனைக் கன்னத்தில் அறைந்திருக்கலாம். சின்னவன் பாலாஜியின் பனியன்கள் எல்லாம் நைந்து கிழிந்து போய்விட்டன. வீட்டுக்குள்ளே மகன் பிச்சைக்காரனைப் போலப் பீத்தலைப் போட்டுக்கொண்டு நடமாடுவதைப் பார்க்கும்போதெல்லாம் சண்முகத்துக்கு தன்மீதே காறித்துப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஒரு நடை கோடவுன் தெரு வரைக்கும் போனால், பேரம் பேசி பிள்ளைக்கு அரை டஜன் பனியன்களை வாங்கி வந்து விடலாம் தான். ஆனால், தினசரி செலவுக்கு பாக்கெட்டில் பத்து ரூபாய் கொண்டு போவதே கட்டுப்படியாகாத நிலையில், மகனுக்குப் புது பனியன்களை வாங்குவதை சம்பளத்தேதி வரைக்கும் ஒத்திப்போடத்தான் முடிந்தது.
"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா ராஜா! இன்னிக்கு மறக்காம வாங்கிடறேன்!" என்று மனைவியை ஏறிட்டுப் பார்க்க விரும்பாமல், மகனைத் தாஜா பண்ணிவிட்டு கிளம்பியபோது, ’எனக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்? எதுக்குக் குடும்பம்?’ என்று சுயபச்சாதாபம் மிகுந்தது. அலுவலகம் போகும்வரை மகனுக்குப் பிளாட்பாரத்தில் பனியன் வாங்க எப்படி பணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான் சண்முகம்.
ரொம்பவெல்லாம் வேண்டாம். ஒரு இருநூறு ரூபாய் போதும்.போனமாதம் பாலாஜிக்கு திடீரென்று மூச்சுவாங்கி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனதால் ஏற்பட்ட உபரிச்செலவை ஈடுகட்ட வாங்கிய அட்வான்ஸ் இன்னும் நிலுவையிலிருப்பதால் மேலும் கேட்க வாய்ப்பில்லை. தலையே போனாலும் எவரிடமும் கைமாற்று வாங்கக்கூடாது என்கிற பிடிவாதத்தை மிகவும் மூச்சுத்திணறும்போது தளர்த்துவதுண்டு என்றாலும் அலுவலகத்தில் மற்றவர்களும் சண்முகத்தைப் போலவே சொற்ப சம்பளக்காரர்கள் தான் என்பதே பிரச்சினை.
கண்ணில் தென்பட்டவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லியபோதே, ’இவரிடம் கேட்க முடியாது; இவன் தர மாட்டான்; இவனது நிலை என்னைக்காட்டிலும் மோசம்,’ என்று கழித்துக் கட்டியபடியே வந்து குவிந்த வேலைகளை முடிந்தவரை கவனமாகச் செய்தான் சண்முகம்.
"சண்முகம்! அந்த ஈக்காட்டுத்தாங்கல் பார்ட்டி பேமென்ட் பண்ணிட்டானா?"
"இல்லை சார்!"
"ஒரு நடை போயிட்டு வாங்களேன்! ஈட்டிக்காரன் மாதிரி போய் உட்கார்ந்தாத்தான் வவுச்சரே எழுதுவான் சாவுக்கிராக்கி!"
"சரிங்க சார்!"
"சண்முகம்! பஸ்-லே போயி அவஸ்தைப்படாதீங்க! ஆட்டோ புடியுங்க! கேஷியர் கிட்டே போயி பணம் வாங்கிக்குங்க!"
"சரிங்க சார்!"
ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய சண்முகத்துக்கு திடீரென்று ஒரு விபரீத யோசனை! ’எதற்கு ஆட்டோவில் போக வேண்டும்? பஸ்-சில் போனால் பணம் மிச்சம் பிடிக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது?’
நெரிசலைப் பொருட்படுத்தாமல் பஸ் பிடித்தான். போன இடத்தில் வாசலில் காத்திருக்க நேர்ந்தது. நேரம் ஆக ஆகப் பசித்தது. செக்-கை வாங்கிக்கொண்டு கிளம்பி, சரியாக பஸ் கிடைத்தால், மதிய உணவு நேரம் முடிவதற்குள் சென்று சேர்ந்து விடலாம் என்ற அவனது திட்டம் மெதுவாக குலைந்தது. ஒரு வழியாக செக் வாங்கியவன், வெளியே இருந்த கடையில் ஒரு டீயைப் பருகிவிட்டு, நிரம்பி வழிந்த ஒரு பேருந்தில் எப்படியோ தொற்றி ஏறிக்கொண்டு ஆபீஸ் திரும்பியதும் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான்.
சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்தான்; செக் பத்திரமாக இருந்தது.
பேண்டைத் தொட்டுப் பார்த்தான்;
கிழிக்கப்பட்டிருந்தது - பர்ஸ் பறிபோயிருந்தது.
"இன்னிக்கும் மறந்திட்டீங்களா?" வீடு திரும்பியதும் செல்வி கேட்டாள்.
"ம்!" என்று தலைதூக்காமல் பதிலளித்தான். "ராஜா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா! நாளைக்கு எப்படியும் வாங்கிட்டு வர்றேன்."
"இன்னிக்கும் மறந்திட்டீங்களா?" வீடு திரும்பியதும் செல்வி கேட்டாள்.
"ம்!" என்று தலைதூக்காமல் பதிலளித்தான். "ராஜா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா! நாளைக்கு எப்படியும் வாங்கிட்டு வர்றேன்."
Tweet |
27 comments:
இருக்குற கந்தலை சரி செய்வதற்குள்
இன்னுமோர் கந்தல்!
ச்சே!என்ன வாழ்க்கடா!!!
மனதை நெகிழவைத்த கதை. வறுமையைப் போன்றதோர் கொடுமை இல்லை. பட்டகாலிலே படும் என்பது போல சோதனை. படிக்கும் போதே அவர்கள் நிலமையை நினைத்தால் கண் கலங்குகிறது.
அருமையான படைப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.
கோகுல் said...
//இருக்குற கந்தலை சரி செய்வதற்குள்
இன்னுமோர் கந்தல்!
ச்சே!என்ன வாழ்க்கடா!!!//
மிகவும் அழகான பொருத்தமான பின்னூட்டம். பாராட்டுக்கள் திரு. கோகுல் அவர்களே!
அருமை சகோ. இல்லாதவன் வாழ்க்கை என்றும் இப்படிதான். சகோ கோகுல் பின்னூட்டம் கலக்கல்.
அட என்ன வாழ்கடா இது...முடியல!
மனதை கனக்கச்செய்யும் கதை. ஆனால் நாட்டில் நிறையபேர் வாழ்க்கைஇப்படித்தான் இருக்கிறது. லோயர் மிடில்கிளாஸ் வாழ்வின் நிதர்சனம்....
you are truly gifted with story telling skill. very interesting and touching story. i hope you are sending these your stories to magazines.
மனம் நெகிழ வைத்தது கதை.
சேட்டை சார், நீங்க இப்படி கூட எழுதுவீங்களா? சார், நான் இப்ப அழுதுகிட்டு இருக்கேன்... you are great...
////ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய சண்முகத்துக்கு திடீரென்று ஒரு விபரீத யோசனை!////
கஸ்டகாலம் எப்படி வருகுதுண்ணு பாத்திங்களா?
மனதை தைத்தது கந்தல்.
மனம் கணக்கும் பகிர்வு.
நல்லாருக்கு. பஸ்னு வந்ததும் பிக்பாக்கட்னு தோணிடுது:)
அடடா! பட்ட காலிலேயே பட்டு விட்டதே...
கிழிசல் பனியன்/பேண்ட் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஓட்டை போட்டது இந்த கதையின் கரு....
நல்ல கதை சேட்டை.
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம்????????????
:(
அடடா
சேட்டையண்ணே!
நம்முடன் வாழும் சகமனிதர்களின் நிலை இப்படியிருக்க நம்மை ஆள்பவர்கள் சொல்லும் கதை, ஒரு நாளைக்கு 32 செலவு பண்ணாலே பணக்காரங்களாமே!
என்ன அரசோ?
பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும் ஓட்டை வித்துட்டு “ஒட்டு” போட்டு தைத்து உடுத்திக்கொள்ள வழியற்று வாழும் நிலையை என்ன சொல்வது?
கதை அருமை.
மனசு வலிக்கும் கதை, மனதை பிசைகிறது...
வறுமையே உனக்கொரு வறுமை வராதா...???
மனம் நெகிழ்ந்து விட்டது.
நெகிழவெச்சிட்டீங்க சேட்டை...
தண்டனை கிடைத்தது சரிதான்.. ஆனால் அதென்னவோ நமக்கெல்லாம் அப்பப்போ கிடைச்சிடும், ஆனால் கோடி கோடியாய் கொள்ளையடிக்கற அரசியல்வாதிங்களுக்கு இந்த மாதிரி கை மேல் பலன் கிடைப்பதில்லை..
@கோகுல்
@வை.கோபாலகிருஷ்ணன்
@Prabu Krishna
@விக்கியுலகம்
@கடம்பவன குயில்
@சிவானந்தம்
@கே. பி. ஜனா...
@suryajeeva
@♔ம.தி.சுதா♔
@ரேகா ராகவன்
@FOOD
@வானம்பாடிகள்
@வெங்கட் நாகராஜ்
@Yoga.s.FR
@பெசொவி
@சி.பி.செந்தில்குமார்
@சத்ரியன்
@MANO நாஞ்சில் மனோ
@middleclassmadhavi
@பன்னிக்குட்டி ராம்சாமி
@ஸ்வர்ணரேக்கா
உங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி! சற்றே உடல்நிலை சரியில்லாததால், தனித்தனியாக பதிலெழுதி நன்றி தெரிவிக்க இயலாத நிலை. எப்போதும் போல உங்கள் அனைவரது ஆதரவையும் நாடுகிறேன். மீண்டும் மீண்டும் நன்றிகள் பலப்பல..!
வயித்தெரிச்சலா இருக்குனு சொல்லுவாங்களே.. அந்தமாதிரி இருக்கு.
நகைச்சுவைக் கதையோ என்று எதிர்பார்த்தேன். நெகிழவைத்து விட்டது. பாராட்டுக்கள்.
பனியனை வாங்கவுடாம பரிதவிக்கவுட்டுட்டியே சேட்டை!
Post a Comment